திங்கள், 22 ஜூலை, 2013

வாலி

      
                                                                                                            

- வாலி சிறுவயதில் நன்றாகப் படம் வரைவாராம். சில்பி ஸ்ரீரங்கத்துக்கு வந்திருந்தபோது  தான் வரைந்திருந்த ஓவியங்களைக் கொண்டுபோய் அவரிடம் காட்டினாராம். 'சொந்தமாக  முயற்சி செய்! உனக்கென ஒரு பாணி வேணும். இதுல  வடநாட்டுப் பிரபல ஓவியர் பாதிப்புத் தெரிகிறது' என்றாராம்.


 
- ஒருமுறை காமராஜும் ராஜாஜியும் ரயிலில் பயணம் செய்து வந்து கொண்டிருந்தனராம். இருவர் படங்களையும் வரைந்து வைத்திருந்த வாலி, உள்ளூர்ப் பிரமுகர் ஒருவர் உதவியுடன்  கிடைத்த இடைவெளியில் இருவரையும் பார்த்து ஆட்டோகிராப் கேட்க, காமராஜ் உடனே  கொடுத்தவர், இவர் கையிலிருந்த ராஜாஜி படத்தைப் பார்த்து விட்டு 'ஓடு...ஓடு.. அவரிடமும் ஆட்டோகிராப் வாங்கு...டிரெயின் புறப்படப் போகுது' என்றாராம்.

                                                        

இவரும் ராஜாஜியிடம் சென்று அவர் படத்தை அவர் கையில் கொடுக்க, ராஜாஜி தன்னுடைய கையெழுத்து போலவே இல்லாமல் ஏதோபோல ஆட்டோகிராப் போட்டுக் கொடுத்தாராம். ராஜாஜியின் கையெழுத்து எல்லோருக்கும் தெரியுமாதலால், நண்பர்கள் நம்ப மாட்டார்களே என்று 'ஏன் ஸார் போட்டுட்டீங்க...உங்க கையெழுத்து போலவே இல்லையே' என்றாராம் வாலி. ராஜாஜி உடனே சொன்னாராம், 'படம் கூடத்தான் என்னைப்போலவே இல்லை!'

- இன்னொரு சமயம் இவர் வீட்டில் வரைந்து வைத்திருந்த பாரதியார் படத்தைப் பார்த்து உணர்ச்சி வசப்பட்டு பாராட்டியவர் பாரதியாரின் மகள் தங்கம்மா பாரதி.  இதை ஒரு பெரிய பாராட்டாக எடுத்துக் கொண்டாராம் வாலி.


- திரையுலகில் வாலியைத் தவிர படம் வரைவதில் வல்லவர்கள் நடிகர்கள் சிவக்குமார் மற்றும் வெ. ஆ. மூர்த்தி.


- பள்ளியில் இவருடன் பயின்ற தோழர் ஒருவர், அப்போது இவரது  ஓவியத்திறமை கண்டு அப்போது ஓவியத்தில் பிரபலமான மாலி பெயர் போல ஒலிக்கவேண்டி 'வாலி' என்று பெயர் சூட்டினாராம். இவர் ஆசிரியர் ஒருவர் இவர் வரைந்த ஓவியத்தைப் பார்த்து விட்டு, 'அதென்ன பெயர் வாலி? திரும்பு... உனக்கு வாலிருக்கிறதா என்று பார்ப்போம்' என்று கிண்டல் செய்தாராம்.


- இவர் பெயரை மற்றும் புகழை  கிண்டல் செய்த பிரபல எழுத்தாளர் ஒருவருக்கு வாலி தனக்கேயுரிய பாணியில் கொடுத்த பதிலை 
ஜெயமோகனும் வாலியும் பதிவில் ஏற்கெனவே பகிர்ந்திருந்தோம்.

- ஓவியம் வரையும் ஆசையை மூட்டை கட்டி விட்டு நாடகம் எழுதத் தொடங்கி அதில் பெரிய எல்லைகளைத் தொட்ட காலத்தில் இசையமைப்பாளர்களோடு பழகி, பாட்டுகள் எழுதியதில் தாள லயம், ஸ்ருதி லயம் எல்லாம் வசப்பட்டு விட்டதாகச் சொல்கிறார் வாலி. ராக ஞானமும் அப்போது ஏற்பட்டதுதானாம். பின்னாளில்  பாடல்கள் எழுத அது மிக உதவியாயிருந்ததாம்.


- யார் யாருக்கு எங்கெங்கே பிழைப்பு என்று எழுதியிருக்கிறது என்பதில் வாலிக்கு அசைக்க முடியாத நம்பிக்கை. ஆசைப்படும்போது கிடைக்காதது அப்புறம் எதிர்பாராத நேரத்தில் உச்சத்தில் உட்கார்த்தி வைத்து விடும் என்கிறார். பராசக்தியில் அனைத்துப் பாட்டையும் தானே எழுத வேண்டும் என்று ஆசைப்பட்ட கண்ணதாசனுக்கு  படத்தில் ஒரு நீதிபதி வேடம் மட்டும் கிடைத்ததை உதாரணமாகச் சொல்லியிருக்கிறார்.
 
                                                    

- எம் ஜி ஆர்  இவரை 'ஆண்டவனே' என்றுதான் அழைப்பார். 

- வாலி திரையில் எழுதிய முதல் பாடல் ஏழை படும்பாடு படத்தில் சீர்காழி கோவிந்தராஜன் பாடிய 'சிரிக்கின்றாள் இவள் சிரிக்கின்றாள்' பாடல்.

- நமக்கெல்லாம் எந்தப் பாடல் யார் எழுதியது என்று குழப்பம் இருக்கும். ஆனால் எம் எஸ் வி ஒருமுறை ஒரு பேட்டியில் 'அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே...' பாடலை எழுதி விட்டு கண்ணதாசன் தன்னைப் பார்த்துக் கண்ணடித்ததாக' சொல்லியிருந்தாராம். வாலி சொல்கிறார்,'கண்ணதாசன்  எதற்காகக் கண்ணடித்தாரோ தெரியாது...ஆனால் அந்தப் பாடல் அடியேன் எழுதியது'


- தனக்கு உதவி கைதூக்கி விட்டவர்களை கடைசி வரை சொல்லிக்கொண்டேயிருப்பார். நாகேஷ், வி எஸ் கோபாலகிருஷ்ணன், எம் எஸ் வி, எம் ஜி ஆர், பி பி. ஸ்ரீநிவாஸ்... இப்படி!


- எம் எஸ் வி யுடனும் இளையராஜாவுடனும் அவருக்கு இருந்த புரிதல் கே வி மகாதேவனோடு ஏனோ இல்லை என்று சொல்லியிருக்கிறார்.


- எல்லாமே தோல்வியாய் இருக்கிறது... இனி இங்கு நம் முயற்சி ஜெயிக்காது என்று ஊர் கிளம்பும் சமயம் பி பி  ஸ்ரீநிவாஸ் இவரைத் தேடிவந்து, அன்று அவர் பாடிய கண்ணதாசன் பாடலான 'மயக்கமா கலக்கமா' பாடலைப் பாடிக் காட்ட, அதைக் கேட்டு புது நம்பிக்கை  வரப்பெற்று கையில் எடுத்த பெட்டியைக் கீழே வைத்து விட்டாராம் வாலி.

                                                           


- கடைசி வார ஜூவியில் படித்ததிலிருந்து  சில...

- ஆஸ்பத்திரியில் படுத்திருந்தபோது அவரைப் பார்க்க வந்திருந்தவர்களைப் பற்றிக் குறிப்பிட்டு வாலி சொன்னாராம்,'சிவகுமார் வந்தாரு...ஏ ஆர் ரெஹ்மான் வந்தாரு... ராஜாத்தியம்மா வந்தாங்க... கலைஞர் வருவாரு... ஆனா வெளிக்கி வரமாட்டேங்குதேய்யா' என்றாராம்.


- அடுத்து பாடல் எழுத அட்வான்ஸ் வாங்கியிருந்த பணங்களை உடனே அவரவர்களுக்குத் திருப்பித் தரச் சொல்லி விட்டாராம். தன்னைப் பார்க்கவந்த தயாரிப்பாளர் ஒருவரிடம் 'பணம் வந்துடுச்சா' என்று கேட்டபோது அவர் தயங்க, உடனே திருப்பிக் கொடுக்கச் சொன்னாராம்.

                                                      

- மூச்சுக்கு மாஸ்க் வைத்திருந்தவர், 'நான் ஒரு ஹிந்து... ஆனாலும் மாஸ்க் இல்லாமல் இருக்க முடியவில்லை' என்றாராம்.

- அவர் பேசக் கூடாது, ஏதாவது தேவைப்பட்டால் எழுதிக் காட்டலாம் என்று அவரை அன்புடனும் அக்கறையுடனும் கவனித்துக் கொண்ட மருத்துவர் நரசிம்மன் சொல்லியிருக்க, பேப்பரை வாங்கி, "சுவாசம் மிகவும் மோசம்; நரசிம்மன் பயப்படுகிறார். அன்புசால் நரசிம்மன்,  உடலைக் காப்பாற்று! அன்புசால் வாலி' என்று எழுதிக் கொடுத்தாராம்.

14 கருத்துகள்:

 1. இனிய பாடல்களுடன் ரசிக்க வைக்கும் நினைவுகள்... நன்றி...

  பதிலளிநீக்கு
 2. வாலி பற்றி நிறைய தகவல்கள் அறிந்துகொண்டேன்... நன்றி...

  பதிலளிநீக்கு
 3. தனக்கு உதவி கைதூக்கி விட்டவர்களை
  கடைசி வரை சொல்லிக்கொண்டேயிருப்பார்//அதனால்தான் இன்றுவரை எல்லோர்மனதிலும் வாழ்ந்துகொண்டிருக்கிறார்

  பதிலளிநீக்கு
 4. வாலி பற்றிய நல்ல நினைவுகூரல். காமராஜர், ராஜாஜியினுடனான அனுபவம் இப்போது தன தெரிந்து கொள்கிறேன்

  பதிலளிநீக்கு
 5. இனிய பாடல்களுடன், வாலி பற்றிய பல அறிய நிகழ்வுகளை அளித்துள்ளீர்கள்,,, நன்றி, பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
 6. அருமையான தகவல்கள்...
  பாடலும் அருமை...

  பதிலளிநீக்கு
 7. என்னை எடுத்து தன்னை கொடுத்து - அந்தக் காலத்திளிருந்து இந்தக் காலம் வரம் ரசிக்கும் பாடல்.

  வாலிக்கு உங்கள் அஞ்சலியில் நாங்களும் பங்கு கொள்ளுகிறோம்.

  பதிலளிநீக்கு
 8. வாலி பற்றிய பல தகவல்கள்.....

  சில தகவல்கள் தெரிந்ததென்றாலும் பல தகவல்கள் தெரியாதவை.... பாடல்களும் அருமை...

  பதிலளிநீக்கு
 9. சுவாரஸ்யமான, அறியாத, நெகிழ்வான பல தகவல்கள்.




  பதிலளிநீக்கு
 10. இனிய பாடல்கள் = வாலி

  வாலி = ஒரு சரித்திரம்

  பதிலளிநீக்கு
 11. சுவையான தகவல்கள்.அருமையான தகவல்கள்...பாடலும் அருமை...

  பதிலளிநீக்கு
 12. கவிஞர் வாலி அவர்களை பற்றிய நினைவலைகள் மனதை நெகிழ வைத்தன.

  பதிலளிநீக்கு
 13. வாலி பற்றிய நினைவுகள் வெகு இனிமை.

  முதல் படம் ஏழை படும் பாடுதானா.
  நல்லவன் வாழ்வான் இல்லை?

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!