அந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் நான் நுழைந்தபோது மாலை ஐந்து மணி இருக்கும். இன்னும் ஒரு மணி நேரம் இங்கேதான் நேரத்தைக் கடத்த வேண்டும். பேரக் குழந்தை டான்ஸ் கிளாஸ் முடிந்து வரும்வரைக் காத்திருக்க வேண்டும்.
பச்சைச் செடிகளும், பவள வண்ண மலர்களும், நீல நிற நீச்சல் குளத் தண்ணீரும், ஆங்காங்கே வித விதமான ஆடைகள் அணிந்த சிறுவர்களும், சிறுமியரும், உற்சாகமாக ஓடி விளையாடிய காட்சி, மனதுக்கு இதமாக இருந்தது.
வயதில் மிகவும் சிறிய குழந்தைகள், அவர்களுடைய அம்மாவுடனோ, அல்லது அவர்கள் வீட்டு பணிப்பெண்ணுடனோ வந்திருந்தனர். அப்படி வந்த ஒரு பணிப்பெண், தொலைக்காட்சி வந்த புதிதில், கருப்பு வெள்ளை நாடக நாட்களில் அடிக்கடி சென்னை தொலைக்காட்சியில் நடித்த ஒரு பெண்ணின் சாயலோடு இருந்தாள். (நித்யா?) அவளோடு வந்தது ஒரு மூன்றாம் பிறை. மூன்று வயதுப் பெண் குட்டி.
இந்தக் குட்டிப் பெண் நுனிக் கால்களால் நடந்து வந்தாள். காலில் ஏதாவது முள் குத்திவிடுமோ என்று அஞ்சியபடி நடந்தது போலவும் இருந்தது. ஆனால் முகத்தில் கொள்ளைச் சிரிப்பு. அந்தப் பக்கம் வந்தவர்கள் எல்லோரையும் நட்பான புன்னகையுடன் பார்த்து, வலது கையை மடக்கி ஆட்டியபடி, "டா டா டா டா" என்றாள். அந்த வழியே சென்றவர்களும் அவளைப் பார்த்துப் புன்னகைத்து, அல்லது அவள் கன்னத்தில் செல்லமாகத் தட்டியபடி, சென்றனர், வந்தனர்.
அந்தக் குழந்தையின் கால்களில், கெட்டியான வெள்ளிக் கொலுசுகள். அவளுடைய கால்கள், அந்த கனமான கொலுசுகளின் எடையைத் தாங்குமா என்ற சந்தேகம் எழுந்தது. ஒருவேளை அந்த கொலுசுகள் மிகவும் கனமாக இருந்ததால்தான் அந்தக் குழந்தை நுனிக் கால்களால் நடக்கின்றதோ என்ற சந்தேகமும் எழுந்தது.
பணிப்பெண் அங்கே குழுமியிருந்த மற்ற பணிப்பெண்கள் (சிறார் காப்பாளர்கள்தான்) சிலருடன் சுவாரஸ்யமாக அரட்டையடிக்கத் தொடங்கினாள். எல்லா பணிப்பெண்களிடமும் ஒரு செல்ஃபோன்! சிலவற்றில் காமிரா இருந்தது போலிருக்கு. காமிரா செல்ஃபோன் வைத்திருந்த பணிப்பெண்கள் மற்றவர்களை படம் எடுப்பது, உடனே அதை அவர்களின் படத்தை அவர்களிடமே காட்டி சிரிப்பது என்று பொழுது போக்கிக் கொண்டிருந்தார்கள். விளையாடிக் கொண்டிருந்த, அவர்கள் அழைத்துக்கொண்டு, தூக்கிக் கொண்டு வந்திருந்த குழந்தைகளை ஒரு கண் பார்த்து, அவர்கள் முள் செடி பக்கம் போகாமல் பார்த்துக் கொண்டனர்.
நான் என்னுடைய ஹாண்ட் பாக் திறந்து, அதனுள் இருந்த அமேசான் கிண்டிலை வெளியே எடுத்தேன். அதில் லா ச ரா எழுதிய 'அபிதா' நாவலை ஏற்கெனவே விட்ட இடத்திலிருந்து படிக்கத் தொடங்கினேன்.
"... கண்கூடாக நடப்பது கொண்டே கதை எழுதுகிறதென்றாலும் கதையில் படிப்பது அனுபவமாக நிகழ்ந்திடில், அது சமாதானமாவதில்லை. அதில் கதையின் இன்பமில்லை. ஒரு தினுசான பீதிதான் தெரிகிறது. எந்தச் சமயம் கனவு கலைந்து எப்போ நனவில் விழிப்போம் எனக் கனவு கலையும் சமயத்திற்கஞ்சி நனவை நானே எதிர்கொள்ளக் கண்ணைக் கசக்கிக்கொள்கிறேன். ஆனால் நான் காண்பதாக நினைத்துக் கொள்ளும் கனவேதான் நான் கண் விழித்த நனவு எனத் தெளியத் தெளியக் குழப்பம்தான் கூடுகிறது."
தெளியத் தெளியக் குழப்பம்தான் கூடுகிறது! என்ன சொல்கிறார் இவர்! கடைசி வாக்கியத்தைத் திரும்பத் திரும்பப் படித்துப் பார்த்தாலும் மனதுக்குப் பிடிபடவில்லை. முழங்காலில் ஏதோ ஒன்று ஊர்ந்தது. என்ன என்று திடுக்கிட்டுப் பார்த்தேன். அந்தக் குழந்தைதான். இதனிடம் என்ன பாஷையில் பேசுவது?
எல்லா பாஷைகளையும் கலந்து, அபிநய சரஸ்வதியாக, "நீ பேரு எந்தா?" என்று கேட்டேன். அந்தக் குழந்தை சந்தேகமாக என்னைப் பார்த்து, " நின்ன்ணீ " என்றது. பிறகு, என்னுடைய கைப் பையை நோக்கிக் கையைக் காட்டியது. பையை அதனிடம் கொடுக்க நீட்டினேன். அதற்குள் அந்தக் குழந்தையை அழைத்து வந்த பணிப்பெண், "நிம்மி இல்லி ஏனு மாடி?..." என்று கேட்டவாறு தூக்கிச் சென்று, தன்னருகே வைத்துக் கொண்டு அரட்டைக் கச்சேரியைத் தொடர்ந்தாள். அடுக்கு மாடிக் கட்டிடங்களில் பணி புரிகின்ற பணிப்பெண்களுக்கு நான்கைந்து பாஷைகள் தெரிந்துள்ளது. கன்னடம், தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி. சிலர் ஆங்கிலம் கூட பேசுகிறார்கள். ஆனால் எல்லா மொழிகளிலும் அவர்களுக்கு எழுதப் படிக்கத் தெரியுமா? சந்தேகம்தான்.
லா ச ரா வைத் தொடர மனம் வராமல், அடுக்கு மாடிக் குடியிருப்புகளில் சொந்த வீடுகளில் குடியிருப்போர், வாடகைக்குக் குடியிருப்போர், அங்கு பணிபுரிபவர்கள், வீட்டு வேலை செய்பவர்கள், டிபார்ட்மெண்ட் ஸ்டோர் வைத்திருப்பவர்கள் என்று பலரைப் பற்றியும் சிந்தனை தொடர்ந்தது. வீட்டு வேலை செய்பவர்களுக்கு இந்தக் காலத்தில் கணிசமாக சம்பளம் கொடுக்க வேண்டியுள்ளது. குடியிருப்பில் பணி புரிய உள்ளே வருபவர்களுக்கு புகைப்பட அடையாள அட்டை எல்லாம் உண்டாம். ஏதேனும் ஒரு பொருளை நாம் அன்பளிப்பாக அவர்களுக்குக் கொடுத்தால் கூடவே மெயின் கேட் செக்யூரிட்டி ஆட்களுக்கு ஒரு கடிதம் கொடுக்க வேண்டுமாம். இன்னின்ன பொருளை பிளாட் எண் --- இல் வசிக்கின்ற நான், இந்தக் கடிதம் கொண்டு வருகின்ற, இந்தப் பெயருடைய அம்மணிக்கு கொடுத்திருக்கின்றேன். (கையொப்பம்) அதை அவள் எடுத்துச் செல்ல அனுமதிக்கவும் என்று என் ஆர் எம் ஜி பி (NRMGP = Non returnable material gate pass) போட்டுக் கொடுக்க வேண்டுமாம்! நான் பார்த்த வரை, இங்கு உள்ளே வருகின்ற பணிப்பெண்களும், வெளியேறுகின்ற பணிப்பெண்களும் கையில் எதுவுமே எடுத்து வருவதில்லை, எடுத்துச் செல்வதில்லை, செல்போனைத் தவிர.
பேரக் குழந்தை வந்தாச்சு. கிளம்ப வேண்டியதுதான். நிம்மி பக்கம் பார்த்துக் கொண்டே கிளம்பினேன். நிம்மி நுனிக் கால்களால் நடந்துகொண்டே என்னைப் பார்த்துக் கையை ஆட்டினாள். நானும் கையை ஆட்டியபடி கிளம்பும்பொழுதுதான் பார்த்தேன், நிம்மியின் இடது கால் கொலுசு அவள் காலில் காணோம்! வலது கால் கொலுசு மட்டும் இருந்தது. நேரே அந்தப் பணிப்பெண்ணிடம் சென்று, நிம்மியின் கால் கொலுசு காட்டி, எனக்குத் தெரிந்த மொழிகள் எல்லாவற்றையும் கலந்து, "ஒன்றைக் காணவில்லையே பார்" என்றேன். அவள் பரபரப்பாக அக்கம் பக்கத்தில் தேடத் தொடங்கினாள். செடிகள், புதர் பக்கம் எல்லாம் தேட ஓடினாள். அவள் முகத்தில் கலவரம், பயம் எல்லாம் தெரிந்தது. இருள் கவ்வும் நேரம். அவளுடைய மற்ற தோழிகளும் சேர்ந்து தேடத் துவங்கினர்.
எனக்கும் கவலை தொற்றிக் கொண்டது. குழந்தையின் பெற்றோர், இந்தப் பணிப்பெண்ணை சுடு சொற்கள் கூறி வசை பாடுவார்களோ? சம்பளத்தில் பிடித்துக் கொள்வேன் என்று கூறுவார்களோ? வேலையை விட்டே நீக்கிவிடுவார்களோ? பாவம் அந்தப் பெண். ஆனாலும் இவர்கள் இந்த மாதிரிக் குழந்தைகளை விளையாடுமிடத்திற்கு அழைத்து வரும் பொழுது, மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இப்படி பல எண்ணங்களோடு வீடு வந்து சேர்ந்தேன். இனிமேல் அடுத்த வாரம்தான் அங்கு செல்வேன். பேரக் குழந்தைக்கு இன்னும் நான்கு நாட்கள் கழித்துதான் அடுத்த நடன வகுப்பு. அப்போ போகும்பொழுது அந்தப் பெண் மற்றும் அவளுடன் நிம்மி எலோரும் வருகிறார்களா என்று பார்த்துக் கொள்ளலாம். இல்லையேல் அவளுடைய நண்பர் குழாத்திடம் விவரங்கள் விசாரித்துக் கொள்ளலாம் என்று நினைத்தேன்.
**** **** ****
அதற்கு அடுத்த இரண்டு நாட்களில் எனக்கு சென்னைப் பயணம். முன்பே பிரிண்ட் எடுத்து வைத்திருந்த இரயில் டிக்கெட் என்னுடைய கைப் பையில் இருந்தது. இரயிலில் டிக்கெட் பரிசோதகரிடம் அந்த டிக்கெட் காட்டி, அவர் அதில் கிறுக்கிக் கொடுத்ததும் அதை வாங்கி சட்டைப் பையில் வைத்துக் கொண்டேன். அமேசான் கிண்டில் கையில் எடுத்து, அபிதாவை விட்ட இடத்திலிருந்து படிக்கத் தொடங்கினேன்.
படித்துக் கொண்டிருக்கும் பொழுது, பை மேலே கையை ஓட விட்டேன். உள்ளே கோகுலாஷ்டமி முறுக்கு போல ஏதோ ஒன்று தட்டுப்பட்டது. பேரக் குழந்தை என்னுடைய கைப் பைக்குள் முறுக்கைப் போட்டிருக்கு போலிருக்கு. பயணத்தில் வெறும் வாயை மெல்லுவதற்கு பதில், அதையாவது மெல்லலாம் என்று நினைத்தேன். பையிலிருந்து அதை எடுத்து ஆவலோடு பார்த்தால், அது நிம்மியின் கொலுசு!
(இதில் சில சம்பவங்கள் மட்டுமே உண்மை. மீதி யாவும் கற்பனை. இப்போ கேள்வி உங்களுக்கு. நீங்கள் இந்த நிலைமையில் இருந்தால் என்ன செய்திருப்பீர்கள்? எதிர்பாராத வகையில், காணாமல் போன கொலுசு உங்கள் பையில் - நிம்மி போட்டது. என்ன செய்வீர்கள்?)
நடந்த தவறை ஒப்புக் கொண்டு கொலுசுவை மீண்டும் ஒப்படைத்து விடுவதே சிறந்தது என நினைக்கிறேன்...
பதிலளிநீக்குநல்ல கதை... அழகான பதிவு...
பேசாமல் நடந்ததைச்சொல்லி கொலுசை உரியவர்களிடம் ஒப்படைக்க வேன்டியது தான்! அந்த பணிப்பெண்ணின் மீது ஏற்பட்ட பழி தீரும். கவனக்குறைவு அவளின் குற்றம் தான் என்றாலும் ஏதேனும் அதிக பட்ச தண்டனை எதுவும் அவளுக்குக் கிடைந்திருந்தால் அது குறைக்கப்படலாம் இல்லையா? சில சமயம் ஒருத்தருக்கு நன்மை செய்யும்போது, கூடவே வலிகளும் வர்த்தான் செய்யும். நன்மை செய்யும்போது கிடைக்கும் மன நிறைவிற்காக வலியைப் பொறுத்துக்கொள்ள வேன்டியது தான்!
பதிலளிநீக்குபோன் செய்து யார் மூலமாவது இந்த தகவலைத் தெரியப்படுத்திவிட்டு பின் திரும்பி வந்ததும் கொலுசை கொடுத்துவிடுவேன்..
பதிலளிநீக்குதயங்காது கொலுசை திருப்பிக் கொடுத்திருப்பேன்.....
பதிலளிநீக்குசுவாரசியமான எழுத்துநடை....
Return...
பதிலளிநீக்குஇதிலென்ன சந்தேகம்? உரியவரிடம் பொருளை ஒப்படைப்பதுதானே முறை? உடனடியாகத் தந்துவிட முடியவில்லை என்றாலும் பொருள் நம்மிடம் தவறுதலாக வந்துசேர்ந்திருக்கிறது என்ற தகவலையாவது எவர்மூலமாவது உடனடியாகத் தெரிவித்துவிடலாம். பணிப்பெண் மீதான சந்தேகம் வலுப்பதோ, மன உளைச்சலோ தவிர்க்கப்படுமே.
பதிலளிநீக்குநீங்கள் என்ன செய்வதாக இருக்கிறீர்கள்:)
பதிலளிநீக்கு* கொலுசு என்னிடம் இருப்பது, எனக்கே தெரியாமல் இருந்து, நான் வேறு ஊருக்கு செல்லும்பொழுது தெரிய வருகிறது.
பதிலளிநீக்கு* எனக்கு அந்த அடுக்கு மாடிக் கட்டிடத்தில், தெரிந்தவர்கள் / தொலை தொடர்பு கொள்ளும் வகையில் யாரும் இல்லை.
* நான் கேட்டது, கொலுசுவை நான் திருப்பிக் கொடுக்க வேண்டுமா வேண்டாமா என்பது அல்ல. திருப்பிக் கொடுக்கவேண்டும் என்பதுதான் தர்மம், நியாயம், நீதி நேர்மை எல்லாமே. ஆனால், அதுவல்ல பிரச்னை.
* கொலுசுவையும் உரிமையாளரிடம் சேர்ப்பிக்க வேண்டும்; பணிப்பெண் பாதிக்கப் பட்டிருந்தால், அவரையும் இக்கட்டிலிருந்து காப்பாற்ற வேண்டும். அதே சமயம், என்னுடைய தன்மானமும் காப்பாற்றப் பட வேண்டும். (சார் இந்தக் கொலுசு என் பைக்குள் இருந்தது. அந்தக் குழந்தை போட்டிருக்கும் போலிருக்கு.... என்று ஆரம்பித்த உடனேயே, குழந்தை போட்டது என்றால் உங்களுக்கு புத்தி எங்கே போயிற்று? என்று கேட்பவர்கள்தான் அதிகம்!!)
* மேலும் இது ஒரு கற்பனை சூழல்தான். இப்படி நேர்ந்தால் நாம் என்ன செய்யலாம்? என்று எத்தனை பேருக்கு எண்ணிப் பார்க்க முடிகின்றது என்பதை தெரிந்துகொள்ள..
* கோவை ஆவி சொல்லியிருக்கும் தீர்வு, சற்றேறக் குறைய என்னுடைய தீர்வை ஒத்து இருக்கின்றது.
சுவையான கற்பனை! உடனடியாக தகவல் தந்து கொலுசினை திருப்பி தரவேண்டியதுதான்!
பதிலளிநீக்குகொலுசைத் திருப்பிக் கொடுத்துவிட வேண்டும் என்பதில் இரண்டாவது கருத்தில்லை. குழந்தையைப் பார்த்துக் கொள்ளும் பெண்ணுக்கு அதிக வலி ஏற்படாமல் எப்படி செய்வது என்பதுதான் கேள்வி.
பதிலளிநீக்குநேராக அவர்கள் வீட்டிற்கு போய் 'குழந்தை என்னிடம் வந்து ஏதோ சொன்னாள், எனக்குப் புரியவில்லை. அடுத்தநாள் வெளியூர் போய்விட்டேன். அங்குதான் எனது கைப்பையில் கொலுசு இருந்தது தெரிய வந்தது' என்று சொல்லிக் கொடுத்துவிடலாம்.
சங்கடமான ஒரு சூழ்நிலை தான்!
அந்த நிம்மி அங்கே அந்தப் பணிப்பெண்ணோடு வர வரைக்கும் காத்திருந்து பார்த்து வர அன்னிக்கு அந்தக் கொலுசை அவங்க கண் பார்வையில் படறாப்போல் புதர் மறைவில் போட்டுவிட்டு, தற்செயலாகக் கண்டு பிடித்தது போல் எடுத்துக் கொடுக்கிறது தான் மானம் போகாமல் இருக்க ஒரே வழி.
பதிலளிநீக்குகுழந்தை சொன்னப்போவே பையைத் திறந்து பார்க்கக் கூடாதோ? :)))) இப்போப் பாருங்க எல்லாரும் மண்டையை உடைச்சுக்க வேண்டி இருக்கு.
இருங்க, எதுக்கும் ஹூசைனம்மா வந்து சரியான தீர்வை வழங்குவாங்க. :))))
ஹூசைனம்மா, எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்.