Tuesday, September 3, 2013

மனவரிகள் - இன்றேனும் ஒருநாள்..

  
யதார்த்தங்கள்
மறந்த வாழ்வில்
சதா இருக்கும்
கவலைகளை மறந்து
இன்றேனும் ஒருநாள்
இயல்பாய் இரு!


இன்னும் இருக்கின்றன
நாட்கள்...
இன்னும் இருக்கின்றன
கவலைகள்.....
என்றும் கிடைக்காது
சாபவிமோசனம்..
அவை கிடக்கட்டும்..

இன்றேனும் ஒருநாள்
இயல்பாய் இரு!

  


சாபம் தர முனிவர்களும் இல்லை
சாப விமோசனம் தர
தேவர்களும் இல்லை
பாண்டவர்களும் கௌரவர்களும்
பாதிப்பாதியாய்க்
கலந்துவிட்ட உலகில்
யார், எவர் என்று
பிரித்துணர முடியாப்
பதட்டம் தணிந்து
இன்றேனும் ஒருநாள்
இயல்பாய் இரு!

 

காதலியைக் கவர
கண்ட வழிகளையும்
கடைப்பிடித்து
உள்முகம்  மறைத்து
பொய்முகம் காட்டும் போலித்தனங்கள் தவிர்த்து
இன்றேனும் ஒருநாள்
இயல்பாய் இரு!


இனி
இனிதாகலாம் 

உலகம் உனக்கும்! 
    
       

24 comments:

கோவை ஆவி said...

மனதிற்கும் வரிகளுக்கும் இடைவெளி விடாதது "typo" என்று நினைத்தேன்.. ஆனால் இடைவெளி இல்லாததால் தான் ஒரு சிறப்பான கவிதை கிடைத்தது என குறிப்பால் உணர்த்திவிட்டீர்கள்!

திண்டுக்கல் தனபாலன் said...

இன்றேனும் ஒருநாள் இயல்பாய் இரு...! (தினமும்)

rajalakshmi paramasivam said...

என்றேனும் ஒரு நாள் இயல்பாய் இருக்கத் தான் நினைக்கிறோம். ம்ஹூம்....முடியவேயில்லையே!

Geetha Sambasivam said...

அருமையான கவிதை. தினமும் தான் இயல்பில் இருக்கோம். :) ஆனாலும்.................

ராஜி said...

போலித்தனங்கள் தவிர்த்து
இன்றேனும் ஒருநாள்
இயல்பாய் இரு!
>>>
இருக்கனும்ன்னுதான் ஆசை. ஆனா, இருக்க முடியாம நிர்பந்திக்குது இந்த உலகம்!

சீனு said...

சாபம் தர முனிவர்களும் இல்லை சாப விமோசனம் தர தேவர்களும் இல்லை. ஹா ஹா ஹா ... மேலும் வழக்கம் போல பாண்டவர்களின் எண்ணிக்கை கம்மியாவும் கௌரவர்களின் எண்ணிக்கை அதிகமாவும் தன இருக்கு

இயல்பாய் இருக்க முயல்கிறேன்... அதிகாலையில்! ஒரு நல்ல கவிதை

இராஜராஜேஸ்வரி said...

இயல்பாய் இரு!
இனி
இனிதாகலாம் உலகம் உனக்கும்!

இயல்பாய் ஒரு
இனிய கவிதை ..!

ராமலக்ஷ்மி said...

மன வரிகள் மிக அருமை.

Manjubashini Sampathkumar said...

எதார்த்தம் மறைந்த இந்த உலகில்… இயல்பாய் இருக்கச்சொல்லி வேண்டும் வரிகள் சொல்லும் அத்தனையும் சத்தியம்…

கவலைகள் நிறைந்த முகத்தில் புன்னகை முகமூடி… எதார்த்தம் கொஞ்சம் தள்ளிவைத்து.. வீட்டில் இருக்கும் சூழல் வறுமை, ப்ரச்சனை, கவலை, கண்ணீர் எல்லாம் மறைத்து வீட்டுக்கு வந்த விருந்தினர், உறவினர் முன்பு புன்னகை முகத்துடன் வளைய வரும்போது எதார்த்தம் என்னும் இயல்பு கொஞ்சம் மறைக்கப்படுகிறது.. வேற வழி இல்லை…

இருக்கும் காலம் எத்தனை நாம் அறியோம்… ஆனால் வாழும் ஒவ்வொரு நொடியும் இயல்பாய் இருக்க முயற்சிப்போம்… தவறு என்று தெரிந்தால் அதை செய்யாமல் இருப்போம்.. கட்டாயத்தின் பேரில் கூட யாருக்கும் துளி சிரமமும் தராமல் இருப்போம்.. நமக்கு நல்லது நடக்கவேண்டும் என்பதற்காக பிறரை இம்சிப்பதை தவிர்ப்போம்.. ஏனெனில் நம் இயல்பு இதுவல்லவே..


நல்லவராய் இருப்பது இயல்பு.. நன்மையே செய்வது இயல்பு.. நல்ல இனிமையான வார்த்தைகளை பகிர்வதே இயல்பு.. அன்போடு எல்லோரையும் அரவணைத்து செல்வதே இயல்பு. அறியாது செய்யும் தவறு என்றாலும் அதற்கான தண்டனை காத்திருக்கும் நமக்காக.. அதை அறிந்து நாம் தவறுகளை தவிர்த்து இயல்பாய் இருப்போம் என்று சொல்கிறது வரிகள்…

நல்லோரும் அல்லாதோரும் கலந்துவிட்ட உலகில்… நீ எப்போதும் ஒரே போல் நல்லவனாய் மட்டுமே இரு என்று வலியுறுத்தும் அற்புதமான வரிகள்.. அரிசியில் கல் கலந்து இருந்தாலும் இயல்பாய் நாம் கல் களைந்து அரிசி உபயோகிப்பது போன்று நல்லோரிடம் நயமாய் நல்லதை கற்று வாழ்க்கை வளப்படுத்திக்கொள்வோம்..


அல்லாதோரிடம் நெருங்கிப்பழகாமல் தாமரை இலை நீராய் நல்லதை மட்டுமே செயலாற்றுவோம் என்று சொல்லும் அருமையான கருத்து…

காதலோ நட்போ.. நமக்கு வேண்டும் எனும்போது நயமாய் நயவஞ்சகமாய் நம் உண்மை முகத்தை மறைத்து நல்லதை மட்டுமே காட்டி நம்மிடம் நட்பு அல்லது காதல் கொண்டப்பின் நம் சுயரூபம் நம் மனதில் இருக்கும் அழுக்கை காண்பிக்கும் அருவெறுக்கத்தக்க காரியங்களை தவிர்த்து நேர்மையுடன் நம் உண்மையான மனதை காண்பித்து நட்பு அல்லது காதலைப்பெறுவோம் இயல்பாய் என்று அழுத்தமாய் சொன்ன வரிகள் சிறப்பு..

போலித்தனத்தை புறம் தள்ளி இயல்பாய் இரு… போலித்தனம் தற்போதைய சந்தோஷம் வேண்டுமானால் தரும். ஆனால் தீராத துன்பங்கள் நிரந்தரமாய் விதைத்துவிட்டுச்செல்லும்.. ஆதலால் போலித்தனம் வேண்டாம்.. உண்மையா. இயல்பாய் அன்பாய் இருந்தால் காலம் உன் வசம் என்று சொன்ன சிறப்பான கவிதை வரிகள்…

கருத்துடன் இணைந்த அழகிய கவிதை…

Manjubashini Sampathkumar said...

tha.ma.1

Sasi Kala said...

இயல்பாய் இருக்க சொல்லும் வரிகள் இனிமையானதே..
மஞ்சு அக்காவின் வரிகளை வாசித்தபடி நின்றுவிட்டேன்.

கோமதி அரசு said...

போலித்தனங்கள் தவிர்த்து
இன்றேனும் ஒருநாள்
இயல்பாய் இரு!

இனி
இனிதாகலாம்
உலகம் உனக்கும்! //

அருமையான கவிதை.
நாளும் இயல்பாய் இருந்தால் உலகம் இனிமைதான்.

Ranjani Narayanan said...

இன்றுமட்டும் இயல்பாயிரு என்று மிகவும் இயல்பாகச் சொல்லிவிட்டீர்கள்.
இன்று மட்டும் இயல்பாய் இருக்கலாம், இருக்க வேண்டும், நாளைய பொழுதைப் பற்றிக் கவலைப் படாமல்!

மனதை தொட்டன மனவரிகள்.
பாராட்டுக்கள்!

T.N.MURALIDHARAN said...

கவிதை நன்று
இயல்பாக இருக்க முடியாமல் இருப்பதே இயல்பாகி விட்டது பலருக்கும்.

வல்லிசிம்ஹன் said...

இயல்பாய் இருக்கத்தான் முயல்கிறோம்.
அதுவே மகிழ்ச்சி.நல்லவர்களால் சூழப்படும்போதும்,நல்லது செய்யும்போதும் இயல்பாக இருக்கிறோம்.
சிலவேளைகளில் மாறுவேடம் போடத்தான் வேண்டி இருக்கிறதுமா

sury Siva said...

நாளை முதல்
நான் நானாக இருப்பேன் என
நேற்று இரவு நீ செய்த சபதம்
நீ நீயாகவே இன்றும் தொடர்ந்ததால்
நிழலாகிப்போனதோ - என்
நிம்மதியும் கனவாகிப்போனதோ

....ஒரு யதார்த்தத்தின் ஓலம்.

சுப்பு தாத்தா.
www.subbuthatha.blogspot.in

raman said...

இயல்பு நிலை எது ? மகிழ்ச்சியாக இருப்பதல்ல ஏனெனில் அப்போது சந்தோஷம் வந்து சேர்ந்து இருக்கிறது. சோகமாக இருப்பதும் அல்ல - அதே காரணத்தால். வெறுமை என்பதை நாம் விரும்புவதில்லை. எனவே வெறுமை கூட இயல்பு இல்லை. இயல்பான நிலை நியுட்ரல் ஆக இருப்பதுவேதானோ ? சும்மா இருப்பதே சுகம் என்று தாயுமானவர் சொன்னது இதைத்தானோ ? உலகை விருப்பு வெறுப்பு இல்லாத சாட்சியாகப் பார்த்திரு என்று சொல்கிறார்களே அது சாத்தியம் தானா ? உன் சாதாரண விருப்பு வெறுப்புகளுடன் சண்டை சச்சரவு, பாராட்டு விமர்சனம் செய்யாத, செய்ய உந்துதல் இல்லாத நபராக இரு என்று சொல்வதாகக் கொள்ளலாம்.
Sent from http://bit.ly/otv8Ik

Geetha Sambasivam said...

தத்துவார்த்தமாக ராமன் சொல்றார். ஆனால் அப்படி இருக்கிறதுக்கும் முயற்சி தான் பண்ணணும், பண்ணித் தான் வரணும். ஆனால் ஶ்ரீராம் சொல்லி இருப்பது அது இல்லைனு நினைக்கிறேன். போலித்தனம் இல்லாத, முகமூடி போடாத, வேஷங்கள் இல்லாத மனிதனாக இருக்கச் சொல்றார்னு நினைக்கிறேன். இதிலே ஆரம்பிச்சாத் தான் ராமன் அவர்கள் சொல்லும் சும்மா இருக்கும் சுகத்தின் அருகேயானும் போக முடியும். :)))))

அப்பாடி, நினைச்சாலே மலைப்பா இருக்கே!!!!!!!!!!!

Geetha Sambasivam said...

அவரோட கடைசி வரிகளை முதல்லே கவனிக்கலை. அது தான் சரினு என்னோட கருத்தும். :))))

ஹேமா (HVL) said...

கஷ்டம் தான். முயற்சிக்கிறேன்!

Manjubashini Sampathkumar said...

//Sasi Kala said...
இயல்பாய் இருக்க சொல்லும் வரிகள் இனிமையானதே..
மஞ்சு அக்காவின் வரிகளை வாசித்தபடி நின்றுவிட்டேன்// அன்பு நன்றிகள் சசி..

ஸ்ரீராம். said...


நன்றி கோவை ஆவி.

நன்றி DD.

நன்றி ராஜலக்ஷ்மி பரமசிவம் மேடம்.

நன்றி கீதா மேடம்.

நன்றி ராஜி.

நன்றி சீனு.

நன்றி RR மேடம்.

நன்றி ராமலக்ஷ்மி.

நன்றி நன்றி மஞ்சுபாஷிணி. த ம 1 என்றெல்லாம் சொல்கிறீர்கள். எங்கள் கண்ணுக்கு ஓட்டுப்பட்டையே தெரிய மாட்டேன் என்கிறது!!

நன்றி சசிகலா.

நன்றி கோமதி அரசு மேடம்.

நன்றி ரஞ்சனி மேடம்.

நன்றி TNM.

நன்றி வல்லிம்மா.

நன்றி சுப்புதாத்தா.

நன்றி raman.

நன்றி ஹேமா HVL

சாய்ரோஸ் said...

சென்ற வாரம் எனது ரசனையின் டாப் வரிசையில் இடம் பிடித்த இந்தக்கவிதைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்...
http://jeevanathigal.blogspot.com/2013/09/02-to-08-09-2013.html

ஸ்ரீராம். said...


நன்றி சாய்ரோஸ்.

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!