பால் பாக்கெட்டை எடுத்துக் கொண்டு உள்ளே வந்த அம்மா தன்னிச்சையாக பேசியபடியே உள்ளே போனாள்.
“மூணாம் வீட்டு வெங்கடேச மாமாவை நேத்து ராத்திரிலேருந்து காணோமாம்..”
வேலைக்குக் கிளம்பிக் கொண்டிருந்த அமுதா காதில் இது விழுந்தது.
வெங்கடேச மாமா காணோமா…
அமுதாவுக்கு அவரைக் கண்டாலே அலர்ஜி.
“நைட்டு அவங்க அம்மா அவரை ‘உன்னாலே எனக்குக் கஷ்டம்தான்’னுல்லாம் சொல்லி ஏதோ கன்னாபின்னான்னு திட்டிட்டாங்களாம்… காணும்னதும் இப்போ அழுதுகிட்டு இருக்காங்க…”
பரபரவெனக் கிளம்பிக் கொண்டிருந்தாலும், மனத்தின் நினைவோட்டம் தனியாக ஓடியது.
வெங்கடேசனுக்கு இப்போது வயது 48 இருக்குமா? இருக்கும். இந்த வீட்டுக்குக் குடிவந்த நாளாய்ப் பார்த்துக் கொண்டிருக்கிறோமே… மனநிலை சரியில்லாதவர் என்று பார்க்கும்போதே தெரிந்தது. அந்த வயதுக்கு, டிராயருடன் சுற்றுவது விநோதமாக இருந்தது. சற்றே ஆபாசமாகவும் இருந்தது.
கரளை கரளையாக கை கால்கள். மொச மொசவென்று உடம்பு பூரா ரோமம். எல்லாம் சரிதான். ஆனால் முகம் காட்டிக் கொடுத்தது மனதின் வளர்ச்சியின்மையை. ‘மனதுக்கும் சேர்த்து உடம்பு வளர்ந்திருக்கிறது’ என்பாள் அம்மா. அவ்வப்போது வழியும் எச்சிலை புறங்கையாலும்,கையில் கிடைக்கும் துணியாலும் துடைத்துக் கொள்வார்.
வயதுக்குரிய வளர்ந்த பேச்சு அவ்வப்போது தலை காட்டும். பெரும்பாலும் குழந்தைப் பேச்சுதான். வளர்ந்த அந்தக் குழந்தையை, தன் மகனை, மூன்றாம் வீட்டு அம்மா பத்திரமாகப் பார்த்துக் கொண்டிருந்தாள். வயது வித்தியாசமில்லாமல் எல்லோரிடமும் வந்து ஏதாவது பேசுவார். இயல்பாய் தொட்டுப் பேசுவார்.
அவரை விட வயதில் குறைந்தவர்கள் எல்லாம் கூட அவரை ‘வெங்கிட்டு… இங்க வா… அதை எடுத்து வா’ என்றெல்லாம் மரியாதை இல்லாமல் பேசுவதைக் கேட்டிருக்கிறாள்.
பக்கத்து வீட்டு செல்லம்மாவை அவர் தொட்டுப் பேசும் தருணங்களில் அவள் கோபப் படாமல் அவர் கையை விலக்கி, ‘ஏய்…போ… அங்க போய் உட்காரு… அப்போதான் சாப்பிட எதாவது தருவேன்’ என்று மிரட்டுவது மாதிரி சொல்லும்போது விநோதமாக இருக்கும்.
குழந்தைகள் அவரிடம் விளையாடினாலும் குழந்தைகளிடம் அவர் பிரியமாகவே இருப்பார்.
‘நாம்தான் அவர் இவர் என்று நினைக்கிறோம்…. எல்லோருக்கும் அவன் இவன்தான்…. இல்லன்னா வெங்கிட்டு!’ புன்னகைத்துக் கொண்டாள்.
இவளிடம் வெங்கிட்டு பேசவோ, அல்லது எதிரிலோ வந்தால் கூட அருவருப்புடன் ஒதுங்கி வேகமாக வேறுபக்கம் ஒடிவிடுவாள்.
அவர் அணியும் தொள தொள டிராயரும், முண்டா பனியனும் அவரிடம் அவளுக்கு ஒரு வெறுப்பையும், பயத்தையும் வளர்த்திருந்தன, அந்த சம்பவம் வரை!
ஒரு மழை பெய்த இரவில், விளக்கெரியாத் தெருவில், வேலை விட்டு லேட்டாக வர நேர்ந்த இரவில், தினமும் வம்பு செய்யும் ஏரியா ரௌடி மணி வேறு ஒருவனுடன் வந்து வழிமறித்து வம்பு செய்த வேளை. எலெக்ட்ரிக் டிரெயின் இறங்கி நடந்து வரும் வழியில் அவ்வளவாக ஆள் நடமாட்டமிருக்காத ஏரியா அது.
மழையில் நனைந்த உடுப்பு உடலுடன் ஒட்டியிருக்க, மேய்ந்த மணியின் கண்களில் தெரிந்த வெறி பீதியூட்டிய நேரம். கைப்பையை மார்போடு அணைத்துக் கொண்டு ஒதுங்கிச் செல்ல முயன்றவளை இன்னும் குறுக்கே வந்து மறித்தான் மணி.
பின்னால் காலடியோசை.
வெங்கிட்டுதான்.
வந்து இவர்கள் குறுக்கே நின்றார். ‘என்ன அமுதா? வீட்டுக்குப் போகணுமா?’ என்றார்.
“டேய் கிறுக்கா… விலகி ஓடிடு… இங்க வந்து ..விளையாடாதே.” அடிக்குரலில் மிரட்டிய மணி கூட்டாளிக்கு ஜாடை காட்ட, அவன் கையில் சிறியதாய் ஒரு கத்தி.
‘போ..மணி..போ… அமுதா… வா.. நாம போகலாம்’ என்று அமுதாவின் கையைப் பிடித்துக் கொண்ட வெங்கிட்டு தாண்டி நடக்கத் தொடங்க, அடியாள் வந்து வெங்கிட்டு பனியனைப் பிடித்தான்.
வெங்கிட்டுவின் பலம் அப்போது தெரிந்தது. அந்த இருவரையும் பந்தாடிய வெங்கிட்டு எச்சிலை எச்சிலைத் துடைத்துக் கொண்டு ‘அமுதா… நீ போ… நான் பின்னாடியெ வர்றேன்’ என்று அவர்களை நெத்தித் தள்ளிக் கொண்டு சென்றான். இல்லை, இல்லை சென்றார்.
இவள் வீட்டுக்குள் நுழைவதற்குள் வெங்கிட்டு பின்னாலேயே வந்து விட்டது தெரிந்தது. இவள் பத்திரமாக வீட்டுக்குள் நுழைவதைப் பார்ததுக் கொண்டே தன் வீடு செல்வதும், கொஞ்ச நேரத்தில் அவர் அம்மாவின் ‘கைல என்னடா ரத்தம்?’ என்ற பதற்றக் குரலும் கேட்டது.
மறுநாள் வெங்கிட்டு அம்மாவைப் பார்க்கும்போது இவளுக்குக் குற்ற உணர்வாய் இருந்ததே தவிர, அந்த அம்மாள் அதை ஒரு பொருட்டாகவே கொள்ளவில்லை. ‘ஜாக்கிரதை அம்மா… ராத்திரி நேரம் கழித்து வந்தால் யாராவது துணையோடு வா.. ஒரு சமயம் போல இருக்காது’ என்று இவளை ஜாக்கிரதைப் படுத்தினாள்.
அப்புறமும் கூட வெங்கிட்டுவிடம் இவளுக்கு ஒன்றும் பாசம் வந்து விடவில்லை. ஆனால் வெறுப்பு கொஞ்சம் குறைந்திருந்தது. தெருக் குழந்தைகளுடன் அவர் பந்து தூக்கிப் போட்டு விளையாடுவதையும், கோடி வீட்டு கைக்குழந்தையை கையில் தூக்கிக் கொண்டு வேகம் வேகமாக நடப்பதையும் புன்னகையோடு பார்க்கப் பழகியிருந்தாள்.
மணி ஏழரையை நெருங்கிக் கொண்டிருக்க, அம்மா தந்த டிஃபன் பாக்ஸை வாங்கிப் பைக்குள் வைத்தபடியே தெருவுக்கு வந்தபோது தெரு பரபரப்பாக இருந்தது.
வெங்கிட்டுவின் அம்மா தெருவில் மூர்ச்சையாகிக் கிடந்தாள். பக்கத்து வீட்டுப் பாட்டி அவளை தண்ணீர்த் தெளித்து எழுப்ப முயற்சித்துக் கொண்டிருந்தாள்.
தெருக் குழந்தைகள் அழுதபடி ஓடிக் கொண்டிருக்க, எதிர்வீட்டு ப்ளஸ் டூ படிக்கும் பையனிடம் என்னவென்று கேட்டாள் அமுதா.
“வெங்கிட்டு மாமா ரயிலில் அடிபட்டு செத்துப் போயிட்டாருக்கா… நைட்டு கவனிக்காம லைன் க்ராஸ் பண்ணியிருக்கார் போல…பீஸ் பீஸாயிட்டாருக்கா…” சொல்லும்போதே அழுதான்.
எப்போதும் வேகமாக நடக்கும் அமுதா மிக மெதுவாக கைப்பையை இறுகப் பற்றியபடி வெறித்த பார்வையுடன் நடந்தாள்.
******************************************
******************************************
அதீதம் இணைய இதழுக்காக எழுதிய சிறுகதை (2013 செப்டம்பர் முதலாம் இதழ் )
இது தொடருமா? முடிஞ்சதா.. நல்ல கதை.. உணர்வுப் பூர்வமாக இருந்தது.
பதிலளிநீக்குஅச்சோ, வெங்கிட்டு மாமான்னதும் நான் அவங்க அப்பாவோன்னு நினைச்சுட்டேன்..
பதிலளிநீக்குtha.ma.1
பதிலளிநீக்குகதை படிச்சு முடிச்சதும் என்னவோ மனசு கனத்துக்கொண்டே இருக்கிறதுப்பா…
பதிலளிநீக்குஒவ்வொரு கேரக்டரும் அதன் பாத்திரத்தை மிக அற்புதமாக எழுதி இருக்கீங்க…
அதீத வளர்ச்சியான உடல் மனதுக்கும் சேர்த்து.. ஒழுகிக்கொண்டிருக்கும் எச்சிலும் தொளதொள ட்ராயரும் முண்டா பனியனும் கண்முன் நிற்கிறது..
ஒரு படைப்பாளிக்கு எப்போது வெற்றி?? எழுதிய எழுத்துகள் வாசிக்கும் வாசகர்கள் மனதில் பதிந்து புரிந்து அதில் ஆழ்ந்து அந்த கதையில் ஒன்றி… துர்ச்சம்பவம் நடக்கும்போது ஐயோன்னு மனசு கிடந்து அல்லாடுகிறதே.. அதில் தான் படைப்பாளிக்கு வெற்றி..
இப்போது இந்த கதை படித்து என் மனநிலை அப்படி தான் இருக்கிறது.. புறத்தோற்றம் அழுக்கும் ஒழுகும் எச்சிலுமா இருக்கிற வெங்கிடுவை வயதில் சின்னவர்கள் கூட மரியாதை இல்லாமல் அழைப்பதும் வேலை வாங்குவதும், கொஞ்சம் கூட முகம் கோணாமல் சிணுங்காமல் மகனைப்பார்த்துக்கொள்ளும் அம்மாவும், குழந்தை மனம் இல்லையா? அதனால் தான் குழந்தைகளிடம் அதீத ப்ரீதி போல வெங்கிடுக்கு..
எடுத்ததுமே சஸ்பென்சாக கதையை தொடங்கி.. வெங்கிடுவைப்பற்றிய அலசல் ஏன் இந்தம்மாவுக்கு என்று நினைத்தால் இடையில் ஏற்பட்ட சம்பவம்….
ராத்திரி நேரம் கழிந்து இருட்டில் தன்னந்தனியாக ஒரு பெண் நடந்து வந்தாலே அங்கிருக்கும் ஆண்கள் திரும்பிப்பார்ப்பார்கள் கண்டிப்பாக.. இந்தப்பெண் மழையில் வேறு நனைந்து ரௌடி மணிக்கிட்ட மாட்டனுமா? அப்படி ஆனதும் ஒருவிதத்தில் நல்லதுக்கே.. வெங்கிட்டுவைப்பற்றி அறிய ஒரு நல்ல வாய்ப்பை அல்லவா கடவுள் கொடுத்திருக்கார்…
பாவம் வெங்கிட்டு… 48 வயசு… அதே குழந்தை முகம்… ஆனால் அமுதா நீ வா வீட்டுக்கு போகலாம்னு சொல்லி கைப்பிடித்துக்கூட்டிட்டு போகும் அந்த பெருந்தன்மை.. இடையே குறுக்கிட்ட மணியும் அவன் தோஸ்துக்கும் கிடைத்த பூஜை அதான் நம்ம வெங்கிட்டு உபயம்… ஆனால் கத்தி வெச்சிருந்த பாவிகள் கையை பதம் பார்த்துவிட்டார்கள் போலிருக்கு..
பதிலளிநீக்குஎவ்ளோ பெரிய விஷயம் சாதிச்சிருக்கார் இந்த வெங்கிட்டு.. கையில ரத்தம் ஆனாலும் வெங்கிட்டு அம்மா ஒன்னும் சண்டை போடாம அமுதாவிடம் வந்து இனிமே கவனமா பார்த்து போம்மா என்று சொன்ன அந்த தாய்மை…நானும் கதை இந்த ரீதியில் போனால் எங்கே அமுதா சினிமாக்காதல் போல வெங்கிட்டுவை காதலிக்க ஆரம்பிச்சிருவாளோன்னு நினைச்சேன். ஆனால் கதையின் போக்கு திசையைமாற்றி அருவெறுப்பு குறைந்து கொஞ்சம் சிநேகபாவத்துடன் சிரிக்க ஆரம்பிச்சிருக்கா அமுதா..
வெங்கிட்டு காணோம்னு சொன்னதும் நான் நினைத்தது மணி அடித்து போட்டுவிட்டானோ எங்காவது குற்றுயிராக… ஆனால் சினிமாத்தனம் இல்லாத எளிய இயல்பான கதை ஓட்டம்.. கதையின் போக்கு ரொம்பவும் நன்றாக இருந்தது…
கடைசி க்ளைமேக்ஸ் வெங்கிட்டு ரயிலில் அடிப்பட்டு இது படித்து எனக்கே கஷ்டமாகிவிட்டது. கதை போலவே தெரியல படிச்சுக்கிட்டே வந்தபோது.. கதையில் ஒன்றிவிட்டதால் இருக்குமோ….
இந்த கதை படிச்சதும் எனக்கு மலையாளத்தில் கருமாடிக்குட்டன் படம் நினைவுக்கு வந்தது. அற்புதமான படம்.. கலாபவன் மணி கௌசல்யா நடித்திருப்பாங்க. அதில் கலாபவன் மணி நடிப்பு ஹப்ப்ப்ப்ப்ப்ப்பா அழுகையே வந்துரும்… இந்த கதை படித்தபோது மனம் என்னவோ கஷ்டமாகிவிட்டது.. வெங்கிட்டு குழந்தை மனசுள்ள ஒரு அன்பான பிள்ளை….
அருமையான கதை ஸ்ரீராம் சார்..
உங்க கதை அதீதம் இதழில் வெளி வந்தமைக்கு மனம் நிறைந்த அன்புவாழ்த்துகள்.. அற்புதம்.. வெங்கிட்டு கேரக்டர் ஸ்ட்ராங்.. படமாக எடுக்கலாம்.. சிறைப்படம் சின்ன கதையாக தான் வந்தது புத்தகத்தில் அதை படமாக எடுத்தபோது பிரம்மாண்டம் தெரிந்தது… இந்தக் கதையும் அப்படியே.. ஃபுல் மார்க்ஸ் ஸ்ரீராம் சார்…
இனி இரவில் அமுதாக்கு துணையாக யார் வருவா?? வெறித்துப்பார்த்துக்கொண்டு அமுதாவின் மனசுல இது தான் தோணி இருக்குமோ?
நெகிழவைத்த கதை. வெங்கிட்டு மாமா காணாமற்போன காரணம் ஒருவேளை மணியாக இருக்குமோ என்று எண்ணத்தோன்றியது. மனவளர்ச்சியற்றவர் என்றாலும் மனிதாபிமானத்தில் தேர்ந்தவராக இருக்கும் வெங்கிட்டு மாமா இன்னும் சிலகாலம் உயிரோடு இருந்திருக்கலாம். அதீதம் இதழில் வெளியானமைக்குப் பாராட்டுகள்
பதிலளிநீக்குசகோதரி மஞ்சுபாஷினி அவர்களின் கருத்தும் அபாரம்...!
பதிலளிநீக்குகனக்க வைத்த கதை! வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குஅருமையான கதை நெஞ்சை தொட்டது
பதிலளிநீக்குநிஜத்திலேயே இப்படி ஒரு காரக்டரைத் தெரியும். ஆகவே படித்ததும் அதன் தாக்கம் அதிகமா இருக்கு. :( அதீதத்தின் வெங்கிட்டு உங்க கதையா? தெரியலை. அங்கே போனேன், ஆனால் படிக்க முடியலை. வேறே வேலை வந்தது. :)))
பதிலளிநீக்குஇருக்கும் போது வெறுக்கப்பட்டும்.. இறக்கும் போது நினைக்கப்பட்டும் சில உயிர்கள் இருந்து கொண்டுதானிருக்கின்றன...
பதிலளிநீக்குஒரு படைப்பாளிக்கு எப்போது வெற்றி?? எழுதிய எழுத்துகள் வாசிக்கும் வாசகர்கள் மனதில் பதிந்து புரிந்து அதில் ஆழ்ந்து அந்த கதையில் ஒன்றி… துர்ச்சம்பவம் நடக்கும்போது ஐயோன்னு மனசு கிடந்து அல்லாடுகிறதே.. அதில் தான் படைப்பாளிக்கு வெற்றி.. //
பதிலளிநீக்குமஞ்சுவின் கருத்தை ஆமோதிக்கிறேன்.உண்மையில் மனசு ஐயோ என்று அல்லாடியது..மறக்க முடியாத கதபாத்திரமாகிவிட்டார் வெங்கிட்டு.
Ellorukkum serththu Manju madam azhaga karthukkal sollittanga!
பதிலளிநீக்குமனதை உலுக்கிப் போகும் கதை
பதிலளிநீக்குபகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்
வழக்கம் போலவே சிறப்பான பாத்திரப் படைப்புகளுடன் அருமையான நடை. மஞ்சுபாஷிணியின் பாராட்டுகளை எல்லோரும் வழிமொழிகிறோம். தொடர்ந்து கதைகளை எதிர்பார்க்கிறோம்:)!!
பதிலளிநீக்குநன்று :)
பதிலளிநீக்கு“நைட்டு அவங்க அம்மா அவரை ‘உன்னாலே எனக்குக் கஷ்டம்தான்’னுல்லாம் சொல்லி ஏதோ கன்னாபின்னான்னு திட்டிட்டாங்களாம்//
பதிலளிநீக்குவெங்கிட்டு அம்மா திட்டியதால் ரயில் தண்டவாளத்தில் விழுந்து விட்டாரா? அல்லது தற்செயலா?
மனம் வேதனைப்படுகிறது.
மணியிடமிருந்து அமுதாவை காப்பாற்றிய வளர்ந்த குழந்தை வெங்கிட்டுவை நினைக்கும் போது நல்ல மனிதன் இறந்து விட்டாரே என்று இருக்கிறது.
கதை அருமை. எழுதுங்கள் ஆனால் சோக முடிவு இல்லாமல் எழுதுங்கள் அது என் சின்ன வேண்டுகோள்.
மனதைக் கனக்க வைத்த கதை. கதை அருமை என்று அழுதுவதற்கு சங்கடமாக இருக்கிறது. உங்கள் நடை அருமை.
பதிலளிநீக்குஎனக்கும் தெரியும் இது போன்ற இன்னோரு வெங்கிட்டுவை. மனிதர்களிடம் அபார நம்பிக்கை வைத்திரு க்கும் ஆறு வயது மனதுக்கு 55 வயது.அவனுக்கு இது போல எதுவும் நிகழாமல் இருக்க என்பிரார்த்தனை.நன்றி ஸ்ரீராம். அருமையான பதிவு.
பதிலளிநீக்குநன்றாக இருந்தது. வாழ்த்துகள்!
பதிலளிநீக்குஅதீதம் தளத்திலேயே படித்து கமெண்ட்டும் கொடுத்துவிட்டேன்.
பதிலளிநீக்கு
பதிலளிநீக்குகோவை ஆவி, மஞ்சுபாஷிணி, கீதமஞ்சரி, DD, 'தளிர்' சுரேஷ், mathsmagivmahadevan, கீதா சாம்பசிவம், உஷா அன்பரசு, ஸாதிகா, middleclassmadhavi, ரமணி சார், ராமலக்ஷ்மி, அப்பாதுரை, கோமதி அரசு மேடம், இமா, வல்லிம்மா, ஹேமா, ரஞ்சனி மேடம்
அனைவருக்கும் நன்றி... நன்றி.... நன்றி.
மஞ்சு மேடம் கமெண்ட்ல கலக்கிட்டீங்க. படிக்க நிறைவாய் இருந்தது.
முடிவை வேறு மாதிரி அமைத்திருக்கலாம் என்று தோன்றியது. அமைத்திருந்தால் ஒரு முடிச்சு விழுந்து இப்போது இருப்பதைப் போன்ற ஒரு 'நிகழ்வாக' இல்லாமல் இருந்திருக்கும்.
பதிலளிநீக்குஒரு குட்டியூண்டு கதையில் அமுதாவின் பாத்திரப்படைப்பு அபாரம்.
வெங்கிட்டுவைப் பற்றிச் சொல்கிற கதை போல காட்டிக் கொண்டு அமுதாவை--வினோதமான அமுதாவை-- மனசில் பதிகிற மாதிரி வார்த்தெடுத்தீர்கள். ஒரு ஒருபக்க கதையில் இது உங்களுக்கு சாத்தியப்பட்டிருப்பது அற்புதம். அசாத்திய திறமை. கங்கிராட்ஸ்!
வெங்கிட்டு போன்ற ஆட்களை அங்கங்கே நானும் பார்த்திருக்கிறேன் சார், மெல்லிய இளகிய நடையுடன் எழுதபட்ட இந்த சிறுகதையை வெகுவாய் ரசித்தேன்...
பதிலளிநீக்குஆமா சார் வெங்கிட்டு கொலை செய்யபட்டானா இல்லை விபத்தா என்பது வாசகர் முடிவா.. அப்படி என்றால் அது நிச்சயம் கொலை தான்...
அதீதம் இதழுக்குக் கிடைத்த ஒரு அதீதமான சிறுகதை... வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குநன்றி ஜீவி ஸார். உங்களை இன்னும் காணோமே என்று பார்த்துக் கொண்டிருந்தேன். உங்கள் பாராட்டுகள் என்னை ஊக்கப் படுத்துகின்றன.
நன்றி சீனு.
இதுவரை ஒருமுறை கூட வன்சொல் பேசியிராத தாயின் பேச்சு அவரை வேறு முடிவுக்குத் தூண்டியிருக்கலாம் என்ற சந்தேகமும் வருகிறமாதிரி அமைத்திருப்பதாய் நினைத்தேன். இன்னும் அழுத்தமாய் அந்த இடம் அமைத்திருக்கலாம். ஆனால் அப்படி அமைத்தால் அது ஒன்றே சாத்தியம் என்றும் ஆகிவிடக் கூடாது என்று நினைத்ததன் விளைவு!
ஆனால் முடிவு என்பது ஒன்றுக்கு மேற்பட்ட சாத்தியங்களுக்குட்பட்டு வாசகர்கள் முடிவுக்கு இருக்க வேண்டும் என்று தோன்றும்!
உணர்வு பூர்வமான கதை.
பதிலளிநீக்குஇப்படிப்பட்ட மனிதர்களைப் பார்த்திருப்பதால் இன்னுமே கதையோடு ஒன்றிப் போக முடிகிறது
நன்றி ரிஷபன் ஸார்.
பதிலளிநீக்கு