Wednesday, January 29, 2014

இலைகள் பழுக்காத உலகம் - ராமலக்ஷ்மி

                           
                                       


நீள நீளமாய்க் கவிதைகள் எழுதுவது என்னைப் பொருத்தவரைக் கடினமான செயல். நாலுவரி எழுதுவதற்குள் நாக்கு தள்ளி  விடுகிறது! பாரா பாராவாக அதை நீட்டிச் சொல்வதற்கு திறமை வேண்டும். அது ராமலக்ஷ்மியிடம் நிறைய இருக்கிறது. பல்துறை வித்தகர். கதை, கவிதை, கட்டுரை, பயண அனுபவங்கள் என்று எழுதுவதோடு மூன்று தளங்களில் ஆசிரியர் பொறுப்பும். அப்புறம் அவரது ஸ்பெஷல் ஃபோட்டோக்ராஃபி.
           
நவீன விருட்சம், கீற்று, கல்கி, விகடன், உயிரோசை, சொல்வனம், மல்லிகை மகள், தேவதை என்று பல்வேறு இடங்களிலும் வெளிவந்த அவரது கவிதைகளின் தொகுப்பாக வந்துள்ளது இந்த நூல். மிகச் சமீபத்தில் கல்கியில் வந்த அவரது 'நாளினை நனைத்த சொற்களு'ம் கூட நூலில் இடம் பெற்றிருப்பதற்கு அகநாழிகைப் பொன் வாசுதேவனைப் பாராட்ட வேண்டும். அவரை இன்னொரு விஷயத்துக்கும் பாராட்ட வேண்டும். நேர்த்தியான வடிவமைப்பு, கச்சிதமான அளவு மட்டுமல்ல, புத்தகத்தில் எழுத்துப் பிழைகளை கண்ணில் விளக்கெண்ணெய் விட்டுதான் தேட வேண்டும். மிகச் சொற்பமான அளவிலேயே பிழைகள்.  
                  
ஏனென்றால், பிழைகளுடன் இருக்கும் புத்தகம் சமீபத்தில் படித்த அனுபவத்தில் சொல்கிறேன்!  நல்ல கருத்துகள் கொண்ட புத்தகம் கூட பிழையினால் பொலிவிழந்து போகும்!  
          
பெரும்பாலும் ஏற்கெனவே அவர் பகிர்ந்து படித்தவைதான். ஆனாலும் ஒவ்வொன்றாக ப்ளாக்கில் படிப்பதற்கும், புத்தகமாய்ப் பார்ப்பதற்கும் நிச்சயம் வித்தியாசம் இருக்கிறது.  
             
61 தலைப்புகளில் கவிதைகள். (கவிதைகளுக்குத் தலைப்பு வைக்கவேண்டும் என்றே எனக்கு சமீபத்தில்தான் தெரியும்!)  
                
ஒவ்வொரு கவிதையைப் படிக்கும்போதும் ப்ளாக்கில் படித்தபோது எனக்கு என்ன தோன்றியது என்று நினைத்துப் பார்க்கத் தோன்றியது. இத்தனைக்கும் நான் படிக்காத கவிதைள் கூட இருந்தன, புத்தகத்தில்.  படித்து நினைவில்லையா, அல்லது சிலவற்றை ராமலக்ஷ்மி அவர்கள் வலைப்பக்கத்தில் பகிரவில்லையா... தெரியவில்லை. 
               
அன்றாட வாழ்வின் ஒவ்வொரு நிகழ்வையும் எவ்வளவு ஆழ்ந்து கவனிக்கிறார் ராமலக்ஷ்மி என்று கவிதைகளின் கருவிலிருந்து தெரிகிறது. முன்னுரையில் 'புன்னகை' கவிதை இதழ் ஆசிரியர் க. அம்சப்ரியா இதைத்தான் சொல்கிறார்.
               
சிலசமயம் கவிதைகள் சொல்லவரும் கருப்பொருளை, கவிதையின் நடுவிலிருந்து தேடி எடுக்க வேண்டியிருக்கிறது. நடுவில் எங்கோ ஒளிந்திருக்கும் கவிதைக் கருவின் வார்த்தைகள்! சொல்லவரும் கருத்து தெரிந்தவுடன், கவிதையை மறுபடி படித்தால், எங்கிருந்து, எதனை ஒப்புமைப் படுத்துகிறார் என்று ஆச்சர்யம் ஏற்படுகிறது. 
               
கதை எழுதும் அதே கவனத்தோடு கவிதைகளுக்கும் கரு தேவைப் படுகிறது.  (உதாரணத்துக்கு 'ஒன்றையொன்று') ராமலக்ஷ்மிக்கு அதற்குப் பஞ்சமேயில்லை. கடற்கரைக்குச் சென்றால் காற்று வாங்கி விட்டுத் திரும்பும் என் போன்றோரிடையே அங்கு கடல், சிப்பியைக் கொண்டு வரும் தடம், அதை எடுக்கச் சென்ற குழந்தையின் கால் தடம்,  என்றெல்லாம் கவனித்து, அந்தக் கால் தடம் கலையாதிருக்க கடல் படும் கவலையைச் சொல்கிறார். 
              
மற்றவர்கள் பார்க்காததை எல்லாம் கவிஞனின் கண்கள் பார்க்குமாம். இரவு கண்ணிழுக்கும் தூக்கத்தில் கார் ஓசை கேட்டு ஒவ்வொரு வீடும் விழித்துக் கொண்டு 'தன் வீட்டுக் கா(ர)ரா' என்று படும் கவலையைக் கவிதையாக்குகிறார்.  ( 'நட்சத்திரங்கள்' - இங்கு எனக்கு என்னமோ 'மிளிர்ந்து கொண்டிருக்கின்றன நட்சத்திரங்கள்' வரியோடு கவிதை முடிந்து விடுகிறது!)
         
புத்தகத் தலைப்பான 'இலைகள் பழுக்காத உலகத்தை' அப்பாவை நினைத்து எழுதி இருக்கிறார். புத்தகத்தையும் அப்பாவுக்கு சமர்ப்பித்திருக்கிறார். 
              
ஒரு மூச்சிலேயே படித்து முடித்தேன் என்று சொல்லக் கூடிய புத்தகம் இல்லை இது. அவ்வப்போது எடுத்து புரட்டிக் கொண்டே இருக்கலாம். 

பூக்குட்டியின் கவலை புரிந்து விரையும் மேகம்..
இருந்த இடத்தைத் தேடும் மூஞ்சூறு... ஓவியக் கண்காட்சி பற்றி சமீபத்தில் கூட எழுதி இருந்தார். அங்கு செல்லும்போது கண்கள் காணும் காட்சியில் எல்லாம் மனம் ஒரு கதையை, சம்பவத்தைக் கற்பனை செய்துவிடும் போல!   
              
குழந்தை கால்தடம் மீதான கடலின் 'தவிப்பு'...
பூமி குளிர மழை பொழியக் காரணம்...
வண்ணத்துப் பூச்சியாக ஆசைப்படும் ஒரு வண்ணத்துப் பூச்சி..
              
ராஜாத் தேனீக்களுக்கு கொடுக்குகள் இல்லாத காரணம் தெரியுமோ...
'அழகிய வீரர்கள்' - எதிலிருந்து எதற்கு ஒப்பீடு செய்கிறார் என்று ஆச்சர்யம் ஏற்படுகிறது.  
               
மனிதம் குறைந்த உலகில் தென்படும் துளிக் கருணை நனைக்கிறது மனதை, தொடரும் பயணத்தில் ... 
    
சுவாரஸ்யப் புதிராய் 'யார் அந்தச் சிறுவன்' 
   
மறுப்பு - அந்த வயதான பெண் தானே உள்ளே சென்று படைக்கலாமே என்ற ஆதங்கம் தருகிறது!   
                
'பிரார்த்தனை' யில் 'பிரார்த்திக்கத் தொடங்குகிறது வேதனையுடன் அன்பு' என்ற வரிகளை என் சௌகர்யத்துக்காகக் கடைசியில் சேர்த்துக் கொண்டேன்!  
     
காதல், காதல் தோல்வி என்று கவிதைகள் படித்திருக்கிறேன். 

ஒட்டுமொத்தப்பார்வையில் ராமலக்ஷ்மி கவிதைகளில் தத்துவார்த்த சிந்தனையும், வாழ்வின் ஒவ்வொரு அசைவிலும் கவனிக்கப் பட்டிருக்கும் நுணுக்கமான சமூகப் பார்வையும் தெரிகிறது.  
               
எனக்கெல்லாம் 'கைமாத்தாக'க் கிடைத்தால்தான் உண்டு கவிதை! 
           
'ஒரு சொல்' சமீபத்திய என் அவஸ்தையை நினைவு படுத்துகிறது. படித்த ஒரு நாவலின் பெயரை மறந்து திண்டாடிக் கொண்டிருக்கிறேன்.
'பேரன்பி'ல் எனக்கு என் அப்பாவின் நினைவு வந்தது!

              
மென்மேலும் சிகரங்களைத் தொட எங்கள் வாழ்த்துகள் ராமலக்ஷ்மி.

'இலைகள் பழுக்காத உலகம்'
ராமலக்ஷ்மி
அகநாழிகைப் பதிப்பகம்
96 பக்கங்கள், 80 ரூபாய். 
                

26 comments:

Ramani S said...

நானும் ராமலெட்சுமி அவர்களின்
கவிதைகளுக்கு பரம ரசிகன் என்பதால்
தாங்கள் பாராட்டிச் சொல்லும் விஷயங்களை
மிகச் சரியாகப் புரிந்து கொள்ள முடிந்தது
அருமையான நூலை மிகச் சிறப்பாக
அறிமுகம் செய்தமைக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

பழனி. கந்தசாமி said...

//நாலுவரி எழுதுவதற்குள் நாக்கு தள்ளி விடுகிறது! பாரா பாராவாக அதை நீட்டிச் சொல்வதற்கு திறமை வேண்டும். அது ராமலக்ஷ்மியிடம் நிறைய இருக்கிறது.//

என்னாலும் நீட்டி முழக்க முடியாது. அப்படிச் சொல்ல முடிந்தவர்கள் பாக்கியசாலிகள்.

ராமலக்ஷ்மி said...

என் எழுத்துகளுக்கு தொடர்ந்து ஊக்கம் தந்து வரும் உங்களிடமிருந்து நூலுக்கான முதல் மதிப்புரை! விரிவான பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி. மகிழ்ச்சி ஸ்ரீராம்:)!

kashyapan said...

கவிதைகளை நீங்கள் ரசித்த விதமும் அதனை நயமாக வெளிப்படுத்திய விதமும் மிக நேர்த்தியாக இருந்தது ! ---காஸ்யபன்.

அப்பாதுரை said...

புத்தகத்தை விட விமரிசனம் நயமாக இருக்கும் போலிருக்கிறதே? இத்தனை நாள் இந்தத் திறனை எங்கே ஒளித்து வைத்திருந்தீர்கள்? ஒரு வேளை புத்தகத்தின் வலிமை விமரிசனத்துக்கும் வந்ததோ?

பாராட்டுக்கள்.

திண்டுக்கல் தனபாலன் said...

கவிதைகளுக்குத் தலைப்பு வைக்கவேண்டும் என்ற சமீபத்திய தகவலோடு விமர்சித்த விதம் அருமை...

ரசனைக்கும், நூல் அறிமுகத்திற்கும் வாழ்த்துக்கள்...

ஜீவி said...

வாசித்ததை அனுபவித்து விமர்சித்திருக்கிறீர்கள். எழுதியவருக்கு இதை விட வேறு என்ன வேண்டும் என்று நினைக்கத் தோன்றுகிறது.

இன்றைய பிரபல மற்ற கவிஞர்களிடமிருந்து ராமலஷ்மி அவர்கள் எவ்விதத்திலெல்லாம் வேறு படுகிறார் என்றும் சுட்டிக் காட்டியிருக்கலாம். அது கூட வாசிப்போர் நேசிக்கும் கவிதைகள் எப்படியிருக்க வேண்டும் என்பதை உங்களைப் போன்ற மனம் ஒன்றி வாசிப்போர் கோணத்தில் சொல்வதாக அமைந்திருக்கும்.

sury Siva said...

எனக்கு மிகவும் பிடித்த வலைகளில் முதனமையானதில் முதல் ஐந்தில், உள்ளது

திருமதி ராமலக்ஷ்மி அவர்கள் வலைப்பதிவு தான்.

இயற்கையின் இயல்பினை, இன்னிசையை,
இதமாக வரைவதே வல்லவர் திருமதி இராம லக்ஷ்மி அவர்கள்.
அந்த காலத்திலேயே திண்ணை பற்றிய பதிவுகள் துவங்கி,
இன்று வரை அவரது ஒவ்வொரு பதிவையும் படிக்கும், ஒவ்வொரு நிழர்படத்தையும் ரசிப்பவர்களில் நானும் ஒருவன்.

அவரது புத்தகத்தை பற்றி உங்கள் விமர்சனம் அருமை.

எனது " வால் போஸ்டர் " வலையில் ஒட்டி இருக்கிறேன்.

சென்று கவனிக்கவும்.

முடிந்தால் நீங்கள் தினமும் மேய்வதில் ஒட்டவும்.

சுப்பு தாத்தா.
www.wallposterwallposter.blogspot.com

Thenammai Lakshmanan said...

வாவ்.. மிக அருமையான விமர்சனம்.. ஒவ்வொரு வார்த்தையும் உண்மை.. ! பாராட்டுக்குள் ஸ்ரீராம். :)

வாழ்த்துக்கள் ராமலெக்ஷ்மி.

இராஜராஜேஸ்வரி said...

ஒட்டுமொத்தப்பார்வையில் ராமலக்ஷ்மி கவிதைகளில் தத்துவார்த்த சிந்தனையும், வாழ்வின் ஒவ்வொரு அசைவிலும் கவனிக்கப் பட்டிருக்கும் நுணுக்கமான சமூகப் பார்வையும் தெரிகிறது. /

சிறப்பான விமர்சனப் பகிர்வுகள்..பாராட்டுக்கள்..!

மென்மேலும் சிகரங்களைத்
தொட வாழ்த்துகள்
ராமலக்ஷ்மி அவர்களுக்கு.!

சீனு said...

கவிதைகளுக்கும் எனக்கும் எப்போதுமே வெகு தூரம் சார், இந்தப் பதிவில் நீங்கள் கூறியிருப்பது போல் கவியின் மையக் கருவை கண்டுபிடித்தல் துப்பறிவதற்கு இணையான சாகசம் என்னைப் பொருத்தவரை, அதற்கு வருத்தபட்டே அந்த பக்கம் செல்வதில்லை...

இருந்தும் யாரேனும் இது நல்ல கவிதை என்றால் அதனை படிப்பதற்கும் தவறுவதில்லை, அவ்வளவில் மட்டுமே என் கவி அறிவு!

நாவல்களுக்கு கூட விமர்சனம் தேவை இல்லை, கவிதைகளுக்கு எப்போதுமே விமர்சனத்தை எதிர்பார்ப்பவன் நான்...! அருகில் யாரேனும் அமர்ந்து பொருள் கூறின் திவ்யம்... ஹா ஹா ஹா ஹா ஹா நன்றி சார் விமர்சனத்திற்கும்.. விமர்சனம் செய்யும் படி கவிதை எழுதிய ஆசிரியர் ராமலக்ஷ்மி அவர்களுக்கும் ...

sury Siva said...

//அருகில் யாரேனும் அமர்ந்து பொருள் கூறின் திவ்யம்... ஹா ஹா ஹா ஹா ஹா நன்றி சார் //
by seenu


ஹா : ஹாஸ்யம்.
ஹா: ஆச்சரியம்.
ஹா: பயங்கரம்.பீபத்சம்.
ஹா: துயரம்.

இந்த ஹா வில் தான் எத்தனை நவரசம் !!

ஹா !!

சுப்பு தாத்தா.

பால கணேஷ் said...

ஆல்ரவுண்டர் ராமலக்ஷ்மி மேடத்தின் கவிதைகள் எனக்கும் மிகப் பிரியமானவை. மெதுவாக ரசித்துப் படிக்கலாம் என்று வாங்கி வைத்திருக்கிறேன். உங்கள் விமர்சனத்தைப் படித்தபின் கவி¬த்த தொகுப்புக்கு நான் விமர்சனம் எழுதும் எண்ணத்தை புறந்தள்ளி விட்டேன். அதற்குப் பதில் ‘அடைமழை’க்கு விமர்சனம் எழுத உத்தேசம்! மேலும் மேலும் பல சிகரங்களைத் தொட ராமலக்ஷ்மி மேடத்தை நானும் உங்களுடன் சேர்ந்து மகிழ்வுடன் வாழ்த்துகிறேன்!

Anonymous said...

விமர்சனத்தை படிக்கும் போது கவிதை புத்தகத்தை வேண்டி படிக்க சொல்லுகிறது நூல் ஆசிரியருக்கு எனது வாழ்த்துக்கள்

Geetha Sambasivam said...

ராமலக்ஷ்மியை தூர இருந்து வியப்பவர்களில் நானும் ஒருத்தி. அருமையான விமரிசனம். வரி வரியாக ரசித்திருக்கிறீர்கள். இது வரைக்கும் இப்படி ஒரு விமரிசனத்தைப் படித்ததில்லை என்பதே இதன் சிறப்புக்குச் சான்று.

Geetha Sambasivam said...

எனக்கும் கவிதை எழுத வராது. ஆகவே கவிதை எழுதுபவர்களைக் கண்டாலே ஓர் ஆச்சரியம் ஏற்படும். ஆனால் கவிதைகள் படிக்கப் பிடிக்கும். உள்ளார்ந்த கருப்பொருளைத் தேடிக் கண்டுபிடிக்கப் பிடிக்கும். பகிர்வுக்கு நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

மிக அருமையான விமர்சனம்..

ராமலக்ஷ்மி said...

அனைவரின் அன்புக்கும், கருத்துகளுக்கும், வாழ்த்துகளுக்கும் நன்றி:)!

rajalakshmi paramasivam said...

விமரிசனம் மிக அருமையாக இருக்கிறது ஸ்ரீராம் சார். மிக மிக அழகாய் விமரிசத்த உங்களுக்கு பாராட்டுக்கள். திருமதி ராமலக்ச்மி அவர்களுக்குப் பாராட்டுக்கள்/.

வெங்கட் நாகராஜ் said...

மிகச் சிறப்பாய் வாசிப்பனுவத்தினை சொன்ன பதிவு......

புத்தகம் வாங்கிப் படிக்க வேண்டும். நாளை மறுநாள் தமிழகம் வருகிறேன். வாங்கிட வேண்டியது தான்.

கோமதி அரசு said...

ஒட்டுமொத்தப்பார்வையில் ராமலக்ஷ்மி கவிதைகளில் தத்துவார்த்த சிந்தனையும், வாழ்வின் ஒவ்வொரு அசைவிலும் கவனிக்கப் பட்டிருக்கும் நுணுக்கமான சமூகப் பார்வையும் தெரிகிறது.//

உண்மை நீங்கள்சொல்வது. கவிதை தொகுப்பை அருமையாக விமர்சனம் செய்து இருக்கிறீர்கள்.
மென்மேலும் சிகரங்களைத் தொட உங்களுடன் சேர்ந்து நானும் வாழ்த்தி மகிழ்கிறேன்.
வாழ்க வளமுடன்.

ஸ்ரீராம். said...


@ ரமணி ஸார்... நன்றி.

@ பழனி. கந்தசாமி ஸார்... நன்றி.

@ ராமலக்ஷ்மி ... நன்றியும், வாழ்த்துகளும்.

@ காஷ்யபன் ஸார்.... நன்றி.

@ அப்பாதுரை .... நன்றி, நன்றி!

@ DD .... நன்றி.

@ ஜீவி ஸார்.... நன்றி. இன்றைய பிரபல கவிஞர்கள் என்று நீங்கள் சொல்வது யாரென்று தெரியவில்லை. நிறைய கவிதைகள் நான் படிப்பதில்லை! முன்பு மு. மேத்தா கவிதைகள் படித்திருக்கிறேன். அதில் இரண்டு கவிதைகள் இப்போதும் மனப்பாடம்!

@ suri siva ஸார்.... நன்றி. உங்கள் வால் போஸ்டர் பக்கத்தில் பகிர்ந்ததற்கும் நன்றி.

@ தேனம்மை லக்ஷ்மணன் ..... நன்றி.

@ இராஜராஜேஸ்வரி .... நன்றி.

@ சீனு .... நன்றி.

@ பால கணேஷ் ... நன்றி.

@ ரூபன் .... நன்றி.

@ கீதா சாம்பசிவம் .... நன்றி. நன்றி.

@ சாந்தி மாரியப்பன் .... நன்றி.

@ ராமலக்ஷ்மி .... மீள் வருகைக்கு நன்றி.

@ வெங்கட் நாகராஜ் ..... நன்றி.

@ கோமதி அரசு ...... நன்றி.

Ranjani Narayanan said...

என்ன அருமையாய் விமரிசனம் செய்திருக்கிறீர்கள்,ஸ்ரீராம்! எனக்கும் கவிதை என்றால் கொஞ்சம் அலர்ஜி தான். எழுதுகிறவர்களைப் பார்க்க பொறாமையாய் கூட இருக்கும் - எப்படி நாலுவரியில் நாற்பது பக்க விஷயத்தை அடக்குகிறார்கள் என்று!

திருமதி ராமலக்ஷ்மி அவர்களுக்குப் பாராட்டுக்கள்!

இந்த கருத்துரை வருகிறதா என்று பார்க்கவேண்டும்!

ராமலக்ஷ்மி said...

தொடர்ந்து வாழ்த்தியிருக்கும் அனைவருக்கும் நன்றி.

@ வெங்கட்,
மகிழ்ச்சி:).

Mala said...

புது அறிமுகம். மிக்க நன்றி ஸ்ரீராம்.
இயல்பான யதார்த்தமான விமர்சனமே புத்தகம் படிக்கத்தூண்டுகிறது.

ADHI VENKAT said...

புத்தகம் குறித்த தங்களது கருத்துகள் அருமை...பாராட்டுகள்.

ராமலஷ்மி அவர்களுக்கு பாராட்டுகளும், வாழ்த்துகளும்..

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!