வியாழன், 23 ஜனவரி, 2014

கும்னாபி பாபாதான் நேதாஜியா? - நேதாஜி மரண சர்ச்சையின் ஒரு பகுதி                                                     
                                                       


இன்று ஜனவரி 23 நேதாஜியின் பிறந்தநாள்.

இன்றைய தமிழ் இந்துவில் தலையங்கக் கட்டுரையாக நேதாஜி பற்றி வந்துள்ள தகவல்களைப் படித்தபோது, பல நாட்களுக்குமுன் மதுரையிலிருந்து வந்த ஒரு பார்சலில் கட்டியிருந்த தினமலர் செய்தித்தாளின்  கட்டிங் வைத்திருந்த நினைவு வந்தது. அதைத் தேடித் பிடித்து தினமலர் வலைப் பக்கத்துக்குச் சென்று பிப்ரவரி 2, மற்றும் 3, 2013 ஆம் ஆண்டில் தேடினால் அதற்கு வாய்ப்பே தரவில்லை அதன் இணையப்பக்கம்!

எனவே, மடித்து வைத்திருந்த அந்த கட்டிங்கை அப்படியே தட்டச்சு செய்கிறேன்! இதன் தொடர்ச்சியாக தி இந்துவின் இன்றைய தலையங்கக் கட்டுரையின் லிங்க் கொடுத்து  விடுகிறேன். ஆர்வம் இருப்பவர்கள் பொறுமையாகப் படிப்பார்கள் என்ற நம்பிக்கையுடன்!

 
உத்தரப் பிரதேசம் பைசலாபாத்தில் வசித்து 1985 ஆம் ஆண்டில் மறைந்த கும்னாபி பாபாதான் நேதாஜி சுபாஷ் சந்திரா போஸா? என்று கண்டுபிடிக்க விசாரணைக்கமிட்டி அமைப்பது பற்றி பரிசீலிக்குமாறு மாநில அரசுக்கு ஐகோர்ட் கிளை அறிவுறுத்தியது.

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இறுதிக்காலம் பற்றிய மர்மத்துக்கு இன்னும் விடை கிடைக்கவில்லை. தைவான் நாட்டில் 1945 ஆகஸ்ட் 18ஆம் தேதி  விபத்தில் அவர் உயிரிழந்ததாக ஒரு தகவல் உள்ளது. அந்தத் தகவலை தைவான் அரசு அந்த வேளையிலேயே மறுத்துள்ளது. 

இங்கிலாந்து, அமெரிக்கா, ரஷ்யா, ஜெர்மனி உட்பட பல நாடுகளும், தைவான் விமான விபத்துத் தகவல் பற்றி சந்தேகம் வெளியிட்டன. விபத்துத் தகவலை ஜப்பான் மட்டுமே ஏற்றது.  ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உள்ள ரெங்கோஜி கோவிலில் நேதாஜியின் அஸ்திக் கலசம் வைக்கப்பட்டுள்ளது. 

நேதாஜி மரண மர்மம் குறித்து விசாரிக்க ஜஸ்டிஸ் எம்.கே முகர்ஜி கமிஷனை மத்திய அரசு நியமித்தது. கடந்த 2005 ல் கமிஷன் சமர்ப்பித்த அறிக்கையில், 'தைவான் விபத்தில் நேதாஜி இறக்கவில்லை' ரெங்கோஜி கோவிலில் வைக்கப்பட்டிருப்பது நேதாஜி அஸ்தி அல்ல' என்று தெரிவிக்கப்பட்டது. இந்த அறிக்கையை மத்திய அரசு நிராகரித்து விட்டது. 

இதற்கிடையில், உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தி அருகில் உள்ள பைசாபாத்தில் 'ராம்பவன்' என்ற வீட்டில் வசித்து வந்த கும்னாபி பாபா பகவான்ஜி என்ற துறவிதான், நேதாஜி என்ற பரபரப்பு இருந்து வந்தது. 'சில ரகசியக் காரணங்களுக்காக நேதாஜி  துறவியாக வாழ்ந்து வந்தார்.

நேரு, சர்தார் படேல், ராஜேந்திர பிரசாத், இந்திரா காந்தி போன்ற பல தலைவர்களுக்கும் கும்னாபி பாபாதான் நேதாஜி என்று தெரியும். அவர்கள், அவரிடம் ரகசிய ஆலோசனை பெற்று வந்தனர். 
 
நேரு மரணம் அடைந்த போது கும்னாபி பாபாவும் மாறு வேடத்தில் டெல்லி வந்து அஞ்சலி செலுத்தினார்.  அவரிடம் பல . தளபதிகளும் ஆலோசனை பெற்று வந்தனர்' என்றெலாம் அவ்வபோது  பரபரப்பு தகவல்கள் வந்தன.

கும்னாபி பாபா, 1985 செப்டம்பரில் மறைந்தார்.  செப்டம்பர் 18ஆம் தேதி நடந்த அவரது இறுதிச்சடங்கில்  சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட மூத்த தலைவர்கள், சில தளபதிகள், நேதாஜி உருவாக்கிய இந்திய தேசிய ராணுவத்தில் பணியாற்றியவர்கள் உட்பட பல பிரமுகர்கள் பங்கேற்றனர். அவரது உடல் தகனம் செய்யப்பட இடத்தில் சமாதி அமைக்கப்பட்டுள்ளது. அதை 'நேதாஜி சமாதி' என்றுதான் பலரும் குறிப்பிட்டு வருகின்றனர்.

       
கடந்த 2010 ஆம் ஆண்டில், நேதாஜி வாழ்க்கைத் தொடர்பான 'ப்ளாக் பாக்ஸ் ஆஃ ப் ஹிஸ்டரி'  என்ற ஆவணப்படத்தை அம்லங்குஷும் கோஷ் என்ற வங்காள இயக்குனர் வெளியிட்டார். அதில் 'கும்னாபி பாபாதான் நேதாஜி' என்று தெரிவிக்கப் பட்டிருந்தது. 

  

அதற்கு ஆதாரமாக பல தகவல்களை கோஷ் குறிப்பிட்டிருந்தார். 'கும்னாபி பாபாவின் தனிப்பட்ட டாக்டர்கள் ஆர் கே மிஸ்ராவும்  பி. பண்டோபாத்யாவும், அவர்கள் நேதாஜி என்று கருதுகின்றனர். அவர் பத்திரமாகப் பாதுகாத்து வந்த 40 க்கும் மேற்பட்ட பெட்டிகளில் இந்திய சுதந்திரப் போராட்டம் பற்றிய ஆவணங்களும், நேதாஜி குடும்பத்தினரின் புகைப்படங்களும் இருந்தன என்று அவர்கள் தெரிவித்தனர். நேதாஜி கையெழுத்தும், கும்னாபி பாபாவின் கையெழுத்தும் ஒன்றுதான் என்று தேசியத் தடயவியல் ஆய்வு மையத்தின் முன்னாள் கூடுதல் இயக்குனர் டாக்டர் பி. லால் உறுதி செய்துள்ளார்' என்றெல்லாம், கோஷ் அதிரடித்திருந்தார்.  இந்த ஆதாரங்கள் பற்றி அரசுத் தரப்பில் கருத்துத் தெரிவிக்கப் படவில்லை.

இதற்கிடையில், கும்னாபி பாபாதான் நேதாஜியா? என்று கண்டுபிடிக்க அரசுக்கு உத்தரவிடுமாறு, நேதாஜியின் மருமகள் லலிதா போஸ், உ.பி. ஐகோர்ட்டில் கடந்த 1986 ஆம் ஆண்டில் மனுச் செய்திருந்தார். கடந்த 2010 ஆம் ஆண்டில், 'முகர்ஜி கமிஷனிடம் ஒப்படைக்கப்பட்ட கும்னாபி பாபாவுக்குச் சொந்தமான பொருட்களை அரசு அருங்காட்சியகத்துக்கு மாற்ற வேண்டும்' என்று கோரி இன்னொரு மனு தாக்கல் செய்யப் பட்டது.

இந்த மனுக்களை ஐக்கோர்ட்டின் லக்னோ கிளை விசாரித்து வந்தது. விசாரணையின்போது, நேதாஜி மற்றும் கும்னாபி பாபா பற்றி மீடியாக்கள் வெளியிட்ட பரபரப்புத் தகவல்கள் மற்றும் ஆதாரங்களை மனுதாரர்கள் தாக்கல் செய்தனர். 

இந்நிலையில், நீதிபதிகள் தேவிபிரசாத் சிங், வீரேந்திரகுமார் தீட்சித் கொண்ட ஐகோர்ட் டிவிஷன் பெஞ்ச் முன், இந்த இரு மனுக்களும் இரு தினங்களுக்குமுன் விசாரணைக்கு வந்தன.

அப்போது 'கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆதாரங்களைப் பார்க்கும்போது, கும்னாபி பாபா சாதாரணத் துறவி என்று தோன்றவில்லை. அவரை நேதாஜி குடும்பத்தினரும் நேதாஜியின் நண்பர்களும் அடிக்கடி சந்தித்து வந்துள்ளனர்' என்று நீதிபதிகள் கருத்துத் தெரிவித்தனர். மேலும், 'எந்த அடிப்படையில், முகர்ஜி கமிஷன் அறிக்கையை அரசு நிராகரித்தது?  ரெங்கோஜி கோவிலில் உள்ள அஸ்தியைப் பயன்படுத்தி மரபணு சோதனை நடத்த அரசு ஏன் தயங்குகிறது?' என்று கேள்வி  எழுப்பினர்.

பின்னர், 'கும்னாபி பாபாதான் நேதாஜியா?' என்று கண்டுபிடிக்க, ஓய்வுபெற்ற ஐகோர்ட் நீதிபதி தலைமையிலான ஒரு கமிட்டியை அமைப்பது பற்றியும் அரசு பரிசீலிக்க வேண்டும். கமிட்டி உறுப்பினர்களாக ஆய்வு நிபுணர்கள் மற்றும் அரசு உயரதிகாரிகளை நியமிக்கலாம். கும்னாபி பாபா தொடர்பான பொருட்களைப் பாதுகாக்க, பைசாபாத்தில் ஒரு அருங்காட்சியகத்தை அமைப்பது பற்றி மாநில அரசு பரிசீலிக்க வேண்டும். முகர்ஜி கமிஷனிடம் ஒப்படைக்கப்பட்ட கும்னாபி பாபாவின் பொருட்கள், அவரது புகைப்படங்கள், வீடியோ பதிவுகள் ஆகியவற்றை, பைசாபாத் கருவூல அதிகாரியின் பொறுப்புக்கு மாற்ற வேண்டும். 

அவற்றை அரசு அருங்காட்சியகத்துக்கு மாற்றும்வரை, கருவூல அதிகாரி பாதுகாப்பாகப் பராமரிக்கவேண்டும். இந்த இருவிஷயங்களிலும், மூன்று மாதங்களுக்குள் அரசு முடிவு செய்து, பதில் மனு தாக்கல் செய்யவேண்டும்' என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். 

-  இந்தச் செய்தி வெளிவந்தது அநேகமாக கடந்தவருடம் பிப்ரவரி 3 ஆம் தேதி. தினமலர், மதுரை அல்லது திருச்சி பதிப்பு.  -

'இன்னும் விலகாத மர்மம்' என்ற தலைப்பில் இன்றைய 'தி இந்துவில் கட்டுரை. 
முத்துராமலிங்கத் தேவர், தான் நேதாஜியை உயிருடன் சந்தித்து விட்டு வந்ததாகச் சொன்னதாகவும், இன்றைய
ந்தக் கட்டுரை சொல்கிறது!


12 கருத்துகள்:

 1. Whatever the reason and the result, the gentleman wanted to be left alone. So why not??

  Also, if he indeed was S C Bose, I am sure he would not have been silent while India consistently went to worse from bad.

  பதிலளிநீக்கு
 2. அட..!! நேதாஜின்னதும் முழுசும் படிச்சேன். ரொம்ப சுவாரசியமான கட்டுரைதான். அப்போ இந்தியன் கமல் கூட சந்திச்சிருக்க சான்ஸ் இருக்கு. :)

  பதிலளிநீக்கு
 3. நேதாஜியின் மரணத்தில் மர்மம் இருந்திருந்தாலும் கும்னாபி பாபா நேதாஜியை அறிந்தவராக இருந்திருக்கலாம். அவர் நேதாஜியாக இருந்திருக்க முடியாது. அப்படி இருந்திருந்தால் அவர் கட்டாயம் எவ்வகையிலேனும் வெளிபட்டிருப்பார். நாட்டில் நேர்ந்து கொண்டிருந்தவைகளைப் பார்த்துக் கொண்டு சும்மாவா இருந்திருப்பார்?

  பதிலளிநீக்கு
 4. தொடர. நேதாஜி குறித்து நான் எழுதியவைகளை 2006--07 ஆம் ஆண்டுப் பதிவுகளில் படிக்கலாம்.

  பதிலளிநீக்கு
 5. குழப்பம் தான்... கட்டுரை இணைப்பிற்கு நன்றி...

  பதிலளிநீக்கு
 6. அவரே நேதாஜியாக இருந்திருந்தால் கட்டாயம் அக்கிரமங்களுக்குப் பார்வையாளராக இருந்திருக்கமாட்டார்.இல்லை அரசியல் பகைக் காரணத்துக்காக ஒளிந்திருப்பார் என்பதை ஏற்கமுடியவில்லை.

  பதிலளிநீக்கு
 7. வல்லிசிம்மன் அவர்கள் சொல்வது சரியென தோன்றுகிறது. வெற்றுப் பரபரப்புக்காக கட்டிவிட்ட கதைகளாகவே இருக்கவேண்டும். கட்டுரை சுவாரசியம்

  பதிலளிநீக்கு
 8. வணக்கம்
  ஐயா.
  அந்த மனிதன்..மக்கள் மனதில் என்றென்றும் நிலைத்து விட்டாவர் அவர் இல்லா விட்டாலும் இருக்கிறார் என்ற ஒரு உணர்வுதான்...மக்கள் மத்தியில்... பதிவு சிறப்பாக உள்ளது வாழ்த்துக்கள்.

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 9. நல்ல பகிர்வு. துணிச்சலும் தைரியமும் நிறைந்தவராக அறியப்பட்ட நேதாஜி தன்னை மறைத்துக் கொண்டு வாழ்ந்திருப்பாரா என்பது கேள்வி.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!