புதன், 15 ஜனவரி, 2014

அம்மாஅதீதம் மின்னிதழில் வெளிவந்த என் படைப்பு.

                                                 அம்மா

ஆஃபீஸில் ஒரு பிஸியான நேரத்தில் சுதா ஃபோன் செய்தாள்.

“ஏங்க.. எத்தனை மணிக்கு வருவீங்க?”

“எங்கே?” வேலையில் கவனமாக, அசுவாரஸ்யமாகக் கேட்டான் ரகு.

“என்ன கேள்வி… வீட்டுக்குத்தான்”

“வழக்கம் போலத்தான்… என்ன விஷயம்?”

“இன்னிக்கி பெர்மிஷன் போட்டுட்டுக் கொஞ்சம் சீக்கிரம் வாங்களேன்..”

“என்ன விஷயம்?”

“இன்னிக்கி ‘மதர்ஸ் டே’. சாயங்காலம் அம்மாவைப் பார்க்கப் போலாம்னுதான்”

செய்துகொண்டிருந்த வேலையை நிறுத்தி விட்டு கொஞ்ச நேரம் மௌனமாயிருந்தான் ரகு. ஃபோனை வைத்துக் கொண்டு இவன் வெறிப்பதை கண்ணாடி ஜன்னல் வழியே பார்த்த PA ஜமுனா தனது நாற்காலியிலிருந்து பாதி எழுந்து ‘கூப்பிடறீங்களா என்ன?’ என்பது போலப் பார்த்தாள்.

பதிலொன்றும் சொல்லாமல் பார்வையை மாற்றிய ரகு, “என்ன சத்தத்தையே காணோம்… ஹலோ…” என்ற சுதாவின் குரலைக் கேட்டு “ம்…. யோசிக்கறேன்…” என்றான்.

“யோசிக்க என்ன இருக்கு… நேரா டவுன் ஹால் ரோட் வந்துடுங்க… அங்க ஜாயின் செய்துக்குவோம்” என்று சொல்லித் தொடர்பைத் துண்டித்தாள்.

அப்புறம் வேலையில் பாதி கவனம்தான் இருந்தது.

‘அம்மா இந்நேரம் என்ன செய்வாள்? ஒரு மூக்குக் கண்ணாடி அணிந்து ஒன்று ஏதாவது தைத்துக் கொண்டிருப்பாள். இல்லை என்றால் ஏதாவது மேகசீன், அல்லது பழைய பைண்டிங் புத்தகம் வாசித்துக் கொண்டிருப்பாள்.’

டவுன் ஹால் ரோட்டில் அவள் சொன்ன இடம் வந்து சேர்ந்தபோது சுதா ஏற்கெனவே அங்கு நின்றிருந்தாள். தூரத்திலிருந்து பார்த்தபோதே வாட்ச்சை வாட்சைப் பார்த்துக் கொண்டிருக்கும் அவள் உருவம் தென்பட்டு விட்டது.

அருகில் சென்றதும் புன்னகைத்தாள். “வாங்க..உள்ளே போவோம்” என்று காதியைக் காட்டினாள். உள்ளே சென்றனர். ஒரு சந்தன மாலை மற்றும் ஒரு தேன் பாட்டில் வாங்கிக் கொண்டாள். அங்கே மட்டுமே கிடைக்கும் ஒரு இருமல் மருந்து வாங்கிக் கொண்டாள்.

“இப்பல்லாம் சாப்பாடே பிடிக்கலைடா ரகு… வாய்க்கு ஒண்ணுமே பிடிக்க மாட்டேங்கறது…’

”…………………….’

‘மோருஞ்சாதம் போரும்…யதேஷ்டம்… கொஞ்சம் நாரத்தை இலைப்பொடி போரும், இல்லேன்னா மாகாளி… தேவாமிர்தம்’

‘சும்மா இரேம்மா… தொணதொணன்னு… வேலை செய்ய விடாம…’
சுதா அடுத்த கடைக்குள் நுழைந்து நாரத்தை இலைப் பொடி வாங்கிக் கொண்டாள். தேவாங்க சத்திரத்தில் நுழைந்து அலசி (எதை வாங்கினாலும் ஏற்கெனவே இருப்பது போலவே இருக்கும்… ஆனா இதுதான் அம்மாவுக்குப் பிடிக்கும்…ஹூம்”) ஒரு சுங்கடிப் புடைவை எடுத்துக் கொண்டாள்.

பக்கத்து மெடிகல் ஷாப்பில் நுழைந்து ஒரு ‘வாலினி ஸ்ப்ரே’ வாங்கிக் கொண்டாள்.

‘அம்மாடி.. படியேற முடியலைடா ரகு… முட்டி எல்லாம் வலிக்கறது… இழுக்கறது…’

‘உன்னை யாரும்மா மேல வரச் சொன்னா…சுதா கிட்டயோ முரளி கிட்டயோ கொடுத்து விட வேண்டியதுதானே…’

‘ஏண்டா சள்ளுனு விழறே… ரகு நீ ரொம்ப மாறிப் போயிட்டேடா…’

‘என்னம்மா மாறிப் போயிட்டேன்? தொணதொணன்னு ஒரே புலம்பலா நீதான் மாறிட்டே… தொல்லைம்மா’

“இன்னும் என்னங்க வாங்கலாம்?” சுதாவின் குரல் கலைத்தது.

“போறும் சுதா… அவ்வளவுதான். எனக்கு ஒண்ணும் தோணலை”

“எங்க யோசனை… டல்லா இருக்கீங்க…”

“ஒண்ணுமில்லே சுதா… லேசா தலை வலிக்கறா மாதிரி இருக்கு…”

“வலிக்கும்… வலிக்கும்..”

‘இன்னிக்கி என்ன கிழமை? வியாழன். அம்மா சாயங்காலம் ராகவேந்திரா கோவில் போவாள். “கொஞ்சம் சீக்கிரம் வந்தியான்னா என்னை அங்க விட்டுட்டுக் கூப்பிட்டு வருவியாம்” என்பாள்….’

“சரி, வாங்க… லைட்டா டிஃபன் சாப்பிட்டுவிட்டுப் போவோம்” – சுதா.

கௌரி ஷங்கரில் சாப்பிடும்போது தனது ‘ஹாட் பாக்ஸை’ வெந்நீர் விட்டுக் கழுவி, சுத்தமாகத் துடைத்து விட்டு அதில் அம்மாவுக்குப் பிடித்த பூரி உருளைக் கிழங்கு வாங்கிக் கொண்டாள்.

பைக்கை எடுத்துக் கொண்டு இருவருமாய் பழங்கானத்தத்தம் வந்து சேர்ந்தபோது மணி ஆறை நெருங்கிக் கொண்டிருந்தது.

அந்த வீட்டின் வாசலில் இருந்த போர்டை நிமிர்ந்து பார்த்தான் ரகு.

 ‘ஜானகி முதியோர் இல்லம்’

தயங்கி வெளியே நின்றவனைத் திரும்பிப் பார்த்தாள் சுதா.

“வாங்க… அம்மாவைப் பார்த்து நாளாச்சு… எப்பப் பாரு சள்ளு சள்ளுனு விழுந்து அவங்க மனசைக் காயப்படுத்தி, ஒரு பெரிய சண்டைல சொல்லாம கொள்ளாம அவங்களை இங்கே கொண்டு வந்து சேர்த்துட்டீங்க… எவ்வளவு ஃபீல் பண்ணியிருப்பாங்க… நினைச்சுப் பார்த்தா எனக்குக் கண்ணுல்லாம் கலங்கிடும் ரகு… நானாவது வாரா வாரம் வந்து பார்க்கறேன்… நீங்க அம்மாவைப் பார்த்து மூணு மாசமாச்சு… அம்மாவும் கேட்கறதே இல்லை தெரியுமோ… வைராக்கியம்! அவங்க மனசு வெறுத்துப் போகக் கூடாது ரகு… இப்பக் கூட ஒண்ணுமில்ல.. அப்படியே அம்மாவ வீட்டுக்குக் கூப்பிட்டுப் போகலாம்னா எனக்கும் சந்தோஷமா இருக்கும்… இன்னிக்காவது நல்ல முடிவு எடுங்க…பாவங்க… ஆனா, கூப்பிட்டாக் கூட அம்மா வருவாளோ என்னவோ…நாளக்கி உங்களையும் என்னையும் இப்படித்தான் முரளி பண்ணப் போறான் பாருங்க …”

அவன் கையைப் பிடித்துக் கொண்டு உள்ளே நுழைந்தாள் சுதா.


படம் நன்றி: உஷா சாந்தாராம்

35 கருத்துகள்:

 1. குற்ற உணர்வால் தயங்கித் தயங்கி நிற்கும் ரகுவின் மனதில் மாற்றம் வந்திருக்குமென நம்புவோம். சிந்திக்க வைக்கும் நல்ல கதை. வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 2. க்ணகளில் நீரை வரவழைத்த கதை.
  மிக அருமை.

  ரகு அம்மாவை அழைத்து சென்று விடுவார் என்று நினைக்கிறேன்.
  படம் நன்றாக இருக்கிறது.
  அதீதம் மின்னிதழில் வந்தமைக்கு வாழ்த்துக்கள்.

  அடிக்கடி கதை எழுதுங்கள்.

  பதிலளிநீக்கு
 3. மிக மிக அற்புதமான கதை
  பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
  இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 4. மனதைப் பிசைய வைத்து கதை. வாசகர் கண்களை குளமாக்கி விட்டீர்கள் ஶ்ரீராம் சார்.

  அதீதம் மின்னிதழில் வெளியானதற்கு வாழ்த்துக்கள் சார்.

  பதிலளிநீக்கு
 5. மனதைப் பிசைய வைத்து கதை. வாசகர் கண்களை குளமாக்கி விட்டீர்கள் ஶ்ரீராம் சார்.

  அதீதம் மின்னிதழில் வெளியானதற்கு வாழ்த்துக்கள் சார்.

  பதிலளிநீக்கு
 6. வெகு அருமைழாக எழுதி இருக்கிறீர்கள் ஸ்ரீராம்.எல்லாவீட்டிலும் நடப்பதுதான். அம்மா என்பவள் இல்லாத போது தோன்றும் நாம் இன்னும் கொஞ்சம் சுமுகமாக இருந்திருக்கலாமோ என்று. ரகு அம்மாவை அழைத்துச் செல்லட்டும். சுதாவுக்கு மனம் நிறைந்த ஆசிகள் எப்போதும் கிடைக்கும்.

  பதிலளிநீக்கு
 7. யதார்த்தம் ஶ்ரீராம். பிள்ளைக்கு வேலைத் தொந்திரவினால் எரிஞ்சு விழுந்திருக்கலாமோ?? அம்மா புரிஞ்சுக்கலையா? ஆனாலும் பிள்ளையை எதிர்பார்க்காமல் இருந்திருக்கலாமோ? என்ன என்னமோ எண்ணங்கள்!

  இங்கே நாங்க இரண்டு பேரும் ஹோமுக்குப் போறோம்னு சொல்றோம். பிள்ளைக்குச் சம்மதம் இல்லை. எத்தனை நாள் ஓடறதோ ஓடட்டும்னு விட்டாச்சு! பார்ப்போம். ஆனால் இதான் நிஜம். சுட்டாலும் சரி, சுடாட்டியும் சரி இதான் உண்மை. ரகுவும் அம்மாவை அழைத்துச் செல்வதே சரி. மனைவி ஒத்தாசையாகத் தானே இருக்கா? ஆகையால் தப்பில்லை. அம்மா மனம் மாறப் பிரார்த்தனைகள்.

  பதிலளிநீக்கு
 8. கங்கிராட்ஸ், ஸ்ரீராம். பொங்கல் வாழ்த்துக்களும் சேர்த்து.

  படித்துக் கொண்டே வரும் பொழுது, நான் வேறே மாதிரி எதிர்பார்த்தேன்.சொல்லிடறேனே?..

  “இப்பல்லாம் சாப்பாடே பிடிக்கலைடா ரகு… வாய்க்கு ஒண்ணுமே பிடிக்க மாட்டேங்கறது…’ போன்ற நடுநடுவே வரும் நினைப்பெல்லாம் ரகுவுக்கு தன் அம்மாவைப் பற்றிய நினைப்பாகவும் உண்மையில் சுதா பார்க்கப் போவது அவள் அம்மாவாகவும் நினைத்துப் பார்த்தேன். 'ஒரு சண்டைலே சொல்லாம.. சேர்த்துட்டீங்க' என்கிற ஒரு வரிதான் அப்படியான எதிர்பார்ப்புக்கு இடைஞ்சலாக இருந்தது.

  தன் அம்மா மீது சுதா வைத்திருக்கும் அக்கறையைப் பார்த்து ரகு, "வா.. என் அம்மாவைப் போய் பார்த்து விட்டு வந்திடலாம்" என்று அவன் தம்பி வீட்டில் இருக்கும் தன் அம்மாவைப் பார்க்கப் போவதாக மாற்றி என் எதிர்பார்ப்புக்கேற்ப நினைப்பினூடே கதையை மாற்றி அமைத்துக் கொண்டேன்.

  டவுன் ஹால் ரோடைச் சொல்லி கதை நிகழ்விடம் மதுரை என்று சொல்லாமல் சொன்னதெல்லாம் சிறப்பாகக் கதையை நடத்திச் சென்றதற்கு அடையாளம். இன்னும் ரெண்டு தெருக்களையும் குறிப்பிட்டிருக்கலாமே என்று இடையில் ஒரு 'மதுரை ஆசை'.

  பிள்ளைகள் அம்மாவின் மீதான அன்பை தங்கள் திருமணத்திற்குப் பிறகு வெளிப்பட காட்ட மாட்டார்கள். ஆனால் பெண்கள் இதற்கு நேர் எதிர் என்றும் நினைப்பு மேலோங்கியது.

  Blog எழுத்து உண்மையிலேயே பயிற்சிக் கேந்திரம் தான்.

  சிறப்பான ஒரு கதையைத் தந்ததற்கு வாழ்த்துக்கள், ஸ்ரீராம்.
  இந்த சிறப்பு மென்மேலும் கூடட்டும்.

  பதிலளிநீக்கு
 9. கலங்க வைத்தது... அதீதம் மின்னிதழில் வந்தமைக்கு வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 10. இந்த நிலைமைக்கு காரணம் மகனோ அல்லது மகளோ மட்டும் காரணமல்ல
  தாயும் தந்தையும்தான் ஒருவிதத்தில் காரணமாகிறார்கள் என்பதை இருவருமே உணருவதில்லை

  பெற்றோர்கள் தன் குழந்தைகள் மீது பாசத்தைத்தான் பொழிகிறார்களே தவிர நல்ல பண்புகளான அன்பு, சேவை மனப்பான்மை, இரக்க உணர்வு, உதவும் பண்பு .விட்டுக் கொடுத்தல் ஆகியவற்றை கற்றுத் தருவதும் இல்லை
  அதன்படி முன்னுதாரணமாக அவர்களும் திகழ்வதில்லை .

  அவர்கள் அதற்கு மாறாக, சுயநலம், எல்லாவற்றிற்கும் பிறரை சார்ந்து நிற்கும் தன்மை, பொய் சொல்லுதல், பிறரை பார்த்து காபி அடித்தல், பொறாமைக்குணம் போன்ற ,தீய பண்புகளைத்தான் அனுதினமும் கற்றுத்தருகிறார்கள்.

  குழந்தைகளின் உணர்வுகளை மதிப்பதில்லை.
  அவர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்வதில்லை.
  இன்னும் பல குடும்பங்களில் குழந்தைகளோடு பழகுவதே கிடையாது
  அதுவும் அவர்களை மூன்று வயதிலேயே பள்ளிக்கு துரத்தி விடுகிறார்கள்.
  அவர்களை தனியாக தொலைகாட்சிகளை பார்க்க விடுகிறார்கள்
  தாயோடும் தந்தையோடும் உள்ள அன்பு பிணைப்பு அப்போதே கருகத் தொடங்கிவிடுகிறது

  தற்காலத்தில் கைபேசியும், மடிக்கணினியும் அவர்களை பெற்றோர்களிடமிருந்து தனிமைப்படுத்திவிட்டது மட்டுமல்லாமல்
  அவர்களின் வாழ்க்கையை இயந்திரமயமாக்கிவிட்டது

  வாழ்க்கை என்பது அன்பாலும் தியாகத்தாலும் உருவாக்கப்படவேண்டும் அதை விடுத்து மற்ற ஆயிரம் வசதிகள் இருந்தும் ஒன்றும் பயனில்லை
  அது ஒரு வறண்ட பாலைவனமாகதான் இருக்கும்.

  அதனால்தான் இருவரும் அமைதியில்லாத
  வாழ்க்கையை வாழ நேரிடுகிறது என்பதே உண்மை.

  பதிலளிநீக்கு
 11. படித்து முடிக்கையில்,
  கண்களில் கண்ணீர்:
  என்னையும் அறியாமல் !

  பதிலளிநீக்கு

 12. @ middleclassmadhavi - நன்றி.

  @ bandhu - நன்றி.

  @ ராமலக்ஷ்மி - நன்றி. உண்மையில் அதீதத்தில் என்னை எழுத வைத்த உங்களுக்கு, தலைப்பிலேயே நான் நன்றி சொல்லியிருக்க வேண்டும்!

  @ அப்பாதுரை - நன்றி.

  @ கோமதி அரசு - நன்றி. அடிக்கடி எழுத..... முயற்சிக்கிறேன்! :)))

  @ பழனி. கந்தசாமி - நன்றி ஸார்.

  @ rajalakshmiparamasivam - நன்றி மேடம்.

  @ வல்லிசிம்ஹன் - நன்றி வல்லிம்மா. உங்கள் பதிலில் மீண்டும் வலியுறுத்துகிறீர்கள். நினைவில் வைத்துக் கொள்கிறேன்.

  @ கீதா சாம்பசிவம் - நன்றி. நீங்கள் சொல்வது உண்மை. படிப்பவர்கள் மனதில் சிந்தனைகளைத் தோற்றுவித்திருக்கிறது இந்தக் கதை என்பது சந்தோஷத்தைத் தருகிறது! :))) தவறு இரு புறமும் இருக்கும் வாய்ப்பு உண்டு. இதை மூன்று விதங்களில் எழுதி, அப்புறம் யோசித்து, இந்த வெர்ஷனை அனுப்பி வைத்தேன்!
  @ ஜீவி - நன்றி ஸார். நான் உங்கள் பின்னூட்டத்தை எப்போதும் எதிர்பார்ப்பேன். சுதாவின் முஸ்தீபுகள் பற்றிச் சொல்லியிருப்பதே வாசகர்களை அந்த எண்ணத்துக்கு அழைத்துச் செல்லத்தானே... பிள்ளைகள் தவறு செய்வதை நீங்கள் விரும்பவில்லை!

  //டவுன் ஹால் ரோடைச் சொல்லி கதை நிகழ்விடம் மதுரை என்று சொல்லாமல் சொன்னதெல்லாம் சிறப்பாகக் கதையை நடத்திச் சென்றதற்கு அடையாளம். இன்னும் ரெண்டு தெருக்களையும் குறிப்பிட்டிருக்கலாமே என்று இடையில் ஒரு 'மதுரை ஆசை'.//

  மற்றவர்கள் எழுதும் மதுரைப் பதிவுகளில் இதை எதிர்பார்க்கும் நான் நீங்கள் கேட்பதற்கு முன்னாலேயே அதைச் செய்திருக்க வேண்டும்!

  //பிள்ளைகள் அம்மாவின் மீதான அன்பை தங்கள் திருமணத்திற்குப் பிறகு வெளிப்பட காட்ட மாட்டார்கள். ஆனால் பெண்கள் இதற்கு நேர் எதிர் என்றும் நினைப்பு மேலோங்கியது.//

  உண்மைதான். விதிவிலக்குகளும் உண்டு!

  @ DD - நன்றி.

  @ பட்டாபிராமன் : நன்றி ஸார். 'யானைக் குட்டியின் கண்ணீர்' பதிவுக்கும் உங்கள் பின்னூட்டத்துக்கு இங்கேயே நன்றி சொல்லிக் கொள்கிறேன்.

  மிகவும் அலசி, யோசித்து எழுதி இருக்கிறீர்கள். அத்தனையும் உண்மை. ஒவ்வொரு வரியும் 'ஆமாம், ஆமாம்' என்று தலையாட்ட வைக்கிறது. உங்கள் கால் குணமாகி இருக்கும் என்று நம்புகிறேன். உங்கள் வரவு மகிழ்ச்சியைத் தந்தது.

  @ சீனு - நன்றி சீனு.

  @ மாதவன் ஸ்ரீனிவாசகோபாலன் - நன்றி.

  பதிலளிநீக்கு
 13. அம்மா- மகன் பாசம்,விரிசல் அழகாக சொன்ன சிறப்பான கதை!இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 14. வாழ்த்துக்கள் ஸ்ரீராம் சார்.
  கண் கலங்க வைக்கிறது கதை. மிக சிறப்பாக எழுதி இருக்கிறீர்கள்

  பதிலளிநீக்கு
 15. Excellent!. ஆனந்த விகடன், குங்குமம் இரண்டும் படித்துவிட்டேன், வாசிக்க ஒன்றும் இல்லையே என்று இருந்த எனக்கு தற்செயலாக இன்று கிடைத்த பெரிய மகிழ்சி. அதிகமான கமெண்ட்ஸ் வாசித்தது போனஸ். நன்றி.

  பதிலளிநீக்கு
 16. பெத்தமனம் பித்து பிள்ளைமனம் கல்லு..

  கல்லும் கனியாகட்டும் ..

  அதீதம் இதழ் வெளியீட்டுக்கு பாராட்டுக்கள்..!

  பதிலளிநீக்கு
 17. அருமை! மனதின் ஆழத்தில் இருக்கும் பிரியத்தை வெளிக்காண்பிக்கத்தெரியததால்தான் இத்தனை பிரச்சினையும் என்று தோன்றுகிறது! சிறு வயதில் அம்மா நம்மிடம் காண்பிக்கும் கோபம் மனதில் வலியைக்கொடுக்கும். அதே கதை திரும்ப வரும்போது, அந்த வயதான உணர்வுகளை நம் கோபம் பாதிக்கும் போது அந்த வலி வேர் விட்டு ஆழமாகி விடுகிறது! மன உணர்வுக‌ளை பின்னி இழைத்திருக்கிறீர்கள்! இனிய பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்!!அந்த ஓவியம் மிக அழகு!


  //வாழ்க்கை என்பது அன்பாலும் தியாகத்தாலும் உருவாக்கப்படவேண்டும் அதை விடுத்து மற்ற ஆயிரம் வசதிகள் இருந்தும் ஒன்றும் பயனில்லை
  அது ஒரு வறண்ட பாலைவனமாகதான் இருக்கும்.//

  திரு.பட்டாபிராமன் என் மனதில் எப்போதும் இருந்து கொண்டிருக்கும் எண்ணங்களை அப்படியே, மிக அழகாய் எழுதியிருக்கிறார்கள். உண்மையை அழகாய் எழுதியதற்கு அவருக்கும் என் பாராட்டுக்கள்!!

  பதிலளிநீக்கு
 18. வணக்கம்
  தாயுள்ளம் பற்றிய கதையை படிக்கும் போது. மனம் ஒருகனம் கனத்தது...
  வாழ்த்துக்கள்.

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 19. தன் அம்மா மீது சுதா வைத்திருக்கும் அக்கறையைப் பார்த்த ரகு, "வா,சுதா!.. என் அம்மாவைப் போய் பார்த்து விட்டு வந்திடலாம்" என்று அவன் தம்பி வீட்டில் இருக்கும் தன் அம்மாவைப் பார்க்கப் போவதாக.....

  கதையை இன்னும் கொஞ்சம் ஸ்குரூ பண்ண வேண்டுமானால்...

  "வா, சுதா.. பக்கத்திலே மேல மாசி வீதிலே தானே என் தம்பி வீடு இருக்கு?.. இப்படியே ஒரு எட்டுப் போய் என் அம்மாவையும் பார்த்துவிட்டு வந்திடலாம்..."

  "நோ.. நான் வரலை. நீங்க வேணா போயிட்டு வாங்க..."

  'அவள் அம்மாவைப் பார்க்க தான் கூடப் போகவேண்டும், ஆனால் தன் அம்மா என்றால் என்னிக்குமே அவள் வரமாட்டாள்'.. இது எந்த ஊர் நியாயம்?..

  யதார்த்ததின் சூடு பட்ட தகிப்பில் சட்டென்று ரகுவின் முகம் சாம்பிப் போனது.
  =================================

  "வாசிக்கும் போது நமக்குள்ளே ஒர் கண்டுபிடிப்பு நிகழுது. எதையோ நாம கண்டடையறோம். அது தான் வாசிப்பு மேலே உள்ள ஈர்ப்பு குறையாம இருக்கக் காரணம். உடம்பு முடியுதோ இல்லையோ ஒரு நாளைக்குக் குறைஞ்சது மூணு மணி நேரம் படிச்சுடுவேன்."

  -- இன்றைய தமிழ் 'தி இந்து'வில்
  பெரியவர் அசோகமித்திரன்.

  பதிலளிநீக்கு
 20. மனதை கலங்கடித்த கதை...

  இன்று எனது பக்கத்தில்

  http://kovai2delhi.blogspot.in/2014/01/blog-post_16.html

  பதிலளிநீக்கு
 21. அருமையான படத்துடன் மனதை கசகிபிழியும் படி வரிகள் அமைத்து நெகிழச்செய்து விட்டீர்கள்.

  பதிலளிநீக்கு
 22. எந்த பிள்ளையும் மனைவிமுன் அதிக கரிசனம் காட்டாதீர்கள். யாரிடம் அம்மாவிடம். மனைவியே எல்லாம் செய்வதாக இருந்து விட்டுப் போகட்டும்.
  பிள்ளை கரிசனம் அவர்களுக்குப் பிடிக்காது. எதற்கும் தன்னை எதிர்பார்த்தே மாமியார் இருக்கிராள் என்பதில் அவர்கள் மனதிற்குச் சிறப்பு.
  சுதாமாதிரி மருமகள் இருந்து விட்டால்
  விசாரமே இல்லை. பிள்ளைக்குத் தன்மீது அன்பு இருப்பது ஒன்றே போதும்.
  கதை மனதைத் தொட்டது.
  ஏதாவது ஹோமிற்குப் போய்விடலாம் என்று தோன்றும் மாமியார்களும் உண்டு.
  அங்கு போனால்தான் அந்த வாழ்க்கையும் புரியும்.
  அன்புடன்

  பதிலளிநீக்கு
 23. மிகவும் உருக்கமான கதை சார். முடிவில் அம்மா தன் பிள்ளை உடன் செல்ல விரும்புவது போலும் ரகு தன் அம்மாவை வீட்டுக்கு அழைத்து வர விரும்புவதும் போலவும் நானே என் மனதில் கதையை நீட்டித்துக் கொண்டேன். மிக நல்ல கதை வாசித்த திருப்தி.

  பதிலளிநீக்கு
 24. நானும் ஜீவி அவர்கள் சொன்னது போல்தான் நினைத்தேன்... மகன் இந்த அளவு நடந்து கொள்வது அதிகம்தான்.. ஏனெனில் அறியாத ஒரு எதிர்ப்பு மருமகளிடம் தான் இருக்க வாய்ப்பிருக்கும் என எல்லோரும் நினைப்பர்..ஆனால் சுதா போன்ற மருமகள்களும் நிறைய இருக்கிறார்கள்

  பதிலளிநீக்கு
 25. கதை உரையாடலிலேயே நகர்வதும், கடைசியில் அட! என்று நினைக்க வைக்கும் ட்விஸ்டுமாக கதை சிறப்பாக இருக்கிரது. வாழ்த்துக்கள்

  http://kgjawarlal.wordpress.com

  பதிலளிநீக்கு
 26. இப்படியுமா என்று கேட்க நினைத்து..
  ஆம் ..இப்படியும் என்று முனக வைத்த யதார்த்தம்

  பதிலளிநீக்கு
 27. ரிஷபன் சாரின் கருத்தைப் படிச்சதும் மறுபடி வந்து கதையைப் படிச்சேன். சுதாவைப் போன்ற மருமகள்களை நிஜ வாழ்க்கையிலும் பார்க்கலாம். எப்போவுமே மருமகள்களே குற்றம் செய்பவர்களாக இருக்க முடியாது! பிள்ளையிடமும் குற்றம் இருக்கும்.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!