செவ்வாய், 13 மே, 2014

பாம்பு பிடிப்பவருடன் ஒரு பேட்டி!


                                                            
முன்னர்  பாம்பு வந்த அனுபவம் எழுதியபோதே உங்கள் வீட்டுக்கு பாம்பு  வந்ததா, பாம்பு வீட்டில் நீங்கள் வசிக்கிறீர்களா என்று கேட்டார் ஹுசைனம்மா!

     

இந்த வருடம் வெயிலுக்கும் பாம்பார் வெளியில் வந்து அலைய, மறுபடியும் வனத்துறைக்குக் கடிதம் அனுப்பினால், ஒரு அலைபேசி எண் தந்து பேசச் சொன்னார்கள்.  அந்த எண்ணில் பேசியதும் அவர் பாம்பு பிடிக்க ஆள் அனுப்புவதாகச் சொன்னார். 

                                      

                                                                        
நான்கு அல்லது ஐந்து பேர்கள் வருவார்கள் என்று எதிர்பார்த்த இடத்தில் ஒரே ஒருவர் வந்தார். 22 வயது இளைஞர்.
                              

இங்கு வந்தபின்தான் ஒரு குச்சியை உடைத்துக் கையில் எடுத்துக் கொண்டார். புதர்கள், வளைகள், அடைசல்களில் அனாயாசமாக கால் வைத்து நடந்து, குச்சியை வைத்து சோதித்தார். முதல்நாள் மாலையிலும், இன்று காலையும் கண்ணில் பட்ட (வெவ்வேறு) பாம்புகள் இப்போது தட்டுப் படவே இல்லை!

                                                 
கிளம்பும்போது வேறு இரண்டு எண்கள் தந்தார். ஒன்று காசு கொடுத்து ஆள் அமர்த்துவது.  வந்து ஒருநாள் மற்றும் ஒரு நாள் இரவு தங்குவார்களாம். இருக்கும் பாம்புகளைத் தேடிப் பிடித்து விடுவார்களாம். 4,000 ரூபாய் முதல் 6,000 ரூபாய் வரை கட்டணமாம்.
இன்னொன்று வேளச்சேரி வனத்துறை அலுவலக எண். (044-22200335) அவர்களிடம் சொன்னால் நான்கைந்து பேர்கள் ஒரு 'டீமா'கக் கிளம்பி வந்து நிதானமாகத் தேடி, பாம்பு பிடிப்பார்களாம்.
பாம்புதான் கிடைக்கவில்லை. ராஜேஷிடம் பேசியபோது சில விவரங்கள் கிடைத்தன!

அவரிடம் பேசியபோது கிடைத்த சுவாரஸ்ய தகவல்கள் :
நம்மூர்களில் பெரும்பாலும் சாரைப் பாம்புகள்தான் இருக்கும். நல்ல (நாகப்) பாம்புகள் அபூர்வம். "ராஜநாகம் பிடித்ததுண்டா?" என்று கேட்டேன். குளிர் பிரதேசங்களில் இருக்கும். நம்மூரில் கிடையாது என்றார்.

   
சாரைப் பாம்புகள் நீளமாக, லேசான தடிமனில் இருக்கும். நல்ல பாம்புகள் கொஞ்சம் குட்டையாக, ஆனால் நல்ல தடிமனாக இருக்கும் என்றார். அதன் மேலுள்ள அடையாளங்கள் பற்றிச் சொன்னார். பாம்பு சென்ற தடம் வைத்தே என்ன வகைப் பாம்பு அது என்று கண்டு பிடித்து விடுவேன் என்றார். கட்டு விரியன் நல்ல கருப்பாக, பளபளப்பாக இருக்கும் என்றார்.

விஷமுள்ள பாம்புகள் என்றால் நம்மூரில் அதிகம் இருப்பது கட்டு விரியன், கண்ணாடி விரியன், சுருட்டை போன்றவைதான் என்றார்.

                                            
'பச்சைப் பாம்பு' குழந்தை மாதிரியாம்! எப்படிப் பிடிப்பீர்கள் என்றேன். முதலில் வாலைப் பிடிப்பாராம். (இதைத்தான் 'ஓடற பாம்பைக் கையில் பிடிக்கற வயசு' என்பார்கள் போல!) பிறகு கையில் இருக்கும் குச்சியால் அதன் தலையை மெல்ல கட்டுப்படுத்தி, தன்னால் அதன் உயிருக்கு ஆபத்தில்லை என்று புரிய வைப்பாராம். சாரைப் பாம்பு என்றால் கொஞ்ச நேரத்தில் அப்படியே குழந்தையைத் தூக்குவது போல இரண்டு கைகளிலும் தூக்கி விடுவார்களாம். நல்ல பாம்பு என்றால் வாலைப் பிடித்துத் தூக்கி, தலையை அருகில் வராதவாறு மென்மையாகக் கையாண்டு, அப்படியே பைக்குள் போட்டு விடுவார்களாம்.
தோளில் ஒரு பேக், கல்லூரி மாணவன் போல மாட்டி இருந்தார். தோளில் அதற்குத்தான் பை மாட்டி இருக்கிறீர்களா என்று கேட்டேன். ஆமாம் என்றார். ஆபத்தில்லையா அது? என்று கேட்டேன். ஒரு ஆபத்தும் இல்லை, அது பாட்டுக்க சுருண்டு படுத்து கிடக்கும் என்றார்! (ஆபத்து என்று கேட்டது உங்களுக்கு மட்டுமல்ல, இதை எடுத்துக் கொண்டு மறுபடி பஸ்ஸில்தானே போவீர்கள், திடீரென வெளிவந்து விட்டால் என்ற பயம்தான் என்று நினைத்துக் கொண்டேன்)

 (நான் முதலில் நான் பார்க்காதபோது நைஸாக  அந்தப் பையிலிருந்து தான் கொண்டு வந்திருக்கக் கூடிய ஒரு பாம்பை எடுத்து "இதோ பிடித்து விட்டேன்" என்று காட்டுவாரோ?' என்ற சந்தேகப் பட்டேன். ஆனால் அவர் பேசியது கேட்டபோது நான் அப்படி நினைத்தது தவறு என்று தெரிந்தது. நடு இரவில் யாராவது உதவி என்று கூப்பிட்டால் கூட பாம்பு பிடிக்கக் கிளம்பிச் சென்று விடுவாராம்)
டிப்ளமா இன் எலெக்டானிக்ஸ் படித்திருந்தாலும் வனத்துறை மேலுள்ள காதலால் இந்த வேலைக்கு வந்தாராம். இன்னும் திருமணமாகவில்லை.

17 வயது முதல் பாம்பு பிடிக்கும் அனுபவமாம். பாம்பு பிடிக்க ஸ்பெஷலாகக் கற்றுக் கொள்வது என்றில்லை, எல்லாம் அனுபவம்தான்.. ஆனால் தேவைப்பட்டால் பாம்பு பிடிப்பதில் வல்லவர்களான இருலர்களிடம் சென்று கற்றுக் கொள்வேன் என்றார். அவ்வப்போது தொலைபேசியில் ஆலோசனையும் கேட்டுக் கொள்வாராம்.

பாம்பு பிடிப்பது என்பது இங்கு செய்தாலும், குரங்கு பிடித்திருக்கிறாராம். வனத்துக்குள் சென்று ஆராய ரொம்ப விருப்பமாம்.
7,000 ரூபாய் மாதச் சம்பளமாம்.
'சரி, பாம்பு இருக்கிறது என்ற உடன் 'பிடித்து வா' என்று அனுப்புகிறார்களே, கையில் விஷ முறிவு மருந்து ஏதும் எடுத்துக் கொள்வீர்களா என்றால் இல்லை என்றார். காலில் மாட்டிக் கொள்ள பெரிய ஷூ கூட இல்லாமல் சாதாரண ஷூதான்! ரிஸ்க் இல்லையா என்று கேட்டால் "பழகிடுச்சி" என்று சிரிக்கிறார்.
                                                          

                                       
17 வயதில் தான் பிடித்த முதல் பாம்பே நல்ல பாம்புதான் என்றார். அப்போது அவரின் டென்ஷனான அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார். கூட வேடிக்கை பார்க்கக் கூடியிருந்த கூட்டத்துக்கு, அந்தப் பாம்பைப் பிடித்தபிறகுதான் 'இதுதான் தனது முதல் பாம்பு பிடிக்கும் அனுபவம்' என்று சொன்னாராம். ஏன் அந்த ரிஸ்க் என்று கேட்டால், "ஸார்! ஆபீஸ்ல நான் மட்டும் இருக்கேன். ஃபோன் வருது... பேசறவங்க பதட்டமாகவும், பயத்திலையும் இருக்காங்க... நாம் போய் ஹெல்ப் செய்ய வேணாமா ஸார்?" என்றார்.

நாளை 3 பேர்கள் கொண்ட டீம் வருகிறது. பிடித்து விடுவார்கள் என்று நம்புகிறேன்!


28 கருத்துகள்:

 1. குரங்கு பிடிப்பது சிரமம் தான்... முக்கியமாக மனக் குரங்கு...!!!

  பதிலளிநீக்கு
 2. பார்க்கவே அருவருப்பை தரும் பாம்புகளை ,இப்படி பிடிப்பதற்கும் தைரியம் வேண்டும்தான் !

  பதிலளிநீக்கு
 3. தம்பியை பாம்பு பிடிப்பதை விட்டுவிட்டு காக்கா பிடிக்க சொல்லுங்க விரைவில் முன்னுக்கு வந்துவிடுவார்.:))

  பதிலளிநீக்கு
 4. நல்ல வேளை .இது போல் மனிதர்கள் இருப்பதால் தான் கொஞ்சம் நிம்மதி. சுவாரஸ்யமான மனிதர். பாவம் இந்த ஊராய் இருந்தால் நிறைய சம்பாதிக்கலாம். நல்ல ஷூ கூட இல்லையே. நீங்கள் பத்திரமாக இருந்க்கள் ஸ்ரீராம்.

  பதிலளிநீக்கு
 5. வணக்கம்
  ஐயா

  கலந்துரையாடிய விதம் பற்றி மிக அருமையாக சொல்லியுள்ளீர்கள் இருந்தாலும் இந்த பதிவை படிக்கும் போது... மேசைக்கு கீழ் 4 தடவை எட்டிஎட்டி பார்த்த படி இருந்தேன் ஏன் என்றால் நம்ம வீட்டில் பாம்பு வந்திடும் என்ற பயம்... ஐயா...

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 6. அதெல்லாம் சுப்புக்குட்டிங்க எதுவும் செய்யாதுங்க. அதுங்க பாட்டுக்குப் போயிண்டும், வந்துண்டும் இருக்கும். நீங்க பாட்டுக்கு இருங்க. எங்க வீட்டிலே சமையலறை முதல், குளிக்கும் அறை, படுக்கை அறைனு அது வராத இடமே இல்லை. நாங்க இரண்டு பேரும் ஒருத்தர் உள்ளே வராமல் நின்று பார்த்துக் கொள்வோம். (அநேகமா நான் தான் நிற்பேன். ரங்க்ஸ் இன்னொரு குச்சியை எடுத்துக் கொண்டு தரையிலேயே தட்டித் தட்டி அதைப் போடா செல்லம்னு சொல்லி வெளியே தோட்டத்துக்கு விரட்டுவார். கொஞ்சம் யோசிக்கும். சில சமயம் அடம் பிடிக்கும். அப்புறமாப் போயிடும். ஆனால் உள்ளே வந்துடுச்சுன்னா எந்த ரூமில் இருக்கோ அந்த ரூமில் உள்ள அடைசல்கள் பின்னாடி போயிடாமப் பார்த்துக்கணும். நல்லவேளையா எங்க வீட்டிலே கீழே சாமான்களே இருக்காது. மற்ற வழிகளை எல்லாம் அடைச்சுடுவோம். வெளியே போகும் வழி தான் திறந்திருக்கும்.

  பதிலளிநீக்கு
 7. இப்போத் தான் சுப்புக்குட்டிங்களைப் பார்த்தே வருஷம் 2 ஆறது. :(

  பதிலளிநீக்கு
 8. கிடைக்கும் வரை திகில்தான். ஆம். கவனமாக இருங்கள். இன்றைய தேடலில் கிடைத்து பிரச்சனை தீரட்டும்.

  பதிலளிநீக்கு
 9. இன்னா சார் மோகன் குமார் இடத்த நீங்க புடிச்சிகிநீங்களா

  பாம்பு வந்ததோ இல்லையோ பாம்பின் பால் ஒரு பதிவு வந்துட்டு ;-)

  பதிலளிநீக்கு
 10. என்னது... பாஆஆஆஆஆம்பாஆஆஆ...? மீ எஸ்கேப்பு!

  பதிலளிநீக்கு
 11. என்னவோ தெரியவில்லை, பாம்புகள் என் கண்ணில் படுவதே இல்லை. .

  பதிலளிநீக்கு
 12. சாரி சார்.. இந்த பதிவை படிக்கவில்லை.. அந்த படங்களை பார்த்ததுமே அலர்ஜி.. ஓடி வந்துவிட்டேன்.. நாளை வருகிறேன்..

  பதிலளிநீக்கு

 13. பாம்பு இன்னும் பிடிபடலியா! நீங்க என்னமோ ஓய்வா பதிவு போடறீங்க!
  அப்பா நம்மால முடியாதுங்க!

  பதிலளிநீக்கு
 14. DD, RR மேடம், பகவான்ஜி - நன்றி!

  குட்டிப்பிசாசு - :))))))))))))))))))))

  வல்லிம்மா... அவர் காசுக்காக இல்லாமல், சொந்த விருப்பத்தின் பேரில் இந்தத் தொழிலுக்கு வந்ததாகச் சொன்னார்.

  ஜீவலிங்கம் காசிராஜலிங்கம், ரூபன் - நன்றி!

  கீதா மேடம் - ஸ்ரீரங்கத்தில் பாம்புகள் இல்லையா? அடுக்கு மாடிக் குடியிருப்பு என்பதால் வாய்ப்பில்லை! வீட்டுக்குள்ளேயே "சுப்புக்குட்டிகள்" வந்த விவரம் ஏற்கெனவே சொல்லியிருக்கிறீர்கள் என்றாலும் திகில்தான்!

  ராமலக்ஷ்மி - இன்னும் பிடிபடவில்லை! மட்ட மத்தியானம் வெயிலில் வந்தால் எந்த சுப்புக்குட்டி (!) இவர்களுக்காகக் காத்திருக்கும் சொல்லுங்கள்!

  சீனு - ஆமாம் சீனு... பதிவு தேறியது! அதிகம் பேர்கள் படிக்கும் பதிவாகவும் மாறி வருகிறது!!!

  பால கணேஷ் - :)))))))))

  செல்லப்பா ஸார் - நான் அடிக்கடி பார்க்கிறேன்!

  கோவை ஆவி - அம்புட்டு பயமா... அம்புட்டு அலர்ஜியா! :))))

  புலவர் ஐயா - எங்களுக்குப் பழகி விட்டது. புதிதாக வந்தவர்களுக்குத்தான் பயம்!

  பதிலளிநீக்கு
 15. எனக்கென்னவோ, இந்தியாவில் டூ வீலரில் பாம்பு போல் ரோட்டில் நெளிந்து போகும் மாக்களை பிடித்து எதாவது செய்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றுகின்றது ???

  பதிலளிநீக்கு
 16. அட சுப்புக்குட்டி....

  நல்ல அனுபவம் தான் அந்த இளைஞருக்கு... உதவும் மனப்பான்மை கொண்ட அந்த இளைஞர் பாசிடிவ் செய்திகளில் வரவேண்டியவர்!

  பதிலளிநீக்கு
 17. பேட்டி நன்றாக இருந்தது. படங்கள் தான் கொஞ்சம் பயமுறுத்தியது.
  இங்கேயும் சென்ற மாதம் நீச்சல் குளத்தில் பாம்பு நீந்தியதைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். அது நீச்சல் குளத்திலிருந்து வெளியேறும் போது எடுத்த படத்தைப் பேப்பரில் போட்டு பீதியைக் கிளப்பி விட்டார்கள்.
  அது மட்டுமில்லாமல் பன்னிரெண்டாவது மாடியாக இருந்தாலும் பைப்பில் ஏறி டாய்லெட் பௌலுக்குள் கிடக்கிறதாம் பாம்பு. இது வதந்தியா என்று தெரியவில்லை. அது எப்படியோ, இங்கேயும் பாம்பு ஸ்பெஷல் தான்.

  பதிலளிநீக்கு
 18. என் மாப்பிள்ளையும் பாம்பு பிடிப்பவர்தான். தும்கூரில் எந்த வீட்டில் பாம்பு வந்தாலும் இவர்தான் போய் அதைபிடித்து பக்கத்தில் உள்ள காட்டில் விட்டுவிட்டு வருவார். உங்கள் பாம்பு பிடிப்பவர் சொல்லும் வசனம் எல்லாம் (அதோட உயிருக்கு நம்மால ஆபத்து இல்லைன்னு தெரிந்தால் ஒண்ணும் பண்ணாது) எங்கள் மாப்பிள்ளையும் பேசுவார்.
  ஒருமுறை அவருடன் வெளியூர் போயிருந்தபோது ஒரு குட்டி பாம்பு என் கண்ணில் பட, நான் கத்திய கத்தலில் எல்லோரும் நடுங்க, இவர் மட்டும் அழகாக அதைக் கையில் எடுத்துக் கொண்டார். அது வளைந்து வளைந்து இவர் கையில் ஓடுகிறது. என்னிடம் காட்டி 'பிடிங்க, ஒண்ணும் பண்ணாது' என்றார். 'ஐயோ!' என்று கண்ணை மூடிக் கொண்டுவிட்டேன்.
  விஷம் இல்லாத பாம்பு என்று எப்படியோ கண்டுபிடிக்கிறார்.

  வல்லமை குழுவில் இருக்கும் திரு கல்பட்டு நடராஜன் சுமார் 5 பதிவுகள் பாம்புகள் பற்றிப் போட்டிருந்தார். படிக்கப் படிக்க என்ன சுவாரஸ்யம். அப்படியே காப்பி பேஸ்ட் பண்ணிட்டேன் எனது இரண்டாவது தளத்தில் - அவருடைய முன் அனுமதியுடன் தான்.

  இதோ இணைப்பு: http://wp.me/p2RUp2-4G

  @பகவான்ஜி! பாம்புகள் என்ன அழகான ஜீவன்கள். அருவருப்பு என்கிறீர்களே!

  பதிலளிநீக்கு
 19. @ரஞ்சனி, கல்பட்டாரின் பதிவுகளை மரபு விக்கியிலும் வன உயிரினம் என்னும் தலைப்பில் பார்க்கலாம். அங்கேயும் இணைக்கப்படுகிறது. :)))))

  பதிலளிநீக்கு
 20. அது சரி, கொம்பேறி மூக்கனைப் பத்தி ஏன் ஒண்ணுமே சொல்லலை அந்தப் பையர்??? கொம்பேறி மூக்கன் ஒரே தாவாகத் தாவித் தாவி வரும். மற்ற சுப்புக்குட்டிங்க மாதிரி ஊர்ந்தெல்லாம் வராது. கண்ணிலே கொத்தும் என்கிறார்கள். அது கொத்தின மனிதனை விடாமல் திரும்பத் திரும்பக் கொத்துமாம். அதை நாம அடிச்சால் உடனே செத்தும் போகாது என்கிறார்கள். யாரைக் கடிச்சதோ அவங்க உடல் எரிக்கப்பட்டதும் தான் இங்கே அதன் உயிர் போகும் என்று கர்ண பரம்பரைச் செய்தி. எவ்வளவு தூரம் நிஜம்னு தெரியலை.

  பதிலளிநீக்கு
 21. எங்க வீட்டுக்கு நாங்க வீடு கட்டி கிரஹப்ரவேசம் செய்த புதுசுலே கொம்பேறி மூக்கனார் விஜயம் செய்தார். அப்போ என் மாமியார், மாமனார் சொன்னவை தான் மேற்கண்டவை. அந்த மூக்கனாரை அடிச்சு உடனே மண்ணெண்ணெய் ஊற்றி எரிக்கச் சொன்னார்கள். (அப்போல்லாம் ரேஷனில் மண்ணெண்ணெய் கிடைச்ச காலம்) அப்படியே எரிச்சுட்டுச் சாம்பலை மண்ணில் புதைச்சுப் பால் விட்டோம். கிட்டத்தட்ட நடுகல் நடலை. பாக்கி எல்லாம் பண்ணினோம். கொஞ்ச நாளைக்கு வெள்ளிக்கிழமை வெள்ளிக்கிழமை அந்த இடத்தில் பால் ஊற்றி வந்தோம். :)))

  இப்போ நினைச்சா சிப்புச் சிப்பா இருக்கு.

  பதிலளிநீக்கு
 22. பாம்பு பிடிக்கும் ராஜேஷ் அவர்கள் சொன்ன தகவல்கள் சுவாரஸ்யம் தான்.
  எங்கள் பக்கம் பாம்பு, தேள் இவை கண்ணில் படக்கூடாது என்று சங்கரன்கோவில் ஸ்வாமிக்கு வேண்டிக் கொள்வோம்.
  பிடிபட்டதாபாம்பு?

  பதிலளிநீக்கு
 23. naa ithu varaikkum oru aaru illa ezhu paambu pidichi iruken enakku paambukala kolla pidikaathu paambu pidika yarna training tharuvaankalaa therichaa sollunka

  பதிலளிநீக்கு
 24. தைரியமான இளைஞர்...வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!