புதன், 16 ஜூலை, 2014

ப்ளாக் மேஜிக்
                                                           
                                                    
சின்ன வயசுல லீவு நாள்னா எப்பப் பார்த்தாலும் வெளில வெளில ஓடிடுவோம். வீட்டுல தங்கற நேரம் கம்மி. 'அவன எங்கடா காணும்?' னு அம்மா கேட்டா,  அடுத்தவன்,  'வெளாடப் போயிருக்காம்மா' ம்பான்... 'நீ போவலையாடா'ன்னா  'ந்தா.. நானு பம்பரம் எடுக்க வந்தேன். போயிட்டே இருக்கேன்' ம்பான் அவன். 


                                                         
நாடா வச்ச டிராயர் போட்டிருப்பேன். எனக்கு என்ன எரிச்சல்னா என்னோட வலது பக்க நாடா தோள்ளேருந்து நழுவி நழுவி விழுந்துகிட்டே இருக்கும். அதை ஒரு கையால புடிச்சுகிட்டே வெளாடறது எவ்ளோ கஷ்டம் தெரியுமா...அதோட நெத்தில வந்து விழுந்து கண்ண மறைக்கும் முடியை ஒதுக்கிக்கணும்.. இருந்தா செந்தில் மாதிரி இருக்கணும்... அவன் எப்பவும் மொட்டை..
ஆனா செஞ்சேனே... அதுவும் செஞ்சேனே...

ஒருவாட்டி அண்ணன் கூட ஒரு அல்ப மேட்டர்ல பெட்டு வச்சு தோத்துட்டேன். தோத்தா மொட்டையடிக்கணும்னு சொல்லியிருந்தான். நாங்கள்லாம் என்ன மாரி பரம்பரை... பெட்டு வச்சா ஏமாத்த மாட்டோம்ல.... செந்தில் ஞாபகத்துல மொட்டை அடிச்சிட்டேன். 
                                                                  
                                        
 நான் மொட்டை அடிச்சேன். அப்பா என்ன அடிச்சார்! சும்மா பின்னு பின்னுன்னு பின்னிட்டார். 50 பைசாவுக்கு (அப்போ) ஒரு தொப்பி வாங்கி முடி வளர்ற வரைக்கும் போட்டுக்கிட்டிருந்தேன்! அப்பாதான் வாங்கிக் கொடுத்தார். ஹலோ ப்ரதர்... 50 பைசால்லாம் அப்போ பெரிய அமௌன்ட்டாக்கும்!

                                            
வெய்யில் காலத்துல மதியானத்துல வெளில வெளாடப் போமுடியாம கதவப் பூட்டிடுவா அம்மா. உள்ளேயே கிடக்கணும். மழ வந்தாலும் கஷ்டம்தான். அப்போல்லாம் ஆடு புலி ஆட்டம், புள்ளி வச்சு கட்டம் போடறது (கட்டத்துக்குள்ள எங்க இன்ஷியல் எழுதுவோம்), திருடன் போலீஸ் -நோட்டுல பேர் எழுதி விளையாடுவோம், பரமபதம், பல்லாங்குழி, செஸ்  இப்படி விளையாடி பொழுது போகும். இல்லாட்டி ஒருத்தருக்கொருத்தர் அடிச்சுக்குவோம். சண்டை மண்டை உடையும். ஒரே களேபரம்தான்! 

                                                      
அம்மா மூஞ்சில துண்டப் போட்டுக்கிட்டு 'எப்படா இந்த சனியன் பிடிச்ச ஸ்கூல் தொறக்கும்'னு மனசுக்குள்ள நொந்துகிட்டு படுத்திருப்பா.... இந்த  களேபரத்துல எங்க தூங்கறது?
 

                                                                     

அப்பப்போ ஊர்லேருந்து மாமாக்கள் வரும்போது புதுசு புதுசா கத்துக் குடுத்துட்டுப் போவாங்க.. ஹலோ சிஸ்டர்.... கத்துக் குடுக்கறதுன்னா உக்கார வச்சு கிளாஸ் எடுக்கறதில்ல... எங்கள கேள்வி கேப்பாங்க... கேள்வி கேக்கறதுன்னா சும்மா இல்லங்க.. அந்தக் கேள்விக்கான பதிலை அவங்க சொல்ல மாட்டாங்க... கேள்வி மட்டும்தான்.  சந்தேகம்னா 'அஞ்சு சான்ஸ்' பதிவு படிச்சுப் பாருங்க.. அந்த மாரி நேரத்துல பெரும்பாலும் தப்பிச்சி வெளில தெறிச்சு ஓடிடுவோம்னு வச்சுக்குங்க...

அப்படியும் அவ்வப்போ உக்காரவச்சி கேக்க ஆரம்பிச்சுடுவாங்க.. ஒரு வாட்டி இங்கிலிஷ்ல Aல ஆரம்பிக்கற வார்த்தைகள் வரிசையாச் சொல்லணும்னு... A ன்னு இல்ல.. ஏதாவது ஒரு எழுத்து.. அப்புறம் ஒரே மீனிங்க்ல வெவ்வேறு வார்த்தை.. இப்படி!

சொல்லப்போனா சினிமாப் படம் பேரு முதலெழுத்தும் கடசி எழுத்தும் சொல்லி என்ன பேருன்னு கேக்கற வெளாட்டு கூட அவங்க சொல்லிக் குடுத்ததுதான். அட, இப்படில்லாம் சுவாரஸ்யமா எல்லாம் இருக்கான்னு அப்பப்போ அவங்க சொல்றதை கவனிக்க ஆரம்பிச்சோம்.

                                                          
அப்போ இந்த கட்ட விரல் மேஜிக் செய்வாங்க.. ஆன்னு பாப்போம். 'ஐயோ'ன்னு அலறுவோம். இந்த ஆடியன்ஸ் வேல எல்லாம் நமக்கு நல்லா வரும்ங்க... செய்யறவங்களையும்  உற்சாகப்படுத்தணும் பாருங்க.... இப்படி இருக்கச் சொல்ல, ஒரு வருஷம்,  இப்போ சொல்றேனே, இந்த ப்ளாக் மேஜிக் விளையாடினாங்க.

                                                                   
ஒரு மாமா தூரத்துல இருப்பார். இன்னொரு மாமா நம்ம கிட்ட இருப்பார். நம்ம ஒரு பொருளை இவர்கிட்ட காதுல சொல்லணும். உதாரணமா 'பாம்பு'ன்னு சொல்றோம்னு வைங்க.. அவர் தூரத்துல இருக்கற மாமாவப் பார்த்து 'ரெடியா'ம்பார்.  அவரும் 'ரெடி'ம்பார்.  உடனே வரிசையா ஏதாவதொரு பொருள்கள் சொல்லி 'அதுவா, அதுவா?' என்று கேட்டுகிட்டே இருப்பார். "இல்லை" "இல்லை" ன்னு சொல்லிகிட்டே வர்ற அந்த மாமா சரியா 'பாம்பா'ன்னு இவர் கேட்டதும் மட்டும் "ஆமாம்" என்பார்!


                                                        
நாங்களும் இவர் ஏதோ அவருக்கு சிக்னல் கொடுக்கறார் என்றும், சரியா இத்தனாவது நம்பர் கேள்வியா கேக்கறார் என்றும் இன்னும் விதம் விதமாகவும் சந்தேகப் பட்டோம். ஆனா அவங்க வெவ்வேறு பக்கம் திரும்பி உட்கார்ந்துகிட்டு எல்லாம் சொல்வாங்க.... அப்பவும் சரியா இருக்கும்.  நாங்கள் சொல்லும் எண்ணிக்கையில் எல்லாம் கேட்பார்கள். அப்பவும் சரியாச் சொல்வாங்க. ஆனா ஒண்ணு, எடுத்தவுடனே மட்டும் சரியான விடையைக் கேட்டதில்லை.


                                                                      

எங்களோட ஆச்சர்யம் தீர கொஞ்ச நாளானது. அவங்கதான் எப்படின்னு வேற சொல்லித் தர மாட்டாங்களே.... திரும்பத் திரும்ப விளையாடி ஒரு வழியாக் கண்டு பிடிச்சோம்.
                                                              
                                                                                
அப்புறம் என்ன.... எங்க ஃபிரெண்ட்சை உட்காரவைத்து ப்ளாக் மேஜிக் விளையாடத் தொடங்கி விட்டோம்!
அவ்ளோதான்... கதை முடிஞ்சிடுச்சிங்க.... இனி நீங்க கமெண்ட் போடலாம்.


36 கருத்துகள்:

 1. // அவ்ளோதான்... கதை முடிஞ்சிடுச்சிங்க.... இனி நீங்க கமெண்ட் போடலாம் //

  No, until the mystery is resolved, the story doesn't end.

  பதிலளிநீக்கு
 2. அந்த பிளாக் மேஜிக் எப்படின்னு சொல்லித் தந்தால் பசங்களோடு விளையாடலாம்ல.

  பதிலளிநீக்கு
 3. அந்த பிளாக் மேஜிக் எப்படின்னு சொல்லித் தந்தால் பசங்களோடு விளையாடலாம்ல.

  பதிலளிநீக்கு
 4. //பரமபதம், பல்லாங்குழி, செஸ் //

  செஸ்ஸெல்லாம் அந்தக் காலத்திலேயே விளையாடி இருக்கீங்க? இதிலே சீட்டுக்கட்டு விளையாட்டும், ட்ரேட் விளையாடும் காணோமே! தாயம் விளையாட மாட்டீங்களா?

  பதிலளிநீக்கு
 5. இந்த சினிமா பேர் சொல்லறது நாங்களும் விளையாடி இருக்கோம். அதோடு சீதாப்பாண்டி, பல்லாங்குழி, தாயம், பரமபதம், ட்ரேட், சீட்டில் செட் சேர்ப்பது, ஆஸ் போன்றவையும் சேரும். தம்பிக்காகக் கல்லாட்டம், தீப்பெட்டிப் படங்களை வைத்து, கோலிக் குண்டுகள் வைச்சு ஆடறது, பம்பரத்திலே "அபீட்" எடுக்கறது போன்றவையும் அப்பாவுக்குத் தெரியாமல் விளையாடியவை.

  பதிலளிநீக்கு
 6. ப்ளாக் மாஜிக் சஸ்பென்ஸை உடைங்க! :)

  பதிலளிநீக்கு
 7. அந்த நாள் நினைவுகளைக் கிளப்பி விட்டீர்கள். கடைசியில் சஸ்பென்ஸில் விட்டால் எப்படி:)?

  /. கதை முடிஞ்சிடுச்சிங்க.../

  வழக்கம் போலவே கதையை சொன்ன விதம் சூப்பர்!

  பதிலளிநீக்கு
 8. அப்படியே எங்க்ளை சிறுவயதிற்கு கொண்டு சென்ற அருமையான ஃப்ளஷ்பாக்! ப்ளாக் மாஜிக்...கிட்டத்தட்ட இப்ப விளையாடற டம்ஷரஸ்???!!! அதக் கொஞ்சம் விளக்கமா சொன்னீங்கன்னா....நல்லாருக்குமே! நம்ம அப்ப நம்ம அம்மா அப்பாவ விரல விட்டு ஆட்டினா மாதிரி இப்ப நம்மள ஆட்டுதுங்களே நம்ம வாலுங்க....என்னதான் விதவிதமா கேம்ஸ், டி.வி., கம்ப்யூட்டர் எல்லாம் இருந்தாலும் எல்லாமே அவங்களுக்கு கொஞ்ச நேரத்துல போரடிச்சுடுதே.....புதுசு புதுசா வேண்டியிருக்குங்க.....ரொம்பவே ரசிச்சோம் நீங்க எழுதியிருக்கும் நடையை

  பதிலளிநீக்கு
 9. அந்த கால சிறுவயது விளையாட்டுக்கள் என்றாலே சந்தோஷம்தான்! ப்ளாக் மேஜிக்கை எங்களுக்கும் கத்து தரலாம் இல்லையா?!

  பதிலளிநீக்கு

 10. நான் என் பேரக் குழந்தைகளுக்கு இந்த ப்ளாக் மேஜிக் சொல்லிக் கொடுத்து இருக்கிறேன். முன்பு ஏதோ என் பதிவு ஒன்றிலும் பகிர்ந்து கொண்டதாக நினைவு. சுவாரசியமான விளையாட்டுதான். உங்கள் சஸ்பென்ஸ் நீடிக்கட்டும் வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 11. பிளாக் மேஜிக் எங்கள் இல்லத்திலும் பிரபலம்..

  இனிய நினைவலைகளை மலரச்செய்தது..

  பதிலளிநீக்கு
 12. அருமையான மலரும் நினைவுகள்.
  நீங்கள் சொன்ன விளையாட்டுக்கள் எல்லாம் நாங்களும் விளையாடி மகிழ்ந்து இருக்கிறோம்.படங்கள் எல்லாம் அருமை.
  அம்மா ”வெயில் வீணா” போகுது போய் விளையாடுங்கள் என்று கிண்டல் செய்வார்கள் அம்மா.


  பதிலளிநீக்கு
 13. வணக்கம்
  ஐயா
  இனிய நினைவுகளை மலரச்செய்தது. பகிர்வுக்கு நன்றி

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 14. சொன்னவிதம் மிகவும் ரசனை... ரசித்தேன்...

  பதிலளிநீக்கு
 15. அருமை
  ரசித்தேன்
  இதோ கமெண்ட் போட்டுவிட்டேன்

  பதிலளிநீக்கு
 16. 'முள்றியின் டைரி' (ஞாபகம் இருக்கா?) மாதிரி இருக்குமோன்னு படிக்க ஆரம்பிச்சா இது வேறே மாதிரி!

  கீதாம்மா சொன்ன 'ட்ரேட்' மற்றும் கேரம் போர்டும் பையன் வயசில் எனக்கு பிடித்த விளையாட்டுகள். அவுட் டோர்ன்னா ஃபுட் பால்.
  (காலால தட்ற ஃபுட் பால்!)

  இங்கு வந்த போது பேரனுக்கு எனக்குப் பிடித்த 'ட்ரேட்' விளையாட்டு அட்டை வாங்கி வந்தேன். இப்போ அதுக்கு பேரு 'பிஸினஸ் மேன்'.

  இங்கு ஒரு இண்டியன் ஸ்டோரில் கேரம் போர்ட் பார்த்தேன். வாங்கிக் கொடுக்கலாம் என்கிற ஆசையில் விலையைக் கேட்டால் $85 என்றார்கள். கிட்டத்தட்ட Rs.5100/-.
  அம்மாடியோ!

  பதிலளிநீக்கு
 17. அந்த விளையாட்டை எங்களுக்கும் சொல்லித் தரலாமே அண்ணா.

  பதிலளிநீக்கு
 18. பெண்களுக்கு நிறைய விளையாட்டுகள் இருக்கும். அதான் வெயிலில் போகக் கூடாது ரூல் இருக்குமே. அப்படித் தெரியாமல் போய்விட்டால் அடுத்தநாள் நோ ப்ளே. ட்ரேட் தான் பிரபலம்.காரம்போர்ட்,சீட்டுக் கட்டு, புளியமுத்து ஊதி விளையாடுவது,பல்லாங்குழி எத்தனை விளையாட்டுகள். சாயந்திரமானால் கல்லா மண்ணா . திருடன் போலீஸ். லண்டன்..இன்ன பிற. உங்கள் ப்ளாக் மேஜிக் என்னன்னு சொல்லுங்கோ .ஜீவி சார் கேரம்போர்ட் ,சென்னையிலிருந்தே வாங்கி வந்து விட்டோம்.

  பதிலளிநீக்கு
 19. //ஜீவி சார் கேரம்போர்ட் ,சென்னையிலிருந்தே வாங்கி வந்து விட்டோம்.//

  வல்லிம்மா, செக்-இன் ஸூட் கேஸில் எப்படி அடங்கித்து, அது? ரொம்ப சின்ன சைஸ்ஸோ?..

  பதிலளிநீக்கு
 20. தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்.

  பதிலளிநீக்கு
 21. இப்ப சின்ன பசங்க அம்மா, அப்பா கூட எங்க விளையாட்டு விளையாடறாங்க.. அவங்க விளையாடற விளையாட்டே வேற.. ஐ மீன் வீடியோ கேம்ஸ சொன்னேன்.. ;)

  அதா விடுங்க.. விடைய சொல்லுங்க பாஸ்..

  பதிலளிநீக்கு
 22. அழகான பால்யத்தின் நினைவுகள். அதையெல்லாம் நினைக்கும்போதே மனசு ஜிவ்வுனு பறக்கும்.

  அந்த ப்ளாக்மேஜிக் என்னன்னு எனக்குத் தெரியும்னு நினைக்கிறேன். சின்ன வயசில் அம்புலி மாமாவில் இதுபோல ஒரு கதை படிச்சிருக்கேன். பார்ப்போம். அதுதானா விடை என்று.

  பதிலளிநீக்கு
 23. ஜீவி சார், எங்கள் மகன் எப்போது பார்த்தாலும் கம்ப்யூட்டரிலேயே இருக்கிறானேன்னு இந்த விடுமுறையில் அவனுக்காக இங்கே (ஆஸியில்) ஒரு கேரம் போர்ட் வாங்கினோம். விலை நீங்கள் சொன்னதுதான். வேறு வழி?

  பதிலளிநீக்கு
 24. ஜீவி பழி வாங்குறார்?

  கடைசி ஐட்டம் எனக்கும் தெரியும்.

  பதிலளிநீக்கு
 25. ஒரு ரயில் பயணத்தில் முன் பின் தெரியாத நபர் எங்களுடன் சேர்ந்து சீட்டாடினார். ரம்மி விளையாடி போரடித்ததும் மேஜிக் செய்யட்டுமா என்று வரிசையாக ட்ரிக்குகள் செய்தார். இது மட்டும் மேஜிக்காகவே இருக்கிறது.

  என்னையே எல்லாம் செய்யச்சொன்னார். கட்டிலிருந்து ஒரு சீட்டை எடுத்துப் பார்த்து ம்றுபடி கட்டில் எந்த இடத்திலாவது செருகச் சொன்னார். கட்டைக் கலைத்துத் தரச் சொன்னார். பிறகு நாலைந்து சீட்டுகளை ஒவ்வொன்றாக எடுத்துக் காட்டி இதுவா என்றார். இல்லை என்றதும் தரையில் கவிழ்த்து வைத்தார். பிறகு என்னையே இந்த சீட்டை புரட்டிப் பாக்காம கட்டுல வச்சுரு என்றார். கடைசியாக தரையில் இருந்த சீட்டை எடுத்துப் புரட்டச் சொன்னார். பார்த்தால் சரியான சீட்டு! இதுவா இதுவா என்று கேட்டு தரையில் வைத்த சீட்டு எதுவுமே சரியான சீட்டு இல்லை. ஆனால் கடைசியாக புரட்டிய சீட்டு சரியான சீட்டு ஆனது எப்படி என்பது குடைந்து கொண்டேயிருக்கிறது. அவர் விவரம் சொல்ல மறுத்து விட்டார்.


  பதிலளிநீக்கு
 26. அடப்பாவிங்களா கடோசில சொல்லாம முடிச்சிட்டீங்களே.. மண்டை வெடிச்சிடும்போல இருக்கு.. ஹாஹா

  இந்த இடுகையைப் போட்டது யாரு.. கேஜிஜி மாதிரி இல்லையே. ஸ்ரீராம் மாதிரியும் இல்ல.. யாரு யாரு ஆரு..

  ப்ளீஈஈஸ் சொல்லி முட்சிட்டுப் போங்க. :)

  பதிலளிநீக்கு
 27. மாதவன்... உங்களுக்கு இந்த விளையாட்டு தெரிந்திருக்கும் என்று நினைத்தேனே....

  ராஜி... வருகைக்கு நன்றி. சொல்லிடுவோம்.

  கீதா மேடம்... செஸ் விளையாடி இருக்கேன். ட்ரேட் ஊ ஹூம்! சீட்டு விளையாட இன்றளவும் தெரியாது! ('அதெல்லாம் புத்திசாலிகள் விளையாடற விளையாட்டு... உனக்கு வராது' என்பார் என் மாமா) கோலி குண்டு விளையாட்டும் பம்பரமும் நானும் விளையாடியிருக்கேன். பேந்தா எனப்படும் ஒற்றைக்குழி விளையாட்டிலும் 9 குழி விளையாட்டிலும் நான் கில்லியாக்கும்! கில்லின்னதும் ஞாபகம் வருது... கிட்டிப்புள்ளும் விளையாடுவோம்!

  //ப்ளாக் மாஜிக் சஸ்பென்ஸை உடைங்க! :)//

  உடைக்கும் நேரம் வந்தாச்சு...

  :)))))

  பதிலளிநீக்கு
 28. நன்றி ராமலக்ஷ்மி. சஸ்பென்ஸை இன்று உடைச்சிடலாம்!

  துளசிதரன் ஜி... டம்ஷரஸ்? கேள்விப்பட்டதில்லை. நன்றி உங்கள் கருத்துக்கு.

  'தளிர்' சுரேஷ்... அப்போ சொல்லிக் குடுத்துடலாம் என்கிறீர்களா..

  ஜி எம் பி ஸார்... சஸ்பென்ஸ் நீடிக்க ஒத்துழைத்ததற்கு நன்றி!


  பதிலளிநீக்கு
 29. ராஜராஜேஸ்வரி மேடம்... சஸ்பென்ஸ் உடைக்காததற்கு நன்றி!

  rags99 ... உண்மை. வருகைக்கு நன்றி.

  நன்றி கோமதி அரசு மேடம்.

  நன்றி ரூபன்.

  நன்றி DD.

  நன்றி ஜெயக்குமார் ஸார்!

  நன்றி ஜீவி ஸார்... உங்களுக்கு இந்த மேஜிக் தெரியுமா தெரியாதா என்று கமிட் பண்ணிக்கவே இல்லையே.... :))))

  பதிலளிநீக்கு
 30. நன்றி சே.குமார்.... சொல்லித் தந்துடறேன். இதோ....

  நன்றி வல்லிம்மா. இன்டோர் கேம்ஸ் விட அந்நாளில் அவுட் டோர் கேம்ஸ் அதிகம். இன்று நிலைமை அப்படியே உல்டா!

  நன்றி யாழ்பாவாணன் காசிராஜலிங்கம்.... என் கருத்தை எந்த விஷயத்தில் வரவேற்கிறீர்கள்? :)))))

  கோவை ஆவி.... ஹா....ஹா....ஹா...ஹா... அப்புறம் ஆவி.... விடையைச் சொல்லப் போறேன்ன்ன்னன்..... கேட்குதா?


  பதிலளிநீக்கு
 31. நன்றி கீதமஞ்சரி... விடை நீங்கள் நினைப்பதுதானா என்று செக் செய்து கொள்ளுங்கள்....

  அப்பாதுரை... கடைசி ஐட்டம்? ஜீவி ஸார் சொன்னதிலா????? நீங்கள் சொல்லும் கார்ட்ஸ் மேஜிக் நானும் பார்த்திருக்கிறேன். எனக்கும் எப்படி என்று தெரியாது!

  தேனம்மை... எப்படி, எதை வைத்து இது நான் எழுதியது மாதிரி தெரியவில்லை என்று சொன்னீர்கள்? எனக்குத் தெரிஞ்சாகணும் இப்பவே!:))


  பதிலளிநீக்கு
 32. நான் என்னதான் லேட்டாச் சொன்னாலும்... போங்க, யாருமே 'உம்' கொட்டவே மாட்டேங்கறீங்க... எப்படி யாருக்கு நான் விடையைச் சொல்றது? :))))

  பதிலளிநீக்கு
 33. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், இப்போ சொல்லப் போறீங்களா இல்லையா? இன்னுமா சொல்லலை?

  பதிலளிநீக்கு
 34. விடை :

  வரிசையாக எத்தனை பொருட்களைச் சொன்னாலும், நாம் சொல்லி வைத்திருக்கும் பொருட்களின் பெயரைச் சொல்லுமுன் ஒரு கறுப்புப் பொருளின் பெயரைச் சொல்லி விட்டு (உதாரணம் குடை - அப்பல்லாம் குடை பெரும்பாலும் கருப்பு நிறம்தான்- தலை முடி இப்படி ஏதாவது) அதற்கு அடுத்ததாய் இதைச் சொல்வார்கள். 'பூ.... இதானா?' என்று இருக்கு இல்லை?

  ஆனால் கறுப்புப் பொருள்தான் என்றில்லை, முன்னரே பேசி வைத்துக்கொண்டு நடிகர்கள் பெயர் சொல்லிய பிறகு, (அதிலும் சிலசமயம் இறந்துபோன நடிகர்கள் பெயரைச் சொன்ன பிறகு என்றெல்லாம் வைத்துக் கொள்வார்கள்) லிக்விட் ஒன்றின் பெயரைத் தொடர்ந்து என்றெல்லாமும் வைத்துக் கொள்வார்கள்.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!