Tuesday, July 22, 2014

பிரபலங்களின் எழுத்துகளில் வர்ணனைகள்


சில புத்தகங்களை எடுத்தால் விறுவிறுவெனப் படித்துக் கொண்டு போக முடிகிறது. சில புத்தகங்களை எடுத்தால் தொடர்ந்து
படிக்க ஓடவே மாட்டேன் என்கிறது. இதற்கு உதாரணம் ஜேகே சில குறிப்புகள்!

நாய் வாய் வைப்பது போல இதில் கொஞ்சம் அதில் கொஞ்சம் என்று படிக்கிறேன்! திடீரென பிரபலங்களின் எழுத்துகளைப் பகிர்ந்து ரொம்ப நாளாச்சே என்று தோன்றவும், உடனடியாக ஒரு பதிவு கிடைத்தது என்று பதிவிடுகிறேன்! முன்னர் இவற்றைப் பகிர்ந்து யாருடைய எழுத்து என்று கேள்வி கேட்போம்! இப்போது எதை எதை யார் யார் எழுதியது என்று சொல்லியே உங்கள் ரசனைக்கு விடுகிறோம்! இந்த மூன்றில், எது உங்களைக் கவர்ந்தது?

சாண்டில்யன் கதைகளைத் தொடங்குமுன் எழுதும் வர்ணனைகள் மிகப் பெரிது.  கல்கியும்! முதலில் படிக்கும்போது (சிறு வயதில்) வர்ணனைகளை ஒதுக்கி விட்டு கதையை மட்டும் படிப்பேன். அப்புறம் வர்ணனைகளையும் படிக்கத்தொடங்கினேன்.  கதையோடு சம்பந்தம் இல்லா விட்டால் வர்ணனைகள் நேரத்தைக் கொல்வது போலத் தோன்றியது என்பதால் இப்போதும் அனாவசிய வர்ணனைகளை பெரும்பாலும் விட்டு விடுகிறேன். ஆனால் இவற்றில் சம்பந்தப்பட்ட எழுத்தாளர்களின் முத்திரை இருக்கிறதா என்று தெரியவில்லை. ரசனையாக எழுதுகிறார்கள். உதாரணமாக எஸ்ரா எழுதி இருப்பது கதை அல்ல. அது அனுபவம். மழை பற்றிய அனுபவம். மனதில் நிற்கிறது. 

சில வர்ணனைகள் மனதில் நன்றாகவே பதியும். வயதானவர், தலை முன்னாளல் முடி கொஞ்சமாகவும், பின்னால் பம்பையாகவும் என்று படித்துக் கொண்டு வரும்போது உருவம் ஒரு பிம்பமாக மனதில் விழ ஆரம்பிக்கிறது. பஞ்சு போல வெண்மையான தலை என்னும்போது மனப்பிம்பத்தின் உருவத்தின் தலையும் நரைத்து விடுகிறது!
 
============================

                                                                      Image result for si su chellappa images

1)  இரண்டு சிறு குன்றுகளுக்கு நடுவேயுள்ள ஒரு பள்ளத்தாக்கின் வழியே அகன்று வளைந்து வளைந்து போய்க் கொண்டிருந்தது அந்தக் கூடு சாலை. அதன் இரு பக்கங்களிலும் நெருக்கமாக வளர்ந்திருந்த ராக்ஷஸ புளி, ஆலமரங்களின் கொப்புகள் சாலை நடுவிற்குக் கவிந்து வந்து கூடி வானம் தெளிவாகத் தெரியாதபடி ஒரு கூடுபோல்,  குடைந்த சுரங்கப் பாதை போல் அமைந்திருந்தது. விதானத்திளிருந்து சரங்கள் தொங்குவதுபோல  ஆலம் விழுதுகள் மெல்லிய காற்றில் அலைபட்டு ஊசலாடிக் கொண்டிருந்தன.


மோதிவரும் மேக அலைகளை ஒதுக்கி ஒதுக்கி விட்டு வெளிக்கிளம்பி நீந்திக் கொண்டு இருக்கும் நிலாவின் ஒளி மரக்கிளை இடுக்குகள் வழியே நழுவிச் சாலை எங்கும் வெள்ளித் துண்டுகளாய் சிதறிக் கிடந்தது. சாலையில் போக்குவரத்து அஸ்தமித்து பத்து நாழிகைக்குமேல் ஆகிவிட்ட படியால் குறைந்துபோய் அங்கொன்றும் இங்கொன்றுமாய் அகாலத்தில் கிராமத்துக்குத் திரும்பும் ஒன்றிருவரின் நிழலசைவையும் தூரத்துக் கொடிக்காலிருந்து கிளம்பும் ஏற்றப்பாட்டின் மெல்லிய ஒலியையும் மரக்கிளைகளில் திடீர் திடீறேன்றுக் கிறீச்சிடும் குரங்கு சப்தத்தையும் தவிர வேறொரு சப்தமும் ஸ்பஷ்டமாகக் கிளம்பவில்லை.


இருளை உள்ளடக்கி கம்மென்றிருந்த கூடுசாலை நடுவில் அசைநடை போட்டு வந்துக் கொண்டிருந்த ஜோடிக்காளைகளின் குளம்புகள் கம்பி ரோட்டில் படும் சப்தம் விட்டு விட்டுத் துல்யமாகக் கேட்டுக் கொண்டிருந்தது.  சற்று எட்டியுள்ள கிராமம் நோக்கி நேரம்கழித்துத் திரும்பும் அந்த வில்வண்டி சக்கரங்கள் பதறாமல் மெதுவாகச் சுழன்று கொண்டிருந்தன.  சாலைச் சரளைக் கற்களில் குளம்புகள் பட்டு ஒன்றிரு தீப்பொறிகள் தெறித்தன.


கூடுசாலை -  சி சு செல்லப்பா

==============================
==============

                                                        

                                                                 Image result for laa sa raa images
 2)  அதே வயல்கள்தாம். அதே பச்சைக் கதிர்கள்தாம். அதோ தூரத்தில் ஏற்றத்தை இறக்கிக் கட்டிய உறை கிணறுதான். இப்பவும் ஒருவரும் அதைத் தூக்கிக் கொண்டு போய்விடவில்லை. ஆனால் எல்லாமே ஏதோ ஒரு முறையில் மாறியிருந்தன. திடீரென ஏதோ ஒரு மந்திரக்கோல் பட்டு உயிர் பெற்று மூச்சு  விட ஆரம்பித்து விட்டன.


இருந்தாற்போல் இருந்து கதிர்களின் பச்சைகளிடையில் வெள்ளை அசைவுகள் ஒருமித்து ஒன்றே ஆகி அவ்வுயிரின் உரு தன்னிரு பக்கங்களிலும் இரு  வளைவுகளைக் கற்பித்து விரித்துக்கொண்டு கிளம்புகையில், ஒரு பட்சியின் வடிவமாய் அந்தரத்தில் பிதுங்கியது. கீழே உதைத்துக் கொண்டு அது அப்படிக் கிளம்பும் வேகமும் அழகும் என்னுடல் புல்லரித்தது. அதை எதிர்த்துக்கொண்டு என் நெஞ்சம் நெஞ்சுக்குழி வரை எழும்பித் "தடால்" என்று தன்னிடத்தில் வீழ்ந்தது.


ஏதோ இவ்வுலகத்தையே, கோளத்தையே சுழற்றி எறிவதுபோல்  அது எழும்பிய வேகத்தில் நீல மெத்தையில் வைர நகை உருண்டாற்போல், அதன் வெண்மை வானில் ஜ்வலித்தது. நான் பரவசமானேன். என் கைகள் என்னையறியாமல் வானை ஆலிங்கனம் செய்ய விரிந்தன.


காயத்ரீ - லா ச ராமாமிருதம்.

==============================
============

                                                                      

                                                        Image result for s.ramakrishnan images
3)  இரவில் மழை தனித்த சுபாவமுடையதாக இருக்கிறது. அது எப்போது சீறும் எப்போது தணியும் என்று அறிய முடியாது. பள்ளி வயதில் ஒரு நாளிரவு தூக்கத்தினூடே ஏதோ சத்தம் கேட்டு விழித்துக் கொண்டேன். வெளியே மழை பெய்துகொண்டிருந்த சப்தம் கேட்டது. மின்விசிறி சுழலும் ஓசைதான் அப்படி இருக்கிறதா அல்லது மழைதானா என்று உறுதியாகத் தெரியவில்லை. ஜன்னல்கள் அடைத்து சாத்தப் பட்டிருந்தன.

மெல்லிய இரவு விளக்கின் வெளிச்சம் சுவர்களில் ஊர்ந்து கொண்ருந்தது. பின்னிரவில் வீடு கொள்ளும் தோற்றம் விவரிக்க முடியாதது. அதன் தன்னியல்பிற்கு திரும்பியிருப்பதுபோல இயக்கம் ஓய்ந்து சாந்தம் கொண்டிருந்தது. 

வீட்டின் இயக்கம் பேச்சால்தான் உருவாகிறது போலும். பேச்சு நின்று போனால் வீடு நிம்மதியிழந்து விடுகிறது. பகல் சொற்களின் விளைநிலம், இரவு சொற்களற்ற தியானவெளி.  ஒரு மாலைக்கு எவ்வளவு பேசுகிறோம், எவ்வளவு சொற்கள் உதட்டிலிருந்து உதிர்ந்துபோகின்றன, பேச்சு துவங்கி  பேச்சு ஓயும் வரை பகலெல்லாம் வீடு உருமாறிக் கொண்டேயிருக்கிறது.

மழை என்ன செயும் - எஸ்ரா

41 comments:

rajalakshmi paramasivam said...

அருமையான ஒப்பீடு. சில வர்ணநிகளைப் படிக்கும் போதே எழுத்தாளர் யாரென்று தெரிந்து விடும். நீங்கள் சொல்வது போல் வர்ணனைகள் சூழ்நிலையையே கண் முன் நிறுத்திவிடும். அது எழுத்தாளரின் திறமை என்று நினைக்கிறேன்.
பதிவு படிக்கும் வாசகர்களும் ஒப்பீடு செய்யும் வண்ணம் இருக்கிறது பதிவு.
வாழ்த்துக்கள்.....

சே. குமார் said...

வர்ணனைகள் குறித்து உங்கள் கருத்தும் வர்ணனைகள் மூன்றும் அருமை அண்ணா...

சே. குமார் said...

வர்ணனைகள் குறித்து உங்கள் கருத்தும் வர்ணனைகள் மூன்றும் அருமை அண்ணா...

வருண் said...

***சாண்டில்யன் கதைகளைத் தொடங்குமுன் எழுதும் வர்ணனைகள் மிகப் பெரிது. ***

அவரு இயற்கை வர்ணனைகள் கொஞ்சம் "போர்"தான் ஆனால், இந்த கதாநாயகிகளில், கூந்தல் அழகு, பின்னழகுனு ஒரு ரெண்டு மூனு பக்கத்துக்கு வர்ணிப்பாரே. அதையெல்லாம் எப்படி ஸ்கிப் பண்னுறது?

அந்த வகையில் கல்கியின் பொன்னியின் செல்வனில் அப்படி எதுவுமே சேர்த்து இருக்க மாட்டார். இருந்தும் பொன்னியின் செல்வன் போர் அடிக்காமல் போகும். That's how kalki beats Chandilyan, imho.

அப்பாதுரை said...

மூன்றாவது வேஸ்ட்.

ஜீவி said...

விட்ட வார்த்தைகளை படிப்பவர்கள் நிரப்பிக் கொள்ளலாம்:

மூன்றாவது பாராவில்:

நேரத்தைக் கொல்வது போலத்...என்பதால் = நேரத்தைக் கொல்வது போலத் தோன்றியது (தெரிந்தது) என்பதால். அந்த 'த்' தான் அடுத்த வார்த்தையைக் கண்டுபிடிக்க துணையாய் இருந்தது.

சி.சு.செ-யின் கடைசி பாராவில்:

கிராமம். கிராமம்.

லாசாராவின் முதல் பாராவில்:

உயிர் பெற்று மூச்சு ஆரம்பித்து விட்டன = உயிர் பெற்று மூச்சு விட ஆரம்பித்து விட்டன.

இரண்டாவது பாராவில், தெரிந்தே லாசாராவே அவர் உணர்வு, எழுத்தாய் கொட்டுகிற வேகத்தில் விட்ட வார்த்தை: வேகமும் அழகும் (கண்டு) என்னுடல் புல்லரித்தது.

எஸ்ரா முதல் பாராவில்: வழியே மழை பெய்து கொண்டிருந்த சப்தம் = வெளியே மழை பெய்து கொண்டிருந்த சப்தம்.

இரண்டாவது பாராவில்: தன்னியபிற்கு = தன்னியற்பிற்கு

மூன்றாவது பாராவில்:

இயக்கம் பெச்சால் தான் = இயக்கம் பேச்சால் தான்.

பேச்சு துவங்கி பசு ஓயும்-- பசு?

ராய் பகலெல்லாம் = ராப் பகலெல்லாம்.

இந்தத் தவறுகள் பதிப்பித்த புத்தகங்களிலேயே இருந்தால் என்ன சொல்வது என்று தெரியவில்லை.. எழுத்தாளன் தன் புத்தகத்தின் ஃபுரூப் ரீடிங்கிலும் கவனமாக இருக்க வேண்டும். பதிப்பகமே ஃபுரூப் ரீடிங்குக்கு ஏற்பாடு செய்யும் தான். இருந்தாலும் அதையும் தாண்டி தன் புத்தகம் தன் எழுத்து அது பிழையில்லாமல் வாசகரிடம் போய்ச் சேர வேண்டும் என்கிற அக்கறை எழுத்தாளனுக்குத் தேவை.

இல்லையென்றால், பதிப்பு கண்ட காசு வந்ததா, கல்லாப் பெட்டியில் போட்டோமா என்கிற உணர்வு வந்து விடும்.

Geetha Sambasivam said...

நாம் கண்டு பிடித்தவற்றைத் திரு ஜீவி சார் பட்டியலிட்டு விட்டார். :) அருமையான வர்ணனைகளைப் பகிர்ந்தமைக்கு நன்றி.

கரந்தை ஜெயக்குமார் said...

அருமையான வர்ணனைகள்
நன்றி

ஸ்ரீராம். said...

ஜீவி ஸார்...

மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். தவறு என்னுடையதுதான். திருத்தி விட்டேன். நீங்கள் சொலவதுபோல லா ச ரா அப்படியேதான் எழுதி இருக்கிறார்.

இரண்டு முறை தட்டச்சு செய்ததை மறுபடி சோதனை செய்தபிறகே வெளியிட்டேன் என்பதுதான் சோகம்! மறுபடி படிக்கும்போது நான் தட்டச்சு செய்ததால், நான் எழுத நினைத்தது அங்கு இருப்பதாய் மனம் தானாய்ப் படித்து விட்டது போலும்.

ஒரு வார காலமாய் இணையம் மிகவும் படுத்தல்ஸ். நான் தட்டச்சு செய்து 20 வினாடிகளுக்கு அப்புறம்தான் எழுத்துகள் அங்கே தோன்றுகின்றன! சமயங்களில் அதனாலேயே இடையில் வார்த்தைகள் விடுபட்டு விடுகின்றன. ஒரு வார்த்தை முடிந்து அடுத்த வார்த்தை தட்டச்சு செய்யும்போதும் எழுத்துகளுக்கு சம்பந்தமே இல்லாமல் முடிந்து போன வார்த்தையே முதலில் மறுபடியும் தோன்றி அப்புறம்தான் இப்போது தட்டச்சு செய்யும் வார்த்தைகள் உருக் கொள்கின்றன.

இவை எல்லாம் சமாதானமாகாது என்றாலும் தவறை உணர்ந்ததாலேயே இவ்வளவு நீண்ட விளக்கம் என்பதைப் புரிந்து கொண்டிருப்பீர்கள்.

சீனு said...

ஸ்ரீராம் சார் தட்டச்சு செய்யும் போது ஏற்படும் அந்த பிரச்சனை எனக்கும் இருந்தது.. google input tools உபயோகம் செய்யுங்கள் முந்தைய உபத்திரவத்தில் இருந்து தப்பிக்கலாம்

google input tools simply superb :-)

அப்பாதுரை said...

மிச்ச பின்னூட்டத்தைக் காணோமே? இத்தனைக்கு எஸ்ரா பத்தி நல்லாத்தானே எழுதியிருந்தேன்?

கதை மட்டும் படிப்பேன்னு சொன்னா வசனம் மட்டுமா? எல்லாமே சேர்த்தது தானே கதை?

தமிழில் சுஜாதாவுக்கு வெளியே சமீபத்தில் தான் படிக்கத் தொடங்கினேன். தி.ஜா வசனங்களுக்கு வெளியே நிறைய திடுக்கிட வைக்கிறார் என்பேன். இன்னொருவர் அசோகமித்திரன்.

நீங்கள் குறிப்பிட்டிருக்கும் இருவரைப் படித்ததில்லை. ஒருவரை ஏன் படித்தேன் என்றாகிவிட்டது. (தானப்பசு தான் ஸ்ரீராம், பல்லைப் பார்ப்பதற்காக என்னை மன்னிக்க வேண்டுகிறேன்:-)

இராஜராஜேஸ்வரி said...

ரசிக்கவைத்த வர்ணனைப் பகிர்வுகள்..!

Yarlpavanan Kasirajalingam said...

எழுதுபவர்கள்
கருத்தில் கொள்ள வேண்டிய
சிறந்த பகிர்வு
தொடருங்கள்

வை.கோபாலகிருஷ்ணன் said...

//இந்தத் தவறுகள் பதிப்பித்த புத்தகங்களிலேயே இருந்தால் என்ன சொல்வது என்று தெரியவில்லை.. எழுத்தாளன் தன் புத்தகத்தின் ஃபுரூப் ரீடிங்கிலும் கவனமாக இருக்க வேண்டும். பதிப்பகமே ஃபுரூப் ரீடிங்குக்கு ஏற்பாடு செய்யும் தான். இருந்தாலும் அதையும் தாண்டி தன் புத்தகம் தன் எழுத்து அது பிழையில்லாமல் வாசகரிடம் போய்ச் சேர வேண்டும் என்கிற அக்கறை எழுத்தாளனுக்குத் தேவை.//

- திரு ஜீவி ஐயா அவர்கள் சொல்லியுள்ளது


மிகவும் அழகாக அருமையாகச் சொல்லியுள்ளீர்கள், ஐயா.

எழுத்துப் பிழையில்லாமல் எழுதுவதே ஒரு சிறந்த கலை தான்.

நம்மை அறியாமல் ஒரு சிறிய எழுத்துப்பிழை ஏற்பட்டுவிட்டாலும், ஏதோ ஒரு கொலைக்குற்றமே செய்து விட்டது போல என் மனதுக்கு மிகவும் கஷ்டமாகத்தான் உள்ளது.

இதை நான் அடிக்கடி உணர்வது உண்டு. இருப்பினும் என்னையும் அறியாமல் சிலசமயம் எனக்கும் தவறு நேர்வது உண்டு. யாராவது சுட்டிக்காட்டினால் மகிழ்ச்சியுடன் அவற்றை உடனடியாக திருத்திக்கொள்வதும் உண்டு.

தங்களைப்போன்ற [திரு. ஜீவி ஐயா] போன்ற பழுத்த அனுபவசாலிகள், ஆங்காங்கே இது போல கண்களில் தென்படும் எழுத்துப்பிழைகளை, சம்பந்தப்பட்ட பதிவர்களின் கவனத்திற்கு கொண்டு வந்து, திருத்தினால் மிகவும் நல்லது.

எழுத்தில் பிழையுள்ளது என்று அறியாதவர்கள் வேண்டுமானால் ஏதோ பதிவுப்பக்கம் வந்தோமாம், அதை முழுவதும் படித்தோமோ இல்லையோ ஏதேனும் இரண்டு வரி பின்னூட்டம் கொடுத்தோமாம் என்று போவதுண்டு.

சிலர் குறிப்பிட்ட இடத்தினில் எழுத்துப்பிழை உள்ளது என்று நன்கு தெரிந்திருந்தும், அதைச் சுட்டிக்காட்ட விரும்பாமல், நமக்கேன் வம்பு எனச் செல்வதும் உண்டு.

இதனால் இன்று ஆங்காங்கே தமிழ் எழுத்துக்களில் படுகொலைகள் நடந்து வருகின்றன.

தமிழ் எழுத்தினில் தெரிந்தோ தெரியாமலோ தவறு செய்பவர்களும், துணிந்து அதைச் சுட்டிக்காட்டி திருத்தாமல் செல்பவர்களும், தமிழ்மொழிக்கே துரோகம் புரிபவர்கள் என்றுதான் நினைக்க வேண்டியதாக உள்ளது.

இன்றைய பதிவர்களில் எழுத்துபிழை ஏதும் இல்லாமல் மிக அழகாக எழுதுபவர்கள் ஒரு 5% to 10% இருந்தாலே ஆச்சர்யம் தான்.

அவசர அவசரமாக பின்னூட்டம் கொடுக்கும் போதே மூன்று வரிகளில் நான்கு தவறுகளாவது செய்பவர்கள் தான் இன்று பெருகியுள்ளனர் என்பதை நினைக்க வேதனையாகத்தான் உள்ளது.

தங்களுக்கும், ஸ்ரீராம் அவர்களுக்கும் என் பாராட்டுக்கள் + வாழ்த்துகள் + நன்றிகள்.

அன்புடன் கோபு [VGK]

Vignesh Selvam said...

Dear Admin,
You Are Posting Really Great Articles... Keep It Up...We recently have enhanced our website, "Nam Kural"... We want the links of your valuable articles to be posted in our website...

To add "Nam Kural - External Vote Button" to your blog/website. Kindly follow the instructions given here, http://www.namkural.com/static/external-vote-button/

To get more visibility for our users webpage, We promote them through social networking platforms as well. We upload 80% - 100% of daily links of NamKural in social networking websites such as,
1. Facebook: https://www.facebook.com/namkural
2. Google+: https://plus.google.com/113494682651685644251
3. LinkedIn: https://www.linkedin.com/company/namkural

தாங்கள் எங்கள் வலைபக்கத்திலும் சேர்ந்து தங்களின் வலைப்பக்கங்களை மேலும் பல இணைய பயனாளிகளுக்கு கொண்டு செல்லுங்கள். எங்கள் வலை முகவரி,http://www.namkural.com/

நன்றிகள் பல...
நம் குரல்

G.M Balasubramaniam said...

பல எழுத்தாளர்களுடைய படைப்புகளை வாசித்ததுண்டு. சில ரசிக்க வைக்கும். சில ஏன்தான் துவங்கினோமோ என்று இருக்கும் ஆனால் எப்பேற்பட்ட குப்பையாயினும் முழுதும் வாசித்து விடும் வழக்கம் உண்டு. படித்தவற்றில் சில பசுமையாய்ப் பதிந்து விடும் இருந்தாலும் எந்த எழுத்தும் நினைவுக்குக் கொண்டு வரும் வரை நிலைத்ததில்லை. சரளமான நடையால் கல்கியின் எழுத்துக்கள் அந்தக் காலத்தில் கவர்ந்திருக்கின்றன. அது ஏனோ தெரியாது ல.சா. ராமாமிருதத்தின் எழுத்துக்கள் abstract ஆகத் தோன்றும். வேறொரு பின்னூட்டத்தில் வாசகர்கள் ஆழ்ந்து படிப்பதில்லையோ என்று ஐயம் எழுப்பி இருந்தேன். அதை இத்தனை சீக்கிரம் மறுபரிசீலனை செய்ய வேண்டி வரும் என்று நினைக்கவில்லை. வாசகர்களில் நக்கீரர்களும் உண்டு.

‘தளிர்’ சுரேஷ் said...

பெரிய எழுத்தாளர்களின் வர்ணணைகளை ரசிக்க வைத்தமைக்கு நன்றி!

மனோ சாமிநாதன் said...

அனைத்து வர்ணனைகளும் அருமை! இருந்தாலும் உன்ர்வுகளை வர்ண ஜாலமாக அள்ளித்தெறிப்பதில் லா.சா.ரா தனித்துத் தெரிகிறார்

வருண் said...

****தமிழ் எழுத்தினில் தெரிந்தோ தெரியாமலோ தவறு செய்பவர்களும், துணிந்து அதைச் சுட்டிக்காட்டி திருத்தாமல் செல்பவர்களும், தமிழ்மொழிக்கே துரோகம் புரிபவர்கள் என்றுதான் நினைக்க வேண்டியதாக உள்ளது.

இன்றைய பதிவர்களில் எழுத்துபிழை ஏதும் இல்லாமல் மிக அழகாக எழுதுபவர்கள் ஒரு 5% to 10% இருந்தாலே ஆச்சர்யம் தான். ***

சார்: வலைபதிவில் எழுதுவது பொதுவாக "முதல் ட்ராஃப்ட்" போலதான் என்பது என் புரிதல். பிரபல எழுத்தாளர்கள் வலை தளங்களிலும் எழுத்துப்பிழையைப் பார்க்கலாம்.

மற்றபடி உங்க கோபமும், ஆதங்கமும் தங்கள் தமிழ் மொழிப்பற்றின் வெளிப்பாடே என்பதை சரியாகப் புரிந்து கொள்கிறேன்.

கோமதி அரசு said...

மோதிவரும் மேக அலைகளை ஒதுக்கி ஒதுக்கி விட்டு வெளிக்கிளம்பி நீந்திக் கொண்டு இருக்கும் நிலாவின் ஒளி மரக்கிளை இடுக்குகள் வழியே நழுவிச் சாலை எங்கும் //

மரக்கிளை வழியாக கசியும் நிலாவின் ஒளியை நானும் ரசிப்பேன்.

ஏதோ இவ்வுலகத்தையே, கோளத்தையே சுழற்றி எறிவதுபோல் அது எழும்பிய வேகத்தில் நீல மெத்தையில் வைர நகை உருண்டாற்போல், அதன் வெண்மை வானில் ஜ்வலித்தது. நான் பரவசமானேன். என் கைகள் என்னையறியாமல் வானை ஆலிங்கனம் செய்ய விரிந்தன//

மேகத்தில் இது போன்ற வெண்மை திட்டுகளை ரசிப்பது உணடு. அருமையான வர்ணனைகள்

பகல் சொற்களின் விளைநிலம், இரவு சொற்களற்ற தியானவெளி. ஒரு மாலைக்கு எவ்வளவு பேசுகிறோம், எவ்வளவு சொற்கள் உதட்டிலிருந்து உதிர்ந்துபோகின்றன, பேச்சு துவங்கி பேச்சு ஓயும் வரை பகலெல்லாம் வீடு உருமாறிக் கொண்டேயிருக்கிறது.//

உண்மை, பேசும் பேச்சால் வீடு உருமாறுவது உண்மை.

மூவர் எழுத்துகளும் மிக அருமை.
பகிர்வுக்கு நன்றி.

ஜீவி said...

//அதை இத்தனை சீக்கிரம் மறுபரிசீலனை செய்ய வேண்டி வரும் என்று நினைக்கவில்லை. வாசகர்களில் நக்கீரர்களும் உண்டு.//

அன்புள்ள ஜிஎம்பீ சார்,

இந்த என் பின்னூட்டத்தை எழுதி முடித்த பொழுது நானும் உங்களைத் தான் நினைத்துக் கொண்டேன். நீங்களே வந்து இந்த மறுமொழியைக் கொடுத்ததில் மனசு நிறைந்தது.

You are GREAT GMB Sir!

ஜீவி said...

//உதாரணமாக எஸ்ரா எழுதி இருப்பது கதை அல்ல. அது அனுபவம். மழை பற்றிய அனுபவம். மனதில் நிற்கிறது. //

எஸ்ராவின் எழுத்து எப்பொழுதும் அவர் பெறும் உணர்வில் எழுவது. பல சமயங்களில் இன்னும் திறம்பட அவர் எழுத்தை கையாண்டிருக்கலா மோ என்று தோன்றும்.

உதாரணத்திற்கு இந்த மழை பற்றியே எடுத்துக் கொள்ளுங்களேன்.

//வெளியே மழை பெய்துகொண்டிருந்த சப்தம் கேட்டது. மின்விசிறி சுழலும் ஓசைதான் அப்படி இருக்கிறதா அல்லது மழைதானா என்று உறுதியாகத் தெரியவில்லை. ஜன்னல்கள் அடைத்து சாத்தப் பட்டிருந்தன.

மெல்லிய இரவு விளக்கின் வெளிச்சம் சுவர்களில் ஊர்ந்து கொண்ருந்தது.//

வெளியே மழை பெய்து கொண்டிருந்தது போலும். மின்விசிறி சுழலும் ஓசை தான் அப்படி இருக்கிறதா அல்லது மழை தானா என்று உறுதியாகத் தெரியவில்லை.
ஜன்னல்கள் அடைத்து சாத்தப் பட்டிருந்தன.

மெல்லிய இரவு விளக்கின் வெளிச்சம் சுவரில் படிந்திருந்தது.

-- பின் வரியிலே வெளியே மழைதான் பெய்கிறதா என்று அவருக்கே நிச்சயப்படாத பொழுது
முதல் வரியில் மழை தான் பெய்து கொண்டிருப்பதாக அறுதியிட்டுச் சொல்லியிருக்கக் கூடாது.

வெளிச்சத்தில் ஊர்தலுக்கு என்ன இருக்கிறது?.. சுவரில் அது படிதலே அந்த இரவு வேளைக்கு அழகாக இருக்கும்.

அது சரி, எம்.வி.வி.யின் 'மழை' கதை படித்திருக்கிறீர்களோ?.. சென்னையில் அவர் தி.ஜானகிராமன் வீட்டு மாடியில் சில நாட்கள் தங்கியிருக்க நேர்ந்த பொழுது,
தி.ஜா.வின் விருப்பப்படி எழுதி,
தி.ஜா.விடமே கொடுத்து 'கல்கி'யில் பிரசுரமான கதை!

அந்தக் கதையில் என்னமாய் 'மழை' பெய்யும் உணர்வை நாமே நேரிடையாக அனுப்பவிக்கிற மாதிரி எழுதியிருப்பார்?..

ஹூம்.. எப்படியிருந்த தமிழ் கதையுலகம்! நெட்டுயுர்ப்பு தான் மிஞ்சுகிறது!

ஜீவி said...

கொசுறாய் உங்கள் ஆழ்ந்த ரசனைக்காய் 'மழை' பற்றிய என் கவிதை ஒன்று.


மழை மங்கை

சடசடவென சப்தம் கேட்டு
சந்தோஷம் தாங்கவில்லை
எவ்வளவு காலமாச்சு என்கின்ற
ஏக்கம் மனசில் முட்டி மோதியது
அந்தி மாலை பொன்னுருக்கு வெயிலில்
மங்கையவளுக்கு மஞ்சள் கொடுத்து வரவேற்பு

திண்ணைக் கம்பியூடே பார்க்கையில்
கண் நிறைத்து கன்னியவள் களிப்பாய்
கூத்தாடியது நிறைவாய்த் தெரிந்தது
பாளம் பாளமாய் நில வெடிப்பு பார்த்து
பரிதவித்த வானத்துக் கண்ணீரோவென
நினைப்பும் வந்து மலைப்பு ஏற்பட்டது

முதலில் சாய்ந்து சன்னமாய்
பின் நெட்டக்குத்தலாய் நேராய்
தாரையாய் தளிராட்டமாய்
ஒயிலாய் ஓரத்தில் ஒசிந்து
மயிலாய் நர்த்தனமிட்டது
பார்க்கப் பார்க்கப் பரவசம்
நோக்க நோக்க களியாட்டம்


சோவென்று பாடிய பாட்டில்
சொகுசாய் ஆடிய ஆட்டத்தில்
திடும்மென ஒரு மாறுதல்
ஒதுங்கி ஒதுங்கி ஓரமிட்டதில்
பதுங்கிய பரிதாபம் புரிந்தது
வீசி வீசியவள் விரவிச் சிதறி
கூசிக் குன்றியது தெரிந்தது
உற்றுப் பார்த்ததில்
உண்மை உறைத்தது


அகல அகல கைவிரித்தவளை
அள்ளிப் போக ஆலாய்ப் பறந்த
காமுகன் காற்றின் குறும்பு தான்
பாடாய்ப் படுத்தியது இவளை
விடாது பின்னாடி துறத்தினான்
மேலிருந்து கீழ் என்றதனால்
மேலாடை விசிறித் தடுமாறினாள்
இடது வலது என்று மாறி மாறி
இழுத்த இழுப்புக் கெல்லாம்
இம்சை பொறுக்காது இழுபட்டாள்


படபடவென்று இடி இடித்து
பளிச் சென்று கீற்றாய் வானில்
பளீரிட்டது மின்னல் வெளிச்சம்
தடதடவென்று சீறி சிடுசிடுத்ததில்
தளிர்கொடி தப்பித்தாள் பாவம்
ஒலித்த ஒலியிலும் ஒளியிலும்
காணாமல் போனது காற்று

இப்பொழுது நிம்மதியாய்
வானத்திற்கும் பூமிக்கும்
நீள நீள கம்பி நட்டு நடுவில்
தன்னில் தானே கரைந்து
நிச்சலனமின்றி நீராடல்
தேரோடும் வீதியிலே
தெய்வமாய் வந்தாளென்று
ஊரெங்கும் பூக்கோலம்
தெருவெங்கும் மாக்கோலம்

வை.கோபாலகிருஷ்ணன் said...

அன்புள்ள ஜீவி ஐயா,

நமஸ்காரம். வணக்கம்.

தாங்கள் கவிதையும் எழுதுவீர்கள் என்பதை இன்று தான் அறிந்து கொண்டேன்.

மிக மிக ரஸித்துப்படித்தேன். மீண்டும் மீண்டும் பலமுறை படித்து ரஸித்து மகிழ்ந்தேன். கவிதை மழையில் நனைந்தே போய்விட்டேன்.

யார் யாரோ கவிதை என்ற பெயரில் எதை எதையோ கிறுக்கி வருவதை காண சகிக்காமல் இருக்கும் வரண்ட வேளையில் இந்த மழை எனக்கு மிகவும் இதமாக உள்ளது.

பகிர்வுக்கு நன்றிகள், ஐயா.

வை.கோபாலகிருஷ்ணன் said...

//மேலிருந்து கீழ் என்றதனால்
மேலாடை விசிறித் தடுமாறினாள்
இடது வலது என்று மாறி மாறி
இழுத்த இழுப்புக் கெல்லாம்
இம்சை பொறுக்காது இழுபட்டாள்//

அடடா, அட்டகாசம் ! அமர்க்களம் !!

>>>>>

வை.கோபாலகிருஷ்ணன் said...

//இப்பொழுது நிம்மதியாய்
வானத்திற்கும் பூமிக்கும்
நீள நீள கம்பி நட்டு நடுவில்
தன்னில் தானே கரைந்து
நிச்சலனமின்றி நீராடல்//


வானத்திற்கும் பூமிக்கும் நீள நீள கம்பி நட்டு ;))))))

அருமையான கவிதை மழையில் என்னையும் அப்படியே கரைய வைத்து விட்டீர்கள்.

மிகவும் சந்தோஷமாக உள்ளது. ;)

ஜீவி said...

தங்கள் ரசனையைப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி, கோபு சார்!

துரை சாரைத் தான் காணோம்!

ஜீவி said...

அன்பு ஸ்ரீராம்!

இங்கு இப்போது பகல் 2:50 என்றால் அங்கு நட்ட நடு நிசி. 00:18 மணி.

நீங்கள் அங்கு அயர்ந்து தூங்கிக் கொண்டிருக்கையில், உங்கள் ப்ளாக் வந்து பின்னூட்டம் போடுவது என்பது பூட்டில்லா வீட்டில் உரிமையாளர் அறியாமல் உள்ளே நுழைவது போலிருக்கு.

மாடரேஷனுக்கு பின்னூட்டங்களை உட்படுத்தினால், சுடும் இந்த தன்னுணர்வு இல்லாமல் இருக்கும்.
அது உங்கள் அனுமதியுடன் உள்ளே வந்த மாதிரி இருக்கும்.

saamaaniyan saam said...

வர்ணனைகள் குறித்த உங்கள் வர்ணனைகள் அருமை !

ஜே கே சில குறிப்புகள் பற்றி...

தத்வார்த்தமான அவரது எழுத்துகளில் வர்ணனை கிடையாதுதான் என்றாலும் அவரது வாழ்வியல் தத்துவம் ஜாதி,மத, நாடு எல்லைகளையெல்லாம் தாண்டியது ! " காதலுக்காக காதலையே விட்டுக்கொடுக்கும் " அவரது தத்துவம் மகத்துவமானது.

தாங்கள் அவரது ஆங்கில மூலத்தை படித்தீர்களா அல்லது தமிழாக்கமா என்று தெரியவில்லை. தமிழாக்கம் என்றால் சில பிழைகள் உள்ளன. அவரது Freedom from known தமிழாக்கத்தை எடுத்துக்கொள்ளுங்கள்... " உண்மையிலிருந்து விடுதலை " என மொழி பெயர்க்கிறார்கள். அது " அறிந்தவைகளிலிருந்து விடுதலை "என இருக்க வேண்டும் !

நன்றி
சாமானியன்
saamaaniyan.blogspot.fr

எனது புதிய பதிவு : ரெளத்திரம் பழகு !

http://saamaaniyan.blogspot.fr/2014/07/blog-post_22.html

( தங்களுக்கு நேரமிருப்பின் படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை பதியுங்கள்.நன்றி )

Geetha Sambasivam said...

இங்கே அடிக்கும் ஆளைத் தூக்கும் காற்றில் மழைச்சரம் இப்படித் தான் நெளிந்து வளைந்து போராடும். காற்றுக்கும் அதற்கும் ஒரு போட்டியே நடைபெறும். பல சமயங்களிலும் வாயுவுக்குத் தான் வெற்றி. எப்போதாவது வருணன்! :)))) ஜீவி சாரின் கவிதையைப் படித்ததும் இங்கே பால்கனிக் கம்பி வழியாக மழையைப் பார்க்கும்போது ஏற்படும் உணர்வுகள் இப்போதும் ஏற்பட்டன. மழையில் நனைந்தேன்.

Geetha Sambasivam said...

//தங்களைப்போன்ற [திரு. ஜீவி ஐயா] போன்ற பழுத்த அனுபவசாலிகள், ஆங்காங்கே இது போல கண்களில் தென்படும் எழுத்துப்பிழைகளை, சம்பந்தப்பட்ட பதிவர்களின் கவனத்திற்கு கொண்டு வந்து, திருத்தினால் மிகவும் நல்லது.//

பொதுவாகவே நான் எழுத்துப் பிழைகளைப் பார்த்தால் தனி மடலிலாவது கூப்பிட்டுச் சொல்லி விடுவது வழக்கம். ஆனால் இப்போது என் கீ போர்டில் தட்டச்சுகையில் குறிப்பிட்ட சில எழுத்துக்கள் சரியாக விழுவதில்லை. இரண்டு, மூன்றுதரம் அழுத்த வேண்டி உள்ளது. வேகமாய் அழுத்தினால் நிறைய எழுத்துக்கள் ஓடி வருகின்றன. :)))) கீ போர்டுக்கும் ஓய்வு கொடுக்கணுமோ என்னமோ! :)))))

G.M Balasubramaniam said...


பொதுவாக ஒருவரின் பதிவைப் படித்துக் கருத்திட்டபிறகு இன்னும் ஒரு முறை ஒரு நாள் கழித்து வந்து அந்தக் கருத்து ஏதாவது reaction ஏற்படுத்தி இருக்கிறதா என்று பார்ப்பது வழக்கம். இன்று வழக்கத்துக்கு மாறாக இன்னும் ஒருமுறை வந்தது நல்லதாய்ப் போய்விட்டது. இல்லையென்றால் ஜீவியின் இந்த அருமையான மழைக் கவிதையை ரசித்திருக்க முடியாது. இதில் இருந்து என்ன தெரிகிறது.?

Thulasidharan V Thillaiakathu said...

மிக அருமையான வர்ண்னைகள்...அதுவும் எஸ்ரா மிக அழகாகத் தன் அனுபவங்களை எழுதுவார்....

சார் நீங்க சொல்லியிருக்கும் தட்டச்சு பிரச்சினை எங்களு ரொம்பவே இருந்துச்சு......நிறைய அடிச்சுருப்போம்...கடைசில பார்த்தா....பாத் காணாமப் போயிருக்கும்,,,,வரதுக்கே ரொம்ம்ப நேரம் எடுக்கும்.....பப்ளிஷ் பண்ண முடியாது.....தொல்லை தாங்கலை அதனாலதான் இங்கும் தாமதம்....பப்ளிஷ் ஆக பிரம்மப்யத்தனம்.......

தாம்தமாக வந்ததது நல்லது...நடப்பது எல்லாமே நல்லதற்கே...ஆமாங்க ஜீவி சாரின் அருமையான மழைக் கவிதையை வாசிக்க முடிந்ததே.....இப்பொழுது நிம்மதியாய்
வானத்திற்கும் பூமிக்கும்
நீள நீள கம்பி நட்டு நடுவில்
தன்னில் தானே கரைந்து
நிச்சலனமின்றி நீராடல்
தேரோடும் வீதியிலே
தெய்வமாய் வந்தாளென்று
ஊரெங்கும் பூக்கோலம்
தெருவெங்கும் மாக்கோலம்// மிகவும் ரசித்தோம்!

வை.கோபாலகிருஷ்ணன் said...
This comment has been removed by the author.
வை.கோபாலகிருஷ்ணன் said...

//Geetha Sambasivam said...
*****தங்களைப்போன்ற [திரு. ஜீவி ஐயா போன்ற] பழுத்த அனுபவசாலிகள், ஆங்காங்கே இது போல கண்களில் தென்படும் எழுத்துப்பிழைகளை, சம்பந்தப்பட்ட பதிவர்களின் கவனத்திற்கு கொண்டு வந்து, திருத்தினால் மிகவும் நல்லது.*****

//பொதுவாகவே நான் எழுத்துப் பிழைகளைப் பார்த்தால் தனி மடலிலாவது கூப்பிட்டுச் சொல்லி விடுவது வழக்கம். //

சந்தோஷம். மிக்க நன்றி.

//ஆனால் இப்போது என் கீ போர்டில் தட்டச்சுகையில் குறிப்பிட்ட சில எழுத்துக்கள் சரியாக விழுவதில்லை. இரண்டு, மூன்றுதரம் அழுத்த வேண்டி உள்ளது. வேகமாய் அழுத்தினால் நிறைய எழுத்துக்கள் ஓடி வருகின்றன. :)))) கீ போர்டுக்கும் ஓய்வு கொடுக்கணுமோ என்னமோ! :)))))//

அன்புடையீர், வணக்கம்.

புத்தம் புதிய கணினியாக இருப்பினும் இந்தக் கீ போர்டு பிரச்சனை எனக்கும் அடிக்கடி ஏற்பட்டு வருகிறது.

அதற்குக்காரணம் ஒவ்வொரு கீக்கும் இடையே சேர்ந்து வரும் தூசிகளும் அழுக்குகளும் மட்டுமே.

தினமும் கீ போர்டை ஒரு முறை துணியால் நன்கு துடையுங்கோ.

வாரம் ஒருமுறை அதைத் தலைகுப்பறக் கவிழ்த்து படுக்க வைத்து, நன்றாகத் தட்டுங்கோ. பின்புறம் நன்றாக தட்டிக்கொடுங்கோ. அப்போது புழுதிகள் + தூசிகள் ஓரளவுக்கு வெளியேறிவிடும்.

அதற்கென தனியாக ஒரு
வேக்கும் க்ளீனர் சின்னதாக உள்ளது. பேட்டரியில் இயங்கக்கூடியது. அதன் நுனியில் ஒரு ப்ரஷ் இருக்கும். அதன் மூலம் இண்டு இடுக்குகளில் உள்ள தூசிகளை உறிஞ்சி எடுத்து விடலாம்.

இதையெல்லாம் செய்தும் பயனில்லை என்றால், அந்தக் கீ போர்டை விட்டெறிந்து விட்டு, மாமாவைக் கடைக்கு அனுப்பி வேறு புதிய கீ போர்டு வாங்கிவரச்சொல்லுங்கோ. ;)))))

பணம் இன்று போகும் .....
நாளை வரும் ............. ;)))))

நமக்கு உயிர் மூச்சாக இன்று விளங்கும் கணினி தான் முக்கியம்.
ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா !

அன்புடன் கோபு

வை.கோபாலகிருஷ்ணன் said...
This comment has been removed by the author.
வை.கோபாலகிருஷ்ணன் said...

பொதுவாகவே தவறில்லாமல் எழுத்துப் பிழைகளற்ற தமிழ் எழுதப் பழகிக் கொள்வது நல்லது.

அதுவும் ஒரு போட்டிக்கு நமது படைப்பை அனுப்புகிறோம் என்றால் ஒருதடவைக்கு இருதடவை சரிபார்த்து அனுப்புவது இன்னும் நல்லது.

பிழையில்லாமல் எழுதினால் தான் நாம் எழுதி அனுப்புவதற்கும் மதிப்பு கூடும் என்பது பத்திரிகை அனுபவத்தில் நான் கற்றுக் கொண்ட பாடம்.

http://gopu1949.blogspot.in/2014/07/blog-post.html

இந்த என் சிறுகதை விமர்சனப் போட்டிக்கு வந்திருக்கும் கட்டுரைகளில் கூட எவ்வளவு எழுத்துப் பிழைகள் மலிந்திருக்கின்றன என்பதை சொல்லாமல் என்னால் இருக்க முடியவில்லை.

விமர்சனதாரர்கள் மெயிலில் அனுப்பும் கட்டுரைகளை அப்படியே நான் பிரசுரிக்க வேண்டியிருப்பதால் நான் கூட அந்த எழுத்துப் பிழைகளை/தவறுகளைத் திருத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

பிழைகளுடன் பரிசுக் கட்டுரைகளை பிரசுரிக்க வேண்டியிருக்கிறேதே என்று வருத்தமாகவும் இருக்கிறது.

அதனால் இறுதியில் பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்படும் விமர்சனங்களில் மட்டும், அதுவும் என் கண்களில் பட்டு உறுத்தும் தவறுகளை மட்டும், ஆங்காங்கே திருத்தி அதன் மேல் மஞ்சள் பூசி சம்பந்தப்பட்டவர்களுக்கு மட்டுமாவது தெரியட்டும் என நான் காட்டி விடுவதும் உண்டு.

அவசரத்தில் எழுதும் பொழுது பிழைகள் வருவது சகஜம் தான். அதற்காக எழுதியதை இரண்டு மூன்று தரம் படித்து எல்லாம் சரியாக இருக்கிறதா என்று சரிபார்ப்பது என் வழக்கம்.

அதே மாதிரி என்னை மீறி ஏற்படும் எழுத்துப் பிழைகள் பற்றி யாராவது எடுத்துச் சொன்னால் சந்தோஷத்துடன் 'நல்ல வேளை இந்த மட்டும் சொன்னார்களே' என்று ஏற்றுக் கொண்டு உடனே அந்தத் தவறுகளைத் திருத்தி விடுவேன்.

அந்த என் வழக்கத்தை நீங்களும் பின்பற்றினால் எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கும். உங்களுக்கும் மிகவும் நிம்மதியாக இருக்கும் என்று என் அனுபவத்தில் நான் உணர்ந்ததை உங்களுக்கும் மற்ற அனைவருக்கும் சொல்ல ஆசைப்படுகிறேன்.

ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம் !

அன்புடன் கோபு

வருண் said...

***பொதுவாகவே நான் எழுத்துப் பிழைகளைப் பார்த்தால் தனி மடலிலாவது கூப்பிட்டுச் சொல்லி விடுவது வழக்கம். ஆனால் இப்போது என் கீ போர்டில் தட்டச்சுகையில் குறிப்பிட்ட சில எழுத்துக்கள் சரியாக விழுவதில்லை. இரண்டு, மூன்றுதரம் அழுத்த வேண்டி உள்ளது. வேகமாய் அழுத்தினால் நிறைய எழுத்துக்கள் ஓடி வருகின்றன. :)))) கீ போர்டுக்கும் ஓய்வு கொடுக்கணுமோ என்னமோ! :))))) ***

Beautiful excuse! I am going to "use" this everywhere. Let me make sure to "quote" you properly to give full credit to you! LOL

Geetha Sambasivam said...

@வருண், நான் சமாதானமெல்லாம் சொல்லவில்லை. உண்மையில் என் லாப்டாப்பில் தட்டச்சுகையில் ஏற்படுவதையே சொல்கிறேன். இதனால் ஜிமெயில் பாஸ்வேர்ட் போடுகையிலும் கணினி பாஸ்வேர்ட் போடும்போதும் பல சமயம் பாஸ்வேர்ட் சரியில்லை என வந்து பின்னர் திறக்கவே திறக்காது. ஜிமெயில் வார்னிங் மெசேஜ் அனுப்பும். நீங்கள் நம்பவில்லை என்றால் அது உங்கள் விருப்பம். அதற்காக என்னால் பொய் சொல்ல முடியாது. இன்னும் என் நட்பு வட்டத்தில் ஓரிருவருக்கும் இந்தப் பிரச்னை இருப்பதாகத் தெரியவும் வந்தது.

வருண் said...

GS: உங்கள் உண்மையான நிலைப்பாட்டை அழகாகப் புரிந்துகொண்டேன். I was only "kidding". I must admit it was a "bad joke" at this time as you were describing a "real glitch" you encountered in a "funny way". I should not have misinterpreted in the name of "joke". My apologies. On a serious note, I would never quote you anywhere as I "promised" :). I completely understand your HONESTY. Take it easy, madam!

வெங்கட் நாகராஜ் said...

அருமையான வர்ணனைகள்.....

கொஞ்சம் தாமதமாக வருவதில் ஒரு சௌகரியம். அற்புதமான ஒரு கவிதை படிக்கக் கிடைத்ததே.......

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!