செவ்வாய், 12 ஏப்ரல், 2016

கேட்டு வாங்கிப் போடும் கதை :: நிமிஷங்கள்... வினாடிகள்..


இந்த வார கேட்டு வாங்கிப் போடும் கதையில் பாலசுப்ரமணியம் ஹேமலதாவின் (பாஹே) படைப்பு.


ஒருவகையில் இதைக் கேட்காமலேயே எடுத்துப் போடுகிறேன்!


பாஹே என் தந்தை.  அந்த வகையில் ஒரு பதிவர் என்றில்லாமல் பதிவரின் தந்தை!  ஆனால் எங்கள் ப்ளாக்கில் அவர் எழுத்தும் வந்திருக்கிறது.


அல்சைமரால் பாதிக்கப் பட்டு படுக்கையில் இருக்கும் பாஹேவிடம் இந்தக் கதை பற்றிக் கேட்டபோது,

"அந்தக் காலத்தில் சொந்த அனுபவங்கள், அலுவலகத்தில் பார்த்த, கேட்ட அனுபவங்களைக் கதையாக்கி, பத்திரிகைகளுக்கு அனுப்பிக் கொண்டிருந்தேன்.  அதுவும் பத்திரிகைகளில் வெளியானது.  அவ்வளவுதான் நினைவிருக்கிறது"  என்றார்.





இந்தக் கதை சமீபத்தில் வெளியாகி இருக்கும் அவரின் சிறுகதைத் தொகுப்பான 'இவனும் அவனும்' தொகுப்பில் இருக்கிறது.  இந்தக் கதை அப்போது 60 களில் ஆனந்த விகடன் பத்திரிகையில் வெளி வந்ததாய் நினைவு.  அதுவும் ஏதோ சிறுகதைப் போட்டியில் இரண்டாம் பரிசு பெற்றதாய் நினைவு.  (அது இந்தக் கதையா, நாலணா என்கிற சிறுகதையா என்று நினைவில்லை.  அவரைக் கேட்டால் அவருக்கும் சொல்லத் தெரியவில்லை)   அப்போது அவர் 'சுபாஷ் சந்திரன்', ' பெரும்பண்ணையூரான்' போன்ற பெயர்களில் எழுதிக் கொண்டிருந்தார்.


இனி அவர் படைப்பு.

==============================
===============================
நிமிஷங்கள்.... வினாடிகள்...

பாஹே

பத்து மணிக்குள் அவர் ஆஸ்பத்திரியில் இருக்க வேண்டும்.


காஞ்சீபுரம் ஹைரோடிலுள்ள வீட்டை விட்டுக் கிளம்பியதும் முனிசிபல் பஸ் ஸ்டாண்ட், பழைய ஆஸ்பத்திரி, மணிக்கூண்டு... பிராமத் தெருவில் நுழைந்து, ஜி எஸ் டி சாலையைக் குறுக்காகக் கடந்தால் இதோ வேதாசலம் நகர்... கொஞ்சம் எட்டிச் சென்றால் திருக்கழுக்குன்றம் சாலைத் திருப்பம்.  மேலும் கொஞ்சம் எட்டிப் போனால் ராஜேஸ்வரி ஹைஸ்கூல்.  அடுத்து வேதாசல முதலியார் பங்களா, அப்புறம் அப்பாடா, ஆஸ்பத்திரி வந்து விடும்.


ராமசாமி இன்னும் முனிசிபல் பஸ் ஸ்டாண்டுக்கே வரவில்லை.  அதற்குள் மனோவேகத்தில் இடைப்படும் தூரத்தை அளந்து பார்த்து விட்டார்.  அதோ மணிக் கூண்டின் உச்சி...  அட, ஒன்பதரை மணியா?  இன்னும் அரை மணி நேரத்திற்குள் அம்மாந்தூரம் போய்விட முடியுமா?


ஓட்டமும் நடையுமாக விரைந்து கொண்டிருக்கிறார் ராமசாமி...


ஏப்ரல் மாதத்து வெய்யில் 'இன்டர்நேஷனல்' அந்தஸ்துக்கேற்ப ஏகச் சூடு.  சட்டைக்கார் பக்கம் பிசுபிசுக்கிறது.  நெற்றி மேட்டில் சுரீரென்கிறது.  

இடக்கையை அடிக்கொருதரம் மேலுயர்த்தி இரு கண்களுக்கும் நேராகப் புருவத்தை ஒட்டினாற்போல அணை போட்டு வெய்யில் கண்களைக் குத்தாமல் செய்து கொண்டு ஓடுகிறார்.   வழக்கால் செருப்பு காதறுந்து இரண்டு நாட்களாகி விட்டது என்பதைச் சற்றைக்கொரு தரம் நினைவூட்டிக் கொண்டிருக்கிறது.


பாழாய்ப்போன ஆஸ்பத்திரியை பக்கத்திலா கட்டி வைத்திருக்கிறார்கள்?  திருமணிக்குக் கிட்டத்தட்ட போயாக வேண்டுமே...பஸ்ஸிலோ, வண்டியிலோ தினச்செலவுக்கு கட்டி வராத சங்கதி... நடை, ஓட்டம் - உடம்புக்கு அதுதான் நல்லதாமே?


தட்டுச் சுற்றான இடைவேட்டி அடிக்கடி தடுக்கிறது.  ஒரு கையால் அதைப் பற்றிக்கொண்டு, இடக்கையில் சிற்றுண்டிப் பொட்டலத்துடன்; அந்தக் கையை அடிக்கொரு தரம் மேலுயர்த்தி கண்களுக்கு மேல் 'மறைப்பு' கட்டிக் கொண்டு விரைகிறார்.


ஒன்றன் பின் ஒன்றாகக் கார்கள் அவரைக் கடந்து செல்கின்றன.  


ரகம் ரகமான கார்கள்.  பெரும்பான்மை உல்லாசப் பயணம் போகிறவர்கள் என்று தெரிகிறது.  மகாபலிபுரமோ, வேடந்தாங்கலோ... உதட்டுச் சிவப்பு, வெள்ளை முகம், நீலக்கண்கள், தலையிலே குட்டைத்துணி.  'ப்ளீடிங் மெட்ராஸ்' பெரிய பெரிய கட்டடங்களுடன் சிவக்கிறது.  உடலைத் துணியும், மனசைப் போலித்தனமும் போல கண்களையும் பார்த்து விடக் கூடாத ஜாக்கிரதையை கூலிங் கிளாஸ் கவனித்துக் கொள்கின்றன.  எந்த வயசுப் பெண்ணையும் ஜோராக வெறித்துப் பார்க்கலாம். ஆறு ஏழு பேர்கள் உட்கார இடமிருக்கும் ஒவ்வொரு காரிலும் ஒருவர் அல்லது இருவர்தான் இருக்கிறார்கள்.  நடந்து போகிறவர்களுக்கு இந்தக் கார்க்காரர்கள் கொஞ்ச தூரம் 'லிப்ட்' கொடுத்தால் குறைந்தா போய்விடுவார்கள்?  நம்மிடம் மட்டும் கார் இருந்தால் தினமும் கார் நிறைய ஏற்றிப் போக மாட்டோமா...?


ராமசாமிக்கு நடையின் எரிச்சல், கார்க்காரர்களுக்கு பிடிசாபம் கொடுக்கிறது.  இதோ திருமலை டாக்கீஸ் வந்தாயிற்று.  அது என்ன படம், புது போஸ்டர் மாதிரி... என்ன சனியனாக இருந்தால் என்ன... தவறாது படம் பார்ப்பது என்னவோ பாழாகிறது மாதிரி...


"மணி ஒன்பது நாற்பது டோய்" - இரண்டு மாணவர்கள் எதிரே ஓடுகிறார்கள்.  நெற்றியிலிருந்து வியர்வை கன்னத்தில் வழிகிறது.  


அதைத்துடைக்க வேஷ்டியைப் பற்றியிருந்த வலக்கை மேலுயர அதே கணத்தில் 'டர்' என்ற கிழிசல் ஒலி.... முந்தாநாள் காலைக் கீழ்பக்கம் கிழிந்ததே வேஷ்டி, அந்தக் கிழிசல் இன்னும் மேலே உயர்ந்து விட்டது இப்போது...  இது வேறு சனியன்... குனிந்து இரு முனைகளையும் இணைத்து முடித்து மேலும் கிழியாமல் தடுப்புப் போட்டு விட்டு, வேகமாக ஓடுகிறார்...


எதிரே ஒரு லாரி வேகமாக வருகிறது.  பின்னால் ஜட்கா வண்டிக்காரன் ஆர்ப்பாட்டமாகக் கத்திக்கொண்டு குதிரையை விரட்டுகிறான். 


மணிக் கூண்டிலிருந்து ஆஸ்பத்திரிக்கு ஆளுக்கு பதினைந்து பைசா கட்டணம் அவனுக்கு.  நால்வர்தான் ஏறமுடியும் என்றால் கூட இருவரை உள்ளே திணித்துக் கொண்டு அதனால் கிடைக்கக் கூடிய அதிகப்படியான கட்டணம் பற்றிய ஆனந்தக் களிப்பு அவனுக்கு.


ஏதோ இன்கம் டாக்ஸ் ஏமாற்றும் லட்ச ரூபாய் நட்சத்திரத்தை விட அதிக சம்பாத்தியம் வந்து விட்டது போல மயக்கம்...  முன்னால் போகும் ஜட்காவை 'சைடு' வாங்குகிறான்.... சாட்டைக்குச்சி சகடைக்கால் இடுக்கில் நுழைய 'கடகட' சத்தம் குதிரை மருண்டு மேலும் பாய்ந்து ஓடுகிறது.  வண்டி ஊஞ்சல் போல அந்த வேகத்தில் அப்படியும் இப்படியும் ஆட, 'ஹேய்... ஹேய்.."..  வண்டிக்குள் சிரிப்பொலி.  தன் சக பிரயாணிகளை பின்னால் விட்டு விட்டு இவர்கள் முன்னால் வந்து விட்டார்கள் அல்லவா...  அந்த வெற்றிக்களிப்பு...


இவர்களால் இவ்வளவுதான் முடிகிறது.  அந்த அளவுக்குச் சிரித்துக் கொள்கிறார்கள்...  அவர்கள் வண்டியைப் பின் தள்ளி விட்டு ஒரு ஸ்டேட் டிரான்ஸ்போர்ட் பஸ் விரைகிறது.  அதைத் தொடர்ந்து, அதையும் முந்திக் கொண்டு ஒரு அம்பாசடர் சறுக்கிக் கொண்டு விரைகிறது.  "ச்சே.. எல்லோருமே அவசரப்படுகிறார்கள்".  வேகம், வேகம், அசுர வேகம், ஐம்பது வயசுக்குள் ஐநூறு வருஷங்களுக்கானதைச் செய்து விடுவது போல... வாழ்க்கை என்பது சிலருக்குப் பல மைல்கள்.. சிலருக்குச் சில கஜங்கள்...  அதுவே பலருக்குப் பல வருஷங்கள்... வினாடிகள், நிமிஷங்கள்.  அப்பப்பா எவ்வளவு முக்கியத்துவம் இவற்றுக்கும்.  காந்தி 100 வருஷம் வாழ்வேன் என்றாராமே, முடிந்ததோ?  பாரதி என்ன கேட்டார்?  "நூறு வயது "...  வாழ்ந்தது முப்பத்தெட்டு வயதுதானே...


இதோ வேதாசலம் 'ஆர்ச்' வந்து விட்டது.  மணி ரொம்ப ஆகியிருக்குமோ...?


சாப்பாடு என்று பார்த்தால் இப்படித்தான் நேரம் ஆகி விடுகிறது.  காலையில் என்னதான் சீக்கிரமாக எழுந்தாலும், சமையல் முடிந்து கிளம்பி உரிய நேரத்துக்குள் ஒரு நாளாவது போக முடியவில்லையே?  தினமும் இந்த அவசரம்தான், ஓட்டம்தான்.  


பாவம் மீனா,  அவள்தான் என்ன செய்வாள்?  சாப்பிடாமல்தான் போவோம் என்றால் மாலை வீடு திரும்ப 6 மணி ஆகி விடுகிறது.  அதுவரை சாப்பிடாமல் உடம்பு என்னத்துக்கு ஆகும் என்று அவள் கவலைப் படுகிறாள்.  என்னவோ உலகத்தில் எல்லோரும் சாப்பிட்டு சாப்பிட்டு உடம்பை எப்படியோ வைத்துக் கொண்டிருப்பதாக அவளுக்கு நெனைப்பு.  என்ன சாப்பாடு வேண்டியிருக்கிறது?  


வேஷ்டி மறுபடியும் தடுக்கிறது - கூட என்னென்னவோ எண்ணங்களும் தடுக்கின்றன.


பெரிய பெண் சரோவுக்கு ஒரு மாசத்துக்கு முந்திதான் 18 நிறைந்தது.  வஞ்சனை இல்லாமல் வளர்ந்து நின்று கொண்டு கண்ணைக் குத்துகிறாள்...  மீனா தினம் நச்சரிக்கிறாள்.  கல்யாணம் என்றால் சும்மாவா?  ஆயிரக்கணக்கில் அல்லவா பணம் வேண்டும்?  இந்த விலைவாசி ஏற்றத்தில் மாப்பிள்ளை விலையும்  கூட அல்லவா ஏகத்தாராக ஏறி விட்டது?  யாராவது இன்னொரு விலைவாசிப் போராட்டம் நடத்தக் கூடாதோ?


சனியன் பிடித்த வேஷ்டி மீண்டும் தடுக்கிறது.  மறுபடியும் 'டர்' சத்தமே கிழிசல் இன்னும் கொஞ்சம் மேலே விஸ்தாரம்...  காதறுந்த செருப்பு நொடிந்து விடுகிறது.  இரக்கமில்லாத வெய்யில் கண்ணைக் குத்துகிறது.  அடடே, இன்றைய அவசரத்தில் காலை 'ஆதித்ய ஹ்ருதயம்' சொல்ல மறந்து விட்டதே...  நாளை சேர்த்துச் சொல்லி விடலாம்...   'ச்சே, என்ன கசகசப்பு..  பபரப்பு..  ஜட்காக்கள், பஸ்கள்... கார்கள் கடந்து கடந்து செல்கின்றன.  எதிரிலிருந்தும், பின்னாலிருந்தும்.


இரண்டு வாலிபர்கள் ஒருவர் தோளில் ஒருவர் கை போட்டுக் கொண்டு சைக்கிள்களில் அவரைக்கடந்து செல்கிறார்கள். சப் கலெக்டர் ஆபீசில் வேலை பார்ப்பவர்கள்.  அவர்களின் சிரிப்பொலி தூரத்தில் கரைகிறது.


என்ன ஜாலி லைஃப்?


ராமசாமி நெடுமூச்செரிகிறார்.  சிலருக்கு மட்டும் வாழ்க்கை எப்படியோ ஜாலியாகத்தான் அமைந்து விடுகிறது.  வியர்வைக் கசகசப்பிலும் ஜாலி வருமோ?  வரக் கூடுமானால் அவர் வாழ்வும் ஜாலியானதுதான்!


அடுத்த மாதம் சம்பளம் வாங்கியதும் முதல் வேலையாக ஒரு ஜோடிச் செருப்பு வாங்கி விட வேண்டும்.  'பாட்டா' வெல்லாம் கட்டி வராது....  நம்ம கோபாலகிருஷ்ணனுக்கு 'ஸ்டைலோ' ஷூ மார்ட் முதலாளி  நிரம்ப வேண்டியவர்.  அவர் மூலம் கடனுக்குக் கூட இப்போதே வாங்கிக் கொள்ளலாம்.  ஆனால் விலை?  ரயில்வே ஸ்டேஷன் பிளாட்பாரத்தில் கடை வைத்திருக்கிறானே அவனிடம் டயர் செருப்பு 'சீப்'பாக கிடைக்கும்.  இரண்டு, இரண்டரை ரூபாய்க்கு வங்கி விடலாம்.  அப்புறம் ரெண்டு நாலு முழ வேஷ்டிகள் 'எப்படியாவது' வாங்கி விட வேண்டும்.  


சரோவுக்குப் புடவையில்லை என்று காலையில் சொல்லிக் கொண்டிருந்தாளே!  மீனா கூட சாயம் மாறிப்போன இரண்டே புடவைகளைத் தினமும் மாற்றி மாற்றி... சரி சரி, வேஷ்டிக்கு இப்போது என்ன அவசரம், அப்புறம் தீபாவளி அட்வான்ஸ் கொடுக்கும்போது பார்த்துக் கொள்ளலாம்.


தஞ்சாவூர் வாழைக் கட்டுகளை ஏற்றி வரும் லாரி ஒன்று ராமசாமியை உராய்ந்தாற்போல் செல்கிறது.  சமாளித்து ஒதுங்கிக் கொள்கிறார்.  நல்ல ஜி எஸ் டி ரோட்!  மூச்சு விடக் கூட நேரமில்லாமல் இடைவெளியற்று எத்தனை கார்கள், லாரிகள் இந்த பாதையில்?  இவ்வளவு பேர்களுக்கும் தினம் என்னதான் வேலை இருக்குமோ?


"ஏண்டா ராமசாமி, வண்டி இன்னைக்கும் லேட்டா, என்ன?" - வேகமாகக் கடந்து செல்லும் சைக்கிளில் இந்தக் கேலி மொழியை உதிர்த்த சக ஊழியர் அதோ பறக்கிறார்.  அவருக்கென்ன, இன்னும் சில நிமிஷங்களில் போய்ச் சேர்ந்து விடுவார்.... நான்தான் எப்போதுமே லேட்... 

எல்லோரும் அவரைக் கடந்து விரைகின்ற வேகத்துக்கு அவர் எவ்வளவு பின் தங்கி விடுகிறார்? - வாழ்க்கையில் கூட! சே...


இந்தச் சங்கடமெல்லாம் அந்த ஒரு வேளை சமையல் சாப்பாட்டினால்தான்.  அதைச் சொன்னால், இந்த மீனா எங்கே புரிந்து கொள்கிறாள்?  "உங்கள் உடம்பை முதலில் கவனித்துக் கொண்டால்தானே எங்களுக்கு பலம்?  உங்களை நம்பி நான் மட்டுமா, பின்னால் பாருங்கள் எத்தனை பேர் என்று?" - நெஞ்சின் உணர்ச்சி குரலில் தழுதழுக்க, இமை ஓரம் பளிச்சிட, சட், நல்ல பெண்கள்...  மணி என்ன?  ஒன்பது ஐம்பது இருக்குமா?  இன்னும் அவ்வளவு தூரம் இருக்கிறதே...


பெரிய பையனும் மூன்றாமவனும் அவர்கள் பள்ளியில் உல்லாசப் பயணம் போவதற்காக தலைக்கு ஏழு ரூபாய் வேண்டுமென்று நேற்று கேட்டார்களே!  அடுத்த மாத பட்ஜெட்டில் இடம் ஒதுக்க வேண்டும்.  


முடியுமோ?


அரிசி இன்னுமிரண்டு நாளைக்குதான் வருமாம்.  காலையில் மீனா 'வார்னிங்' கொடுத்து விட்டாள்.  காப்பிப்பொடி, விறகு, எண்ணெய் எல்லாம் நாளைக்கே வேண்டுமாம்.  மாதக் கடைசியாய்ப் பார்த்துதான் எல்லாமே ஆகித் தொலைக்கிறது.  அதுசரி, மாசத்திற்கு முப்பது நாள் எதற்கு, தரித்திரம் பிடித்தாற்போல வசவசவென்று?  இந்தச் சம்பளத்தோடேயே மாசத்திற்கு இருபது நாள் என்று வைத்து விட்டால் என்ன?  இந்த நாட்டில் இத்தனை கட்சிகள் இருந்து என்ன பிரயோஜனம்?  ஒன்றாவது இதற்கொரு கிளர்ச்சி தொடங்கக் கூடாதோ?


"சாமி வூட்ல சொல்லிக்கினு வந்தாச்சா?" - ஜட்கா வண்டிக்காரன் கிண்டலாகக் கேட்டு விட்டுச் செல்கிறான்.  மிகவும் பழசாகிப்போன ஹாஸ்யம்தான்.  ஆனாலும் வண்டிக்குள் இருப்பவர்கள்  சிரிக்கிறார்கள்.  அவர்கள் வண்டிக்குள் அல்லவா இருக்கிறார்கள்!


இதோ திருக்கழுக்குன்றம் ரோடு டர்னிங் வந்து விட்டது.  இன்னும் எவ்வளவு தூரம் போக வேண்டும்...


"சாமி தர்ம தொரை, காசு எதுவாச்சும் போடுங்க எசமான்!"


சாலை பிரிகிற இடத்தில் அந்த மரத்தடியில் உள்ள குஷ்டரோகிப் பிச்சைக்காரனின் வழக்கமான வேண்டுகோள்.  தர்ம தொரையும் எசமானுமான ராமசாமி சட்டைப்பைக்குள் கைவிட்டுத் துழாவுகிறார்.  ஒரு பத்துப் பைசாவை அவன் தட்டில் போட்டு விட்டு வேகமாக நடக்கிறார்.  "சாமி தீர்க்காயுசா இருக்கணும்"  என்று நெஞ்சார வாழ்த்துகிறான் அவன்.  எந்தச் சாமிக்கு மார்க்கண்டேய வரம் தருகிறான் இவன்?   மேலே உள்ளவனுக்கா, தனக்கா?


அந்தக் குஷ்டரோகிப் பிச்சைக்காரன் ஹாஸ்யமாக மரத்து அடிவேரில் தலை சாய்த்து மல்லாந்து படுத்தபடி 'அட்டாணிக்கால்' போட்டு ஆழ்ந்த யோசனையில் லயித்திருந்தான்.  பத்து பைசாவுக்கான பட்ஜெட் தயாரிக்கிரானோ?


உலகத்தில் பிச்சைக்காரர்களே இல்லாமல் செய்து விட முடியாதா?" -  ராமசாமி தீவிரமாக நினைக்கிறார்.  "என்னிடம் மட்டும் நிறையப் பணம் இருந்தால், எல்லாவற்றையும்...


யாரோ உரக்கச் சிரிக்கிறார்கள்.  தன்னைப் பார்த்து அல்ல, அவர்களுக்கு என்ன ஹாஸ்யமோ!  ஆனாலும் அவருக்குச் 'சுருக்'கென்கிறது.


சாயந்திரம் வீட்டுக்குப் போனதும் பக்கத்து வீட்டுக்காரனிடம் இன்று கட்டாயம் கேட்டு விட வேண்டும்.  சும்மா ஒரு 'ரொட்டேஷன்' தானே?   லஜ்ஜைப்பட்டால் முடியுமா?  ஒரு இருநூறு ரூபாய் போதாது?  எதேஷ்டம்.... சில்லறைக் கடன்கள் அத்தனையும் சமாளித்து விடலாம்.  தெருக்கோடி மளிகைக்காரன் கண்ணில் படாமல் இருக்க அடுத்த சந்து வழியாகச் சுற்றிப் போகாமல் 'ஜாம்'மென்று நேர் வழியிலே போகலாம்.  பால்காரி பாக்கியைத் தூக்கி எறிந்து விட்டால் நேற்று அவள் பேசின மாதிரி இனி பேச மாட்டாள்.  ராத்திரி அதிகப்படியாக இருநூறு மில்லி வாங்கிப் பசங்களுக்குக் கொடுக்கச் சொல்வேண்டும்.  வீட்டுக்காரர் வாடகையையும் வீசி எறிந்து விட்டால் இனி அவர் வரும்போது கதவிடுக்கை விட்டு வெளியே வந்து தைரியமாக வரவேற்கலாம்.


'கணகணகண' வென்று இதோ ராஜேஸ்வரி பள்ளி மணியோசை கேட்கிறதே...  "மணி 9.55..."  என்று ஒரு பையன் புத்தகப் பையைத் தன் தோளில் மாட்டிக் கொண்டு ஓடுகிறான்.  ஐந்தே நிமிஷங்கள்தான் பாக்கியா,  நடந்தால் நேரமாகி விடும் - ஓடுவோமா?


எதிரே என்ன வேகமாக அந்த ஜட்கா பறக்கிறது?  காலி வண்டி...   வலப்பக்கத்தில் அந்தக் கிழவி, இவள் எங்கே குறுக்கே வருகிறாள், சனியன் பார்த்து வரக் கூடாது?  'வீட்டில் சொல்லிக் கொண்டு' வந்து விட்டாளோ?  எதிரே அந்த எக்ஸ்ப்ரஸ் பஸ், அடேயப்பா, என்ன வேகம்.  இந்த ஜட்காக்காரன் என்ன ராங்சைடில், இந்தக் கிழவியினால் இப்படி வந்து விட்டாள் எனக்கு இடைஞ்சலாக... இப்படி வலப்பக்கமாக ஒதுங்கி விட்.....


"ஹா...ஐயோ... சார்... சார்..." திடீர்க் கூக்குரல்கள், அவல ஒலிகள்.  கிறீச் சத்தம்.  கிழவி?  கடவுளே!  நான்... நான்... நான்... என்னைச் சுற்றி ஏன் எல்லா வாகனங்களுமே இப்படி வளைத்துக் கொண்டு நின்று விட்டன?  அடுத்த வினாடி ஒரே சலனம், பரபரப்பு, கூட்டம் நாடு ரோட்டில் நெருக்குகிறது.... , அவர்தான், ராமசாமிதான் கிடக்கிறார்....  ரத்த வெள்ளம், கண்ணுக்குள், எதுவோ சிவப்பாக ஓடுகிறது!  யாரோ கத்துகிறார்கள் - "சீக்கிரம், சீக்கிரம், அந்தக் காரில் ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போங்கள்..."


மணி 9.57 ஆகி விட்டதே... பத்து மணிக்குள் அவர் ஆஸ்பத்திரியில் - 


பிரக்ஞையற்றவராகத்தான் அவரைக் காரில் ஏற்றுகிறார்கள்... ஆனால் என்ன?  குறித்த நேரத்திற்குள் அவர் ஆஸ்பத்திரிக்குப் போய்விடுவார்...  சிப்பந்தி வேலை பார்க்க மட்டும்தானா ஒருவர் ஆஸ்பத்திரிக்கு விஜயம் செய்ய முடியும்!



************************************************************
**************







55 கருத்துகள்:

  1. ராமசாமி போன்றவர்கள் இன்னும்இருக்கிறார்கள்

    பதிலளிநீக்கு
  2. நம்மிடம் மட்டும் கார் இருந்தால் தினமும் கார் நிறைய ஏற்றிப் போக மாட்டோமா...?

    இந்த கேள்வி நடந்து செல்பவர்கள் அனேகர்
    மனதில் கேட்கும் கேள்விதான்
    நான் கூட என் மனதில் கேட்டிருக்கிறேன்....

    கேட்டு வாங்கி போட்ட
    கதை அருமை நண்பரே....

    பதிலளிநீக்கு
  3. மிகவும் அருமையான கதை.

    சொக்க வைக்கும் எளிமையான யதார்த்தமான எழுத்துநடை.

    ஒரு சராசரி சாமான்ய மனிதனுக்குத்தான் வாழ்க்கையில் அடுத்தடுத்து எவ்வளவு கஷ்டங்கள் .... எவ்வளவு சோதனைகள் .... பட்டகாலிலே படும், கெட்ட குடியே கெடும் என்பது போல.

    படிக்கும்போது பல இடங்களில் என் மனதை நெகிழச்செய்து கலங்க வைத்தது .... இதையெல்லாம் நானும் என் வாழ்நாளில் என்றோ ஒருநாள் அனுபவித்துத் தாண்டி வந்தவன்தான் என்பதனாலோ என்னவோ.

    எழுத்தாளராகிய தங்கள் தந்தைக்கு என் சாஷ்டாங்க நமஸ்காரங்களைச் சொல்லவும்.

    படிக்க வாய்ப்பளித்த ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம் அவர்களுக்கு என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

    பதிலளிநீக்கு

  4. எல்லோரும் அவரைக் கடந்து விரைகின்ற வேகத்துக்கு அவர் எவ்வளவு பின் தங்கி விடுகிறார்? - வாழ்க்கையில் கூட! சே...

    நான்தான் எப்போதுமே லேட்... //

    இல்லை.

    subbu thatha

    பதிலளிநீக்கு
  5. படித்தேன்!அருமை! தங்கள் தந்தைக்கு வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  6. இன்று ,வடிவேலு .. ரணகளத்திலும் ஒரு கிளுகிளுப்பு வேணுமான்னு கேட்டதை ,அன்றே உங்கள் தந்தையார் 'வியர்வைக் கசகசப்பிலும் ஜாலி வருமோ?'என்று கேட்டிருப்பதில் இருந்து தெரிகிறது :)

    பதிலளிநீக்கு
  7. பகவான்ஜி மருதைக் காரர் வேற; திருவிளையாடல் நடந்த இடம். ஒரு வேளை 3 வயதில் ஞானப்பால் குடித்து இருக்கலாம்; அப்போ 3+36=39 வயது தான் ஆகுது! 70 களின் முடிவு என்றால், 1979 டிசம்பர் என்றும் எடுக்கலாம்!

    பதிலளிநீக்கு
  8. ஒரு சாமானியனின் எண்ண ஓட்டங்கள். அருமையான புனைவு. இன்த அல்ஸிமைர்ஸ் நலக் குறைவு உள்ளவர்கள் பழய ஞாபகங்களை நன்றாகச் சொல்வார்கள்.. இதே நலக் குறைவினால் 4 வருஷங்களாக அவதியுறும் எங்கள் வீட்டுக்காரரின் அனுபவங்களின் பகிர்வே ராயல் ஃபிளைட்டும் சாளிக்கிராம வினியோகமும் என்று சில நினைவுகளில் நான் எழுதிய கட்டுரை. உங்களின் தந்தையே கதாசிரியர். அவரின் கதையும்,நடையும்,யதார்த்தமும் மனதில்ப் பாய்கிறது.என் விசாரம் இவர்கள் அதிகக் கஷ்ட்டப்படாமல் இருக்க வேண்டுமென்பதே. அருமையான பகிர்வு. நினைவுகள் நிலைத்திருக்கட்டும்.இன்னும் அவரின் கதைகளைப் பிரசுரியுங்கள். நலமடையட்டும். அன்புடன். சென்னையினின்றும்

    பதிலளிநீக்கு
  9. "சாமி தீர்க்காயுசா இருக்கணும்" என்று நெஞ்சார வாழ்த்துகிறான் அவன். //
    அவனின் வாழ்த்து பலித்ததா என்று தெரியவில்லையே!

    கதை அருமை.

    பதிலளிநீக்கு
  10. அருமை.. என்று ஒற்றை வார்த்தையில் அடக்கி விட முடியாதபடியான கதை.

    பதிலளிநீக்கு
  11. பெரியவர் பாலசுப்ரமணியம் அவர்கள் ராமசாமி ஆன கதை.

    கதை நிகழ்விடம் காஞ்சீபுரம் ஹைரோடில். காஞ்சீபுரம் ஹைரோடு என்பதை செங்கல்பட்டு--காஞ்சீபுரம் ஹைரோடு என்று புரிந்து கொள்ள வேண்டும். செங்கல்பட்டைப் புரிய வைக்க எவ்வளவு மெனக்கெட்டிருக்கிறார்?.. முனிசிபல் பஸ் ஸ்டாண்ட், பழைய ஆஸ்பத்திரி, மணிக்கூடு, பிராமணத் தெருவில் நுழைந்து ஜிஎஸ்டி சாலை.. சென்னையிலிருந்து செங்கை வழியாகச் செல்லும் ஜிஎஸ்டி சாலை.. செங்கல்பட்டு நகர உட்பகுதியிலிருந்து ஜிஏஸ்டி சாலையை நெருங்குவது அச்சு அசலாக வர்ணிக்கப்பட்டிருக்கிறது. ஜிஎஸ்டி சாலையைக் கடந்தால் வேதாசல நகர், கொஞ்சம் எட்டி திருக்கழுக்குன்றம் திருப்பம், கொஞ்சம் எட்டிப் போனால் இராஜேஸ்வரி ஹைஸ்கூல், வேதாசல நகர், அடுத்து ஆஸ்பத்திரி.
    இடையே வேதாசல் ஆர்ச் வேறே!

    தினமும் பொடி நடையாக வீட்டிலிருந்து கிளம்பி ஆஸ்பத்திரி வேலைக்குப் போகும் வழியில் அனுதினமும் அவர் பார்வையில் படும் காட்சிகள் நனவோடைக் கதையாகியிருக்கிறது. அந்த ஜிஏஸ்டி சாலையில் புயல் வேகத்தில் வண்டிகள் பறக்கும் காட்சி எந்த நேரத்தில் எந்த விபத்து நடக்குமோ என்று தான் யாருக்கும் தோன்றும். தினம் தினம் ஐயா பாலசுப்ரமணியம் நடுக்கத்துடன் எதிரிகொண்டது கற்பனையில் கதையில் நிகழ்ந்தே விட்டது!..

    மிக பிரமாதமான உயர்ந்த நடையில் கதை பயணிக்கிறது.. அந்தப் பயணத்தின் நடுந்டுவே அழுத்தும் குடும்ப பார நினைவுகளுக்கு ஊடே தனிநபர் துயரமாய்ப் போய்விடாமல் சமூக அவலங்களை வெகு நாஸுக்காக அவர் படம் பிடித்துக் காட்டுவது அவர் கொண்டிருந்த சமூக அக்கறையைக் காட்டுகிறது..

    உயர்ந்த உள்ளம்.. உயர்வான கதை.. உள்ளத்தை நெருட ஆரம்பித்துக் கீறிப் பார்த்த கதை!

    இந்தக் கால கதைசொல்லிகளின் கதை சொல்லல் அல்லாமல் அந்தக் கால எழுத்தாளரின் எழுத்தின் லாவகம் படிந்த கதை! நெடுநால் நினைவில் இருக்கும் வரம் பெற்ற கதை!

    பதிலளிநீக்கு
  12. வணக்கம் நண்பரே வசனங்களே இல்லாமல் வெறும் வர்ணனையை மட்டுமே வைத்து கதை எழுத முடியும் என்பதற்க்கு இந்தக்கதை நல்ல எடுத்துக்காட்டு உங்களைது தந்தையை பாராட்ட வயதில்லை எமக்கு அவர் இருக்கும் திசையை நோக்கி வணங்குகின்றேன்.
    நான் இரண்டு முறை படித்தேன் புரியாமல் அல்ல மிகவும் ரசித்து, ரசித்து படித்தவை கீழே.....

    //'ஹேய்... ஹேய்..." வண்டிக்குள் சிரிப்பொலி. தன் சக பிரயாணிகளை பின்னால் விட்டு விட்டு இவர்கள் முன்னால் வந்து விட்டார்கள் அல்லவா... அந்த வெற்றிக்களிப்பு...
    இவர்களால் இவ்வளவுதான் முடிகிறது. அந்த அளவுக்குச் சிரித்துக் கொள்கிறார்கள்//
    சிந்திக்க வைத்த விடயம் ஆம் பலரும் இந்த வட்டத்துக்குள்தானே...

    //பெரிய பெண் சரோவுக்கு ஒரு மாசத்துக்கு முந்திதான் 18 நிறைந்தது. வஞ்சனை இல்லாமல் வளர்ந்து நின்று கொண்டு கண்ணைக் குத்துகிறாள்//
    இன்றைய எழுத்தாளர்கள் எவ்வளவு கீழ்த்தரமாக வர்ணிக்கின்றார்கள் எவ்வளவு நாசூக்கான வர்ணனை கவலையோடு.....

    //எல்லோரும் அவரைக் கடந்து விரைகின்ற வேகத்துக்கு அவர் எவ்வளவு பின் தங்கி விடுகிறார் ? - வாழ்க்கையில் கூட சே... //
    யோசிக்க வேண்டிய விடயம்....

    //மாசத்திற்கு முப்பது நாள் எதற்கு தரித்திரம் பிடித்தாற்போல வசவசவென்று ? இந்தச் சம்பளத்தோடேயே மாசத்திற்கு இருபது நாள் என்று வைத்து விட்டால் என்ன ? இந்த நாட்டில் இத்தனை கட்சிகள் இருந்து என்ன பிரயோஜனம் ? ஒன்றாவது இதற்கொரு கிளர்ச்சி தொடங்கக் கூடாதோ ?//
    ஹாஹாஹா பட்ஜெட் இடிக்கும் பொழுது மட்டும் இப்படியொரு பொதுநல சிந்தனை அதுசரி அப்பொழுதே இத்தனை கட்சிகள் என்றால் ? இப்பொழுது என்ன சொல்வது ?

    //"சாமி வூட்ல சொல்லிக்கினு வந்தாச்சா ?" ஜட்கா வண்டிக்காரன் கிண்டலாகக் கேட்டு விட்டுச் செல்கிறான் மிகவும் பழசாகிப்போன ஹாஸ்யம்தான்//
    இது அன்றைக்கே பழைய நகைச்சுவையா ?

    //உலகத்தில் பிச்சைக்காரர்களே இல்லாமல் செய்து விட முடியாதா ? ராமசாமி தீவிரமாக நினைக்கிறார்." என்னிடம் மட்டும் நிறையப் பணம் இருந்தால், எல்லாவற்றையும்...
    யாரோ உரக்கச் சிரிக்கிறார்கள். தன்னைப் பார்த்து அல்ல, அவர்களுக்கு என்ன ஹாஸ்யமோ! ஆனாலும் அவருக்குச் 'சுருக்'கென்கிறது//
    எவ்வளவு பொருத்தமாக இணைத்து இருக்கின்றார்...

    //சிப்பந்தி வேலை பார்க்க மட்டும்தானா ஒருவர் ஆஸ்பத்திரிக்கு விஜயம் செய்ய முடியும்//
    இவர் ஒரு மருத்துவமனை ஊழியர் என்பது முடிவில்தானே தெரிகின்றது சஸ்பென்ஸும் அருமை.
    -கில்லர்ஜி

    பதிலளிநீக்கு
  13. பாவம்..அவருடன் சேர்ந்து நானும் ஓடிக்கொண்டிருந்தேன். பிழைப்பாரா? மருத்துவமனைச் செலவு?!! கடன்கள்?...மனம் கனக்கும் கதை...அன்றும் இன்றும் இப்படிப்பட்டவர்கள் இருக்கத்தானே செய்கிறார்கள்!! :(

    பதிலளிநீக்கு
  14. உங்கள் அப்பாவின் கதையைப் பகிர்ந்ததற்கு நன்றியும் அவருக்கு வணக்கங்களும்! 'இவனும் அவனும்' எங்கு கிடைக்கும்?

    பதிலளிநீக்கு
  15. வாவ்!!! ஸ்ரீராம்!! அப்பாவின் நடை!!!!!!!! அப்படியே! ஒரு சாமானினியனின் எண்ணப்போக்கு. இது ஒவ்வொருவர் வாழ்வையும் ப்ரதிபலிக்கும். பலரும்ட பல சமயங்களில் இப்படித்தான் நடந்து செல்லும் போது எண்ணங்கள் சிதறடிக்க, நடக்கும் போது வண்டிக்காரர்களின் வார்த்தைகளைக் கேட்டிருப்பார்கள். கதையை வாசிக்கும் போது அந்தக் கதாபாத்திரமாகவே மாறிவிடச் செய்கிறது. அதுவும் இறுதி முடிவு செம!

    அப்பாவின் புத்தகத்தை நீங்கள் அன்று கொடுத்து அதை வாசித்ததுமே அப்பாவைப் பற்றித் தெரிந்து கொள்ள முடிந்தது. அவரது மன எண்ண்ணங்கள் பல இந்தக் கதையில் ஊடுருவி பளிச்சென்று நிற்கின்றன....

    //'ஹேய்... ஹேய்..." வண்டிக்குள் சிரிப்பொலி. தன் சக பிரயாணிகளை பின்னால் விட்டு விட்டு இவர்கள் முன்னால் வந்து விட்டார்கள் அல்லவா... அந்த வெற்றிக்களிப்பு...
    இவர்களால் இவ்வளவுதான் முடிகிறது. அந்த அளவுக்குச் சிரித்துக் கொள்கிறார்கள்//

    // உடலைத் துணியும், மனசைப் போலித்தனமும் போல கண்களையும் பார்த்து விடக் கூடாத ஜாக்கிரதையை கூலிங் கிளாஸ் கவனித்துக் கொள்கின்றன//

    //உலகத்தில் பிச்சைக்காரர்களே இல்லாமல் செய்து விட முடியாதா ? ராமசாமி தீவிரமாக நினைக்கிறார்." என்னிடம் மட்டும் நிறையப் பணம் இருந்தால், எல்லாவற்றையும்...
    யாரோ உரக்கச் சிரிக்கிறார்கள். தன்னைப் பார்த்து அல்ல, அவர்களுக்கு என்ன ஹாஸ்யமோ! ஆனாலும் அவருக்குச் 'சுருக்'கென்கிறது//

    //எல்லோரும் அவரைக் கடந்து விரைகின்ற வேகத்துக்கு அவர் எவ்வளவு பின் தங்கி விடுகிறார் ? - வாழ்க்கையில் கூட சே... // இது மனதை என்னவோ செய்துவிட்டது ஸ்ரீராம். நிஜமாகவே கண்களில் நீர் நிறைந்துவிட்டது. இது 60 களில் எழுதப்பட்டது என்றாலும் ஏனோ இப்போது பொருத்திப் பார்க்கத் தோன்றிவிட்டது....சத்தியமாக மனசு ஆறவில்லை கண்களில் நீர்...

    கதையை மீண்டும் மீண்டும் வாசித்து ஒவ்வொரு வரியின் உள் அர்த்தத்தையும் அப்பாவின் எண்ணங்களையும் பொருத்திப் பார்த்ததால் கருத்திட தாமதம்....

    அல்சிமர்! மனம் வேதனைப்படுகின்றது. எழுத்துக்களில், எண்ணங்களில் வாழ்ந்தவருக்கு மூளை செய்த சதி!அப்பாவுக்கு அவரது பாதத்தில் என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள். எனக்கு அவரை ஒரு முறையேனும், எப்படியேனும் பார்த்துவிட வேண்டும் என்று மனதிற்குள் பல நாட்களாகத் தோன்றிக் கொண்டே இருக்கின்றது. வீட்டுச் சூழல்...ம்ம்ம் பார்ப்போம்....

    கீதா

    பதிலளிநீக்கு
  16. எதிர்பாரா முடிவு. போகிற போக்கில் சாமான்யர்களின் வாழ்க்கை நிலையையும் சொல்லிப் போன விதம் அருமை.

    பதிலளிநீக்கு
  17. தற்போதுள்ள வாதிகள் இருந்திருந்தால் தங்கள் தந்தையாரும் இன்னும் அசத்தி இருப்பார்.

    பதிலளிநீக்கு
  18. ஹய்யோ! அந்த இறுதி வரிகளை மீண்டும் மீண்டும் வாசிக்கிறேன்...கதையின் முடிவு..

    கீதா

    பதிலளிநீக்கு
  19. இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்

    சித்திரையாள் வருகை
    இத்தரையில் எல்லோரும்
    எல்லாமும் பெற்று வாழ
    எல்லோருக்கும் வழிகிட்டுமென
    புத்தாண்டு வாழ்த்துகளைப் பகிரும்
    இத்தால் உங்கள் யாழ்பாவாணன்

    பதிலளிநீக்கு
  20. அருமையான கதை, மனம் கனக்கிறது முடிவில்,, நிறைய இடங்கள் பலமுறை வாசித்தேன்,, அருமை அருமை,,,

    பதிலளிநீக்கு
  21. ஒரு நிகழ்வு ஆனால் சொல்லும் லாகவம் எண்ணங்களின் ஜில் பயணம் சிறுகதை எழுதும் பாணி புலப்படுகிறதுநினைவுகளும் நிகழ்வுகளும் இரட்டைச் சவாரி செய்ய எழுதும் நடை க்கு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  22. மனம் தாங்க முடியவில்லை இந்த வேகத்தை. தந்தையார் மிகப் பெரிய மேதாவி.
    படிக்கக் கொடுத்ததற்கு மிக நன்றி ஸ்ரீராம்.
    துடிக்கும் முடிவு கலங்க வைக்கிறது.
    எப்பேர்ப்பட்ட எழுத்து அம்மா இது.
    அவரிடம் சொல்லுங்கள் ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு
  23. புத்தகம் வந்து சேர்ந்ததுமே படித்திருக்கேன் இந்தக் கதையை. மனம் கனக்கச் செய்தது. ஒரு சாமானியன், வேட்டி கூட வாங்க முடியாமல் காலுக்குச் செருப்பும் இல்லாமல் குடும்பத்துக்காக உழைக்கும் சாமானியனின் மனோநிலையை அற்புதமாகச் சித்திரித்திருக்கிறார். சம்பவங்கள் உடனே முடிந்து விடுகின்றன. என்றாலும் அதிலிருந்து எத்தனை எத்தனை கிளைக்கதைகள்! மனம் பதைக்க வைக்கும், நல்லதையே எதிர்பார்க்கும் முடிவு. நல்லபடியாகப் பிழைத்திருப்பார் என நம்புவோம்.

    பதிலளிநீக்கு
  24. தன் செருப்பு, வேட்டி போன்ற அத்தியாவசிய செலவுகளைக் கூடக் குடும்பத்துக்காக தியாகம் செய்யும் நடுத்தரக் குடும்பத்தலைவனின் மனப்போராட்டத்தைத் துல்லியமாக எடுத்துரைக்கும் கதை. பத்துமணிக்குள் ஆஸ்பத்திரியில் இருந்தாக வேண்டும் என்று கதை ஆரம்பிக்கிறது. இவருக்கு உடல்நலமில்லையோ, குடும்ப உறுப்பினர் யாரேனும் ஆஸ்பத்திரியில் இருக்கிறார்களோ என்று நினைத்தால் இவர் அங்கு வேலை செய்யும் சிப்பந்தி என்ற எதிர்பாரா முடிவுடன் கதை முடிகிறது. கதை முடிந்தாலும் இவர் பிழைப்பாரோ, மாட்டாரோ என்ற விபரத்தை வாசகரின் யூகத்துக்கு விட்டு விட்டார் கதாசிரியர். மனத்தைக் கனக்கச் செய்யும் கதை. தங்கள் தந்தைக்கு என் வணக்கங்கள். உடல்நலமில்லை என்றறிந்து வருத்தமேற்பட்டது. புத்தகம் வெளியானதறிந்தேன். எங்குக் கிடைக்கும்?

    பதிலளிநீக்கு
  25. இவரைப் போல் இன்னும் எத்தனை எத்தனையோ ராமசாமிகள் இருக்கிறார்கள்...
    ஆரம்பம் முதல் ராமசாமியோடு நம்மை நடக்க வைக்கும் எழுத்து நடை...
    ராமசாமி வேகமெடுத்தால் நாமும் வேகமெடுத்து... ராமசாமி புலம்பினால் நாமும் அவரோடு புலம்பி.... ஆஹா... வாசித்து ரசித்தேன் அண்ணா... ஊருக்கு வரும்போது உங்ககிட்ட வந்து புத்தகங்கள் வாங்கிக்கணும்ன்னு ஆசை...:) மதுரையில் தாங்கள் இருந்தால் கண்டிப்பாக வருவேன்.

    பதிலளிநீக்கு
  26. நன்றி நண்பர் கரந்தை ஜெயக்குமார். தம இணைப்பு மற்றும் வாக்குக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  27. நன்றி அஜய். நான் சைக்கிள் ஓட்டக் கற்றுக்கொள்ளுமுன் - சொந்தமாக ஒரு சைக்கிளைக் கைக்கொள்ளும் முன் - நானும் அப்படித்தான் நினைத்தேன்!

    பதிலளிநீக்கு
  28. நன்றி வைகோ ஸார். பின்னூட்டங்கள் வெளியாகும்போது மதுரையில் அவர் அருகில் இருந்ததால்வாசித்துக் காண்பித்தேன்.மனதில் வாங்கிக் கொண்டாரா, தெரியவில்லை.

    பதிலளிநீக்கு
  29. நன்றி சுப்பு தாத்தா. சுருக்கமான பின்னூட்டம்!

    பதிலளிநீக்கு
  30. நன்றி டாக்டர் நம்பள்கி. இந்தக் கதை 60 களின் ஆரம்பத்தில் விகடனில் வெளியானது.

    பதிலளிநீக்கு
  31. நன்றி காமாட்சி அம்மா. அல்ஸைமர் மட்டும் அல்லாமல், இடுப்பு எலும்பு முறிந்து, அறுவை சிகிச்சை செய்யப்பட்டும் எழுந்து நடக்க முடியாமல், போதாக் குறைக்கு வலது கையும் செயலிழந்து இருக்கிறார் பாஹே. அவர் கதைகள் சிலவற்றை முடிந்தால் பின்னர் வெளியிடுகிறேன்.

    பதிலளிநீக்கு
  32. நன்றி கோமதி அரசு மேடம். பிழைத்திருப்பார் அவர் - அந்த பிச்சைக்காரனின் வாழ்த்து காரணமாகவேனும்!

    பதிலளிநீக்கு
  33. நன்றி சகோதரி சாந்தி மாரியப்பன்.

    பதிலளிநீக்கு
  34. நன்றி ஜீவி ஸார். வழக்கம் போலவே ரசனையான வாசிப்பு, ரசனையான பின்னூட்டம்.

    பதிலளிநீக்கு
  35. நன்றி கில்லர்ஜி. வழக்கத்துக்கு மாறாக நீளமான பின்னூட்டம் எந்த அளவு நீங்கள் கதையை ரசித்திருக்கிறீர்கள் என்று காட்டுகிறது. இன்னொரு தளத்திலும் இந்தக் கதையைப் பற்றிக் குறிப்பிட்டிருந்ததையும் படித்தேன். நன்றி.

    பதிலளிநீக்கு
  36. நன்றி கிரேஸ். புத்தகம் மதுரையில் கடைகளில் கிடைக்கிறது.

    பதிலளிநீக்கு
  37. நன்றி கீதா. மதுரை போகும்போது சொல்லுங்கள். அப்பாவைச் சந்திக்க வாய்ப்பும் நேரமும் இருந்தால் விவரம் தருகிறேன். உள்ளார்ந்த ரசனைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  38. நன்றி நண்பர் செந்தில் குமார்.

    பதிலளிநீக்கு
  39. நன்றி நண்பர் முரளிதரன். இப்போதும் என் மூலமாக சில படைப்புகளை எங்கள் தளத்திலேயே எழுதி இருக்கிறார்.

    பதிலளிநீக்கு
  40. நன்றி நண்பர் ஜீவலிங்கம் யார்ல்பாவாணன் காசிராஜலிங்கம்.

    பதிலளிநீக்கு
  41. நன்றி பேராசிரியை மகேஸ்வரி பாலச்சந்திரன்.

    பதிலளிநீக்கு
  42. நன்றி வல்லிம்மா. அப்பாவிடம் வாசித்துக் காண்பித்தேன். கேட்டுக் கொண்டார்.

    பதிலளிநீக்கு
  43. நன்றி கீதா சாம்பசிவம் மேடம்.

    பதிலளிநீக்கு
  44. நன்றி கலையரசி மேடம். புத்தகம் குறிப்பிட்ட கடைகளில்தான் கிடைக்குமென்று நினைக்கிறேன். மணிவாசகர் பதிப்பகம்.

    பதிலளிநீக்கு
  45. நன்றி குமார். அப்பாவும் அண்ணனும் மதுரையில் இருக்கிறார்கள். நான் சென்னையில். அவ்வப்போது மதுரை சென்று வருவேன்.

    பதிலளிநீக்கு
  46. நெகிழ்ச்சியான கதை ஸ்ரீராம் ..தங்கள் அப்பாவின் அனுபவபூர்வமான எழுத்து ஒவ்வொருவரியிலும் தெரிகிறது அவருக்கு என் நமஸ்காரங்கள்..இனிய பாராட்டுக்களும்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!