செவ்வாய், 5 ஏப்ரல், 2016

கேட்டு வாங்கிப் போடும் கதை : என்று தீரும் இந்த மூட்டையின் தொல்லை?


இந்த வார 'கேட்டு வாங்கிப் போடும் கதை' பகுதியில் ஜோக்காளி தளத்தின் பகவான்ஜி எழுதிய கதை.  

பகவான்ஜி கதை எழுதி இருப்பார் என்று எனக்குத் தோன்றியதே இல்லை.   ஒரு நாள் அலைபேசியில் பேசிக் கொண்டிருந்தபோது பேச்சுவாக்கில் சொன்னார்.  விடுவேனா?  அவரிடமும் கேட்டு வாங்கிப் போட்டு விட்டேன்.

என்னதான் தினம் ஒரு ஜோக்கை மறுபிரசுரம் செய்தாலும் தினம் ஒரு பதிவு சளைக்காமல் வெளியிடும் மதுரைக்காரர்.   தமிழ்மண ரேங்க்கிங்கில் முதல் இடத்தில் இருப்பவர்.   அவரின் தளம் ஜோக்காளி.   நகைச்சுவைகளால் மக்களை மகிழ்விப்பவர். 


தனதுபடைப்பு பற்றிய அவர் கருத்தும், தொடர்ந்து அவர் படைப்பும்...


=================================================================


டியர் ஸ்ரீராம் ஜி....

என் பதிவுகளை என்னிடம் கேட்காமலே ,பலரும் தங்களின் சொந்த படைப்பு போல் போட்டுக் கொள்ளும் இந்த காலத்தில், நீங்கள் கேட்டு வாங்கி போடுவதற்கு நன்றி  :)

எழுபதுகளின் இறுதியில் குமுதம் ,குங்குமம் ,சாவி ,தாய் ,ஜூனியர் விகடன் போன்ற வெகுஜன இதழ்களில் நகைச்சுவை துணுக்குகள் மட்டுமே நான் எழுதிக் கொண்டிருக்க , நண்பர்கள் 'இது போதாது ,என் நீண்ட மொக்கை வேண்டும் 'என்று காலில் விழாத குறையாக வற்புறுத்தியதால் , வேறு வழியின்றி , வாசகர் தலைஎழுத்து இப்படியிருக்கும் என்றால் நான் என்ன செய்வது என்னை சமாதானப் படுத்திக் கொண்டு .....

அணுஅணுவாய் ரசித்து நாலைந்து பக்கத்துக்கு ஒரு கதையை எழுதி...
நகைச்சுவைக்கு  என்றே அவதாரம் எடுத்திருக்கும் ஆனந்த விகடனுக்கு அனுப்பி வைக்க ....

அவர்களும் கதைக்கு காலில்லை என்பதால் கையை ,காலை வெட்டி பிரசுரித்து விட்டார்கள் ....

ஒரிஜினல் சைஸ் கதையையும்,பிரசுரமான சைஸ் கதையையும் இணைத்துள்ளேன் ..

இரண்டையும் படித்துப் பாருங்கள் ,மூலக் கரு சிதையாமல் எப்படி எடிட் செய்வது என்ற கலை புரியும் !

வெகுஜன இதழ்களில் எழுத விரும்புவோருக்கு இது ஒரு பாடம் என்றால் கோபித்துக் கொள்ளக் கூடாது :)

அன்புடன் ....
பகவான்ஜி .​




==============================
======================================



என்று தீரும் இந்த மூட்டையின் தொல்லை?

பகவான்ஜி



சந்தேகப் பேர்வழிகளை 'சந்தேகப் பிராணிகள்' என்று நாம் சொல்வது உண்டு.  சொல்லப் படுவதும் உண்டு.  இப்படி ஆறறிவுள்ள மனிதனையே 'பிராணிகள்' வரிசையில் சேர்த்து விட்டதால் மூட்டைப் 'பூச்சி'யையும்அந்த வரிசையில் சேர்க்கலாம்.  காரணம் இந்த மூட்டைகள் பால் கூடக் காய்ச்சாமல் என் வீட்டில் குடியேறி வெள்ளிவிழாவைக் கொண்டாடியும் அவைகள் பொன்விழாவை நோக்கி வீறு 'கடி' யிட்டு முன்னேறிக் கொண்டிருக்கின்றன.

தாங்கமுடியாத தொல்லை கொசுத் தொல்லையா?  மூட்டைத் தொல்லையா என்று ஒரு பட்டிமன்றம் நடத்தினால் நடுவர் ஒருவேளை'பெண்டாட்டி'த் தொல்லைதான் என்று தீர்ப்பளிக்கலாம்.  ஆனால் ஜோக்காளி ஆனா நான் மூட்டைத தொல்லைதான் என்று சோடா கூடக் குடிக்காமல் சொற்பொழிவு வாற்றத் தயார்!

மூட்டைப் போச்சிகளா?  மூவிங் மினி ப்ளட் பேங்க்குகளா? என்று புதுக்கவிதையும் (?) எழுதத் தோன்றுகிறது.

'ஒவ்வொரு ராத்திரி வேளையிலும் மூட்டை உன் ஞாபகமே' என்றும் 'இரத்தத்தைத்தான் குடிக்காதீங்க உறக்கத்தைத்தான் கெடுக்காதீங்க' என்றும் 'தினம் தினம் உன்கடி தாங்கவும் முடியலே திண்டாட்டம் என்றும் பல'கடி'யால் எனக்கு ஞானத்தைத் தந்தவை என் வீட்டுச் செல்லப் 'பிராணி'களான மூட்டைகள்தான்!

போதும் போதும் மூட்டைப் புராணம் என்று நீங்கள் சொல்வது புரிகிறது.  ஜோக்காளி நான் சீக்காளி ஆவேன் போலிருக்கிறது.  என்ன செய்வது?  நான் படும் அவஸ்தையில் நீங்களும் 'கடி' பட வேண்டாமா?

இப்படி எனக்கு மூட்டை மூட்டையாக கற்பனைகளைத் தந்து கொண்டிருக்கும் மூட்டைகளைப் பற்றி விடாமல் சிந்தித்துக் கொண்டிருந்தால் வருங்காலத்தில் பெரிய சிந்தனாவாதி ஆகிவிடுவேன்.  


அப்போது "ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும் ஒரு பெண் இருப்பதாய்ச் சொல்வார்கள்.  உங்கள் வெற்றிக்குக் காரணம் யார்?" என்று யாராவது கேட்டால் நான் "மூட்டைகள்தான்" என்று கூற வேண்டுமென நினைத்தபோது என்னையறியாமல் சிரித்து விட்டேன் போலிருக்கிறது.  


தூக்கமில்லா என் துணைவி "பைத்தியமேதும் பிடிச்சிருக்கா?" என்று விழியாலே மொழி பேசுகிறாளே!

"என்னங்க" - இது என் மனைவி சுலோச்சனாவின் குரலோசைதான்.(குயிலோசை என்றால் நீங்களும் என்னை பெண்டாட்டி தாசன் என்பீர்கள்)

"இங்க பாருங்க" என்று தன் கையை, காலை, கழுத்தைக் காட்டுகிறாள். 

அங்கெல்லாம் இரத்தக் கட்டிகளாய் மூட்டைகள் ஓடிக் கொண்டிருக்கின்றன.  இந்த மூட்டைகள் ஒழியும் நாளே எனக்குத் திருநாள்.

அவள் கழுத்தருகே ஓடிய மூட்டைகளைப் பிடிக்க முயன்றேன்.  அகப்படாமல் டிமிக்கி கொடுத்து தன் ரத்தபாசத்தை நிரூபித்தது.  இயலாமையினால் என் மனம் 'இனி பொறுப்பதில்லை குலைவாழை எடடா' என்று கர்ச்சித்தது.

மூட்டையைப் பிடித்து நீரிலே மிதக்க விட்டுக் கொல்லும் 'ஜல சமாதி' முறையில் சிரமம் என்பதால் 'குலைவாழை மூட்டைக் கொலை முறை'யைக் கண்டுபிடித்தேன்.  லேப்பிராஸ்கோப் கு . க சிகிச்சை முறையைப் போல இம்முறையும் எளிதானதுடன் உற்பத்தியையும் நிறுத்த வல்லது.  இதற்காக இந்த வருட நோபல் பரிசு ஜோக்காளிக்கு நிச்சயம்.

ஓடும் முயலைப் பிடிப்பதை விட ஓடும் மூட்டையைப் பிடிப்பது கடினமாதலால் வாழைப் பழத்தால் தொட்டாலே போதும். காந்தத்தில் ஒட்டிக்கொண்ட இரும்பைப் போல தப்பிக்க முடியாமல் மூட்டைகள் துள்ளித் துள்ளி சாகும் காட்சி.  ஆஹா!  அருமை!  இந்நவீன முறை மூட்டை ஒழிப்பிற்காக நன்றாய்க் கனிந்த வாழைத்தார் என் வீட்டில் எப்போதும் தயார்!

'எமகாதக' மூட்டைகள் நைட்ஷிப்டை முடித்துக் கொண்டு சுவரேறும் நேரம் 'வானொலி'யில் 'பொங்கும் பூம்புனல்' பெருக்கெடுத்து ஓடும் ஓசை என் காதில் 'நாராசமாய்' விழுகிறது.

படுக்கையிலிருந்தபடியே "சுலோ... சுலோ.. வேகமா வந்து இந்த ரேடியோ சனியனை ஆப் பண்ணு" என்றேன்.

"காலங்கார்த்தாலே ஏன் இப்படிக் காட்டுக் கூச்சலாப் போடறீங்க" என்று என் அருமை மனைவி சுலோச்சனா சுப்ரபாதமாய்க் கேட்டாள்.

"ஒண்ணுமில்லை... இப்பப் பாடின பாட்டைக் கேட்டியா?" என்றேன்.

"எந்தப் பாட்டு?"

"ராத்திரி பூரா மூட்டைத் தொல்லைத் தாங்க முடியலை.. இவன் என்னடான்னா விடிஞ்சதும் விடியாததுமா 'பாதி தூக்கத்தில் கூந்தலைத் தடவி ரசிப்பதில் இன்பம்'ன்னு பாட்டைப் போடறான்"

"அடேங்கப்பா இப்பதான் ஐயாவுக்கு ஞானம் பொறந்திருக்கு" என்று (மண்டு மனுசங்கிறதை சொல்லாமல்) சொல்லி சுலோ என் கன்னத்தைக் கிள்ளுகிறாள்.  செல்லமாகத்தான்.  ஆனால் எனக்கு பிளேடு வெட்டிய மாதிரி எரிவதை எப்படிச் சொல்ல?

"வேற வீடு பாருங்கன்னு சொன்னா.... கேட்டாத்தானே?"  என்று அலுத்துக் கொள்கிறாள்.

"சுலோ... 5000 ரூபாய் வாடகையிலே சென்னையில் வீடு சீக்கிரம் கிடைக்குமாக்கும்?  கொஞ்ச நாள் பொறுத்துக்க"என்று நாளைப் போவார் நாயனாராய்ப் பதில் சொல்லி விட்டு டூத்பேஸ்ட் பிரஸ்யுடன் கினற்றடிக்குச் சென்றேன்.  அங்கே பக்கத்து வீட்டு ராமுடுவும் தன் நாலைந்து பற்களுக்கு மெருகேற்றிக் கொண்டிருந்தார்.

"குட்மார்னிங்" என்று வரவேற்றார்.

"ஆமா... ஆமா..  மார்னிங் ஆனாலே குட் தான்.  நைட்ல நிம்மதியா தூங்கவா முடியுது?" என்றேன்.

"கல்யாணமாகி ஆறு மாதமாகலே.. அதுக்குள்ளே அலுத்துக்கறீங்களே"
"அட நீங்க ஒண்ணு..  மூட்டைத் தொல்லைன்னு சொல்ல வந்தேன்.. ஆமா...  உங்க வீட்டுலே எப்படி?"
 
"நம்ம ரெண்டு பேர் வீட்டுக்கும் நடுவுல ஒரே ஒரு தடுப்புச் சுவர்தான்.  ஆனா ஆச்சர்யம்.... மூட்டை ஒண்ணு கூட இல்லையே..!"

"ஒன் வீட்டுக்கு ஏன்யா மூட்டை வரப்போவுது?  ஏற்கெனவே நீரு ஒரு கொலஸ்ட்ரோல் வியாதி கேஸு..   நாலு பையங்களுக்கும் வியாதியை உயில் எழுதாச் சொத்தா வேற குடுத்திருக்கீங்க..  நமக்கேன் இந்த வியாதின்னுதான் மூட்டைகள் என் வீட்டுக்கு வந்திடுச்சோ!  என்னவோ!' என்று சொல்ல நினைத்தேன்.  பெரியவராச்சே..  விட்டு விட்டேன்.

குளித்து முடித்து சாப்பிட்டபின் ஆபீஸ் கிளம்புகிறேன்.  என் சமதர்மபத்தினி தப்பு...தப்பு...சகதர்மபத்தினி தன் 'வேண்டுகோளை' மீண்டும் புதுப்பிக்கிறாள்.

"என்னங்க எனக்கு நகை நட்டு வேணும்னு கேட்கலை..  பட்டுச்சேலை வேணும்னு கேட்கலை.   மூட்டையை ஒழிக்கிறதுக்கு மருந்து வேணும்னுதான் கேட்கிறேன்"  என்று அழாத குறையாகக் கூறினாள்.

"மருந்து அடிப்பதில் உள்ள சிக்கல் உனக்குத் தெரியாதா?"

"அதிலும் சிக்கல்தானா?  மருந்தைக் கொண்டு வாங்க.. குடிச்சாவது ஒழிஞ்சி போறேன்"என்றாள்.

"மூட்டைக்கு பயந்து உயிரைப் போக்கிக்கிடறதான்னு எல்லாரையும் கேட்க வச்சிடாத  சாயந்திரம் ஒரு திட்டத்தோட வர்றேன்" என்று வாக்குறுதி அளித்து விட்டு ஆபிசுக்குக் கிளம்பினேன்.

நண்பர்கள் குழாமில் என் இராக்கால சோகங்களைச் சொன்னேன். 

"இத்தனை நாள் மூட்டைக்கடிக்குப் பின்னாலும் உன் உடம்பில் இரத்தம் ஓடுதாடா?" என்று கமெண்ட் அடித்து முடித்து சிரித்து முடித்தபின் என் மனைவி சொன்ன ஆலோசனையையே கூறினார்கள்.

"இருக்கற ஒத்த அறையிலயும் மருந்தடிச்சுட்டு நாங்க எங்க நடு ரோட்லயா தங்கறது?  சாப்பிடறது?  மதுரைக்காரனான எனக்கு சொந்தம்னு சொல்லிக்க யார்ரா இருக்கா?"

நண்பர்கள் ஆளைவிட்டால் போதுமென்று 'ப்யூஸ்' ஆனார்கள்.  எவனாவது சொல்லணுமே என் வீட்டுக்கு வாடா என்று?  அவர்களின் சுயரூபத்தைத் தரிசிக்க வைத்த மூட்டைகளே உங்களுக்கு உளமார்ந்த நன்றி.

"சார் உங்களை மானேஜர் கூப்பிடுறார்"

இரவிலே மூட்டைக்கடி பகலிலே இவர் கடியா என்று நினைத்துக் கொண்டே மானேஜரின் அறைக்குள் நுழைந்தேன்.

"வெரி சாரி ஜோக்காளி.. துக்கம் தொண்டையை அடைக்குது..  பேசவே முடியலே!  கையெழுத்துப் போட்டு...  இந்த... ஆர்டரை வாங்கிக்குங்க!" என்றார்.

ஆர்டரைப் பார்க்கிறேன்.  கண்ணெதிரே...

வெள்ளைத் தேவதைகள் பறக்கிறார்கள்.  வெண்புறாக்கள் சிறகடித்துப் பறக்கின்றன.  வசந்த காலப் புஷ்பங்கள் சிரிக்கின்றன.

மூட்டைக் கடியிலிருந்து விடுதலை!  விடுதலை!

"மிஸ்டர் ஜோக்காளி.. என் இருபத்தைந்து வருஷ சர்வீஸ்ல டிரான்ஸ்பரை இவ்வளவு சந்தோஷமா ஏத்துக்கிற அதிசயத்தை இப்பதான் பார்க்கிறேன்.  உங்க மனோ தைரியத்துக்கு என் பாராட்டுகள்" என்று கை குலுக்குகிறார் மானேஜர்.



என் மகிழ்ச்சியின் காரணம் அவருக்குத் தெரியாது.  "இதென்ன சார் அதிசயம்?  வழக்கத்துக்கு விரோதமா உங்கமுகத்துல தெரியுற புன்னகையை விடவா?" என்று சொல்ல நினைத்தேன்.  சொல்லவில்லை. காரணம் உங்களுக்குத் தெரியாதா என்ன?

42 கருத்துகள்:

  1. பகவான்ஜியின் கதையைப் படித்தேன். பகிர்வுக்கு நன்றி. நகைச்சுவையைப் போலவே கதையிலும் ஒரு முத்திரை.

    பதிலளிநீக்கு
  2. எழுபதுகளின் இறு தியில் கதை எழுதப்பட்டதா ?

    அப்ப உங்கள் வயது 24 முதல் 26 என்று வைத்துக்கொண்டால், இப்போ,30 ம் 16 ம் 46 கூட்டிக் கொண்டால், 70 முதல் 74 ஆகிறதா உங்களுக்கு !!

    மூட்டைப் பூச்சி 60 முதல் 80 வரையில் இருந்த அளவுக்கு இப்போது இல்லையோ ?

    கொசுக்கள் ஆக்கிரமித்தபின் மூட்டைப்பூச்சி இனம் வலுவற்று போயிற்று என நினைக்கிறேன்.

    "இராக்கால சோகங்களைச் சொன்னேன். "

    சோகங்களும் சுகங்களும் இராக்காலங்களில்
    மாறி மாறி வருவது இயற்கையே.

    இப்ப எப்படி !! ???

    சுப்பு தாத்தா.

    பதிலளிநீக்கு
  3. நல்ல கதை. தில்லியின் Bachelor வாழ்க்கையில் இப்படி மூட்டைப் பூச்சி தொல்லைகளால் கஷ்டப்பட்டிருப்பதால் அதன் தொல்லை புரிகிறது.

    பதிலளிநீக்கு
  4. ஜோக்காளியின் கதை அருமை....
    நகைச்சுவையாக இருந்தது....
    அந்த பால் வடியும் முகத்தில்
    பாருங்கைய்யா டிரான்ஸ்பர்
    ஆர்டரை வாங்கிய சந்தோஷ த்தை...

    பதிலளிநீக்கு
  5. முன்னொரு காலத்தில் (1965-1970) மூட்டைப்பூச்சிக் கடிகள் நானும் பட்டுள்ளதால் இந்தக்கதையை நன்கு ரஸிக்க முடிகிறது.

    மூட்டைப்பூச்சி கடிபோலவே ஆங்காங்கே சில எழுத்துப்பிழைகள் தென் படுகின்றன.

    கதாசிரியருக்குப் பாராட்டுகள்.

    இதனை இங்கு வெளியிட்டு படிக்க உதவிய ’எங்கள் ப்ளாக்’ ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம் அவர்களுக்கு என் நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  6. ஒரிஜினல் சைஸ் எது, பிரசுரமான சைஸ் எதுனு புரியலை! போகட்டும். ஒரு காலத்தில் இந்த மூட்டைப்பூச்சிகளோடு போராடி இருக்கோம். ஆகவே புரிந்து கொள்ள முடிந்தது! :)

    பதிலளிநீக்கு
  7. ரசிக்க வைத்த கதை. (நானும் மூட்டைப் பூச்சியால் அவதிப் ப்ட்டிருக்கிறேன்)

    பதிலளிநீக்கு
  8. ரசிக்க வைத்த கதை. (நானும் மூட்டைப் பூச்சியால் அவதிப் ப்ட்டிருக்கிறேன்)

    பதிலளிநீக்கு
  9. நல்ல நகைச்சுவை கதை, எப்படியோ டிரான்ஸ்பர் கிடைத்து மூட்டைப்பூச்சியிடமிருந்து தப்பினார்களே!

    மூட்டைப்பூச்சி தியேட்டர்கள் உண்டு அந்தக் காலத்தில் வீட்டுக்கு வந்து உடைகளை வெந்நீரிலில் போட்டு துவைக்க வேண்டும் உடனே என்பார்கள். மரச்சாமான்களை அடிக்கடி வெயிலில் போட்டு எடுக்க வேண்டும் இல்லையென்றால் மூட்டைப்பூச்சி வந்துவிடும் என்பார்கள். வெளியூருக்கு போவதாய் இருந்தால் மூட்டைப்பூச்சி இருக்கும் வீட்டுக்கு வேண்டாம் என்று பயந்த காலங்கள் உண்டு.

    பதிலளிநீக்கு
  10. ஹாஸ்டல் வாழ்க்கை என்னும் என் பதிவில் மூட்டைப் பூச்சிகளை நாங்கள் சமாளித்ததை எழுதி இருக்கிறேன் அப்போதெல்லாம் லூதியானாவிலிருந்து ஒரு விளம்பரம் வரும் மூட்டைப் பூச்ல்ொசிகளைக் கொல்லும் நிச்சய வழி என்றிருக்கும் பணம் அனுப்பினால் ஒரு பார்சல் வரும் அதில் ஒரு கிண்ணம் சின்ன சுத்தியல் ஒரு தட்டைக்கல் என்றிருக்கும் கொல்லும் முறை மூட்டைப்பூச்சியைப் பிடித்துக் கல்லில் வைத்து சுத்தியால் அடித்து கிண்ணத்தில் நீரில் போடவேண்டும் என்றிருக்கும்

    பதிலளிநீக்கு
  11. நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

    பதிலளிநீக்கு
  12. நன்றி சுப்பு தாத்தா. சுவாரஸ்யமான கணக்கு! ஆமாம்... மூட்டைபூச்சி இனமே அழிந்து விட்டதோ!

    பதிலளிநீக்கு
  13. நன்றி வைகோ ஸார். பிழைகளை முடிந்தவரை திருத்தி விட்டேன்.

    பதிலளிநீக்கு
  14. நன்றி கீதா மேடம். சுருக்கிய வடிவம் மட்டும்தான் வந்திருக்கிறது என்று நினைக்கிறேன். :))))

    பதிலளிநீக்கு
  15. நன்றி கோமதி அரசு மேடம். தஞ்சாவூர் ராஜா கலையரங்கம் தியேட்டரில் நிறையவே மூட்டைப் பூச்சிகள் இருந்தன! அனுபவம் இருக்கிறது!

    பதிலளிநீக்கு
  16. நன்றி ஜி எம் பி ஸார். ஒரு திரைப்படத்தில் வடிவேலு கூட இதை வைத்து காமெடி செய்திருப்பார்!

    பதிலளிநீக்கு
  17. எனது தளத்திலும் அறிஞர் பகவான்ஜி அவர்களின் தளத்தை அறிமுகம் செய்திருந்தேன். அவ்வேளை பகவான்ஜி அவர்கள் நகைச்சுவை மட்டும் எழுதக் கூடியவராகக் கருத முடியாது. அவராலும் கவிதை, கட்டுரை, கதை எனப் பல இலக்கியங்களை ஆக்கக்கூடியவர் எனக் குறிப்பிட்டிருந்தேன். அதற்குச் சான்றாக இன்று தங்கள் தளத்தில் அவரது கதை பகிரப்பட்டதைக் கண்டு மகிழ்ச்சி அடைகின்றேன். சிறந்த படைப்பாளிகளை அடையாளப்படுத்தும் தங்கள் பணியைப் பாராட்டுகின்றேன்.

    பதிலளிநீக்கு
  18. "சுலோ ... சுலோ .. வேகமா வந்து இந்த ரேடியோ சனியனை ஆப் பண்ணு"
    ஹாஹாஹா எப்படி வேகமாக வரமுடியும் அழைக்கும் போதே... ஸ்லோ....

    அருமை ஜி மூட்டைக்கடியால் கூட ஞானிகள் உருவாக முடியும் என்பதை அறிந்தேன் வாழ்த்துகள் புதிய இடத்திலாவது கொசுக்கடி இன்றி வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
  19. கில்லர்ஜி ...
    மனைவியின் பெயரே சுலோ ,இதிலே எப்படி வேகமா வர்றது :)

    பதிலளிநீக்கு
  20. கதை சொல்லப்படும் விதத்தில்தான்
    சுவாரஸ்யம் கூட்டும் என்பதற்கு
    இந்தக் கதையே சாட்சி

    அருமையான கதை
    இதற்கு முன்பு படிக்கவில்லை
    கேட்டு வாங்கிப் போட்டமைக்கு
    மனமார்ந்த நன்றி

    பதிலளிநீக்கு
  21. டியர் ஸ்ரீராம் ஜி....
    பாமினி ஃபாண்ட்டில் இருந்த இக்கதையை சிரமப்பட்டு மீண்டும் டைப் செய்து ,போட்டதற்கு மிக்க நன்றி !

    என் தினசரி பதிவு எல்லாமே மீள்பதிவு அல்ல ,முதலில் நீல நிறத்தில் வருபவை புது படைப்பு ,அதற்கு கீழ் வருபவை மட்டுமே கடந்த ஆண்டுகளின் பதிவுகள்!

    சூரி சிவா அய்யா என் வயதை அறிய ஆவலாய் இருப்பதால் சொல்லி விடுகிறேன் ..இப்போது 56 :)
    படித்துவிட்டு ,கருத்தும் சொல்லி உற்சாகப்படுத்திய அனைவருக்கும் என் உளமார்ந்த நன்றி !

    பதிலளிநீக்கு
  22. ஹா ஹா :) ரசித்தேன் கடியை ...நான் மெட்ராசில் இருந்த வரைக்கும் எங்க வீட்ல மூட்டைபூச்சி பார்கல்லை .கோழி வீட்டுக்குள்ள வந்து போவதால் இதுங்களை அதுங்க சாப்பிடுச்சோ தெரில .
    இங்கே வெளிநாட்டில் ஈரப்பதம் அதிகமிருக்கும் இடதில் இவங்க குடியிருப்பாங்க ..
    ஒரு கார்ட்டூன் கூட ரொம்ப பிரபலமா tv yil போச்சு 2009 களில் my bed bugs என்று குழந்தைங்க விரும்பி பார்ப்பாங்க .
    பகிர்வுக்கு நன்றிகள் எங்கள் ப்ளாக்

    பதிலளிநீக்கு
  23. ஹஹஹாஹ்...செம ...கடியை ரொம்பவெ ரசித்தோம். மூட்டைக்கடியை...வாழ்த்துகள் ஜோக்காளி! ஹரே பக்வான்...ஆவியில் மூட்டைகள் நசுங்கியிருக்கலாம் பகவான்ஜி அதனால்தான் ஆவியில் வெளியானது சுருங்கிருச்சு போல!!!!

    மீண்டும் மைக் பிடிக்காமல் வாழ்த்துகளை உரக்கச் சொல்கின்றோம். எங்கள் ப்ளாகிற்கும் நன்றி பகவான்ஜியின் கதையை இங்கு கேவாபோக வில் பகிர்ந்தமைக்கு!!

    பதிலளிநீக்கு
  24. ஓடும் முயலைப் பிடிப்பதை விட ஓடும் மூட்டையைப் பிடிப்பது கடினமா...??? மூட்டைக்கடியால் கூட ஞானி சொன்னால் அது சரியாகத்தான் இருக்கும்

    பதிலளிநீக்கு
  25. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  26. ஓடும் முயலைப் பிடிப்பதை விட ஓடும் மூட்டையைப் பிடிப்பது கடினமா...??? மூட்டைக்கடியால் உருவான ஞானி சொன்னால் அது சரியாகத்தான் இருக்கும்

    பதிலளிநீக்கு
  27. ஓடும் முயலைப் பிடிப்பதை விட ஓடும் மூட்டையைப் பிடிப்பது கடினமா...??? மூட்டைக்கடியால் உருவான ஞானி சொன்னால் அது சரியாகத்தான் இருக்கும்

    பதிலளிநீக்கு
  28. நன்கு ரசித்துச் சிரித்தேன். மூட்டைப் பூச்சிக்கடியில் நான் அவஸ்தைப்பட்டிருப்பதால், நன்கு ரசிக்க முடிந்தது. கதாசிரியருக்குப் பாராட்டுக்கள். கதையை வெளியிட்ட எங்கள் பிளாக்குக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  29. மிக அருமை பகவான் ஜி. நல்ல கதை ஸ்ரீராம் :)

    பதிலளிநீக்கு
  30. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  31. உங்கவீட்டு மூட்டைப்பூச்சிகள் மட்டும் என்னைக் கவ்விப் பிடித்துக் கொண்டிராவிட்டால், உங்க ஊர் கொசுக்கள் என்னை தூக்கிக் கொண்டு போயிருக்கும்' என்று விருந்தாளி சொல்வதாக இளமையில் படித்த ஜோக் நினைவுக்கு வருகிறது. ரசித்தேன் பகவான்ஜி !

    பதிலளிநீக்கு

  32. அருமை. வாழை வைத்தியம் செய்தாரா தெரியலையே.
    அது இருக்கட்டும். மெத்தையில் எல்லாம் மூட்டைகள் இருக்குமே. அதையும் வேற ஊரூக்கு எடுத்துப் போயிருப்பாரோன்னு எனக்கு இப்ப சந்தேகம்.
    அருமையான கதை ஸ்ரீராம்.வாழ்த்துகள் பகவான் ஜி.

    பதிலளிநீக்கு
  33. வள்ளி சிம்மன் ஜி ...சனியனை மடியில் கட்டிட்டு அலைய முடியுமா ?மெத்தையை குப்பைக்கு தள்ளிட்டாரே :)
    மோகன்ஜி ,உங்கள் ஜோக்கை ரசித்தேன் !
    என் நேற்றைய நன்றிக்கு பிறகு இன்று வந்த அனைவருக்கும் நன்றி !

    பதிலளிநீக்கு
  34. நகைச்சுவையில் கலக்கும் பகவான்ஜி அவர்களின் சிறுகதையும் கலக்கல்...
    வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  35. தாமதமாய் வந்தாலும் வருகையை பதிவு செய்த சே .குமார் ஜி அவர்களுக்கு நன்றி !

    பதிலளிநீக்கு
  36. ரொம்ப தாமதமாய் வந்தாலும் மூட்டைப்பூச்சியை ரசித்தேன்!

    பதிலளிநீக்கு
  37. உங்களை விட தாமதமாய் வந்து ,உங்கள் ரசனைக்கு நன்றி சொல்கிறேன் :)

    பதிலளிநீக்கு
  38. அருமையான பதிவு. எழுத்துப் பிழைகளைத் திருத்தவும். இலங்கை வானொலியின் பொங்கும் பூம்புனலை நினைவு படுத்தியதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  39. பிழைக்கும ,தாமத மறுமொழிக்கும் பொருத்தருள்க !
    பொங்கும் பூம்புனல் கேட்டு மகிழ்ந்த பொற்காலத்தை மறக்க முடியுமா :)
    நன்றி !

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!