செவ்வாய், 31 மே, 2016

கேட்டு வாங்கிப் போடும் கதை :: சிவப்பி




     எங்கள் ப்ளாக்கின் 'இந்த வார கேட்டு வாங்கிப் போடும் கதை' பகுதியில் இடம்பெறும் படைப்பு சகோதரி கீதா மதிவாணன் (கீதமஞ்சரி) அவர்களின் சிறுகதை.

     இவரது தளம் கீதமஞ்சரி.

     என்றாவது ஒருநாள் என்கிற தலைப்பில் அருமையான புத்தகம் ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.  ஆஸ்திரேலிய காடுறை மாந்தர்களின் வாழ்க்கைக் கதைகள்.  ஆஸ்திரேலிய எழுத்தாளர் ஹென்றி லாசன் எழுதிருப்பதன் மொழிபெயர்ப்பு.  அவற்றை அவரது தளத்தில் படித்து ரசித்திருக்கிறேன். 
இவர் ஆஸ்திரேலிய தமிழ் கூட்டுத்தாபனம் இணைய வானொலியில் பங்காற்றுகிறார் என்பது கூடுதல் தகவல்.

     இந்தக் கதை பற்றிய அவரது வரிகளுக்குப் பின்னர் அவர் படைப்பு தொடர்கிறது...


===================================================================


வணக்கம் ஸ்ரீராம்..

     எங்கள் ப்ளாக்கில் வரும் பதிவுகளைத் தொடர்ந்து வாசித்துக்கொண்டிருக்கிறேன்.  கேட்டுவாங்கிப் போடும் கதை வரிசையில் என்னுடையதையும் பரிசீலித்திருப்பதற்கு நன்றி. 

     தினமலர் பெண்கள் மலரில் கற்பூரம் என்னும் கதை வெளியானது. அதற்கு முன் யூத்ஃபுல் விகடனில் சிவப்பி என்னும் கதை வெளியானது. சிவப்பி கதை எனக்கு மிகவும் பிடித்த கதை என்பதால் அந்தக் கதையை இத்துடன் அனுப்புகிறேன். என் புகைப்படத்தையும் இணைத்துள்ளேன். 

     இப்படியொரு வாய்ப்பின் வழி எங்கள் ப்ளாக் வாசகர்களுக்கு என் கதை சென்றடைவதில் மிகுந்த மகிழ்ச்சி. தங்களுக்கென் மனமார்ந்த நன்றி.



சிவப்பிஉருவானகதை

     எனக்கு அப்போது பத்துப் பன்னிரண்டு வயதிருக்கும். கோடை விடுமுறைக்காக பெரியம்மாவின் கிராமத்துக்குப் போயிருந்தேன். பெரியம்மாவின் வீடு ஒரு குளத்தை ஒட்டியிருந்தது. அந்தக் குளத்தில் நான் பார்க்கும்போதெல்லாம் ஒரு வயதான அம்மா கழுத்து மட்டும் மேலே தெரியும்படி நீரில் ஊறிக்கொண்டே இருப்பார். யாருடனும் எதுவும் பேசமாட்டார். ஆனால் தனக்குத்தானே பேசி சிரித்துக்கொள்வார். 

     சில சமயம் கோபமாய் யாரையோ வைவார்.  பெரிய வீட்டுப் பாட்டியம்மா என்றார்கள். மனநிலை சரியில்லை என்றார்கள். காரணம் யாருக்கும் தெரியவில்லை. இருட்டத் துவங்கும் வேளையில் அந்தம்மா குளத்தை விட்டு வெளியேறி வீட்டுக்கு செல்வார், முழு நிர்வாணமாக.


மற்றொரு நிகழ்வும் பெரியம்மாவின் ஊரில் நடந்ததுதான்.  ஊருக்குள் திரிந்துகொண்டிருந்த மனநிலை தவறிய பெண்ணுக்கு  இரண்டாவது குழந்தை பிறந்திருந்தது. இந்த சம்பவமும் என்னை பாதித்தது. அன்று என்னை பாதித்த இரு சம்பவங்களையும் இணைத்து ஒரு கதையாக்கிவிட்டேன். இதுவே சிவப்பி உருவான கதை.

அன்புடன்
கீதா மதிவாணன்



=====================================================================

சிவப்பி



கீதமஞ்சரி

குளம் சிவப்பியின் குற்றச்சாட்டுகளுக்குக் காதுகொடுத்தபடி சலனமற்று இருந்தது.சிவப்பி குளத்தை அமைதியாய் இருக்கவிடுவதே இல்லை. நீருக்கு மேலிருந்த தன் கழுத்தை சற்றே உள்ளிழுத்து வாய் கொள்ளா நீரை உறிஞ்சி தலையைத் தூக்கி எட்டிய வரைக்கும் வேகமாய்க் கொப்பளித்துத் துப்பினாள். அவளுள் இருபது வருட கோபமும் இன்னும் அடங்கியபாடில்லை. குளம் வழக்கம்போல் பொறுமையாய் இருந்தது.

முன்னெல்லாம் குளமும் பதில் சொல்லிக்கொண்டிருந்தது. 'என்னை நம்பு, உன்னைபோலவே நானும் ஒரு பெண், நான் அப்படிச் செய்வேனா?' என்றெல்லாம் அவளுக்குப் புரியவைக்க முயன்றது. ஆனால் சிவப்பி அதன் பேச்சுக்கு செவிசாய்க்கவே இல்லை. குளத்து நீரைக் கோழை என்றாள். கொலைகாரி என்று அழுதாள். அவளுக்காகப் பரிதாபப்பட்டு குளமும் அழுதது. அதன் கண்ணீர் வெளித்தெரியாக் காரணத்தால் சிவப்பிக்குக் குளத்தின் துயரம் புரியவில்லை. யாருமற்றப் பொழுதுகளில் குளத்துடன் ஆவேசமாய் சண்டையிடும் அவள்,  குளக்கரையில் எவருடைய நடமாட்டமாவது தென்பட்டால் அமைதியாகிவிடுவாள்.

இன்றும் சிவப்பி, தன் மனக்குமுறலைக் குளத்தில் கொட்டிக்கொண்டிருந்த வேளை, கொலுசுச்சத்தம் கேட்கவும் அமைதியானாள். ஒரு இளம்பெண் அழுக்குத் துணிகள் அடைத்த அலுமினிய அன்னக்கூடையை இடுப்பில் அணைத்துப் பிடித்தபடி படிகளில் இறங்கிக்கொண்டிருந்தாள்.

தண்ணீரில் பூத்துநிற்கும் தாமரை போல் சிவப்பியின் தலை மட்டும் நீருக்கு மேலே தெரிந்தது. வெள்ளத்தனைய மலர்நீட்டம் என்பதுபோல் தண்ணீர் முழந்தாளளவு இருந்தாலும் சரி, ஆளை மூழ்கடிக்கும் அளவு இருந்தாலும் சரி, சிவப்பிக்கு எல்லாமே கழுத்தளவுதான்.

அந்தப்பெண் சிவப்பியைப் பார்த்து சிநேகமாய்ச் சிரித்தாள். அவளுக்கு நினைவு தெரிந்தநாளிலிருந்தே இந்தக் குளமும் சிவப்பியும் பரிச்சயம். பாவாடையை மார்புவரை ஏற்றிக் கட்டிவிட்டு மற்ற உடைகளைக் களைந்து, கொண்டுவந்த துணிகளோடு துவைத்துவிட்டு பின் குளத்துநீரில் மிதந்த சோப்புநுரைகளைக் கைகளால் விலக்கியபடி நீரில் இறங்கினாள்.

அவளுக்கு வயது பதினெட்டு முதல் இருபதுக்குள் இருக்கலாம். சிவப்பி அவளைப் பார்த்தால் சற்று இளகித்தான் போவாள். சிவப்பிக்கு தன் வயது தெரியாது. குளத்துக்கும் அதன் வயது தெரியவில்லை. ஊற்றெடுக்கத் துவங்கிய நாளைப் பற்றிய எந்தக் குறிப்பும் அதன் நினைவேட்டில் இல்லை. சிவப்பி மட்டுமே இருபது வருடங்களாய் அதன் நினைவை, எண்ணத்தை, சிந்தனையை ஆக்கிரமித்திருந்தாள். அவளைக் குளிர்விப்பது மட்டுமே குளத்தின் அன்றாடக் குறிக்கோளாக இருந்தது. செய்யாத தவறுக்காக இப்படித் தன்னைப் பழி வாங்குகிறாளே என்று சிவப்பி மேல் அவ்வப்போது கோபம் வந்தாலும் அவளது அறியாமையை எண்ணி இரங்கவும் செய்தது.

அந்தப் பெண் சிவப்பியிடமிருந்து பாதுகாப்பான தூரத்திலேயே குளித்துக்கொண்டிருந்தாள். சிவப்பி கண்களை எடுக்காமல் அவளையே பார்த்துக்கொண்டிருந்தாள். சிவப்பி இதுபோல் அமைதியாய் இருக்கும் வேளைகளில்தான் குளம் தன்னை ஆசுவாசப்படுத்திக்கொள்ள முடிகிறது. எதையும் யோசிக்க முடிகிறது. இப்போதும் குளம் யோசித்தது. சிவப்பியின் மகளும் இன்று உயிரோடு இருந்திருந்தால் இவள் வயதில் தானே இருப்பாள்?  இருபது வருடங்களுக்கு முந்தைய நிகழ்வுகளுக்குள் மூழ்கத்தொடங்கியிருந்தது.

சிவப்பிக்கும் இந்தக் குளத்துக்கும் அப்படி என்ன உறவும் பகையும்? அதற்குமுன் சிவப்பியைப் பற்றிச் சொல்லவேண்டும். நதிமூலம் போல் சிவப்பியின் மூலமும் யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. சிவப்பியின் மூலமாகவும் அது தெரியவரவில்லை.

கிட்டத்தட்ட இருபது வருடங்களுக்கு முன் பருவ எழில்கள் பூத்துக்குலுங்கும் பூஞ்சோலையென ஊருக்குள் தோன்றினாள். தெருக்களில் அரைகுறை ஆடையுடன் திரிந்துகொண்டிருந்த அவளைப்  பார்த்தவுடனேயே பதைபதைத்தனர் பெண்கள். பல்லிளித்தனர் ஆண்கள். காட்டிய பற்களைப் பதம் பார்த்தன அவள் கைக்கற்கள். அசுரத்தனத்தோடு நின்றவளை மிருகத்தனத்தோடு தாக்கினர் மக்கள். மூர்க்கத்துடன் திரிந்தவள், பசிக்கும்போது மட்டும் அமைதியடைந்தாள். இரவுநேரங்களில் குளக்கரைப் படிக்கட்டுகளில் படுத்துக்கொண்டாள்.

அவள் நல்ல நிறமாக இருந்தாள். நடையின் நளினம் மேல்தட்டுப் பெண்களை நினைவூட்டியது. அவள் பெரும்பாலும் கடைவீதியின் முனையில் இருந்த டீக்கடை வாசலிலேயே நின்றுகொண்டிருந்தாள். அவளை வேடிக்கை பார்க்கவென்றே ஒரு கூட்டம் கடைக்கு வரத் தொடங்கியது. டீக்கடைக்காரர் எத்தனை விரட்டியும் இவள் நகரவில்லை. 'ஏ... சிவப்பி...இந்தா'   டீக்கடைக்காரர் கொடுத்த ஒற்றை ரொட்டியோடு இவளுக்கு சிவப்பி என்ற நாமகரணமும் சூட்டப்பட்டது.

பரிதாபப்பட்ட சிலரின் தயவால் சிவப்பி வயிறு வளர்த்தாள். கூடவே ஒரு உயிரும் வளர்த்தாள். கற்பிழந்ததால் சுயம் இழந்தாளா? சுயம் இழந்ததால் கற்பிழந்தாளா? என்று பட்டிமன்றம் வைத்துப் பார்த்தது ஊர்.  அவள் கர்ப்பத்திற்குக் காரணகர்த்தாவைக் கண்டுபிடிக்கும் முயற்சியிலும் இறங்கியது. முடிவில் தன்னைத் தவிர எல்லோருமே அயோக்கியர்கள் என்ற முடிவுக்குதான் ஒவ்வொருவரும்  வரவேண்டியிருந்தது.

வீங்கிய வயிறு வெளித்தெரியும்படி சுற்றிய அவளைப் பார்த்த பார்வைகளில் பரிதாபம், இளக்காரம், அருவருப்பு, சமூகத்தின் மேலான கோபம், வெறுப்பு போன்ற பல உணர்வுகள் தென்பட்டன. ஆனால் அவளுக்கு உதவும் குணம் எவரிடத்தும் தென்படவில்லை.

ஒருநாள் சிவப்பி காணாமற்போனாள். சிலர் கவலைப் பட்டனர், சிலர் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர். அவளைப் பற்றிய பேச்சில்லாமல் மறந்திருந்த ஒருநாளில் கைப்பிள்ளையுடன் மீண்டும் ஊருக்குள் பிரவேசமானாள். இம்முறை அவள் ஆங்காரத்தின் உச்சத்தில் இருந்தாள். பசிக்கு வேண்டுவதையும் மிரட்டிக் கேட்டாள். குழந்தைகள் உண்ணுவதை பறித்து உண்டாள். கடைவீதியில் பலர் மத்தியில் திறந்த மார்பில் குழந்தைக்குப் பாலூட்டினாள். அதைப் பார்த்த சில வக்கிரக் கண்கள் தங்கள் பசியாற்றிக்கொண்டன.

குட்டிக்குரங்கு தன் தாயை இறுகப் பற்றியிருப்பதுபோல் குழந்தையை எந்நேரமும் இறுகப்பற்றியிருந்தாள் அவள். கொடிய உலகத்தில் பிறந்திருக்கும் உணர்வற்று குழந்தை அவ்வப்போது சிரித்தது. அழகிய விக்கிரகம் மாதிரி ஒரு பெண்குழந்தையைப்  பைத்தியக்காரி ஒருத்தி  பெற்றிருப்பதைக் கண்டு, மலட்டுப்பட்டம் சுமத்தப்பட்டு தாய்வீடு விரட்டப்பட்ட ஒருத்தி தலையில் அடித்துக்கொண்டு அழுதாள். குழந்தை அவளைப் பார்த்தும் சிரித்தது.

ஒரு விடியற்காலையில் ஊர் சிவப்பியின் அலறலில் கண்விழித்தது. உரத்தக் குரலில் ஓலமிட்டபடி வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு வீதிகளில் வெறிபிடித்ததுபோல் ஓடிக்கொண்டிருந்தாள், சிவப்பி. கையில் குழந்தை இல்லை, உடலில் ஒட்டுத்துணியில்லை. நிர்வாணமாக.... நிராதரவாக.... ஓலமிட்டபடி ஓடியவளை நிர்தாட்சண்யமின்றி கல்லெறிந்து விரட்டிக்கொண்டிருந்தன, சில கல்நெஞ்சங்கள்.

குழந்தை எங்கே? என்னவாயிற்று? ஏன் இந்த அலங்கோலம்? எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு விடைகள் கொடுக்கப்படவில்லை.  விடைகள் தானாகவே கிடைத்தன. குட்டிகளோடு இருக்கும் பெண்மிருகங்களை தம் இச்சைக்கு உட்படுத்த ஆண் மிருகங்கள் முதலில் செய்வது குட்டிகளைக் கொல்வதுதானாமே.... இங்கேயும் ஒரு மிருகமோ... பல ஒன்றிணைந்தோ.... அந்தக் காரியத்தை ஆற்றியிருக்கின்றன என்பது குளத்தில் மிதந்துவந்த குழந்தையின் சடலம் உறுதிப்படுத்தியது.

குழந்தையைக் கொன்றது குளம்தான் என்று உறுதியாக நம்பினாள் சிவப்பி. அந்தக் குளத்து நீரைக் கால்களால் மிதித்தாள், கைகளால் அறைந்தாள். கையில் குவித்து வாய் நிறைய உறிஞ்சி வேகமாய் உமிழ்ந்தாள். குழறிய வார்த்தைகளால் வசவுகளைக் கொட்டினாள். குமுறி அழுதாள். என்ன செய்தும் அவள் உக்கிரம் தணியவில்லை. ஊர் வெறுமனே வேடிக்கைப் பார்த்தது. அவளது விம்மிய மார்பகங்களின் வலியைத் தீர்க்க இயலாத வெறுமையை எண்ணி குளம் கலங்கியது.

சிவப்பி குளத்தினுள் முங்கி முங்கி தன் சிசுவைத் தேடினாள். ஒவ்வொருமுறையும் எதையோ பற்றிபடி மேலே வந்து ஆர்வம் தெறிக்கும் கண்களால் வெறித்தாள். அது பழந்துணியாகவோ.... பாறாங்கல்லாகவோதான் இருந்தது. ஆனாலும் அவள் அசரவில்லை. அன்றிலிருந்து குளமே அவள் குடியிருப்பானது. அவளுக்காக குளம் அழுதது. கொஞ்சநாள் சிவப்பிக்குப் பயந்து குளக்கரைப் பக்கம் புழக்கம் தவிர்த்திருந்த ஊர், பிறகு அவளை அலட்சியப்படுத்தி மீண்டும் புழங்கத்தொடங்கிவிட்டது.

அன்று கோரதாண்டவம் ஆடியபடி குளத்தினுள் குதித்தவள்தான், இன்றுவரை குளத்தைத் தன் குழந்தையைக் கொன்ற கொலைகாரியாகவே பார்த்து கொந்தளித்துக்கொண்டிருக்கிறாள். அவளைக் குளிர்விக்கத்தானோ என்னவோ கோடையிலும் குறைந்த அளவு தண்ணீரையாவது தக்கவைத்துக்கொள்ளத் தொடங்கியது குளம்.

இருபது வருடத்துக்கு மேலாகியும் இன்னும் அவள் சோகத்தைக் கரைக்க முடியவில்லை குளத்து நீரால். சிவப்பி ஓய்ந்துவிட்டாள். முன்பு போல் இப்போது சிவப்பியால் முங்கியெழ முடியவில்லை. என்றாவது தன் குழந்தையைக் கண்டுபிடிதுவிடுவோம் என்ற நம்பிக்கையும் அவளுள் தளரத் தொடங்கியது. வெறுமனே குளத்திடம் சண்டையிட்டபடி தன் குழந்தையைத் திருப்பித் தரும்படி வேண்டிக்கொண்டிருக்கிறாள்.

சலனம் கேட்டு குளம் தன்னினைவுக்கு வந்தது. அந்தப்பெண் குளித்துமுடித்துவிட்டு மேற்படிக்கட்டில் நின்றபடி உடைமாற்றிக்கொண்டிருந்தாள். கொண்டுவந்திருந்த பையிலிருந்து பொட்டலம் ஒன்றை எடுத்து படிக்கட்டில் வைத்துவிட்டு சிவப்பியைப் பார்த்துப் புன்னகைத்துவிட்டுப் போனாள்.

சிவப்பி ஆர்வத்துடன் குளத்தினின்று வெளியேறி அதை நோக்கிப் போக... அவள் நிர்வாணத்தை தன் நீர்த்துளிகளால் மறைக்க முயன்று தோற்றது குளம்.

51 கருத்துகள்:

  1. மனம் தொட்ட கதை.... பாராட்டுகள் கீதமஞ்சரி......

    பதிலளிநீக்கு
  2. கீதமஞ்சரியின் பதிவுகளை அவரது தளத்தில் வாசித்துவருகிறேன். தற்போது அவரிடமிருந்து கதையை வாங்கி பகிர்ந்தமைக்கு நன்றி. அவருக்கு பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  3. சகோதரி கீத மஞ்சரியின் கதை மனதை கலங்கடிக்கிறது நண்பரே
    நன்றி
    தம+1

    பதிலளிநீக்கு
  4. உயர்தரமான கதை.மனதை உருக வைக்கும் கதைக் களம். வாழ்த்துகள் கீதா மேடம்

    பதிலளிநீக்கு
  5. உயர்தரமான கதை.மனதை உருக வைக்கும் கதைக் களம். வாழ்த்துகள் கீதா மேடம்

    பதிலளிநீக்கு
  6. மனதைக் கலங்க அடித்த கதை! வாழ்த்துகள் வெளியிட்ட உங்களுக்கும், எழுதிய கீதமஞ்சரிக்கும்.

    பதிலளிநீக்கு
  7. "கதை சொல்லத் தெரிந்தவர்கள் சொல்கிறார்கள்.. நாம் கேட்டுக் கொள்கிறோம்.." என்று பிரமிப்பேற்படுத்தும் வகையில் கதை சொல்லத் தெரிந்தவர் சொன்ன கதை இது.

    எல்லாவற்றையும் விலாவரியாகச் சொல்லத் தேவையில்லை.. சிலவற்றை வாசகரின் யூகத்திற்கும் அவர்கள் கற்பனைக்கும் விட்டுச் செல்வது சிறந்த எழுத்தாளர்களின் சிறப்பு. அந்த வரிசையில் கீதமஞ்சரியும் சேர்ந்து கொள்கிறார்.

    குளமும் ஒரு கதாபாத்திரமான அழகும் இவரால் சாத்தியப்பட்டிருக்கு.

    'சிவப்பி ஏன் குளத்தைக் கண்டு குமுற வேண்டும்?' என்று விடை தெரியாத வினா. குளத்திற்குக் கூட அதற்கான விடை தெரிந்திருக்க வில்லை என்பது தான் வேடிக்கை. செய்யாத தவறுக்காக இப்படித் தன்னைப் பழி வாங்குகிறாளே என்று சிவப்பி மேல் அவ்வப்போது கோபம் வந்தாலும் அவளது அறியாமையை எண்ணி இரங்கவும் செய்யும் குளம்.

    சிவப்பி, குளம் தவிர இன்னும் இரண்டு பேர். இருபது வருடங்களுக்கு முன் தொலைந்து போன சிவப்பியின் குழந்தையே உருவெடுத்து வந்த மாதிரி துணி துவைத்துக் குளித்துப் போக வரும் அந்தப் பெண் ஒருத்தி. கதையின் கடைசிப் பகுதியில் ஒரு பொட்டலம் வேறு இவள் வைத்து விட்டுப் போக சிவப்பி ஆவலுடன் அதை நோக்கிப் போக..

    மலட்டுப்பட்டம் சுமத்தப்பட்டு தாய்வீடு விரட்டப்பட்ட இன்னொருத்தி வேறே.

    நம் யூகங்கள் அலைபாய கதாசிரியர் ரொம்பவே மெனக்கெட்டிருக்கிறார்.

    நம் தமிழகப் பத்திரிகைகளைப் பற்றித் தான் நமக்குத் தெரியுமே?.. அவர்கள் ஓவியம் தீட்டுவதற்காகவே தீனியாகிப் போகிற கதையின் அந்தக் கடைசி வரியும். 'யூத்ஃபுல் விகடன்' தன் யூத்ஃபுல்லான சிந்தனையில் என்ன செய்ததோ, தெரியவில்லை!

    பதிலளிநீக்கு
  8. கேட்டுவாங்கிப்போடும் கதை வரிசையில் இன்று என் கதையைப் பிரசுரித்தமைக்கு நன்றி ஸ்ரீராம். கதையை எழுதி ஐந்து வருடங்கள் ஆன நிலையில் இன்றும் என் மனத்துக்கு நெருக்கமாய் உணரும் கதை இது. இன்று எங்கள் ப்ளாக் வாயிலாய் பலரையும் சென்றடைந்திருப்பதில் மிகவும் மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
  9. வெங்கட் நாகராஜ் said...
    \\மனம் தொட்ட கதை.... பாராட்டுகள் கீதமஞ்சரி......\\

    மிகவும் நன்றி வெங்கட்

    பதிலளிநீக்கு
  10. Dr B Jambulingam said...
    \\கீதமஞ்சரியின் பதிவுகளை அவரது தளத்தில் வாசித்துவருகிறேன். தற்போது அவரிடமிருந்து கதையை வாங்கி பகிர்ந்தமைக்கு நன்றி. அவருக்கு பாராட்டுகள்.\\

    மிகவும் நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு
  11. கரந்தை ஜெயக்குமார் said...
    \\சகோதரி கீத மஞ்சரியின் கதை மனதை கலங்கடிக்கிறது நண்பரே
    நன்றி\\

    மிகவும் நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு
  12. டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...
    \\உயர்தரமான கதை.மனதை உருக வைக்கும் கதைக் களம். வாழ்த்துகள் கீதா மேடம்\\

    மிகவும் நன்றி முரளிதரன்.

    பதிலளிநீக்கு
  13. வலிப்போக்கன் - said...
    \\அருமை..\\

    மிகவும் நன்றி வலிப்போக்கன்.

    பதிலளிநீக்கு
  14. Geetha Sambasivam said...
    \\மனதைக் கலங்க அடித்த கதை! வாழ்த்துகள் வெளியிட்ட உங்களுக்கும், எழுதிய கீதமஞ்சரிக்கும்.\\

    மிகவும் நன்றி கீதா மேடம்.

    பதிலளிநீக்கு
  15. ஜீவி said...
    \\"கதை சொல்லத் தெரிந்தவர்கள் சொல்கிறார்கள்.. நாம் கேட்டுக் கொள்கிறோம்.." என்று பிரமிப்பேற்படுத்தும் வகையில் கதை சொல்லத் தெரிந்தவர் சொன்ன கதை இது.

    எல்லாவற்றையும் விலாவரியாகச் சொல்லத் தேவையில்லை.. சிலவற்றை வாசகரின் யூகத்திற்கும் அவர்கள் கற்பனைக்கும் விட்டுச் செல்வது சிறந்த எழுத்தாளர்களின் சிறப்பு. அந்த வரிசையில் கீதமஞ்சரியும் சேர்ந்து கொள்கிறார்.\\

    உங்களிடமிருந்து பாராட்டு பெறுவதில் மிகவும் மகிழ்ச்சி. நன்றி ஜீவி சார்.

    \\குளமும் ஒரு கதாபாத்திரமான அழகும் இவரால் சாத்தியப்பட்டிருக்கு.

    'சிவப்பி ஏன் குளத்தைக் கண்டு குமுற வேண்டும்?' என்று விடை தெரியாத வினா. குளத்திற்குக் கூட அதற்கான விடை தெரிந்திருக்க வில்லை என்பது தான் வேடிக்கை. செய்யாத தவறுக்காக இப்படித் தன்னைப் பழி வாங்குகிறாளே என்று சிவப்பி மேல் அவ்வப்போது கோபம் வந்தாலும் அவளது அறியாமையை எண்ணி இரங்கவும் செய்யும் குளம்.

    சிவப்பி, குளம் தவிர இன்னும் இரண்டு பேர். இருபது வருடங்களுக்கு முன் தொலைந்து போன சிவப்பியின் குழந்தையே உருவெடுத்து வந்த மாதிரி துணி துவைத்துக் குளித்துப் போக வரும் அந்தப் பெண் ஒருத்தி. கதையின் கடைசிப் பகுதியில் ஒரு பொட்டலம் வேறு இவள் வைத்து விட்டுப் போக சிவப்பி ஆவலுடன் அதை நோக்கிப் போக..

    மலட்டுப்பட்டம் சுமத்தப்பட்டு தாய்வீடு விரட்டப்பட்ட இன்னொருத்தி வேறே.

    நம் யூகங்கள் அலைபாய கதாசிரியர் ரொம்பவே மெனக்கெட்டிருக்கிறார்.\\

    கிட்டத்தட்ட ஐந்து வருடங்களுக்கு முன் கதையெழுதுவதில் என் ஆர்வம் உச்சத்தில் இருந்தபோது எழுதிய கதை. இதுவரை எழுதிய கதைகளுள் என் மனத்துக்கு நெருக்கமானவை என்பவற்றை விரல்விட்டு எண்ணிவிடலாம். அத்தகைய கதைகளுள் இதுவும் ஒன்று.

    \\நம் தமிழகப் பத்திரிகைகளைப் பற்றித் தான் நமக்குத் தெரியுமே?.. அவர்கள் ஓவியம் தீட்டுவதற்காகவே தீனியாகிப் போகிற கதையின் அந்தக் கடைசி வரியும். 'யூத்ஃபுல் விகடன்' தன் யூத்ஃபுல்லான சிந்தனையில் என்ன செய்ததோ, தெரியவில்லை!\\

    நல்லவேளையாக அவர்கள் அப்படி எதுவும் செய்துவிடவில்லை.. இக்கதைக்கான அவர்களுடைய ஓவியத்துடனேயே நான் இக்கதையை என் தளத்தில் பதிவாக்கினேன். அந்த ஓவியம் இங்கே.

    http://geethamanjari.blogspot.com.au/2011/08/blog-post_20.html

    உற்சாகமூட்டும் நீண்டதொரு கருத்துரைக்கு மிக்க நன்றி ஜீவி சார்.

    பதிலளிநீக்கு
  16. மனதை தொட்ட கதை! அருமையான முடிவு! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  17. கீதா மதிவாணன் எழுத்துக்களை நான் ரசிப்பதுண்டு ஏனோ தானோ வென்று இல்லாமல் உணர்ச்சிகள் மிகுந்து இருக்கும் நேரில் பரிச்சயமாகும் கதாமாந்தர்களை கதையில் உலாவ விட நுணுக்கமாக அவர்களை அணுகத் தெரிய வேண்டும் கீதா மதிவாணன் கை தேர்ந்தவர் பாராட்டுக்கள்

    பதிலளிநீக்கு
  18. சகோ திருமதி கீதமஞ்சரி அவர்களுக்கு வாழ்த்துகள் நல்லதொரு கதையை வெளியிட்ட நண்பருக்கு நன்றிகள் – கில்லர்ஜி

    பதிலளிநீக்கு
  19. மனம் என்னவோ செய்துவிட்டது. கண் முன் கதை விரிந்தது. குளமும் கதையின் கதாபாத்திரமாய் விரிந்தது. கீதா மதிவாணன் அக்காவின் எழுத்து அப்பேர்ப்பட்டது! மிகவும் ரசிப்பவர்கள் நாங்கள். எழுத்தும், நடையும், கதையும் அத்தனை நுணுக்கமாக...அதுவும் சிறிய வயதில் கண்ட காட்சிகள் மனதைத் தொடும் கதையாக....அருமை அருமை...

    வாழ்த்துகள், பாராட்டுகள் கீதா மதிவாணன் அவர்களுக்கு/அக்காவிற்கு

    இத்தனை அருமையான ஒரு கதையைப் பகிர்ந்த எங்கள் ப்ளாகிற்கும் எங்கள் வந்தனங்கள்!

    பதிலளிநீக்கு
  20. மிகவும் அருமையான கதைக்கருவை, வெகு அழகாகக் கையாண்டு, அற்புதமாகவும் தனித்திறமையுடனும் எழுதி அசத்தியுள்ள கதாசிரியர் அவர்களுக்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள் + நல்வாழ்த்துகள்.

    //பரிதாபப்பட்ட சிலரின் தயவால் சிவப்பி வயிறு வளர்த்தாள். கூடவே ஒரு உயிரும் வளர்த்தாள். கற்பிழந்ததால் சுயம் இழந்தாளா? சுயம் இழந்ததால் கற்பிழந்தாளா? என்று பட்டிமன்றம் வைத்துப் பார்த்தது ஊர். அவள் கர்ப்பத்திற்குக் காரணகர்த்தாவைக் கண்டுபிடிக்கும் முயற்சியிலும் இறங்கியது. முடிவில் தன்னைத் தவிர எல்லோருமே அயோக்கியர்கள் என்ற முடிவுக்குதான் ஒவ்வொருவரும் வரவேண்டியிருந்தது.//

    சமுதாயத்திற்குக் கொடுத்துள்ள இந்த சாட்டையடி வரிகள் என்னை மிகவும் ஆச்சர்யப்பட வைத்தது.
    கதாசிரியருக்கு என் ஸ்பெஷல் பாராட்டுகள்.

    கற்பனைதான் என்றாலும் ஆங்காங்கே இன்றும் நடந்திடும் சமூக அவலமான, இதுபோன்ற மனம் நலம் பாதிக்கப்படுவோரின் (அதிலும் குறிப்பாக இளம் பெண்களின்) துயரங்களையும், கொடுமைகளையும், சமூக சிந்தனைகளுடன் சித்தரித்துக்காட்டியுள்ள, நல்லதொரு படைப்பை இன்று இங்கு நான் படிக்க வாய்ப்பளித்த ‘எங்கள் ப்ளாக்’க்கு என் நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  21. //அந்த ஓவியம் இங்கே.

    http://geethamanjari.blogspot.com.au/2011/08/blog-post_20.html//

    ஓ.கோ!.. துணி தோய்த்து குளிப்பதற்கு தயாரான போஸில் அந்த இளம் பெண்ணா?.. ஆனால் குளக்கரை என்பதை ஓவியர் கிணற்றடியாகக் கற்பிதம் கொண்டிருக்கிறார்! இல்லேனா, இம்மாம் பெரிய தோய்க்கிற கல் ஏது?..

    //நல்லவேளையாக அவர்கள் அப்படி எதுவும் செய்துவிடவில்லை.. //

    ஏதோ அவர்களால் முடிந்த அளவு செய்திருக்கிறார்கள்!


    //தண்ணீரில் பூத்துநிற்கும் தாமரை போல் சிவப்பியின் தலை மட்டும் நீருக்கு மேலே தெரிந்தது. வெள்ளத்தனைய மலர்நீட்டம் என்பதுபோல் ...//

    உங்களின் இந்த வரிகளைப் படிக்கும் பொழுது படித்ததை அப்படியே ஓவியமாய் மனசில் வரித்து ரசித்தேன். படம் போடுவதற்கென்றே எவ்வளவு அருமையாக எழுத்தில் காட்சிபடுத்தி இருக்கிறீர்கள்!. இந்த காட்சியைப் படம் போட்டால் எவ்வளவு அழகாக இருக்கும்!..

    பதிலளிநீக்கு
  22. கீதா அவர்களின் கதை எழுதும் திறமையை நான் முன்பே அறிவேன்!இக் கதை அவருக்கு மகுடம் சூட்டியுள்ளது அவருக்கும் உங்களுக்கும் வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  23. மனதைப் பிழியும் கதை. எங்கள் ஊரிலும் இதே மாதிரி ஒரு கதை நிகழ்ந்தது. அந்தக் குழந்தையை ஊரில் குழந்தை இல்லாதவர் ஒருவர் வீட்டில் வளர உதவி செய்தனர். அந்தப்பெண்ணின் கதி திரும்பவும் இதே மாதிரி ஆகி எங்கு போயிற்றோ என்ற அளவில் ஊரை விட்டே போய்விட்டது. சோகக் கதையையும் எவ்வளவு உணர்ச்சி பூர்வமாக எழுதியிருக்கிரார் கீத மஞ்சரி. பாராட்டுகள். உணர்ச்சி வசப்படும்படியான கதையை தேர்வு செய்து வெளியிட்டதற்கு ஸ்ரீராமிற்கும் மிகவும் நன்றி. அன்புடன்

    பதிலளிநீக்கு
  24. கீதா மதிவாணனைக் கீத மஞ்சரியாகவே ஆக்கி விட்டேன்.நல்லதுதானே. அன்புடன்

    பதிலளிநீக்கு
  25. கீதாவின் கதைகள் பல படிச்சிருக்கேன்..நெஞ்சம் தொட்ட எழுத்துநடை மனதை என்னமோ செய்தாள் சிவப்பி..எங்க தெருவிலும் ஒரு சிவப்பி இருந்தாள் யாரோ ஒரு துஷ்ட பெண்மணியின் மாடியில் குடியிருந்தாள் தினமும் வேலைக்குபோவாள் தனக்குள்ளே பேசுவாள்சிரிப்பாள் நன்றாக உடுத்துவாள் எங்கோ செல்வாள் மாலை வரும்போது கசங்கிய கோலத்தில் வருவாள் :( ஒவ்வொருநாளும் கையில் சிறு நாய்க்குட்டிகளை வைத்திருப்பாள் ..இதே கதையில் வரும் சிவப்பி போல திடீரென வயிறு மேடிட்டது பிறகு என்னாச்சோ :( .. ஒருநாள் காணாமல் போனாள் ..
    வாழ்த்துக்கள் கீதா பகிர்விற்கு நன்றி எங்கள் ப்ளாக்

    பதிலளிநீக்கு
  26. சிகப்பியின் கதையால் ,என் கண்களும் குளமானது!

    பதிலளிநீக்கு
  27. மனதை வருடும் இப்படி சிறப்பான கதைகள் பல எழுதி சிறப்புற வாழ்த்துகிறேன்

    பதிலளிநீக்கு
  28. நெகிழ வைக்கிறது கதை...வாழ்த்துக்கள் கீதமஞ்சரி
    நன்றி சகோ ஶ்ரீராம்

    பதிலளிநீக்கு
  29. கீதா மதிவாணன் அவர்கள் அன்பளிப்பாகக்
    கொடுத்த புத்தகத்தில் ஏற்கெனவே படித்து
    இரசித்த கதைதான் எனினும்
    மீண்டும் ஒருமுறை படித்து மகிழ்ந்தேன்
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  30. தெருவில் நிறைய பெண்களை தனக்குள் பேசிக் கொண்டு, அல்லது கத்தி திட்டிக் கொண்டு போகும் பெண்களை பார்த்து இருக்கிறேன்.

    அவர்கள் ஏன் இப்படி ஆனார்கள் என்று கவலை ஏற்படும் அவர்களை பார்க்கும் போதெல்லாம். இனி அப்படி போகும் பெண்களை பார்த்தால் சிவப்பி கதை நினைவுக்கு வரும்.

    மனம் கனத்து போனது.
    வாழ்த்துக்கள் கீதாவுக்கு.
    கேட்டு வாங்கி கதையை பகிர்ந்த உங்களுக்கு நன்றி ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு
  31. வலி தரும் கதை... சிகப்பிகளை நாம் எல்லோருமே எங்காவது சந்தித்துதான் இருக்கிறோம்.. இப்படியான பின்னணி தான் பெரும்பாலும் அவர்களுக்கு நேர்கிறது என்பதை இயல்பாக எழுதியிருக்கீங்க கீதா.....

    பதிலளிநீக்கு
  32. தளிர்’ சுரேஷ் said...
    \\மனதை தொட்ட கதை! அருமையான முடிவு! வாழ்த்துக்கள்!\\

    மிகவும் நன்றி சுரேஷ்.

    பதிலளிநீக்கு
  33. G.M Balasubramaniam said...
    \\கீதா மதிவாணன் எழுத்துக்களை நான் ரசிப்பதுண்டு ஏனோ தானோ வென்று இல்லாமல் உணர்ச்சிகள் மிகுந்து இருக்கும் நேரில் பரிச்சயமாகும் கதாமாந்தர்களை கதையில் உலாவ விட நுணுக்கமாக அவர்களை அணுகத் தெரிய வேண்டும் கீதா மதிவாணன் கை தேர்ந்தவர் பாராட்டுக்கள்\\

    தங்கள் பாராட்டுக்கு மிகவும் நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு
  34. KILLERGEE Devakottai said...
    \\சகோ திருமதி கீதமஞ்சரி அவர்களுக்கு வாழ்த்துகள் நல்லதொரு கதையை வெளியிட்ட நண்பருக்கு நன்றிகள் – கில்லர்ஜி\\

    மிகவும் நன்றி கில்லர்ஜி.

    பதிலளிநீக்கு
  35. Thulasidharan V Thillaiakathu said...
    \\மனம் என்னவோ செய்துவிட்டது. கண் முன் கதை விரிந்தது. குளமும் கதையின் கதாபாத்திரமாய் விரிந்தது. கீதா மதிவாணன் அக்காவின் எழுத்து அப்பேர்ப்பட்டது! மிகவும் ரசிப்பவர்கள் நாங்கள். எழுத்தும், நடையும், கதையும் அத்தனை நுணுக்கமாக...அதுவும் சிறிய வயதில் கண்ட காட்சிகள் மனதைத் தொடும் கதையாக....அருமை அருமை...

    வாழ்த்துகள், பாராட்டுகள் கீதா மதிவாணன் அவர்களுக்கு/அக்காவிற்கு

    இத்தனை அருமையான ஒரு கதையைப் பகிர்ந்த எங்கள் ப்ளாகிற்கும் எங்கள் வந்தனங்கள்!\\

    மிகவும் நன்றி கீதா & துளசி சார்.

    பதிலளிநீக்கு
  36. வை.கோபாலகிருஷ்ணன் said...
    \\மிகவும் அருமையான கதைக்கருவை, வெகு அழகாகக் கையாண்டு, அற்புதமாகவும் தனித்திறமையுடனும் எழுதி அசத்தியுள்ள கதாசிரியர் அவர்களுக்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள் + நல்வாழ்த்துகள்.

    //பரிதாபப்பட்ட சிலரின் தயவால் சிவப்பி வயிறு வளர்த்தாள். கூடவே ஒரு உயிரும் வளர்த்தாள். கற்பிழந்ததால் சுயம் இழந்தாளா? சுயம் இழந்ததால் கற்பிழந்தாளா? என்று பட்டிமன்றம் வைத்துப் பார்த்தது ஊர். அவள் கர்ப்பத்திற்குக் காரணகர்த்தாவைக் கண்டுபிடிக்கும் முயற்சியிலும் இறங்கியது. முடிவில் தன்னைத் தவிர எல்லோருமே அயோக்கியர்கள் என்ற முடிவுக்குதான் ஒவ்வொருவரும் வரவேண்டியிருந்தது.//

    சமுதாயத்திற்குக் கொடுத்துள்ள இந்த சாட்டையடி வரிகள் என்னை மிகவும் ஆச்சர்யப்பட வைத்தது.
    கதாசிரியருக்கு என் ஸ்பெஷல் பாராட்டுகள்.

    கற்பனைதான் என்றாலும் ஆங்காங்கே இன்றும் நடந்திடும் சமூக அவலமான, இதுபோன்ற மனம் நலம் பாதிக்கப்படுவோரின் (அதிலும் குறிப்பாக இளம் பெண்களின்) துயரங்களையும், கொடுமைகளையும், சமூக சிந்தனைகளுடன் சித்தரித்துக்காட்டியுள்ள, நல்லதொரு படைப்பை இன்று இங்கு நான் படிக்க வாய்ப்பளித்த ‘எங்கள் ப்ளாக்’க்கு என் நன்றிகள்.\\

    கதையை மிகவும் ரசித்து வாசித்ததோடு மேற்கோள்களுடன் பாராட்டியமை மிகவும் மகிழ்வளிக்கிறது. நன்றி கோபு சார்.

    பதிலளிநீக்கு
  37. ஜீவி said...


    //தண்ணீரில் பூத்துநிற்கும் தாமரை போல் சிவப்பியின் தலை மட்டும் நீருக்கு மேலே தெரிந்தது. வெள்ளத்தனைய மலர்நீட்டம் என்பதுபோல் ...//

    \\உங்களின் இந்த வரிகளைப் படிக்கும் பொழுது படித்ததை அப்படியே ஓவியமாய் மனசில் வரித்து ரசித்தேன். படம் போடுவதற்கென்றே எவ்வளவு அருமையாக எழுத்தில் காட்சிபடுத்தி இருக்கிறீர்கள்!. இந்த காட்சியைப் படம் போட்டால் எவ்வளவு அழகாக இருக்கும்!..\\

    உங்கள் வரிகளில் அந்த ஓவியம் மனக்கண்ணில் ஆடி மகிழ்விக்கிறது. மிகவும் நன்றி ஜீவி சார்.

    பதிலளிநீக்கு
  38. புலவர் இராமாநுசம் said...
    \\கீதா அவர்களின் கதை எழுதும் திறமையை நான் முன்பே அறிவேன்!இக் கதை அவருக்கு மகுடம் சூட்டியுள்ளது அவருக்கும் உங்களுக்கும் வாழ்த்துகள்!\\

    மிகவும் நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு
  39. காமாட்சி said...
    \\மனதைப் பிழியும் கதை. எங்கள் ஊரிலும் இதே மாதிரி ஒரு கதை நிகழ்ந்தது. அந்தக் குழந்தையை ஊரில் குழந்தை இல்லாதவர் ஒருவர் வீட்டில் வளர உதவி செய்தனர். அந்தப்பெண்ணின் கதி திரும்பவும் இதே மாதிரி ஆகி எங்கு போயிற்றோ என்ற அளவில் ஊரை விட்டே போய்விட்டது. சோகக் கதையையும் எவ்வளவு உணர்ச்சி பூர்வமாக எழுதியிருக்கிரார் கீத மஞ்சரி. பாராட்டுகள். உணர்ச்சி வசப்படும்படியான கதையை தேர்வு செய்து வெளியிட்டதற்கு ஸ்ரீராமிற்கும் மிகவும் நன்றி. அன்புடன்\\

    இது போன்ற மனநிலை தவறிய இளம்பெண்களின் நிலை ஊருக்கு ஊர் ஒன்றுபோலவே இருப்பது மிகவும் வேதனையளிக்கிறது. நல்லவேளையாக அந்தக்குழந்தையை நல்ல இடத்தில் வளரச்செய்திருக்கிறார்கள். தங்கள் பாராட்டுக்கு மிகவும் நன்றி காமாட்சிம்மா..

    \\கீதா மதிவாணனைக் கீத மஞ்சரியாகவே ஆக்கி விட்டேன்.நல்லதுதானே. அன்புடன்\\

    கீதமஞ்சரி என்பது என் வலைத்தளப்பெயர் என்பதோடு என் புனைபெயரும் அதுதான் என்பதால் மகிழ்ச்சியே அம்மா.

    பதிலளிநீக்கு
  40. Angelin said...
    \\கீதாவின் கதைகள் பல படிச்சிருக்கேன்..நெஞ்சம் தொட்ட எழுத்துநடை மனதை என்னமோ செய்தாள் சிவப்பி..எங்க தெருவிலும் ஒரு சிவப்பி இருந்தாள் யாரோ ஒரு துஷ்ட பெண்மணியின் மாடியில் குடியிருந்தாள் தினமும் வேலைக்குபோவாள் தனக்குள்ளே பேசுவாள்சிரிப்பாள் நன்றாக உடுத்துவாள் எங்கோ செல்வாள் மாலை வரும்போது கசங்கிய கோலத்தில் வருவாள் :( ஒவ்வொருநாளும் கையில் சிறு நாய்க்குட்டிகளை வைத்திருப்பாள் ..இதே கதையில் வரும் சிவப்பி போல திடீரென வயிறு மேடிட்டது பிறகு என்னாச்சோ :( .. ஒருநாள் காணாமல் போனாள் ..
    வாழ்த்துக்கள் கீதா பகிர்விற்கு நன்றி எங்கள் ப்ளாக் \\

    என்ன சொல்வதென்று தெரியவில்லை ஏஞ்சலின்.. சிவப்பிகள் எல்லா ஊரிலும் நம் மத்தியில் வாழ்ந்திருக்கிறார்கள்.. வாழ்ந்துகொண்டும் இருக்கிறார்கள்.. எந்தப் பெண்ணுக்கும் நேரக்கூடாத கொடுமைகள் இவர்களுக்கு நேர்ந்துவிடுகின்றன. கருத்துக்கு நன்றி ஏஞ்சலின்.

    பதிலளிநீக்கு
  41. Bagawanjee KA said...
    \\சிகப்பியின் கதையால் ,என் கண்களும் குளமானது!\\

    உங்கள் இளகிய மனம் புரிகிறது. நன்றி பகவான்ஜி.

    பதிலளிநீக்கு
  42. கவியாழி கண்ணதாசன் said...
    \\மனதை வருடும் இப்படி சிறப்பான கதைகள் பல எழுதி சிறப்புற வாழ்த்துகிறேன்\\

    மிகவும் நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு
  43. R.Umayal Gayathri said...
    \\நெகிழ வைக்கிறது கதை...வாழ்த்துக்கள் கீதமஞ்சரி\\

    மிகவும் நன்றி உமையாள்.

    பதிலளிநீக்கு
  44. Ramani S said...
    \\கீதா மதிவாணன் அவர்கள் அன்பளிப்பாகக்
    கொடுத்த புத்தகத்தில் ஏற்கெனவே படித்து
    இரசித்த கதைதான் எனினும்
    மீண்டும் ஒருமுறை படித்து மகிழ்ந்தேன்
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்\\

    மிகவும் நன்றி ரமணி சார். இக்கதையை முன்பு என் வலைத்தளத்தில் வாசித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.
    நான் அளித்த புத்தகம் மொழிபெயர்ப்புக் கதைகள் மட்டுமே அடங்கியது.

    பதிலளிநீக்கு
  45. சாந்தி மாரியப்பன் said...
    \\மனதைத்தொட்ட கதை. அருமை கீதா\\

    மிகவும் நன்றி சாந்தி.

    பதிலளிநீக்கு
  46. கோமதி அரசு said...
    \\தெருவில் நிறைய பெண்களை தனக்குள் பேசிக் கொண்டு, அல்லது கத்தி திட்டிக் கொண்டு போகும் பெண்களை பார்த்து இருக்கிறேன்.

    அவர்கள் ஏன் இப்படி ஆனார்கள் என்று கவலை ஏற்படும் அவர்களை பார்க்கும் போதெல்லாம். இனி அப்படி போகும் பெண்களை பார்த்தால் சிவப்பி கதை நினைவுக்கு வரும்.

    மனம் கனத்து போனது.
    வாழ்த்துக்கள் கீதாவுக்கு.
    கேட்டு வாங்கி கதையை பகிர்ந்த உங்களுக்கு நன்றி ஸ்ரீராம்.\\

    அப்படியான பெண்கள் நம்மை மிகவும் பாதித்துவிடுகிறார்கள். உண்மைதான். கருத்துக்கு நன்றி கோமதி மேடம்.

    பதிலளிநீக்கு
  47. ezhil said...
    \\வலி தரும் கதை... சிகப்பிகளை நாம் எல்லோருமே எங்காவது சந்தித்துதான் இருக்கிறோம்.. இப்படியான பின்னணி தான் பெரும்பாலும் அவர்களுக்கு நேர்கிறது என்பதை இயல்பாக எழுதியிருக்கீங்க கீதா.....\\

    கதையாய் எழுதிமுடித்த பின்னரும்கூட அந்நிகழ்வுகளின் தாக்கும் இப்போதும் எனக்குள் இருக்கிறது. நம் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் உணர்வுதான் அது. கருத்துக்கு மிகவும் நன்றி எழில்.

    பதிலளிநீக்கு
  48. ஆமாம் கீதா ..அப்போ எனக்கே 11 வயசுதான் ..அந்த சிவப்பி குடியிருந்த வீட்டுப்பக்கம் கூட திரும்பகூடாதேன்று தெருவில் உள்ள எல்லா சிறுவர் சிறுமிக்கும் அவரர் வீட்டு கட்டளை ..உங்களைப்போலத்தான் இனம்புரியா வலியுடன் கடந்து விட்டேன் மனதில் எதோ தவறு நடக்குதென்று மட்டும் புரியும் .இப்போ வயதும் வெளிநாட்டு வாழ்க்கையும் தன்னம்பிக்கையை தைரியத்தை கொடுத்திருக்கு . சிவப்பி போல யாரையாவது பார்த்தா பாதுகாப்பான சூழலுக்கு கொண்டு விடுவேன் நிச்சயம் ..

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!