வியாழன், 16 ஜூலை, 2020

கபசுரக் குடிநீரும் கடும் வயிற்றுவலியும்.. 

சில நாட்களாகவே அவ்வப்போது வயிற்று வலி வந்து படுத்த ஆரம்பித்தது.  எனக்கு வயிற்றுவலி வருவது கொஞ்சம் அபூர்வம்.  கொரோனா கால உலக நியதிப்படி இதற்கும், எனக்கும் பயம் வந்தது!என்னிடமே வேறு சில நண்பர்களும் தனக்கு வயிற்று வலி இருப்பதாகச் சொல்லவும் எனக்கும் ஆச்சர்யம் ப்ளஸ் பயம்.  எனக்கிருக்கும் அதே அறிகுறிகளை அவர்களும் சொன்னார்கள்.  அதாவது அவ்வப்போது, விட்டு விட்டு,  குறிப்பாக ஏதாவது ஆகாரம் வயிற்றுக்குள் போட்ட உடன்...

மருத்துவர்களைக் கேட்டபோது 'நீங்கள் அநியாயத்துக்கு முன் எச்சரிக்கை என்ற பெயரில் நிறைய மருந்து எடுக்கிறீர்கள்...  அது காரணமாக இருக்கலாம்' என்றார்கள்.  

அப்புறம் விசாரித்ததில் அது உண்மை என்றும் தெரிந்தது.  குறிப்பான குற்றவாளி கபசுரக் குடிநீர்.   அதைக் குடித்தவர்கள் நிறைய பேர் - அதாவது கிட்டத்தட்ட 70% பேர்களுக்கு இந்த பாதிப்பு - அல்சர் ஆரம்பத்தொந்தரவு - இருக்கிறது என்று தெரியவந்தது.  நிலவேம்பும் அப்படியே.

''அதற்காக அதை நிறுத்த முடியுமா'' என்று கேட்டேன்.  'வயிற்றுவலியா, உயிரா, எது முக்கியம்' என்று கேட்டேன்.  'ஒன்றும் ஆகாது நிறுத்து' என்றனர்.  

"அப்போ நிலவேம்புக் குடிநீர்?

" சின்ன மாறுதல் தவிர ரெண்டும் ஒண்ணுதான் செல்லம்...   வேணாம் விடு.." என்றனர்.

"மாசத்துக்கு ஒரு தரம், மூன்று நாள் சாப்பிடறேன் அதனாலா பிரச்னை?" என்றேன்.  (அப்புறம் வாரத்துக்கு இரண்டு வேளை சாப்பிட்டு வந்தவர்களும் இருக்கிறார்கள், தினமுமே ஒருதரம் அல்லது இரண்டு தரம் இதைத் தொடர்ந்து குடித்து வருபவர்களும் இருக்கிறார்கள்)

"நிறுத்தினா நிறுத்து...  இல்லாட்டா போ" என்று போனைக் கட் செய்து விட்டனர்!

பதினைந்து நாட்களுக்கு Pan D எடுக்க அறிவுறுத்தப் பட்டுள்ளேன்.  

என் விஷயத்தில் இன்னொரு விஷயம் என்ன என்றால், காலை வெறும் வயிற்றில் ஐந்து மிளகும், கல் உப்பு அதே அளவும் சாப்பிடும் பழக்கத்தையும் ஆரம்பித்திருந்தேன்.  

அது மட்டுமல்லாமல் இஞ்சி...   வெவ்வேறு ரூபங்களில் தினமும் இஞ்சி உள்ளே சென்று கொண்டிருந்தது.  ரசத்தில், - இதில் மிளகும் சேரும் - டீயில், அப்புறம் புளி இஞ்சி போட்டு அதைத்தொட்டுக்கொண்டு...

அப்புறம் தொண்டைக் கரகரப்பு, இருமல் என்றால்  (இல்லாவிட்டாலும்) பாலில் மிளகு, பனங்கற்கண்டு போட்டு) ஓரிருமுறை குடிப்பேன்.

இந்நிலையில் தினமலரில் இந்தச் செய்தியையும் படித்தேன்.  ஆஹா...   நேரம் பார்த்துதான் வருகிறது...   அப்போ இது தமிழகத்துக்கே வந்த  பிரச்னை போல!

பொதுவாகவே அலோபதி, ஹோமியோபதி சித்தா மருத்துவர்கள் யாருக்கும் ஒன்றும் சரியான ஐடியாவே இல்லாமல் ஆளுக்கு ஒரு கருத்தை வாரி வழங்குகின்றனர்.

உதாரணங்களாக முதலில் ஹைடிராக்சி குளோரோக்குவின் மாத்திரை சாப்பிடச் சொன்னார்கள்.  அதனால் பெரிய உபயோகம் இல்லை என்று பின்னால் தெரியவரும்முன் இந்த மாத்திரையையே இவர்கள் சாப்பிடச் சொன்ன அளவு வெவ்வேறாக இருந்தது.  

முதல் நாள் 400 மிகி இரண்டு வேளை , பின்னர் 13 நாட்கள் இரண்டு வேளை 200 மி.கி   சிலர் ஐந்து நாட்களுக்கு 200 மி கி என்றனர்.  சிலர் முதல் மூன்று நாட்கள் முதல் நாள் இரண்டு வேளை 400 மி கி, அடுத்த இரண்டு நாட்களுக்கு 200 மி கி என்று சொல்லி, பின்னர் எட்டு வாரங்களுக்கு வாரத்துக்கு ஒருமுறை இரண்டு வேளை 200 மி கி என்றனர்.  சிலர் வாரத்துக்கு ஒருமுறை 400 மி கி இரண்டு வேளை என்றனர்.    முதலில் இந்த மாத்திரையுடன் க்ளோரோக்வின் மாத்திரையும் சொல்லப்பட்டு வந்தது.   நல்லவேளை, இதையெல்லாம் நான் பொருட்படுத்தவில்லை.  

ரேடியோ ஸ்டேஷனைத் கேட்டு சமையல் செய்யும் கதாநாயகன் நினைவு வருகிறது! கதாநாயகி வெவ்வேறு ஸ்டேஷன்களைத் திருப்ப உடற்பயிற்சியும் சமையலும் மாறி மாறி வரும்.

அடுத்த ஹோமியோபதி ஆர்செனிக் ஆல்ப் 30 என்கிற மாத்திரை.  ஆபத்தில்லாதது என்று சொன்னாலும், மருந்துக்கு கலவையில் ஆர்செனிக் அளவு மீறினால் ஆபத்து என்ற கருத்தும் சொல்லப்பட்டு வந்தது.  

இதுவும் மாதத்துக்கு ஒருமுறை மூன்று நாட்கள் தொடர்ந்து காலை வெறும் வயிற்றில் ஆறு மாத்திரை என்றது ஒரு அரசு (ஆயுஷ்) விளம்பரம்.  இன்னொரு விளம்பரம் ஐந்து என்றது.   அப்புறம் ஒரு மாதம் கழித்து மறுபடி மூன்று நாட்கள் என்றது அதே விளம்பரம்.  

ஒரு வீடியோவில் குஜராத்தில் இரண்டு வேளை தொடர்ந்து காவல்துறைக்கு கொடுக்கப்பட்டதாகவும் அதனால் அவர்களுக்கு வைரஸ் தாக்கம் இல்லவே இல்லை என்றும் சொன்னது.  

வந்தார் இன்னொரு ஹோமியோபதி இளம் பெண் மருத்துவர்.  அவர் ஒரு வீடியோ வெளியிட்டார்.  மூன்று நாட்களுக்கு நான்கு மாத்திரை, காலை வெறும் வயிற்றில், பின்னர் வாரா வாரம் இதைத் தொடங்கிய கிழமையில் மட்டும் நான்கு மாத்திரைகள் அதே போல் என்றார்.  ஒரு ஹோமியோபதி மருத்துவமனையில் இரண்டு வேளை   இதைச் சாப்பிடச் சொன்னார்கள் என்று இரண்டு வேளை சாப்பிட்டு வருபவர்களும் உண்டு.

கபசுரக்குடிநீரும் அதே போல மாதத்தில் மூன்று நாட்கள் மட்டும் என்றும், வாரத்துக்கு இரண்டுதரம் என்றும், காலை ஆகாரத்துக்குப்பின் என்றும், காலை வெறும் வயிற்றில் என்றும், தினமும் ஒரு தரம் என்றும் விதம் விதமாக உபதேசிக்கப்பட்டு அதே போல ஒவ்வொருவரும் ஒரு மாதிரி பின்பற்றுபவர்களுக்கு உண்டு.

நடுவில் சித்தா மருத்துவமனை பற்றி இப்படியும் செய்தி உண்டு.

'அது'வா, நம்மோடு ஒரு செஸ் விளையாட்டை விளையாடி வருகிறது.  சளி, இருமல், காய்ச்சல்தான் அறிகுறி என்றனர்.  இந்தியாவில் "இதெல்லாம் எங்களுக்கு சகஜமப்பா" என்றிருக்க, 'அது' வேறு ரூபங்கள் எடுக்கத் தொடங்கியது (என்று சொன்னார்கள்).  ஜுரம், தலைவலி, கைகால் வலி உடல் அயர்ச்சி என்று அறிகுறிகளை 'அது' கூட்டிக்கொண்டே போனது.

நம்முடைய ஒவ்வொரு மூவுக்கும் 'அது'வும் செக் வைத்துக்கொண்டே வந்தது.  மிளகா சாப்பிடுகிறாய், கபசுரக் குடிநீரா குடிக்கிறாய், இஞ்சியா விழுங்குகிறாய்...    இந்தா வயிற்று வலி, அல்சர், கேஸ்டிரைடிஸ்...   இதெல்லாமும் என் அறிகுறிகளே என்று விளையாடுகிறது...  

சென்னை மருத்துவமனைகளில் அறிகுறிகளுக்குத் தக்கவாறு ஜுரமாத்திரை, இருமல் மாத்திரை, இந்தக் கபசுரக் குடிநீர், ஏதோ கஷாயம், சுண்டல், சமயங்களில் ஆயுர்வேத மாத்திரை தருவதாகக் கேள்விப்பட்டேன்.  
தஞ்சை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நண்பர் ஒருவருக்கு Tamiflu மாத்திரை ஐந்து நாட்களுக்கு வழங்கப்பட்டதாகச் சொன்னார்.  அதனுடன் ஹைடிராக்சி குளோரோக்குவினும் தந்தார்களாம்.  Favipiravir போன்ற மாத்திரைகள் மார்க்கெட்டுக்கு வந்துவிடும், வந்தே விட்டது என்று சொன்னாலும் அதை யாரும் உபயோகப்படுத்தியதாகத் தெரியவில்லை.  இந்த மாத்திரைக்கு விலை வைப்பதிலேயே குழப்பம் நிலவுகிறது போல..  200 மி கி மாத்திரை 103 ரூபாய் என்றார்கள் விளம்பரத்தில்.  இரண்டு நாட்களுக்கு முன்பாக இதை 75 ரூபாய் என்று குறைத்திருப்பதாய் செய்தி சொல்கிறது.   முதல் நாள் 1800 மி கிராமும், அப்புறம் தொடர்ந்து 13 நாட்களுக்கு 1600 மி கி மாத்திரையும் சாப்பிடவேண்டும் (பாஸிட்டிவ் என்று முடிவானவர்களுக்கு) என்று சொன்னார்கள்.  சாலிகிராமம் ஜவஹர் பொறியியற் கல்லூரியில் மருத்துவமனை வைத்திருக்கும் சித்த மருத்துவ மருத்துவமனையில் நன்றாகக் கவனிப்பதாகச் சொல்கிறார்கள்.

கபசுர குடிநீருக்கு இணையான அல்லது அதைவிட நல்ல மூலிகைக் கஷாயத்தை அவர் தருவதாகவும், அதன் செய்முறையை வெளிப்படையாக சொல்லி இருக்கிறார் என்றும் வாட்ஸாப்பில் செய்முறை பார்த்தேன்.

எதையுமே அலட்சியமாகவும், ஏளனமாகவும் அணுகும் நண்பன் ஒருவன் எனக்கு உண்டு.  அவனிடம் வேறு ஒரு விஷயமாகப் பேசிக்கொண்டிருந்தபோது இதைப் பற்றியும் பேச்சு வந்தது.  "நீ என்ன பண்றே?" என்று கேட்டபோது பேஸ்புக்லயும், வாட்ஸாப்லயும் என்னென்ன கருமத்தை எல்லாம் சொல்றாங்களோ எல்லாத்தையும் சாப்பிட்டு வருகிறேன்" என்றான்.  பயந்திருக்கிறான் என்று தெரிந்தது.

இன்னொரு நண்பன்...  இவன்தான் 'ஓவர் ஜாக்கிரதை உடம்புக்கு ஆகாது தம்பி" என்று என்னை முன்பே (வீட்டுக்கு திருடன் வரும் பதிவு) எச்சரித்தவன், அவன் இந்த மாதிரி எந்த எச்சரிக்கையையும் மேற்கொள்வதில்லை.  அலுவலகம் விட்டு, அல்லது வெளியில் சென்று வந்தால் என்னைப்போல் (நம்மைப்போல்?!!) குளிப்பதில்லை, உடைகளை டெட்டால் தண்ணீரில் ஊறவைத்து காயப்போடுவதில்லை.  கைகால் கூட கழுவுவதில்லையாம்.  'வரணும் என்றிருந்தால் எப்படியும் வரும்...   வராது என்றிருந்தால் எப்படியும் வராது...'  என்று ரஜினி டயலாக் பேசுகிறான்!

உயிர் என்ன வெல்லமா?  ஆ....   மா...  ம் என்றுதான் தோன்றுகிறது.  ரயில் வராது என்று தெரிந்தால் தண்டவாளத்தில் தலைவைத்துப் படுத்து உயிரையும் விடுவேன் என்று வீர வசனம் பேசலாம்.  இது அப்படி இல்லையே...

இஞ்சியைக் குறைத்து, மிளகு குறைத்து, க சு கு நீரையும் (தற்காலிகமாக) விட்டபின் இப்போது எனக்கு வயிற்று வலி தேவலாம்!  ஆனால் இன்னும் முழுதும் விடவில்லை.

அது சரி, தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டால் கூட அதை யு எஸ், யு கேயில் இருக்கும் பில்லியனர்கள், பணக்காரர்கள் போட்டுக்கொள்ள மாட்டார்களாமே...   அப்படி ஒரு செய்தி வேறு உலவுகிறதாமே...   உண்மையா?


===================================================================================================

பாலச்சந்தர் - அவள் ஒரு தொடர்கதை - படாஃபட் பற்றி ஒரு செய்தி.  இது நான் 2014 இல் பேஸ்புக்கில் பகிர்ந்த செய்தி.
சமீபத்தில் ஒரு பழைய பைண்டிங்கில் இதே படாபட் விஷயமாய் தேங்காய் சின்னதாய் வருத்தப் பட்டிருந்ததை படித்தேன்.  படாஃபட் என்று அவர்தான் முதலில் எங்க மாமா படத்தில் சொன்னாராம்.  ஆனால் அவள் ஒரு தொடர்கதையில் ஜெயலட்சுமி சொன்னதும் அது பிரபலமாகி அவர் படாபட் என்றே அறியப்பட்ட நேரம்.  அவர் நடித்த கலியுகக் கண்ணன் பார்த்திருக்கிறீர்களோ?  ரசனையான படம்.  தேங்காய் நிறைய சிவாஜியை இமிடேட் செய்திருப்பார் அந்தப் படத்தில்.  கெளரவம் படத்தில் சிவாஜி நடிப்பில் "கண்ணா நீயும் நானுமா? என்று டி எம் எஸ் பாடுவார்.   இந்தக் கலியுகக் கண்ணனில் தீர்ப்பு!  "ஜெயிச்சுட்டே...   கண்ணா நீ ஜெயிச்சுட்டே.." என்று அதே டி எம் எஸ் குரலில் தேங்காய் நடித்திருப்பார்.  ஆனால் பாடலின் வரிகளை வாலி நன்றாக எழுதி இருப்பார்.  வெள்ளி வீடியோவில் முன்பு பகிர்ந்திருக்கிறேன்.

இப்போது கீழே உள்ள படத்தில் அவர் சொல்லி இருக்கும் மூன்றாவது விஷயத்தில் வரும் 'அவர்' யார்?  கிசுகிசு!==================================================================================================

லாக் அவுட் சமயங்களில் பல விஷயம் கண்ணில் பட்டிருக்கிறது அதில் இரண்டு விஷயங்கள்...   முதலில் என்னைத் தாண்டிச் சென்ற இந்த வண்டி.  ஆட்டோக்கள், கார்கள் ஓடக்கூடாது என்று அரசு உத்திரவு போட்டிருந்தது.  போலீஸ்காரர் இந்த வண்டியை நிறுத்த முடியுமா?  அவர் பாட்டுக்கு தாண்டிச் சென்று விட்டார்!  இது மே மாதம் 28 ஆம் தேதி எடுக்கப்பட்ட படம்!இரண்டாவது விஷயம் : இந்தப் பெரியவர் (என்றுதான் சொல்லவேண்டும்), இவரை லாக்கவுட் தொடங்கிய நாளிலிருந்து இந்த பேருந்து நிறுத்தத்தில் பார்க்கிறேன்.  பார்க்க அவர் யாசகர் மாதிரி தெரியவில்லை - மூட்டை முடிச்சுகளுடன் அப்படித் தெரிந்தாலும்.  அவரே சுய சவரம் செய்து கொள்வார்.  உடை மாற்றிக் கொள்வார்.  எங்கு சாப்பிடுவாரோ...   காவல்காரர்கள் ஆதரவு இருந்திருக்குமா, தெரியவில்லை.  அவ்வப்போது கால் மேல் கால்போட்டு அமர்ந்து ஏதோ ஒரு நோட்டில் அலலது டைரியில் ஏதோ எழுதிக் கொண்டிருப்பார். அந்த இடத்தைச் சுத்தமாக வைத்திருப்பார்.   இரவுகளில் மழை பெய்தபோது எனக்கு இவர் நினைவு வரும்.  இப்போதும் பாருங்கள் ஏதோ படித்துக் கொண்டிருக்கிறார்.
=================================================================================================


ஒரு மாத காலமாக உறிஞ்சு உறிஞ்சு என்று  கொண்டிருக்கிறோம்!  ஒரு நாளைக்கு மூன்று வேளை!  பரவாயில்லை...  உபயோகமாகவே இருக்கிறது.  நாங்களும் முன்பு அகலமான பாத்திரத்தில் நீர் கொதிக்கவைத்து போர்வையால் போர்த்திக்கொண்டு கவிழ்ந்து கொண்டுதான் இருந்தோம்.  இது எங்களுக்கு புதுசு.  ஆனால் வசதி.  அப்போல்லோவில் ஆர்டர் கொடுத்து (முன்னூறு ரூபாய் ) டோர் டெலிவரி வாங்கிக்கொண்டோம் - ஒன்றுக்கு இரண்டாய்!  ரிசர்வில் ஒன்று!  ஆக, சகல விதத்திலும் 'அதற்கு' கறுப்புக்கொடி காட்டிக் கொண்டிருக்கிறோம்.

இதை இப்போது பகிரும்போதுதான் நானே பார்க்கிறேன்.  R O தண்ணீர் கூடாதாம்...   உப்பு படியக்கூடாதே என்று அதை அல்லவா உபயோகித்துக் கொண்டிருக்கிறேன்?  மாற்றிக்கொள்ள வேண்டும்!  ஆனால் கேஜி ஆர் ஓ தண்ணீர் உபயோகிப்பதால் தவறில்லை என்றார்.  மின்கடத்தல் அதில் தாமதமாகும் என்பதால் சொல்லி இருப்பார்கள் என்றார்.  
=====================================================================================================

ஜூன் இறுதிக்குள் புதிய பிளாக்கர் வடிவம் வந்து  சொல்லப்பட்டிருந்தது.  தானாய் மாறட்டும் என்று நானும் விட்டிருந்தேன்.  இன்னும் மாறவில்லை!

120 கருத்துகள்:

 1. வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும் தீமை இலாத சொலல்..

  நலம் வாழ்க...

  பதிலளிநீக்கு
 2. பதில்கள்
  1. வணக்கம் துரை செல்வராஜூ ஸார்...  வாங்க...

   நீக்கு
  2. அன்பு துரைக்கும் , அன்பு ஸ்ரீராமுக்கும் இனிய நாளுக்கான வாழ்த்துகள்.
   நலமே வாழ பிரார்த்தனைகள்.

   நீக்கு
  3. வாங்க வல்லிம்மா...    இனிய காலை / மாலை வணக்கம்.

   நீக்கு
 3. அதிகமாக இஞ்சி சேர்த்துக் கொள்ளக் கூடாது என்பது தாங்கள் அறியாததா?...

  நல்லவேளை இஞ்சியை மை போல அரைத்து மூக்கில் இழுத்துக் கொள்ளும்படி சொல்லாமல் விட்டார்கள்...

  இந்த யூடிய்.......யூப்பினால் இன்னும் கேடுகள் வரக் காத்திருக்கின்றனவோ...

  சாலையில் போனவன் வந்தவன் எல்லாம் சமூக ஆர்வலராகி ..... கொடுமை.. கொடுமை....

  வாதம், பித்தம், கபம் - இந்த மூன்றின் ஆட்சியில் இருக்கக் கூடிய உடம்பில் எது மிகுத்திருக்கின்றதோ அதை அனுசரித்து மருந்து கொடுப்பதே சித்த மருத்துவம்...

  அதைப் புரிந்து கொள்வதற்கே நிறைய ..... வேண்டும்...

  வந்தவன் போனவன் எல்லாம் மருத்துவன் என்றாகி விடக்கூடாது என்று தான் பெரும்பாலான விஷயங்களை மறை பொருளாக வைத்தனர் பெரியோர்...

  சமையலறையின் அஞ்சறைப் பெட்டியில் இருக்கக் கூடிய மருத்துவப் பொருட்களைக் கூட அளவுடன் தான் எடுத்துக் கொள்ள வேண்டும்..

  அவசர சூழ்நிலை அன்றி மூலிகை மருந்துகளை எடுத்துக் கொள்ள நாள் நட்சத்திரம் உண்டு...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இஞ்சி அதிகமாக எல்லாம் சேர்க்கவில்லை.ஆனால் தினமும் இஞ்சி சேரும் வண்ணம் இருந்தது.

   //நல்லவேளை இஞ்சியை மை போல அரைத்து மூக்கில் இழுத்துக் கொள்ளும்படி சொல்லாமல் விட்டார்கள்...//

   ஹா...  ஹா...  ஹா...


   வாட்சப்பில் வரும் வைத்தியம் எல்லாம் செய்துகொள்வதில்லை.  நம்பகமான விஷயங்கள்தான் பின்தொடர்வது.

   இப்போது கூட தினமும் காலையில் ஐந்து வேப்பிலைகளை மென்று தின்னும்படி சுகாதாரத்துறை சொல்லி இருக்கிறது.  கஷாயமாகவோ, பொடியாகவோ சாப்பிடச் சொல்கிறது.  எங்கள் வீட்டில் ஹிமாலயாவின் நீம் மாத்திரைகள் வருடக்கணக்கில் சாப்பிடும் சகோதரி íது நீ சாப்பிடுவதில்லையா? என்கிறாள்!

   நீக்கு
  2. //எடுத்துக் கொள்ள நாள் நட்சத்திரம் உண்டு...// - இதுக்கும் அறிவியல்தான் காரணம். எங்க வீடுகள்ல, ஞாயிறு அன்று நெல்லிக்காய் கலத்தில் போட மாட்டார்கள் (கலம்னா சாப்பிடும் தட்டு).

   நீக்கு
  3. அதுபோல வேப்பிலை அரைத்துக் கொடுக்கும் என் பாட்டி கூட நாள் பார்த்தே தருவார்.

   நீக்கு
 4. வாக்சின் பற்றி யாரும் இன்னும் முடிவுக்கு வரவில்லை.
  இதோ சி என் என் செய்திகள் சொல்லிப் பயமுறுத்துகிறது.
  ஹெட் ஃபோன் போட்டுக் கொள்ளப் போகிறேன்.

  எல்லாம் அரசியல். அவர்கள் சொல்லும் எண்ணிக்கை மேல் இருபது மடங்கு
  சேதம் இருக்கலாம் என்கிறார்கள்.
  இறைவன் கருணையை எதிர் பார்த்தே இருக்கிறோம்.

  இங்கும் இஞ்சி ,சுக்கு,பூண்டு போட்டு தினம் ரசம் உண்டு.
  சுக்கு எனக்கு இருமல் வரவழைத்து விட்டது.
  நீங்கள் உடல் நலம் தேற பிரார்த்தனைகள்.

  வேலைக்குப் போகிறவர்கள் முன் ஜாக்கிரதையாகத் தான் இருக்க வேண்டும்.
  இனிமேல் அளவோடு மருந்துகளை உபயோகிக்கவும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அவர்கள் கொடுக்கும் கணக்கைவிட அதிகமாகத்தான் இருக்கும் என்கிற நம்பிக்கை உலகெங்கும் இருக்கும்போல!   இங்கும் அதேதான் சொல்கிறார்க!


   இருமல், தொனியில் கபம் இருந்து கொண்டே இருக்கிறது.  சித்தரத்தை அடக்கிக்கொள்கிறேன்.

   நீக்கு
 5. இங்கும் காற்று சுத்தம் செய்யும் ஃபில்டர்.
  ஹ்யுமிடிஃபையர். எல்லாம் ஓடிக்கொண்டிருக்கிறது.

  அக்கம்பக்கத்தில் அப்படியும் தொண்டையில்
  கபம் நிற்பதைத் தடுக்க முடியவில்லை.
  நேற்று இருந்த மாதிரி இன்று உஷ்ணம் இருக்காது. இன்று ஒரே மழை.
  ஏர்கண்டிஷனர் போட்டுப் போட்டு அணைக்கும் போது
  இது போல ஆக வாய்ப்பு இருக்கிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. காற்றில் பரவுவதைத்தடுக்க ஒரு மெஷின் கண்டு பிடித்திருப்பதாய்ச் சொல்கிறார்கள்.  எல்லாம் அறிவிப்புகளோடு சரி!

   நீக்கு
 6. நடைபாதை மனிதரைப் பார்க்கும் போது யோசனையாகத் தான் இருக்கிறது. பாவம்.
  இங்கிருந்து ,அங்கே நடக்கும் காட்சிகளைக் காலையும் மாலையும்
  கவனிக்கிறேன்
  லாக்டௌன் சமயத்தில் காலை அதாவது இந்தியக்
  காலை நேரத்துக்கு ஒருவர் டீ கொண்டு வந்து வினியோகித்தார்,.
  இப்போது டீக்கடை திறந்தாச்சு.நேற்று மழை பெய்திருக்கிறது போல.
  சாலை எல்லாம் ஈரம்.
  வீட்டைப் பார்த்துக் கொள்ளும் குடும்பத்தில் ஒரு உறுப்பினர்
  கொஞ்ச நாட்களாக வரவில்லை.
  விசாரித்ததில், மனைவியோடு கிராமத்துக்குச் சென்றுவிட்டாராம்.
  அவர்கள் இருக்கும் இடத்தில்
  சமூக இடைவெளி விடமுடியவில்லையாம்.

  எல்லோரும் நலமாக இருக்கட்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இங்கும் நிறையபேர் சொன்ன கிராமத்துக்குச் சென்று விட்டார்கள்.  திரும்ப வரும் வேலை இல்லாதவர்கள் அங்கேயே இருக்க முடிவு செய்திருக்கிறார்கள்.   லாக் டவுன் சமயத்தில் நான் அலுவலகம் செல்லும்போது சாலையில் சைக்கிளில் வைத்துத் தேநீர் வழங்கும் நபர்களை பார்த்திருக்கிறேன்.  இப்போது கடைகள் திறந்து விட்டதால் அவர்களுக்கு வேலை இல்லை!

   நீக்கு
 7. ரேக்ளா வண்டி பார்க்க மகிழ்ச்சியாக
  இருக்கிறது. பழைய எம் ஜி ஆர் படம் போல:)

  பதிலளிநீக்கு
 8. படாஃபட், செய்தி புதிது.
  பாலச்சந்தர் படங்களில் கொஞ்சம் அப்படி இப்படி இருப்பது
  தெரிந்தது தானே.
  தேங்காய் சொன்ன நடிகர். எம் ஆர் ராதாவோ.
  இல்லை என்றால் தொண்டையில் அடிப்பட்டவரோ;)

  பதிலளிநீக்கு
 9. கபசுரக் குடி நீர் மாதிரி மருந்துகளை
  அங்கிருந்து வருபவர்கள் கூடக் கொண்டு வருகிறார்கள்.!!!
  அதிகமாக யூ டியூப்,அதாவது "இந்த" விஷயமாகப் பார்ப்பதில்லை என்ற முடிவுக்கு வந்து இரண்டு மாதங்கள் ஆகிறது

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கபசுரக்குடிநீர் நல்ல மருந்து என்பதில் சந்தேகமில்லை.  பெரும்பாலானவர்களுக்கு அது ஒத்துக்கொள்வதில்லை.

   நீக்கு
 10. காலை வணக்கம் சகோதரரே

  அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க கமலா அக்கா...   வணக்கம்.  இனிய பிரார்த்தனைகளுக்கு நன்றி.

   நீக்கு
 11. அனைவருக்கும் காலை, மாலை வணக்கம். நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். சென்னையின் தொற்று அளவு கட்டுக்குள் தெரிகிறது. செய்தி உண்மையாகத் தான் இருக்கும் என்று நம்பிக்கை. பாலிமர் செய்திகள். மற்றபடி மக்கள் அனைவரும் இந்தத் தொற்றில் இருந்து நிரந்தரமாக விடுதலை பெறப் பிரார்த்தனைகள். கந்தன் கருணை புரிவான்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நம்பிக்கைகளை...    எல்லாம் நல்லபடி நடக்க இறைவனைப் பிரார்த்திப்போம்.   வாங்க கீதா அக்கா...  காலை வணக்கம்.

   நீக்கு
  2. //அனைவரும் இந்தத் தொற்றில் இருந்து நிரந்தரமாக விடுதலை பெறப் பிரார்த்தனைகள்.//தற்சமயம் தொற்றின் இன்டென்சிடி(தீவிரம்) குறைந்திருப்பதாக ஒரு மருத்துவர் கூறினார். குறைந்து, மறைந்து போக கடவுளை வேண்டுவோம்.

   நீக்கு
 12. ஒருவேளை சென்னையில்/அம்பத்தூரில் இருந்திருந்தால் ஸ்ரீராம் அளவுக்கோ அல்லது அதை விட அதிகமாகவோ முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்துக் கொண்டிருப்போமோ? தெரியவில்லை. ஆனால் இப்போது நெல்லிச்சாறு, முருங்கை சூப், எப்போதேனும் கபசுரக்குடிநீரில் சேர்க்கும் பொருட்களைப் போட்டுக் குடிநீர் தயார் செய்து அருந்துதல் இவை தான். இங்குள்ள ஒரு ஹோமியோபதி மருத்துவர் கொடுத்து ஆர்செனிக் ஆல்பம் 3 நாட்கள் காலை சாப்பிட்டோம். மற்றபடி அதிகம் வெளியே போவதில்லை. சுற்று வட்டாரத்திலேயே எல்லாம் கிடைக்கிறதால் பிரச்னையும் இல்லை. இங்கே உத்திரவீதி வரை கொரோனா வந்து விட்டதால் பயமாயும் கவலையுமாயும் தான் இருக்கு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம், பயம்தான்.  என்னுடன் பழகியவர்கள் சிலரையே நான் இழந்திருக்கிறேன்.  பிரபலங்களையும் அது விடுவதில்லை.  நான் கூட பாருங்கள், இந்த முன் எச்சரிக்கை எல்லாம் மாதத்தில் ஒருமுறைதான் எடுக்கிறேன்.  இருந்தும்....

   நீக்கு
 13. மிளகு அதிகம் போனாலே வயிற்றை வலிக்கத் தான் செய்யும். நீங்கள் சாப்பிட்டது அதிகம் இல்லை. அதிஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈகம். ஆகவே வயிற்றில் வலி இருக்கத் தான் செய்யும். விளக்கெண்ணெய் பயன்படுத்தும் வழக்கம் உண்டெனில் இந்த வயிற்று வலிக்கு விளக்கெண்ணெயைப் பதமான சூட்டில் வயிற்றில் வலி இருக்கும்பக்கம் தேய்த்துக் கொண்டால் போதும். வாயு இருந்தாலும் சரியாகும். நாங்க எப்போதுமே விளக்கெண்ணெய் கைவசம் வைச்சிருப்போம். நான் தலைக்குத் தேய்த்துக்கொள்வது முக்கூட்டு எண்ணெய் தான். நல்லெண்ணெய்+தேங்காய் எண்ணெய்+ விளக்கெண்ணெய்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நான் நல்லெண்ணெய் தடவினேன்.  விளக்கெண்ணெய் வைத்திருந்தேன்.  எங்கே இருக்கிறியாது என்று தேடி அலுத்து விட்டது.  கடையில் சொன்னபோது ஸ்டாக் இல்லை!  மிளகு அவ்வளவு அதிகம் என்றா சொல்கிறீர்கள்?

   நீக்கு
 14. அந்த நடிகர் "ஜிவாஜி"யாத் தான் இருக்கும். இருக்கணும். வேறே யாரு? ஃபடாபட் அருமையான நடிகை. பாவம். அநாவசியமாகத் தற்கொலை செய்து கொண்டார். ஒரு கோழையைக் காதலித்துவிட்டு! :( எல்லாம் அந்தக் காலத்தில் நடந்த அரசியல்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நான் வல்லிம்மா சொல்வது போல எம் ஆர் ராதா என்று நினைத்தேன்.  படாபட் யாரைக் காதலித்தார்?  (ரொம்ப முக்கியம்!!!)

   நீக்கு
  2. படாபட் ஜெயலக்ஷ்மி காதலித்து ஏமாந்தது சின்னவரின் அண்ணன் மகனை என்று அப்போது கிசுகிசுக்கப்பட்டது...
   எல்லாம் காலம் செய்த கோலம்...

   நீக்கு
  3. ஓஹோ....   மண்டைக்குடைச்சல் நின்றது!!

   நீக்கு
  4. ஆமாம், சின்னவரின் அண்ணன் மகனைக் காதலித்தார். அவரும் காதலித்துவிட்டுக் கல்யாணம் செய்துக்க முடியலை போல! :( ஆறு முதல் அறுபது வயது வரை படத்தில் ரஜினிக்கு ஜோடியாக வரும் ஃபடாபட்டின் நடிப்பு இயல்பாக இருக்கும். அதுக்கபுறமாத் தான் செத்துப் போனார் போல!

   நீக்கு
 15. இந்த ஸ்டீம் இன் ஹேலர் பற்றியோ நீங்கள் படம் போட்டு விளக்கி இருப்பது பற்றியோ எதுவும் அறியோம். எல்லாம் புதுசா இருக்கு. கொரோனாத் தடுப்பில் இவை எல்லாம் உண்டு என்பதும் புதிய, புத்தம்புதிய செய்தி. ப்ளாஸ்டிக் வாளி அந்தச் சூட்டில் உருகி விடாதோ? சூடூ தானே செய்கிறீர்கள்? இதன் மூலம் வீடு மொத்தத்துக்கும் ஆவி பரவுமா? அல்லது ஒவ்வொருத்தராய் வந்து ஆவி பிடிக்கணுமா? இன்னிக்கு ஆடி மாதப்பிறப்புத் தர்ப்பணம் இருப்பதால் அதற்கான வேலைகளைக் கவனிக்கணும். அப்புறமா வரேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இல்லை.  பிளாஸ்டிக் உருகாது.  அது பிளாஸ்டிக் என்று சொல்ல முடியாது.  மின்சாரத்தில் கொதிக்கும்.  நம் முகத்துக்கு, மூக்குக்கு மட்டும் யாவரும்.  ஆவி பிடிக்கலாம்.   தப்பித்தவறி தோற்று ஏற்பட்டிருந்தால், ஆரம்ப நிலையிலேயே அதை ஒழிக்க (மூக்கில், தொண்டையில், சுவாசப்ப்பாதையில்)முடியும்.  ஒரு நாளைக்கு ஓரிருமுறை - குறிப்பாக வெளியில் சென்று வந்தால், வெளியாட்கள் வந்து சென்றால்...

   நீக்கு
  2. வெறும் ஆவி பிடிக்கற சமாச்சாரம்தான்.  கொஞ்சம் நவீனம்.  அவ்வளவுதான்!

   நீக்கு
  3. இந்த மாதிரி ஸ்டீம் இன்ஹேலர் பசங்க சின்னவங்களா இருக்கும்போது வாங்கி வைத்திருந்தேன். ஜலதோஷம் வந்தால் பசங்களுக்கு என் மனைவி இதைத்தான் உபயோகிப்பாள் (வாடா... எல்லாம் ரெடியாயிடுச்சு. என்று வருந்தி வருந்தி அழைத்தால்தான் பசங்க வரும்). அப்புறம் அந்த மெஷின் எங்க போச்சுன்னு தெரியலை. நாங்க கிளினிக்குக்குப் போகும்போது அங்க இதைத்தான் பரிந்துரைப்பாங்க, அங்கயே 20 நிமிஷம் இன்ஹேல் பண்ணச் சொல்வாங்க. அது ஒரு காலம்

   நீக்கு
  4. அப்பல்லோவில் முன்னூறு ரூபாய்குக் கிடைக்கிறது..  எளிது, அத்தியாவசியமும் கூட.

   நீக்கு
  5. கீதா அக்கா, ஸ்ரீராமின் அனுபவத்தை படிக்கும் பொழுது எனக்கு இரண்டு மூன்று பழமொழிகள் நினைவுக்கு வருகின்றனவே, உங்களுக்கு? 
   இந்த வேப்பரைசர் பற்றி சென்ற வருடம் நான் ஒரு பதிவு எழுதியிருந்தேன், சமீபத்தில் மத்யமரிலும் பகிர்ந்திருந்தேன் https://thambattam.blogspot.com/2018/11/blog-post_39.html  

   நீக்கு
  6. அப்படியா பானுமதி, உங்க பதிவை இப்போத் தேடிப் பிடித்துப் படிக்கிறேன். எனக்கு என்னமோ இன்னிக்குத் தான் பார்த்தாப்போல் தெரியுது.
   அது என்ன பழமொழிகள்? எனக்கு ஒன்றே ஒன்று தான் நினைவில் வந்தது.

   நீக்கு
 16. வணக்கம் சகோதரரே

  உங்களுக்கு இருக்கும் உடல்நல பிரச்சனைகள் சரியாக பிரார்த்தித்து கொள்கிறேன். நீங்கள் தினமும் அலுவலகத்திற்கு சென்று வருவதால், இவ்விதமான முன் ஜாக்கிரதைகளை எடுத்துக் கொள்வது சரிதான்..! ஆனாலும் அளவுக்கு அதிகமானால் அமிர்தமும் நஞ்சுதானே..! பார்த்து உடலுக்கு தகுந்த மாதிரி மருந்துகளை எடுத்துக் கொள்ளுங்கள். கட்டுரையை உங்களின் இயல்பான நகைச்சுவையுடன் தந்திருக்கிறீர்கள். பாராட்டுக்கள்.

  இந்த மருந்துகளை விட நகைச்சுவை மன அழுத்தத்தை அதிகமாகவே குறைக்கும் வல்லமை பெற்றவை என்பதுதான் என் கருத்து.

  மஞ்சள் பொடியை சுடு தண்ணீரில் போட்டு குடிக்கலாம் என்ற செய்தியும், தினமும் மிளகு, இஞ்சி, பூண்டு, எலுமிச்சை தினமும் சேர்க்கலாம் என்ற செய்திகளும், இன்னமும் சில ஆலோசனைகளும் வாட்சப் மூலமாக வந்து கொண்டேயிருக்கின்றன. வீட்டிலும் இவற்றில் சிலதை கடைப் பிடிக்கிறார்கள். நானும் ரஜினி பாணியில் சொல்லி வருகிறேன்.

  எனக்கும் இப்போது ஒன்று மாற்றி ஒன்றாக வலிகள் தன் ஆதிக்கத்தை காட்டி வருகிறது. இப்போது ஒரு மாதமாக கடுமையான கால் வலிகளுடன் அன்றாட கடமைகள் நகர்ந்து கொண்டிருக்கிறது. மருத்துவரிடம் செல்ல தயக்கம். எனவே பாட்டி வைத்தியந்தான்.. இது கலியின் காலம். விரைவில் அனைவரும் நலம் பெற்று பழைய இயல்பு வாழ்க்கை வந்திட வேண்டுமாய் செய்யும் பிராத்தனை ஒன்றுதான் சற்று மன அமைதியை தருகிறது. நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இப்போதைய இந்த உடல் நல பிரச்னைகள் எனக்கு மட்டுமல்ல, எல்லோருக்கும் இருக்கிறது கமலா அக்கா...  ஒன்றிலிருந்து தப்பிக்க ஒன்றைத்தேடப்போய் அதனால் வரும் வேறு விளைவுகளை சிலரால் தாங்க முடிகிறது...  சிலரால் முடிவதில்லை...

   என்னுடைய பணி பாணி காரணமாக எனக்கு கால்வலி, சோர்வு நிரந்தரம்!  தொடந்தஇப்பிரச்னை, இருமல் அப்பா தந்த சொத்து!  ஆனால் இப்போது அதெல்லாம் விசேஷ அந்தஸ்து பெற்று பயமுறுத்துகின்றன!  அவ்வளவுதான்.  நன்றி கமலா அக்கா.

   நீக்கு
 17. காலை வணக்கம் அனைவருக்கும்.

  வயிற்றுவலி, மாத்திரைகளின் மகாத்மியம் படித்தேன். ஏதாவது ஒரு மகானுபாவன், மிகி என எழுதுவதற்குப் பதிலா கிகி என எழுதி எத்தனை பேர்களைப் போக்கடிக்கப் போகிறானோ.

  சித்த மருந்து (கஷாயம், இஞ்சி, மஞ்சள், மிளகு எதுவானாலும்) ஒவ்வொன்றிர்க்கும் பக்க விளைவு உண்டு (அலோபதி ஆபத்து). சிறுநீரக்க் கல்லுக்கு தலைசிறந்த மருந்தான வாழைத் தண்டையே இரண்டு நாட்களுக்கு மேல் தொடர்ந்து எடுக்கக்கூடாது.

  ஆனால் வாட்சப்பில் தமிழக மக்கள் தொகையைவிட அதிகமான வாட்சப்-மருத்துவர்கள் இருக்காங்கன்னு தெரியுது. ஃபார்வர்ட் பண்ணின ஒருத்தரை, நூ இதை சாப்பிடறயா எனக் கேட்டதற்கு, வந்தது, ஃபார்வர்ட் பண்ணினேன் என்றான்.

  நாடு உருப்பட்டமாதிரிதான்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. காலை வணக்கம் நெல்லை.  வாங்க...

   வாழைத்தண்டு அதிகம் சாப்பிடுவது கிட்னியை பாதிக்கும்.  அதே ஓபோலதான் தினமும் நிறைய தண்ணீர் குடிக்கவேண்டும் என்று சொன்னாலும் மூன்று லிட்டருக்கு மேல் குடிப்பது இதே போல கிட்னியை அதிகம் வேலை வாங்குவதாய் அமையும்.

   வாட்சாப் பார்த்து நான் மருந்து சாப்பிடுவதில்லை.  தமிழக மருத்துவமனைகளில் வழங்கப்படும் மாத்திரைகள், மருந்துகளை அறிந்து அதையும் குறைத்தே எடுத்தேன்.

   நீக்கு
  2. தண்ணீர் எவ்வளவு குடிக்கணும் என்பதிலேயே ஒவ்வொரு மருத்துவருக்கும் கருத்து வேறுபாடு இருக்குன்னு நினைக்கிறேன். இப்போவும் எவ்வளவு தண்ணீர் குடிக்கலாம் என்பது தெரிவதில்லை. சில நேரங்களில் 4 லிட்டருக்கு மேல் தண்ணீர் ஒரு நாளில் குடித்திருக்கிறேன்.

   என்னுடன் பணியாற்றிய ஒருவன், ஒவ்வொரு 3/4 மணி நேரத்துக்கும் போய், 1/2 தம்ளர் அல்லது 1 சிறித தம்ளர் தண்ணீர் அருந்துவான்.

   நீக்கு
  3. உண்மை.  ஒரு நேரத்தில் ஒரு நாளைக்கு 8 லிட்டர் தண்ணீர் ஒரு நாளைக்குள் குடிக்க வேண்டும் என்றார்கள்.  அது நாளாகி இப்போது மூன்றாகி நிற்கிறது.  ஸ்டோன் வந்த நேரத்தின் அப்பழக்கத்தால் நம் சீரான இடைவெளிகளில் தண்ணீர் குடித்துக் கொண்டே இருப்பேன்!

   நீக்கு
  4. எனக்குத் தெரிந்து மருத்துவ ஆலோசனையில் எடுத்துக்கும் எந்த சித்த, ஆயுர்வேத மருந்துகளுக்கும் பக்கவிளைவுகள் ஏற்பட்டதில்லை. ஆனால் எப்போவுமே அதிகம் தண்ணீர் குடிப்பதில்லை. எந்தக் காயானாலும் மாற்றி மாற்றி வருவதால் அதனால் ஏற்படும் பக்கவிளைவுகளும் இருக்காது. மிளகு அதிகம் போனால் வயிற்றை வலிக்கும். மேல் வயிறு ரொம்பவே வலிக்கும். விளக்கெண்ணெய் வைத்தியம் தான் என்னைப் பொறுத்தவரை பலன் அளிக்கிறது.

   நீக்கு
 18. முன்னெச்சரிக்கை அவசியம்தான் அதற்காக வறம்பு மீறி மருந்துகள் எடுத்துக் கொள்வது வேறு பிரச்சனைகளை தந்து விடலாம் கவனம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அளவுக்கு மீறி இல்லை ஜி.  அளவாய் எடுத்தாலே எளவு, நிறைய பேர்களுக்கு இது ஒத்துக்க கொள்வதில்லை!!!   நன்றி ஜி.

   நீக்கு
 19. அலோபதி மருந்துகள்தான் பக்கவிளைவுகளை உண்டாக்கும்.
  கபசுரக் குடிநீர் வயிற்றுவலியை உண்டாக்குமா என்பது சந்தேகமே,
  நானும் குடித்திருக்கிறேன்
  என் மனைவி அல்சர் தொந்தரவு உள்ளவர்தான், ஆனால் அவருக்கும் கபசுர குடிநீர் ஒன்றும் செய்யவில்லை.
  ஆனாலும், தாங்கள் சொல்வதுபோல், மருத்துவர்கள் ஒருமித்தக் குரலில் ஒரே மாதிரியாக பேசுவதில்லை என்பதுதான் குழப்பமே. ஒவ்வொருவரும் ஒவ்வொரு முறையினைப் பரிந்துரைக்கின்றனர்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அது பக்க விளைவுகளை உண்டாக்கும் என்றுதான் அனுபவித்தா அனைவருமே சொல்கிறார்கள் நண்பரே.....  முன்னர் ஆயுர்வேத மருந்து சாப்பிட்டு பக்க விளைவை அனுபவித்தவன் நான்.  ஆனாலும் அது ஒவ்வொருவரின் உடல்நிலையைப் பொறுத்தது.

   நீக்கு
 20. வீட்டில் அன்பு இம்சைகள் தாங்க முடியாமல், அந்தப் பெரியவர் போல ஆகாமல் இருந்தால் சரி...!

  பதிலளிநீக்கு
 21. நான் புரிந்து கொண்டதுவரைஎரும்பாலானவர்கள் குருடர்கள் யானையை விளக்கிய மாதிரிதான் யாருக்கும் எதுவும் பிடிபடவில்லை ஆவி பிடிப்பது நல்லதுதான் நுரையீரல்கள் க ஷ்டப்படாது முக்கிய காரணியே பயம்தான் கூடாது என்று சொல்வது எளிது

  பதிலளிநீக்கு
 22. இந்த நடிகர்கள், தங்களைப்போலவே யாரேனும் இமிடேட் பண்ணி நடித்தால் நெர்வஸ் ஆகிடுவாங்க (எம்ஜிஆர் மாதிரி மேக்கப் மேனரிசம் கொண்ட முகமுத்து போன்று). அதைவிட அவர்களோட அல்லக்கைகள்தான் விஷயத்தைப் பெரிதாக்கிடுவாங்க.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அது என்னவோ உண்மைதான்.  ஆனால சிவாஜி இதற்கு விதிவிலக்கு என்றுநினைக்கிறேன்.  தேங்காய் நிறைய படங்களில் சிவாஜியை அப்படியே இமிடேட் பண்ணி நடிப்பார்.

   நீக்கு
 23. வாட்சப் செய்திகளைப் பார்த்து மருந்து எடுத்துக்கொண்டு அதனால் பாதிக்கப்பட்டால், வாட்சப் செய்தி அனுப்பியவர்களை கோர்ட்டுக்கு இழுக்கலாம் தெரியுமா? பத்தாண்டு கடுங்காவல் தண்டனையும் உண்டாமே

  பதிலளிநீக்கு
 24. நெல்லிக்காய் லேகியம் என்றெல்லாம் விளம்பரப்படுத்தறாங்க. இந்த லேகியம் சாப்பிடுவதே ஆபத்துத்தான். எம்ஜிஆர் சாப்பிட்ட லேகியம்தான் அவர் கிட்னி ஃபெயிலியருக்கு காரணம்னு சொல்வாங்க.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அதுஉண்மையிலேயே நெல்லிக்காயில் செய்திருந்தால் நல்லதுதான்.  கெடுதல் இல்லை.  டாபரில் ஸ்யவனபிராஷ் லேகியம் கொடுப்பார்கள்.

   நீக்கு
 25. அனைவருக்கும் காலை வணக்கம்.  ஆயுர் வேதமோ, சித்தாவோ அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொண்டால் நிச்சயம் பக்க விளைவுகள் இருக்கும். அதனால்தான் நம் ஊரில் ஒரு பழமொழி சொல்வார்கள்(நான் இப்போது சொல்ல மாட்டேன், டம்ப் ஷெராட்ஸில் காட்டுகிறேன் கண்டு பிடித்துக் கொள்ளுங்கள்).கபசுர குடிநீர் என் அக்காவும் தனக்கு ஒத்துக்க கொள்ளவில்லை என்றாள்.   

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அது சரிதான்.   ஒற்றைத்தலைவலிக்கு நான் எடுத்துக்கொண்ட ஆயுர்வேத மருந்தினால் என் பல்லுக்கு ஆபத்து வந்தது!

   காலை வணக்கம்.  வாங்க பானு அக்கா.

   நீக்கு
  2. //ஒற்றைத்தலைவலிக்கு நான் எடுத்துக்கொண்ட ஆயுர்வேத மருந்தினால் என் பல்லுக்கு ஆபத்து வந்தது!// - ஹா ஹா ஹா... இது என்ன புதுக் குண்டு?

   நான் பாளையங்கோட்டை சித்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஜலதோஷத்துக்கா அல்லது வேறு ஏதற்கோ, சிவப்பாக இலந்தை கொட்டை சைஸில் சில மாத்திரைகள் தருவாங்க. அதனை பல்லில் படாமல் முழுங்கணும் என்பார்கள். அது நினைவுக்கு வந்துவிட்டது.

   நீக்கு
  3. அதில் LED கலந்திருந்தது என்று சொன்ன ஞாபகம்.

   நீக்கு
 26. என் கல்லூரி காலத்தில் எனக்கு உள்ளங்காலில் ஒரு ஸ்கின் அலர்ஜி இருந்தது. அதற்கு வேப்பிலையை கொதிக்க வைத்து அந்த தண்ணீரை வெறும் வயிற்றில் குடித்தால் நல்லது என்று கிட்டத்தட்ட ஒரு மாதம் குடித்திருப்பேன், அலர்ஜி சரியானது, ஜாண்டிஸ் வந்து விட்டது. அப்புறம்தான் தெரிந்தது வேப்பிலை கொழுந்தைக் கூட தொடர்ந்து சாப்பிடக் கூடாது, வேப்பிலை உஷ்ணம் என்பதால் தொடர்ந்து சாப்பிட்டால் கல்லீரல் பாதிக்கப்பட்டு விடுமாம். அதற்குப் பிறகு எந்த நாட்டு மருந்தானாலும் மூன்று நாட்களுக்கு மேல் சாப்பிட மாட்டேன்.  

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஓஹோ....   வேப்பிலைக்கு அப்படி ஒரு குணமா?  ஆனால் நான் சொல்லி இருப்பது போல நான் இவற்றை எல்லாம் மாதத்தில் ஒருமுறை மட்டுமே உபயோகித்தேன்.

   நீக்கு
  2. இந்த வேப்பிலையும் குப்பை மேனியும் தான் என் மேனியைக் காப்பாத்தி வருது. ஒவ்வொரு வெயில்காலத்திலும் இது இரண்டையும் அரைத்துத் தான் சோப்புக்குப் பதிலாகப் பயன்படுத்தறேன். இல்லைனா ஒரே சிவப்புச் சிவப்பாக அங்கும் இங்குமாக தடிப்புகள், அரிப்பு, வலி, வீக்கம்.

   நீக்கு
 27. கீதா அக்கா, ஸ்ரீராமின் அனுபவத்தை படிக்கும் பொழுது எனக்கு இரண்டு மூன்று பழமொழிகள் நினைவுக்கு வருகின்றனவே, உங்களுக்கு? 

  பதிலளிநீக்கு
 28. கீரை வகைகள் நல்லது தான்.. ஆனால் எல்லா நாளும் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் குடல் இளகிப் போகும்.. அதற்குப் பிறகு எதைச் சாப்பிட்டாலும் கழிவறையைத் தேடி ஓ,.....ட வேண்டியது தான்....

  இதை அம்மா The Great கதையில் சொல்லியிருந்தேன்.. கவனிக்கப் படாமல் போயிற்று...

  இதுபோல் தான் வாழைத் தண்டும்... கிரியா ஊக்கியாக சிறுநீரகத்தைத் ( இக்காலத்தில் கிட்டுனி - கிட்னி) தூண்டுவது.. ஏழு நாளும் தூண்டி விட்டுக் கொண்டேயிருந்தால் என்ன ஆவது?..

  அர்த்தத்தை அனர்த்தமாக்கிக் கொள்வதில் நமக்கு நிகர் நாமே!...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம்.  கீரை வகைகள் வாரத்துக்கு ஒருமுறைதான் எடுக்கும் வழக்கம்.

   நீக்கு
  2. ஏகாதசி விரதத்துக்கு மறுநாள் துவாதசியில் அகத்திக்கீரை சேர்ப்பதிலும்

   நீக்கு
  3. ஒரு அர்த்தம் உண்டே என்று முடிப்பதற்குள் அவசரமாக பப்ளிஷ் ஆகி விட்டது!

   நீக்கு
  4. உபவாசம் இருந்த வயிற்றின் அக்னியைத் தணிக்கக் குளிர்ச்சியாக அகத்திக்கீரை சாப்பிடச் சொல்வார்கள். அகத்திக்கீரை வயிற்றுச் சூட்டைத் தணிக்கும். ஆனால் தினம் சாப்பிடக் கூடாது.

   நீக்கு
 29. விருந்தும் மருந்தும் மூன்று நாட்களுக்கு..
  அமுதமே ஆனாலும் அளவறிந்து உண்..

  என்பதெல்லாம் சொல்வழக்குகள்....

  பதிலளிநீக்கு
 30. அனைவருக்கும் காலை வணக்கம். அவசரமாக சமயலுக்கு இடையில் வந்ததன் காரணம் இதுதான். "அனைவருக்கும் என் இனிய ஆடிப் பிறப்பு வாழ்த்துக்கள். இனி ஏறு முகம்தான். இறங்கு முகமே கிடையாது. (ONLY UPHILL DEVELOPMENT, NO DOWNHILL DEPRESSION)

  பதிலளிநீக்கு
 31. ஸ்ரீராம் கூறுவது போல், இப்போது எந்த புது வைத்தியமும் வேண்டாம். Manageable கை வலி கால் வலி யாவற்றையும் எப்போதும் செய்யும் வைத்தியத்தை வைத்து ஓட்டுங்கள். எக்காரணத்தைக் கொண்டும் மருத்துவமனைக்கு செல்ல எண்ண வேண்டாம்.
  அதே போல் எதையும் மிதமாக செய்வது நல்லது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //எக்காரணத்தைக் கொண்டும் மருத்துவமனைக்கு செல்ல எண்ண வேண்டாம்.//

   தப்பித்தவறி போய்ட்டோம்னா, பிள்ளை பிடிக்கறவங்களாட்டம், தகவல் சொல்லிடுவாங்க போலிருக்கு. அருகிலுள்ள கிளினிக்குச் சென்று டெஸ்ட் செய்யவும்னு எஸ்.எம்.எஸ் வந்துடுது.

   நீக்கு
  2. மருத்துவமனை போனால் 80% பாஸிட்டிவ்தான்!

   நீக்கு
 32. வயிற்று வலி - க.சு.கு.நீர் பயன்படுத்துபவர்கள் சிலருக்கு வந்திருப்பதாய் நண்பரும் சொன்னார். இங்கே கிடைப்பதில்லை. நண்பர் ஒருவர் வாங்கி அனுப்பித்து வைத்தார். இன்னமும் பயன்படுத்தவில்லை.

  ஃபடாஃபட் - :) தே.ஸ்ரீ. சொன்ன அவர் யாரோ?

  குதிரை வண்டி - இங்கே இன்னமும் இந்த மாதிரி வண்டிகள் இருக்கிறது. தினமும் ஒருவர் என் வீட்டினருகில் இருக்கும் மந்திர் மார்க் வழி இந்த வண்டியில் செல்வார். என்றைக்காவது படம் எடுக்க வேண்டும் என நினைத்ததுண்டு - ஆனால் எடுத்ததில்லை. வேகமாகச் சென்று விடுவார்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இங்கிருந்து அனுப்பினால்தான் அங்கு கசுகு கிடைக்குமா?

   குதிரைவண்டி பற்றி முன்னர் சொல்லி இருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.

   நன்றி வெங்கட்.

   நீக்கு
  2. கபசுரக் குடிநீர் தமிழ்நாட்டுக்கே உரியது அல்லவா? சித்த மருத்துவப் பயன்பாட்டில் கொடுப்பது. அதைத் தமிழ்நாட்டில் இருந்து தான் அனுப்பியாகணும். எங்க மருமகளும் வாங்கிப் போயிருக்கிறாள்.

   வடக்கே இன்னமும் டோங்கா என்னும் குதிரை வண்டி கிடைக்கும். அதில் சவாரி செய்வது எனக்குப் பிடித்தமானது. இங்கே படத்தில் இருக்கும் குதிரை வண்டி பந்தயத்துக்கானது என நினைக்கிறேன்.

   நீக்கு
 33. எந்த மருத்துவ முறையானாலும் பயிற்சி பெற்றவர் ஆலோசனை இன்றி பின்பற்றக்கூடாது... பாரம்பரியத்திற்கு மாறுகிறோம்ன்னு சொல்லி இஷ்டத்திற்கும் இஞ்சி டீ, பனங்கற்கண்டு, சிறு தானியங்கள்ன்னு மாறுவது சரியில்லை. உணவு மட்டும் மாறினால் போதாது. வாழ்க்கை முறையே மாறனும்.

  பாதையோரத்தில் வசிக்கும் மனிதர்களின் பாடு இப்பேரிடர் காலத்தில் கொடுமைதான்...

  பதிலளிநீக்கு
 34. தற்போது இருப்பது லாக்டௌன். லாக்கவுட் இல்லை. 

   3ஆவது புதிர் : அந்த நடிகர் எம் ஆர் ராதா.

  மோரில் காயம் கரைத்து குடித்துவிட்டு வாய்வு வெளியேறுவதைப் பற்றி கவலைப்படாமல் முன்பிலும் பின்பிலும் வெளியேற்றுங்கள். வயற்று வலி நிற்க்கும். 

  H Pylori bio-chemistry lab டெஸ்டில் கண்டுபிடித்து அளவு கூடுதல் ஆனால் அல்சருக்கு மருந்து எடுக்கலாம். ulcikit  போன்றவை.

  ஆவி பிடிக்க தண்ணீரில் ஒரு karval plus capsule போட்டு ஆவி பிடித்தால் சளிக்கு இதமாக இருக்கும். யூகலிப்டஸ் ஆயில் கற்பூரம் இவற்றையும் ஆவி பிடிக்கலாம். 

  Jayakumar

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஜெயக்குமார் ஸார்.. ஆமாம், லாக்டௌன்தான். ஒரு இடத்தில் தப்பாக எழுதி இருக்கேன். அல்சருக்கு நீங்கள் கொடுத்துள்ள குறிப்புகளுக்கு நன்றி. ஆவி பிடிக்க கார்வால் ப்ளஸும் வாங்கி வைத்திருக்கிறேன்.

   நீக்கு
 35. ஸ்ரீராம் உடல் நிலையை கவனித்துக் கொள்ளுங்கள்.
  மருந்துகள் நமக்கு எது ஒத்துக் கொள்கிறதோ அதை மட்டும் பயன்படுத்துங்கள்.

  இங்கு மதுரை மாநகராட்சி எட்டு மருந்துங்கள் அடங்கிய டப்பா 100 என்று வீடுகளுக்கு வந்து கொடுத்தார்கள்.

  அதில் அலோபதி, ஹோமியோபதி, சித்த மருத்துவமுறை என்று கொடுத்து இருக்கிறார்கள்.

  நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கும் என்கிறார்கள், உட் கொள்ளும் முறை கையேடு கொடுத்து இருக்கிறார்கள்.

  எல்லாம் வாரம் ஒரு முறை, 10 நாட்களுக்கு ஒரு முறை, என்று சொல்கிறார்கள்.
  விருந்தும் மருந்து மூன்று நாள் என்பது போல் தான். தொடர்ந்து எந்த மருந்தையும் எடுத்துக் கொண்டால் அதன் பலன் அளிக்காது என்பார்கள்.

  கால்வலி, கைவலிக்கு வெந்நீர் ஒத்தடம், பாதக்குளியல் தான் நல்லது.
  வயிற்று வலிக்கு காலையில் வெந்தயம் கொஞ்சம் எடுத்து வாயில் போட்டு தண்ணீர் குடிக்க சொல்வார்கள் அம்மா வலி கேட்கும் உடல் சூட்டால் வலி வந்து இருந்தால்.
  வயிற்று பொறுமல் என்றால் பெருங்காயம் மோர் கேட்கும்.
  வயிற்றிலும் வெந்நீர் ஓத்தடம் கொடுக்கலாம். ஈர தூனியை வயிற்றில் போட்டு சிறிது நேரம் படுத்தாலும் வலி குறையும்.

  மூச்சு பயிற்சி செய்தால் நல்லது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க கோமதி அக்கா... நன்றி. என்ன கவனமாக இருந்தாலும் ஏதாவது ஒன்று வந்து படுத்துகிறது. முன்னரும் வந்த வியாதிகள்தான். இப்போது எல்லாவற்றையும் அதற்கான அறிகுறிகளில் சேர்த்து பயமுறுத்துகிறார்களே...

   இங்கு நான் இருக்கும் ஏரியாவில் கார்ப்பரேஷன்காரர்கள் யாரும் வருவதில்லை. கேஜி இருக்கும் இடங்களில், மற்றும் எங்கள் உறவினர் இருக்கும் இடங்களில் தினமும் வருகிறார்களாம். மூச்சுப் பயிற்சி... ம்... மோர் பெருங்காயம் உப்பு சாப்பிட்டால் தொண்டை பாதிக்குமோ என்று பயம்.

   நீக்கு
 36. தேங்காய் சீனிவாசன் நல்ல நடிகர் அவரை நல்ல முறையில் பயன்படுத்தி இருக்கலாம். அவருக்கு எல்லாம் எளிதாக வரும். குணசித்திரத்தில் நன்றாக நடிப்பார்.
  பாலசந்தர், படாபட் செய்திகள் முன்பு படித்து இருக்கிறேன் பத்திரிக்கையில்.

  பேருந்து நிறுத்தத்தில் எப்படி பெரியவரை மூட்டை முடிச்சுகளுடன் தங்க அனுமதி கொடுத்தார்கள் வியப்பு!

  படித்துறை பெரியவர் படத்திற்கு கதை கேட்டது போல் இந்த பேருந்து நிறுத்தபெரியவர் டையிரியில் என்ன எழுதுகிறார் ? அவர் ஏன் அங்கு வசிக்கிறார்( நன்கு படித்தவர் போல் இருக்கிறார் ) என்பதை வைத்து கதை கேட்டால் நல்கதைகள் கிடைக்கும் 'நம் எங்கள் ப்ளாக் " கதாசிரியர்களிடம் கேட்டால் அவர்கள் எழுதுவார்கள் அருமையாக .  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அடடே... கதைக்குக் கரு! நல்ல ஐடியாவா இருக்கே... யாராவது நோட் பண்ணி இருக்காங்களான்னு தெரியலையே...!!

   நீக்கு
 37. வணக்கம் மருத்துவரே :) @ ஸ்ரீராம் 
  கபசுரக்குடிநீர் ?? இது எப்படி இருக்கும் ?அங்கே கசுகுநீ மாதிரி இங்கே சேரநன்னாட்டினர் கருப்பு சீரகத்தை ப்ரொமோட் பண்ணிவிட்டாங்க :) யாருக்கும் சொல்லாதீங்க ரகசியம் நானும் க்கூட 2 கிலோ வாங்கி வச்சிருக்கேன் :) பேசாம ஆளில்லா இடத்தில ரோட்டோரம் தூவி விட்டா செடியாவது முளைக்கும் :) 
  அளவுக்கதிகமா இஞ்சி சாப்ட்டா எரியும் .எல்லாவற்றையும் அளவோடு சாப்பிடணும் .பேய்க்கு பயந்து பிசாசை வீட்டுக்குள்ளே விட்ட கதைதான் .பலர் அதுக்கு ப்ரொடெக்ஷன்னு நினைச்சு வேறே தேவையற்றதுகளை வரவேற்கிறாங்க போல :) மே மாதம் போல் லாஃடவுன் நேரம் ஒரு கடையில் பிரித்தானியப்பெண்மணி கொஞ்சம் மப்பில் இருந்தார் ஆனாலும் என்னை பார்த்து எதுக்கு மாஸ்க் போட்டு சுவாசத்தை தடை பண்ற காற்று இயற்கை அதை அப்படியே சுவாசிக்கணும்னு அட்வைஸ் செஞ்சார் :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஏஞ்சல்.. ஆன்லைன்ல கசுகு கிடைக்கும். கசுகு, நிவேகு எல்லாம் இங்கே இப்போ ரொம்பப் ப்ரபலம்! அளவுக்கு அதிகமான கஷ்னம். அளவு சாப்பிட்டே இல்லை கஷ்டப்பட்டேன்?!!

   நீக்கு
 38. ///இதெல்லாம் எங்களுக்கு சகஜமப்பா" என்றிருக்க, 'அது' வேறு ரூபங்கள் எடுக்கத் தொடங்கியது (என்று சொன்னார்கள்). //

  வாசனைத்தெரியாம திக்குமுக்காடவச்சிடுச்சே :)  

  ஆனாலும் பொல்லாத ஐந்து தான் அது விதவிதமா mutate ஆகுது 

  பதிலளிநீக்கு
 39. ///ஓவர் ஜாக்கிரதை உடம்புக்கு ஆகாது தம்பி" என்று என்னை முன்பே (வீட்டுக்கு திருடன் வரும் பதிவு) எச்சரித்தவன், அவன் இந்த மாதிரி எந்த எச்சரிக்கையையும் மேற்கொள்வதில்லை. //
  மிகவும் உண்மை ஸ்ரீராம் ..பயந்தாதான் பிரச்சினை .என் கணவர் 3 மாதம் கழிச்சு வேலைக்கு போனார் அங்கே ஒருவருக்கும் வரவில்லையாம் !!! எல்லாம் கேர்லெஸ் ஆட்கள் இப்பவும் மாஸ்க் அணியாமல் சோஷியல் டிஸ்டன்சிங் பின்பற்றாமல் திரியும் கூட்டம் .
  என் கணவருக்கு மார்ச் மாதம் வேலை நிறுத்திய  நேரம் வந்தது எங்கிருந்து வந்ததுன்னு தலையை பிச்சிட்டிருந்தோம் .உங்கள் நண்பர் போல் இங்கே ஒரு நடத்தினர் உண்டு அவர்களில் பெயரை சொன்ன ரேசிசம் ஆகவே தவிர்க்கிறேன் நாடு ரோமானியா .இம்மக்கள் 15 -20 பேர் ஒரு ரெண்டு பெட் அறையிலும்  வாழ்வரகள் ஒரே வீட்டி 25 பேர் கூட இருப்பாங்க அவங்க நல்லா தான் இருக்காங்க சுத்தம் சுகாதாரம் மூவ்ச் !!ஆனால் எந்நேரமும் சானிடைசர் மாஸ்க் போட்டு திரியறவங்களுக்கே முதலில் தாக்கம்   ஏற்பட்டது .

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //ஒரு நடத்தினர்//

   ஒரு நாட்டினர் 

   நீக்கு
  2. //ஆனால் எந்நேரமும் சானிடைசர் மாஸ்க் போட்டு திரியறவங்களுக்கே முதலில் தாக்கம் ஏற்பட்டது .//

   என்ன ஏஞ்சல் இப்படி சொல்றீங்க...   மாஸ்க் இல்லாமல் இருப்பது தப்பாச்சே...     ஒரே இடத்தில நெருக்கமாக இவ்வளவு பேர் இருந்தும்...  சுத்தம் சுகாதாரம் இல்லாமல் இருந்தும் வரவில்லை என்பது ஆச்சர்யம்.  தாராவி கதை தெரியும்தானே?

   நீக்கு
  3. /ஆனால் எந்நேரமும் சானிடைசர் மாஸ்க் போட்டு திரியறவங்களுக்கே முதலில் தாக்கம் ஏற்பட்டது .//
   நான் சொன்னது எங்க மூவரை :) எப்படி வந்ததுன்னே தெரிலயே !!! அந்த ஆச்சர்யத்தைத்தான் சொன்னேன் 
   யம்மாடி  எல்லாரும் மாஸ்க் போடுங்க கையை கழுவுங்க !! அப்புறம் இந்த பின்னூட்டத்தை எதாவது அ ஜீ பார்த்து தூக்கிட்டுப்போய் என்னை வச்சி வாங்கப்போறாங்க :) . மீண்டும் சொல்லிக்கறேன் மாஸ்க் போடுங்க கையை கழுவுங்க கூட்டத்தில் உலாவாதிங்க சோஷியல் டிஸ்டன்ஸ் இடைவெளி பின்பற்றுங்க :)))))))))))))

   நீக்கு
 40. பாவம் அந்த பெரியவர் ..என் மகளை சென்னை பக்கம் விட்டா கண்ணீர் கடல்தான் பெருகும் :( 

  ஹாஹா வாக்சின் :) நானும் போட மாட்டேன் இதனால் நான் பில்லியனர் என்றர்த்தமில்லை :) இவங்க டெஸ்ட் பண்ணனும்னா முதலில் இவங்க போட்டு காட்டட்டும் அப்புறம் 2 மாசம் கழிச்சே நான் போடுவேன் :) 
  இறப்புவிகிதம் கருப்புஆசிய மக்களில் என்பதால் நாங்க சோதனை எலியாக முடியாது .வரட்டும் தடுப்பூசியுடன்  பேசியே துரத்திடறேன் 

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. என்ன நிலைமை என்று பார்த்து நாமும் போட்டுக்கொள்வோம்தானே?  ஆனால் நான் குறிப்பிடுபவர்கள் எப்போதுமே போட்டுக்கொள்ள மாட்டார்களாம்.

   நீக்கு
  2. ஓஹோ அப்படியா ..ஓகே நீங்கலாம் போட்டுட்டு சொல்லுக அப்புறமா அதிரா போட்டபின் 5 மாசம் கழிச்சி நானா போட்டுக்கறேன் 

   நீக்கு
 41. ஸ்ஸ்ஸ் இப்போ படாபட் என்ன பேசினார்னு யூடியூபில் தேடி பார்த்தாதான் புரியும் :)பொதுவா கேபியின் படங்களில் வரும் நெகட்டிவ் எண்ட்  எனக்கு இஷ்டமில்லை .அதோடு எல்லாம் தனது காம்பவுண்டில் நடந்த விஷயங்கள் அதைத்தான் படமாக்கியதா சொல்வார் ..சில்விஷயங்களை ஊதிப்பெரிசாக்காமல் இருப்பதே நன்று இல்லன்னா தவறான முன்னுதாரணங்கள் பெருகும் இவற்றை பார்த்து .

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எனக்குக் கே.பியின் சர்வர் சுந்தரம், எதிர்நீச்சல் தவிர்த்த மற்றப் படங்களோ அதன் கதைக்கருவோ பிடிக்காது. முக்கியமாய் அபூர்வ ராகங்கள் போன்ற படங்கள். அந்தக் கதை அரு.ராமநாதன் கல்கியில் ஐம்பதுகளின் கடைசியில் எழுதிய "குண்டு மல்லிகை" என்ற நாவலின் கதையை ஒட்டி எடுக்கப்பட்டது. ஆனால் கே.பி. அதைச் சொல்லவே இல்லை. அது கல்கியில் வந்தப்போக் கல்கி படிக்கவே தடை. பெரியப்பா வீட்டிற்குப் போய் அப்பாவுக்குத் தெரியாமல் படித்துவிட்டு வருவேன். அங்கேயோ தாத்தா (அம்மாவின் அப்பா) வீட்டிலோ யாருக்கும் எந்தத் தடையும் இல்லை.

   நீக்கு
  2. குண்டு மல்லிகை எனக்குப் பிடித்த கதை.  பிச்சுமணி, உமா, டாக்டர் ஜெகந்நாதன்...  அதன் ஒரிஜினல் பைண்டிங் என்னிடம் இருக்கிறது.  அந்தக் கதையின் வயது வித்தியாசம் பற்றி மட்டுமே ஒற்றுமையாய்ச் சொல்லலாம்.  மற்றபடி ஜெயசுஹா-மேஜர் காதல், மெஜாரின் பெண்ணும், ஜெயசுதாவின் அம்மாவும் காதல் எல்லாம் வேறு எங்கிருந்தோ காபி என்று நினைக்கிறேன்.

   நீக்கு
 42. நம் பழைய வழக்கப்படி ஆவி பிடிப்பது நல்லது. ஏனென்றால் அதில் நாம் பல மூலிகைகளைப்போட்டுக்கொள்ள முடியும். நானும் என் கணவரும் தினமும் தண்ணீரில் சீரகம் அல்லது மிளகு அல்லது ஓமம் அரை ஸ்பூன், இஞி நசுக்கியது 1 மேசைக்கரண்டி, அரை எலுமிச்சம்பழம், மாவிலை அல்லது கொய்யா அல்லது கறிவேப்பிலை கொஞ்சம், அல்லது துளசி இலைகள் , மஞ்சள் தூள் போட்டு கொதி வந்ததும் ஆவி பிடிக்கிறோம். இந்த முறை வைரஸை கொல்கிறது என்பதால் தொடர்ந்து இப்படி செய்கிறோம். வேறு எதுவும் சாப்பிடுவதில்லை. மாத்திரைகளோ அல்லது கபசுர குடிநீரோ சாப்பிட்டதில்லை. இந்த குடிநீர்கூட சும்மா சாப்பிடுதல் கூடாது, சளி, இருமல் இருந்தால் மட்டும் உபயோகிக்க வேண்டும் என்று ஒரு நாட்டு மருத்துவர் சொன்னார். தொண்டை சளிக்கு ஆடாதோடை மணப்பாகு என்ற மருந்து நல்ல பலனைத்தரும்!‌

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி மனோ சாமிநாதன் மேடம்...   நொச்சி இல்லை கூட போடுவார்கள்.

   நீக்கு
 43. சித்த மருத்துவரின் பரிந்துரையில் அவரவர் உடல் நலனை/உபாதைகளையும் கருத்தில் கொண்டே மருந்துகள் எடுக்கவேண்டும். அல்சர், காஸ்ட்ரிக் பிரச்சனை உள்ளவர்கள் வெறும் வயிற்றில் கஷாயம் குடிக்கக் கூடாது. ஒவ்வொரு பொருளும் வெப்பத்தன்மையோ குளிர்தன்மையோ கொண்டிருப்பதை அறிந்து அதற்கேற்றார் போல தான் எடுத்துக்கொள்ளவேண்டும். அலோபதியில் பக்க விளைவுகள் வந்து பெருந்துன்பங்கள் பட்டிருக்கிறேன். எனக்கு சித்தா தான் தேவலாம்..மருத்துவர் சொல்லும் பத்தியங்களைச் சரியாகப் பின்பற்ற வேண்டும்.

  இந்த ஸ்டீம் இன்ஹேலர் பிள்ளைகள் குழந்தைகளாக இருந்தபோதிலிருந்து வைத்திருக்கிறேன்..மிகவும் பயனுடையது.

  சாலையோர பெரியவர் பாவம்..நன்றாக இருக்க வேண்டுமே இச்சூழ்நிலையில்!

  உடல்நலத்துடன் இருக்கப் பிரார்த்தனைகள்! கவனித்துக் கொள்ளவும்

  பதிலளிநீக்கு
 44. நிலவேம்பு 10 நாட்களுக்கு ஒரு முறை மட்டும். தினசரி வெதுவெதுப்பான நீரில் கல் உப்புப் போட்டு வாய், தொண்டை கொப்பளிப்பது தவறாமல் நடக்கிறது. மற்றபடி இஞ்சி, மஞ்சள் தூள் போன்றவை வழக்கத்தை விட சற்று அதிகமாக சமையலில் இருக்கும்படி பார்த்துக் கொள்கிறோம். வேப்பரைஸர் இதே மாடல் பயனில் உள்ளது:). வாட்ஸ் அப் அட்வைஸ் யாவும் தலையைச் சுற்ற வைக்கிறது. பார்த்துக் கவனமாக இருந்திடுங்கள்.

  புதிய பிளாகர் அத்தனை வசதியாகத் தெரியவில்லை. தானாக மாறட்டுமென்றே நானும் விட்டு விட்டேன்:).

  பதிலளிநீக்கு
 45. நிறைய தகவல்கள் இங்கு அறிந்து கொண்டேன் ...

  கவனமாக மருந்து எடுத்துக்கொள்ளுங்கள் ஸ்ரீராம் சார் ...

  என்றும் எங்கும் நலம் விளையட்டும்

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!