செவ்வாய், 28 ஜூலை, 2020

கண்மணி நீ வரக் காத்திருந்தேன்....---- ஜீவி


கண்மணி நீ வரக் காத்திருந்தேன்....








-                                                                            --- ஜீவி

சில உணர்வுகள் உன்னதமானவை
அவற்றை உணர
ஆரம்பிக்கும் ஷணத்திலேயே
அந்த உன்னதங்களும்
உயிரைப் பற்றி 
ஒன்றில் ஒன்றாய்க் கரைகின்றன.


அவர்கள் பார்க்கில் உட்கார்ந்திருந்தார்கள். கூப்பிடு தூரத்திற்கு யாரும் இல்லை. தூரத்தில் கண்ணுக்கு எட்டும் பார்வை தாண்டி நாலைந்து சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருப்பது மங்கலாக இங்கிருந்து தெரிந்தது.

அந்தப்பக்கம் பார்த்து விட்டு, "அவங்கள்லாம் என்ன விளையாட்டு விளையாடறாங்க, சொல்லுங்க பார்ப்போம்.." என்றாள் ரதி.

"என்ன, என் பார்வை எப்படியிருக்குங்கறதுக்கு டெஸ்ட்டா?" என்றான் ப்ரியன்.

"அப்படித்தான் வைச்சிக்கோங்களேன்.."

"எப்படித்தான்?.."

"எப்படின்னு சொன்னாத்தான் சொல்லுவீங்களா?"

"அப்படித்தான் வைச்சிக்கோயேன்.."

"எப்படித்தான்?.." என்று கேட்டுவிட்டு சிரித்தே விட்டாள் ரதி.

காதலர்கள் பேச்சுக்கு அர்த்தம் கிடையாது. போக்கில்லாமல் எதையோ இழுத்து எதையோ தொட்டு எப்படியெல்லாமோ வளைந்து வளைந்து அர்த்தம் இல்லாமல் நீண்டு கொண்டே இருக்கும். அர்த்தம் தான் இருக்காதே தவிர ஒருத்தொருக்கு ஒருத்தர் வாங்கல் இல்லாமல் சீண்டல், சிணுங்கல், பொய்க் கோபம், பொருமல், விட்டுக் கொடுத்தல், வீண் வாதம் எல்லாம் நிரம்பியிருக்கும்.

"சரியான பூம்பூம் மாடு! நான் சொல்றதையே நீங்களும் திருப்பிச்சொன்னா எப்படி?" என்று சிணுங்கினாள் ரதி.

"நீ மட்டும் என்னவாம்?"

"சரி. நான்-நீங்க ரெண்டு பேருமே பூம்பூம் தான்! கேட்டதுக்குச் சொல்லுங்க.."

"என்ன கேட்டே?.. மறந்திட்டேன். இப்போ சொல்லு."

"மறக்கற ஆசாமியைப் பாத்தா தெரிலே?" என்று ரதி நொடித்துக் கொண்டாள்.

"நிஜமாலுமே மறந்திட்டேன், ரதி!.. இப்போ கேளேன். சொல்றேனா, இல்லையா, பாத்துக்கோ.." என்று அவள் வலது கை எடுத்து வளையல்களை நெருடினான் ப்ரியன்.

சிவப்பு நிற கண்ணடி வளையல்கள் அவள் செக்கச்செவேல் கைக்குப் பாந்தமாக இருந்தது.

"ஒரு கண்டிஷன். ஒரு தடவை தான் கேப்பேன்."

"உடனே பதில் சொல்லிடணும்.. அவ்வளவு தானே?" என்று அசால்ட்டாகச் சொன்னான்.

"இந்த ஜபர்தஸ்த்துக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லை.. அதோ.. அங்க..." என்று அவனிடமிருந்து விடுவித்துக் கொண்ட கையை நீட்டிக் கேட்டாள் ரதி. "அதோ.. அங்கே, பசங்கள்லாம் என்ன விளையாட்டு விளையாடிகிட்டிருக்காங்கன்னு சொல்லுங்க, பாக்கலாம்.."

இரண்டு கைகளையும் விழிகள் வரைத் தூக்கி, விரல்களை நிமிர்ந்தி விழிப்புருவங்களுக்கு நீட்ட வாக்கில் அணைகட்டி, கண்களை இடுக்கி, ஏகப்பட்ட முஸ்தீபுகளைச் செய்து கொண்டு, "அடிச்சக்கை! கோலி விளையாட்டுனா விளையாடுறாங்க.." என்றான்.

"ஐயே!.."

"என்ன, ஐயே?"

"கோலி விளையாட்டா.. நல்ல பாத்துச் சொல்லுங்க.."

"பாக்கறதுக்கு என்ன இருக்கு?.. அந்த சிவப்பு சட்டை வாலு விரல் நுனிலே துருத்திண்டிருக்கறது, கோலிக்குண்டு இல்லாமா, என்னவாம்?"

"பைனாக்குலர் வைச்சுப் பாத்த மாதிரி, விரல், நுனி, கோலிக்குண்டுன்னு கப்ஸாலாம் விடாதீங்க.."

"பின்னே?.. அவங்க என்ன வெளையாடுறாங்க?.. நீ தான் சொல்லேன்.."

"சொல்றேன்.. சொன்னா என்ன தருவீங்க?..

இப்போ என்ன தருவது என்பது பற்றி சளைக்காது வாதம். வாதத்திற்கு இடையே தருணம் பார்த்து அவள் கையை இவன் பற்றி அதன் வழவழப்பிற்கு பேச்சை மாற்றலாமா என்று யோசிக்கிறான்.

அவளோ, இவனது சிவப்பு உதடுக்கு, மீசைக்கு, மீசையின் மேல் சிம்மாசமிட்டிருக்கும் மூக்கின் வளைவுக்கு, கன்னக் கதுப்பிற்கு என்று தன் விழிகளை வாளை மீன் போல சுழற்றி கடைசியாக அவன் கருவண்டுக் கண்களில் கொண்டு வந்து தன் பார்வையை நங்கூரம் போட்டு நிறுத்துகிறாள்.

மனிதர்களின் மனோபாவங்களைத் தீர்மானிப்பதில் சில இடங்களுக்குத் தனிப் பெருமையே உண்டு. நூல்நிலையங்களுக்கு அவற்றில் முதல் இடம். ப்ரியன்- ரதி முதன் முதல் ஒரு நூல்நிலையத்தில் தான் சந்தித்தார்கள். புதினங்களை யும், பருவ இதழ்களையும் வாடகைக்குக் கொடுக்கும் தனியார் நூல் நிலையம் அது.


தி. ஜானகிராமனின் பரம ரசிகை ரதி. என்றைக்கோப் படித்திருந்த அவரின் 'அன்பே ஆரமுதே' நாவலை மீண்டும் வாசிக்கும் ஆவலில் நூலகரிடம் சொல்லி வைத்திருந்தாள். அந்த நூலின் இரு பிரதிகள் இருப்பதாகவும், ஆனால் அந்த இரண்டுமே இப்பொழுது கைவசம் இல்லாமல் வெளியே படிக்கப் போயிருப்பதாகவும் அடுத்த வாரம் வந்தால் கிடைக்கும் என்றும் நூலகர் சொல்லியிருந்தார்.


அடுத்த வாரம் அதற்காகச் சென்ற பொழுது தான் தி.ஜா.வின் அந்த நாவல் அவளுக்குக் கிடைத்தது மட்டுமில்லை, ப்ரியனின் அறிமுகமும் கிடைத்தது. தான் வாசிக்க எடுத்துச் சென்றிருந்த 'அன்பே ஆரமுதே' நாவலை திருப்பிக் கொடுக்க அவன் வந்தது, அதையே வாங்கிச் செல்ல ரதி வந்தது இயல்பான ஒரு ஒற்றுமையாய் அமைந்தது. ப்ரியனும் தி.ஜா.வின் எழுத்தை உள்ளார்ந்து மோகிப்பவன் என்பது அவர்களிடையே ஒரு ஒத்த உணர்வை ஏற்படுத்தக் காரணமாக இருந்தது. அவர்கள் இருவருக்குமான ஒரு மனப் பிணைப்பின் தொடக்கம் இப்படித்தான் ஆரம்பித்தது.

"எங்கப்பா கிட்டே நம் காதலைப் பத்தி சொல்லிட்டேன். பச்சை சிக்னல் போட்டுக் கொடி காட்டிட்டார்.. தெரியுமோ?" என்கிறான் ப்ரியன்.

"எங்கப்பா மட்டும் என்னவாம்?.. பொண் கேட்டு மேற்கொண்டு பேச உங்க வீட்லேந்து எப்ப வந்தாலும் தாரை வார்த்துக் கொடுக்கத் தயாரா இருக்கார். தெரிஞ்சிக்கங்க.."

"பின்னே ஒரு நல்ல நாள் பார்த்து..."

"பார்த்து?..."

"டும், டும் தான்!"

ரதியின் முகம் அஷ்ட கோணலாக சுளிக்க, "கடைசிலே அதானா?" என்றாள். அவள் குரலில் ஏமாற்றம் வழிந்தது.

"எதானா?"

"பார்த்துப் பார்த்து அமைஞ்சக் காதலை பலிகொடுக்கத் தானா?" என்றாள்.


2

காதல் ஐஸ்கிரீம் போல

உணர்வதற்குத் தான் ஜிலுஜிலுப்பு
உள்ளார்ந்து என்னவோ
தகிக்கும் வெப்பம்! வெப்பம்!

"எ ன்ன சொல்றே, ரதி?" என்ற ப்ரியனின் திடுக்கிடுதலில் அவன் புருவங்கள் வில் போல் வளைந்தன. குரல் தடுமாற்றத்தில் அவன் மனசு அடிபட்டதை உணர்ந்து ரதி துடித்துப் போய் விட்டாள்.

"ஒண்ணுமில்லே.. லீவ் இட்.." என்று நேரடியாக அவன் முகத்தைப் பார்க்கும் திராணியற்று தூரத்தில் விளையாடும் சிறுவர்கள் பக்கம் பார்வையைப் பெயர்த்தாள் ரதி.

"இல்லை.. நெனைச்சதை சொல்லிடு, ரதி!" என்று அவள் கரம் பற்றினான் ப்ரியன். வழக்கமான உணர்தலைத் தாண்டியதான ஒரு வெதுவெதுப்பை அந்தத் தொடுதலில் உணர்ந்தான். "ரதி! இதோ பார்.. நீ நெனைச்சதை எங்கிட்டே சொல்லாமலேயோ, இல்லை, நான் நெனைச்சதை உங்கிட்டே சொல்லாமலேயோ இது வரை இருந்ததில்லே.. இப்போ மட்டும் திடீர்னு என்ன புதுப் பழக்கம்..? ம்?.. சொல்ல வந்ததை முழுதும் சொன்னால் எனக்குப் புரிபடும்" என்றான்.

அவனை நிமிர்ந்து பார்த்த ரதியின் விழியோரத்தில் லேசாகத் தளும்பிய நீர் ஒரு நிமிடம் தாமதித்து உருண்டு திரண்டு அவள் கன்ன ரோஜாக்களில் வழிந்து அவன் கரத்தில் விழுந்தது. அவள் கண்ணீரைப் பார்த்ததும் பதறிப் போய்விட்டான் ப்ரியன். இத்தனை நாள் கொண்டாட்டத்தில் இல்லாத ஒரு சோகம் அவன் மனசைப் பிழிந்தது. "என்ன நடந்தது, ரதி? சொல்லு.." என்று கெஞ்சலாகக் கேட்டான்.

"ஒண்ணுமில்லே.. லேசா மனக்கிலேசம். எதையோ இழந்திடுவோமோன்னு எனக்கு பயமா இருக்கு.." என்றாள்.

"எதையோன்னா?.. சரியாச் சொல்லு. என்ன அதுன்னு யோசிச்சுச் சொல்லு."

"சொல்றேன்.." என்று ஒரு நிமிடம் தாமதித்து மிடறு விழுங்கினாள் ரதி. " ஒரே வரிலே சொல்லிடறேனே?.. கல்யாணத்துக்கு அப்புறம் நாம் ரெண்டு பேருமே இந்தக் காதல் உணர்வை இழந்திடுவோமோன்னு பயமா இருக்கு. அதான்."

"காதல் உணர்வை இழக்கிறதாவது?.. என்ன, தத்துபித்துன்னு?.. வழக்கமா பாயிண்ட் பாயிண்ட்டா பேசுவியே, அப்படிப் பேசு. என்னாலே முடியும்ன்னா உன் பயத்தைப் போக்கறேன். விவரமா சொன்னாத் தானே தெரியும்.." என்று அவள் விழிகளை நேருக்கு நேர் கூர்மையாகப் பார்த்தான் ப்ரியன். அந்த நேர் பார்வையைத் தாங்க சக்தியில்லாது தலையைக் கவிழ்த்துக் கொண்டாள் ரதி.

மெல்ல அவள் தாடை தொட்டு நிமிர்த்தி, "சொல்லு, ரதி.." என்றான் ப்ரியன், ஆதரவாக.

"காலாதி காலத்துக்கு என்னை நீயும், உன்னை நானும் காதலிச்சிண்டே இருக்கணும்ன்னு ஆசை, ப்ரியன்.. இது பேராசை இல்லை; நியாயமான ஆசை. கல்யாணம்ங்கற பேர்லே இந்த ஆசைக்கு ஒரு End போட்டு முடிச்சிடுவாங்க ளோன்னு பயமா இருக்கு.. அதான்.." என்று திக்கித் திணறி ஒருவழியாக மனசில் இருப்பதைச் சொன்னாள் ரதி.

"முடிச்சிடுவாங்களா? அப்படீன்னா?.. யார் முடிச்சிடுவாங்க?"

"நம்மைப் பெத்தவங்க.."

"புரிலே. நீ சொல்றது சுத்தமா புரிலே. அவங்க எப்படி நமக்குக் கல்யாணம் பண்ணி வைச்சு அதன் மூலமா நம்மக் காதலை முடிச்சு வைக்க முடியும்? முடிச்சிக்கணும்ன்னா.. ஸாரி.. அப்படிச் சொல்லவே எனக்குத் திக்குனு இருக்கு.. நம்ம இருவர் சம்பந்தப்பட்டதை நாம தானே முடிச்சிக்கணும்?.."

"நாம- அவங்க இந்த ரெண்டுமே கூட வேண்டாம்.." என்று எதையோ சொல்ல வந்தவள், சட்டென்று தலை நிமிர்த்தி அவனைக் கூர்மையாகப் பார்த்தாள். "ப்ரியன்.. இப்போ என் மனசிலே இருக்கறதைத் தெளிவா சொல்ல முடியும்ன்னு தோண்றது.." என்று அவன் வலது கையை விரித்து ரேகைப் பிரதேசத்தில் கோலம் போட்டபடி, "இப்போ சொல்லட்டும்மா?" என்று சொல்லி லேசாகச் சிரித்தாள்.

"சொல்லு." என்றவனின் குரலில் ஆர்வம் இருந்தது.

"காதல்ன்னா அன்புன்னு சுலபமாச் சொல்லிடறாங்க.. அதையே கதைகள்லே பன்னிப் பன்னி விதவிதமா சொல்ல முயற்சி செஞ்சிருக்காங்க. இன்னும் சொல்லி முடிஞ்ச பாடில்லே. நம்ம தி.ஜா. சார், அவர் பாணிலே மனசை விண்டு காட்டறாரே தவிர, அவரும் தீர்மானமா இதுக்கு இதான் அர்த்தம்ன்னு முழுமையா சொல்லிட்ட மாதிரி எனக்குத் தோணலே. யாரையும் சொல்லிக் குத்தமில்லே. ஏன்னா, அது அப்படி.. இந்தக் காதல்ங்கறது ஒவ்வொருத்தருக் கும் ஒவ்வொரு மாதிரியான அனுபவமா இருக்கு. 'காதல், காதல்'ன்னு ஜபிக்கலாமே தவிர இதான் காதல்ன்னு வரையறுத்து வார்த்தைலே வடிச்சு சொல்ல முடியும்ன்னு எனக்குத் தோணலே. ஒருத்தர் மனசிலே பிரவாகமா பொங்கித் தளும்பற உணர்வை, எழுத்திலே எழுதிக் காட்டுன்னா முடியுமா?.. முடியும்ன்னு தெரிலே.. "

அவள் உணர்வதை அவளே சொல்லி முடிக்கட்டும் என்று காத்திருந்தான் ப்ரியன்.

"அவ்வளவு தூரம் போவானேன்?.. உன்னை ஏன் காதலிக்கிறேன்னு யாராவது கேட்டால் எனக்கே அதுக்கு தகுந்த பதிலைச் சொல்லத் தெரியாது. உன்னை எனக்குப் பிடிச்சிருக்கு. அதைத்தான் நான் காதல்ன்னு நினைச்சிக்கிட்டிருக் கேனோ என்னவோ. உங்கிட்டே என்னல்லாம் எனக்குப் பிடிச்சிருக்குன்னு ஒரு லிஸ்ட்டே போடலாம். நான் என்ன சொன்னாலும் உனக்குக் கோபமே வராது; அது பிடிச்சிருக்கு. நான் எதுக்காச்சும் வருத்தப்பட்டா ஒரு வினாடி கூட உன்னாலத் தாங்கிக்க முடியாது; இதுவும் எனக்குப் பிடிச்சிருக்கு. உன்னாலே தாங்கிக்க முடியாதுங்கறத்துக்காகவே எந்த வருத்தத்தையும் நான் உங்கிட்டே வெளிக்குக் காட்டிக்கறதே இல்லைன்னு ஆரம்பிச்சு நாளாவட்டத்திலே இதுவே இப்போ என் குணமாயிட்டுச்சு. அப்படி என்னோட குணத்தையே உன்னோட காதல் மாத்தியிருக்கு. இது பத்தி எங்க அம்மாக்கானா ஆச்சரியமான ஆச்சரியம். அப்புறம், எதுக்கும் கவலைப்படாம சிரிக்கச் சிரிக்கப் பேசற உன் வழக்கம் எனக்கு ரொம்பப் பிடிக்கும். அதுனாலே உன்னோட கொஞ்ச நேரம் இருந்தாலே நான் படற சந்தோஷம், ஓ, இட் ஈஸ் கிரேட்! இப்படி இன்னும் சிலது சொல்லலாம். பலதை சொல்ல முடியாம உணர்றதா இருக்கு. "

".........................."

ஒரு வினாடி தாமதித்து, "அன்னிக்கு லைப்ரரிலே ஜானகிராமன் புஸ்தகத்தை நீ நீட்டினப்பவே, நீ விசேஷமான ஆள்ன்னு தெரிஞ்சிகிட்டேன்" என்று ரதி சொன்ன போது ப்ரியன் அடக்க முடியாமல் கலகலவென்று சிரித்தான்..

"ஏன் சிரிக்கறே?.."

"என்ன வேடிக்கை, பாரு.. இத்தனை நாள் கழிச்சு ஞாபகம் வைச்சிண்டு இந்த விஷயத்தைச் சொல்றே, பாரு!"

"அதுக்காக சிரிப்பாங்களாக்கும்?" என்று பொய்க்கோபம் காட்டினாள்.

"அதுக்காக சிரிக்கலே, ரதி!"

"பின்னே எதுக்காக?.."

"எதுக்காகன்னா, நான் திருப்பிக் கொடுத்த ஜானகி சார் புஸ்தகத்தை நீ நூலகர்கிட்டே கேட்டு வாங்கிகிட்டுப் போனப்போ, அவர் என்ன சொன்னார்கறது ஞாபகம் இருக்கா?.. 'இவர் எழுதின புஸ்தகத்துக்குத் தானே தவமிருந்தீங்க, இந்தாங்க'ன்னு உங்கிட்டே 'அன்பே ஆரமுதே' புஸ்தகத்தைக் கொடுத்தார்லியா, அன்னிக்கே உன்னைப் பாத்து, 'அட, நம்மளைப் போலவே அவர் புஸ்தகத்துக்காக தவம் இருக்கற இன்னொரு ஆளு'ன்னு நெனைச்சிக் கிட்டேன். என் நெனைப்புக்கு ஏத்த மாதிரி, நீ நம்பாளானதும் ஜென்ம சாபல்யம் அடைஞ்ச சந்தோஷம் எனக்கு!" என்றான்.

"ஐயே!.."

"என்ன ஐயே?.. மனசிலே படறதை மறைக்காம சொல்றத்துக்கு எதுக்கு வெக்கம்? ஜானகி சார் மாதிரியே ஜானகி சாரோட வாசகர்களும் இருக்கணும் இல்லியா?"

"அது கூட சரிதான். இப்படி எடுத்துக் குடுத்தாத்தான் மனசிலே நினைக்கறதைச் சொல்றத்துக்கும் பிடிபடறது. இப்போ என் மனசிலே படறதைச் சரியாச் சொல்ல முடியும்ன்னு நினைக்கறேன், ப்ரியன். நமக்கு கல்யாணம்ன்னு ஒண்ணு ஆயிடுத்துனா, குடும்பம் குட்டின்னு ஏற்பட்டுப் போயிடுத்துனா, இந்தக் காதல்லாம் பஸ்பமாகிடுமேங்கற கவலை தான் என்னை அரிக்கறது.. இப்ப உனக்கும் எனக்கும் நாம்ப ஒருத்தரை ஒருத்தர் நேசிக்கறது தான் முக்கியமானதா இருக்கு. கல்யாணம் ஆச்சுனா, இந்த முக்கியம் போய் வேறொரு முக்கியம் இந்த இடத்திலே வந்து உக்காந்துக்கும். இப்படி இன்னொண்ணுக்கு இன்னொண்ணுக்கு இடம் கொடுத்தே, நாளாவட்டத்திலே இது காணாமப் போனாலும் ஆச்சரியம் இல்ல. இதான் என் கவலை. இதுக்கு ஏதாவது மருந்து இருந்தா, சொல்லு, ப்ரியன்" என்றாள் ரதி.


3

நீள் விசும்பு நட்சத்திரங்களில்
இசை இன்ப ராகங்களில்
ஜோதிட சாத்திர ராசிகளில்
அடர் கானக விலங்குகளில்
நெடிதுயர்ந்த மரங்களில்
ஆறறிவு மானுடர்களிலும்
உண்டு ஆம் ஆண் பெண் பேதம்



"சரியான குழந்தையாய் இருக்கிறாயே!" என்று கைகொட்டிச் சிரித்தான் ப்ரியன். "நல்ல வேளை! என்னிடம் மாட்டினாய்; இன்னொருத்தனாய் இருந்தால் கிடைத்தடா சான்ஸ்ன்னு இன்னேரம் தூக்கிச் சாப்பிட்டுப் போயிருப்பான்"

"எதைச் சாப்பிட்டிருப்பான்?"

"எதை இல்லை; யாரை. யாரைச் சாப்பிட்டிருப்பான்னு கேளு."

அவனைத் தலைச்சாய்த்து விநோதமாகப் பார்த்தாள் ரதி. தான் சொன்னதின் அர்த்தம் சுத்தமாக அவளுக்குப் புரியவில்லை என்று ப்ரியனுக்குத் தெரிந்தது. அதையே தான் அவளும் அவனிடம் கேட்டாள். "நீ சொல்றது ஒண்ணுமே புரிலே, ப்ரியன்!"

"புரியாது இருக்கற வரை சந்தோஷம்."

"உனக்கென்ன அதில் சந்தோஷம்?"

"என்ன சந்தோஷம்ங்கறதை அப்புறம் சொல்றேன். இப்போதைக்கு நான் கேக்கறத்துக்குப் பதில் சொன்னால் போதும்."

"கேளு, ப்ரியன்.." என்று தாவணியின் தலைப்பை எடுத்து தோள்பட்டை சுற்றி போர்த்திக் கொண்டு பார்க் பென்ஞ்சின் சாய்மான மரப்பலகைகளில் முதுகு சாய்த்து வாகாக உட்கார்ந்து கொண்டாள் ரதி.

"ஓக்கே. முதல் கேள்வி என்னன்னா..." எங்கிருந்து ஆரம்பிக்கலாம் என்று ஒரு நிமிட யோசனைக்குப் பின் ப்ரியன் கேட்டான். "எத்தனை காலத்துக்கு நாம்ப இப்படி ஒருத்தரை ஒருத்தர் காதலிக்கற காரியத்தை மட்டும் செஞ்சிகிட்டு இருக்கலாம்ன்னு நீ நெனைக்கிறே?"

ஓரக்கண்ணால் அவனைப் பார்த்தபடி, "நீ சொல்லு. நீ என்ன நெனைக்கிறே?" என்று அவனைத் திருப்பிக் கேட்டாள் ரதி.

"நான் கேள்வி மட்டும் தான். நீ பதில் மட்டும் தான். அதானே முதல்லேயே சொன்னது?"

"சொன்னது சரி. இப்போ நான் ஏதாவது நீ நெனைக்கறதுக்கு மாறா சொல்லிட்டு நீ வருத்தப்படப் போறையோன்னு பயமா இருக்கு. அதுக்காகத் தான்."

"மாட்டேன். இந்த கேள்வி-பதிலே எதுக்குன்னா.. ஓக்கே. இப்போ நாம ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் மனசாரக் காதலிக்கறோமில்லையா?.. இந்த நேரத்தில் நம்ம பெற்றோர்கள் இவங்களுக்கு கல்யாணம் செஞ்சு வைச்சாத் தேவலையேன்னு நெனைக்கறாங்க. ஏன் அப்படி நெனைக்கறாங்க.. நாம அதுக்கு என்ன பதில் சொல்லப்போறோம்ங்கறத்துக்காக இந்த கேள்வி- பதில். ஓக்கேவா?"

"ஓக்கே. ஆனா, சுத்த போர் சப்ஜெக்ட் இல்லையா? நான் அந்தக் கல்யாண சப்ஜெக்ட்டையே அவாய்ட் பண்ணனும்ன்னு நெனைச்சா, நீ என்னவோ சுத்தி வளைச்சு அதையையே..."

"விஷயமே அதான். கல்யாணம் தான். இப்போ உனக்கு வயசு 18. பத்து வருஷத்துக்கு முன்னாடி சிறுமி. இப்போ குமரி. குமரி பருவத்திலே தான் காதலே தவிர சிறுமி பருவத்தில் இல்லே. ஏன்னு யோசிச்சுப் பாரு."

"ஏன், நீயே சொல்லு."

"எல்லாத்தையும் நானே சொல்லணும்ன்னா நீ ஏன் ஜானகி ஸார் வாசகியா இருக்கணும்?.."

"பாவம் அவர். அப்பப்போ நடுவிலே அவர் தலையை வேறே ஏன் போட்டு உருட்டறே?.."

"தலையை உருட்டறதில்லை. அப்பப்போ அவரை ரெஃப்வர் பண்ணிக்கறேன். ஏன்னா, நம்ம ரெண்டு பேருக்கும் பொதுவானவர் அவர். நம்ம வாத்தியார். அவர் எழுத்தையெல்லாம் ரசிச்சுப் படிச்சிருக்கோம், இல்லையா?.. அதனாலே, எல்லாத்திலேயும் அவர் என்ன சொல்லியிருக்கிறார்ன்னு நெனைச்சுப் பாக்கற மனசு. அந்த மரியாதையாதையாலே தான். சரி.. கேட்டுக்கோ. மனுஷப் பிறவிக்கு ஒவ்வொரு பருவத்திலேயும் ஒவ்வொரு உணர்வு. குமரி-குமரன் பருவத்து உணர்வு காதல் வயப்படறது.. இந்தப் பருவம் போச்சுன்னா, இதுவும் போகும்னாலும், அந்தந்த பருவ உணர்வுகளுக்கு ஏத்த மாதிரி இந்த காதல்ங்கற பேரும் மாறும்.. பேரு தான் மாறுமே தவிர, சரக்கு ஒண்ணு தான். அதனாலே காதல் உன்னை விட்டோ என்னை விட்டோப் போயிடுமோன்னு கவலைப்படத் தேவையில்லை. விட்டுக் கொடுத்து வாழற தன்மை இருக்கற வரைக்கும் அது போகவே போகாது. அன்டர்ஸ்டாண்ட்?.."

"அடேங்கப்பா. இன்ரஸ்ட்டிங்..." என்று வலது கையைத் தாங்கலாகக் கொண்டு ரதி மோவாயைத் தாங்கிக் கொண்டாள். "காதல் போகாம இருக்கறத்துக்கு விட்டுக் கொடுத்து வாழணும்ங்கறே. அது போதும் எனக்கு. அப்புறம், சொல்லு.." கண்கள் அவனைத் தீர்க்கமாகப் பார்க்க, சுவாரஸ்யமாக அவன் சொல்வதைக் கேட்க தயாரானாள்.

"ரதி, கல்யாணம்ன்னா கல்யாணத்தோட போயிடும்ன்னா நெனைச்சிருக்கே?.. அதான் இல்லே. கல்யாணம்ங்கறது தான் குடும்ப வாழ்க்கையோட ஆரம்பக் கண்ணி. உனக்கு நீயும் எனக்கு நானும்ன்னு ஒருத்தரை ஒருத்தர் சார்ந்து இருக்கற குடும்ப வாழ்க்கை. இப்படி பார்க்லே உக்காந்து பேசறத் தாண்டி என்னத்தைக் கண்டோம், நாம?.. இதுலேயே மொத்த வாழ்க்கையும் முடிஞ்சிரும்ன்னு நீ நெனைக்கறே?.. கல்யாணம்ன்னு ஆனதும் எங்கடான்னு காத்திருக்கும்; நம்ம ரெண்டு பேரையும் சார்ந்து இன்னொண்ணு; நம்ம உயிர் கலந்து குழந்தையாய் இன்னொண்ணு. குழந்தைன்னு சொன்னதும் உன்னோட கண் எப்படி மினுமினுக்கறது, பாரு."

ரதி நாணித் தலைகுனிந்தாள்.

"குழந்தை மேலே கொள்ற பாசமும், அன்பும் இந்தக் காதலோட இன்னொரு ஸ்டேஜ் தான். காதல் தான் எல்லாத்துக்கும் ஆணி வேர். ஒன்றே, பலவாகி.. காதலோட மகாத்மியம் இது. கண்ணாடிலே முகத்தைப் பாக்கற மாதிரி நம்ம ரெண்டு பேரையும் நம்ம குழந்தைலே பாக்கலாம். வேதாந்தம் இல்லே, ரதி.. விஞ்ஞான உண்மை."

"அதுசரி.. உனக்குன்னா நீ பேச ஆரம்பிச்சாலே எதெல்லாமோ எங்கிருந்தெல் லாமோ ஓடி வரும்.."

அவள் தோள் திருப்பி, அருகில் விசாலமாக வளர்ந்திருந்த மரத்தைக் காட்டினான் ப்ரியன்."இந்த மாமரத்தைப் பாரு. கொத்துக் கொத்தா மாம்பூ. இந்தப் பூ வடுவாகிக் காயாகணும்; , காய் பழமாகணும். பூவாவே என்னிக்கும் இருக்க முடியாது. அது மாதிரித் தான் காதலும். என்னிக்கும் காதலாகவே இருக்க முடியாது. அதுவும் ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் சாத்தியமில்லாத விஷயம் இது. எல்லாமே வளர்ச்சி சம்பந்தப்பட்டது. வளர்ச்சி மாறுதல்லே போய் தன்னை அடக்கிக்கும். இன்னிக்கு இதுன்னா நாளைக்கு அடுத்ததுன்னு இன்னொண்ணு இருக்கும். இப்படி ஒண்ணு போய் இன்னொண்ணுன்னு ஒவ்வொண்ணா மனசிலே உருவாகிண்டு வரும். நமக்குக் கல்யாணம் ஆச்சுனா, உலகம் நம்மைப் பாக்கற பார்வையே மாறிப்போகும். இப்போ நாம் காதலர்கள்ன்னா கல்யாணம் ஆனவுடனே தம்பதிகள். தாம்பத்ய உறவு பூணுவதால் தம்பதிகள். நமக்கு நாமே ராஜா-ராணி."

"கல்யாணம் ஆனாத் தான் அதெல்லாமா?"

"பின்னே? நாம கல்யாணம் செஞ்சிக்கப் போறோம்ங்கற நிச்சயத்தில் தான் நம்மைப் பெத்தவங்களே இப்படி ப்ரீயா சுத்த விட்டிருக்காங்க. இல்லேனா, நீ வீட்டுக்குப் போனதும், 'வயத்லே நெருப்பை கட்டிண்டிருக்கேண்டி'ன்னு உங்கம்மாவே சொல்லுவாங்க. எங்கப்பா, கேக்கவே வேண்டாம். அவரை யாரும் கைநீட்டி தப்பா எதுவும் சொல்லிடக்கூடாது. எத்தனை நாளைக்கு வெறும் காதல்ன்னு ஊருக்கெல்லாம் ரீல் விட்டிண்டிருக்க முடியும்? சொல்லு.."

"அப்போ நான் சொல்றதெல்லாம் உனக்கு ரீலாத்தான் படறதா?.. உனக்கு அப்படியில்லையா?" என்று வெகுண்டாள்.

"சரி ரீல் இல்லே. உண்மைனே வைச்சிண்டாலும், இப்படியே இருந்துடுவோம் ங்கறது இயற்கைக்கு முரணானது. ஆண்-பெண் பேதமும் இப்படியே இருந்திடக்கூடாதுங்கறதுக்காகத் தான். பேசிண்டே இருக்கறச்சே உன் கையைத் தொட்டுப் பாக்கறேன், இல்லையா?.. நீ என் கையை விரிச்சு கோடு போட்றே, இல்லையா?.. இதெல்லாம் எதனால்ங்கறே?.. இங்கேயே தேங்கிடாதே. இதைத் தாண்டி இன்னும் இருக்குங்கறதுக்காக."

ரதியின் முகம் 'உர்'ரென்று இருந்தது. கொஞ்ச நேர மெளனத்திற்குப் பிறகு, "ச்சீ! போகிறது பார் புத்தி!" என்றாள்.

"புத்தி சரியாத்தான் போறது. அதான் உனக்கும் சொல்ல முடியறதுன்னு தெரிஞ்சிக்கோ. மல்லிகைப் பந்தல்லே பார்த்திருப்பியே! செடியோட நுனி முனை மேற்கொண்டு படறதுக்கு அல்லாடித் தவிச்சிண்டிருக்கும். அதை உரசின மாதிரி ஒரு கொம்பை நட்டா அதை இறுக்கிப் பிடிச்சிண்டு மேலே மேலே போக ஆரம்பிச்சிடும். கல்யாணம் கூட கொழுகொம்பு தான். காதலின் மேற்கொண்டான வளர்ச்சிக்கு ஆதாரமா இருக்கற கொழுகொம்பு."

"கல்யாணம் ஆச்சுனாலும் நம்ம காதலுக்கு என்னிக்கும் அழிவில்லைங்கறே! அப்படித்தானே?"

"காதல்ங்கறது அத்தனைக்கும் ஆதாரம். அதுக்கு அழிவேயில்லை. ஒவ்வொரு உணர்வுக்கும் ஏற்ற மாதிரி வேறே வேறே ரூபமாத் தெரியறது. அன்பு, நேசம், பாசம், ஆதுரம், கருணை-- அத்தனை உணர்வுகளுக்கும் அதான் அடிப்படை. எல்லா பாஸிடிவ் சிந்தனைகளுக்கும் காதல் தான் உற்பத்தி ஸ்தானம்.. அப்படியிருக்க அதுக்கு அழிவேது?.. சொல்லு."

ரதி ஒன்றுமே சொல்ல வில்லை. யோசிக்கற மாதிரி இருந்தது. ப்ரியன் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். திடீரென்று முன்னால் வந்து விழுந்து கண்களை மறைத்த குழல் கற்றைகளை ரதி ஒதுக்கி விட்டுக் கொண்டாள். அவள் இதழ்க்கடையில் லேசாக புன்முறுவல் அரும்பி மலர்ந்தது. அது மந்தஹாசமாய் மாறி குலுங்கிக் குலுங்கிச் சிரித்தாள்.

"இப்போ சரியா?.. கல்யாணம்ன்னா ஓ.கே. தானே?"

"போங்க.. எனக்கு வெக்கமா இருக்கு.." என்றாள். அந்த மரியாதையும் இயல்பான நாணமும் எங்கிருந்து வந்தது என்று தெரியவில்லை.

பார்க் லவுட்ஸ்பீக்கரிலிருந்து 'கல்யாண நாள் பார்க்கச் சொல்லலாமா?..' என்கிற பாடல் வரிகள் காற்றில் தவழ்ந்து வந்தன.

ரதியும், ப்ரியனும் கையோடு கை சேர்த்துக் கொண்டனர்..

===============================

73 கருத்துகள்:

  1. சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க சொல்லிற் பயனிலாச் சொல்..

    நலம் வாழ்க...

    பதிலளிநீக்கு
  2. அன்பின் வணக்கம் அனைவருக்கும்...

    பதிலளிநீக்கு
  3. இன்று ஜீவி அண்ணா அவர்களது கை வண்ணம்..

    இப்படியான கதைக் களத்தைத் தங்களால் மட்டுமே கையாள முடியும்..

    இளங்காதலர்கள் (!) கவனத்தில் கொள்க..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏங்க... இந்தக் காதலர்களே இளங்காதலர்கள்தான். பெண்ணுக்கு 18 வயசு. இந்த வயசுல காதல், தனியாக காதலனை சந்தித்து பெரிய பெரிய விஷயங்கள்லாம் பேசறாங்க. அதுதான் ரொம்பவே உறுத்துது.

      நீக்கு
    2. நான் சொல்ல நினைத்தது -
      இன்றைய இளங்காதலர்களை...

      அதுசரி...

      காதலில் இளங்காதல் என்றும்
      பழங்காதல் (பழைய காதல்) என்றும் உண்டா என்ன!?...

      நீக்கு
  4. கதையைப் படித்த்தும் இந்தப் பாடல் தான் நினைவுக்கு வந்தது..

    மூடிக் கிடந்த இமையிரண்டும்
    பார் பார் என்றது..
    முந்தானை காற்றில் ஆடி
    வா வா.. என்றது..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மூடிக்கிடந்த கடை இரண்டும்
      Bar Bar என்றன!
      கியூவில் நின்ற குடிமகனோ
      தா தா என்றனன்

      அரசு மட்டும் அருகில் வந்து
      (கொரா)நோ நோ என்றது
      ஆசை மட்டும் வாய் திறந்து
      ஐயோ ஐயோ என்றது!

      நீக்கு
    2. அடடா...
      காலத்திற்கேற்ற பாடல்...

      நமக்கெல்லாம் இப்படித்
      தோன்றமாட்டேன் என்கிறதே!?..

      நீக்கு
  5. நேற்று அன்பின் நெல்லை அவர்களது
    பலாப் பழ பணியாரத்தினை ஒட்டியதாக
    இன்று ஒரு காதல் மணியாரம்!...

    தேனில் ஊறிய பலாச்சுளை பற்றி சொல்லியிருந்தோம்...

    அதன் மறு வடிவம் இன்றைய கதை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பு ஶ்ரீராம், அனபு துரை இன்னும் மற்றவர்களுக்கும் இனிய ஆட செவ்வாய் வாழ்ததுகளும் வணக்கங்களும்..

      நீக்கு
    2. வாங்க வல்லிம்மா...     வணக்கம்.

      நீக்கு
  6. அனைவருக்கும் அன்பின் வணக்கம். ஜீவி சாரின் காதலர் கதை.! சுபமாக ஆரம்பிக்கிறது.நல்ல வேளை அன்பு ஆரமுதே “ கதையில் ஆரம்பித்தார்கள். உண்மையான ஈர்ப்பின் கதை. உயிர் தேன் பசுபதி போல் இல்லாமல் ருக்மணியின் முதிரந்த காதல் நல்ல பல பாடம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முதிர்ந்த என்று படிக்கவும்.
      நல்ல பால படம்.

      நீக்கு
    2. //நல்ல வேளை அன்பு ஆரமுதே “ கதையில் ஆரம்பித்தார்கள்.//

      ஹஹ்ஹாஹா.. நீங்கள் சொல்வது புரிகிறது, வல்லிம்மா.

      தி.ஜா. சம்பந்தப்பட்ட பகுதிகள், ஒவ்வொரு பகுதிக்கும் முன்னால் வரும் கவிதைகள் -- எல்லாம் பின்னால் கதையை டெவலப் செய்து சிறுகதைத் தொகுப்பில் சேர்த்த பொழுது சேர்த்தவை வல்லிம்மா. ஏன், தி.ஜா.வை இந்தக் கதையில் நுழைத்தேன் என்பதும் உங்களுக்குப் புரிந்திருக்கும். இந்தக் கதை பிரசுரமாகும் பொழுது மூன்று பகுதிகளாய் இல்லாமல் ஒரே பகுதியில் வாசிக்கிற மாதிரி இருக்கும். ரதியும் ப்ரியனும் ஒரு நூல் நிலையத்தில் சந்திக்கிற மாதிரி கதை ஆரம்பமாகும்.

      நீக்கு
  7. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா அக்கா...   வணக்கம்.  அன்பான பிரார்த்தனைகளுக்கு நன்றி.  இணைந்து பிரார்த்திப்போம்.

      நீக்கு
  8. ஒரு கட்டத்தில் விட்டுக் கொடுக்கும் தன்மையே காதலைக் காப்பாற்றும் என்பது உண்மைதான்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க, தேனம்மை.

      விட்டுக் கொடுத்தல் என்பது எல்லா நேரங்களிலும் ஒரு க்ரியா ஊக்கியாய் மனித உறவில் ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொள்வதற்கு பந்தமாய் செயல்படுவதை உணர்கிறேன்.
      விட்டுக் கொடுத்தலுக்கு அவசியமே இல்லாமல் இருந்தாலும் அசுவாரஸ்யமாக இயந்திர கதியில் அமைந்து விடும். என் அளவில் நான் பார்த்துக்கிறேன், உன் அளவில் நீ பார்த்துக்கோ என்கிற மாதிரி. இல்லையா?..

      நீக்கு
  9. அடுத்தடுத்தது என்ன என்று ஆர்வமாகப் படிக்கும் அளவு சிறப்பு. ஆசிரியருக்கு பாராட்டுகள். பகிர்ந்த உங்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கதையை மூன்று பகுதிகளாகப் பிரித்து சில விஷயங்களைப் பின்னால் சேர்த்ததில் கதைக்கு ஒரு சுவாரஸ்யம் கூடியிருப்பதாக நினைக்கிறேன், ஐயா. ஒரு சிறுகதையை எப்படி வாசித்து ரசிக்க வேண்டுமோ, அப்படி வாசித்து கருத்துச் சொன்னமைக்கு நன்றி, ஐயா.

      நீக்கு
  10. அனைவருக்கும் வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். தொடரும் கொரோனா அறுபட்டுப் போகப் பிரார்த்தனைகள். ஊரடங்கு முடிந்து இயல்பு வாழ்வு திரும்பவும் பிரார்த்தனைகள். பின்னர் முடிஞ்சால் வரேன்.

    பதிலளிநீக்கு
  11. மல்லிகைப் பந்தல்லே பார்த்திருப்பியே! செடியோட நுனி முனை மேற்கொண்டு படறதுக்கு அல்லாடித் தவிச்சிண்டிருக்கும். அதை உரசின மாதிரி ஒரு கொம்பை நட்டா அதை இறுக்கிப் பிடிச்சிண்டு மேலே மேலே போக ஆரம்பிச்சிடும். கல்யாணம் கூட கொழுகொம்பு தான். காதலின் மேற்கொண்டான வளர்ச்சிக்கு ஆதாரமா இருக்கற கொழுகொம்பு." இனிமையான காதலுக்கு இதுவும் ஒரு ஆதாரம்.
    ஏனோ சாவி சாரின் ''விசிறி வாழை'' நினைவுக்கு வருகிறது. அவர்கள் காதலுக்கு
    மனமே கொழு கொம்பானதோ.

    Platonic love சில காலம் பேசப்பட்டது.
    ரதி 18 வயது. அவள் காதலனும் இளைஞன்.
    சரியான முதிர்ச்சியோடு அவளை
    பயத்திலிருந்து மீட்கும் அழகு மிக மிக அருமை.

    இது போல அருமையான காதலன் அமைந்தால் எந்தப் பெண்ணும்
    ஆனந்தமாக இருப்பாள்.

    அருமையான அழகான கதை. மிக நன்றியும் வந்தனங்களும் ஜீவி சார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காதலில் தான் எத்தனை விதமான காதல்கள்?..

      அம்பிகாபதி - அமராவதி, லைலா - மஜ்னு. தேவதாஸ் - பார்வதி என்று பிரிந்து விட்ட காதல்களுக்குத் தான் சரித்திரத்தில் இடம் போலும். இது காதல் விஷயத்தில் ஒரு சோகம் தான்.

      என் இளம் பருவத்தில் ஒரு சினிமா பார்த்தேன். பெயர் நினைவில்லை. வங்காளக் கதை என்று நினைக்கிறேன். கடைசி வரை ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளாமலே அவர்களுக்கிடையே காதல் முகிழ்க்கும். இருவரும் சந்திக்கும் பொழுதுகளில் ஒரு திரை இருவருக்கும் இடையே இருக்கும். பானுமதி (?) நடித்த படமா? நினைவில்லை. அமரத்துவமான கதை. என்ன படம் என்று நினைவுக்கு வந்தால் சொல்லுங்கள்.

      ஸ்ரீதரின் 'எதிர்பாராதது' மறக்க முடியாத படம். காதலியை சிற்றன்னையாக ஏற்றுக் கொள்ள நேர்வது. நாகையா தந்தையாக, சிவாஜி மகனாக. இதுவும் வங்காள மூலத்தின் தழுவல் என்றே நினைக்கிறேன்.

      குமுதம் எஸ்.ஏ.பி-யின் 'நீ' நினைவில் நிற்கும் கதை. அருமைக் காதலியை
      தன் பாஸின் (முதலாளியின்) மனைவியாக பார்க்க நேர்வது.

      காதலில் தோல்விக்கான கதைகளுக்குத் தான் சாஸ்வத அந்தஸ்த்து கிடைப்பது
      ஒரு முரண்பாடான விஷயம் தான்.


      நீக்கு
  12. அனைவருக்கும் காலை வணக்கம். இன்று ஜீ.வி.சாரின் கைவண்ணமா? வருகிறேன்.

    பதிலளிநீக்கு
  13. காதலைப் பற்றி இரு அறிவு ஜீவிகளின் அலசல் துணை போக சில கதாசிரியர்கள்

    பதிலளிநீக்கு
  14. இவர்கள் இருவரும் உண்மையாக காதலிக்கிறார்கள்.

    இருவரது பெற்றோர்களும் சம்மதம் தருகிறார்கள்.

    அடுத்த நகர்வு திருமணம்தானே... இதில் பிரியனின் எண்ணம், செயல், பேச்சு எல்லாமே சரிதான்.

    ரதிக்கு காதல் என்றால் என்னவென்றே தெரியாதவளாக இருப்பது "ரதி" என்று பெயர் வைத்துக் கொண்டதற்கே இழுக்கு என்றே உணர்கிறேன்.

    இவள் எப்படி தி.ஜா.வின் வாசகியாக இருக்க முடியும் என்ற ஐயமும் ஏற்படுகிறது.

    காதல் வெற்றி பெறுவதே திருமணத்தில்தானே...

    பிறகு ஆயுள் முழுவதும் கணவனை மனைவியும், மனைவியை கணவனும் காதலிக்கலாமே...

    ரதியின் அப்பாவின் பெயர் விஜயகுமார் என்றால், ரதியின் பெயரை வனிதா என்று மாற்றி வைக்கலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கில்லர்ஜி அப்படி இல்லை. 18 வயது என்பது அப்போது (ஜீவி அண்ணா எழுதியிருப்பது கண்டிப்பாகச் சமீபத்திய காலகட்டத்தைச் சேர்ந்தது இல்லை என்ற ஓர் எண்ணத்தில்) அப்போதெல்லாம் வீட்டில் பெற்றோர் பார்த்துக் கல்யாணம் செய்து வைப்பதாக இருந்தால் ஏற்றுக் கொண்டுச் செல்வது அப்போதும் ஒரு பயம் கண்டிப்பாக இருந்திருக்கும் பெண்ககளுக்கு. அதுவே காதல் எனும் போது அது வேறு ஒரு மனப்பான்மை. இதெல்லாம் சைக்காலஜியில் வரும் கில்லர்ஜி.

      ரதியின் உணர்வுகள் கிட்டத்தட்ட நான் 18 வயதில் இருந்தப்ப என்ன தோன்றியிருக்குமோ அதே தான். கல்லூரி முடிந்ததும் கல்யாணம் என்று வீட்டில் பேச்சு எழுந்தவுடன் எனக்குப் 18 வயதிலேயே பயம் வந்துவிட்டது. கல்லூரியில் அடி எடுத்து வைத்து நட்புகள் சிலர் அவர்களின் காதல் பற்றி எல்லாம் பேசும் போது அதை ரசித்தவள் நான் ஆனால் கல்யாணம் என்றால் பயம் இருந்தது. ரொம்பவெ பயம். அது நான் எம் ஏ முடிக்கும் போதும் இருந்தது எனலாம். அப்போது என் வயது 22. என் மனம் அதற்குப் பக்குவப்படவில்லை அப்போது.

      இங்கு ஜீவி அண்ணாவின் கதையில் வரும் ரதியின் உணர்வுகள் அதுவும் 18 வயது வல்லிமா சொல்லிருக்காங்க பாருங்க மேலே அது அதுதான்.

      அப்போதெல்லாம் பெரும்பான்மையான பெற்றோர் யாரும் பெண் வயதுக்கு வந்தாலோ, கல்யாணம் பேசப்பட்டாலோ உட்கார்த்தி வைத்து அதைப் பற்றிய புரிதல்களைப் பேசியது இல்லை. பெண்கள் தங்கள் பயத்தை வெளிப்படுத்தினாலும் விளக்கம் கிடைக்காது.

      ஆண் பிள்ளைகளிடமும்தான்.

      எங்கள் கல்லூரியில் பல பெண்கள் குறிபபக ஹாஸ்டலில் தங்கியிருந்தவர்கள் காதலில் சிக்கித் தவித்தவர்கள் உண்டு. கல்யாணம் என்றால் புரிதல் இல்லாததால் அது பொறுப்புகள் நிறைந்தது என்ற எண்ணம்.

      எங்கள் கல்லூரி ஒரு கிறித்தவக் கல்லூரிதான். பெரும்பான்மையோர் நண் என்றாலும் எங்களுக்கு வாழ்க்கை குறித்த நல்ல புரிதல் ஏற்பட என் கல்லூரிப்படிப்பு முடியும் முன் பெரும்பாலும் பெண்களுக்கு திருமணம் தானே பேசப்படும்? அதனால் ஒரு படம் போட்டுக் காட்டி காதல், கல்யாணம், அதில் இருக்கும் பயாலஜி சம்பந்தப்பட்ட பல விஷயங்களை அறிவியல் ரீதியாகச் சொல்லிக் கொடுத்து ஒருவாரம் செமினார் நடத்தி குழு குழுவாகப் பிரித்து ஒவ்வொரு குழுவுக்கும் ஒரு தலைமை கொடுத்து மனம் விட்டுப் பேசி கிட்டத்த்டட்ட கவுன்சலிங்க் போலச் செய்தார்கள்.

      நீங்கள் இங்கு சொல்லியிருப்பது வேறு ரகம். அதற்கும் கதைக்கும் சம்பந்தமில்லை ஜி.

      கீதா

      நீக்கு
    2. //என் மனம் அதற்குப் பக்குவப்படவில்லை அப்போது.// - ரொம்ப கொடுமையாவுல்ல இருக்கு கீதா ரங்கன்.

      எ.பி. ஆசிரியர்களில் ghost ஆசிரியர் ஆக காசு ஷோபனா மட்டும்தான் இருக்கிறார். இல்லைனா, புதன் கேள்வியாக, பெண்ணுக்கு உங்கள் அனுபவத்தில் சரியான திருமணவயது எது என்று நினைக்கிறீர்கள் எனக் கேட்டுவிடலாம். இல்லைனா, கேஜிஜி சாரே, எ.பி. வாசகிகள் மட்டும் பதில் எழுதவேண்டும் என்று இந்தக் கேள்வியை வெளியிடலாம். பெண்களின் சரியான திருமண வயது என்ன என்பதை ஆண்கள் தீர்மானிப்பது அபத்தமாக இருக்கும்.

      நீக்கு
    3. அதுதான் எல்லா ஆட்டோக்களின் பின்னாலும் பெண்ணின் திருமண வயது 21 என்று எழுதியிருக்கிறார்களே!

      நீக்கு
    4. சார்.. நான் அதைக் கேட்கவில்லை. சென்னைல ரெண்டு தெரு நடந்தாலே, 'பெண்ணிற்கு திருமண வயது 21', 'சீறி வரும் பாம்பை நம்பு சிரித்து வரும் பெண்ணை நம்பாதே' என்றெல்லாம் நிறைய பொன்மொழிகளை ஆட்டோவின் பின்பக்கத்தில் பார்க்கலாமே.

      நான் கேட்க நினைப்பது, பெண்கள், சரியான திருமண வயது என்று எதைக் கருதறாங்க. சிலர் படிப்பு முடித்து வேலை சேர்ந்து 26 வயதுன்னு சொல்லலாம். சிலர், அப்படி இல்லை 19லேயே திருமணம் செய்துவிடலாம்னு சொல்லலாம். அதுக்காகக் கேட்டேன்.

      நீக்கு
    5. கில்லர்ஜி, கதையைப் படிச்சதும் உங்களுக்குத் தோன்றிய அதே சந்தேகம் எனக்குள்ளும் தோன்றியதால் தான் நாம் மட்டும் முதலில் வேறுவிதமாகச் சொல்ல வேண்டாம் என்று போய்விட்டேன். எனக்கும் அதே தான். தி.ஜானகிராமனைப் படித்துப் புரிந்து கொள்ளும் பதினெட்டு வயதுப் பெண், அதிலும் "அன்பே ஆரமுதே!" தேடித்தேடிப் படிக்கும் பெண், அதுவும் மறு வாசிப்புக்கு! இந்தப் பெண்ணிற்குக் காதல் என்பது கல்யாணத்தில் முடிந்தாலும் அது தொடரும் ஒன்று என்பது தெரியவில்லை. மயங்குகிறாள். விசித்திரமாக இல்லையோ?

      நீக்கு
    6. கல்யாணத்தைத் தாண்டி வெறும் காதலர்களாகவே சுற்றிக்கொண்டு இருக்க முடியுமா என்ன? பொறுப்பு என்பது கல்யாணம் ஆனால் வந்துவிடும். அதைச் சார்ந்த பாசமும், நேசமும் காதலின் பிரதிபலிப்புகள் தானே! சும்மாவானும் நாங்க இருவரும் காதலிக்கிறோம், ஆனால் கல்யாணம் செய்துக்கப் போறதில்லை. கல்யாணம் பண்ணிக் கொண்டால் காதல் அழிந்துவிடும்னு சொல்ல முடியுமா என்ன?

      நீக்கு
    7. ஜானகிராமனைப் படிக்கும் அளவுக்கு மனமுதிர்ச்சி உள்ள பெண்ணுக்குக் காதலும், கல்யாணமும் புரியாமல் போனதில் வியப்புத் தான் வருகிறது! நல்லவேளையாக அந்தப் பையனுக்குப் பொறுமையும், உண்மையான காதலும் இருப்பதால் பொறுமையாக விளக்குகிறான்.

      நீக்கு
    8. பெண்ணின் திருமண வயது இப்போல்லாம் "30" என்று ஆகிப் பல வருடங்கள் ஆகின்றன. மீறி 25 வயதுக்குள் திருமணம் செய்து கொள்ளும் பெண்கள் குழந்தைப் பேற்றைத் தள்ளிப் போடுகின்றனர். பல பெண்களுக்கும் 30 வயதுக்குப் பின்னரே குழந்தை பிறக்கிறது.

      நீக்கு
    9. //கல்யாணத்தைத் தாண்டி வெறும் காதலர்களாகவே சுற்றிக்கொண்டு இருக்க முடியுமா என்ன ?//

      ஆம் இதுவே எனது கேள்வி.
      தி.ஜா.அவர்களின் எழுத்தை வாசிப்பவர்கள் அறிவாளிகளாக இருந்தே தீரவீண்டும் இதுதான் உண்மை.

      அவர் எழுதிய "மோகமுள்' தேடுகின்றேன் நான்.

      நீக்கு
    10. கில்லர்ஜி மோகமுள் உங்கள் வாட்ஸ் அப் எண்ணுக்கு அனுப்பட்டுமா?

      நீக்கு
    11. திரைப்படமாக வந்ததாலோ என்னவோ, மோகமுள் தான் எல்லோருக்கும் தெரிந்திருக்கிறது.

      தி.ஜா. அவரது 'அம்மா வ்ந்தாள்', 'மரப்பசு' கதைகளுக்காகவே இன்று வரை பேசப்படுகிறார். தேவகோட்டையாரே! இந்தக் கதைகளை நீங்கள் வாசிக்கவில்லை என்றால் தி.ஜா.வை வாசிக்காமலேயே இருக்கலாம்.

      அவரது சிறுகதைகள் அற்புதமானவை.

      நீக்கு
  15. இடையிடையில் வரும் காதல் குறித்த வர்ணனைகளை மிகவும் இரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  16. கதையின் முடிவு பாசிட்டிவ்!

    நிறைய உரையாடல்கள் நன்றாக இருந்தன. சிலது கொஞ்சம் நீட்டி இருக்கோ என்று நினைக்கத் தோன்றினாலும் அந்த வயது...அத்தனை பெரிய வயதில்லை. அவளுக்கு வயது 18. அந்த வயதில் ஏற்படும் உணர்வுகள் அருமை ஜீவி அண்ணா.

    இது கதை என்பதையும் தாண்டி 18 வயதுக்குத் தேவையான சில விளக்கங்கள் என்றே கூடக் கொள்ளலாம்.

    கீதா

    பதிலளிநீக்கு
  17. காதல் வெவ்வேறு பரிமாணம் எடுக்கிறது என்பதை ஜீவி சார் கதைல சொல்ல முயன்றிருக்கிறார். ஆனா பாருங்க... என் மனசுல அந்த 'காதல்' உணர்வு இல்லை போலிருக்கு. காதலர்கள் உரையாடல்கள் 'sweet nothings' போன்றுதான் தோன்றுகிறது.

    'காதல்' என்ற காதலிக்கும்போது இருக்கும் உணர்வு வேறு. திருமணம் முடிந்து இரண்டு மூன்று வருடங்கள் புது இடத்தில் துளிர்விடும்படியாக அட்ஜஸ்ட் செய்துகொண்டு அந்தப் புது நிலத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். சப்த அடிகள் திருமணத்தின்போது வைப்பது போல, முதல் 7 வருடங்கள் கடப்பதுதான் கஷ்டம். அதன் பிறகுதான் காதல்-உணர்வுபூர்வமான அன்பு மனதில் தோன்றும். அது மிக மெதுவாகத்தான் வளரும். கணவனுக்கு 50 தாண்டும்போது வெகு வேகமாக வளர்ந்து நிலைத்து நின்றுவிடும். மற்றபடி திருமணத்துக்கு முன்னால் ஆணின் காதல், 'கிளைமாக்ஸை' நோக்கிய பாதையில் நடப்பது போன்றதுதான் என்பது என் கருத்து. பெண்ணுக்கு, அவள் வாழ்க்கையை நோக்கிய பாதை என்பதால் அவள் எண்ணம், இவன் தேறுவானா, நம் வாழ்க்கைப் பாதையில் கூடவே ஒழுங்காக வருவானா, 'டப்பு' இருக்கிறதா என்றெல்லாம் ஜாக்கிரதையாக அனலைஸ் செய்துதான் 'காதல்' என்பதே வரும். இளம் பெண்களிடம் வரும் காதல் அனேகமாக இன்ஃபாக்‌ஷுவேஷன்'தான். (அதாவது டிகிரி முடிப்பதற்கு முன்னால் வரும் காதல் பிஸினெஸ்)

    பதிலளிநீக்கு
  18. இளமையிலே காதல் வரும் - எது வரையில் கூட வரும்...?
    முழுமை பெற்ற காதல் எல்லாம் - முதுமை வரை ஓடி வரும்...!

    பதிலளிநீக்கு
  19. 'காதல் என்பது எதுவரை ...' நினைவில் வந்தது. முழுமை காதல் நாளாக நாளாக கூடிவரும்.

    பதிலளிநீக்கு
  20. நான் நினைத்த இரண்டு பாடல்களை தன்பாலனும், மாதேவியும் போட்டு விட்டார்கள்.

    கடைசியில் ஜீவி சார் சொன்ன பாடலும் மனதில் வந்தது.

    இளமையில் ஏற்படும் காதல் முதலில் அரும்பாகி பின்மலர் போல்
    மனம பரப்பி,கனிபோல் கனிந்து இன்பமூட்ட வேண்டும்.
    காதலர் இருவர் கருத்தொருமித்து ஆதரவு பட்டதே
    இல்வாழ்க்கை.முழுமை பெற்ற காதல் என்றால்
    முதுமை வரை கூடவரும்.

    இப்போது ஜீவி கதையில் வரும் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட அன்பு முழுமை பெற்ற காதல் என்றே நினைக்கிறேன்.

    நன்றாக இருக்கிறது கதை.






    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒரு கதையை வாசிக்கும் பொழுது கதைக்கு சம்பந்தாமில்லாதாத விஷயங்களையெல்லாம் போட்டுக் குழப்பிக் கொள்ளாமல் எப்படி வாசிப்பது என்பது உங்களுக்கு நன்றாகத் தெரிந்திருக்கிறது. அதுவே புரிந்து கொள்வதற்கு எளிய வழி. நன்றி.

      நீக்கு
  21. //இப்ப உனக்கும் எனக்கும் நாம்ப ஒருத்தரை ஒருத்தர் நேசிக்கறது தான் முக்கியமானதா இருக்கு. கல்யாணம் ஆச்சுனா, இந்த முக்கியம் போய் வேறொரு முக்கியம் இந்த இடத்திலே வந்து உக்காந்துக்கும். இப்படி இன்னொண்ணுக்கு இன்னொண்ணுக்கு இடம் கொடுத்தே, நாளாவட்டத்திலே இது காணாமப் போனாலும் ஆச்சரியம் இல்ல. இதான் என் கவலை. இதுக்கு ஏதாவது மருந்து இருந்தா, சொல்லு, ப்ரியன்."// காதல் எல்லாம் கஷ்டப்பட்டுத் தான் கல்யாணத்தில் முடியணுமோனு நினைக்கிறேன். இவ்வளவு சுலபமாகக் காதல் கல்யாணத்தில் முடிந்ததாலோ என்னமோ இந்தப் பெண்ணுக்கு இல்லாத எண்ணங்கள் எல்லாம் தோன்றுகிறது. கல்யாண வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு, காதலித்தவனோடு தான் வாழ வேண்டும் என்பதற்கு ஆசைப்பட்டு அதுக்குத் தானே கல்யாணம் செய்துக்கறோம். காதல் வெற்றி பெற்றதுனும் சொல்லிக்கிறோம். வாழ்க்கையின் அடுத்தடுத்த பொறுப்புக்களை எதிர்கொள்ளும் தைரியம் இல்லாத இந்தப் பெண் காதலித்ததும் தப்பு. கல்யாணம் வரை போனதும் தப்பு. ஆனால் ப்ரியனுக்குப் பொறுமையும் மனமுதிர்ச்சியும், இவள் மேல் தீராத காதலும் இருப்பதால் விளக்கிப் புரிய வைக்கிறான். நாளாக ஆகப் பழகப் பழகக் காதல் கூடுமே தவிரப் புளிக்காது! சும்மாவானும் ஜோடி போட்டுக் கொண்டு ஊர் சுற்றுவது தான் காதல் என்று நினைக்கக் கூடாது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமோதிக்கிறேன். உண்மைதான். சும்மா இருப்பதால் சந்தேகம் வருகிறது.
      காதலுக்கும் கல்யாணத்துக்கும் இடைவெளி கூடாது.

      நீக்கு
  22. 18 வயதுக் காதல் அதான் அப்பெண்ணிற்கு இப்படியான எண்ணங்கள். பையன் பிரியன் நல்ல பக்குவப்பட்ட மனம் அதனால் அவனால் அவளுக்குப் புரிய வைக்க முடிந்திருக்கிறது. இருவரில் ஒருவர் மனப்பக்குவத்துடன் இருந்தாலே வாழ்க்கையை ஓரளவு சமாளித்துவிடலாம் தான்.

    வசனங்கள் நன்றாக இருக்கின்றன.

    வாழ்த்துகள் ஜீவி சார்

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  23. தீம் என்னவோ நன்றாகத்தான் இருக்கிறது, ஆனால் சம்பவங்கள் இல்லாமல் இருவரும் பேசிக்கொண்டே இருப்பது'ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்' படம்  பார்ப்பது  போல  சற்று  அலுப்பாக   இருக்கிறது.  சம்பவங்களை சேர்த்தால்    கதை நீண்டு விடும் என்று நினைத்து விட்டாரோ? வசனங்கள் நன்றாக இருக்கின்றன என்னும் கீதா ரங்கனை ஆமோதிக்கிறேன்.  

    பதிலளிநீக்கு
  24. //"கேளு, ப்ரியன்.." என்று தாவணியின் தலைப்பை எடுத்து தோள்பட்டை சுற்றி போர்த்திக் கொண்டு பார்க் பென்ஞ்சின் சாய்மான மரப்பலகைகளில் முதுகு சாய்த்து வாகாக உட்கார்ந்து கொண்டாள் ரதி.// ஆஹா! எந்த காலத்து கதை இது? இப்போது இந்தப் பெண்ணையாவது பாவாடை தாவணியில் பார்க்க முடியுமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எந்தப் பெண்ணும் பாவாடை தாவணியை அணிய விடாமல் செய்ததில் முதல் வரிசையில் இருப்பவர்கள் பெற்றோர்களே..

      அவர்கள் தங்கள் மகள்களை நவநாகரீக உடைகளில் பார்ப்பதற்கு ஆசைப்பட்டவர்கள்..

      அடுத்து , 70 களில் ( எனக்குத் தெரிந்து) ராணி மாதிரியான சில வாராந்தரிகள் தமது வெளியீடுகளில் வரும் கூப்பன்களை பூர்த்தி செய்து அனுப்பினால் அரைத் தள்ளுபடிகளில் சுரிதார் முதலான வட இந்திய ஆடைகள் வாங்கிக் கொள்ள வழி செய்து கொடுத்தன...

      இது ஊர்ப் பொறுக்கிகள் எல்லாம் பார்த்து ரசிப்பதற்காக...

      இன்று நாகரிகம் முற்றிப் போனதுகள்
      மேல் தொடை வரை ஆடையைக் கிழித்துக் கொண்டு அலைகின்றன.. அழிகின்றன..

      நீக்கு
    2. துரை செல்வராஜு சார்... உங்க பாயிண்ட் புரியுது. ஆனால் பாவாடை தாவணி uncomfortable உடை என்பதை நாம acknowledge பண்ணணும். தாவணி போட்டாச்சு, கட்டிக்கொடு என்பதுதான் நம் நாகரீகமாக இருந்தது. ஆனால் காலம் இப்போது அப்படியா? Proper சுரிதார் உடை (எனக்கு சரியான பேர்லாம் தெரியாது. சல்வார் கமீஸாகவும் இருக்கலாம், மேலே ஒரு துணியும் போர்த்திப்பாங்க) உடலை மறைக்கக்கூடியது. அதுதான் better உடை என்பது என் அபிப்ராயம். மேல் நாட்டு உடைகள் பெரும்பாலும் உடலை மறைக்கக்கூடியது அல்ல.

      நீக்கு
    3. இப்படியான கருத்துடன் யாராவது வருவார்கள் என்றிருந்தேன்... நல்லது..

      இடுப்புக்குக் கீழ் லெகின்ஸும் மேலே டொள டொளா... ன்னு ஒரு அரைச் சட்டையும்...

      என்னத்தைச் சொல்றது?...

      // காலம் இப்போது அப்படியா..//

      காலம் அதுவாகத் தன்னை மாற்றிக் கொண்டது....

      சல்வாரோடு மேலே போர்த்திக் கொண்ட துப்பட்டா பறந்து போய்த்தான் பல காலம் ஆகின்றதே...

      Comfortable உடை என்று வந்த நைட்டி பெண்களை எப்படியெல்லாம் பாடாய்ப் படுத்துகிறது!...

      நீக்கு
  25. *எந்தப் பெண்ணையாவது.. என்று படிக்கவும். 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. :))))))))பானுமா,
      இந்தக் கதை 70களில் நடந்திருக்கலாம் என்று தோன்றுகிறது.
      இப்போது மெரினா பீச்சில் அலைபடும்
      காதல் போல் இல்லாமல் வேறு வகையான காதல்.

      நீக்கு
  26. வல்லிம்மா தன் ஆரம்ப பின்னூட்டத்திலேயே 'ஏனோ சாவி சாரின் 'விசிறி வாழை' நிவைவுக்கு வருகிறது' என்று குறிப்பிட்டிருந்ததைப் பார்த்து எனக்கோ ஆச்சரியமான ஆச்சரியம். எப்படி இந்த ஒற்றுமை நிகழ்ந்தது என்று பிரமித்துப் போனேன். ஏனென்றால் இந்தக் கதை சாவி சார் 'தினமணிக் கதிரில்' ஆசிரியராக இருந்த பொழுது அதில் பிரசுரமான கதை. கதையை அச்சில் கொண்டு வந்து விட்டு ஒரு கடிதமும் எழுதியிருந்தார். 'நான் சாவி என்றால் நீங்கள் ஜீவியா? பேஷ்! பேஷ்! கதை நன்றாக இருந்தது. அடிக்கடி எழுதுங்கள்' என்று அன்புக் கட்டளையும் இட்டிருந்தார்.
    அதைப் படித்து விட்டு நானோ வானத்தில் மிதந்தேன். பத்திரிகை துறையில் எவ்வளவு அனுபவஸ்தர்! அவர் பாராட்டி கைப்பட கடிதம் எழுதியதில் அந்த வயசில் அவ்வளவு சந்தோஷமாக இருந்தது. யார் இந்தக் கதையை பிரசுரித்தாரோ அவரே வல்லிம்மா எழுதியதில் குறிப்பிடப்பட்ட பொழுது திகைத்துப் போனேன். இப்படியான பொருத்தமான நிகழ்வுகள் எல்லாம் எப்படி நிகழ்கிறது என்பதே ஆச்சரியமாகத் தான் இருக்கிறது.

    பல வருடங்கள் கழித்து நான் காஞ்சீபுரத்தில் வசித்த பொழுது சாவி சாரை நேரில் சந்தித்த பேறு கிடைத்தது. 'சாவி' பத்திரிகையின் தொடக்க காலம் அது. பத்திரிகையின் வெளியீட்டைத் தொடர்ந்து ஊற் ஊராகச் சென்று பத்திரிகை முகவர்களை நேரடியாக அவர் சந்திப்பதற்கான ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    காஞ்சிபுரத்தில் பஸ் நிலையத்துக்கு வெகு அருகில் 'பதி புக் ஸ்டால்' என்று நியூஸ் பேப்பர் மார்ட் உண்டு. இதன் உரிமையாளரின் தம்பி கார்த்திக் என்பவர் எனக்கு நெருங்கிய நண்பர். சாவி சாரின் வருகையை அவர் தான் எனக்குத் தெரிவித்தார்.
    பக்கத்து 'ராமாஸ் கேப்' என்ற ஹோட்டலின் மாடிப்பகுதியில் சாவி சாரின் பத்திரிகை முகவர்களின் சந்திப்புக் கூட்டம் ஏற்பாடாகியிருந்தது. கார்த்திக்குடன் நானும் அந்தக் கூட்டத்திற்குப் போய் சாவி சாரை நேரடியாக சந்தித்தேன். கையில் சாவி சார் எனக்கெழுதிய கடிதமும் இருந்தது. அந்த ஜீவி நான் தான் என்று என்னை அவரிடம் அறிமுகப்படுத்திக் கொண்ட பொழுது ரொம்ப சந்தோஷப்பட்டார். என்னை அன்பாக அணைத்துக் கொண்டு சாவிக்கும் எழுதுங்கள் என்று உற்சாகப்படுத்தியதை மறக்கவே முடியாது. அதையெல்லாம் இப்பொழுது நினைவில் கொண்டு வந்து விட்டது, வல்லிம்மாவின் பின்னூட்டம்.
    பிற்காலத்தில் நான் வெளியிட்ட என் சிறுகதைத் தொகுப்பு ஒன்றில் இந்தக் கதை இருக்கிறது. அந்தப் புத்தக வெளியீட்டின் பொழுது, பிரசுரமான இந்தக் கதையில் லேசான சில மாற்றங்களைச் செய்து (கதை முடிவுக்குப் பொருத்தமான அந்த திரைப்பாடல் போல) வெளியிட்டேன். அந்த மாற்றங்களுடன் தான் அந்தக் கதை இங்கே இப்பொழுது உங்கள் வாசிப்புக்கு வந்திருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக மிக நன்றி ஜீவி சார்.
      உண்மையாகவே இந்த எண்ணம் எப்படி வந்தது என்று தெரியவில்லை.

      நீங்கள் சொல்ல வந்த விதம் பிடித்தது.
      இந்தப் புரிதல் இருந்தால் தான் முதுமை வரை தொடரும். பிரியன் ,ரதியை சந்தோஷமாக வைத்துக் கொள்வான்.மீண்டும் நன்றி.

      நீக்கு
  27. வணக்கம் சகோதரரே

    கதையின் கரு நன்றாக உள்ளது. திருமணம் செய்து கொண்டால், வரிசையாக வரும் பொறுப்புகளின் சில இடர்பாடுகளில் நம் காதல்... (அதாவது ஒருவரையொருவர் மட்டும் நேசிக்கும் அன்பு) சிறிது அல்லது பெருமளவு முரண்பட்டு போகுமென கதாநாயகி ரதி பயப்படுகிறார். அதை ப்ரியன் தெளிவுபடுத்தி, அப்படியில்லை.. கல்யாணம் முடிந்து முதுமை வரும் வரை உண்மை காதலினால் வரும் அன்பு என்றுமே நிலைத்திருக்கும். அதற்கு அஸ்திவாரமாக இருப்பது இந்த காதல்தான் என பக்குவமாக எடுத்துக் கூறவும், ரதி புரிந்து கொள்கிறார். இதில் இவர்கள் இருவரின் பேச்சுகளின் ஆழங்கள் பிரமிக்க வைக்கிறது.

    இதில் திருமணத்திற்கு முன் அல்லது திருமணமான பின் ஒரு ஆண், பெண் இருவரும் ஆழமாக மனம் விட்டு பேசும் போது சில புரிதல்களின் இறுக்கமான முடிச்சுகள் எளிதாக சிக்கல்களின்றி பிரிபட்டு தன்னை ஆசுவாசபடுத்திக்கொண்டு அவர்கள் வாழ்வை இன்பமாக வைத்திருக்கும் என்பதற்கு இந்தக்கதை ஒரு உதாரணம். அதையும் மீறி ஒரு சாதாரண காதல் திருமணம் செய்து கொள்பவர்களோ இல்லை, வீட்டில் பேசி முடித்து திருமண வாழ்வில் ஈடுபடுபவர்களோ ஆயினும், இவர்கள் வாழ்வில் பிரச்சனைகள் வெடிப்பது, ஒன்று அவர்களை சுற்றியிருப்பவர்களால் வரும் புரியாத சில தலையீடுகள், இல்லை, காலங்காலமாக, வாழ்வின் ஒவ்வொரு காலகட்ட சந்தர்ப்பங்களில் கணவன் மனைவிக்கிடையே தீடிரென வரும் ஈகோ பிரச்சனைகள்.

    ஒருவருக்காக ஒருவர் விட்டுத் தருவதை இருவருமே பரஸ்பரம் புரிந்து இறுதி வரை வாழ்ந்தால், அவர்களை பிரித்து மனதால் ரணப்படுத்தும் மரணத்தை தவிர ஈகோவால் எதுவுமே செய்ய முடியாது. இதிலும் அவர்களின் பூர்வ ஜென்ம பலன்கள் வேறு பக்கபலமாக நின்று துணை புரிய அந்த ஆண்டவனும் மனம் வைக்க வேண்டும்.

    காதல் என்ற பெயரில், ஒரு பெண்ணின் வாழ்வை சிதைத்து அவளின் மனதை மூர்க்கமான பாதைகளில் திருப்பும் கயவர்கள் சிலரின் நடுவில்,ப்ரியன் போன்ற பல நல்ல கதாபாத்திரங்கள் உலாவுவதை இன்றைய கதையின் மூலம் உருவாக்கி காட்டிய ஆசிரியர் திரு. ஜீவி சகோதரர் அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள். பகிர்வுக்கும் மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //கதையின் கரு நன்றாக உள்ளது. திருமணம் செய்து கொண்டால், வரிசையாக வரும் பொறுப்புகளின் சில இடர்பாடுகளில் நம் காதல்... (அதாவது ஒருவரையொருவர் மட்டும் நேசிக்கும் அன்பு) சிறிது அல்லது பெருமளவு முரண்பட்டு போகுமென கதாநாயகி ரதி பயப்படுகிறார்.//

      எவ்வளவு அருமையாகக் கணித்திருக்கிறீர்கள்?.. இந்தப் பயத்தைத் தான் எவ்வளவு பெரிது படுத்தி விட்டார்கள்?.. பெண்களின் தயக்கங்களுக்கு உரிய மரியாதை கொடுத்து புரிய வைத்து விட்டால், அல்லது அவர்களே புரிந்து கொண்டு விட்டால் அவர்கள் ஆணுக்கு இல்லாத மன பலத்தோடு துணையாக இருப்பார்கள் என்பது புராண காலத்திலிருந்து வழிவழியாக வந்த சரித்திரம்.
      நன்றி, சகோதரி.

      நீக்கு
    2. வணக்கம் ஜீவி சகோதரரே

      தாங்கள் எழுதும் ஒவ்வொரு கதைகளிலும் தங்களது அருமையான அணுகுமுறைகள் கதைக்கு ஒரு உயிரோட்டத்தை தருவதால்,அந்த கதை முடிவு வரை அந்த உயிரோட்டம் பயணித்து கதைக்கு ஒரு சுபமுடிவை இயல்பாக தந்து விட்டு மகிழ்வுறுகிறது. அந்த மகிழ்ச்சி அலைகள் எங்களையும் நல்ல விமர்சனத்திற்கு தயார் செய்து விடவே, எங்களுக்குள்ளும் உங்கள் கதையின் தாக்கம் பல விதமான அலைவரிசைகளில்,பிரதிபலிக்கிறது. என் விமர்சன கருத்தையும் ரசித்து ஏற்றதற்கு மனம் நிறைந்த நன்றிகள். உங்களின் அடுத்த கதையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
  28. இங்கு ஜீவி அண்ணாவின் கதையில் வரும் ரதியின் உணர்வுகள் அதுவும் 18 வயது வல்லிமா சொல்லிருக்காங்க .///Hi eighteen year old Vallimaa/// Geethaarengan top class.:))))))))))

    பதிலளிநீக்கு
  29. இந்தக் கதை பிரசுரமாகும் பொழுது 'காதலினால் கதையுமுண்டாம்' என்று கதைத் தலைப்பு கொண்டிருந்தது. அது மஹாகவியின் 'காதலினால் மானிடர்க்கு கவிதை உண்டாம்' கவிதை வரியை ஒட்டி மனத்தில் விளைந்த தலைப்பு. இந்தக் கதை பிரசுரமாகும் பொழுது எனக்கு 28 வயதிருக்கும். பின்னாடி வந்த பின்னூட்டமொன்றில்
    இந்தக் கதை 70களில் நடந்திருக்கலாம் என்று வல்லிம்மா யூகித்த பொழுது மீண்டும் திகைத்துப் போனேன்.

    ரதியின் அந்த 18 வயது மனநிலையை உணர்வு பூர்வமாக புரிந்து கொண்டவராக சகோதரி கீதா ரெங்கனின் பின்னூட்டங்கள் இருந்தன. ரதியின் உணர்வுகள் புரிந்து கொள்ளப்படாமலே போய் விடுமோ என்ற ஒரு பதற்றமும் அவரிடம் இருந்தது தெரிந்தது. ஆசிரிய பயிற்சியின் போது பி.எட். பாடத்திட்டத்தில் மனோவியல் பாடங்கள் உண்டு. என் மனைவி எம்.எட். கல்விப் பயிற்சி பெறும் பொழுது நானும் அவரது பாடதிட்ட நூல்களை எடுத்து வைத்துக் கொண்டு ஆழ்ந்து வாசித்திருக்கிறேன்.

    கதையின் நாயகி ரதி என்ற இளம் பெண் உளவியல் சார்ந்து படைக்கப்பட்ட பாத்திரம். அவளின் மனநிலையை மிகச்சரியாக கையாண்டு அவளின் அச்சத்தைப் போக்குபவனாக நாயகன் ப்ரியன்.

    ஏற்கனவே எனது இருபது வயதிலேயே அமரர் அரு. ராமநாதனுடான தொடர்பு, அவரது பிரேமா பிரசுர நூல்கள் என்று சிக்மண்ட் பிராய்டை வாசித்துணரும் வாய்ப்புகள் எனக்குக் கிடைத்தன. சிக்மண்ட் பிராய்டின் ஆய்வுகளின் பாதிப்புகள் இயல்பாக என் கதைகள் வந்து படிந்து வழி நடத்தும் செல்வாக்கு பெற்றன.

    பதிலளிநீக்கு

  30. சகோ கமலா ஹரிஹரன் சீறாக தன் கருத்துக்களை நிலை நிறுத்தியிருக்கிறார்கள்.

    உணமையிலேயே நடந்தது இது தான்.

    இரத்தின சுருக்கமாக இருந்தாலும், 'காதலைப் பற்றி இரு அறிவு ஜீவிகளின் அலசல்; துணை போக சில கதாசிரியர்கள்' என்று பெரியவர் ஜிஎம்பீ அவர்கள் சொன்னது தான் நிகழ்ந்தது.

    'காதல்ன்னா என்ன?'-- என்று கேள்வியும் கேட்டு, ஒரு கதையின் மூலமாக இதற்கு பதில் சொல்ல முயற்சி செய்து பார்க்கிறேன் என்று சென்ற வெள்ளி எங்கள் பிளாக் பதிவு பின்னூட்டத்தில் நான் சொன்னது தான் இந்தக் கதை.

    இந்தக் கதையின் மூலமாக 'காதல்ன்னா என்ன?' என்ற கேள்வியே வாசகர்கள் மூன் வைக்கப்பட்டது. காதல் என்பது பற்றி, காதலர்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதெல்லாம் பற்றி இந்தக் கதையை வாசித்தோரும் தங்கள் எண்ணங்களைத் தான் பிரதிபலித்திருக்கிறார்கள். இந்தக் கதை சொல்லும் காதல் போக்கும், கதாபாத்திரங்கள் போக்கும் தங்கள் எண்ணப்படியே இல்லாத போது எதிர்வினையாற்றியிருக்கிறார்கள் என்று கொள்ளலே தகும். தாங்கள் மனசில் உருவகப்படுத்தி வைத்திருக்கும் எது ஒன்றும் அது மாதிரி இல்லாத பொழுது அதை புறக்கணிக்கும் போக்கு இது. இந்த வகையான பார்வை புதுசாக எதையும் தெரிந்து கொள்ள இடம் தராது. எது ஒன்றும் தான் புரிந்து கொண்டவாறே இருக்க வேண்டும் என்று எதிர்ப்பார்க்கும்.

    தி.ஜா.வின் வாசகர்கள் இப்படியா என்ற திகைப்பு வேறே இடையிடையே. தி.ஜா.வின் பாத்திரப்படைப்புகளை அறிந்த தி.ஜா.வின் தீவிர வாசகர்கள் அவரை நன்றாகவே அறிவார்கள்.

    கல்கிக்கு ஒத்து வராது தி.ஜா.வின் பாத்திரப்படைப்புகள். தி.ஜா.வோடு அவர் முரண்பட்டதையெல்லாம் ஊரே அறியும்.

    இந்தக் காதலே மாயமான் போல. இந்நாள் வரை இது தான் இது என்று கோடு கிழித்து யாரும் வரையறுத்து விட முடியாதபடிக்கு போக்குக் காட்டும் உணர்வு இந்தக் காதல்.

    காண்டேகர் சொல்வார், 'முதல் காதல் என்பது வெட்டி விட்டுப் போகும் மின்னல் போல' என்று. இந்த மாதிரி மூன்று வரை போகும் அவர் காதல் எண்ணிக்கை.

    தமிழ் எழுத்தாளர்களில்---

    கு.ப.ரா. காட்டிய காதல் வேறே.

    தி.ஜா. வர்ணித்த காதல் வேறே.

    விந்தன் சொன்ன காதல் வேறே.

    ஆர்வி படைத்த காதல் வேறே.

    அகிலன் படம் பிடித்த காதல் வேறே.

    நா. பார்த்தசாரதி காட்டிய காதல் வேறே.

    எல்லா குறுக்கீடுகளையும் போலவே காதல் பற்றிய சித்தாங்களிலும் காலம் தோறும் மாற்றங்கள் குறுக்கிட்டுக் கொண்டே இருக்கின்றன. 'செம்புலப்பெயல் நீர் போல' என்று சொன்ன பழந்தமிழ்ப் புலவனை மறந்தே போய்விட்ட காலம்.

    சொந்தத்தில் காதல் கொள்ளின் அது காதலே இல்லை என்று ஒருபக்கம்.
    ஜாதி மாறினால் தான் அது காதலே என்று கவிதைகள் வேறு.
    இத்தனைக்கு நடுவே திருமணத்தையே புறக்கணித்து விட்டு சேர்ந்து வாழும் வாழ்க்கை வேறு தலை தூக்கும் ஆபத்துகள்.

    இத்தனைக்கும் மத்தியில் காதல் என்ற உணர்வை அஸ்திவாரமாக்கி அத்தனை உன்னத உணர்வுகளுக்கும் ஆதாரம் அது தான் ஐயா, என்று சொன்னால் ஏற்றுக்கொள்ள மனம் இடம் கொடுக்கவில்லை போலும்.

    அடுத்த கதையில் சந்திக்கலாம், வாருங்கள்.

    பதிலளிநீக்கு

  31. காதலர்கள் பேச்சுக்கு அர்த்தம் கிடையாது என்பது "சரியான பூம்பூம் மாடு! நான் சொல்றதையே நீங்களும் திருப்பிச்சொன்னா எப்படி?" என்று கேட்பதிலிருந்து தெரிகிறது. பூம்பூம் மாடு தலையை மட்டுமே ஆட்டும் , கிளிப்பிள்ளைதான் சொன்னதை திருப்பி சொல்லும் என்று அறிந்திருக்கிறோம்.



    தம்பதிக்கான விளக்கம் அருமை. ப்ரியனின் பேச்சு, மலர், மாவடு, காய் கனி….. கொஞ்சம் முதிர்ச்சியான பேச்சாகவே எனக்கு படுகிறது. பெண்ணின் வயது 18, காதலிக்கவேண்டுமானால் சரியாக இருக்கும் திருமணத்திற்கு இன்னும் போகவேண்டும்.

    பின்னூட்டத்தில் இருந்த பாட்டுக்கு பாட்டு ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  32. சொல்வதையே திருப்பிச் சொன்னால் கிளிப்பிள்ளை. சொல்வதற்கெல்லாம் தலையாட்டினால் பூம்பூம் மாடு. கவிதைகளுக்கு மட்டுமல்ல கதைகளுக்கும் பொய் அழகு.

    இந்தக் கதை பத்திரிகையில் வெளி வந்த பொழுது பெண்ணின் திருமணத்திற்கான வயது 18. ஆணுக்கோ 21. ஆக மனம் ஒப்பிப் போனால், பெற்றோர்களின் ஆசிரிவாதத்தோடு திருமணத்தை முடித்து விடுவது நல்லது தான்.

    அடுத்த கதைக்கும் ஆஜராகி விடுங்கள். நன்றி.

    பதிலளிநீக்கு
  33. பொதுவாக சிறுகதைகளை வாசித்துப் புரிந்து கொள்வதே ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரி இருக்கிறது.

    அதனால் நீங்கள் வாசித்து ரசித்ததை புரிந்து கொண்ட வகையில் நாலு வார்த்தைகள் எழுதியிருந்தீர்கள் என்றால் எழுதியவரும் அது பற்றி தன் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள வாய்ப்பு ஏற்பட்டிருக்கும்.

    வாசித்ததற்கு நன்றி, வெங்கட்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!