திங்கள், 27 ஜூலை, 2020

"திங்க"க்கிழமை :  பலாப்பழ பணியாரம் - நெல்லைத் தமிழன் ரெஸிப்பி 

ரொம்ப நாளைக்கு அப்புறம் திங்கக் கிழமைக்கு செய்முறை அனுப்பறேன்.   இது நாங்கள் பெங்களூருக்கு நிரந்தரமாக வந்த பிறகு எழுதும் முதல் சமையல் குறிப்பு. அதனால் இனிப்புடன் ஆரம்பித்திருக்கிறேன்.

சென்னையிலிருந்து வரும்போது ஏகப்பட்ட சமையல் பாத்திரங்களை அங்கேயே விட்டுவிட்டு வந்துவிட்டேன். இரவு 9 மணிக்குள் எல்லாவற்றையும் லாரியில் ஏற்றணும்.  அன்றைக்கு இரவே 11 மணிக்கு பெங்களூர் பேருந்தில் ஏறணும். அதற்கு முன்னால் வீட்டை சுத்தம் செய்துவிட்டு சாவியை உரிமையாளரிடம் ஒப்படைக்கணும் என்று ஏகப்பட்ட வேலை கடைசி நாளில். கிச்சன் பொருட்களை பேக் பண்ண நான் அரை நாள்கூட ஒதுக்காதது பெரிய தவறாக ஆகிவிட்டது. அந்த மாதிரி விட்டுவிட்டு வந்த பாத்திரங்களில் ஒன்று குழிப்பணியாரம் செய்யும் பாத்திரம் (சட்டி என்ற வார்த்தையை நாங்கள் உபயோகிப்பதில்லை). இங்க வந்த பிறகு, அருகிலேயே இருக்கும் மாமனாரின் வீட்டிலிருந்து அவரிடம் இருந்த குழிப்பணியாரம் செய்யும் பாத்திரத்தை வாங்கிவந்தேன். அவர்கள் அதனை உபயோகப்படுத்துவதில்லை.  அதில் தோசை மாவை வைத்து சில பல மசாலாக்களைச் சேர்த்து (காப்சிகம், கேரட் போன்று) குழிப்பணியாரம் செய்தேன். எல்லோருக்கும் பிடித்திருந்தது.  

எங்க வீட்டுல ஒரு டிபனைப் பண்ணினால், அதனை திரும்ப இன்னொரு நாள் பண்ணுங்க என்று சொல்ல மாட்டாங்க. கேட்டா, அப்புறம் போரடித்துவிடும் என்பார்கள்.  ஆனால் எனக்கோ குழிப்பணியாரம் செய்வதில் ஆர்வம் ஜாஸ்தியாகிவிட்டது.  தில்லி வெங்கட் அவர்களின் தளத்தில் அவரது மனைவி ஆதி வெங்கட்,  பலாப்பழ பணியாரம் செய்ததை எழுதியிருந்தார்கள். அந்தப் படம் எனக்கு மனதில் பதிந்துவிட்டது. 

சென்னைலயும் பெங்களூர்லயும் அதுவரை பலாச்சுளைகள் மட்டுமே வாங்கிவந்தவன், கொரோனாவால், பெங்களூரில் பலாச்சுளைகள் விற்பது நின்று, கடந்த 2 மாதங்களாக பலாப்பழத்தை விற்கிறார்கள். நாங்கள் இருக்கும் குடியிருப்பின் அருகிலேயே இரண்டு மூன்று இடங்களில் பலாப்பழங்கள் விற்பதைப் பார்த்து,  அதை வாங்கும் ஆசை பிடித்துக்கொண்டது.  ஆச்சு, இந்த இடுகை எழுதும்வரை, 7-8 பலாப்பழங்கள் சிறிதும் பெரிதுமாக வாங்கிவிட்டேன்.  200 ரூபாய்க்கு வாங்கும் பழத்தில் கிட்டத்தட்ட 150-200 சுளைகளாவது இருக்கும்.

பலாப்பழத்தில் இரண்டு வகை உண்டு. வரிக்கன், கூழன் என்று.  கூழன் சக்கையில் (நெல்லைல சக்கைன்னுதான் பலாப்பழத்தைச் சொல்லுவோம்) பழம் கொஞ்சம் கொழகொழ டைப்பா இருக்கும். பொதுவா வரிக்கன் சக்கைதான் நல்லா இருக்கும்.  நான் வாங்குவது எல்லாமே வரிக்கன் சக்கை.   பலாப்பழத்தைப் பற்றி ஆரம்பித்தாலே ஏகப்பட்ட விஷயமும் அனுபவமும் எழுதலாம். அதை இத்தோடு நிறுத்திக்கொண்டு, பலாப்பழ பணியாரம் செய்முறைக்குப் போகிறேன்.

தேவையானவை

பலாச்சுளை 6-7
வெல்லம் 50 கிராம்
தேங்காய் துருவல் 2 மேசைக்கரண்டி
ரவை 1 1/2  மேசைக்கரண்டி
அரிசி மாவு 1 மேசைக்கரண்டி
கோதுமை மாவு 1 மேசைக்கரண்டி
நெய் 1 மேசைக்கரண்டி
ஏலப்பொடி கொஞ்சம்

செய்முறை

1. பலாச்சுளையை சிறிது சிறிதாக கட் பண்ணிக்கோங்க.

2. கடாயை அடுப்பில் வைத்து சிறிது தண்ணீரில் வெல்லத்தை உருக வைத்துக்கோங்க. 

3. இன்னொரு கடாயில், நெய் விட்டு, தேங்காய் துருவலை சிறிது வறுத்துக்கோங்க (பிரட்டிக்கொள்ளுங்கள்). அதில் கட் பண்ணிவைத்துள்ள பலாச்சுளைகளைப் போட்டு கொஞ்சம் வேகவைத்துக்கொள்ளவும். குழைந்துவிடக்கூடாது.

4. அதோட, வெல்லத்தண்ணீரை (முதலிலேயே உருக வைத்திருக்கிறோம்) சேர்த்து பலாவை நன்றாக வேகவைக்கவும். பிறகு நல்லா ஆறணும்.

5. அதில், அரிசி மா, ரவை, கோதுமை மா, ஏலப்பொடி சேர்த்து ஓரளவு கெட்டியான தோசைமா பதத்தில் கலக்கவும். தேவைனா கொஞ்சம் தண்ணீர் சேர்த்துக்கோங்க.   இந்த மாவை சிறிது நேரம் விட்டுவிடவும் (ரவை மற்றும் எல்லாம் நல்லா கலந்து ஊறட்டும்).

6. பணியார கடாயை அடுப்பில் வைத்து, குழிகளில் சிறிது நெய் (அல்லது எண்ணெய் விட்டு) நல்லா சூடான பிறகு, ஸ்பூனினால் மாவை விட்டு, பணியாரம் செய்யவும். ஒரு புறம் சிறிது வெந்ததும் அதற்கென உள்ள கம்பியாலோ இல்லை மர ஸ்பூனாலோ பணியாரத்தைத் திருப்பிவிடவும்.  எனக்கு கம்பியால் திருப்புவது சரியாக வரவில்லை. அதனால் ஸ்பூனை உபயோகித்தேன். பண்ணப் பண்ண லாவகம் வந்துவிடும் என்று நினைக்கிறேன்.

7. இரண்டு புறமும் வெந்ததும் எடுத்து தட்டில் பரத்த வேண்டியதுதான். எதைச் செய்தாலும் எனக்குக் குறைவாகச் செய்யத் தெரியாது. கொஞ்சம் (கொஞ்சமென்ன கொஞ்சம்..நிறையவே - மனைவியின் மைண்ட் வாய்ஸ்) அதிகமாகவே செய்துவிடுவேன். அன்று நான் 20 பலாச்சுளைகள் உபயோகித்தேன். அதற்கேற்றவாறு எல்லா அளவுகளும் மாறும். நிறைய பணியாரங்கள் வந்தன. மாமனார் வீட்டிற்கும் கொடுத்து அனுப்பினேன்.

எங்க வீட்டுல இனிப்பு நிறைய போணியாவதில்லை.  மனைவி, ஒரு சமயத்தில் 2-3 சாப்பிட்டாலே அதிகம். பெண், டயட் என்று சொல்லி 3க்கு மேல் சாப்பிடவில்லை.  பையனுக்கு சில இனிப்புகள்தாம் ரொம்ப இஷ்டம். அவனுக்கு பலாப்பழ வாசனை பிடிப்பதில்லை (ரொம்ப டாமினேட்டிங் என்று சொல்லிடுவான். இதனாலேயே பலாப்பழம் வந்த உடன் பால்கனியில் கொண்டுபோய் வைத்துவிடுவேன். ஓரிரு நாளில் பழமாயிடும். அங்கேயே வைத்து பழத்தை வெட்டி சுளைகளை எடுத்துவிடுவேன்).  அவன் 5 சாப்பிட்டிருப்பான்.  நானும் அதிகமாக சாப்பிடவில்லை (நானே செய்ததால், எவ்வளவு எண்ணெய், நெய் உபயோகித்திருக்கேன் என்பது தெரியும்.  கன்னா பின்னாவென எடை அதிகரித்துவிடுமே என்ற பயம்தான் காரணம்). ஆனால் ரொம்ப ருசியாக இருந்தது. 

வெறும்ன பலாப்பழத்தைச் சாப்பிடுவதற்குப் பதில், இந்த மாதிரி செய்து பாருங்கள். 


அன்புடன்

நெல்லைத்தமிழன்.

================
அட! இன்றைக்கு நெ த இங்கே பணியாரம் சுட்டிருக்கிறாரா! 
ஆச்சரியம்! இப்போதான் நெல்லைத்தமிழன் வரைந்த சிலுக்கு (!) படத்தை மின்நிலா 010 இதழில் (வாசகர் கைவண்ணம்) சேர்த்து இங்கே இணைப்பு கொடுக்க வந்தேன்! (பக்கம் எண் 64) 
மின்நிலா 010>>>> சுட்டி இங்கே! 

================

91 கருத்துகள்:

 1. அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள் சிறுகை அளாவிய கூழ்..

  நலம் வாழ்க...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சிறுகை அளாவிய கூழ் - எங்களுக்கு வியாழன் 2 மணி வரை ஆபீஸ் இருந்தது. பிறகு சனிக்கிழமை காலைதான் அடுத்த வாரம் துவங்கும். மனைவியிடம் சப்பாத்தியும், அவள் செய்யும் குருமாவையும் (திருமணத்துக்கு முன்னால் எங்க வீட்டில் குருமா பிஸினெஸ்லாம் கிடையாது. எப்போவாவது அதிசயமா பூரி உருளை வெங் மசாலா உண்டு) பண்ணச்சொல்லியிருந்தேன். மதிய உணவுக்குப் பதில் இதனையே சாப்பிடுவேன் என்றேன். 4 மணிக்கு வீட்டில் தட்டைப் போட்டு தரையில் உட்கார்ந்தேன். எனக்காக முன்னமேயே செய்துவைத்திருந்தாள். சூடாக எனக்கு குருமா பிடிக்காது. தட்டில் குருமாவைப் போட்டுவிட்டு, சப்பாத்தி செய்ய ஆரம்பித்தாள். என் பெண் (1 வயசு கூட இல்லை) பேம்பர்ஸ் போட்டிருந்தவள் மெதுவா நடக்க முயன்று டக்கென்று என் தட்டில் உட்கார்ந்துவிட்டாள். இப்போ நினைத்தால் சிரிப்பு வருகிறது. நான் மதியம் ஆபீஸிலிருந்து வந்து, கட கடவென சாப்பிட்டுவிட்டு ஆபீஸ் செல்வேன். நான் சாப்பிட உட்கார்ந்த பிறகு, என் பையன் (அவனுக்கு அப்போ 1 வயது கூட ஆகலை) மெதுவா சோஃபாவைப் பிடித்துக்கொண்டே வந்து என் தட்டில் வைத்திருப்பதில் கையை வைத்து வாயில் போட்டுக்கொள்வான். இந்தக் குறளைப் படிக்கும்போது அதுதான் நினைவுக்கு வருது. மற்றபடி பொதுவா சுடச் சுட சாப்பாட்டை என் தட்டில் போட்டுவிட்டால், அதை ரசித்துச் சாப்பிடுவதுதான் பிடிக்கும். பேசிக்கொண்டே சாப்பிடுவது எனக்குப் பிடிப்பதில்லை.

   நீக்கு
  2. தட்டில் குர்மாவைப் போட்டு விட்டு சப்பாத்தி செய்ய ஆரம்பித்தால் எனக்கெல்லாம் பொறுமையே இருக்காது!   குருமா சும்மாவே காலியாகிவிடும்!!  சின்ன வயசில் அம்மா முதலில் குருமா செய்துவிடுவார்.  அப்புறம் மாவு பிசைந்து பெரும்பாலும் நான்தான் அப்பளம் இடுவேன்.  கொஞ்ச காலம் அப்பளங்கள் இரு பாதியாக பிரிக்கப்பட்டு நானும் அண்ணனும் இட்டாலும், என் வேகத்துக்கு அண்ணனுக்கு இடவராது!  சொல்ல வந்தது என்ன என்றால், குருமா முதலிலேயே ஐந்து சம பங்காக பிரிக்கப்பட்டு தனித்தனிப் பாத்திரங்களில் அவரவருக்கு வழங்கப்பட்டு விடும்.  கொஞ்சம் கொஞ்சம் சும்மாவே டேஸ்ட் செய்து காலியாகும் அது!   அம்மா செய்த குருமா இன்னும் நாக்கில் நிழலாடுகிறது!

   நீக்கு
  3. //முதலிலேயே ஐந்து சம பங்காக பிரிக்கப்பட்டு// - இதைப் படித்த உடன் எனக்கு என் அப்பா நினைவுதான் வருகிறது. அவர் என்ன வாங்கிவந்தாலும் (பெரும்பாலும் இனிப்பு), அதனை ஐந்து பங்குகளாகப் பிரித்து ஆளுக்கு ஒரு பங்கு தந்துடுவார். என் அம்மாவிடமும் ஸ்டிரிக்டா சொல்லுவார், அவங்க பங்கை மத்தவங்களுக்குக் கொடுக்கக்கூடாது என்று.

   ஆனா பாருங்க.. அனேகமா எல்லார் வீட்டிலும் 'அம்மா' தனக்குரிய பங்கின் பெரும்பகுதியை தியாகம் செய்துடுவாங்க.

   நீக்கு
 2. பலாப்பழ பணியாரம்
  புதியதொரு செய்முறை..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க துரை செல்வராஜு சார்... பலாப்பழ பணியாரத்துக்கு வேறு செய்முறைகள் இருக்கா?

   நீக்கு
 3. பண்ருட்டி பலாப்பழம் என்பார்கள்..

  ஆனால், தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை, தாமரங்கோட்டை வட்டாரத்தில் விளையும் பழங்களுக்கு அப்புறம் தான் அதெல்லாம்...

  திகட்டத் திகட்டத் தின்றாயிற்று.. இனியொரு காலம் அப்படி வாய்க்காது... பலாப்பழத்தின் வாசனையைக் கொண்டே அதன் பக்குவத்தைச் சொல்லி விடலாம்...

  பலாச்சுளைகளைத் தேனில் ஊற வைத்துக் கொடுத்திருக்கின்றார் என் தந்தை...

  அந்தக் கைகளுக்கு நான் செய்த மரியாதை போதுமோ!... எனக்குத் தெரியவில்லை...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எங்கள் அத்தை வீடு ஆடுதுறையை அடுத்த கோவிந்தபுரம். அவர்கள் வீட்டுத் தோட்டத்தில் விளையும் பலா சுவையோ சுவை.
   சிறு வயதில் ஊரிலிருந்து மாமா பலாப்பழம் கொண்டு வருவார். அதை ஒரு சாக்கு போட்டு மூடி வைப்பார்கள். வாசனை வந்தவுடன் இன்னிக்கு அறுத்து விடலாம் என்று அம்மாவும்,மாமாவும் கைகளில் எண்ணெய் தடவிக்கொண்டு தரையில் ஒரு சாக்கு விரித்து,அதன்மீது பலாப்பழத்தை வைத்து, அதற்கென்று இருக்கும் கத்தியிலும் எண்ணெய் தடவி நறுக்குவார்கள். எங்கள் தோட்டத்து பழத்தின் சுளை சற்று சிறியதாக இருக்கும் என்றாலும் சுவை அதிகம். எனக்கு மாந்தம் வரும் என்பதால் அம்மா நான்கு சுளைகளுக்கு மேல் சாப்பிட விட மாட்டாள். அடுத்த நாள் பலா கொட்டை சாம்பார்,அல்லது கறி. மிகவும் சுவையாக இருக்கும்.

   நீக்கு
  2. என்னுடைய அப்பா பலாப்பழத்தில் தேன் விட்டுத்தான் தருவார். என் மாமா, அமெரிக்காவிலிருந்து எங்க வீட்டுக்கு வந்தபோது, பக்கத்துச் சந்தையில் பெரிய பலாப்பழம் ஒன்று வாங்கிக்கொண்டுவந்திருந்தார் (74-75ல் 3 ரூபாய்).

   இந்தத் தடவை பெங்களூரில் நிறைய பலாப்பழங்கள் வாங்கினேன். இன்று யதேச்சையாக வெளியில் சென்றிருந்தபோது ஒரு அடி உள்ள பலாப்பழம் 100 ரூபாய்னு சொன்னாங்க. எனக்கென்னவோ இந்த சீசனுக்கு நிறையவே சாப்பிட்டுவிட்ட திருப்தியால் வாங்கவில்லை.

   நீக்கு
  3. பசங்க, அவங்க பெற்றோருக்கு, தனக்குத் திருப்தி ஏற்படும்படி எதையும் செய்துவிட முடியாது. இதற்கு முக்கியக் காரணமாக நான் நினைப்பது, நமக்கு அந்த மெச்சூரிட்டி வந்து எல்லாம் செய்ய நினைக்கும்போது பெரும்பாலும் காலம் கடந்துவிடும். அதுவும் தவிர, என்ன வாங்கிக் கொடுத்தாலும் இன்னும் நிறைய செய்திருக்கலாமே என்ற எண்ணம்தான் தோன்றும்.

   நீக்கு
  4. @பானுமதி வெங்கடேச்வரன் - எங்க அப்பா, சிறு துண்டு பலாக்கொட்டை சாப்பிட்டுவிட்டால் ஒன்றும் செய்யாது என்று சொல்லுவார் (ஆனா நிச்சயம் அருகில் தண்ணீர் வைத்துக்கொள்ளணும். நன்கு மென்ற பிறகுதான் முழுங்கணும்).

   நீங்க 'சாக்கு' என்று சொன்னவுடன் என் மனதில் தோன்றுவது சிறுகிழங்குதான். அதைத்தான் நாங்கள் சாக்கில் போட்டுத் தேய்த்து சுத்தம் செய்வோம். (சிறுகிழங்கு அல்லது கூர்க் என்று மலையாளத்தில் சொல்லப்படும் கிழங்கு ஜனவரிலதான் சீசன்)

   நீக்கு
 4. அன்பு ஸ்ரீராம், கௌதமன் ஜி, அன்பு துரை அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
  நல்லதொரு சுவையுடன் இந்த வாரம் ஆரம்பித்திருக்கிறது.
  அன்பு நெல்லைத்தமிழனுக்கு நல் வாழ்த்துகள்.

  பலாப்பழம் மனதிற்கு மிக நெருங்கிய
  பழம்.
  திருச்சியில் இருக்கும் போது தஞ்சையிலிருந்தும்,
  பண்ருட்டியிலிருந்தும் முந்திரி ,பலா இரண்டுமே
  நிறைய அளவில் கிடைக்கும்.

  நன்றாக அனுபவித்தாயிற்று.
  இப்போது பலாவிலிருந்து ஒதுங்கி இருக்க வேண்டிய காலம்.
  மிக மிக இனிப்பு அல்லவா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. காலை வணக்கம் வல்லிம்மா...   வாங்க...

   நீக்கு
  2. வாங்க வல்லிம்மா. நான் இன்னும் பலாப்பழத்திலிருந்து ஒதுங்கவில்லை (இந்த வருடம், சுளைகள் வெளியில் வாங்கவே இல்லை. இனியும் வாங்க மாட்டேன் என்றுதான் தோணுது. ஒன்லி முழுப் பழம்)

   முன்பு எனக்கு வறுத்த முந்திரி மிகவும் பிடித்தமானது. ஆனால் ஒரு சமயத்தில் அது உடலுக்கு ஒத்துக்கொள்ளவில்லை, அதனால் முந்திரியை சாப்பிடுவதை நிறுத்திவிட்டேன். இப்போல்லாம் பாயசம், ச.பொங்கல் அல்லது வெண் பொங்கல் செய்தால்தான் முந்திரி.

   நீக்கு
  3. இந்த வருடம் நான் பலாச்சுளை ஒரு சுளை கூட சாப்பிடவில்லை.  என்னவோ கொடுப்பினை இல்லை!

   நீக்கு
 5. இனிய காலை வணக்கம் எல்லோருக்கும்!!!

  கௌ அண்ணா மின் நிலா தரவிறக்கம் செய்துவிட்டேன்....சென்ற இரண்டும் பார்க்கவில்லை எல்லாம் பார்த்துவிட்டு கருத்தும் அதில் சொல்லுகிறேன்.

  நெல்லை சக்கை குழிப்பணியாரம் நல்லா வந்திருக்கு.

  வலைப்பக்கம் வராம இருந்தேன் இல்லையா அப்பத்தான் சக்கை குழிப் பணியாரம், சக்கை அப்பம், சக்கை இலை அப்பம், சக்கை இலை அடை (இதை சக்கைக் கொழுக்கட்டைன்னும் சொல்லலாம். நாம பிள்ளையார் கொழுக்கட்டை செய்வது போல உருட்டி வைத்தால் கௌழ்க்கட்டை. வழனை இலை அல்லது எடனையிலை கிட்டத்தட்ட பே லீஃப் குடும்பம், தெரளி இலையில், வாழை இலையில் மடக்கி வைத்தால் அந்தந்த இலையின் மணத்துடன், வடிவத்தின் பெயருடன் கும்பிலி அப்பம் என்றும் சொல்லப்படும்) , வரட்டி எல்லாம் செய்தேன். சீசன் தொடங்கும் சமயம் சக்கை புட்டு...

  இது நெல்லைக்கு!!! நான் படம் எதுவும் எடுக்கலை!!!!!! ஹா ஹா ஹா ஹா ஹா

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க கீதா ரங்கன். நீங்க என்னிடம் முன்பே சொல்லியிருந்தால் மற்றவற்றையும் முயற்சித்திருப்பேன். சக்கவரட்டி செய்யவில்லை. எல்லாரும் துளித் துளிதான் சாப்பிடுவாங்க, அப்புறம் நான் சாப்பிட்டு வெயிட் போட்டுடும் என்பதால்.

   என்னென்னவோ இலை பேர்லாம் சொல்றீங்க. கடைசியில் உள்ள பலாப்பழம் சேர்க்காமல் இருந்திருக்கப்போறீங்க.

   நீக்கு
 6. ரொம்ப நல்லா செய்யறீங்க நெல்லை. உண்மையா!!! சூப்பர்!!!

  பாராட்டுகள்!!!!

  நாங்களும் வரிக்கன் தான் வாங்குவது. ஆனால் ஊரில் இருந்தப்ப கூழன் வரும் அதில் சக்கை வரட்டி செஞ்சு வைச்சுட்டோம்னா முந்தைய கருத்தில் சொன்ன ஐட்டம் எல்லாம் சக்கை சீசன் இல்லாதப்ப வீட்டில் செய்து விடுவது.

  நல்ல ஆழ்ந்த ஆரஞ்சு / பொன் நிறத்தில் கிட்டத்த்டட்ட சன் செட் நிறத்தில் வரும் பலா அதுவும் செமையா இருக்கும்.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இந்த சீசன்ல அப்படி ஒரு பழமும் வாங்கினேன். (சிவப்பா பழம் இருக்கும். ஆழ்ந்த ஆரஞ்சு வண்ணம்போல).

   நான் பதின்ம வயதில் இருந்தபோது நெல்லையில் என் பெரியம்மா, கொஞ்சம் காய் பலா வாங்கி, சுளைகளை பொரிப்பார். யம்மியா இருக்கும். நான் இன்னும் செய்துபார்க்க சந்தர்ப்பம் வரலை (ஆனா வேண்டிய அளவு சாப்பிட்டிருக்கேன். கேரளாவிலிருந்து எல்லாவித சிப்ஸ்களும் கடைகளுக்கு வந்துவிடும்)

   //ரொம்ப நல்லா செய்யறீங்க// - அப்படீல்லாம் இல்லை கீதா ரங்கன். 10 தடவை செய்தால் ஒரு தடவை நல்லா இருக்குன்னு சொல்லும்படியா வரும். நிறைய தடவை நினைத்த அளவு அருமையா வராது.

   நீக்கு
 7. அன்பு முரளிமா,
  பளபளா படங்களுடன்
  பலாப்பழ பணியாரம் வந்துவிட்டதே.
  மிக இனிய குறிப்பு.
  நளபாகம் தான். கச்சிதமாக அளவுகள் கொடுத்து,
  கண்ணுக்கினிய ஃபோடோக்ராஃபி.

  தங்கள் மனைவி கொடுத்து வைத்தவர்.
  இங்கு இன்னும் கடைகளில் வரவில்லை.
  வந்தால் செய்யலாம். இனிப்பு விஷயத்தில்
  இங்கே சர்வ ஜாக்கிரதை.
  அன்பு வாழ்த்துகளும் பாராட்டுகளும் பா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க வல்லிம்மா.

   //தங்கள் மனைவி கொடுத்து வைத்தவர்// - ஹா ஹா ஹா. சும்மா எப்பயாச்சும் கிச்சன்ல போய் ஏதேனும் செய்வதில் பெரிய பெருமை இல்லைம்மா. தினமும் இரண்டு மூன்று வேளைகள் செய்து, பாத்திரங்கள் அலம்பி, வீட்டைச் சரி செய்து, பசங்களுக்கு வேண்டியவற்றைச் செய்து.... பெண்கள் வேலைதான் ரொம்ப ரொம்ப ஜாஸ்தி. எனக்கு மூடு இல்லைன்னு, ஒரு வாரம் கிச்சன் பக்கமே போகாமல் இருந்துவிடலாம். ஆனால் மனைவிக்கு அப்படி முடியுமா?

   சொன்னா கண் பட்டுவிடும் என்று பயமா இருக்கு.. எனக்கும் இனிப்பு மேல் ஆசை வேகமாகக் குறைந்துகொண்டே வருகிறது (5 நாள் டயட்டில் குறைத்த 600 கிராம் வெயிட்டை, ஒரு நாள் இனிப்பு காலி செய்துவிடுகிறது, கூட 500 கிராம் வெயிட் ஏற்றிவிட்டுவிடுகிறது. அதனால்தான் இனிப்பு பக்கம் போக ஆசை குறைகிறது)

   நீக்கு
  2. மதிய நேரங்களில் சாப்பிட்ட உடன் ஏதாவது இனிப்பு சாப்பிட வேண்டும் போல தோன்றும்.  மற்றபடி நான் காரங்களின் ரசிகன்.  இன்று திருமதி வெங்கட் வெளியிட்ட படங்களில் அந்த உப்பு கொழுக்கட்டைதான் என்னைக் கவர்ந்தது!

   நீக்கு
  3. எனக்கு எப்போதுமே உணவுக்குப் பின் இனிப்பு சாப்பிடுவது பிடிக்கும்.

   ஆதி வெங்கட் அவர்கள் இதற்கு முன்னமே அந்த உப்பு கொழுக்கட்டை படம் போட்டிருந்தார். அதற்குப் பிறகு நான் எங்கள் வீட்டில் செய்தேன். பசங்க, இதுவும் அரிசி உப்புமா கொழுக்கட்டை மாதிரிதான் என்று சொல்லிட்டாங்க.

   //காரங்களின் ரசிகன்// - அப்படியே எனக்கு ஆப்போசிட். அதனால்தான் வெயிட்டிலும் எனக்கு ஆப்போசிட்டா இருக்கீங்க. ஹா ஹா

   நீக்கு
 8. அனைவருக்கும் பலாப்பழ குழிப் பணியாரத்தோடு இனிய காலை வணக்கம்.
  இனிப்போடு வந்திருக்கும் நெல்லையே வருக வருக என வரவேற்கிறேன்.
  பலாப்பழத்தில் குழிப்பணியாரமா? முதல் முறையாக கேள்விப் படுகிறேன். எங்கள் வீட்டில் போணியாவது கஷ்டம்தான், இருந்தாலும் முயற்சிக்கலாம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க பானுமதி வெங்கடேச்வரன் மேடம்... நல்லா இருந்தால் என்னைப் பாராட்டுங்க. அவ்வளவாக சரியில்லை என்றால், இந்த டிஷ் ஐ, எனக்கு அறிமுகப்படுத்திய ஆதி வெங்கட் இடுகையைத்தான் குறை சொல்லணும். ஹா ஹா. ஆனா ரொம்ப நல்லா இருந்தது.

   நீக்கு
 9. படங்களுடன் குறிப்பு அருமை. நான் ஏறத்தாழ இதே முறையில் பலாப்பழ muffin, bake செய்வதுண்டு. வெல்லப் பாகு, கோதுமை மாவு, 1 தே.க ரவை, தேங்காய் எண்ணெய், வால்நட், பலாப்பழத் துண்டுகள் சேர்த்து.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ராமலக்‌ஷ்மி மேடம்... என் பசங்களுக்கு பலாப்பழ ஸ்மெல் அவ்வளவாகப் பிடிக்காது (காரணம் ரொம்ப டாமினேட்டிங் ஸ்மெல் என்பதால்). என் பெண் அடிக்கடி கேக், மஃபின்லாம் செய்வா. ஆனா பலாப்பழத்துல செய்ததில்லை (நான் கேக்லாம் விரும்பி சாப்பிடமாட்டேன். அவங்களுக்கு பலாப்பழத்துல ரொம்ப விருப்பம் இல்லை)

   நீக்கு
 10. காலை வணக்கம் சகோதரரே

  அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க கமலா ஹரிஹரன் மேடம்... வீட்டு வேலைகளெல்லாம் முடித்துவிட்டு மீண்டும் வருவதற்கு இரவாகிவிடும் போலிருக்கே.

   நீக்கு
  2. வணக்கம் சகோதரரே

   ஹா.ஹா. இரவுக்குள் வந்து விட வேண்டுமென சீக்கிரமாக இதோ மாலையில் வந்து விட்டேன். ஹா.ஹா. வீட்டில் என் குழந்தைகள் இருவரும் (மகன், மகள்) அலுவலக வேலையை வீட்டிலிருந்து செய்வதால். பகலில் நெட் வேறு ஸ்லோவாக வருகிறது. இரண்டாவதாக அவர்கள் குழந்தைகளை அவர்களிடம் அண்ட விடாது, இதர சமையல் வேலைகளையும் பார்த்தபடி அவர்களையும் கவனிக்க என்று பகல் இரவை தொட்டு விடுகிறது. அதனால்தான் பதிவுகளுக்கு வர தாமதமாகிறது. நன்றி.

   நீக்கு
 11. படங்களும் விளக்கமும் அருமை நெல்லைதமிழன்.... ஸ்வீட்ஸ் உங்க வூட்ல போணியாகவில்லை என்றால் இங்கே அனுப்பவும் எல்லாம் ஒரே நாளில் காலியாகிவிடும்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க அவர்கள் உண்மை மதுரைத் தமிழன்.

   ஐந்து வருடங்களுக்கு முன்பு என்றால், என்னைத் தாண்டி ஸ்வீட் வராது. எனக்கு இனிப்புகளின் மீது அவ்வளவு இஷ்டம். இப்போல்லாம் 'வெயிட் போடுதே' என்பதால்தான் செய்வதோடு என் ஆசை தீர்ந்துவிடும்.

   என்றைக்காவது சந்திக்காமலா போகப்போகிறோம். அப்போது பார்த்துக்கொள்வோம். (அப்புறம் நீங்க, கொடுத்ததை முழுவதும் நான் சாப்பிட்டால் மனைவி இரண்டு பூரிக்கட்டைகளை உபயோகிக்க ஆரம்பித்துவிடுவாள் என்பதால் பாதியை கேரேஜிலேயே வைத்துவிட்டு வீட்டுக்குள் சென்றேன் என்று எழுதாமலா இருக்கப்போறீங்க..)

   நீக்கு
 12. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க கோமதி அரசு மேடம். இப்போல்லாம் நீங்க அடிக்கடி இடுகை எழுதறதில்லை.

   நீக்கு
  2. நீங்கள் கேட்டது எனக்கு கேட்டு விட்டது போல இன்று பதிவு போட்டு இருக்கிறேன்.
   நேரம் இப்போது வேறு வகையில் போகிறது. காலை பேரனுடன் விளையாட்டு, வீட்டு வேலை, போனில் சுற்றங்களுடன், நட்புகளுடன் பேச்சு, தேவாரம் பாட்டு கற்றுக் கொள்ளுதல் என்று நேரம் போகிறது

   நீக்கு
 13. குழிப் பணியாரம் செய்முறை படங்களுடன் அருமை.

  நெல்லைத் தழிழன் பலாபழத்தை வாங்கி வந்து பொறுமையாக சுத்தம் செய்து குழிப்பணியாரம் செய்ததற்கு பாரட்ட வேண்டும்.

  என் அம்மா அப்பமாக செய்வார்கள். அதனால் நானும் அப்பமாக செய்து இருக்கிறேன். இரண்டு மூன்று நாள் வைத்து சாப்பிடலாம்.
  வருட பிறப்புக்கு சுளையாக 4,5 (சித்திரைவிசுக்கு) வாங்கி வந்து தேன் கலந்து சாப்பிடுவதுடன் பலாபழம் ஆசை முடிந்து விடுகிறது இப்போது.

  குழிப்பணியாரமாக செய்யலாம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எனக்கு பலாப்பழச் சுளை எடுப்பது, சின்ன வயதில் தேன் பாட்டிலைச் சுத்தம் செய்வது-அதாவது தேனை இன்னொரு பாட்டிலில் விட்டுவிட்டு, இருக்கும் பாட்டிலில் அடியில் கல் போல தேங்கிவிட்ட தேனில் தண்ணீர் விட்டு நான் சாப்பிட்டுவிடுவேன், மாங்காய் ஊறுகாய் போடுவது, நுங்கு தோலுரித்து சுளைகளை கட் பண்ணுவது - இதெல்லாம் இஷ்டமான விஷயம்.

   அப்பம் செய்தால் எண்ணெயில் பொரிக்கணும். ஒரு தடவை வாழைப்பழம் உபயோகித்து கொஞ்சமா அப்பம் செய்தேன். பையன், ரொம்ப நல்லா இருந்ததுன்னு சாப்பிட்டான். இன்னொரு தடவை நிறையவே செய்தேன். அவனோ, என்னப்பா ஒரே எண்ணெயா இருக்குன்னு சாப்பிடவே இல்லை. சமீபத்தில் கூட, சும்மா எண்ணெய்ல பொரித்து டெம்ப்ட் பண்ணாதீங்கோ என்று சொல்லிட்டான்.

   நீக்கு
  2. //தேன் கலந்து சாப்பிடுவதுடன் பலாபழம் ஆசை முடிந்து விடுகிறது// - உண்மைதான். இதைச் செய்யுங்க, இந்த இனிப்பு வேண்டும் என்று கேட்பதற்கு ஆட்கள் இருந்தால் எப்போதும் செய்வதில் சந்தோஷம் வரும். நமக்கு மட்டும்தான் என்றால், செய்வதில் அவ்வளவு ஆசை வராது. சாரும் இனிப்புகள் விருப்பப்பட்டு கேட்பதில்லையா?

   நீக்கு
  3. // தேன் கலந்து சாப்பிடுவதுடன் //

   ஆம், சுவை.  சமயங்களில் நெய் தொட்டும் சாப்பிடுவதுண்டு!

   நீக்கு
  4. சாருக்கு இனிப்பு என்றால் மிகவும் பிடிக்கும் சிறு வயதில் நெய்யும் சீனியும் நிறைய எடுத்துக் கொள்வார்களாம். வீட்டின் ஒவ்வொரு அறையிலும் நெய்யும், சீனியும் இருக்க வேண்டும் என்பார்களாம் அம்மாவிடம்.

   கிருஷ்ணா மைசூர்பாக், பாதுஷா பழைய முறையில் செய்யும் பாதுஷா மேலே சீனி பாகு நிறைய உள்ளே பொரு பொரு என்று இருக்கும் அதுதான் பிடிக்கும் முன்பு வீட்டில் எல்லாம் செய்வேன். இப்போது இனிப்பு கேட்கும் குழந்தைகளும் இல்லை, அவர்களுக்கும் இனிப்பு சாப்பிடக்கூடாது.
   மாயவரத்தில் எல்லார் வீடுகளில் பலாமரம் இருக்கும் பலா சீஸனில் வந்து விடும் வீட்டுக்கு நிறைய ஒவ்வொரு வீட்டில் இருந்தும்.

   பலா அல்வா செய்வேன் வெல்லம் போட்டு . அப்பம் செய்வேன். தேன் விட்டு சாப்பிடுவோம். கீதா சொல்வது போல் வெல்லம் கலந்த பலா கலவை பூரணம் வைத்து கொழுக்கட்டை செய்வேன். திரளி இலையில் மடித்து வைத்து வேக வைத்தால் வாசம் அப்படி இருக்கும். திருவனந்தபுரத்தில், நாகர்கோவிலில் கிடைக்கும் திரளி இலை.

   நீக்கு
  5. ஸ்ரீராம் , நெய் தொட்டு சாப்பிட்டு பார்த்தது இல்லை, அடுத்த முறை அப்படி சாப்பிட்டுப் பார்க்கிறேன்.

   நீக்கு
  6. ஸ்ரீராம் - உங்களுக்குத் தெரியும்னு நினைக்கிறேன். நெய் + தேன் காம்பினேஷன் ஆபத்து. பலாச்சுளையில் நெய் தொட்டுக்கொண்டா - நல்லாருக்குமா?

   நீக்கு
 14. நெல்லை சார் நான் திருவனந்தபுரத்து காரன் என்பது தெரியுமோல்லியோ? 
  இங்கு கூழன் வரிக்கை செமிவரிக்கை என்று 3 விதம் கிடைக்கும். இதில் கூழன் எப்போதும் உப்பேரிக்கு போய்விடும். உப்பேரி கிலோ 300/400. வரிக்கை எல்லாம் துபாய்க்கு போய்விடும். இந்த செமி வரிக்கை மட்டும் தான் அதிகம் கிடைக்கும். இதன் குணம் வரிக்கையின் இனிப்பு இருக்காது. கூழனைப்போல கொழகொழப்புஆகி விடாது.  ஆகவே இதை கிண்ணத்து அப்பம் செய்ய உபயோகப் படுத்துவோம். 

  செய்முறை. 
  பச்சரி ஊறவைத்து, அல்லது பச்சரிசி மாவு.
  நாட்டு சர்க்கரை (வெல்லம்)
  சக்கை துண்டுகள். 
   Ratio: as per choice. 
  இவற்றை நன்றாக மிக்ஸியில் அரைத்து அல்லது கிரைண்டரில் அரைத்து தோசை மாவு பதத்தில் எடுத்துக்கொள்ளவும். கொஞ்சம் ஏலக்காய் பொடி சேர்த்து கொள்ளலாம்.  ஒரு கிண்ணத்தில் கொஞ்சம் நெய்  அல்லது வெண்ணை தடவி இந்த மாவை அதில் ஊற்றிக் கொள்ளவும். அல்லது பட்டர் பேப்பர் கிண்ணத்தில் வைத்து ஊற்றி கொள்ளலாம். 
  குக்கரில் வைத்து வேவித்து எடுக்கலாம். mikrowave அவனில் வைத்து வேக வைக்கலாம். (பாத்திரம் mikrowave பாத்திரம் ஆக இருக்க வேண்டும்.)அல்லது ஓவெனில் கேக் போன்று bake செய்து எடுக்கலாம். (ஓவெனில் வைப்பது என்றால் கொஞ்சம் baking soda சேர்க்கவும்.)அல்லது இட்லி பாத்திரத்தில் இட்லி போன்று அவித்து எடுக்கலாம். 
  முக்கியம்:
   இது ஆறியவுடன் தான் நன்றாக இருக்கும். கொஞ்சம் சூடு ஆறியவுடன் சாப்பிடலாம். 

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஜெயக்குமார் சார்....

   என் அப்பா வழி பாட்டி, திருவனந்தபுரத்துக்காரங்க. அம்மா வழியிலும் திருவனந்தபுரம் டச் உண்டு. அதுனால, கல்ஃப் தேசங்களில் இருந்தபோது, நண்பர்களிடம், நானும் ஒரு வகையில் மலையாள தேசத்தைச் சேர்ந்தவன் என்று சொல்லுவேன்.

   உப்பேரி எனக்கு மிகவும் இஷ்டமானது. அதிலும் வெளிச்ச எண்ணெயில் செய்தால் அவ்வளவு நன்றாக இருக்கும். ஆனால் கல்ஃபில் கேரள கடைகளில் இருப்பது எண்ணெயில் பொரித்தது (வெளிச்ச எண்ணெயில் பொரித்தால் நாள்பட இருக்காது).

   நான் பஹ்ரைனில் இருந்தபோது முழு பலாப்பழம் வாங்கியிருக்கேன் (கிலோ 70 ரூபாய். ஒரு பழம் 10 கிலோ இருக்கும்).

   பலாப்பழ அப்பம் - மனதில் குறித்துக்கொண்டேன். வாய்ப்பு கிடைக்கும்போது செய்யணும்.

   மிக்க நன்றி உங்கள் விளக்கமான பின்னூட்டத்திற்கு

   நீக்கு
  2. ஜெயக்குமார் ஸார் கலக்குகிறார்.  வீட்டில் கேட்டு சொல்லி இருப்பாரோ!! நீங்களும் ஏதாவது ரெஸிப்பி அனுப்பலாமே ஜெயக்குமார் ஸார்...

   நீக்கு
 15. இதை நாங்கள் முக்குழி என்று சொல்வோம்.

  நான் சிறு வயதில் தினம் மூன்று பைசா கொடுத்து ஒரு அம்மாயியிடம் வாங்கி தின்பேன் (தூரத்து உறவு) அம்மாயி தற்போது மதுரையில் இருக்கிறார் தற்போது 100 வயது இருக்கணும்.

  அப்பொழுதே கிழவிதான் இன்றுவரை அப்படியே சற்று தளர்வுடன் இருக்கிறார்.

  அவரது நினைவை மீட்டி விட்டது பதிவு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க கில்லர்ஜி... நீங்க சாப்பிட்டது பலாப்பழ பணியாரமா இல்லை காரப் பணியாரமா?

   பெரியவங்க கைமணம் மறக்கக்கூடியதா? அது அன்பு தோய்ந்ததல்லவா?

   நீக்கு
 16. //நெல்லைத்தமிழன் வரைந்த சிலுக்கு (!) படத்தை// - இன்னும் அழகாக வரையமுடியும். வரைந்திருக்கலாம் என்று இப்போ தோன்றுகிறது. நான் 'ஜெயராஜ்' ரசிகன். அவருடைய படங்களை வரைந்துபார்ப்பேன் (ஆமாம். பெண்கள் படங்களை மட்டும்தான். ஹா ஹா)

  பதிலளிநீக்கு
 17. இன்னிக்குப் பலாப்பழமா திங்க? நாங்க சாப்பிட்டே 2,3 வருடங்கள் ஆகின்றன. முழுப்பழமெல்லாம் மாமனாருக்கு அப்புறம் வாங்கினதே இல்லை. எங்க பிறந்த வீட்டில் இது கிட்டேயே வராது. பெரியப்பா வீட்டுக்கோ, சின்னமனூரில் சித்தி வீட்டுக்கோ போனால் தான் பலாப்பழம், மாம்பழமெல்லாம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இன்று வெகு நேரமாகிவிட்டதே கீசா மேடம். நீங்க சொல்ற சின்னமனூர், பாடல்ல வர்ற சின்னமனூரா? (இதைச் சொல்ல ஸ்ரீராம்தான் வரணும்னு நினைக்கிறேன்)

   பச்சரிசி சோறு உப்பு கருவாடு சின்னமனூரு வாய்க்கா சேலு கெண்ட மீனு
   குருத்தான மொளை கீரை வாடாத சிறு கீரை
   நெனைக்கையிலே எனக்கு இப்போ எச்சி ஊறுது
   அள்ளி தின்ன ஆசை வந்து என்னை மீறுது
   நித்தம் நித்தம் நெல்லு சோறு நெய் மணக்கும் கத்திரிக்கா
   நேத்து வெச்ச மீன் கொழம்பு என்ன இழுக்குதையா
   நெஞ்சுக்குள்ள அந்த நெனப்பு வந்து மயக்குதையா

   (முள்ளும் மலரும்.... வெள்ளி நேயர் விருப்பத்துல வர்ற பாடலா?)

   நீக்கு
  2. சின்னமனூர்ச் செப்பேடுகள்னு கேள்விப் பட்டிருக்கீங்களா? பூலாநந்தீசுவரர் கோயில் பிரபலம். அங்கே கல்வெட்டுக்களும் பிரபலம். அரிகேசநல்லூர் என அழைக்கப்பட்ட இந்த ஊர் ராணி மங்கம்மா காலத்தில் சின்னமனூர் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. பக்கத்தில் உள்ள குச்சனூர் சனி பகவான் கோயிலும் பிரபலம். சின்னமனூரிலிருந்து செல்லும் பக்கத்து ஊரான மார்க்கையங்கோட்டை (பாளையக்காரர்கள் இருந்திருக்கின்றனர்.) அரிசி சாகுபடியில் ஒரு காலத்தில் ஆசியாவிலேயே அதிகம் விளைச்சல் கண்ட ஊர். அரிசியும் அவ்வளவு நன்றாக இருக்கும். எல்லாம் பெரியாற்றுப் பாசனம் தான். என் சித்தப்பா அங்கே மருத்துவராக இருந்திருக்கார். இப்போவும் சின்னமனூரில் வயதானவர்கள் டாக்டர் பிச்சுமணி என்றால் கண்ணீருடன் நினைவு கூர்வார்கள். இப்போ சித்தி - சித்தப்பா குழந்தைகள் எல்லோரும் மதுரை, சென்னை என ஆங்காங்கே சிதறி விட்டனர்.

   நீக்கு
  3. சின்னமனூர் என்றால் எனக்கு சர்க்கஸ் ஞாபகம்தான் வருகிறது!

   நீக்கு
 18. நெல்லை சொன்னாப்போல் தேங்காய், வெல்லத்துடன் பலாப்பழத்துண்டுகளைப் போட்டுக் கலந்து பூரணமாகச் செய்து கொண்டு மேற்சொன்ன மாவுக்கலவையில் தோய்த்து சிய்யம்/சுகியம்/சிய்யன் மாதிரிப் பண்ணுவார் பக்கத்து வீட்டுப் பாலக்காட்டு மாமி. (அம்பத்தூரில் இருந்தப்போ) மற்றபடி எங்க வீட்டில் பலாப்பழம் மாமனார் இருந்தவரை முழுசாக வாங்கித் தேனில் தோய்த்துச் சாப்பிட்டுவிட்டு அக்கம்பக்கம் கொடுப்பது தான். போளி மாதிரி/தோசையாகப் பண்ணிப் பார்த்திருக்கேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க கீசா மேடம்.

   கொரோனாவுக்கு அப்புறம், தனியா சுளை வாங்கும் மனதே வராதே (எதுக்கு வம்பு என்று).

   என்னைப் பொருத்த வரையில், தேங்காய்/வெல்லப் பூரணம் சீயனுக்கு ரொம்ப நல்லா இருக்கும். பருப்பு பூரணம் அவ்வளவாகப் பிடிப்பதில்லை.

   அது சரி...இந்த இந்தப் பண்டிகைக்கு இந்த இந்த உணவு வகைகள்னு, உங்க தளத்துல எழுதியிருக்கீங்களா? இல்லைனா, விரைவில் எழுதுங்க.

   நீக்கு
  2. கொரோனா இல்லாட்டியும் வாங்கி இருக்க முடியாது. மாமாவுக்குச் சர்க்கரை கண்ணிலேயே காட்டக்கூடாது என்னும்போது இதெல்லாம் எங்கே வாங்குவது? மாம்பழமும் 2 வருடங்களுக்கும் மேலாக வாங்கவில்லை. போன வருஷம் யாரோ வாங்கி வந்தது இருந்தது. இந்த வருஷம் அதுவும் இல்லை.

   நீக்கு
  3. //சர்க்கரை கண்ணிலேயே காட்டக்கூடாது என்னும்போது// - என்னை பயமுறுத்துகிறீர்களே... எடை குறைப்பு முயற்சியில் இருந்தபோது, டயடீஷியனும் என்னிடம், வாழைப்பழம், மாம்பழம், பலா போன்றவற்றைத் தவிர்க்கணும் என்று சொல்லியிருக்காங்க. (யாரு அதை ஃபாலோ பண்ணறா..)

   நீக்கு
 19. வெளியில் போய் எதுவும் வாங்க முடியாத நிலையில் இப்படி ருசிகரமான ரெசிபிக்கள் போடுகிறீர்கள் கொரோனா முடிந்ததும் ஆசைப் பட்ட காய்கறிகளை வாங்கி சமைக்கணும்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க அபயா அருணா மேடம்....இங்க பலாப்பழம் இன்றுவரை விற்றுக்கொண்டிருக்கிறார்கள். காய்கறி வரத்துக்கும் ஒரு குறைச்சலும் இல்லை.

   நீக்கு

 20. ಹಣ್ಣಿನ ಹಳ್ಳದ ಪಾಕವಿಧಾನವನ್ನು ನೀವು ನನಗೆ ಹೇಳಿದ್ದೀರಿ. ಧನ್ಯವಾದಗಳು.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹய்யையோ...    என்ன இப்படிச் சொல்லிட்டீங்க!

   நீக்கு
  2. அடுத்த மின்புத்தகம் கன்னடத்தில் கிளம்புகிறது என்பதற்கான சூசக அறிவிப்பா கௌதமன் சார்!

   நீக்கு
  3. ஹா இது கன்னடமா! நான் தெலுங்கு என்று நினைத்தேன்!

   நீக்கு
  4. உண்மையா சொல்றேன். எனக்கு இதனைப் பார்த்த பிறகு ஜிலேபிதான் மனதில் வந்தது. ஜிலேபி வாங்கிச் சாப்பிடணும்னு சில மாதங்களாகவே நினைத்திருக்கிறேன். ஒரு சில நல்ல கடைகளுக்குச் சென்றும், வாங்கும் தைரியம் வரவில்லை. பசங்களும் இப்போதைக்கு கையால் செய்த எதையும் வாங்கக் கூடாது என்று சொல்லியிருக்காங்க.

   கேஜிஜி சார்... உங்கள் தகவலுக்கு... நான் கிரந்தத்தில் "மிக்க" என்றுதான் டைப் செய்தேன். ஆனால் இங்கு அது சமஸ்க்ருதத்தில்/தேவநாகரியில் மாறிவிட்டது.

   நீக்கு
 21. வணக்கம் நெல்லை தமிழர் சகோதரரே

  /இது நாங்கள் பெங்களூருக்கு நிரந்தரமாக வந்த பிறகு எழுதும் முதல் சமையல் குறிப்பு. அதனால் இனிப்புடன் ஆரம்பித்திருக்கிறேன்./நிரந்தர பெங்களூரு வாசத்திற்கு முதலில் வாழ்த்துகள்.

  பலாப்பழத்தை தேர்ந்தெடுத்து வாங்கி அதில் அருமையாக இனிப்பு குழிப்பணியாரம் அழகாக செய்து காண்பித்திருக்கிறீர்கள். படங்களும், பொறுமையான செய்முறையும் அருமை. உங்களுக்கு சமையல் நன்றாக வருகிறது. உங்கள் வீட்டிலிருப்பவர்கள் கொடுத்து வைத்தவர்கள். நீங்கள் விதவிதமாக வித்தியாசமாக செய்வதை கண்டிப்பாக மனதுக்குள் பாராட்டியபடியே சாப்பிடுவார்கள். வெளிப்பார்வைக்கு உங்களுக்கு அது தெரியாமல்,அவர்களுக்கு அது பிடிக்கவில்லையோ என நீங்கள் ஐயமுறலாம். மற்றபடி நீங்கள் செய்யும் ஐயிட்டங்கள் எனக்கு சில புதிதாக உள்ளது. விதவிதமான செய்முறைகளுக்கு பாராட்டுக்கள்.

  எங்கள் அம்மா வீட்டிலிருக்கும் போதே, நெல்லையப்பர் தேர் திருவிழாவுக்கு போகும் போது இந்த வாசனையான பலாப்பழம் என்னை கவர்ந்திழுக்கும். அதை சாப்பிட வேண்டுமென ஆசைப்படுவேன். ஆனால் எங்கள் அம்மா வயிற்று வலி வருமென அதை சாப்பிட கூடாதென கண்டிப்புடன் மறுத்து விடுவார்,எப்போதோ ஓரிரு தடவை எண்ணி அதிசயமாக சாப்பிட்டிருப்பேன். அதிலும் வெடுக்கென கடித்து சாப்பிடுபடியாக கிடைக்காது. இப்போது நீங்கள் சொல்லித்தான் இதில் இரு வகைகளின் பெயர்களை தெரிந்து கொண்டேன்.

  திருமணத்திற்கு பிறகு புகுந்த வீட்டிலும் இதை கண்ணாலே பார்க்க இயலவில்லை. அவர்களுக்கும் இது பயங்கர அலர்ஜியாம். அதனால் இந்தப் பழம் என்னை அவ்வளவாக பார்க்காமலே விலகி விட்டது இப்போது இதில் அவ்வளவாக பிடித்தம் வரவேயில்லை. நீங்கள் அதில் குழிப்பணியாரம் செய்து அசத்தியிருக்கும் முறை கண்டு எப்போதாவது நல்ல சுளை கிடைக்கும் போது செய்து பார்க்கும் ஆசை வருகிறது. நேரம் வந்தால் கண்டிப்பாக செய்கிறேன். தங்களின் பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க கமலா ஹரிஹரன் மேடம்... "வீட்டிலிருந்து ஆபீஸ் வேலை செய்பவர்களால்" வீட்டில் உள்ளவர்களுக்குத்தான் வேலை ஜாஸ்தியாகிவிட்டது என்று பல வீடுகளில் பார்க்கிறேன். ஹா ஹா.

   நெல்லையப்பர் தேர்த் திருவிழா... நினைவை எங்கோ கொண்டு சென்றுவிட்டீர்கள். அது பெரிய திருவிழா. நிலைக்கு தேர் வந்து சேர்வதே எல்லோருக்கும் மகிழ்ச்சியளிக்கும் செய்தி. நீங்க நெல்லையின் எந்தப் பகுதி என்பது தெரியலை. நான் ஜங்ஷன். (பாலஸ் டி வேல்ஸ், பூர்ணகலா தியேட்டருக்கு இடையில். ஹா ஹா).

   நான் சிறு வயதில் அப்பா உறவினர்கள் வீட்டில் பலாப்பழம் சாப்பிட்டதில்லை (அவங்க வாங்கினா முழுப் பழம்தான் வாங்குவாங்க. யாரும் கட் பண்ணினதை வாங்குவதில்லை). அம்மா உறவினர்கள் வீட்டிலும் முழுப் பழம்தான் வாங்குவாங்க, சிப்ஸ், மற்ற இனிப்பு வகைகளும் பண்ணுவாங்க.

   //சமையல் நன்றாக வருகிறது// - ஹா ஹா. எப்பவாவது 'நல்லாருக்கு' என்பார்கள். ஆனால் என் மாமனார் வீட்டில், அவர்களுக்கு நான் பண்ணுவது பிடிக்கும். எனக்கும் சமைப்பதில் கடந்த சில வருடங்களாக ஆர்வம்.

   //பெங்களூர் வாசம்// - ஆமாம் இப்போதான் ஒரு 5 மாதங்கள் ஆகியிருக்கிறது. ஒரு வருடம் போனால்தான் இங்குள்ள காலநிலை, அதை என் உடம்பு எப்படி அனுசரிக்கிறது என்பது தெரியும்.

   நீக்கு
 22. மின் நிலாவில் படங்கள் சேர்ப்பு அருமை.
  நெல்லைத்தமிழன் வரைந்த சிலுக்கு மரம் நன்றாக இருக்கிறது.(மரத்தில் தெரிந்த சிலுக்கு)

  ராகி முத்தை படம் நன்றாக இருக்கிறது ராகி களி தான் ராகி முத்தை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி கோமதி அரசு மேடம். கல்கியில் ஒரு காலத்தில் ஒரு எழுத்தின் ஒரு பகுதியோ அல்லது வளைவையோ போட்டு அதில் உங்கள் கற்பனையைக் காட்டுங்கள் என்று சொல்லியிருந்தாங்க. நான் அதைவைத்து ஒரு பெண் படம் வரைந்து அனுப்பியிருந்தேன். இன்னும் திறமையான ஒருவர் அதே மாதிரியே படம் வரைந்து அனுப்பியிருந்ததால் அவருக்கு பரிசு கிடைத்தது.

   ராகி முத்தே - இந்தப் படத்தைப் பார்த்ததும் எனக்கு உண்மையாவே ராகி முத்தே தெரியலை. குலாப்ஜாமூனும் கீழே பாகும்தான் தெரிந்தது. இன்னும் 'நம்ம ஏரியா'ல மின்னூல் வந்த பிறகு இந்த பின்னூட்டம் போடலாம் என்று நினைத்தேன்.

   நீக்கு
 23. பலாப்பழ பணியாரம் செய்முறை அருமை!
  நாங்கள் ஒரு கிண்ணத்தில் நெய், இன்னொரு கிண்ணத்தில் தேன் வைத்துக்கொண்டு பலாச்சுளையை அதில் தோய்த்து சாப்பிடுவோம். இந்த முறையில் பலாப்பழம் செரித்து விடும் என்று என் தந்தை சொல்வார்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க மனோ சாமிநாதன் மேடம். நிச்சயம் நானும் நெய் தொட்டு பலாச்சுளை சாப்பிட்டுப் பார்க்கப்போகிறேன்.

   நீக்கு
 24. வாழைப்பழப் பணியாரம்
  அறிந்து உள்ளேன்
  பலாப்பழப் பணியாரம்
  இன்று தான்
  என்னால் அறிய முடிகிறது!

  பதிலளிநீக்கு
 25. பலாப்பழப் பணியாரம் பார்க்கவே வெகு ருசி :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க தேனம்மை லக்‌ஷ்மணன் அவர்கள். சாப்பிட்டுப் பார்த்தாலும் ருசியா இருக்கும். ஹா ஹா

   நீக்கு
 26. பலப்பழத்தில் பிரதமன்பண்ணி சாப்பிடுவது வ்ழக்கம்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஜி.எம்.பி. சார்... சக்கப் பிரதமன் அட்டஹாசமாத்தான் இருக்கும். அது சரி... நீங்க சமீபத்துல கேக் ஏதேனும் பண்ணியிருந்தீங்களா?

   நீக்கு
 27. பலாப்பழ பணியாரம் -...வாசமாக இருக்கிறது ...


  நிறைய படங்கள் எல்லா படங்களும் மிக தெளிவு ...அனைத்தையும் ரசித்தேன் ..

  செய்முறையும் மிக சுலபம் ...

  இதே ஊரில் இருக்கும் எங்களுக்கு இந்த வருடம் ஒரு பழம் கூட வாங்க இயலவில்லை ....பலா சுளை சுவைக்காமலையே இந்த வருட கோடை ஓடிவிட்டது ..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க அனுப்ரேம்குமார்.

   நீங்க பழம் வாங்கலைனு சொல்றது ஆச்சர்யமா இருக்கு. சாம்ராஜ்பே அருகே நிறைய விக்கறாங்க. சென்ற வார இறுதியில் தொட்ட ஆலமரா என்ற நர்சரிச் செடிகள் வளர்க்கும் கிராமத்துக்குச் சென்றிருந்தோம் (20-25 கிமீ). போகும் வழியிலும் சிறிய சைஸ் பலாப்பழம் வித்தாங்க. ஆனால் கொஞ்சம் விலை ஜாஸ்தியாக ஆரம்பித்துவிட்டது, சீசன் முடிவுக்கு வந்துள்ளதால்.

   நீக்கு
 28. பலாச் சுளையில் பணியாரம். நன்று! எங்கள் பதிவுகளையும் குறிப்பிட்டதற்கு நன்றி நெல்லைத் தமிழன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க வெங்கட் நாகராஜ். உங்க பதிவுதான் நான் செய்ததற்குக் காரணமே. உங்க தளத்துல போடும் படம் என்னைச் செய்யத் தூண்டினால், செய்துவிடுவேன் அல்லது செய்யச் சொல்லிடுவேன். வாரம் ஒரு முறை அந்தப் பகுதியைத் தொடருங்கள்.

   நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!