செவ்வாய், 29 செப்டம்பர், 2020

கேட்டு வாங்கிப் போடும் கதை : பாரம் - துரை செல்வராஜூ

பாரம் 

துரை செல்வராஜூ

கிழக்கு மேற்காக நீண்டு கிடந்தது ஜல்லிக் கல் சாலை.. 

அந்தச் சாலையில் வந்து கொண்டிருந்த வண்டிகள் சலங்... சலங்.. - என்ற சீரான சத்தத்துடன் இடப்புறமாகத் திரும்பி தார்ச் சாலையில் ஏறியபோது 
பின்னாலிருந்து முத்தையாவின் குரல் கேட்டது... 

'' நடையப் பத்தி ஓட்டுங்கப்பா!.. இங்கேயே மணி நாலாயிடுச்சு..  இன்னும் அஞ்சு மைல் இருக்கு!... '' 

விடிந்தும் விடியாத அந்தக் காலைப் பொழுதின் கிழக்கே வெள்ளி முளைத்திருந்தது.. 

குரல் கொடுத்த முத்தையா வயதில் மூத்தவர்... ஒரு வகையில் செண்பகத்துக்கு மாமன் முறை... 

அவர் குரலுக்கு மதிப்பளித்து வண்டிக்காரர்கள் மாடுகளை விரைந்து நடக்க 
அதட்டிய போது செண்பகமும் மாடுகளின் முதுகில் கை வைத்து 

'' ஹேய்.. ஹேய்!.. '' - என்றாள்.. 

காளைகள் விரைந்து நடக்க அவளது மனமோ சற்றே பின்னோக்கிச் சென்றது..

                                 

விடியலுக்கு முன் மூன்று மணிக்கெல்லாம் முறுக்கிக் கொண்டு நின்றன 
உம்பளச்சேரி காளைகள்.. 

வழக்கமாக இதே நேரத்தில் எழுந்து வாய் கொப்பளித்து விட்டு நெற்றியில் 
விபூதிப் பூச்சுடன் வண்டியைப் பூட்டுவதற்கு ஆயத்தமாகும் வீராச்சாமி ஜூர வேகத்தில் முனகிக் கொண்டு கிடந்தார்.. 

தாயும் மகளும் இதை எதிர்பார்க்கவில்லை.. 

மங்களம் சொன்னாள்.. 

'' மாடுகள அவுத்து சின்னையன் கிட்ட கொடுத்துட்டு வெவரம் சொல்லிட்டு 
வாம்மா செம்பகம்.. வண்டிச் சத்தத்தை சின்னையனே வெச்சிக்கட்டும்!... '' 

வண்டிச் சத்தம் என்றால் வண்டியில் மூட்டை ஏற்றி கும்மோணம் மார்க்கெட்டுக்கு போய்ட்டு வருவதற்கான கூலி... 

மண்ணெண்ணெய் விளக்கின் ஒளியில் தாயை நிமிர்ந்து பார்த்த செண்பகம் - 

                               

'' நானே போய்ட்டு வர்றேம்மா!.. '' - என்றபடி தகப்பனின் தோள் துண்டை எடுத்துத் தலையில் முண்டாசு கட்டிக் கொண்டாள் ... 

'' இங்கே வாய்க்கா வரப்புல வண்டி ஓட்டுன மாதிரின்னு நெனைச்சுக்கிட்டியா 
நீ?.. கும்மோணம் .. தார் ரோடு... காரும் பஸ்சும் ஓகோ..ன்னு ஓடும்!... '' 

'' அதுக்கெல்லாம் கவலப்படாதே..ம்மா!.. '' - என்றபடி சலங்கைப் பட்டைகளை 
எடுத்து காளைகளின் கழுத்தில் கட்டி விட்டாள்.. 

கையோடு லாந்தர் விளக்கை எடுத்துக் கொண்டவள் - 

'' அப்பாவுக்கு கஞ்சி வெச்சிக் கொடு.. எட்டரை மணிக்கு பஞ்சாயத்து போர்டு 
ஆபீசுக்கு நர்சம்மா வருவாங்க.. அவுஙககிட்ட சொல்லி மாத்திரை வாங்கிக் 
கொடு!.. ''  - என்றபடி காளைகளை உசுப்பி விட்டாள்... 

அதுவரையில் வைக்கோல் போரில் சுருண்டு கிடந்த மணியனும் உடம்பைச் 
சிலுப்பிக் கொண்டு வாலைக் குழைத்தபடி காளைகளோடு நடந்தான்... 

'' யப்பா... நான் போய்ட்டு வர்றேன்!... '' 

'' சரிடா.. செல்லம்.. ஜாக்கிரதையா போய்ட்டு வாங்க!.. '' வீரையனின் உதடுகள் மெல்ல அசைந்தன... 

பிள்ளையார் கோயிலுக்கு எதிரே திடலில் ஒன்பது வண்டிகள்.. 

எல்லாம் தயாராக இருந்தன... கையில் மாடுகளுடன் செண்பகத்தைக் கண்டதும் அங்கே கூடியிருந்தவர்களிடம் சலசலப்பு... 

'' வீரையனுக்கு என்னாச்சு!?... '' 

பொதுவாக விவரத்தைச் சொன்னாள்... 

ஒரு சிலர் தாண்டிக் குதித்தனர்... 

'' அதெப்படி ஒரு பொட்டப் புள்ள வண்டி ஓட்டிக்கிட்டு வர்றது?... '' 

முத்தையா தான் அவர்களை அடக்கினார்... 

'' டே... சின்னத்தம்பி .. மூக்கணையைத் தூக்கி வண்டியப் பூட்டிக் கொடுடா!... 
செம்பகத்து வண்டி மூணாவதா வரட்டும்... நீ முன்னால ஓட்டு!... '' 

இளைஞன் ஒருவன் ஓடி வந்து காய்கறிகள் ஏற்றப்பட்டிருந்த வண்டியின் 
மூக்கணையைத் தூக்கினான்... 

செண்பகத்தின் மாடுகள் இரண்டும் அடக்க ஒடுக்கமாக வலது இடது என்று மாறி வந்து நுகத்தடியைக் கழுத்தில் தாங்கிக் கொண்டன... 

பூட்டாங்கயிறை கையில் வாங்கி நுகத்தடிக் கழியில் மாட்டும் போது 
செண்பகம் நினைத்துக் கொண்டாள்... 

மறுபடி வண்டி பூட்டும் போது நானே மூக்கணையைத் தூக்குவேன்!.. 

மூக்கணையைத் தூக்கி வண்டியில் மாட்டைப் பூட்டுவது ஒரு கலை... 

வண்டியின் பின்புறம் குத்துக் கட்டை தொங்கினாலும் சமயத்தில் பின்பாரம் 
ஆளை மேலே தூக்கி விடும்.. முன் பாரத்தை அழுத்திப் பிடிக்க தெம்பு 
வேண்டும்.. 

செண்பகத்தின் வண்டியும் தயாராகி விட்டது.. காளைகள் கழுத்தைச் சிலுப்பிக் கொண்டன.. 

வண்டியைச் சுற்றி வந்தாள்.. வண்டியின் கீழ் வாளியும் பருத்திக் கொட்டை 
புண்ணாக்கு பைகள் தொங்கிக் கொண்டிருந்தன.. 

கையிலிருந்த லாந்தரை முன் புற கொக்கியில் தொங்க விட்டாள்... 

மூக்கணையைத் தொட்டுக் கும்பிட்டு விட்டு வலப்புறமாக வந்து காளையின் முதுகில் கை வைத்தபடி தத்தி ஏறி முன்பலகையில் அமர்ந்து '' ஹேய்!...' - என்றாள்.. 

' சடார்!.. ' - என்ற சத்தத்துடன் பிள்ளையார் கோயில் வாசலில்  தேங்காய் ஒன்று சிதறவும் வண்டிகள் மெல்ல நகர்ந்தன... 

செண்பகத்தின் காளைகளும் மெல்ல நடக்க வண்டிக்குக் கீழாக மணியனும் நடந்தான்.. 

                                           

அந்த வண்டிகளில் எல்லாம் கத்தரிக்காய் வெண்டைக்காய் மூட்டைகளும் பறங்கி பூசணிக் சுரைக்காய்களும் ஏற்றப்பட்டிருந்தன... 

இந்தப் பக்கத்து கத்தரிக்காய்கள் அப்படியே வெண்ணெய் உருண்டை மாதிரி..  சுடுதண்ணீரில் போட்டால் போதும் அப்படியே குழைந்து விடும்.. 

கட்டை விரல் அளவுக்கு வெண்டைக்காய்கள்... பச்சையாகவே தின்று தீர்த்து விடலாம்... 

எல்லாம் கொள்ளிடப் பேராற்றின் அருட்கொடை... 

பத்தடிக்குத் தோண்டியதும் நீர் பொங்கி வந்த காலம்... வெயிலிலும் மழையிலும் வஞ்சனையில்லாது பாடுபட்ட மக்களை பூமித்தாய் அள்ளி அணைத்துக் கொண்ட காலம்... 

பொழுது விடிய கும்மோணம் பாலக்கரை மார்கெட்டுக்குப் போய்ச் சேர்ந்து 
விட்டால் போதும்.. மத்தியானத்துக்குள் விற்று முதலாக்கி விடலாம்... 

உள்ளூர் ஏவாரிகளும் தஞ்சாவூர் பட்டுக்கோட்டை ஏவாரிகளும் அப்படியே அள்ளிக் கொண்டு போய் விடுவார்கள்... 

அப்படியே காய்கறி மார்கெட்டுக்கு அந்தப்பக்கம் போனால் மளிகைக் கடைகள்.. 

வீட்டுக்குத் தேவையான அறைச் சாமான்களை வாங்கிக்கிட்டு இந்தப் பக்கம் வந்தால் சேது ஐயர் ஓட்டல்... 

வயிறு நிறைய சாப்பாடு.. நாலு ரூபாய் தான்... 

சந்தோசமா சாப்பிட்டதும் ஐயர் கடையிலயே அல்வா, ஜாங்கிரி, காராசேவு எல்லாம் வகைக்கு கால் கிலோ பொட்டலம் கட்டிக்கிட்டு புறப்பட வேண்டியது தான்.. 

ஏதேதோ இரைச்சல்... சட்டென விழித்துக் கொண்டாள் செண்பகம்... 

கும்மோணம் பாலக்கரை மார்க்கெட்... 

' இந்தா ஓடுறாளே காவேரி!... ' - பரவசம் மிகவாகியது செண்பகத்துக்கு.. கையெடுத்துக் கும்பிட்டு கன்னத்தில் போட்டுக் கொண்டாள்.. 

                                   

காவிரிக்கு அந்தப் பக்கம் தான் மார்க்கெட் என்றாலும் இந்தக் கரையிலும் பரபரப்பு... 

கிழக்கால மாயவரம் ரோடு... மேற்கால சாமிமலை , திருவையாறு... 
அங்கிட்டு நீலத்த நல்லூர்.. இந்த ரோடு திருப்பனந்தாள் அணைக்கரை வடலூர் 
மெட்ராஸ்... ன்னு... 

அந்த நேரத்திலும் கந்தசாமி நாடார் கடையில் உப்புக் கடலையும் பட்டாணியும் நிலக்கடலையும் மணக்க மணக்க வறுபட்டுக் கொண்டிருந்தன... 

திடு திடு என ஆட்கள் ஓடி வந்து பச்சை நிறத் தாளைக் கிழித்து மூக்கணையில்  பசை தடவி ஒட்டி விட்டு வண்டிக் காசு என்று எட்டணா கேட்டார்கள்.. 

இடுப்பிலிருந்த சுருக்குப் பையில் இருந்து எடுத்துக் கொடுத்தாள்... 

வழக்கமாக நிறுத்தப்படும் அரச மர நிழலில் வண்டிகள் நின்றிருந்தன.. 

'' சின்னதம்பி.. செம்பகத்து வண்டியையும் ஓரங்கட்டி மாட்டை அவுத்து விடு!.. '' 
முத்தையா மாமாவின் குரல் தான்... 

சின்னதம்பி ஓடிவந்து மூக்கணையைத் தாங்கிப் பிடிக்க நுகத்தடிக் கயிறை அவிழ்த்து விட்டாள் செண்பகம்.. 

மாடுகள் இரண்டும் சாதுவாக நகர்ந்து ஓரமாக நின்றன... 

இவ்வளவு நேரமும் வண்டிக்குக் கீழ் ஓடி வந்த மணியன் செண்பகத்தின் அருகில் வந்து உரசிக் கொண்டு நின்றான்... 

இன்னொரு தனி வண்டியில் வந்த சாகுபடிக்காரர்கள் வண்டிகளில் ஏறி அவரவர் மூட்டைகள இறக்கிப் போடுவதில் மும்முரமானார்கள்... 

வண்டிக்குக் கீழ் குனிந்து சென்ற செண்பகம் அங்கு தொங்கிக் கொண்டிருந்த 
சாக்குப் பையை அவிழ்த்தாள்.. 

அதற்குள் வேட்டி, துண்டு, சட்டை, கருவப்பட்டை தூள், குளிக்கிற சோப்பு, 
சீப்பு சின்ன சீசாவுல தேங்காய் எண்ணெய் என்று இருந்தன... 

அதை அப்படியே வைத்து விட்டு அந்த வாளியை மட்டும் எடுத்துக் கொண்டு 
காவிரியில் இறங்கித் தண்ணீர் எடுத்தாள்.. 

பருத்திக் கொட்டை புண்ணாக்கை அள்ளிப் போட்டுக் கரைத்து இந்தக் காளைக்கும் அந்தக் காளைக்கும் தனித்தனியாக வைத்தாள்... 

வயிறாரக் குடித்த நிம்மதியில் மாடுகள் புஸ்... என்று பெருமூச்சு விட்டன... 

'' செம்பகம்!... '' - என்றபடி எதிரில் வந்தார் முத்தையா மாமா... 

'' வாங்க மாமா!.. '' - என்றபடி முகம் மலர்ந்தாள்... 

'' டீ குடிக்கிறியா...ம்மா!.. '' - பரிவுடன் வினவினார்.. 

'' சரிங்க மாமா!. '' - மெல்லச் சிரித்தாள்.. 

'' டே.. தம்பி.. காசு மொத்தமா நான் தரேன்!.. '' - என்றபடி வியாபாரிகளை நோக்கிச் சென்றார்... 

'' தம்பீ... தேங்காய் சிரட்டை ஒன்னு கிடைக்குமாடா?.. '' 

'' எதுக்கு அக்கா!?.. '' 

'' மணியனுக்கு டீ ஊத்தி வைக்கத்தான்!... '' 

சிரித்துக் கொண்டே ஓடிச் சென்றவன் தேங்காய் ஓட்டுடன் திரும்ப வந்தான்... 

தனக்கு ஒன்றும் மணியனுக்கு ஒன்றுமாக வாங்கிக் கொண்டாள்... 

மணியன் சந்தோசமாகி வாலைக் குழைத்துக் கொண்டான். 

வண்டியோரமாக அமைதியாகப் படுத்திருந்த காளைகளை எழுப்பி படித்துறையின் அந்தப் பக்கமாக ஆற்றில் இறக்கி நீராட்டி கரையேற்றி மறுபடியும் வண்டிக் காலில் கட்டிப் போட்டாள்.. 

காளைகளுடன் நீரில் குதித்த மணியனும் கரையேறியிருந்தான்... 

'' டேய்.. இங்கேயே இரு... எங்கேயும் போய்டாதே!.. '' - என்று அவனிடம் 
சொல்லி விட்டு தகப்பன் வைத்திருந்த வேட்டி துண்டுகளை எடுத்துக் கட்டிக் 
கொண்டு காவிரிக்குள் இறங்கினாள் செண்பகம்... 


கட்டியிருந்த பாவாடை தாவணிகளை ஆற்றில் அலசி படித்துறைக் கட்டையில் காயப் போட்டாள்... 

ஒரு கை தண்ணீரை அள்ளிக் குடித்து விட்டு முங்கிக் குளித்தவள் அரை மணி நேரம் கழித்துக் கரையேறினாள்... 

அதற்குள் - ஈரத் துணிகளை உலர்த்தியிருந்தான் சூரியன்.. 

படித்துறையை ஒட்டினாற்போல பிள்ளையார் கோயில்.. 

இந்தப் பக்கமாக கீற்றுத் தடுப்பு... 

புரிந்து கொண்டவளாக தடுப்புக்குப் பின்னால் சென்று துணி மாற்றிக் கொண்டாள்.. 

கூந்தலை உதறி தளர முடிந்து கொண்டவள் பிள்ளையார் கோயிலுக்குள் சென்றாள்... 

நல்ல அலங்காரத்துடன் பிள்ளையார்.. கமகம... என்று இருந்தது அந்தக் கோயில்... 

வெளியில் இருந்து உள்ளே வந்த ஐயர் பிள்ளையாருக்கு தீபம் காட்டினார்... 
பிள்ளையார் மேலிருந்த பூவுடன் திருநீறு சந்தனம் குங்குமம் கொடுத்தார்.. 

நெற்றி நிறைய திருநீறையும் சந்தனம் குங்குமத்தையும் வைத்துக் கொண்டு 
ஐயர் கொடுத்த பூவைத் தலையில் சூடிக் கொண்டாள்... 

' பிள்ளையாரப்பா... அப்பாவுக்கு உடம்பு சௌகரியத்தைக் கொடுங்க சாமீ!..' 

ஒரு ரூபாயை காணிக்கையாக வைத்தாள்.. எட்டணாவை உண்டியலில் போட்டாள்..  கோயிலைச் சுற்றி வந்தபோது - 

வர்ணம் தீட்டியது உபயம் ரூ 100/- வீரையன் குடும்பத்தினர்.. தெற்குவெளி கிராமம்.. என்று எழுதப்பட்டிருந்தது.. 

அப்பா.. இதப் பத்தி ஒன்னும் சொல்லவேயில்லையே!.. செண்பகம் நினைத்துக் கொண்டாள் ... 

கோயிலை விட்டு வெளியே வந்தபோது வயிற்றில் பசி எடுத்தது.. 

கோயிலை ஒட்டினாற்போல இட்லிக்கடை.. நீள நீளமாக மேசையுடன் நாற்காலிகள்.. 

கோயிலில் பார்த்த ஐயர் அங்கே நின்று கொண்டிருந்தார்... 

'' ஓட்டல்..ல யாரும் இல்லீங்களா... '' 

'' நான்தான் பார்த்துக்கறேன்... இப்படி வந்து உக்காரும்மா!... '' என்றபடி இலையைப் போட்டார்... 

சின்னப் பையன் ஒருவன் தண்ணீர் வைத்தான்... 

இட்லி சாம்பாருடன் நாலு வகையான சட்னிகள்... 

அங்கே தொங்கிக் கொண்டிருந்த சிலேட்டுப் பலகையில் ஒரு இட்லி நாலணா.. காபி இரண்டணா.. - என்று எழுதியிருந்தது 

ஆறு இட்லி சாப்பிட்டாள்.. தனியாக மூன்று இட்லி சட்னி இல்லாமல் பார்சல் கட்டச் சொன்னாள்.. 

'' ஏம்மா!.. சட்னி வேணாமா?... '' 

'' மணியனுக்கு சட்னி பிடிக்காது.. சாம்பார் மட்டும் போதும்... '' 

இரண்டே கால் ரூபாய் கொடுத்தாள்... இரண்டு ரூபாயை மட்டும் வாங்கிக் கொண்டார் ஐயர்... 

அங்கிருந்து நிழலில் கிடந்த வண்டிக்கருகில் வந்த போது காய்களைக் கொண்டு வந்திருந்தவர்கள் கவலையுடன் நின்றிருந்தார்கள்... 

'' என்ன?.. '' - என்று விசாரித்தாள் செண்பகம்... 

கத்தரிக்காய் மூட்டை இருவது கிலோ.. பதினஞ்சு ரூவாய்க்கு கேக்கிறது தான் நியாயம்.. ஆனா புரோக்கருங்க அடாவடியா பன்னண்டுக்குக் கேட்கிறாங்க... 
இந்த ரேட்டு நமக்குக் கட்டுப்படியாகாது... 

மெல்ல முத்தையா மாமாவை நெருங்கினாள்... 

'' மாமா.. மூட்டை விலையை ஏன் பேசுறீங்க... கூடை ஆறு கிலோ.. அஞ்சு 
ரூபாய்க்குப் பேசுங்க.. நமக்கு ரெண்டு கிலோ மிச்சம்.. போற போக்குல நாலு 
ரூபாய்க்குத் தெருவுல வித்துட்டுப் போயிடலாம்.. நமக்குக் கூடுதலா ரூபாய் 
கிடைக்கும்.. இல்லேன்னா வத்தலாப் போட்டு அடுத்த வாரம் மெட்ராசுக்கு 
அனுப்பிடலாம்... '' 

'' இதுக்கு புரோக்கருங்க ஒத்துக்கலேன்னா... அடுத்த வாரம் இதே விலைக்கு 
அணைக்கரையில சந்தையப் போடுவோம்.. அரியலூர் செயங்கொண்டம்..ன்னு ஜனங்க அள்ளிக்கிட்டுப் போய்டுவாங்க.. நமக்குத் தான் ஆதாயம்!... நம்ம ஊர்க் கத்தரி வெண்டைக்கு மகத்துவமே தனி... '' - என்றாள் செண்பகம்.. 

' இவ்வளவு நாளும் நமக்கு இப்படித் தோன்றவில்லையே!.. ' ஊர்க்காரர்கள் தம்மைத் தாமே நொந்து கொண்டனர்... 

முத்தையா புரோக்கர்களிடம் பேசினார்.. அவர்கள் முகத்தில் ஈயாடவில்லை.. 

அடுத்த அரைமணி நேரத்தில் அத்தனை வண்டிகளிலும் இருந்த கத்தரிக்காய் 
வெண்டைக்காய் மூட்டைகள் கூடைக் கணக்கில் விற்றுத் தீர்ந்தன... 

பறங்கிக்காய் பூசணிக்காய் சுரைக்காய் வகையறாக்களில் ஒன்று கூட மிச்சம் இல்லை... 

சாகுபடிக்காரர்களின் கைகளில் கூடுதல் காசு.. முகத்தில் மகிழ்ச்சி... 

எல்லாரும் மூட்டைக்கு கிடைச்ச ஆதாயத்துல ரெண்டு மூணு..ன்னு போட்டு 
நூத்து இருவது ரூபாய் தரகு காசு கொடுத்தார்கள் செண்பகத்திடம்... 

'' சித்தப்பன் பெரியப்பன் மாமன்.. ன்னு ஒண்ணோட ஒண்ணா வந்திருக்கோம்.. உங்க கிட்ட தரகு காசு வாங்குவேனா?... '' - என்று மறுத்தாள் செண்பகம்... 

'' உன்னாலத் தான் எங்களுக்கு இந்த ஆதாயம்... இதுல உனக்கு ஒரு உபகாரம் செய்யலே..ன்னா அது எப்படி நியாயம்?... '' 

ஊர்க்காரர்கள் வற்புறுத்தினார்கள்... 

வண்டியிலிருந்த பாரம் இறங்கியதைப் போல அனைவரது மனதிலிருந்த பாரமும் இறங்கி மகிழ்ச்சி கூடியிருந்தது.. 

'' செம்பகம்.. வாங்கிக்கம்மா!... '' - முத்தையா மாமா பணத்தைக் கைமாற்றிக் 
கொடுத்தார்.. அவரது முகத்தில் பெருமிதம் பூத்திருந்தது... 

வண்டிச் சத்தத்தோடு கிட்டத்தட்ட இருநூற்று ஐம்பது ரூபாய்.. பெரிய காசு... 
சுருக்குப் பைக்குள் பத்திரப்படுத்திக் கொண்டாள்... 

வடை பாயசத்துடன் மதியச் சாப்பாடு முடிந்ததும் மளிகைச் சாமான்களைத் தேடிப் போனார்கள் ஜனங்கள்... 

அஞ்சு கிலோ பருத்திக் கொட்டை அஞ்சு கிலோ புண்ணாக்கு வாங்கி வண்டிக்குள் போட்ட செண்பகம் 

மறக்காமல் நாடார் கடையில் உப்புக்கடலை,பட்டாணி, அவல் பொரி 
அந்தப் பக்கமாக இருந்த கடைகளில் ரிப்பன், சாந்துப் பொட்டு, கண் மை, 
கண்ணாடி என்று வாங்கிக் கொண்டாள்... 

ஒரு ஜோடி நெற்றிச் சுட்டி வாங்கி காளைகள் இரண்டுக்கும் கட்டி விட்டாள்... 

மதியத்துக்குப் பிறகு ஜனங்கள் ஊரை நோக்கித் திரும்பியபோது 
செண்பகத்தின் காளைகள் முதலாவதாகச் சென்று கொண்டிருந்தன... 

வண்டிக்குக் கீழாக மணியன் நடந்து கொண்டிருந்தான்.. 

*****

88 கருத்துகள்:

  1. குற்றம் இலனாய்க் குடிசெய்து வாழ்வானைச் சுற்றமாச் சுற்றும் உலகு..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  2. செவ்வாய் சொல்லும்
    சிறுகதை வெல்லம்...
    சிட்டெனத் துள்ளும்
    மனம் மகிழ்வினை அள்ளும்!...

    பதிலளிநீக்கு
  3. இன்று எனது ஆக்கத்தினை அன்புடன் பதிவு செய்து ஊக்கம் அளித்த ஸ்ரீராம் அவர்களுக்கும் KGG அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நவிலற்க; நம் வாசகர்களுக்கு நல்ல விருந்து படைத்த உங்களுக்கு எங்கள் நன்றி.

      நீக்கு
  4. அன்பின் ஸ்ரீராம், அன்பு துரை
    இன்னும் வரப்போகும் அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
    இறைவன் அருள் கூட வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  5. கதையினை தம் கை வண்ணத்தால் மேலும் அலங்கரித்த ஸ்ரீராம்/KGG அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 'ஜல் ஜல் ஜல் எனும் சலங்கை ஒலி', மற்றும் 'கட்டோடு குழலாட' --- பாடல் காட்சிகளை படமாக்கிய ஒளிப்பதிவாளருக்கு நன்றி சொல்வோம்!

      நீக்கு
    2. படங்களை யார் இணைத்தாலும் நன்றாக ரசனையுடன் இணைத்திருக்கிறார்கள். அருமையான பொருத்தமான படங்கள். அங்கெல்லாம் எப்படியோ! எங்க ஊர்ப்பக்கம் (கருவிலி, பரவாக்கரை) எல்லாம் வண்டி மாடுகள் மொட்டை மாடுகளாக இருக்கும். கொம்புகள் இருக்காது. மாமனாரிடம் இருந்த மாடுகளும் அப்படித்தான். உழவு மாடுகள் மட்டும் பெரிதாக உயரமாகக் கட்டுடலுடன் இருக்கும். வண்டி மாடுகள் மொட்டை மாடுகள். அப்போக் கொட்டில் நிறைய என்றால் நிறைய மாடுகள். வண்டி மாடுகள் 2 ஜோடி, உழவு மாடுகள் ஒரு ஜோடி, எருமைமாடுகள் 2 பசுமாடுகள் இரண்டு, கன்றுகள்னு கொட்டிலில் வேலைகளும் நிறைய இருக்கும். மாடுகளை மாற்றிக் கட்டி, உணவு காட்டி, கழுநீர் காட்டினு காலை ஐந்து மணியிலிருந்து மாமனாருக்கு வேலை ஒன்பது வரை சரியா இருக்கும். இடையில் எருமை மாடுகளை மட்டும் அவர் கறப்பார். பசுமாடுகளை மாமியார் கறப்பாங்க! சமயங்களில் நம்மவரோ அல்லது இரண்டாம் மைத்துனரோ கறப்பார்கள். எனக்கு இந்த மொட்டை மாடுகள் தான் பார்க்கப் பார்க்க ஆச்சரியம் தரும். இப்போல்லாம் அந்தப் பக்கங்களில் இப்படியான மாடுகள் இல்லை. சொல்லப் போனால் கால்நடைகளே குறைந்து விட்டன.

      நீக்கு
    3. //எங்க ஊர்ப்பக்கம் (கருவிலி, பரவாக்கரை) எல்லாம் வண்டி மாடுகள் மொட்டை மாடுகளாக இருக்கும். கொம்புகள் இருக்காது.// அதை மோழை மாடுகள் என்பார்கள். தஞ்சை ஜில்லாவில்தான் இப்படிப்பட்ட மாடுகளை பார்க்க முடியும். 

      நீக்கு
    4. பதிவின் தலைப்பில் பார்த்ததுமே புரிந்து விட்டது...

      அழகான நகாசு வேலைகள்... நன்றி

      நீக்கு
    5. இப்படியான மோழை மாடுகள் தஞ்சை மாவட்டத்தில் பிரசித்தம்... காளைக் கன்று ஒன்றரை வயதாக இருக்கும் போது கொம்புகளை சூட்டுக் கோலால் தீய்த்து விடுவார்கள்... அத்துடன் கிட்டிகளைக் கொண்டு ஆண்மை நீக்கமும் ஆகி விடும்... ஒரு வாரத்துக்கு பார்க்கப் பரிதாபமாக இருக்கும்... இப்படி செய்யாவிட்டால் அவற்றைக் கட்டுப் படுத்துவது சிரமம் என்பார்கள்...

      நீக்கு
  6. சில நாட்களாக விடியற் காலையில் பதிவு வெளியாகும் வேளையில் காணப்படவில்லை..

    இன்றைக்குப் பாருங்களேன்...
    கிடந்து குதிப்பதை!...

    நியாயம் தான்!...

    நான்... எனது அறை.. எனது கணினி.. - என்று திளைத்து இருந்த என்னை மூன்று மாதங்களுக்குள் இரண்டு தடவை வேறு வேறு அறை மாற்ற வைத்து எனது பாவத்தைப் பங்கு போட்டுக் கொண்டிருக்கிறான் அந்த கோவாக் காரன்..

    கோவா என்றால் ஸ்ரீ வில்லிபுத்தூர் பால்கோவா அல்ல!..

    கை பட்டால் நொறுங்கும் நத்தாங் கூட்டுக்குள்
    களிறு புகுந்தாற் போல் இருக்கிறது...

    விடியலில் 2:50 க்கு எழுவதை
    அடுத்தவருக்காகத் தள்ளி வைத்திருக்கிறேன்..

    இருப்பிடத்திலும் வேலையிடத்திலும் சூழல் சரியில்லை.. மன உளைச்சல் தான் மிச்சம்..

    எபியும் தாங்களுமே ஆறுதல்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சீக்கிரம் நிலைமை சரியாகப் பிரார்த்திப்போம். உங்களை இங்கு காண்பதில்தான் எங்களுக்கும் மகிழ்ச்சி.

      நீக்கு
    2. //கை பட்டால் நொறுங்கும் நத்தாங் கூட்டுக்குள்
      களிறு புகுந்தாற் போல் இருக்கிறது...
      // ஆஹா என்ன உவமை! எல்லாம் சரியாவதற்கு காவிரிப் படித்துறை பிள்ளையார் அருள் புரிவார்!

      நீக்கு
    3. @துரை செல்வராஜு! அந்த ஈசன் அருளால் விரைவில் அனைத்தும் சரியாகி விடும். உங்கள் பொறுமையைப் பார்த்துவிட்டே இறைவன் நல்லபடியாக வைப்பான்.

      நீக்கு
    4. அன்பின் ஸ்ரீராம், கௌதம், மற்றும் கீதாக்கா ஆகியோர் தமது அன்பினுக்கு நன்றி..

      நீக்கு
  7. ஓ!.. இந்தப் பொண்ணு தான் அந்தச் செம்பவமா!...

    பதிலளிநீக்கு
  8. அருமையான பதிவு.
    அறிவார்ந்த பெண்ணின் சாமர்த்தியம்.
    பண்பான பரிவும் பணிவும். கனிவான வார்த்தைகள்.
    எல்லாம் சேர்ந்து தேர்ந்த சண்பகத்துக்கு
    ஒரு மாப்பிள்ளையும் இங்கே வருவார் என்று நினைத்தேனே.


    இது போலக் கொள்ளிடம் நீர்,
    கத்திரிக்காய், வெண்டைக்காய் போட்டு ஒரு குழம்பும் வைத்து விட்டேன்.

    அருமையான வித்தியாசமான சூழலில்
    வண்டிகளுடனும், மாடுகளுடனும்
    நல்ல பயணம்.
    செண்பகத்துக்கு ஒரே நாளில் பணம் சம்பாதித்துக் கொடுத்துவிட்டார்
    கரை மீதிருக்கும் கணேசர்.

    அறிவுக் கூர்மையோடு அவள் சொன்ன வார்த்தைகளுக்கு
    உடன் வந்தவர்களும் ஒத்துக் கொண்டது
    எத்தனை அருமை.
    கதை முழுவதும் நல் வார்த்தைகளும், நல் முடிவுகளும்
    லயிக்க வைக்கின்றன. நன்றி துரை. வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..
      உற்சாகமான கருத்துரைக்கும் வாழ்த்துரைக்கும் நன்றியம்மா...

      நீக்கு


  9. அடடா, மணியனை மறந்தேனே.
    இது போல எஜமானி அமைந்தால்
    அவனுக்கு ஏது குறை.
    அந்த ஓட்டல் இன்னும் இருக்குமா:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மணியனைப் போலவே எங்கள் வீட்டிலும் ஒருவன் இருந்தானாம் நான் பிறப்பதற்கு முன்.. என் தந்தை சைக்கிளில் செல்லும் போது பக்கவாட்டில் தொடர்ந்து ஓடி வருவானாம்...

      என் தந்தை சொல்லக் கேட்டிருக்கிறேன்...

      நீக்கு
    2. கும்பகோணம் பாலக்கரை மார்க்கெட்டின் பெரும்பகுதி தான் தாராசுரத்துக்கு மாற்றப் பட்டது.. ஆனாலும் காவிரிக் கரையின் அந்தப் பகுதி இன்னும் அப்படியே தான் இருக்கிறது.. இரண்டு பக்கக் கரையிலும் பிள்ளையார் கோயில்கள் இருக்கின்றன..

      நீக்கு
  10. இயல்பான நடையில் சொல்லிப்போகும் விதம் படிகௌக இதம்..பாதுகாப்புடன் நடுவில் முதலில் சென்ற செண்பகத்தின் வண்டி திரும்புகையில் தலைமை தாங்கி வந்ததை இரசித்தேன்....வாழ்த்துகளுடன்...

    பதிலளிநீக்கு
  11. பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  12. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். அனைவர் வாழ்க்கையிலும் இயல்பு நிலை திரும்பி மகிழ்ச்சி பெருக்கெடுத்து ஓடப் பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இயல்பு நிலை திரும்பி மகிழ்ச்சி மலர்ந்திட வேண்டும்... பிரார்த்தனைகள்...

      நலமே வாழ்க...

      நீக்கு
  13. நேற்றிரவு திடீரெனத் தோன்றியது, நாளை தம்பி துரையின் கதையாக இருக்கும் என்று. அதே போல் துரையின் கதை தான். கருவிலியிலிருந்து மாமனார் வண்டிகட்டிக்கொண்டுக் கும்பகோணம் சென்றதெல்லாம் நினைவில் வந்தது. நம்ம ரங்க்ஸ் வண்டி ஓட்டிக் கொண்டு போகும்போது அவர் வளர்த்த செல்லமும் வண்டி கூடவே ஓடினதையும், அங்கே கும்பகோணத்தில் அவங்க அத்தை பெண் கல்யாணத்திற்கும் வண்டியோடவே செல்லம் ஓடி வந்ததையும் கல்யாணச் சத்திரத்தில் அது செய்த விளையாட்டுக்களையும், மாடி மேலிருந்து கீழே பந்தலில் குதித்ததையும் இப்போவும் சொல்லுவாங்க! அவரோட அத்தை பிள்ளையும், அவருமாக இதைப் பற்றிப் பேசிப்பாங்க. இங்கே மணியன் செண்பகத்துடன் ஓடி வருவதைப் பார்த்ததும் அதெல்லாம் மனசில் வந்தன,

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததா!

      நீக்கு
    2. காலம்பர 4 கருத்துச் சொல்லி இருந்தேன். இணையம் விளையாட ஆரம்பிச்சதில் இந்த இரண்டு மட்டும் வந்திருக்கு. மற்றவை என்னனு இப்போ நினைவில் இல்லை. என்றாலும் முக்கியக் கருத்து என்ன சொல்லி இருப்பேன்னு யோசிக்கணும்.

      நீக்கு
    3. நாங்க சென்னையிலிருந்து கும்பகோணம் சென்று குலதெய்வம் கோயிலுக்குப் போகும்போதெல்லாம் அங்கே கிராமத்திலிருந்து கீரை, சின்ன வெங்காயம் வாங்கிப்போம். கீரையை முதல் நாளே வாங்கி வைச்சு மறுநாள் மசிச்சாலும் ருசி அருமையா இருக்கும். அதே போல் கும்பகோணம் பாலக்கரைச் சந்தையிலிருந்தும் காய்கள் (நாட்டுக்காய்களாக) வாங்கிப்போம். இங்கே வந்ததும் திருவையாறு வழி செல்வதால் அங்கே கீரையும் நீளப் புடலையும் நன்றாகக் கிடைக்கும். அதுவும் நாங்க காலை ஆறரை மணிக்கே திருவையாறைத் தாண்டுவதால் காய்கள் மிக நன்றாகக் கிடைக்கும். அதே போல் இளநீரும் மலிவாய் வாங்கிடலாம். தாராசுரம் பெரிய சந்தை இருந்தாலும் அங்கே விட இங்கே வழியில் ஐந்து ரூபாயாவது குறையும். அந்தக் காய்கள், தேங்காய் இவற்றின் ருசியே தனிதான்!

      நீக்கு
    4. கிட்டத்தட்ட இதான் சொன்னேன்னு நினைக்கிறேன். நான் கல்யாணம் ஆகிவந்தப்புறமா நாச்சியார் கோயில் வரைக்கும் மாட்டு வண்டியில் பயணம் செய்திருக்கேன். வைகாசி மாசம் சமயபுரம் மாரியம்மன் அங்கே நாச்சியார் கோயிலுக்கு வருவதாக ஐதிகம். முக்கியச் சாலையிலேயே இருக்கும் அந்தக் கோயில் திருவிழாவுக்குச் சென்றோம். அப்போ ஊரிலிருந்து வண்டி கட்டிக் கொண்டு போனோம். இப்போல்லாம் நினைச்சுக் கூடப் பார்க்க முடியாது என்பதோடு குதிரை வண்டி, மாட்டு வண்டியில் எல்லாம் ஏறவோ ஏறி அதில் உட்கார்ந்து பயணிப்பதோ நரக வேதனையாகி விடும். வடமாநில டோங்காவில் கூட ஏறமுடிவதில்லை. :(

      நீக்கு
    5. அன்பான மலரும் நினைவுகள்... தஞ்சை மாவட்டத்தில் காவிரியின் ஓரத்திலும் மற்ற ஆற்றங்கரைகளிலும் வாழ்வது சொர்க்கத்துக்கு நிகரானது... இன்னும் பல பிறவிகள் இங்கேயே பிறக்க வேண்டும்..

      அன்பின் வருகைக்கும் கருத்துரைகளுக்கும் மகிழ்ச்சி.. நன்றியக்கா..

      நீக்கு
  14. கிராமத்து யாவாரிகளின் ஒருநாள் காலைக்காட்சி அழகாக விரிந்தது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  15. இந்த மாதிரி இயற்கை சூழலுடன் பொருந்திப் போகும் கதை துரையுடையதாகத்தான் இருக்கும் ரசித்தேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா.
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  16. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  17. வணக்கம் சகோதரரே

    சகோதரர் துரை செல்வராஜ் அவர்கள் எழுதிய கதை வழக்கம் போல் மனதில் ஆழப்பதிகிறது. கிராமிய சூழலையும், இயற்கையையும் கண் முன்னால் நடமாட விடுவதில் அவருக்கு இருக்கும் லாவகம் கண்டு மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். கதையில் ஒன்றி விட்டால் கவனத்தை வேறெங்கும் கொண்டு செல்ல முடியாத அவர் எழுத்துக்கு மனமார்ந்த பாராட்டுகள். பாராட்டுகளுக்கு கூட அவரைப் போலவே வாரி வழங்க வார்த்தைகள் எனக்கு தென்படவில்லை.

    கதை அருமையாக இருக்கிறது. படிக்கப் படிக்க மனதுள் நிறைவை தருகிறது. மணியன், செண்பகத்துடன் நானும் வண்டியில் பயணித்த உணர்வு. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி...
      மகிழ்வான கருத்துரையும் பாராட்டும் உற்சாகப்படுத்துகின்றன..

      மீண்டும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  18. பதில்கள்
    1. அன்பின் தனபாலன்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  19. மிக அருமையான கதை.
    முதல் படம் பார்த்தவுடன் வாய் ஜல் ஜல் என சலங்கை ஓலி பாட ஆரம்பித்து விட்டது.
    கதையை படிக்க படிக்க கண் முன்னால் காட்சிகள் விரிந்தன.

    //மதியத்துக்குப் பிறகு ஜனங்கள் ஊரை நோக்கித் திரும்பியபோது
    செண்பகத்தின் காளைகள் முதலாவதாகச் சென்று கொண்டிருந்தன...

    வண்டிக்குக் கீழாக மணியன் நடந்து கொண்டிருந்தான்.. //

    என் மனதும் செண்பகத்தின் பின்னால் போய் கொண்டு இருந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது அன்பான வருகைக்கு மகிழ்ச்சி..
      அழகான படங்களை இணைத்த திரு KGG அவர்களுக்கு நன்றி சொல்லியாக வேண்டும்...

      இனிய கருத்துரைக்கு மகிழ்ச்சி.. நன்றி..
      வாழ்க வையகம்...

      நீக்கு
  20. அருமையான கதைக்கு வாழ்த்துக்கள், பாராட்டுக்கள் சகோ.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வாழ்த்தும் பாராட்டும் மகிழ்ச்சி... நெஞ்சார்ந்த நன்றி...

      நீக்கு
  21. கதைக்கு பொருத்தமாய் படங்கள் இணைத்த ஒளிப்பதிவாளருக்கு வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்.. அழகான படங்களை இணைத்த அன்பினுக்கு வாழ்த்தும் பாராட்டும் சொல்லித் தான் ஆக வேண்டும்...

      நீக்கு
  22. கிராமத்து மணம் வீச நங்கை அவள் வண்டி ஓட்ட இனிதாக நாமும் பயணித்தோம்.அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனது கதையோடு பயணித்து கருத்துரை வழங்கிய தங்களுக்கு நன்றி..மகிழ்ச்சி..

      நீக்கு
  23. ஆஹா! மண் மணக்கும் இன்னொரு கதை! சிறுவயது நினைவுகளை கிளறி விட்டு விட்டது. என்னவொரு பெண் செம்பகம்! அறிவு, திறமை, பக்தி, எளிமை! அடடா! நீங்கள் எழுதியிருப்பது போல் அந்தப் பக்கத்து கத்தரியும், வெண்டையும் அலாதி ருசிதான். 
    எங்களுக்கு உங்கள் கதைகள் மூலம் மனதிற்கு சந்தோஷத்தைத் தரும் உங்களுக்கு மன நிம்மதியை ஆணடவன் அருள  வேண்டுகிறேன்.   

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அறிவு, திறமை,பக்தி, எளிமை!..
      செண்பகத்தை மனமாரப் பாராட்டிய தங்களுக்கு நன்றி...

      கொள்ளிடத்து கத்தரியும் வெண்டையும் தங்களைக் கவர்ந்திருப்பதில் வியப்பில்லை..

      தங்கள் வருகையும் அன்பின் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  24. அனைவருக்கும் வணக்கம்...
    இந்தக் கதைக்கு தங்கள் அனைவரது கருத்துக்களையும் கண்டு கண்கள் கலங்கி விட்டன...

    வைரஸ் காய்ச்சலில் இருந்து மீண்டதும் எழுதிய கதை இது...

    பெண்ணறிவு - நுண்ணறிவு.. என்பது
    ஸ்ரீ வாரியார் ஸ்வாமிகளின் திருவாக்கு..

    அதனை என்னால் இயன்றவரை சொல்ல முயன்றிருக்கிறேன்..

    மலரும் நினைவுகளில் அனைவரும் மூழ்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது...

    நன்றி..நெஞ்சார்ந்த நன்றி..

    பதிலளிநீக்கு
  25. //கத்தரிக்காய் மூட்டை இருவது கிலோ.. பதினஞ்சு ரூவாய்க்கு கேக்கிறது தான் நியாயம்.. ஆனா புரோக்கருங்க அடாவடியா பன்னண்டுக்குக் கேட்கிறாங்க... // இந்த இடைத்தரகர்கள் கொள்ளையடிப்பதை தடுத்து விவசாயிகளுக்கு உதவத்தான் விவசாயிகள் மசோதாவை... ஓ! இங்கே அரசியல் பேசக்கூடாதோ..? 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்க பேசலாம். எங்கள் பதிவுகளில் மட்டும்தான் நாங்கள் தவிர்க்கிறோம்.

      நீக்கு
    2. பா.வெ. ஐந்தாய் இருக்கிற இடைத்தரகர்களை மூன்றாய்க் குறைக்கலாம் என்றால் கூட அது என்னவோ தெரியலே நெல்லை சண்டைக்கு வருவார். இடைத்தரகர்களுக்கூடான அந்த சங்கிலித் தொடர் அறுந்து போய் விடும் அப்புறம் அதை நம்மால் மீண்டும் ஏற்படுத்த முடியாது என்றெல்லாம் நிறைய விஷயங்கள். நமக்குத் தான் புரியலே.

      நீக்கு
    3. சாகுபடியாளர்கள், பொருளை வாங்கும் சனங்க -- இந்த இருபகுதிக்கும் இடையே பாலமாய் இடைத் தரகர்கள். பாலத்தைத் தகர்த்து நேரடியாக சாகுபடியாளர், பொது ஜனங்க என்று நேரடி விற்பனைத் தொடர்பை ஏற்படும் பட்சத்தில் இடைதரகர் மத்தியில் இதற்கு எதிர்வைனையாய் என்ன நிகழும?

      நெல்லை தான் சொல்ல வேண்டும்.

      தம்பி துரை கூட சொல்லலாம். கதையை இன்னும் கொஞ்சம் நீட்டி.

      மூட்டை போய் கூடை வியாபாரம் வரும் பொழுது மூட்டையாய் இருந்தால் என்ன, கூடையாய் இருந்தால் என்ன, வேண்டியது இடைத்தரகு தானே என்று
      இடைதரகர்கள் தம் வழக்கமான தரகு வேலையை கூடை வியாபாரத்திற்கு
      குறுக்கேயாய் தொடரலாம்.

      செண்பகம் இந்த ஏற்பாட்டை எப்படி எதிர்கொள்கிறாள் என்பது தான் தொடரும் கதைக்கு உயிர் மூச்சாக ஆகலாம். வாசித்த வாசகர்களுக்கும் வெறும் வர்ணனைகளாய் போய் விடாத ஒரு வெற்றிப்பெண்ணின் கதையை வாசித்த திருப்தியும் ஏற்படலாம். செண்பகத்தின் செயலை ஒரு அறச்சீற்றமாக உருவாக்கி இன்றைய நடப்புக் கேடுகளுக்கு ஒரு மாற்றுப்பாதை காட்டியிருக்கலாம்.



      கதையாய் அழகாய் நீளும் முன்பகுதியில் கைவைக்க மனம் வராது. அந்த நீட்சியைக் குறைத்துக் கொள்ளக் கூட கதாசிரியர் ஒப்ப மாட்டார். அதனால்
      முன்பகுதி அப்படியே இருக்கட்டும்.

      நீக்கு
    4. அன்பின் ஜீவி அண்ணா அவர்களது வருகைக்கு மகிழ்ச்சி...
      தங்களது கருத்துக்கள் ஏற்புடையவை...

      இருந்தாலும் சிறுகதைக்குள் மிகுந்த பாரம் ஏற்ற விரும்பவில்லை..

      விளைச்சலை வண்டியில் ஏற்றிச் செல்லும் விவசாயி - பேராசைப்படுவதில்லை.. கையைக் கடிக்காமல் முதலுக்கு மேல் கொஞ்சம் ஆதாயம் கிடைத்தால் அதுவே சந்தோஷம்...

      தங்களது கருத்துரைகளுக்கு மகிழ்ச்சி.. நன்றி அண்ணா..

      நீக்கு
  26. என் முதல் கருத்துரை unknown என்று வந்திருக்கிறதே?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்போது நீங்கள் விவரங்களை சரியாகப் பூர்த்தி செய்யவில்லையோ?

      நீக்கு
  27. துரைராஜ் சாருக்கு எல்லாம்நல்லதே எல்லோரும் நல்லவரே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..
      தங்களது மீள் வருகைக்கு மகிழ்ச்சி..
      அன்பின் கருத்துரைக்கு நன்றி...

      நீக்கு
  28. //கத்தரிக்காய் மூட்டை இருவது கிலோ.. //

    இருவது ரூபா என்று இருக்க வேண்டுமோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // இருவது கிலோ மூட்டைக்கு விலை பதினைஞ்சு ரூபா...//

      தரகர்கள் பன்னண்டு ரூவாய்க்கு கேக்குறாங்க...

      கூடையில அள்ளிப் போட்டா ஒரு கூடைக்கு
      ஆறு கிலோ/ அஞ்சு ரூவா வேலை... அப்போ மூவாறு பதினெட்டு கிலோவுக்கு பதினைஞ்சு ரூவாயும் கை வசம் ரெண்டு கிலோவும் கிடைக்குது... இந்த ரெண்டு கிலோவை போற போக்குல நேரிடையா தெருவுல வித்தா நாலு ரூவா கை மேல... அப்போ இருவது கிலோவுக்கும் நிகர வருமானம் பத்தொன்பது ரூபா..

      இதுக்கும் மேல கத்தரிக்காய வெட்டி வத்தலாப் போட்டு மதிப்புக் கூட்டி மெட்ராசுக்கு அனுப்புனா அதோட ரேட்டு வேற!...

      இதத் தான் அந்த செம்பவம் சொல்லியிருக்கா!...

      நீக்கு
  29. //வண்டிக்குக் கீழாக மணியன் நடந்து கொண்டிருந்தான்.. //

    வண்டிக்குக் கீழாக மணியன் நடந்து வந்து கொண்டிருந்தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வார்த்தைகள் இயல்பாக வந்து விட்டன.. அண்ணா.. திருத்தத்துக்கு நன்றி...

      நீக்கு
  30. ஆஹா.... சற்றே இடைவெளிக்குப் பிறகு துரை செல்வாராஜூ ஐயாவின் கதை பகிர்வு. மிகவும் இரசித்தேன்.

    மாட்டு வண்டிகளின் ஜல் ஜல் ஒலி போலவே கதையும் ரசிக்கத் தக்கதாய்.

    அவரது பிரச்சனைகள் விரைவில் சரியாகட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்...
      கொரோனா காலத்தில் காய்ச்சலால் சற்று தடைப்பட்டது... எனவே தான் சற்று இடைவெளி..

      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  31. அன்பின் நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்..

    கும்பகோணம் பாலக்கரை காய்கறி மார்க்கெட்.. காவிரி நதியின் வடக்குக் கரையை வைத்து எழுதப்பட்ட கதையை மனதார வரவேற்றமைக்கு மகிழ்ச்சி..

    கதை என்றாலும் இதில் சொல்லப்பட்டிருக்கும் உணவகம், மளிகைக் கடைகள், கந்தசாமி ஐயா கடலைக் கடை எல்லாம் உண்மை யானவை..

    கடலைக் கடை கந்தசாமி ஐயா அவர்கள் எனது சித்தப்பா.. என் மீது மிகுந்த அன்பு வைத்திருந்தவர்.. அவர் காலமாகி பன்னிரண்டு ஆண்டுகள் ஆகி விட்டன...

    இவ்வேளையில் அன்புடன் அவர்களை நினைவு கூர்கின்றேன்..

    தளத்திற்கு வருகை தந்து கருத்துரைத்த அனைவருக்கும் நன்றி.. மகிழ்ச்சி...

    பதிலளிநீக்கு
  32. கும்பகோணம் மணத்தோடு குதிக்கும் குஷியான கதை.

    அந்தக் காலத்திலேயே ஆட்டம்போட்டிருக்கானுங்க இப்பிடியெல்லாம் இந்தத் தரகனுங்க. இப்போ கையில மொபைல வச்சிகிட்டு டிஜிட்டல் ஆட்டம் காமிக்கிறானுங்க.. இதயெல்லாம் ஒருவழியா ஒழிச்சு, உழைக்கிறவனுக்கு வருமானத்தக் கூட்டலாம், நியாயம் செய்யலாம்னு அரசாங்கம் நெனச்சு சட்டம் கொண்டுவந்தா.. அதுலயும் குத்தம், இதுலயும் குத்தம்னு ஓலமிடும் நரிக்கூட்டம் .. !

    சரி, அரசியல் நெடி ஜாஸ்தியாயிருச்சும்பாங்க! வேண்டாம்.
    காஃபி மணத்தோடு காலையில் எஞ்ஜாய் செய்த கலகலப்பான கிராமக் கதை..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஏகாந்தன்...

      தங்களது வருகைக்கு மகிழ்ச்சி... இப்படியான சந்தைகளில் அடாவடியாக விலை நிர்ணயம் செய்யும் சம்பவங்களை நேரில் கண்டிருக்கிறேன்... தங்களது கருத்துக்கள் நியாயமானவை...

      மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!