செவ்வாய், 8 செப்டம்பர், 2020

கேட்டு வாங்கிப் போடும் கதை : சாபம் 3/3 -------- ஜீவி


                                              பகுதி--3

                                                       

                                                                                 ஜீவி

முந்தைய பகுதிகள் (சுட்டி) :


புவியியல் பேராசிரியர் துரைசாமி மேடையேறியதும் அவரை வரவேற்று 
தனது அரிய கண்டுபிடிப்பான அந்தக் காலக் கணினி முன் நிறுத்தினான் 
பாபு.. துரைசாமியின் பிறந்த தேதியும் அன்றைய தேதியும் நேரமும் 
காலக்கணினியில் பதியப் பட்டன.

"துரைசாமி சார்! உங்களது எந்த ஜென்மத்து நிகழ்ச்சியை பார்க்க ஆவலாக
 இருக்கிறீர்கள்?" என்று அவரிடம் கேட்டான் பாபு..

"போன ஜென்மத்து என் சம்பந்தப்பட்ட நிகழ்வு ஏதாவது பார்த்தால் போதும். 
 அதுவே எனக்குப் பேரானந்தமாக இருக்கும்" என்றார் துரைசாமி.

"ஓ.கே. கொஞ்சம் வலது புறமாக நகர்ந்து கணினிக்கு நெருங்கி வந்து 
திரையில் உங்கள் முகம் தெரிகிற மாதிரி அமர்ந்து கொள்ளுங்கள். 
 உங்களது இந்த ஜென்மத்து முக விலாசத்தை அந்தக் கணினி புரிந்து 
கொள்ளட்டும்" என்றான் பாபு.

துரைசாமியும் அப்படியே செய்தார். அவர் முகம் கணினித் திரையில் 
நன்றாகப் பதிந்ததும் விர்..ரென்று விர்ரிட்டது கணினி.

பாபு காலக்கணினியின் வயிற்றுப் பகுதியில் ஒன்று என்று இலக்கமிட்டிருந்த 
குமிழைத் திருப்பியதும், இரண்டே வினாடிகளில் 'பளிச்' என்று துரைசாமி 
ஸாரின் போன ஜென்மத்து அந்தக் காட்சி திரையில் படர்ந்து விரிந்தது.

சட்டென்று பாபு கணினியில் மொழியைப் பதித்து ஸ்பீக் பட்டனை 
அழுத்தினான்.
இப்பொழுது பேண்ட்டும் ஸ்லாக்குமாக இருக்கும் துரைசாமி, 
திரையில் பஞ்ச கச்ச வேஷ்டியும் அங்கவஸ்திரமுமாய் இருந்தார். அவர் 
கையில் ஒரு கவளம் சாத உருண்டை. அதை ஒரு உயர்ந்த மேடையின் 
மேல் வைத்து விட்டு, "கா..கா..." என்று கத்துகிறார். உடனே 
காக்கையொன்று பறந்து வந்து அந்த சாத உருண்டையை கொத்துகிறது. 
அதே நேரத்தில் பின்புலக்காட்சியாக, ஒரு பசு. அந்தப் பசுவுக்கு எதிரே 
ஒரு கை நீண்டு வைக்கோல் கட்டு ஒன்றைப் போடுகிறது.

"ஓ..ஓ.." என்ற ஆரவாரத்திற்கிடையே , பாபு விளக்கப் பொத்தானை அழுத்தி, 
பிளாஸ்டிக் அட்டையைப் பெற்று, அதில் பொறித்திருந்த விஷயத்தைப் 
 படித்து விட்டு விளக்கினான். மொத்தக் கூட்டமும் பாபு சொல்வதைக் 
கூர்மையாகக் கேட்டுக் கொண்டிருந்தது.

"ஒன்றுமில்லை..இது துரைசாமி சாரின் சென்ற தலைமுறைக் காட்சி. 
 அதாவது துரைசாமி சாரின் போன ஜென்மத்தில் இதே மாதம், தேதி, 
நேரத்தில் நடந்த காட்சி. அன்றைய தினம், துரைசாமி சார் யாருக்கோ 
சிராத்தம் செய்திருக்கிறார். சிராத்தம்-- --யூ நோ?.. ஒரு குடும்பத்தில் 
 இறந்தவர்களுக்காக அவர் வழிவந்தவர்கள், சிரத்தையுடன் செய்யும் திதி 
அது என்று பழைய புராண குறிப்புகள் கூறுகின்றன.. அந்த ஜென்மத்து 
 துரைசாமி சார், பிண்டம் வைத்து காக்கைகளைக் கூப்பிட, அவை 
வந்து சாப்பிடுகின்றன. அதெல்லாம் போகட்டும். அந்தப் பின்புலக் 
காட்சியைப் பார்த்தீர்களா?.. அதுதான் இதில் விசேஷம்!..அதே நேரத்தில் 
இவன் உருட்டி வைத்த சாதப்பிண்டம், வைக்கோல் கட்டாக மாறி, யார் 
மூலமாகவோ, அந்த ஜென்மத்தில் பசுவாக உயிர் தரித்திருக்கும்-- 
துரைசாமி சார் யாருக்காக சிராத்தம் செய்கிறாரோ அவருக்குப்-- போய்ச் 
சேருகிறது. அதாவது துரைசாமி சார் யாருக்காக சிராத்தம் செய்கிறாரோ 
அவர் இந்த ஜென்மத்தில் ஒரு பசுவாக உயிர் தரித்திருக்கிறார் என்று 
கொள்ளலாம். இது உண்மையிலேயே உடலைச் சிலிர்க்கவைக்கும் ஒரு காட்சி"
என்று பாபு முடிக்கிறான்.

"உடலையும் எரித்தாயிற்று; உயிரும் பிரபஞ்ச வெளியோடு கலந்தாச்சு. 
அப்படியிருக்க இறந்து போனவர்வர்கள் எப்படி இவர் அளிக்கும் உணவை
 ஏற்றுக் கொள்வார்கள்? என்ற கேள்விக்கு பதிலாக அந்தப் பின்புலக் 
காட்சி அர்த்தம் நிறைந்ததாகத் தெரிகிறது.." என்றார் வானவியல் பேராசிரியர் 
உலகநாதன்.

"இன்னொன்றும் தெரிகிறது.." என்றார் சாமிநாத சர்மா. "பிறப்புகளில் 
உயர்ந்த மனிதப்பிறப்பு கிடைத்து விட்டது என்று இறுமாந்து இருக்க 
வேண்டாம். அந்தந்த பிறப்புகளில் செய்யும் நன்மை--தீமைகளுக்கு 
ஏற்ப அடுத்த பிறவி கிட்டுவதாகவும் கொள்ளலாம்" என்றார் சர்மா.


ஜெகப்பிரியனுக்கு ஏக ஆச்சரியம். எழுந்திருந்தவர், "இந்த அதிசய 
காலக்கணினியின் செயல்பாடுகளைப் பார்த்து விட்டு அது பற்றி ஏதாவது 
சொல்லாமலிருந்தால் பாவம்.." என்று ஆரம்பித்தார். "இறப்பிற்குப் பிறகு 
ஏதுமில்லை. ஆட்டம் க்ளோஸ் என்று இதுகாறும் நம்பியிருந்தேன். 
 அந்த நம்பிக்கை பொடிப்பொடியாக சிதறுண்டதை இப்போது என் 
கண் முன்னாலேயே கண்டேன். இத்தனாவது ஜென்மம் என்றால் 
அதற்கேற்ப ஒரு காட்சியை ப்ரோகிராம் பண்ணியிருப்பீர்களோ என்ற 
சந்தேகமும் ஆரம்பத்தில் இருந்தது. மாற்றி மாற்றி வரும் காட்சிகளின் 
நேர்த்தியும் அந்த காட்சிகளுக்கு ஏற்ப விவரக் குறிப்புகள், காட்சிகளின் 
நேரடி ஒலி விளக்கம் எல்லாம் அற்புதம். இந்தத் தலைமுறையின் மிகச் 
சிறந்த கண்டுபிடிப்பு இதுவாகத் தான் இருக்கும். இளைஞன் 
பாபுவுக்கு என் அன்பார்ந்த ஆசிகள். கண்டுபிடிப்புகளுக்கான 
பிரபஞ்சத்தின் மிகச் சிறந்த பரிசுகளைப் பெற என் வாழ்த்துக்கள்.." 
என்று சொல்லி அமர்ந்தார்.

கூட்டத்தின் வலது பக்க ஓரத்தில் லேசான சலசலப்பு. அநத இடத்தில் 
அமர்ந்திருந்த சுரேஷ் எழுந்ததும் அவன் தோற்றமே எல்லோரையும் 
கவர்வதாக இருந்தது. . இவனுக்குக் கூட இந்த தொடர் ஜென்மங்களில் 
ஈடுபாடு இருக்குமா என்று ஐயம் எற்படுகிற மாதிரியான இளமை 
ஊஞ்சலாடும் வசீகரிப்பு..

அவனைப் பார்த்து"ஓ..ஓ.." என்று கூட்டமே கரகோஷிக்க, அடுத்ததாக சுரேஷ் 
மேடையேறினான்.

"எங்கள் பெரும் மதிப்பிற்கும் பேரன்புக்கும் உரிய இளம் விஞ்ஞானி பாபு 
 அவர்களே! உங்களது அரிய இந்த கண்டுபிடிப்பைக் கண்டு 
அடக்கமுடியாத சந்தோஷத்தில் நாங்கள் திளைத்துக் கொண்டிருக்கும் 
இந்த நேரத்தில் எனக்கும்.."என்று மேடைப்பேச்சு பாணியில் 
ஆரம்பித்தவன், மெல்ல தனக்கு முன்னால் உட்கார்ந்திருக்கும் 
விஞ்ஞானிகளின் கும்பலில் இரண்டாவது வரிசையை நோட்டமிட்டான். 
அவன் விழிகள் மொய்த்த இடத்தில் உட்கார்ந்திருந்த ரேவதிக்கு 
முகமெல்லாம் சிவந்தது.

எத்தனை தலைமுறைகள் தாண்டிப் போனால் தானென்ன?.. பெண்கள் 
நாணப்பட்டால், முகம் தான் சிவக்கும் போலிருக்கிறது.

"ஹியர்..ஹியர்.."என்று கூவினான் பாபு. ."மிஸ்டர், ஷூரேஷ்! ரேவதியின் 
அனுமதியா?. இஃப் யூ டோண்ட் மைண்ட், கேன் ஐ டேக் தி 
பிரிவிலேஜஸ்?.. ரேவதி அனுமதிக்க மறுக்கமாட்டார்களென்று 
நினைக்கிறேன்." என்றவன் அட்டகாசமாக சிரித்தான்.

அந்த மொத்த கூட்டமே 'கொல்'லென்று சிரித்தது. இளம் விஞ்ஞானி 
சுரேஷ் மேடையில் நாணத்துடன் நெளிந்தான்.

"தென் வாட்?.. ரேவதி, உங்கள் காதலர் சுரேஷ் தனது முந்தைய 
ஜென்மத்தைப் பற்றித் தெரிந்து கொள்வதில் உங்களுக்கு ஆட்சேபணை 
உண்டா?" என்றான், குறுப்புக்கார பாபு.

ரேவதியும் அடக்கமுடியாமல் சிரித்து விட்டாள். "பை ஆல் மீன்ஸ்."

"ஓ.கே. அனுமதி கிடைத்துவிட்டது, சுரேஷ்!" என்று சுரேஷைப் பார்த்து பாபு 
முறுவலித்தான். "எந்தத் தலைமுறை சுரேஷ்?"

ஒரு நிமிடம் தான் சுரேஷின் தயக்கம். டக்கென்று "இருபது ஜென்மங்களுக்கு 
முன்னால் நான் எப்படி இருந்தேன் என்பதைத் தெரிந்து கொள்ளலாமா, 
புரொபஸர் சார்?" என்றான்.

"ஓ.." என்று உதடைக் குவித்த பாபு, அன்றைய தேதி, சுரேஷின் பெயர், பிறந்த 
தேதி, ஆகியவற்றை கம்ப்யூட்டரில் பதிந்து, காலக்கணினியின் 
வயிற்றுப் பகுதியிலிருந்த 20- என்று எண்ணிட்டிருந்த குமிழைத் திருப்பியதும் 
திரையில்...


அந்த காலத்து இராஜசபை.

புலவர்களும், தளபதியும் வீரர்களும் புடைசூழ மகுடம் தரித்து அரியாசனத்தில்
மன்னன். அவன் தலைக்கு நேரே சிவப்பு அம்புக்குறி.

அழகே உருவான அபலைப் பெண் ஒருத்தி கண்களில் நீர் வழிய, 
மன்னனிடம் எதையோ யாசித்துக் கொண்டிருக்கிறாள். மன்னனின் முகத்தில் 
அதை மறுக்கும் தீவிரம்.

பாபு காலக்கணினியில் மொழியைப் பதிந்து, ஸ்பீக் பட்டனை அழுத்தியதும், 
குரல்! பெண்ணின் குரல்!

அந்தப் பெண்ணின் குரலில் அதிகப்பட்சப் பரிதாபம் கலவையிட்டிருந்தது.

"அன்பரே! எப்படி என்னை உங்களால் மறக்க முடிந்தது?.. இந்த 
சகுந்தலையை மறப்பது எப்படி உங்களுக்கு சாத்தியமாயிற்று?.. என் 
கைவிரல் தீண்டி கணையாழி போட்டது உங்களுக்கு நினைவில்லையா? 
அழகான சோலையில் பர்ணசாலை பக்கத்தில் நாம் கூடிக் களித்திருந்தது 
நினைவில்லையா, அன்பே?"

"இல்லை..இல்லை.." என்று அவசரமாக மறுத்தான் மன்னன். "நீ யாரோ?.. 
நீ யாரென்பதே எனக்குத் தெரியாது!உன் தகுதி உணராமல் அரசனுடன் 
உறவாடி இராஜத்துரோகம் புரியாதே.. போய்விடு, இங்கிருந்து.."

"மன்னா.. நீங்களில்லாமல் இந்த உயிர் உடலில் எப்படித் தங்கும்? நான் 
சொல்வது சத்தியம், மன்னா.. நான் சொல்வது சத்தி..."

"பசப்பாதே, பெண்ணே!.. போய்விடு, இங்கிருந்து.. துஷ்யந்தன் பெயரைக் 
களங்கப்படுத்த, மன்னனென்றும் பாராமல் பழிசுமத்த இங்கு 
வந்திருக்கிறாயா?.. தளபதி.. இவளை இழுத்து.."
தளபதி உக்கிரப்பார்வையுடன் அவளை நெருங்கி, அவள் கைப்பற்றியதும் 
சடாரென்று தலைதூக்கி ஆவேசமே அவளாகிறாள். "என்னை 
நெருங்காதே.... மன்னா! நினைவுபடுத்திப் பாருங்கள்,.. என்னை நினைவு 
இல்லையா?..ஐயோ! நிஜமாக என்னை நினைவில்லையா, மன்னா! அதை 
எப்படி மறக்கமுடியும், உங்களால்? பொய்யுரைக்காதீர்கள். 
பொய்யுரைக்கும் உங்களுக்கு இனி எந்தப் பிறவியிலும், ஆமாம், எந்தப் 
பிறவியிலும்.. ஒரு பெண்ணின் காதல் கைகூடாமலே போகட்டும்.. 
போகட்டும்.." என்று தலை குனிந்து குலுங்கிக் குலுங்கி அழுகிறாள் சகுந்தலை.

இதைப் பார்த்து ரேவதி பதட்டத்துடன் தன் இருக்கையில் நிலைகொள்ளாமல் 
நெளிந்தாள்.

சுரேஷ் முகத்தில் விவரிக்க இயலாத குழப்பம். அந்த விஞ்ஞானிகளின் 
கூட்டமே திக்பிரமை அடைந்த மாதிரி உட்கார்ந்திருந்தது. கொஞ்ச 
நேரத்திற்கு முன்னாடியிருந்த சிரிப்பும், கும்மாளமும் இருந்த இடம் தெரியமல் 
ஓடி ஒளிந்திருந்தது.

கணினியை 'ஆஃப்' செய்வதற்கு முன், அவசர அவசரமாக 'விளக்க' பட்டனை 
தட்டினான் பாபு.. விளக்க அட்டை வந்து விழுந்தது. அங்கிருந்த யாருக்கும் 
பொறுமையில்லாமல், என்னவென்று தெரிந்து கொள்ளும் ஆவலில் எழுந்தே 
விட்டார்கள்.

'விளக்க' அட்டையை ஒரே வினாடியில் மேய்ந்து விட்டு எல்லோருக்கும் 
கேட்கிற மாதிரி பாபு உரத்த குரலில் சொன்னான்: "அவன் பெயர் துஷ்யந்தன். 
இந்தியாவில் நாடாண்ட மன்னன். காட்டில் வேட்டையாடிக் 
கொண்டிருந்த பொழுது கன்வ மகரிஷியின் பாதுகாப்பிலிருந்த 
சகுந்தலையைச் சந்திக்கிறான்.. அவள் மேல் மோகம் கொண்டு 
காந்தர்வ மணம். மோகத்திற்கு அத்தாட்சி, அவன் அவளுக்கிட்ட மோதிரம்...

"துஷ்யந்தன் சகுந்தலையைப் பிறகு முறைப்படி அழைத்துக் கொள்வதாகச் 
சொல்லி நாடு திரும்புகிறான். ஒரு முனிவர் இட்ட சாபத்தால், சகுந்தலையை 
மறக்கிறான். துர்திர்ஷ்டவசமாக குளிக்கும் பொழுது கடலில் சகுந்தலை 
அவனிட்ட மோதிரத்தைத் தொலைத்து விடுகிறாள்...

"காட்டில் காந்தர்வமணம் புரிந்து கொண்டவனை நாட்டில், அரசவையில் 
சந்திக்கிறாள். 
தன் பரிதாப நிலையைச் சொல்லி முறையிடுகிறாள். முனிவர் சாபத்தால் 
எல்லாவற்றையும் மறந்த துஷ்யந்தன், 'பசப்பாதே..நீ யாரோ, நான் 
யாரோ' என்கிறான். இதுதான் நாம் பார்த்தது" என்கிறான் பாபு...

"ஓ.. வாட் எ பிட்டி!" என்று கூட்டமே புலம்ப, சுரேஷ், பாபுவிடம் சென்று, 
பரிதாபமாக "பிறகு துஷ்யந்தனான நான் என்ன செய்தேன்? அந்த 
சகுந்தலையை மணந்தேனா?.. அந்த அபலையைக் காப்பாற்றினேனா?.. 
என்ன செய்தேன்?..சொல்லுங்கள்" என்று துடித்தான்.

"அதற்கு மறுபடியும் கம்ப்யூட்டரை இயக்கினால் தான் தெரியும்" என்ற பாபு 
மறுபடியும் சுரேஷை கம்ப்யூட்டரின் முன்னால் நிறுத்தி, அவன் பெயரைப் 
பதிவு செய்து, '20' என்று எண்ணிட்ட குமிழைத் திருப்பி.....

அதற்குப் பிறகு நடந்தவற்றைத் தெரிந்து கொள்ளும் ஆவலில் விஞ்ஞானிகள், 
பேராசிரியர்கள் கூட்டம் உட்கார----

ரேவதி மட்டும்.......

ஓ, ரேவதி?....

அவள் அந்த இடத்தை விட்டு எப்பொழுதோ போய்விட்டாள்.

முந்தையப் பிறவியில் கொண்ட காதலை பகிஷ்கரித்த ஒருவனிடம், 
இந்தப் பிறவியில், இப்பொழுது தன் வாழ்க்கையை ஒப்படைப்பதா என்கிற 
தயக்கமா?...

அப்படித்தான் இருக்க வேண்டும். இல்லை, சாபமோ?..

ஆமாம், சாபம் தான். அதுவும் ஒரு பெண்ணின் சாபம். சகுந்தலையின் சாபம்!

(நிறைவுற்றது)

71 கருத்துகள்:

 1. தாளாற்றி தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு வேளாண்மை செய்தற் பொருட்டு..

  நலம் வாழ்க..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தாளாற்றித் தந்த பொருளெல்லாந் தக்கார்க்கு
   வேளாண்மை செய்தற் பொருட்டு
   (அதிகாரம்:ஒப்புரவறிதல் குறள் எண்:212 )

   பொழிப்பு (மு வரதராசன்): ஒப்புரவாளன் தன்னால் இயன்ற முயற்சி செய்து சேர்த்த பொருள் எல்லாம் தக்கவர்க்கு உதவி செய்வதற்கே ஆகும்.

   நீக்கு
 2. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

  எல்லோரும் நலமாக இருக்க இறைவன் அருள வேண்டும்.

  பதிலளிநீக்கு
 3. நல்ல கற்பனை. ஜீவி சார் ,கதை நடையை
  விமர்சனம் செய்ய எனக்கு எழுத்து அனுபவம்
  போதாது.
  பெண்ணின் சாபம் பலிக்கும் தான்.
  ஆனால் சகுந்தலா தான் துஷ்யந்தனுடன் இணைந்து விடுவாளே.
  செம்படவன் கொண்டு வந்த கொடுத்த மோதிரத்தைப்
  பார்த்ததும் துஷ்யந்தனுக்கு சகுந்தலா நினைவு வர
  அவளைத் தேடிப்போய் மகன் பரதனுடனும்
  மனைவியுடனும் இணைகிறானே.

  பாவம் கதா நாயகி அவசரப் பட்டு விட்டாள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //ஆனால் சகுந்தலா தான் துஷ்யந்தனுடன் இணைந்து விடுவாளே.. //

   எப்பொழுது இணையப் போகிறார்கள்?.. ஒரு கால இடைவெளிக்குப் பின்னால் தானே?.. அதற்குள் அவசரப்பட்டால்?..
   அதற்கு மேற்கொண்டு நடந்தவைகளைப் பார்க்கத் தானே அந்தக் காலக்கணினியை மீண்டும் உயிர்ப்பித்திருக்கிறார்கள்?..
   கதைகளுக்கு என்றுமே முடிவு என்ற ஒன்று இல்லை. தொடரத் தொடரத் தொடர்ந்து கொண்டே இருக்கும் கற்பனை ஊற்றின் சுகக்குளியல் அது!..
   இதற்கு பின் இந்தக் கதையைத் தொடர்ந்தால் அவர்களை இணைத்தும் வைத்து விடலாம். அதில் என்ன சங்கடம் இருக்கிறது. சொல்லுங்கள், வல்லிம்மா.

   நீக்கு
  2. அந்தப் பொண்ணு ,கொஞ்சம் காதலுடன்
   முடிவுக்குக் காத்திருந்தால் மற்றதும் தெரிந்திருக்குமே என்று சொன்னேன் சார்.

   நீக்கு
  3. கதைக்கான வீரியத்தைக் குறைத்து விடும். பட்டு நூல் கத்தரித்தாற் போல சரியான இடத்தில் நிறுத்துவது தான் பத்திரிகைகளில் எழுதும் கதைகளுக்கு பொருத்தமாகவும் இருக்கவும் என்பது அனுபவ புரிதல், வல்லிம்மா.

   நீக்கு
 4. சுரேஷ் பாவம் தான்.
  ஆனால் இப்படி அவசரப்படுகிற காதலியை
  மணந்தால் எதிர்காலமே பாதிக்கப் படும். அந்த முறையில் அவன் தப்பித்தான்.
  நல்ல கதைக்கு வந்தனங்கள் ஜீவி சார்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அவசரப்படுகிற காதலியா?.. எந்த நென்மத்திலோ நடந்த ஒன்றின் தொடர்ச்சியாகச் சிந்திக்கிற எவ்வளவு நுண்ணிய உணர்வு படைத்த பெண்மணி அவள்?..
   நடப்பதெல்லாம் வினைப்பயன் என்ற இந்திய தத்துவ ஞானத்தில் ஆழ்ந்த நம்பிக்கை இருந்தால், 'எது நடக்க இருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும்'
   என்ற கீதோபதேசம் நமக்கு நம்பிக்கையூட்டும், இல்லையா, வல்லிம்மா?..

   நீக்கு
  2. //எந்த நென்மத்திலோ நடந்த ஒன்றின் தொடர்ச்சியாகச் சிந்திக்கிற எவ்வளவு நுண்ணிய உணர்வு படைத்த பெண்மணி அவள்?..// அப்படி எனக்கு கதை படித்த போது தோன்றவில்லை. அதுவரை அவனிடம் வைத்திருந்த காதல், தவறான judgement என்று சொல்லும்போது, கணிணியை நம்பின அவள், அவனை நம்பவில்லை என்று தெரியும்போது, 'நுண்ணிய உணர்வு' என்று எனக்குத் தெரியவில்லை. நல்லவேளை அவன் தப்பித்துவிட்டான் என்றே தோன்றியது.

   நீக்கு
  3. //முந்தையப் பிறவியில் கொண்ட காதலை பகிஷ்கரித்த ஒருவனிடம்,
   இந்தப் பிறவியில், இப்பொழுது தன் வாழ்க்கையை ஒப்படைப்பதா என்கிற
   தயக்கமா?.//

   ஒரு படைப்பைப் படைத்து அந்த படைப்பு வழி யோசிக்கவும், கதையை வாசிக்க வழிநடத்தவும் கதாசிரியர் முயற்சிக்கிறார்கள். அதற்காக மேற்கண்ட வரிகள் கதையில் வருகின்றன.

   //இல்லை, சாபமோ?//

   என்று இன்னொரு யோசனையும் அடுத்த வரியாக வைத்து வாசகரை இன்னொரு தளத்திற்கு அழைத்துப் போகவும் கதாசிரியர் முயற்சிக்கிறார்.

   இவ்வளவுக்கும் இடையே வாசிகர் வாசித்து புரிந்து கொண்டது என்று ஒன்று இருக்கிறது. அது அவரது அனுபவங்களால் அமைவது. அதைத் தான் அவன் தப்பித்து விட்டான் என்று தோன்றியதாக நீங்கள் குறிப்பிட்டிருக்கிறீர்கள், நெல்லை.

   நீக்கு
 5. அனைவருக்கும் வணக்கம். நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம். நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். நன்றி.

   நீக்கு
 6. இந்த கண்டுபிடிப்பு நிகழ்கால சுரேஷ்-ரேவதி காதலை பிரித்து விட்டதே...

  நானும் பாபுவை சந்திக்க வேண்டும் என்று நினைத்திருந்த எண்ணத்தை கை விடுகிறேன்.

  சுவாரஸ்யமாக இருந்தது...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சுவாரஸ்;யமாக இருந்ததைச் சொன்னதற்கு நன்றி, தேவகோட்டையாரே!

   //இந்த கண்டுபிடிப்பு நிகழ்கால சுரேஷ்-ரேவதி காதலை பிரித்து விட்டதே...//

   இந்தக் கண்டுபிடிப்பு தான் அவர்களைச் சேர்த்தும் வைக்கப் போகிறது என்று வைத்துக் கொள்வோமே!

   அதற்காக இன்னொரு கதை எழுதினால் போச்சு. சரி தானே?..

   நீக்கு
 7. விறுவிறுப்பாகப் போய்க் கொண்டிருந்த கதை முடிவில் சொதப்பி விட்டது. சகுந்தலை அப்படி எல்லாம் சாபம் கொடுத்ததாகத் தெரியவில்லை. குழந்தை பிறந்ததும் அந்தப் பிள்ளை மூலம் துஷ்யந்தனின் மனதில் கொஞ்சம் கொஞ்சம் பழைய நினைவுகள் எட்டிப்பார்த்தாலும் பின்னால் செம்படவன் கொடுக்கும் மோதிரத்தின் மூலம் முழுதும் நினைவுக்கு வந்துவிடுமே! சகுந்தலை துஷ்யந்தனோடு இணைந்து விடுவாளே! இதில் நான் ரேவதியைக் "கன்னாபின்னா" வென ஆதரிக்கிறேன். இதில் சாபம் எங்கிருந்து வந்தது? புரியலை! கதை போன போக்கில் போகாமல் ஜீவி சார் தானாக ஒரு முடிவை யோசித்துக் கொடுத்திருப்பாரோ? சில கதைகள் தாமே எழுதிக்கொள்ளும். நாம் நினைத்தாலும் மாற்ற முடியாது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //சகுந்தலை அப்படி எல்லாம் சாபம் கொடுத்ததாகத் தெரியவில்லை.. //

   நடந்ததாகச் சொல்லப்படுகிற உண்மைக் கதையை எழுதினால், இது எப்படி
   என் கதையாகும், கீதாம்மா?.. அதை அப்படியே டிட்டோ பண்ணுவதற்கு நான் தேவையே இல்லை தானே?..

   கொஞ்சமே யோசித்தாலும் இதை நீங்களும் ஒப்புக் கொள்வீர்களே!
   இதிகாச புராணக்கதைகளில் ஏதாவது ஒரு பகுதியை எடுத்துக் கொண்டு நம் போக்கில் நம் கற்பனையில் புகுந்து விளையாடுவது தானே கதையாக்கலின் தாத்பரியம்?
   கதையின் அவுட் லைன் மாறாமலிக்க வேண்டும், அவ்வளவு தானே?..
   ஒட்டு மொத்த பின்னூட்டத்தில் எல்லா சந்தேகங்களையும் கவரப் பண்ணி எழுதுகிறென். சரியா?..
   பெண்கள் சமூகத்தின் மீது காலாதிகாலம் இருந்து வரும் அடக்கு முறைகளே இந்தக் கதையை இப்படி என்னை எழுத வைத்தது. வழி நடத்தவும் செய்தது.


   நீக்கு
  2. //இதில் சாபம் எங்கிருந்து வந்தது? புரியலை! //

   ஒரு முனிவர் இட்ட சாபத்தால் சகுந்தலையை துஷ்யந்தன் மறந்து போகும் படி ஆயிற்று இல்லையா?..

   அந்த வழியில் வந்தது தான் இந்த சாபமும்!

   முனிவர் இட்ட சாபம் தாண்டி கொஞ்ச காலம் கழித்து துஷ்யந்தன் சகுந்தலையை மணக்கிறான் இல்லையா?

   முனிவர் சாபத்தின் வழி வந்தது தான் இந்தக் கதையின் சகுந்தலையின் சாபமும். அந்த சாபத்திற்கு நேர்ந்தது தான் இந்த சாபத்திற்கும் நேர்கிறது.
   இறுதியில் சுரேஷ், ரேவதியை மணக்கிறான் என்று கதையை முடிக்கலாம்.

   ஆனால் அப்படி முடித்தால் வாசகருக்கு 'சப்'பென்று போய் விடும். அதற்காக
   அப்ரப்ட்டாக கதை ஒரு கொக்கியுடன் முடிவு பெறுகிறது.

   நீக்கு
  3. //சில கதைகள் தாமே எழுதிக்கொள்ளும். நாம் நினைத்தாலும் மாற்ற முடியாது.//

   உண்மை தான். ஒப்புக்கொள்கிறேன். உணர்ந்திருக்கிறேன்.,

   நீக்கு
 8. காலை வணக்கம் சகோதரரே

  அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 9. தெரிந்துகொள்ளத் தேவையில்லாததை தெரிந்துகொள்ளாமல் இருப்பதே நல்லது. இதுதான் கதையின் ஒன்லைன் என எனக்குத் தோன்றுகிறது.

  கதையின் நடை ரசிக்கத்தக்கதாக இருந்தது. கதாசிரியருக்குப் பாராட்டுகள்.

  மர்மக்கதைகள் பொதுவாக க்ளைமேக்ஸ் சரியாக இருக்காது, அதிலும் பேய்க்கதைகள், அதீத புனைவுக் கதைகளில் க்ளைமாக்ஸ் சொதப்பும். அதற்கு இந்தக் கதையும் விலக்கல்ல

  கதை நடக்கும் காலம், சம்பவங்களில் பிழைகள் மலிந்திருக்கின்றன.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இது மர்மக்கதையும் அல்ல; பேய்க்கதையும் இல்லை.
   நம் தேசத்தின் இதிகாச நிகழ்வுகளில் கொண்டிருந்த ஆழ்ந்த பற்று கதையாகப் பரிமளித்திருக்கிறது.
   மஹாபாரதத்தில் எத்தனை எத்தனை துண்டுத் துண்டு நிகழ்வுகள்?.. ஒன்றிற்கு ஒன்று தொடருபு கொண்டிருக்கும் எத்தனை அற்புத வரலாற்று நெசவு அது?
   எந்த இடத்தில் எதைத் தொட்டு வேண்டுமானாலும் நடந்த வரலாற்றைக் கத்தரித்து நம் கற்பனையை ஓட்டி எங்கு வேண்டுமானாலும் ஒட்டி சேர்த்துக் கொள்ளலாம்.
   மஹாபாரதத்தில் வரும் சல்லியன் படைப்பு என்னை வெகுவாகக் கவர்ந்த ஒன்று.
   சல்லியன் நினைத்தது ஒன்று; நடந்தது ஒன்று. எது நடக்க வேண்டுமோ, அது தான் நடக்க்கும்.
   யோசியுங்கள். இப்படியான யோசிப்புகள் தான் அற்புத கதைகளாகின்றன.
   //கதை நடக்கும் காலம், சம்பவங்களில் பிழைகள் மலிந்திருக்கின்றன.//

   திருத்திக் கொள்ள விழைகிறேன். சொல்லுங்கள், நெல்லை. நமக்குள் என்ன?   நீக்கு
  2. இதுவும் சஸ்பென்ஸ், புனைவுக் கதைதானே. நீங்கள், சகுந்தலை-துஷ்யந்தன் என்ற சம்பவத்தை எடுத்துக்கொள்ளாமல், ஏதோ ஒரு யட்சிணி, யட்சன் காதல் கதை, அது சந்தித்த முடிவு, ஏமாற்றமடைந்த யட்சிணி சாபமிட்டாள் என்பதுபோல கொண்டுபோயிருந்தால், அதில் நம் நம்பிக்கை வெளிப்பட்டிருக்கும். நடக்காத சம்பவத்தை எடுத்துக்கொண்டு இங்கு கோர்த்ததனால்தான் நாடகமாகத் தெரிகிறது.

   மகாபாரதத்தில் ஒவ்வொரு பாத்திரத்தையுமே ஆராய்ந்து, மனித மனம் எப்படிச் செயல்படுகிறது, அது தர்மத்தின் வழியிலா இல்லை அதர்மத்தின் வழியிலா என்றெல்லாம் ஆராய முடியும். அதைப்போன்ற நெடிய நாவல், பாரதத்தில் எழுதப்பட்டது என்பதே பாரதத்தின் அறிவு எந்த அளவு உச்சத்தில் இருந்தது என்பதற்கான சான்று.

   சல்லியன் படைப்பில், அவன், நல்லதற்கும் தீயதற்கும் இடையில் ஊசலாடியதாகத்தான் எனக்குத் தோன்றியது. அவன் உத்தமன் என்றால், செஞ்சோற்றுக் கடனுக்காக கெளரவர் படையில் சேர்ந்த பிறகு கெளரவர்களுக்குத்தான் கடைசி வரை உழைத்திருக்கவேண்டும். அப்போ, குறைந்தபட்சம், அவனுடைய தர்மத்திலாவது அவன் நின்றான் என்று எண்ணலாம். ஆனால், 'கோபம், அகம்பாவம்' போன்ற குணங்களினால், கெளரவர்களுக்குக் கெடுதலைத்தான் சல்லியன் செய்தான். பாண்டவர்களுக்காகத்தான் தான் பயணப்பட்டது என்பதில் முழு விசுவாசம் இருந்திருக்குமானால், 'யப்பா..துரியோதனா.. நான் அவர்கள் பக்கம்தான் போரிடணும். நீ நான் கேட்காமலேயே ஓசிச் சோறு கொடுத்துவிட்டாய். இதோ அதற்கான காசைப் பெற்றுக்கொள். நான் காசுக்காக விலைக்கு வாங்க முடியாதவன்' என்று சொல்லியிருக்கணும். இல்லை, செஞ்சோற்றுக் கடன் எல்லா தர்மத்தையும் விடப் பெரியது என்றிருந்தால், கர்ணணுக்கு ஒழுங்காக தேர் ஓட்டியிருக்கணும். அதையும் செய்யாமல் இதையும் செய்யாமல் இருந்தவர், சிறந்த படைப்பு என்று நீங்கள் அனுமானித்திருப்பது என்னைக் கவரவில்லை.

   நீக்கு
  3. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

   நீக்கு
  4. உங்கள் பார்வை எனக்கு உடன்பாடில்லை.

   என் பார்வை ரொம்ப சிம்பிள். பாண்டவருக்கு துணையாக போரிட வந்தவன்,
   தவறாக துரியோதனின் பாடி வீட்டில் சிக்கிக் கொள்கிறான். அந்நாளைய தர்மப்படி வாக்கும் கொடுத்து துரியோதன் படையில் தன் பெரும்படையைக் கலக்கும் படியும் அவனுக்கு ஆகிறது. தாய் மாமன் தன் மருமகனுக்கு எதிராக யுத்தம் செய்கிற நிலை. நினைத்து பார்க்கவே கசப்பாக இருக்கிறது.

   விதி வலியது. அவ்வலவு தான் சொல்ல முடியும்.

   ஒருவர் செய்த புண்ணியமும், பாவமுமே போட்டி போட்டுக் கொண்டு அவரவர் வாழ்வை வழிநடத்துவதாகவே நான் கருதுகிறேன்.

   நீக்கு
  5. @ நெல்லை/

   /தெரிந்துகொள்ளத் தேவையில்லாததை தெரிந்துகொள்ளாமல் இருப்பதே நல்லது. இதுதான் கதையின் ஒன்லைன் என எனக்குத் தோன்றுகிறது.//

   உங்கள் விருப்பப்படி எதுவும் நடப்பதில்லை.

   எது எது உங்களுக்குத் தெரிய வேண்டுமோ அவை அந்தந்த சமயங்களில் உங்களுக்கு தெரியப்படுத்தப் படுகின்றன.

   எது எது உங்களுக்குத் தெரிய வேண்டாமோ அவை தெரிய விடாமல் மறைக்கப் படுகின்றன.

   இது தான் வாழ்க்கையின் விதி.

   நீக்கு
  6. You are right ஜீவி சார். பெரிய ஜோசியர்களே, தங்கள் பெண்ணுக்கு வரன் பார்க்கையில் சொதப்பியிருப்பதும், தங்கள் எதிர்காலம் தெரியாமல் இருந்திருப்பதும் நமக்குத் தெரியும்தானே.

   நான் எப்போதும் எண்ணுவது, Unless there is some connection in our previous birth, one will not get to know or meet another person during their life. இந்த சப்ஜெக்டை நான் அதிகமா எழுதுவேன். ரொம்ப வளவளன்னு எழுதறமாதிரி தோன்றிவிடும். (ஒரு புத்தகத்தில் ஒரு யோகி, தன் சிஷ்யனிடம் சொல்கிறார், இவர் என்னைப் பார்ப்பது இதுதான் கடைசி தடவை, இந்தப் பெண்ணின் எதிர்காலம், கடந்தகாலம் இவற்றை என்னிடம் கேட்காதே-அந்தப் பெண்ணை அப்போதுதான் பார்த்திருந்தபோதும்..இப்படி நிறைய சம்பவங்கள்)

   கும்பகோணம், அதைச் சுற்றியுள்ள கோவில்கள் போவோம். சில முக்கிய கோவில்கள் வழியில் இருந்தாலும் நாம் பார்க்கும் சந்தர்ப்பம் வாய்க்காது.

   நீக்கு
 10. எதிரே உள்ளவர்கள் மனதில் நினைப்பதை நாம் உடனுக்குடன் அறிந்துகொள்வது போன்ற கண்டுபிடிப்பை யோசித்துப் பாருங்கள். அப்புறம் நிம்மதி என்பதே மனித அகராதியில் வழக்கொழிந்துவிடும்.

  அதுவும்தவிர ஜோசியம், முன்ஜென்மம், பின் ஜென்மம் போன்றவை ஒரு தனிப்பட்ட ஆன்மாவின் தேவ ரகசியங்கள். அதை பட்டவர்த்தனமாக எல்லோர் முன்னும் விளக்குவதே அடுத்தவன் படுக்கையறையில் சிசிடிவி வைத்து ஒளிபரப்பும் கான்சப்ட் என்பது என் அபிப்ராயம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //அதுவும்தவிர ஜோசியம், முன்ஜென்மம், பின் ஜென்மம் போன்றவை ஒரு தனிப்பட்ட ஆன்மாவின் தேவ ரகசியங்கள். அதை பட்டவர்த்தனமாக எல்லோர் முன்னும் விளக்குவதே அடுத்தவன் படுக்கையறையில் சிசிடிவி வைத்து ஒளிபரப்பும் கான்சப்ட் என்பது என் அபிப்ராயம்.// Correct!

   நீக்கு
  2. விஜய் தொலைக்காட்சியில் வந்த, ஆழ்நிலைக்கு மனதைக் கொண்டுபோய், ஒருவரின் முந்தைய ஜென்மங்களை, அதன் நிலையைச் சொல்லச் சொல்லும் தொடர் ஒன்றில் நடிகை பாபிலோனா, தன் முந்தைய ஜென்மத்தில் 'அந்த'த் தொழில் செய்து, இரயில்வே ஓரத்தில் இருந்தவர்களுடன் வாழ்ந்ததைச் சொன்னபோது (அவர் ஆழ்நிலையில் சொல்வது) எனக்கு, இப்படி பட்டவர்த்தனமாக வெளிப்படுத்துவதே ஆபாசமாகத் தோன்றியது. நம் (எல்லோரையும்தான்) இந்த மாதிரி ஆழ்நிலைக்கு உட்படுத்தினால் என்னென்ன கசடுகள் வருமோ..

   நீக்கு
  3. ஒரு கதை என்றால் ஏதாவது ஒரு பெயர் வைக்க வேண்டியிருக்கிறது. அவ்வளவே ஒரு கதைக்கும் கதாபாத்திரங்களின் பெயருக்குமான சம்பந்தம்.

   பொதுத்தளத்தில் வாழும் மனிதர்களை தொடர்பு படுத்திப் பேசும் சிறுபிள்ளைத்தனங்கள் நான் சம்பந்தப்பட்ட பதிவுகளில் வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.

   நீக்கு
  4. //தொடர்பு படுத்திப் பேசும் சிறுபிள்ளைத்தனங்கள் // - இந்த மாதிரி எழுதவேண்டாம் என்று நான் உங்களைக் கேட்டுக்கறேன். கதைக்குச் சம்பந்தமான அதே போன்ற நிகழ்வு, விஜய் தொலைக்காட்சியில் வந்தது. உங்க கதையும் முன் ஜென்மம் என்ற கான்சப்டில்தான் பயணிக்கிறது.

   இந்த மாதிரிதான் எனக்குப் பின்னூட்டம் வேணும் என்று கேட்பதே எனக்கு வியப்புக்குரியதாக இருக்கிறது. Sorry.

   உங்க கதையிலும் நடக்காத சம்பவத்தை வைத்து இப்போதுள்ள காதலி (அதாவது இவனோடு வெளியில் சுற்றித் திரியும் காதலி) ஒரு கணிணி சொன்னதை நம்பி உடனே கிளம்பிவிட்டாள் என்பது எனக்கு உண்மையாவே நகைப்புக்குரியதாகத்தான் இருக்கிறது.

   நீக்கு
  5. நான் ஒரு சிறுகதையை வாசகரின் வாசிப்பு அனுபவத்திற்காக வெளியிடுகிறேன்.

   இங்கு இந்த கதையைப் பற்றி எவ்வளவு வேண்டுமானாலும் பேசலாம். விவாதிக்கலாம். அதை விட்டு விட்டு வாசிப்பவரை திசை திருப்ப வழி வகுக்கும் விதமாக வேண்டாத விஷயங்கள் எவ்வளவு பதிவிட்டிருக்கிறீர்கள் என்று பாருங்கள்.

   இந்தக் காலக்கணினி கற்பனையை படுக்கை அறை சிசிடிவிக்கு ஒப்பிடுகிறீர்கள்.

   என் உழைப்பு வீணாகிறதே என்ற வருத்தம் எனக்கு. அப்படியும் மென்மையாக
   childish போக்கு என்று தான் சொல்லி வருத்தப்பட்டிருக்கிறேன்.

   தமிழகத்தின் ஆகச் சிறந்த எழுத்தாளர்களுடன் எனக்கு பழக்கம் உண்டு. பிரபல பத்திரிகைகள் மரியாதை கொடுத்து பிரசுரித்த கதைகள் இவை. இவற்றை இங்கு மீள் பிரசுரம் பண்ண வேண்டும் என்ற அவசியமே இல்லை. ஏதோ சிறுகதை எழுத முனைவர்களுக்கு பலவித களப்பரிசோதனைகளுடன் கூடிய
   இந்தக் கதைகள் வாசிப்புக்கு உபயோகமாக இருக்குமே என்ற எண்ணத்தில் தான் வெளியிடுகிறேன்.
   யாருக்கும் இவை எந்த விதத்திலும் உபயோகமாக இல்லை என்று தெரிந்தால்
   பேசாமல் திரும்பப் பெற்றுக் கொள்வேன்.   நீக்கு
  6. ஜீவி சார்... கதைக்கான பின்னூட்டம், நடையைப் பற்றிய பாராட்டு, விமர்சனம் இருக்கு. இதே கான்சப்டில் விஜய் தொலைக்காட்சி செய்த "ஆழ்நிலைக்கு மனதை மனோவைத்தியர் மூலமாக" உட்படுத்திய நிகழ்ச்சியைத்தான் குறிப்பிட்டு, அந்த கான்சப்டை விமர்சனம் செய்திருக்கேன்.

   உங்களுக்கே தெரியும், எ.பில வாரத்தில் சில நாட்களில் வாசகர்களுக்கு இருக்கும் ஆர்வம். அதில் கேவாபோ கதை வெளியாகும் செவ்வாயும் ஒன்று.

   இன்னொன்று, எப்போதுமே, ability உள்ளவங்கதான் அதிக விமர்சனத்தைச் சந்திப்பாங்க. கதை எழுத, கவிதை எழுத ஓவியம் வரைய முயலும் என்னைப்போன்ற கத்துக்குட்டிகள் அவ்வளவா விமர்சனத்தைச் சந்திக்க மாட்டாங்க.

   நீங்க இது மாதிரி உங்கள் கதைகளை வெளியிடாவிட்டால் நான் படிக்க வாய்ப்பே ஏற்பட்டிருக்காது.

   தொடர்ந்து எபில உங்க கதை வரட்டும். வாழ்த்துகள்

   உழைப்பு வீணாகிறதே - அப்படி நினைக்க எதுவுமே இல்லை.

   நீக்கு
  7. //இதே கான்சப்டில் விஜய் தொலைக்காட்சி செய்த "ஆழ்நிலைக்கு மனதை மனோவைத்தியர் மூலமாக" உட்படுத்திய நிகழ்ச்சியைத்தான் குறிப்பிட்டு..//

   நான் இதைக் குறித்து அப்படிச் சொல்லவில்லை.

   ''அந்த'த் தொழில் செய்து, இரயில்வே ஓரத்தில் இருந்தவர்களுடன் வாழ்ந்ததைச் சொன்னபோது..' இந்த மாதிரி வார்த்தைகளை இந்தக் கதையில் தவிர்த்திருக்கலாமே என்று தோன்றியது. தவிர்த்தல் எந்த அர்த்தத்தில் என்றால்
   இது தொடர்பாக நாலு பின்னூட்டங்கள் என்று மொத்தத்தில் இந்தக் கதை வாசிக்கும் விதத்தில் வாசிக்கப்படாமலே போவதற்கு நிறைய வாய்ப்புகள் உண்டு என்பதால் தான்.

   இன்னொரு இஷ்யூ: 'ரேவதி--சுரேஷ்' காதல் பிரிவு என்று இன்னொரு திசை திருப்பல். சென்ற பகுதியிலேயே இந்தப் பெயர்களைப் பற்றிய பின்னூட்டங்கள் ஒரு வழி பண்ணி விட்டன.

   நான் எதைச் சொல்லி எதைப் புரிய வைக்க வேண்டும் என்று நினைக்கிறேனோ அதற்கு மாறாக சம்பந்தா சம்பந்தமில்லாத விஷயங்கள் பேசப்படுகின்றன.

   //இந்த மாதிரிதான் எனக்குப் பின்னூட்டம் வேணும் என்று கேட்பதே எனக்கு வியப்புக்குரியதாக இருக்கிறது. Sorry.//

   இந்த அனுபவ விஷயத்தை உங்களிடம் தான் நான் பகிர்ந்து கொள்ள வேண்டும்.

   செவ்வாய் கதை வெளிவந்ததும், முதலில் பதியும் இரண்டு பின்னூட்டங்கள் மிகவும் முக்கியமானது. அதில் கதையை வாசித்து புரிந்து கொண்டதைச் சொன்னால் மட்டும் போதும். அப்படியிருந்தால் அடுத்து வரும் கிட்டத்தட்ட பத்துக்கு மேலான பின்னூட்டங்கள் ஒழுங்காக கதை பற்றி மட்டும் இருக்கும்.
   முதலிரண்டு பின்னூட்டங்களில் ஏதாவது ஐயமோ, அல்லது விவகாரமான விஷய்மோ வெளிப்பட்டிருந்தால் அதைத் தொடர்ந்து வரும் கிட்டத்தட்ட பத்து பின்னூட்டங்கள் அந்த முதலிரண்டு பின்னூட்டங்களின் தொடர்ச்சியாகவே இருக்கும். அதை ஏன் தொட்டு எழுதுகிறார்கள், தனக்குத் தோன்றிய புதுக் கருத்து எதையாவது எழுத மாட்டார்களா என்று எனக்குத் தோன்றும்.
   (இந்த ஆடு தாண்டும் பழக்கம் இணைய எழுத்துக்களில் பழக்கமான ஒன்று.)

   அப்புறம் கிட்டத்தட்ட 16 பின்னூட்டங்கள் (திருக்குறள், பிரார்த்தனைகள் எல்லாம் சேர்த்து) அந்த முதலிரண்டு பின்னூட்டங்கள் தொடர்ச்சியாகவே வந்ததும் கப்பென பின்னூட்டங்களின் வரவே நின்று விடும்.
   மதியம் 3 மணிக்கு மேல் யாராவது ரொம்ப யோசனைக்குப் பின் ஆரம்பித்து வைத்தால் தான் உண்டு.

   நான் பொழுதுபோக்குக் கதைகள் எழுதுவதில்லை என்பது உங்களுக்கே தெரியும். வாழ்க்கைக்குத் தேவையான ஏதாவது கருத்தை வாசிப்பவர்
   மனசில் உணர்த்தவே எழுதுகிறேன். ஆனால் நாம் கதை தொடர்பாக பேச வேண்டிய விஷயங்களை விவாதத்திற்கு உள்ளாக்குவதில்லை என்ற குறை என்றுமே எனக்குண்டு. வாசிப்பவர்களுக்கு ஏன் அந்த தயக்கம் என்று தெரியவில்லை. யாராவது இதையெல்லாம் குறிப்பிட்டு பின்னூட்டம் போட மாட்டார்களா, நாம் என்ற நினைக்கும் விஷயங்களே அதிகமாகப் போகிறது.

   //தொடர்ந்து எபில உங்க கதை வரட்டும். வாழ்த்துகள்.. //

   அப்படியே ஆகட்டும், நெல்லை. எல்லாக் கருத்துக்களையும் நாம் எந்தக் கருத்து வேறுபாடுகளும் இல்லாமல் பேசிக் கொள்ளலாம் என்ற உணர்வு தான் என்னிலும் மேலோங்கியிருக்கிறது. நன்றி.   நீக்கு
  8. //செவ்வாய் கதை வெளிவந்ததும், முதலில் பதியும் இரண்டு பின்னூட்டங்கள் மிகவும் முக்கியமானது. அதில் கதையை வாசித்து புரிந்து கொண்டதைச் சொன்னால் மட்டும் போதும். //

   அதற்காக தனக்கு ஏற்படும் ஐயங்களை சொல்லவேக் கூடாது என்றில்லை.
   நிறைய பேசலாம். மற்ற ஐயங்களை நாலைந்து பின்னூட்டங்கள் தாண்டி வைத்துக் கொண்டால் அது தொடர்பாகத் தொடரும் பின்னூட்டங்கள் விளக்கங்கள் என்று களை கட்டும்.

   வாசகர்களுக்குள்ளேயே கதைத் தொடர்பான ஒரு கருத்தை வித்தியாசமாக ஒருவர் சொல்கிறார் என்றால் அதற்கு மாற்றுக் கருத்து இன்னொரு வாசகரிடமிருந்து வந்தால் அது நல்ல வாசிப்பு அனுபவத்தை வாசிப்போர் மத்தியில் விளைவிக்கும் என்ற எண்ணமும் எனக்குண்டு.

   மொத்தத்தில் கதை சொல்லப்பட்ட விதத்திலிருந்த விலகாமல் அது பற்றிய விமர்சனங்கள் நிறையவே பேசப்பட்டால் இந்த செவ்வாய்க்கிழமை கே.வா.போ.க - பகுதி மிகச் சிறந்த ஒரு வெளிப்பாடாக பதிவுலகில் மிளிரும் என்ற நம்பிக்கை எனக்குண்டு. அதற்கேற்பவாக வாசகர்கள் உருவாக வேண்டும் இதையெல்லாம் சாத்தியப்படுத்த வேண்டும் என்ற ஆசையும் எனக்கு நிறையவே உண்டு.

   நீக்கு
  9. நீங்க சொல்லியிருப்பது ஏற்கத்தக்க கருத்துதான் ஜீவி சார். ஒரு படைப்பாளிக்கு தன் படைப்பைப் பற்றி நிறைய விமர்சனங்கள் வரணும், அது சம்பந்தமான கேள்விகளாக, அனுமானங்களாக இருந்தால் அதைப் பற்றி நிறையப் பேச, விவாதிக்க வாய்ப்பு இருக்கும் என்பது உண்மைதான்.

   ஆனால் என்னவோ இந்த 'எ.பி'ல நாங்க (அனேகமா) நிறையப்பேர் பல திசைகளிலும் இழுத்துவிடுகிறோம். பலர், அதுவும் நல்லா இருக்கு என்று சொல்றாங்க (மாற்றுக்கருத்துகளும் உண்டு). ஆனால் அதுதான் நம்ம எல்லோரையும் பிணைக்குது என்று நான் நினைக்கிறேன். ஜீவி சார் கதையையும் தாண்டி 'ஜீவி' என்ற மனிதன் நம்மில் ஒருவர் என்ற உணர்வுதான் எல்லோருக்கும் இருக்கு. இங்க சிலர் வரலைனா, ஏன் வரலை என்ற கேள்விதான் அன்றைய இடுகையைவிட எல்லோர் மனதிலும் முன் நிற்கும்.

   இதுதான் நீங்கள் 'செம்புலப்பெயல் நீர் போல' என்ற இடுகை எழுதியபோது எனக்குத் தோன்றியது. கணவன் மனைவி - அதாவது முன்னாள் காதலன் காதலி இவர்களைவிட, நண்பர்களுக்குத்தான் இந்தச் செய்யுள் அதிகம் பொருந்தும் என்பது என் எண்ணம். அப்போ நிறைய எழுத சந்தர்ப்பம் வாய்க்கலை.

   நீக்கு
 11. வல்லி அக்கா, கீதா அக்காக்களின் கருத்துதான் என்னுடைய கருத்தும். சகுந்தலைதான் துஷ்யந்தனோடு இணைந்து விடுகிறாளே? அந்தக் கதையே ரேவதிக்குத் தெரியாதா? 

  பதிலளிநீக்கு
 12. ரேவதி-சுரேஷ்-காதல்-பிரிவு... நிஜத்தை கதையாக்கி விட்டீர்களா ஜீ.வி. சார். 

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹல்லோ... கருத்துப்பிழை... அவங்க திருமணம் செய்து நன்றாக வாழ்ந்து, அவங்க அவங்க profession clashing காரணமாக பிரிந்துவிட்டார்கள், நட்பைத் தொடர்கிறார்கள் என்று லேடஸ்டாக ரேவதி ஏதோ ஒரு தொலைக்காட்சியில் சொன்ன நினைவு.

   புதன் கேள்வி - ஒரு காலத்தில் நம் கனவுக் கன்னியாக இருந்தவர்களை இப்போது பார்க்கும்போது, இவங்க மேலயா க்ரேஸாக இருந்தோம் என்று தோன்றுவதன், நம்மைப் பார்த்து நகைத்துக்கொள்வதன் காரணம் என்ன? ஹாஹா

   நீக்கு
  2. இவ்வளவு லேட் ஆவா கேட்பது?

   நீக்கு
  3. //ரேவதி-சுரேஷ்-காதல்-பிரிவு... நிஜத்தை கதையாக்கி விட்டீர்களா ஜீ.வி. சார். //

   இன்னொருவரை சம்பந்தப்படுத்தும் இந்த மாதிரியான பின்னூட்டங்களை நீங்கள் தவிர்ப்பது நலம். என் பதிவுகளில் வேண்டவே வேண்டாம்.

   நீக்கு
  4. நெ த கேள்விக்கு நாளை பதில் சொல்கிறோம்!

   நீக்கு
  5. //இவ்வளவு லேட் ஆவா கேட்பது?// கேஜிஜி சார்... கேள்வி கேட்டுட்டேன். அடுத்த புதனும் பதில் தரலாம். ஒன்றைப் படிக்கும்போது சட் என்று தோன்றும் கேள்வி, பிறகு அலைபேசி வரும்போது மறந்துவிடுகிறது.

   நீக்கு
 13. இந்த துஷ்யந்தன் சகுந்தலை கதையை அப்படியே நவீனமாக்கி வாஸந்தி கல்கியில் ஒரு தொடர்கதை எழுதினார். அதில் திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழும் கதாநாயகனுக்கும், நாயகிக்கும் ஒரு ஆண் குழந்தையும் பிறக்கும். பிறகு ஒரு விபத்தில் அவனுக்கு தான் ஒரு பெண்ணோடு வாழ்ந்தது மட்டும் மறந்து விடும். பெற்றோர்களையெல்லாம் நினைவில் இருக்கும். பிறகு திடீரென்று எல்லாம் நினைவுக்கு வந்து அவளோடு மீண்டும் இணைவான். 

  பதிலளிநீக்கு
 14. போனஜென்மம், இனிவரும் காலம் எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்ளாமல் இருப்பதே நல்லது என்று தெரிகிறது இந்த கதையின் மூலம். இந்த கணம் வாழ்க்கையை வாழ்ந்து போக வேண்டும் என்று நினைக்கிறேன்.


  விளையாட்டாக மகிழ்வாய் போய் கொண்டு இருந்த கதை பிரிவில் முடிந்து வேதனை கதையாகி விட்ட்தே!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சந்திப்போம்; பிரிவோம், மீண்டும் சந்திப்போம் என்று இதே பகுதியில் அத்வைத தத்துவத்தை விளக்கும் முயற்சியாக ஒரு கதையை வெளியிட்டிருக்கிறேனே, அது நினைவுக்கு வந்தது.

   ஜென்மாதிஜென்ம வாழ்க்கை கருத்துருவின் அடிப்படையே பலவிதமான அனுபவங்களைப் பெற்று புடம் போடப்படுவதின் வாயிலாக நற்கதி அடைய வேண்டும் என்பதற்காகத் தான். இல்லையா, கோமதிம்மா?..

   நீக்கு
 15. பக்தி இலக்கிய காலத்திலிருந்து "கதைகள்" என்றுமே சுவாரசியம் தான்...!

  பதிலளிநீக்கு
 16. "கதைகள்" என்ற வார்த்தைக்கு நீங்கள் கொட்டேஷன் இட்டிருப்பது நிரம்ப அர்த்தம் நிறைந்தது, டி.டி.

  பல வாசக்ர்களுக்கு நிகழ்வுகளுக்கும், அவற்றைச் சுற்றியதான கதைப் பின்னலுக்கும் ஏனோ இன்னும் வித்தியாசம் தெரிவதில்லை. என்றைக்குத் தெரிந்து கொள்ளப் போகிறார்களோ, அதுவும் தெரியவில்லை. :))

  பதிலளிநீக்கு
 17. கதை என்றாலேயே கற்பனை மிகுந்ததுதானே கற்பனைஎன்றாலே நிகழ்வு அல்ல என்றாகிறது அது எழுதுபவரின் டொமெஇன் நான் பொதுவாகஆராய்வது இல்லை ஆனல் கற்பனை வேலை செய்யும் விதமே அலாதி துஷ்யந்தனின் காதாலையும் இக்கால ரேவதியின் காதலையும் முடிச்சிட்ட விதம் ரசிக்க வைக்கிறது

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //கதை என்றாலேயே கற்பனை மிகுந்ததுதானே கற்பனைஎன்றாலே நிகழ்வு அல்ல என்றாகிறது அது எழுதுபவரின் டொமெஇன்//

   ஆஹா.. எவ்வளவு நேர்த்தியாக அனுபவதை பகிர்ந்து கொண்டிருக்கிறீர்கள்?

   //ஆனல் கற்பனை வேலை செய்யும் விதமே அலாதி துஷ்யந்தனின் காதாலையும் இக்கால ரேவதியின் காதலையும் முடிச்சிட்ட விதம் ரசிக்க வைக்கிறது.. //

   இதான் வாசிப்பனுபவம். மனம் சந்தோஷம் கொள்கிறது. நன்றி, ஐயா.

   நீக்கு
 18. இது புதியதொரு கோணம்...

  கீதா அக்கா அவர்கள் சொல்வதைப் போல தன்னைத் தானே எழுதிக் கொண்ட கதை...

  அவனுக்கு இவள் தான் என்ற முடிவு முன்பே எழுதப்படவில்லை.. அதனால் தான் பிரிவு என்பதாக எண்ணுகிறேன்..

  இந்தக் கதையில் வந்திருக்கும் சம்பவங்களை விட அதிகமானவற்றை உணர்ந்திருக்கிறேன்..

  தஞ்சைப் பெரிய கோயிலைப் பற்றிய ரகசியம் ஒன்றைக் கேட்டதற்கு இந்தப் பிறவிக்கு வேண்டியது சொல்லப்பட்டு விட்டது.. மற்றவை அடுத்த பிறவியில் என்று பதில் வந்தது..

  ஏனெனில் பழைய நினைவுகளுடன் தான் ஒவ்வொரு ஜென்மமும் அமைகின்றனவாம்...

  இதை வரமென்றுதான் கருதுகிறேன்...

  ஜீவி அண்ணாவும் மற்றவர்களும் இது பற்றிச் சொல்ல வேண்டும்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //ஏனெனில் பழைய நினைவுகளுடன் தான் ஒவ்வொரு ஜென்மமும் அமைகின்றனவாம்...//

   அதை பழைய படிமங்களுடன் என்று சொன்னால் இன்னும் பொருத்தமாக இருக்கும். பஸ் என்பது புழக்கத்தில் இல்லாத காலகட்டத்தில் அந்த வார்த்தையை உபயோகிப்பதின் மூலம் அதை லேசாகக் கோடி காட்டியிருக்கிறென். பழைய துஷ்யந்தன்-- சகுந்தலை வாழ்வின் வீச்சு இந்த ஜென்ம சுரேஷ்--ரேவதி வாழ்க்கையில் படிந்து போவதைக் காட்டியிருக்கிறென்.
   அவர்கள் ஒன்று சேரப்போவது உறுதி என்பது சொல்லாமலேயே பெறப்பட்ட தகவலாகும்.

   ஒவ்வொரு பிறவியும் நம்மை சோதித்துப் பார்க்கத் தான் என்று தோன்றுகிறது. அதே நேரத்தில் தானாக நாம் செயல்படுவதில்லை; ஏதோ ஒரு சக்தி இப்படித்தான் நாம் செயல்பட வேண்டும் என்று ஏற்கனவே தீர்மானித்து விட்டதைப் போலவும் தோன்றுகிறது. ஆக, பாவ புண்ணிய நம் செயல்பாடுகள் கூட அதற்கு முந்தைய நம் பிறவிச் செயல்பாடுகளை வைத்துத் தீர்மானிக்கப்படுவதாகக் கருத இடமுண்டு.

   'நல்லவனாக இரு; நல்லதையே செய்' -- என்பதை ஒரு பொதுவான வாழ்க்கை வழிகாட்டலாகக் கொள்ள வேண்டும் என்று தோன்றுகிறது. நல்லவனாக இருப்பதைக் கூட முந்தைய பிறவிகளின் செயல்பாடுகள் தாம் தீர்மானிப்பதாகத் தோன்றுகிறது.

   என் அனுபவங்களின் மூலமாக சிலவற்றை 'இப்படி இருக்கலாம்' என்று சொல்ல முடிகிறதே தவிர அவற்றை ஒரு ஆய்வின் அடிப்படையில் இல்லை என்று கொள்ள வேண்டுகிறேன். தம்பி துரைக்கு நன்றி.

   நீக்கு
  2. முன் ஜென்மங்கள், அதன் தொடர்ச்சி, நம் வாழ்வு நம் கையில் பெரும்பாலும் இல்லை என்பது உண்மைதான். என் அனுபவங்களும் அதனையே கோடிகாட்டியிருக்கின்றன.

   பின்னணியே இல்லாதவர்க்கு வெளிநாட்டுப் பயணம், வாழ்க்கை, மனைவி குடும்பத்தைப் பிரிந்து வாழ்க்கை, சட் என கண்மூடிக் கண் திறப்பதற்குள் மேடையே மாறுவது என்று பலவித காட்சி மாற்றங்கள். ஏன் இப்படி நடக்கிறது, எதனால் அப்படி நடந்தது என்பதெற்கெல்லாம் காரண காரியம் கண்டுபிடிக்க முடியாது.

   தேவரகசியத்தையும் கண்டுபிடிக்க நினைப்பது கடினம். கண் தெரியாதவன் யானையை விவரிக்க முற்படுவது போல

   நம்மை விடத் திறமைசாலிகள், புத்திமான்கள் நம்மை விட உலகியல் அளவுகோலின்படி தாழ்ந்த, செல்வம் குறைவாக இருக்கும் நிலை, நம்மைவிட அறிவில் ஒப்பிட முடியாதவர்கள் திறமைக் குறைவு உள்ளவர்கள் வாழ்க்கையில் எங்கோ உயரத்தில் இருப்பதும் வேறு எப்படி சாத்தியம்?

   நீக்கு
 19. வாசித்து ரசித்தமைக்கு நன்றி, கரந்தையாரே!

  பதிலளிநீக்கு
 20. வணக்கம் சகோதரரே

  ஜீவி சகோதரர் எழுதிய கதை முடிவு நன்றாக உள்ளது. நீண்ட இடைவெளிகளுடன் முன்பிறவியின் முடிவை அறிய முனைந்ததால் இத்தனை குழப்பமோ? அதற்கு முன் வந்தவர்கள் ஒன்றிரண்டோடு தெரிந்து கொண்டு சந்தோஷமடைந்து விட்டார்கள். அதீத ஆசைகளுக்கு இது ஒரு சாபமோ?

  ஒரு திருப்பமாக துஷ்யந்தனின் முடிவை பார்ப்பதற்குள் ரேவதி தீடிரென அங்கிருந்து அகன்றது சரியே....! ஏனென்றால் அங்கிருந்தவர்கள் எவருமே இதுவரை துஷ்யந்தனின் உண்மைக் கதையை அறிந்திருக்கவில்லை. இனிதான் பார்க்க விழைகிறார்கள். எனவே ரேவதியும் இருந்து பார்த்து விட்டு, பிறகு அவன் தன் மேல் வைத்திருக்கும் காதலை நம்பாமல் அகன்றோ, இல்லை, அவன் காதலியை முழுதுமாக மறக்காமல் முனிவர் சகுந்தலைக்கு தந்த சாபம் காரணமாக பிரிந்திருந்தான் என்பதை தெரிந்து சந்தோஷபட்டு அவனை ஏற்றுக் கொள்வது மாதிரியோ வந்திருந்தால், ஒரு சாதாரண கதையாக போய்விடும் என சகோதரர் நினைத்தது புரிகிறது.

  முன்ஜென்ம பலாபலன்கள் தெரிந்தோ. தெரியாமலோ கண்டிப்பாக நம்மை வந்து சூழுகின்றன என்பது கதையை படிக்கும் போது தெளிவாக புரிகிறது. நல்லதாக இருந்தால், மகிழ்கிறோம். கொஞ்சம் அசம்பாவிதமாக நடந்தால்,அச்சுறுகிறோம். இது இயல்புதானே..!

  ஒருநாள் இந்தப்பிறவியில் அன்று நாம் இயல்பான சந்தோஷத்தை மீறி, மிகவும் மகிழ்வாக இருப்பதாக உணர்ந்தால், அன்று நம் முன்ஜென்ம நெருங்கிய உறவுகள் நம்மை நினைக்கிறார்கள்.. நமக்காக சில தான தர்மங்களை செய்கிறார்கள் என, என் உறவினர் அடிக்கடி கூறுவது ஏனோ இங்கு நினைவுக்கு வருகிறது.

  சகோதரரின் புதுவிதமான கதைப் பயணமும், முடிவும், நன்றாக இருந்தன. இறுதியில் இக்கதையைப் பற்றிய சகோதரரின் விளக்கங்களுக்கும் காத்திருக்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 21. சகோதரி கமலா ஹரிஹரனுக்கு நன்றி. அவர் மிகச் சரியாக கதையை எந்த இடத்தில் நிறுத்தி முடித்திருக்கிறேனோ, அதைப் புரிந்து கொண்டது பற்றிப் பின்னூட்டமிட்டிருக்கிறார். அந்த புரிதலில் என் மகிழ்ச்சியும் கூடுகிறது. இதோடு
  முடித்து விடலாமா என்றிருந்தேன். அவர் கதையாக்கம் குறித்து கேட்டிருப்பதால் சில விளக்கங்களுடன் தொடர்கிறேன். நன்றி.

  பதிலளிநீக்கு
 22. புராண இதிகாச கதைகளின் போக்குகள் ஊடே நமக்குக் கதை எழுதுவதற்கு வாகான் இழை ஒன்றை எடுத்துக் கொண்டு அறிந்த கதைக்கு பங்கம் ஏற்பட்டு விடாமல் ஊதிப் பெரிதாக்குவது ஒரு முறை. அப்படி எடுத்துக் கொள்ளும் இழை எந்த விஷயத்தைக் கதையாக்கப் போகிறோமோ அதற்கு வாகாக இருக்க வேண்டும் என்பது முக்கியம்.

  புதுமைப் பித்தன் அகலிகை பற்றி சாபவிமோசனம் என்று ஒரு பிரசித்திப்பெற்ற கதையை எழுதியிருக்கிறார். சீதை உலகுக்காக அக்னிப் பிரவேசம் பண்ண நேர்ந்ததை நியாமாகக் காட்டி புதுயுகக் கதை ஒன்றைப் படைத்து அது வேறொரு ரூபம் கொண்ட நாவலானது தான் 'சில நேரங்களில் சில மனிதர்கள்'.

  பதிலளிநீக்கு
 23. என் ஆதர்ச கும்பகோண எழுத்தாளர் எம்.வி.வெங்கட்ராம் மஹாபாராத்தின் சிறு கதாபாத்திரமான மாதவி என்ற பெண்ணுக்கு நேர்ந்த கொடுமையைக் காணச் சகியாமல் அப்பெண்ணை மையமாகக் கொண்டு படைத்த நாவல் தான் 'நித்திய கன்னி. சிலப்பதிகார மாதவியை பெரும்பாலும் நம் எல்லோருக்கும் தெரியும். ஆனால் அவ்வளவு பிரபலமில்லாத மகாபாரத மாதவி பந்தாடப்பட்ட கதையை நினைத்தால் மனசுக்கு வருத்தமாக இருக்கிறது. அந்தப் புராணக்கதையை வெகு லாவகமாகக் கையாண்டு நித்தியகன்னி நாவலைப் படைத்திருக்கிறார் எம்.வி.வி. அவர்கள்.
  இப்படி பல புதின ஆக்கங்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மகாபாரத்த்தில் அனேகமாக அனைவருமே முன் ஜென்ம வினைகளால் பந்தாடப்பட்டவரே. அதன் ஆரம்பமே, அம்பிகை அம்பாலிகை துன்பியலையும், உடனடி மறுபிறப்பையும் விளக்கும்.

   மாதவி பாத்திரம் சட் என நினைவுக்கு வரவில்லை.

   நீக்கு
  2. நான் அது பற்றி எழுதினால் மிகவும் நீண்டு போகும். அதற்கு அயர்ச்சியாகவும் இருக்கிறது.

   இணையத்தில் தேடிப்பாருங்கள். கிடைக்கலாம்.

   நீக்கு
 24. மகாபாரத காலத்தில் தர்மங்கள் அவரவர்களுக்கு ஏற்றவாறு வகுக்கப்பட்டிருந்தன. அரச் தர்மம் என்பதற்கு பங்கம் விளையாமல் அரசன் நடந்து கொள்ள வேண்டும் என்பது தான் விதி. அரசனே தலைவன் ஆதலால் அதற்கேற்பவான நியாயங்கள். அந்த நியாயங்களிலிருந்து வழுவாமல் அவன் அரசாட்சி செய்ய வேண்டும் என்பதே அவனுக்கு ஏற்கப்பட்ட நியதி.
  துஷயந்தனின் நியாயங்களுக்கான நடவடிக்கைகளை சுரேஷிடம் திணிக்கக் கூடாது.
  துஷ்யந்தன் காந்தர்வ விவாகம் செய்து கொள்ளலாம். உறவுகொண்ட பெண்ணை மறக்கலாம். அரசனுக்குரிய நியாயங்கள் இவைகள் ஆதலால் சகுந்தலைக்குத் தான் தண்டனையே தவிர துஷ்யந்தனுக்கு இல்லை. அப்படி அந்தப் பிறவியில் தப்பி விட்ட துஷ்யந்தன் பின் வந்த பிறவியான சுரேஷூக்கான வாழ்க்கையில் காதலி ரேவதியை தற்காலிகமாகப் பிரிகிறான். இவர்கள் ஒன்று சேர வேண்டும் என்பது புராண கதை வகுத்த நியதியாதலால் ஒரு பிரிவுக்குப் பின் ஒன்று சேர்கிறார்கள். அது கதையின் சுவாரஸ்யத்தைக் கூட்டுவதற்காக சொல்லப்படவில்லை. அவர்கள் பிரிதலோடு துண்டிக்கப்படுகிறது. அவ்வளவு தான்.

  இதில் நாம் பார்க்க வேண்டியது முந்தைய ஜென்ம அவஸ்தைகளே வேறொரு ரூபத்தில் தொடர்ந்து வந்து ஒரு கால கட்ட அனுபவிக்குப் பிறகு களையப்படுகிறது.
  மூலக் கதையும் அதுவே ஆதலால் புராணத்தில் சொல்லப் பட்டக் கதைக்கும் இந்தக் கதைக்கும் எந்த விலகலும் இல்லை. இது வாசிப்பவரின் கவனத்திற்கான விளக்கம்.

  பதிலளிநீக்கு
 25. வணக்கம் ஜீவி சகோதரரே

  பிற திறமையான எழுத்தாளர்கள் அவர்களின் அற்புத படைப்புகளாக, புராண கால மாந்தர்களின் இயல்புகளை மாறுபட்ட கோணத்தில் எப்படி தங்களுடைய எழுத்துக்களில் கொண்டு வந்து நமக்கு விருந்தாக படைத்தார்கள் என்பதை பற்றி விளக்கமாக கூறியதுடன்,நீங்கள் எழுதிய கதையை பற்றி நன்றாக புரிகிற மாதிரி, தங்களின் மனக்கருத்தென்ற லாவகத்துடன் இணைத்து விளக்கமாக கூறியிருந்ததையும் ரசித்துப் படித்தேன்.

  தங்களின் கருத்துப்படி சுரேஷும், ரேவதியும் பிரிவுக்குப்பின் சமாதானமாகி பிறகு திருமண பந்தத்தில் இணைந்திருக்கலாம். அவ்வாறு அவர்கள் எப்படி இணைந்தார்கள் அதற்கு தடைகள், அல்லது சுமூகங்கள் எப்படியெல்லாம் அமைந்தன என்பதை ஒரு கதையாக எழுதலாமே..! ஏற்கனவே அந்த பாணியில் எழுதி விட்டீர்களா? அப்படியான அதையும் பகிர்ந்தால் வாசகர்களாகிய நாங்கள் ரசித்துப் படிப்போம் . பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 26. இந்தக் கதையை இதோடு முடிப்பது தான் ஒரு சிறுகதைக்கான அழகோடு இருக்கும்.

  அடுத்த கதையில் வேறு விஷயம் பற்றி பேசலாம். கதைகள் வாசிப்பு பற்றி மேலே சில விஷயங்களைப் பகிர்ந்து கொண்டிருக்கிறேன்.

  தங்கள் ரசனைக்கு மிக்க நன்றி, சகோ.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!