சனி, 5 செப்டம்பர், 2020

ஆசிரியர்களை நன்றியுடன் நினைவு கூர்வோம் !

இந்த வார பாசிடிவ் செய்திகள் எல்லாவற்றிற்கும் எங்கள் நன்றி: தினமலர் telegram குழு. 
====
புனே; ஆபத்தான கட்டத்தில் இருந்த நோயாளியை, ஆம்புலன்சில் ஏற்றி, மருத்துவமனைக்கு ஓட்டிச் சென்று உயிர் காத்த டாக்டருக்கு பாராட்டுகள் குவிகின்றன.


latest tamil news

மஹாராஷ்டிராவில், முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில், சிவசேனா, காங்., தேசியவாத காங்., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு, புனே நகரில், கொரோனா மையத்தில் சிகிச்சை பெற்று வந்த ஒரு நோயாளி, திடீரென மூச்சு விட சிரமப்பட்டார். இதையடுத்து, அவரை உடனடியாக, பெரிய மருத்துவமனையில் சேர்க்க, டாக்டர் ரஞ்ஜித் நிகம் என்பவர் உத்தரவிட்டார்.

ஆனால், ஆம்புலன்ஸ் ஓட்டுனர், உடல் நலமின்றி அதே மருத்துவமனையில், 'குளூக்கோஸ்' ஏற்றப்பட்ட நிலையில் இருந்தார்.அதனால், ரஞ்ஜித் நிகம், துணைக்கு ஒரு டாக்டருடன், தானே ஆம்புலன்சை ஓட்டிச் சென்று, நோயாளியை மருத்துவமனையில் சேர்த்துள்ளார். அங்கு நோயாளிக்கு உடனடியாக, 'வென்டிலேட்டர்' பொருத்தப்பட்டது.

இதையடுத்து, நோயாளி அபாய கட்டத்தை தாண்டி விட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மனிதநேயத்துடன், ஆம்புலன்சை தானே ஓட்டிச் சென்று, உயிர் காத்த டாக்டருக்கு, நோயாளியின் மகன் உட்பட அனைத்து தரப்பினரும், பாராட்டு தெரிவித்துஉள்ளனர்.

இது குறித்து, ரஞ்ஜித் நிகம் கூறியதாவது:ஆம்புலன்ஸ் ஓட்டுனருக்கு உடல்நிலை சரியில்லை என்றதும், '108'க்கு போன் செய்தோம். ஆனால், தொடர்பு கிடைக்கவில்லை.வேறு ஒரு ஓட்டுனரை அழைத்தோம். நள்ளிரவு என்பதால் அவர் வர மறுத்து விட்டார்.

latest tamil news

இனியும் தாமதித்தால், நோயாளி உயிர் பிழைப்பது கடினம் என்பதை உணர்ந்தேன்.அதனால், நானே ஆம்புலன்சை ஓட்டிச் சென்றேன். மூன்று மருத்துவமனைகளில், படுக்கை வசதி கிடைக்காமல், நான்காவதாக, ஒரு தனியார் மருத்துவமனையில் அவரை சேர்த்து உடனடியாக சிகிச்சை அளித்ததால், உயிர் பிழைத்துக் கொண்டார். இவ்வாறு, அவர் கூறினார்.
====

ஈக்வடாரில் உலகின் வயதான தம்பதி குயிட்டோ: தென் அமெரிக்க நாடான ஈக்வடாரில் வசித்து வரும், ஜூலியோ சீசர் மோரா, 110, மற்றும் வால்ட்ராமினா குயிண்டேரோ, 104, தம்பதியினர், உலகின் வயதான தம்பதியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளனர். இவர்களின் பெயர்கள், கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது. இந்த தம்பதியினர், 1941ல், காதலித்து திருமணம் செய்துள்ளனர்.

ஜூலியோ காதல் திருமணத்திற்கு பெற்றோர் மற்றும் உறவினர்கள் சம்மதம் கிடைக்க வில்லை. இருப்பினும் அவர்கள் அனைவரையும் உதறி தள்ளிவிட்டு குயிண்டரோவை கரம்பிடித்தார். 79 வருடங்கள் ஒன்றாக வாழ்ந்து வரும் இந்த காதல் தம்பதிக்கு 4 மகன்/மகள்களும், 11 பேரன்களும், 25 கொள்ளு பேரன்களும், 1 பேரன் வயிற்று பேரனும் உள்ளனர். இவர்கள் தங்கள் வாழ்நாளில் ஒரு தடவை கூட விவாகரத்து பற்றி சிந்தித்ததில்லை என்று கூறுகின்றனர்.

latest tamil news

ஓய்வு பெற்ற ஆசிரியர்களான இவர்கள் ஈகுவடார் நாட்டின் தலைநகர் குய்டோவின் வடக்கு பகுதியில் வாழ்ந்து வருகின்றனர். அன்பு, பரஸ்பர மரியாதை, நேர்மையான வேலை, சரியான கல்வி உள்ளிட்டவை ஆரோக்கியமான வாழ்க்கைக்கு அடித்தளம் என, அந்த தம்பதியினர் புன்னகையுடன் தெரிவித்தனர்.
===

கேரளாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 110 வயது பாட்டி முற்றிலுமாக குணமடைந்துள்ளார்.

கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த ரந்தாதனி வரியத் பத்து (110) என்பவர் கடந்த 18 ம் தேதி நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.


வயது அதிகம் என்றாலும் அவருக்கு கொரோனாவுக்கான லேசான அறிகுறிகள் மட்டுமே தென்பட்டுள்ளன. இவர் எந்தவித பதற்றமும் இன்றி சிகிச்சைக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்ததாக அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் கூறியுள்ளனர்.


kerala, corona, recovered, 110 years old, woman, கேரளா, கொரோனா, மீட்பு, 110 வயது, பாட்டி,

===
டெல்லி : சர்வதேச செஸ் கூட்டமைப்பு நடத்திய செஸ் ஒலிம்பியாட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா - ரஷ்யா கூட்டாக வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்திய வீரர்களுக்கு இணைய இணைப்பு சரியாக கிடைக்காததால் போட்டியில் முழுமையாக பங்கேற்க முடியவில்லை. அதன் படி, இந்தியா தோல்வி அடைந்ததாகவே கருதப்பட்டது. எனினும், தங்கள் வீரர்களின் நிலையை விளக்கியது இந்தியா. இதை அடுத்து இந்தியா - ரஷ்யா இரண்டு அணிகளும் வென்றதாக அறிவிக்கப்பட்டது.
===
  பாசிடிவ் காணொளி : ===


தொழிலாளர்களின் மூளை செயல்பாட்டை கண்டறியும் புதிய தொழில்நுட்பத்தை, சென்னை ஐ.ஐ.டி., பேராசிரியர்கள் கண்டறிந்துள்ளனர்.


இந்திய உயர்கல்வி தொழில்நுட்ப கல்வி நிறுவனமான, சென்னை ஐ.ஐ.டி.,யின் கெமிக்கல் இன்ஜினியரிங் துறை தலைவராக இருப்பவர், பேராசிரியர் ராஜகோபாலன் ஸ்ரீனிவாசன்.இவரது தலைமையில், பேராசிரியர்கள் முஹம்மது உமர் இக்பால், பாப்ஜி ஸ்ரீனிவாசன் ஆகியோரது குழு நடத்திய ஆராய்ச்சியில், மனிதர்களின் மூளை செயல்பாடுகளை, ஸ்கேன் செய்து கண்டறியும் தொழில்நுட்பத்தை கண்டறிந்துள்ளனர்.தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள், மனதளவில், அதிக அழுத்தத்துடன் பணியாற்றும் போது, அவர்களது மூளையின் செயல்பாடுகள் குறைந்து, விபத்து ஏற்பட காரணமாகிறது. எனவே, விபத்துகளை தவிர்க்கும் வகையில், இந்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.தலையில், ஸ்கேன் செய்யும் கருவியை பொருத்தி, மூளைகளின் அலைகளை ஆய்வு செய்யும் போது, அழுத்தத்துடன் செயல்படும் தொழிலாளர்கள் கண்டறியப்படுவதாக, ஐ.ஐ.டி., ஆராய்ச்சி குழு தெரிவித்துள்ளது.


===

மதுரை : யாசகம் பெற்று, 11வது முறையாக, ரூ.10,000 கொரோனா நிவாரண நிதி வழங்கிய முதியவருக்கு, பாராட்டு குவிந்து வருகிறது. இதுவரை அவர் 1 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய், கொரோனா நிவாரண நிதியாக வழங்கியுள்ளார்.

துாத்துக்குடி மாவட்டம், ஆலங்குளத்தைச் சேர்ந்தவர் பூல்பாண்டியன், 65. இவர், திருமணம் முடிந்த சில மாதங்களில், குடும்பத்தை பிரிந்து, மும்பை சென்றார். அங்கு வேலை கிடைக்காததால், பிச்சை எடுக்க துவங்கினார். ஊருக்கு திரும்பியவரை குடும்பத்தினர் சேர்க்கவில்லை. பிச்சை எடுத்து வந்தவர், செலவு போக மீதி பணத்தை, கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பல மாநிலங்களிலுள்ள பள்ளிகளுக்கு, மேஜை, நாற்காலிகள் வாங்க வழங்கினார். மும்பையில், 20 ஆயிரம் மரக்கன்றுகள் வழங்கியுள்ளார்.

  
இவர், மே முதல் யாசகம் பெற்று சேமித்த பணம் தலா, 10 ஆயிரம் ரூபாய் வீதம் 10 முறை, மதுரை கலெக்டரிடம், கொரோனா நிவாரண நிதியாக வழங்கியிருந்தார். இந்நிலையில், இன்று பதினோறாவது முறையாக, 10 ஆயிரம் ரூபாயை, கலெக்டர் வினய்யிடம் வழங்கினார். கொரோனா நிதியாக இதுவரை ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் வழங்கிய அவரை பலரும் பாராட்டினர். 

முன்னதாக, சுதந்திர தின விழாவில், பூல் பாண்டியனுக்கு விருது வழங்க முடிவு செய்யப்பட்டது. ஆனால், அவரை கண்டுபிடிக்க முடியாததால், அன்று விருது வழங்க முடியவில்லை. இத்தகவல் தெரிந்து, கலெக்டர் அலுவலகம் வந்த பூல் பாண்டியனுக்கு, கலெக்டர் விருது, சான்றிதழ் வழங்கி கவுரவித்தது குறிப்பிடத்தக்கது.

===

இன்று ஆசிரியர்கள் தினம். 

நம் வாழ்க்கையில் அம்மா அப்பா உடன்பிறந்தவர்களுக்கு அப்புறம், நம் நினைவில் நிற்பவர்கள் யார் என்று பார்த்தால், நமக்கு பாடம் கற்பித்த, நல்வழி போதித்த ஆசிரியர்கள். 

நம்முடைய முன்னேற்றத்துக்கு ஆசிரியர்களின் பங்களிப்பு,  மிகவும் உன்னதமானது. 

இன்று நாம் நமக்கு பள்ளிக்கூடத்தில், கல்லூரியில் ஞானம் அளித்த ஆசிரியப் பெருமக்களையும், அலுவலகத்திலும், வாழ்க்கையிலும் நமக்கு வழிகாட்டியவர்களையும் மனதார நினைந்து, நன்றி தெரிவிப்போம். 

கற்றுத் தந்தவர்களை சற்றே நினைத்து நன்றி செலுத்துவோம். 

நமக்குத் தெரிந்தவற்றை, தெரிந்துகொள்ள ஆசைப்படுபவர்களுக்கு சொல்லிக்கொடுப்போம். 

வாழ்க ஆசிரியப்பணி. 

===

"மாண்புமிகு ஏ.ஆர்.லஷ்மணன்"

ரமா ஸ்ரீநிவாசன் 

என் கணவர் திரு .ஸ்ரீனிவாசன் அவர்கள் கலால் துறையின் சட்டப் பிரிவில் சில வருடங்கள் பணி புரிந்துள்ளார். அவ்வாறு பணி புரிந்தபோது அடிக்கடி சென்னை உயர் நீதி மன்றத்திற்கு சென்று, கலால் துறையின் வாதங்களை முன் வைக்க வேண்டிய அதிகாரியாக இருந்தார். அக்கால கட்டத்தில்தான் மாண்புமிகு ஏ.ஆர்.லஷ்மணன் அவர்கள் '2.5 லட்ச' மாநில அலுவலர்களை வேலை நீக்கம் செய்ததை எதிர்த்து ஜெயலலிதா அரசிற்கு எதிராக வாதாடிய பென்ச்சின் வழக்கு சென்னை நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருந்தது. வாதாடல் மிக அருமையாகவும் மிக கச்சிதமாகவும் இருந்ததாலும் நான் அதை நேர் காண விரும்பியதாலும் நானும் ஒரு கலால் அதிகாரி என்பதாலும் என்னையும் எண் கணவர் அழைத்துச் சென்றார். என்ன ஒரு தெளிவான நடை, என்ன ஒரு தீர்க்கமான பார்வை. 


அவருடைய வாதங்களை கேட்டதிலிருந்தே நான் அவரது அபிமானியாகி விட்டேன். அதுவும் அரசிற்கெதிரான வாதம் என்ற சூழ்நிலையில் எந்த பதட்டமோ பாகுபாடோ இல்லாமல் “என் கடன் பணி செய்து கிடப்பதே” என்ற திருநாவுக்கரசரின் வரிகளுக்கேற்ப அவர் முன் வைத்த ஒவ்வொரு வாதமும் ஆச்சரியத்தையும் அவரது அறிவுத்திறனையும் பிரதிபலித்த்து.

நம் தமிழ் கலாச்சாரப் பிரியரும் சுப்ரீம் கோர்ட் நீதிபதியுமான அருணாசலம் லக்ஷ்மணன் (ஏ.ஆர்.லஷ்மணன்) பி.ஏ. பிஎல். அவர்கள் 22ஆம் தேதி  மார்ச் 1942ல் பிறந்தவர். இவர் இந்திய சுப்ரீம் கோர்ட்டின் நீதிபதியாக 2002 முதல் 2007 வரை பணியாற்றினார். பின்னர், 2006 முதல் 2009 வரை 18வது இந்திய சட்ட ஆணையத்தின் தலைவராகப் பணி புரிந்தவர். 

அவர் சுப்ரீம் கோர்ட் நீதிபதியாவதற்கு முன்னால் சென்னை உயர் நீதி மன்றம் மற்றும் கேரளா உயர் நீதி மன்றம் ஆகியவற்றின் நீதிபதி பதவிகளை வகித்தவர். 2000ல் ராஜஸ்தான் உயர்நீதி மன்றத்தின் தலைமை நீதிபதியாகவும் 2001ல் ஆந்திர மாநிலத்தின் தலைமை நீதிபதியாகவும் பணியாற்றினார். 2007ஆம் ஆண்டு பணியிலிருந்து ஓய்வு பெற்றார். 

ஏ.அர்.லஷ்மணன் தேவகோட்டையின் செட்டியார் நகரத்தார் வகுப்பைச் சேர்ந்தவர். அவர் சுப்ரீம் கோர்ட் அமைத்த, 'முல்லைப்  பெரியாறு குழு'வில் தமிழகத்தின் முகமாகத் திகழ்ந்தவர். 

அவர் நமது மதராஸ் சட்டக் கல்லூரியிலிருந்து தேர்ச்சிப் பெற்று அரசாங்க ப்ளீடராகவும் பல வங்கிகளின் வழக்கறிஞராகவும் பணியாற்றிய பின்னரே மதராஸ் நீதி மன்றத்தின் நிரந்தர நீதிபதியாக ஜூன் மாதம் 14, 1990ல் நியமிக்கப் பட்டார்.

திரு. ஏ.ஆர். லஷ்மணன் தன் 78வது வயதில் திடீர் மாரடைப்பால் திருச்சியில் ஆகஸ்ட் மாதம் 28ஆம் தேதி 2020 இயற்கை எய்தினார். அவரது மனைவி  மீனாக்ஷி ஆச்சி அவர்கள் அதே திருச்சியில் ஆகஸ்ட் 24ஆம் தேதி 2020 காலமானார். அவரது ஒரு மகனான ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் சென்னை நீதி மன்றத்தில் மூத்த வழக்கறிஞராகப் பணி புரிந்து வருகிறார். 

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நிற்வாகத்தில் 2.5 லட்சம் அரசாங்க ஊழியர்கள் வேலை நீக்கம் செய்யப்பட்டபோது அரசாங்கத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்த நீதித் துறையின் பென்ச்சில் அங்கம் வகித்து எஷன்ஷியல் சர்வீசஸ் மெய்ன்டென்ன்ஸ் ஆக்ட் 2003ன் (Essential Services Maintenance Act 2003) கீழ் வெற்றியும் பெற்று 2.5 லட்சம் ஊழியர்களையும் மீண்டும் வேலையில் அமர வழி வகுத்தார். 

ஏ.ஆர். லஷ்மணன் அவர்கள் யூனியன் லா கமிஷனின் சேர்மேனாக இருந்தபோது சுப்ரீம் கோர்ட்டின் பிராந்திய பென்ச்சுகளை இந்தியாவின் நான்கு மண்டலங்களிலும் உருவாக்க வேண்டும் என்றும் அவற்றில் ஒன்று சென்னையில் அமைய வேண்டும் என்று பரிந்துரைத்தார் என்று அட்வகேட் வில்சன் அவர்கள் உரையாற்றும்போது நினைவு கூர்ந்தார். 

ஏ.ஆர்.லஷ்மணன் அவர்களின் தமிழ் மற்றும் தமிழ் பாரம்பரியத்தின் மீதிருந்த ஈடுபாடு மகத்தானது என்றும் அவரது இழப்பானது இந்நாட்டின் சட்ட சகோதரத்துவத்திற்கும் நம் தமிழகத்திற்குமே ஒரு மீள முடியாத பேரிடியாகும் என்றும் கூறினார் திரு வில்சன். 

தமிழ் நாடு வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவரும் மூத்த வழக்கறிஞருமான திரு.எஸ்.பிரபாகரன் அவர்கள் ஏ.ஆர்.லஷ்மணனைப் பற்றி பேசும்போது அவர் நட்பும் நல்லுறவும் மிக்க நீதிபதி என்றும் பார் அசோசியேஷனின் உறுப்பினர்கள் அனைவருடனும் இனிமையாகப் பழகும் பண்புடையவர் என்றும் நினைவு கூர்ந்தார்.

ஏ.ஆர்.எல். என்று யாவராலும் அன்புடன் அழைக்கப் பட்ட அவர் சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக பணியாற்றிய காலத்தில் நாடு முழுவதும் பொது இடங்களில் புகைப் பிடித்தலை மொத்தமாக சட்டத்திற்கு புறம்பானதாக்க மிகவும் பாடு பட்டார் என்றும் திரு.பிரபாகரன் கூறினார். 

மங்கையர் தின விழா ஒன்றில் உரையாற்றும்போது, ஏ.ஆர்.எல். அவர்கள் ஒவ்வொரும் மாநிலத்தின் பெண்களைப் பற்றிய அத்தனை புள்ளி  விவரங்களையும் தவறின்றி எடுத்துரைத்தார் என்றும் கூறினார். 

ஏ.ஆர்.லக்ஷ்மணன் அவர்கள் ஒரு ஜாக் ஆஃப் ஆல் டிரேட்ஸ் (Jack of all trades). தன்னுடைய பிஸியான அட்டவணையின் நடுவே வாய்ஸ் ஆப் ஜஸ்டிஸ் (Voice of Justice), கான்ஸ்டிட்யூஷனல் லா (Constitutional Law) மற்றும் ஆர்பிட்ரேஷன் பிஸினஸ் அன்ட் கமேர்ஷியல் லாஸ் (Arbitration Business & Commercial Laws) ஆகிய புத்தகங்களையும் எழுதி வெளியிட்டுள்ளார். 

இவைகளை தவிர, அவரது வாழ்க்கையில் ஆன்மீகமும் கலாச்சாரமும் முக்கிய பங்கு பெற்றிருந்தன. அவர் தேவக்கோட்டையிலுள்ள ஷீரடி சாய் பாபா கோவிலின் நிறுவனர் ஆவார். மேலும் ராமேஸ்வரம் நகரத்தார் விடுதி ட்ரஸ்ட் மற்றும் ஸ்வாமிமலை நகர விடுதி ட்ரஸ்ட்டுகளின் புரவலராகவும் இருந்தார். இதன் கூடவே கும்பகோணம் நலக்கூஹூர் ஆம்பிரணீஸ்வரர் மங்கலாம்பிகை கோவிலின் பரம்பரை அறங்காவலராகவும் பணியாற்றி வந்தார். 

இத்தனை சிறப்புகளையும் ஒட்டு மொத்தமாக தன்னுள் அடக்கி ஆண்டவர் ஏ.ஆர்.லஷ்மணன் அவர்கள். எந்த உலக பந்தம் உடைந்தாலும் அசராதவர் தன் மனைவி ஆகஸ்ட் 24, 2020 இயற்கை எய்தியதை ஜீரணிக்க முடியாமல் வாழ்க்கை பந்தத்தைத் தொடர அவருடன் சேர்ந்து விட்டாரோ என்று எண்ணும்படி மனைவியைப் பிரிந்த நான்காவது நாள் இயற்கை எய்தினார் என்பது ஓர் அதிசயமான உண்மை.

அவரது நீண்ட வெற்றிகரமான சட்டப் பயணத்திற்கும் ஆன்மீகத் தொண்டிற்கும், அவரது அயராத உழைப்பிற்கும் என்னுடைய இந்த கட்டுரை ஓர் அர்ப்பணிப்பாகும்.
====

58 கருத்துகள்:

 1. ர ஶ்ரீ கட்டுரை நல்லா இருந்தது. எழுத்துப் பிழைகள் ருசியைக் குறைக்கிறது. கட்டுரையின் கடைசி வரியான, "தன் இனத்திற்கு அவரது அயராத உழைப்பு" தவறான பொருள் தருகிறது.

  இன்றைய பாசிடிவ் செய்திகள் அருமை

  பதிலளிநீக்கு
 2. நகரத்தார்களின் சைவசமய பக்தி, கோவில் தொண்டுகள், கோவிலுக்காகச் செய்தவை மிகவும் குறிப்பிடத் தக்கவை. இராமநாதபுரத்தின் பகுதிகளில் அவர்கள் இருந்த, ஊர்களிலெல்லாம் நிறைய ஆலயங்கள் கட்டியுள்ளனர். மாண்புமிகு நீதிபதி அவர்களை நினைவுகூர்ந்தது சிறப்பு

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பதிவு ஆசிரியர் சார்பில் -- இந்த மாதிரி சுருக்கெழுத்துகள் கீதா சாம்பசிவம் அவர்களின் காப்பிரைட் ஆச்சே. நானும், எதுக்கு காலைல, பசிக்கு ஆகாரம் சாப்பிட்டாச்சான்னு கேட்கறார் என யோசித்தேன்.

   நீக்கு
 3. ஜெயல்லிதாவின் அன்றைய முடிவை பொதுமக்கள் அனைவரும் மிகவும் பாராட்டினார்கள். அத்தகைய பணி இந்த அரசு ஊழியர்களுடையது

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //ஜெயல்லிதாவின் அன்றைய முடிவை பொதுமக்கள் அனைவரும் மிகவும் பாராட்டினார்கள்.// ஆனால் அடுத்த தேர்தலில் அவர் அரசு ஊழியர்களின் ஆதரவை இழந்து, தோல்வியை சந்தித்தற்கும் அதுவே காரணமாக அமைந்தது.  

   நீக்கு
  2. ஆமாம். பொதுமக்கள், ஜெயலலிதா தைரியமாக அரசு ஊழியர்களின் கொட்டத்தை அடக்கியதற்கு பாராட்டு தெரிவிக்கும் விதமாக வாக்குச்சாவடிக்கு வரவில்லை, அரசு ஊழியர்கள், அவர்கள் குடும்பம் வந்து வாக்களித்ததைப் போல.

   நீக்கு
 4. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
  நல்ல பாசிடிவ் செய்திகளுக்கு மிக மிக நன்றி.

  முக்கியமாக புனே டாக்டர் ரஞ்சித் நிகம் என்னாளும் நன்றாக
  இருக்க வேண்டும்.

  பதிலளிநீக்கு
 5. முதலில் வந்த நெல்லைத் தமிழனுக்கும், இனி வரப் போகும்
  அன்பு துரை, கீதா சாம்பசிவம் எல்லோருக்கும் இறையின் நல்லருளால் என்னாளும் நன்னாளாகட்டும்.
  ஈக்வடார் தம்பதிகளுக்கு இன்னும் பல்லாண்டு இணை பிரியாமல்
  இருக்க வாழ்த்துகளும் வணக்கங்களும்.

  கேரளாவின் 110 வயது அம்மாவுக்கும் வந்தனங்கள்.

  பதிலளிநீக்கு
 6. ஆசிரியர்கள் தினத்தில் ஐஐடி ஆசிரியர்களின் நற்பணி வெளி வந்தது
  மிக மகிழ்ச்சி.
  நம் வாழ்வை உயர்த்திய ஆசிரியர்கள் அனைவருக்கும்
  நம் வந்தனங்கள் எப்பொழுதும்.

  இந்தியா வெற்றி பெற்று ரஷ்ய வீரர்களுடன் சேர்ந்து பரிசு
  பெற்றது பூரிக்க வைக்கிறது.

  பதிலளிநீக்கு
 7. மதுரை பூல் பாண்டியன் ஐயா , விருது பெற்றது
  முக்கிய செய்தி. இவரைப் போல ஒரு அதிசய
  மனிதரை உலகம் இது வரை கண்டிராது.

  அனைத்து பாசிட்டிவ் செய்திகளுக்கும்
  மிக மிக நன்றி.

  பதிலளிநீக்கு
 8. திரு ஏ.ஆர் .லக்ஷ்மணன் அவர்களைப் பற்றி விவரமான , கட்டுரையை அருமையாகத் தொகுத்தளித்திருக்கும் ரமா ஸ்ரீனிவாசனின் உழைப்பு
  போற்றப் படவேண்டிய ஒன்று.
  அன்பு வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 9. நல்ல உள்ளங்களை வாழ்த்துவோம்.
  ஆசிரியர்கள் தின வாழ்த்துகள்.

  திரு. ஏ.ஆர்.லஷ்மணன் அவர்களைப்பற்றி அறிந்தவன் நான். பகிர்வுக்கு நன்றி மேடம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தேவக்கோட்டை என்று படித்தவுடனேயே உங்களை நினைத்தேன்.

   நீக்கு
  2. அவர் தமிழர் சார். எனவே தமிழர் என்று சொல்வோம்; தலை நிமிர்ந்து நிற்போம்.

   நீக்கு
 10. இன்றைய பாசிட்டிவ் செய்திகள் சற்று வித்தியாசமாக இருக்கின்றன. எ.ஆர்.லக்ஷ்மணன் பற்றிய ரமா ஸ்ரீனிவாசனின் கட்டுரை சிறப்பு! நிறைய தகவல்கள் தெரிந்து கொண்டோம். 'Face of Tamailnadu' என்பதை தமிழ் நாட்டின் முகமாக திகழ்ந்தவர் என்று மொழி பெயர்த்ததற்கு பதிலாக, தமிழகத்தின் அடையாளமாக விளங்கினார் அல்லது தமிழகத்தின் பிரதிநிதியாக திகழ்ந்தவர் என்று எழுதியிருக்கலாம். 

  பதிலளிநீக்கு
 11. அனைத்து நல்ல உள்ளங்களுக்கு வாழ்த்துகள்...

  திரு. ஏ.ஆர். லஷ்மணன் அவர்களின் பற்றிய தகவல்கள் சிறப்பு... முடிவு வரிகளில், அவரின் அனைத்திற்கும் காரணம் யார் என்பதும் சிறப்பாக இருக்கலாம்...

  பதிலளிநீக்கு
 12. உயிர் காத்த டாக்டரை வாழ்த்த வேண்டும் வாழ்த்துவோம்.

  //அன்பு, பரஸ்பர மரியாதை, நேர்மையான வேலை, சரியான கல்வி உள்ளிட்டவை ஆரோக்கியமான வாழ்க்கைக்கு அடித்தளம் என, அந்த தம்பதியினர் புன்னகையுடன் தெரிவித்தனர்.//

  நன்றாக சொன்னார்கள். அவர்கள் இருவரையும் வணங்கி கொள்கிறேன்.

  //கேரளாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 110 வயது பாட்டி முற்றிலுமாக குணமடைந்துள்ளார்.//
  முதியவருக்கு வணக்கம்

  நம்பிக்கை தரும் செய்தி.

  //இதை அடுத்து இந்தியா - ரஷ்யா இரண்டு அணிகளும் வென்றதாக அறிவிக்கப்பட்டது.//

  நல்ல அறிவுப்பு

  பாசிடிவ் காணொளி அருமை, மாணவர்களுக்கு பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.

  //தொழிலாளர்களின் மூளை செயல்பாட்டை கண்டறியும் புதிய தொழில்நுட்பத்தை, சென்னை ஐ.ஐ.டி., பேராசிரியர்கள் கண்டறிந்துள்ளனர்.//

  பேராசிரியர்களுக்கு வாழ்த்துக்கள்.


  ஆசிரியர் தின வாழ்த்துக்கள்  பதிலளிநீக்கு
 13. //கலெக்டர் அலுவலகம் வந்த பூல் பாண்டியனுக்கு, கலெக்டர் விருது, சான்றிதழ் வழங்கி கவுரவித்தது குறிப்பிடத்தக்கது.//

  அவரின் நல்ல உள்ளத்திற்கு வணக்கங்கள்

  பதிலளிநீக்கு
 14. ஏ.ஆர்.லஷ்மணன் அவர்களைப் பற்றிய செய்திகள் வட்ஸ் அப்பில் வந்தது.
  நல்ல மனிதர். மனைவி மேல் அன்பு உடையவர் அவர் பிரிவை தாங்கி கொள்ள முடியாமல் உணவே எடுத்துக் கொள்ளவில்லையாம்.

  நல்ல மனிதரைப் பற்றிய கட்டுரையை அருமையாக பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி கோமதி. நல்ல செய்திகளை உடனுக்குடன் வழங்குவது ரமா ஸ்ரீனிவாசன் தொலைக்காட்சி. டாட டடடா ( இது பழைய தொலைக்காட்சியில் வரும் பாப்புலர் மெட்டு. 😂😂

   நீக்கு
 15. போற்றத்தக்கவர்களைப் பற்றிய அருமையான பதிவு. எனக்குப் பாடத்தோடு, நற்குணங்களை சொல்லித்தந்த, ஆசிரியர் என்பதற்கு மேலாக அக்கறையோடு கவனித்த, அச்சொல்லுக்கு இலக்கணமாகத் திகழ்ந்த பெருமக்களை நன்றியோடு நினைத்துப்பார்க்கிறேன்.

  பதிலளிநீக்கு
 16. அனைத்து நல்ல செய்திகளுக்கும் வாழ்த்துகள், பாராட்டுகள். புனே மருத்துவர் பற்றி முகநூலிலும் படித்தேன். அதே போல் பூல் பாண்டியன் செய்தியும் வந்தது. அவரும் விருது பெறத் தகுதியானவரே! ஐஐடி பேராசிரியர்களின் முயற்சிகளுக்கு நல்லதொரு பலன் விளையட்டும். செஸ் விளையாட்டில் இந்தியாவும் ஜெயித்ததாக அறிவித்தமைக்கு நன்றி செலுத்தினாலும் இது வேண்டுதலால் கிடைத்த வெற்றி தானே என்னும் எண்ணமும் வருவதைத் தடுக்க முடியவில்லை. ஈக்வடார் தம்பதிகள் இன்னும் பல்லாண்டு சிறப்புடன் வாழ வேண்டும். கேரளாப் பாட்டி பற்றியும் முகநூலில் படித்தேன். அனைத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 17. மனைவியின் பிரிவைத் தாங்க முடியாமல் உயிர் நீத்த நீதிபதி ஏ.ஆர்.லக்ஷ்மணன் பற்றி ரமா ஸ்ரீநிவாசனின் தொகுப்பு அருமை. தெரியாதவர்கள் பலரும் தெரிந்து கொள்ள வசதி. நன்றாக எழுதி உள்ளார் திருமதி ரமா. பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
 18. துரை எங்கே காணோம்? உடல்/மனம் நலம் தானே?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மின்நிலா - முகநூல் பக்கத்தில் மதியம் ஒரு மணிக்கு கமெண்ட் போட்டிருக்கிறார்.

   நீக்கு
  2. ஓஹோ! நானும் வேறு எதிலோ பார்த்த ஞாபகம். இங்கே காணோமேனு கவலையா இருந்தது.

   நீக்கு
  3. இதோ வந்து விட்டேன்...

   இந்த நிறுவனத்துக்கு ISO சான்றுக்காக ஆய்வுகள்... அவை முடிந்து விட்டன..

   ஆயினும் வேறொரு சமையல் கூடம் புனரமைக்கப்படுவதால் அந்த அலகு இந்த சிறு சமையல் அறைக்குள் செயல் படுகின்றது...

   மதியத்துக்கும் இரவுக்குமாக 320 + 320 கிலோ அரிசி... மற்றவற்றை நீங்களே கணக்கிட்டுக் கொள்ளவும்..

   அதீத உஷ்ணத்தால் உடல் நலக்குறைவு..
   ஜலதோஷம்...

   இன்று ஆசிரியர் தின பதிவு கூட செய்ய முடியவில்லை...

   நிலைமை எப்படி என்று நாளை பார்க்கலாம்...

   நீக்கு
  4. அக்கா அவர்களது நலம் விசாரிப்புக்கும் தகவல் அளித்த கௌதம் ஜி அவர்களுக்கும் நன்றி..

   நீக்கு
 19. ஆசிரியர் தினம்! நான் கற்கையில், அபாரமான சில ஆசிரியர்கள் எனக்கு வாய்த்திருக்கிறார்கள், கிராமத்துப் பள்ளியிலும், கல்லூரியிலும். புதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் ஆங்கிலம் நடத்திய துணைப்பேராசிரியர்கள் திறனானவர்கள். ஆங்கில மொழியில் ஆர்வத்தை விதைத்தவர்கள். தமிழில் மனோன்மணீயம் நடத்திய பேராசிரியரும் அருமையான ஆசிரியர். நினைவில் வரிசையாக வருகிறார்கள்.

  பதிலளிநீக்கு
 20. உங்கள் பதிவு ஆசிரியர்களை நன்றியுடன் நினைவு கூர்வோம் ! பரிவை குமாரின் மலரும் நினைவுகளை தூண்டிவிட்டது. பார்த்தீர்களா? 

  http://vayalaan.blogspot.com/2020/09/blog-post_5.html

  குழுமத்தில் உள்ளவர்கள் தொடர் பதிவாக்கினால் என்ன? 

  பதிலளிநீக்கு
 21. வணக்கம் சகோதரரே

  இன்றைய பாஸிடிவ் செய்திகள் அனைத்தும் நன்றாக உள்ளன. தொகுத்து வழங்கிய தங்களுக்கு மனமார்ந்த நன்றிகள். செய்திகளில் வந்த வயதானவர்களுக்கு மரியாதைக்குரிய வணக்கங்கள்.

  தலைமை நீதிபதி திரு.ஏ.ஆர்.லட்சுமணன் அவர்களைப் பற்றிய கட்டுரையை மிக அருமையாக தொகுத்தளித்த சகோதரி ரமா ஸ்ரீநினிவாசன் அவர்களுக்கு மனம் நிறைந்த நன்றிகள். அவரைப் பற்றிய நிறைய செய்திகளை இக்கட்டுரையின் மூலமாக தெரிந்து கொண்டேன்.

  இன்றைய ஆசிரியர் தினத்தன்று நான் இங்கு அறிமுகமானதிலிருந்து ( எ.பியில்) படித்து தெரிந்து கொண்ட நிறைய விஷயங்களையும் நினைவு கூர்ந்து கொண்டேன். பள்ளியிலிருந்து கற்றுக் கொண்ட பண்பான படிப்பறிவை போதித்த ஆசிரிய பெருமக்களுக்கும, மதிப்பான நட்பை தந்து கொண்டிருக்கும் எ.பி ஆசிரியர்களுக்கும் என் பணிவான நன்றிகள். இன்று என் தாமதமான வருகைக்கு மன்னிக்கவும்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தாமதமான வருகை, முதல் வருகை என்றெல்லாம் பாகுபாடு கிடையாது. எப்போ வேண்டுமானாலும் வரலாம். உங்கள் கருத்துகளைப் பதியலாம். நன்றி.

   நீக்கு
 22. இந்த வாரத்தின் பாசிடிவ் செய்திகள் அனைத்துமே நன்று. அனைவருக்கும் பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

  ர.ஸ்ரீ. அவர்களின் கட்டுரையும் நன்று.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!