செவ்வாய், 23 பிப்ரவரி, 2021

சிறுகதை : தாய்மண் - ஆன்சிலா ஃபெர்ணான்டோ.

மத்யமரில் புழங்குகிறவர்களுக்கு ஆன்சிலா ஃபெர்ணான்டோ என்னும் பெயர் பரிச்சயமாகத்தான் இருக்கும்.

பாரத ஸ்டேட் வங்கியில் அதிகாரியாக பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றுக் கொண்டதும், அவருக்கு விருப்பமான எழுத்து, பாட்டு போன்றவற்றில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார். தெளிந்த,ஆழ்ந்த சிந்தனையும், அதை வெளிப்படுத்துவதில் தைரியமும், நேர்மையும் கொண்டிருக்கும் இவர் எங்கள் ப்ளாகிற்காக எழுதியிருக்கும் முதல் கதை.  ஆன்சிலாவை எங்கள் பிளாகிற்கு அழைத்து வருவதில் எனக்கு சந்தேஷம். அவர் நம்மோடு தொடர்ந்து பயணிப்பார் என்று நம்பலாம்.

- பானுமதி வெங்கடேஸ்வரன் -



தாய்மண்
ஆன்சிலா ஃபெர்ணான்டோ.
=====================================

ரமணன் இரவு வீட்டுக்கு வந்ததும் தன் அலைபேசியை எடுத்து, விட்டுப்போன அழைப்புகள், செய்திகளைப் பார்த்தார். செய்திகள் மற்றவர்களிடமிருந்து. அழைப்புகள் அப்பாவிடமிருந்து.

அப்பா எதற்குக் கூப்பிட்டிருப்பார் என்று தெரிந்ததுதான். கொஞ்ச நாட்களாகவே எதைச் சொல்லிக் கொண்டேயிருக்கிறாரோ அதே விஷயம்தான். அதாவது அவருக்கு உடம்புக்கு நல்ல சுகமில்லை. அவர் காலம் அதிகமில்லை. அவர்களைப் பார்க்க முடியுமா?  ஊரில் அவர்
விவசாயம் செய்து பராமரித்துக் கொண்டிருக்கும் ஐந்து ஏக்கர் விவசாய நிலத்தை என்ன செய்வது? விலைக்குக் கேட்டு வருபவர்களுக்குக் கொடுத்து விடலாமா? ரமணனுக்கு இந்தக் கேள்விக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமலேயே அதைத் தவிர்த்துக் கொண்டிருந்தார்.

அது செழிப்பான, விதை போட்டால் தங்கமாகக் கொழிக்கும் செம்மண் பூமி. அப்பா, தாத்தா என்று பரம்பரை, பரம்பரையாகப் பார்த்துப் பார்த்து விவசாயம் செய்து, கண்போலக் காத்து, உரமும் எருவும் இட்டு, ஏர்க்கால் எடுத்து, விளைச்சலும், அறுவடையுமாகக் கொட்டிக் கொடுத்துக் கொண்டிருக்கும் அட்சய பாத்திரம்.

அதில் அப்பா நெல்லும், தென்னையும், கடலையும், மிளகாயும், வாழையும் போட்டிருந்தார்.

அதிலேயே நடுவில் வீடு. குளிர்ந்த காற்றும், நிழலும், பசுமையும் சூழ்ந்த பூலோக சொர்க்கம்.

மூன்றடியில் தண்ணீர். தென்னங்காய்கள்தான் இரு கைகளில் அடங்காதென்றால், மூன்று மூன்றாய் விளைந்த கடலைக்காய்கள், காரமும் உரமும் கொண்ட பெருத்த சிவப்பு மிளகாய், திரண்ட பருப்புடன் கூடிய நெல், முழங்கையில் பாதிக்கு நீண்ட வாழைக்காய்.

அங்கேதான் அவர் பிறந்தார், வளர்ந்தார், வாழ்ந்தார். வாழைக் குலைகளுக்கும், முற்றிக் காய்ந்து கொண்டிருந்த மிளகாய்க்கும், மண்ணோடு பிடுங்கிப் போடப்பட்ட கடலைக்கும், அவித்துக் காயப் போட்டிருக்கும் நெல்லுக்கும், மட்டை உரிக்கப்பட்டுக்கொண்டிருக்கும்
தேங்காய்களுக்கும் நடுவில். இதற்கெல்லாம் வந்து சேர்ந்து அங்கேயே கூடும் கட்டி, குடித்தனமும் செய்து கொண்டிருந்த பறவைகளோடும், பட்டாம் பூச்சிகளோடும். அங்கே உயிர்ப்பு நிகழ்ந்து கொண்டேயிருந்தது.

ஆனால் கல்லூரிக்கென்று வெளியில் போய், வேலை கிடைத்து ஒரு பெரிய கம்பெனியில் அதிகாரியாகி, இதோ சேல்ஸ் எக்ஸிக்யூடிவ் ஆனபின் போய் வருவது எப்போதோ என்றாகிவிட்டது. அங்கிருந்து தேங்காயும், வாழைப்பழமும், அரிசியும் வருவதோடு சரி.

அதைக்கூட வேண்டாம் என்றால் அப்பா விடுவதாக இல்லை. அம்மா இறந்தபின் அந்த இடத்தைவிட்டு அசைவதாகவும் இல்லை.  'இங்கேதான் பிறந்தேன். வாழ்ந்தேன். இங்கேயேதான் என் முடிவும்' என்று தீர்மானமாகச் சொல்லிவிட்டார்.

நல்லவேளை கிராமம் என்பதால் சமையலுக்கும், வீட்டு வேலைகளுக்கும் ஆட்கள் கிடைத்தார்கள். 

ரமணன் குளித்து, உடை மாற்றி சாப்பிட உட்கார்ந்தார். கௌரி அன்றைக்கு செய்திருந்த தோசையையும், சட்னியையும் சாப்பிட்டு முடிக்கவும், அவள் தண்ணீருடனும், மாத்திரைகளுடனும் வந்தாள். காலையில் நான்கு, இரவில் நான்கு மாத்திரைகள்.

வேலை தந்த பரிசு அது. அது பணமும், ஸ்டேட்டஸூம் தந்தது. குழந்தைகள் படிப்புக்கும், திருமணங்களுக்கும் உதவியது.  பதிலுக்கு ஆரோக்கியத்தை எடுத்துக் கொண்டது. மனஅழுத்தம், வேகம், ஓட்டம் , உயர்ந்த இலக்குகள் என்று போகப் போக உடல்சுகம் கீழே இறங்கிக் கொண்டே வந்தது. இரத்த அழுத்தம், நீரிழிவு, தூக்கமின்மை...

'இப்படியே போனா அப்பா வயசு வரைக்குமாவது இருப்பேனா?' என்று யோசித்தார்.

இன்றைக்கு அவரோடு வேலை செய்யும் நாகராஜூக்கு ஹார்ட் அட்டாக் வந்து ஆஸ்பத்திரியில் ஐசியூவில் வைத்திருப்பதாகத் தெரிந்தவுடன் போய்ப் பார்த்துவிட்டு வந்திருந்தார். அது கௌரிக்கும் தெரியும்.

"என்ன, வந்ததிலேயிருந்து ஒரே யோசனை?" என்றாள் கௌரி.

"வீஆர்எஸ் வாங்கிட்டு ஊர்ப்பக்கம் போய் விவசாயம் பண்ணலாம்னு தோணுது. என்ன நினைக்கிறே?"

கௌரி பதிலுக்கு "நல்லா யோசிச்சுப் பண்ணுங்க. ஆனா எனக்கு எதுவும் ஆட்சேபணை இல்லை" என்றாள்.

"யோசிச்சுட்டேன் கௌரி. இந்த வயசுக்குமேல உக்காந்து வேலை செய்ய வசதி இருக்கும்போது ஏன் ஓடணும்?" என்றார் முடிவாக.

அந்த வாரக் கடைசியில் இருவரும் ஊருக்குப் புறப்பட்டுச் சென்றார்கள். வீடு பக்கத்தில் வந்ததும் ரமணன் உற்சாகத்தில் வேகமாக நடந்தார். சும்மாவே அவர் இரண்டெட்டு வைத்தால் கௌரி நாலெட்டு வைக்க வேண்டியிருக்கும்.  இப்போ கேட்பானேன்?


போகட்டும். அவர் பூமி, அவர் உலகம் !

50 கருத்துகள்:

  1. நல்ல கதை. "அங்கே உயிர்ப்பு நிகழ்ந்து கொண்டேயிருந்தது", "உக்காந்து வேலை செய்ய வசதி இருக்கும்போது ஏன் ஓடணும்?" ஈர்த்த வரிகள்.

    பதிலளிநீக்கு
  2. அனைவருக்கும் இனிய காலை வணக்கம். அனைவரும் என்றும் நலமுடன் இருக்க
    இறைவன் அருள் நிறையட்டும்.

    பதிலளிநீக்கு
  3. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள், அனைவர் வாழ்விலும் ஆரோக்கியம் மேலோங்கப் பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
  4. கதை சட்டென்று முடிந்து விட்டாற்போல் ஒரு எண்ணம். ஏதோ விட்டுப் போய்விட்டாற்போலவும் தோற்றம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிக்கல் எதுவும் இல்லாத கதை.

      நீக்கு
    2. ம்ம்ம்ம்ம்ம்! அப்படியா? ஆனால்,,,,,,,,,,,,,,

      நீக்கு
    3. இந்தக்கதை ஒரு புகைப்படத்துக்காக எழுதப்பட்டது. அந்தப் புகைப்படம் இல்லாமல் அதன் இஃபெக்ட் குறைவாகத் தோன்றும்.

      நீக்கு
  5. அன்பு துரை செல்வராஜு கதைகளைப் படித்து நம்முள் வளர்ந்திருந்த
    கிராம வாழ்க்கை,
    இப்போது மீண்டும் புதிதாகப்
    பூத்திருக்கிறது.
    புதிய அறிமுகமாக ஆன்சிலா ஃபெர்னாண்டோ
    எழுதிப் படைத்திருக்கும்
    இனிய கதை கண்முன்னே நடக்கும்,வளரும் பயிர்களைப்
    போல சம்பவங்களை அழகாகக் கொடுத்திருக்கிறார்.
    இது போல் வீடு, கிராமம்,பயிர்கள் இருக்கின்றன என்று அறிய
    வர மிக மகிழ்ச்சி.

    இவ்வளவு அருமையான எழுத்தாளரை
    அறிமுகம் செய்த பானுமதி வெங்கடேஸ்வரனுக்கு
    மிக நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அருமையான இந்தப் பின்னூட்டத்திற்கு மிகுந்த நன்றி. மிகுந்த ஊக்கம் தருகிறது. என்னை இந்தத் தளத்திற்கு அறிமுகம் செய்த பானுமதி அவர்களுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  6. புதிய ஆசிரிய அறிமுகத்திற்கு
    வாழ்த்துக்கள். உங்களை நான் ஃபெர்னாண்டோ ஸார் என்று அழைக்கலாமா?

    பதிலளிநீக்கு
  7. நல்லதொரு கதை. கிராமத்து வாழ்க்கை நோக்கியே இப்போது பலரும் செல்கிறார்கள். நண்பர் ஒருவர் வி.ஆர்.எஸ். எடுத்துக் கொண்டு தென்காசி அருகே கிராமத்தில் பண்ணை அமைத்திருக்கிறார்.

    புதிய வருகை - உங்கள் கதைப் பக்கத்திற்கு! வாழ்த்துகளும் பாராட்டுகளும். கதாசிரியருக்கும் வாழ்த்துகள். தொடர்ந்து எழுதட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் சொல்வது சரிதான். இது உண்மை நிகழ்ச்சிகளை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டதுதான். நன்றி.

      நீக்கு
  8. வழுக்கிக் கொண்டு போகும் எழுத்து நடை. வாசிக்க வாசிக்க நெருடல் ஏதுமில்லாமல் தடங்கலில்லாத தார்ச்சாலையில் விரையும் வாகனத்தில் பயணிக்கும் சுகமிருந்தது
    இங்கு கதைக்கான ஆரம்பம் முகிழ்க்கப் போகிறது என்று நினைத்த இடத்து, கதை வலிந்து கொண்ட பொழுது ஏமாற்றமாக இருந்தது.
    அஸ்திவாரம் எல்லாம் வலுவாகப் போட்டு கட்டிடத்தை எழுப்பாத நிலை.
    அடுத்த கதையில் இந்தக் குறையை நிவர்த்தி செய்வீர்கள் என்ற எதிர்பார்ப்பு எகிறியிருக்கிறது. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இது ஒரு புகைப்படத்துக்காக எழுதப்பட்டு அதில் வந்து முடிந்த கதை. நன்றி.

      நீக்கு
  9. ** கதை வலிந்து முடிவு கொண்ட பொழுது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் ஏற்கனவே சொன்னதுபோல புகைப்படத்துக்காக எழுதப்பட்ட கதை. தனியாகப் படிக்கும்போது வித்தியாசமாகத் தோன்றும். நன்றி.

      நீக்கு
  10. அன்பின் வணக்கம் அனைவருக்கும்...
    நலம் வாழ்க எங்கெங்கும்...

    பதிலளிநீக்கு
  11. புதியதோர் உலகம் செய்வோம்!...

    வருக வருக... தங்களுக்கு நல்வரவு...

    பதிலளிநீக்கு
  12. பதின்ம வயதுகளில் கிராமத்தில் வளர்ந்த நினைவுகள் நெஞ்சில் ஊடாடுகின்றன...

    கதை மிகவும் பிடித்திருக்கிறது...

    பதிலளிநீக்கு
  13. கதை மிகவும் அழகாக சொல்லப்பட்டு இருக்கிறது வ ர்ணனைகள் அபாரம் மனசு சட்டென்று மாறிக் கிளம்பி கிராமத்திற்கு வந்துவிட்டது எல்லோராலும் முடியாத காரியம் ஆனால் இப்படி எல்லோரும் செய்துவிட்டால் கிராமங்கள் பழையபடி மிகவும் அழகாக மாறிவிடும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எல்லோராலும் முடியாது என்றாலும் முடிந்தவர்கள், அதிலும் சிறு வயதினர் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

      நீக்கு
  14. நல்ல சரளமான,நடையில் எழுதப்பட்டிருக்கும் கதை. முடிவுதான் சற்று விரைந்து வந்து விட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இத்தனை வரிகளுக்குள் எழுத வேண்டும்னு வரும்போது விரைந்து முடிக்கிர மாதிரி ஆயிடுது.

      நீக்கு
  15. காலையில் நான் முதல் முதல் கருத்துச் சொல்லும்படி நேர்ந்தால் எதுவும் சொல்லாமல் சென்றுவிடுவேன். ஆனால் இன்று முடிவு சட்டென வந்துவிட்டதாகத் தெரிவித்திருக்கேன். பார்க்கப் போனால் இந்த முடிவு எடுக்கும்படியான அடிப்படைக்காரணம், ஆணித்தரமான காரணம் எங்கே? என்ன காரணத்தால் இப்படி முடிவெடுத்தார். முடிவெடுத்தவுடனே அதை நிறைவேற்றிவிட்டாரா? இப்படி எல்லாம் ரஜினி/கமல் படங்களில் வரலாம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆணித்தரமான காரணம், நலிந்து வரும் ஆரோக்கியம். காலையில் நான்கும், மாலையில் நான்குமாக எடுக்கும் மாத்திரைகள். நண்பருக்கு வந்த ஹார்ட் அட்டாக். ஒரு வயதுக்குமேல் எது முக்கியம்? பணமா? ஆரோக்கியமா? உயிரா?என்ற கேள்வி.

      நீக்கு
  16. அழகான தமிழில் இனிமையான அழகான அர்த்தம் பொதிந்த கட்டுரை! :)))))

    பதிலளிநீக்கு
  17. கதை நல்லா  இருக்கு .ஆனால் இது அங்கே நகரவாசிகளுக்கே கிராமத்துக்கு மீண்டும் சென்று புதிய வாழ்வை துவங்க நெடுங்காலம் எடுக்கும் .கதையில் ஹீரோ இவ்ளோ சீக்கிரமா கிராமத்துக்குள் இன்ஸ்டன்ட்டா கால் வைச்சிட்டாரே என்ற எண்ணம் தோன்றுவதை தவிர்க்க இயலவில்லை .ஆனால் உயிரின் மீதான எதிர்காலம் குறித்த  பயம் எதையும் செய்ய இயலும்னும் தோணுது .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் கடைசி வரி உண்மை. கதையின் நாயகன் சிறு வயதினர் அல்ல. எது நல்லது என்று யோசிக்க முடிந்தால் முடிவு எடுப்பது சுலபம்தான். மிடில் மானேஜ்மென்டில் இருப்பவர்கள் வீஆர்ஸ் எடுப்பது சகஜமாகிவிட்டது.

      நீக்கு
  18. கதை நன்றாக இருக்கிறது.
    கதைக்கு பொருத்தமாய் படமும் நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  19. பதில்கள்
    1. இதற்குமேல் எப்படி கதை சொல்வது? சம்பவங்கள் நிறைந்த கதைக்காலம் முடிந்து இது நுட்பமான உணர்வுகளின் கதைக் காலம்.

      நீக்கு
  20. சில முடிவுகள் சட்டென்று எடுக்கப்பட வேண்டும். அதிகம் யோசித்தால் மனம் மாறி விடும். ஒரு காலத்தில் நாங்கள் கூட திருக்கண்ணபுரத்தில் குடியேறி விட வேண்டும் என்று நினைத்தோம். கணவர் தனது உடல்நிலையையே காரணம் காட்டி இத்தனை உடம்பை வைத்துக் கொண்டு எப்படி இங்கு வருவது? எமர்ஜன்சி என்றால் என்ன செய்வது? என்று சொல்ல முடிவு மாறி விட்டது.
    அப்பாவின் நிலை என்ன ஆகுமோ என்று யோசித்த எனக்கு கதையின் முடிவு பிடித்திருந்தது. மனதுக்கு மிகவும் நெருக்கமாக இருந்தது. பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!