திங்கள், 22 பிப்ரவரி, 2021

'திங்க'க்கிழமை :  மடர் பனீர் /ஜெயின் முறை -  கீதா சாம்பசிவம் ரெஸிப்பி 

 கொஞ்ச நாட்களாக வெங்காயம் அலர்ஜியாக ஆகி விட்டது. சாப்பிடுவோம். இல்லைனு சொல்லலை. இப்போ மாமியார் ஸ்ராத்தம் வந்தப்போ அதுக்காகப் பத்து நாட்கள் முன்னர் வெங்காயம், பூண்டு, மசாலாக்களை நிறுத்தியதில் இருந்து அந்தப் பழக்கத்திலேயே இருக்கோம். இன்னும் மாற்றவில்லை. கிராம்பு, ஏலக்காய் மட்டும் மசாலா சாமான்கள் போடும் இடத்தில் சேர்த்துப் பண்ணுகிறேன். அந்தச் சமயம் மடர் பனீர் வெங்காயம், பூண்டு இல்லாமல் பண்ணினேன். அதை இங்கே பகிர்கிறேன்.

பொதுவாகக் காய்ந்த பட்டாணியில் மடர் பனீர் அதிகம் பண்ணினாலும் இப்போப் பட்டாணிக்கான பருவம் என்பதால் பச்சைப் பட்டாணி கிலோ 40 ரூபாய் விலையில் கிடைப்பதால் அதை வாங்கி உரித்து வைத்துக் கொள்கிறோம். இந்த மடர் பனீர் செய்வதற்குத் தேவையான சாமான்கள்.

பச்சைப் பட்டாணி ஒரு கிண்ணம் சுமார் 200 கிராம். உரித்துக்கழுவி வெந்நீரில் போட்டு வைக்கவும்.


தக்காளி  4, பனீர் சுமார் 100 கிராம் அளவுக்கு. எடுத்துக் கழுவித் துண்டங்களாக்கி வைக்கவும்.



இஞ்சி, பச்சை மிளகாய், கொத்துமல்லி, புதினா (இருந்தால்) இஞ்சி/பச்சை மிளகாய் அவசியம். மிளகாயைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். இஞ்சியைத் துருவிக் கொள்ளலாம். அல்லது பொடியாக நறுக்கிக் கொள்ளலாம்.



தக்காளியை வெந்நீரில் போட்டுச் சிறிது நேரம் வைத்து விட்டுப் பின்னர் தோலை உரித்துக் கொண்டு மிக்சியில் போட்டுச் சாறாக எடுத்துக்கொள்ளலாம். அல்லது இரண்டு தக்காளியை மட்டும் நறுக்கிக் கொண்டு இரண்டு தக்காளியை ப்யூரியாக மேற்சொன்ன முறையில் எடுத்துக்கலாம். இப்போது அடுப்பில் குக்கர், கடாய் ஏதாவது ஒன்றை வைத்து விட்டு ஒரு மேஜைக்கரண்டி சமையல் எண்ணெய்/வெண்ணெய்/நெய் ஏதானும் ஒன்றை விட்டுக் கொள்ளவும். 



குக்கரில் எண்ணெய் வைத்திருக்கேன். நான் பண்ணிய அன்று ச்ராத்தம் முடிந்து விட்டதால் சோம்பு, ஜீரகம், லவங்கப்பட்டை சின்னத்துண்டு, மிளகு முழுதாக நாலைந்து, பச்சை ஏலக்காய், கிராம்பு வகைக்கு ஒன்று. கறுப்பு ஏலக்காய் இருந்தாலும் போடலாம். வாசனை தூக்கும். நம்மவருக்குப் பிடிப்பதில்லை.


பின்னர் பச்சை மிளகாய், இஞ்சியைப் போட்டு வதக்கிக் கொள்ளவும்



பின்னர் நறுக்கிய தக்காளித் துண்டுகளைப் போடவும். ப்யூரி எடுத்திருந்தால் அதைத் தனியாக வைக்கவும். பின்னர் சேர்க்கலாம். எனக்கு எல்லாம் போட்டால் அதிகம் ஆகிவிடும் என்பதால் தக்காளித்துண்டங்களை மட்டும் போட்டு நன்கு வதக்கினேன். தக்காளி வதங்கியதும் அதிலே மஞ்சள் தூள் கால் தேக்கரண்டி, மிளகாய்த்தூள் கால் தேக்கரண்டி, தனியாத்தூள் ஒரு தேக்கரண்டி, கரம் மசாலா கால் தேக்கரண்டி, ஜீரகப் பொடி கால் தேக்கரண்டி செர்த்து நன்கு வதக்கினேன். ஒரு தேக்கரண்டி சர்க்கரையும் சேர்த்தேன். தக்காளி நன்கு வெந்து குழையும் வரை வதக்க வேண்டும். தேவைப்பட்டால் ஒரு கிண்ணம் நீரைச் சேர்த்துத் தக்காளியை  வதக்க/வேக விடலாம்.



தக்காளி சேர்ந்து கொதித்து வரும்போது பச்சைப்பட்டாணியைச் சேர்க்கவும். ப்யூரி எடுத்திருந்தால் இப்போது நீருக்குப் பதிலாக அதைச் சேர்க்கவும்.



பட்டாணியைச் சேர்த்ததும் தேவையான உப்பைப் போட்டுக்குக்கரை மூடவும். அது தயார் ஆவதற்குள்ளாக நறுக்கி வைத்திருக்கும் பனீர்த் துண்டங்களைக் கடாயில் நெய்யை விட்டுப் பிரட்டிக் கொள்ளவும். இரு பக்கமும் ப்ரவுன் நிறமாக வந்ததும் அடுப்பை அணைக்கவும். அதிகம் இருந்தால் ரப்பர் மாதிரி ஆகிவிடும்.

குக்கரில் இரண்டு விசில் கொடுத்தால் போதும். பின்னர் குக்கர் தானாக ப்ரஷர் குறைந்ததும் திறந்து வறுத்த பனீர்த்துண்டங்களைச் சேர்க்கவும். கொத்துமல்லி, புதினாப் பொடியாக நறுக்கிச் சேர்க்கவும். ஒரு சிலர் தக்காளி வதக்கும்போதே கொத்துமல்லி, புதினாவையும் போட்டு வதக்கிச் சேர்ப்பார்கள். அவரவர் விருப்பம்.




ஜெயின் மதத்தவர் பொதுவாக பூமிக்கு அடியில் விளைபனவற்றைச் சாப்பிட மாட்டார்கள். ஆகவே அவர்கள் உணவில் வெங்காயம், பூண்டு, உருளைக்கிழங்கு, காரட், முள்ளங்கி, பீட்ரூட், போன்ற மண்ணுக்கு அடியில் விளையும் காய்கள், கிழங்குகள் சேர்க்காமல் பண்ணுவதால் இதை ஜெயின் முறையிலான உணவு என்கிறோம். நாங்க பொதுவாக உருளைக்கிழங்கு வேகவைத்துப்பண்ணும் காரக் கூட்டே சப்பாத்திக்கு வெங்காயம், பூண்டு இல்லாமல் இப்படி ஜெயின் முறையில் பண்ணுவோம். அமாவாசை, விரத நாட்கள், மாதப் பிறப்பு, புண்யகாலம் போன்ற தர்ப்பண தினங்களில் சப்பாத்தியை இரவுக்கு எனத் தேர்வு செய்தால் இம்மாதிரித் தயார் செய்து சாப்பிடலாம்.

45 கருத்துகள்:

 1. எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும் ஆன்ற பெருமை தரும்..

  தமிழ் வாழ்க...

  பதிலளிநீக்கு
 2. அன்பின் வணக்கம் அனைவருக்கும்..
  நலம் வாழ்க எங்கெங்கும்...

  பதிலளிநீக்கு
 3. அனைவருக்கும் இனிய காலை வணக்கம். எக்காலத்திலும் இறைவன் துணையுடன் நலமே வாழப் பிராத்தனைகள்.

  பதிலளிநீக்கு
 4. அன்பு கீதாவின் பனீர் மட்டர்
  செய்முறை சிறப்பா வந்திருக்கு.
  மிக மீகப் பொறுமையுடன், பளிச்சென்று படங்கள் எடுத்து
  விளக்கமாகச் சொல்லி இருக்கிறார்.

  பூண்டு வெங்காயம் இல்லாமல் சுத்தமாக
  இருக்கிறது.
  சின்ன பேரனிடம் காண்பித்தால் சந்தோஷப்படுவான்.
  இன்றைக்குத் தக்காளி வதக்கி தொக்கு செய்தேன்.
  வெங்காயம் போடவில்லை:)

  மகளுக்கு டோஃபு நிறைய உபயோகம் ஆகும்.
  ஏலக்காய்,கிராம்பு எல்லாம் சேர்த்து செய்யும் போது வரும் வாசனை
  நன்றாகவே இருக்கும்.
  நன்றி மா கீதா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க வல்லி. ஏலக்காய், கிராம்பு வகைக்கு ஒன்றுக்கு மேல் சேர்ப்பதில்லை. பூண்டு, வெங்காயம் இல்லாமலே சப்பாத்திக்குக் கூட்டு, கறி வகைகள் அடிக்கடி பண்ணுவேன். வெங்காயம் எப்போதாவது தான். வதக்கினால் என்னமோ ஒத்துக்கறதே இல்லை. தக்காளித் தொக்குக்கு நான் வெங்காயம் சேர்ப்பதில்லை தக்காளி, வற்றல் மிளகாயை வதக்கிக் கொண்டு மிக்சி ஜாரில் போட்டு நன்கு அரைத்து நல்லெண்ணெயில் கடுகு தாளித்துக் கொண்டு பெருங்காயம் சேர்த்து அரைத்த விழுதைப் போட்டு உப்புச் சேர்த்துக் கிளறி எடுப்பேன்.

   நீக்கு
  2. அன்பு கீதாமா,
   மகளுக்குப் படித்துக் காண்பித்தேன் மிகவும் பிடித்தது.
   அவளுக்கு வெங்காயம் நெஞ்சு கரிக்கும். மாப்பிள்ளைக்கும் முதல் பேரனுக்கும்
   பிடிக்கும். மாற்றி மாற்றி செய்வேன்.உங்களை மாதிரிதான் செய்தேன், நேற்றிக்கே காலியாயிடுத்து!!

   நீக்கு
 5. மடர் பனீர் செய்துறை நல்லாச் சொல்லியிருக்கீங்க. மிக எளிதா இருக்கு.

  இப்போ மடர் காலம் வேற. நாங்க இந்தத் தடவை டோஃபு பனீரும் வாங்கினோம்.

  இனிச் செய்துபார்க்க வேண்டியதுதான்.

  படங்கள் நன்றாக வந்திருக்கின்றன. பாராட்டுகள் கீசா மேடம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வ.வா.பி.ரி.????? பாராட்டுகளுக்கு நன்றி நெல்லை. நான் டோஃபுவே வாங்கினதில்லை. வெளியே போகும்போது ஒரு வேளை சாப்பிட்டிருக்கலாம்.

   நீக்கு
  2. //வ.வா.பி.ரி.????? // பாராட்டினா, உடனே கலாய்ப்பா? எனக்கு ரொம்பப் பிடித்தது (எப்போ நான், ரோட்டி சாப்பிடணும்னு ஹோட்டல்ல நினைத்தால்) மடர் பனீர், மலாய் கோஃப்தா அப்புறம் கடாய் வெஜ். பிண்டி மசாலா, பைங்கன் பர்த்தா போன்றவையெல்லாம் பிடிக்காது. இன்றைக்கு எனக்குப் பிடித்த டிஷ். வெங்/பூண்டு சேர்க்கலை என்பதால் ரொம்பவே சுவை மாறுபடாதுன்னு தோணுது.

   நீக்கு
 6. அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்

  பதிலளிநீக்கு
 7. மடர் பனீர் செய்முறை விளக்கம் நன்றாக இருக்கிறது.

  படங்கள் நன்றாக இருக்கிறது.

  பதிலளிநீக்கு
 8. காலை வணக்கம் சகோதரரே

  அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 9. இந்த மாதிரி உணவு வகைகளுக்கு வெங்காயம் பூண்டு இல்லாமல் சமைத்தால் டேஸ்ட் எப்படி இருக்கும் யோஸ்தித்து கொண்டு இருக்கிறேன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றாகத்தான் இருக்கும். ஆனால் நீங்கள் அந்த எண்ணத்தை முதலிலேயே உங்கள்,மனதில் விதைத்து விடக்கூடாது.

   நீக்கு
  2. வாங்க மதுரைத் தமிழரே! வெங்காயம், பூண்டு சேர்க்காமலும் சமைக்கலாமே! பழக்கம் தான் காரணம். உங்களுக்கு வெங்காயம், பூண்டு தேவை எனில் அதைச் சேர்த்தும் பண்ணலாம்.

   நன்றி பானுமதி.

   நீக்கு
 10. வணக்கம் சகோதரி

  தங்களின் மடர் பனீர் படங்களுடன் செய்முறை விளக்கங்களும் நன்றாக இருக்கின்றன. வெங்காயம், பூண்டு போன்ற மசாலா பொருட்கள் இல்லாமல், இதை செய்துள்ளது அதன் இயற்கையான மணத்தையும், ருசியையும் பெற முடியும் வகையில் அமைந்துள்ளது. மிகவும் நன்றாக உள்ளது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க கமலா, அடிக்கடி, செவ்வாய்க்கிழமை, சனிக்கிழமை, சஷ்டி, ஏகாதசி, கிருத்திகைனு வரும்போது சப்பாத்தி பண்ணினால் இந்த முறையில் பண்ணிடலாம். நான் மசாலா கூட வீட்டில் செய்துப்பேன்.

   நீக்கு
 11. பனீர் மட்டர் அழகாக இருக்கிறது.

  பதிலளிநீக்கு
 12. பனீர் மட்டர் செய்முறை நன்றாக இருக்கிறது. நான் இதில் வெங்காயம்,பூண்டு சேர்ப்பேன் என்பது தவிர வேறு வித்தியாசம் இல்லை. என் அக்கா வெங்காயம் பூண்டு சேர்க்காமல்தான் எல்லா சப்ஜிகளும் செய்வாள். நன்றாகவே இருக்கும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி பானுமதி! எங்களுக்குப் பூண்டு ஒத்துக்கொள்வதே இல்லை. அடிக்கடி வெங்காயம் இல்லாமல் சாப்பிடும் ஆவல் வரும்.

   நீக்கு
 13. வெங்காயம், பூண்டு இல்லாமலும் இதைச் செய்யலாம் தான். சிலருக்குப் பிடிக்கும். சிலருக்குப் பிடிக்காது! :)

  பொதுவாக, மட்டர் பனீர் செய்யும்போது, பனீர் அப்படியே சேர்ப்பது தான் வழக்கம். அதனை வறுத்துச் சேர்ப்பது குறைவு - Especially in Dhabas! வறுத்துச் சேர்த்தால் சுவை மாறுபடும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க வெங்கட், நானும் வறுப்பது இல்லைதான். முன்னெல்லாம். அப்புறமா ஓர் வட இந்திய சிநேகிதி சொன்னதுக்கு அப்புறமா வறுத்துச் சேர்க்கிறேன். உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

   நீக்கு
 14. பதில்கள்
  1. //ஒரு தேக்கரண்டி சர்க்கரையும் சேர்த்தேன்//

   சேர்த்தே ஆக வேண்டுமா...?

   நீக்கு
  2. மசாலாவின் காரம் நேரடியாக வயிற்றைத் தாக்காது என்பதோடு அதன் மணத்தையும் இந்தச் சர்க்கரை சேர்ப்பது தூக்கிக் காட்டும். அதிகம் இல்லை, ஒரு தேக்கரண்டி எனில் ஒரே ஒரு தேக்கரண்டி தான்.

   நீக்கு
 15. மட்டர் பனீர் செய்முறை சூப்பர் மாமி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஆதி, உங்களை இங்கே பார்க்க சந்தோஷம். கருத்துக்கு நன்றி.

   நீக்கு
 16. மட்டர் பனீர் செய்முறைக் குறிப்பு அருமை! எப்போதுமே வெங்காயம், பூண்டு சேர்ப்பதால் ஒரு மாறுதலுக்கு இந்த முறையில் மட்டர் பனீர் செய்யலாம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அநேகமாய் நான் வெங்காயம், பூண்டு தவிர்த்தே செய்வேன். எப்போதேனும் மாறுதலுக்குச் சேர்ப்பது உண்டு. அன்றைய தினம் விரதங்கள் ஒன்றுமில்லாமல் இருக்கணும்.

   நீக்கு
 17. இந்த வறுத்த பனீரை கொதிக்கும் ஜலத்தை விட்டு மூடி சிறிது நேரம் வைத்துவிட்டு கலந்தால் மென்மையாக இருக்கும் மற்றபடி நாம்தான் இஞ்சி பச்சை மிளகாயை நறுக்கி வதக்கிச் சேர்க்கிறோம் எல்லாவற்றையும் பேஸ்ட் பேஸ்ட் என்று கலப்பார்கள் ஜெயின் முறை நன்றாக இருக்கிறது வெங்காயம் பூண்டு இல்லாவிட்டால் என்ன எல்லா நாட்களிலும் செய்யலாமே அது ஒரு பிளஸ் பாயிண்ட் அல்லவா நன்றாக இருக்கிறது அன்புடன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க அம்மா, நன்றி. உங்கள் குறிப்பைப் பார்த்துக்கொண்டேன். நான் இந்த இஞ்சி, பூண்டு பேஸ்டைப் பயன்படுத்தியதே இல்லை, வாங்கினதும் இல்லை. பையர் வீட்டில்/பெண் வீட்டில் சேர்க்கும்படி இருந்தால் இஞ்சி, பூண்டை நறுக்கி வதக்கியே சேர்ப்பார்கள். திடீர்த் தயாரிப்பை வாங்குவது இல்லை. பாராட்டுக்கு மிக்க நன்றி,

   நீக்கு
 18. நன்றாக இருக்குது கீசாக்கா.. நானும் செய்வேன் கிட்டத்தட்ட இப்படி ஆனால் பால் சேர்ப்பேன்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க அதிரடி அரண்மனை! பால் சேர்க்கலாம். நான் க்ரீம் மேலே போடுவேன். இங்கே எல்லோருக்கும் அது இருக்குமோ இருக்காதோ என்னும் சந்தேகத்தில் அதைக் குறிப்பிடவில்லை. கடைசியில் க்ரீமால் மேலே அலங்கரிக்கலாம்.

   நீக்கு
 19. ஆகா! வெங்கட் அண்ணா பிளாக்கில் பனீர் பராட்டா , இங்கே மட்டர் பனீர்! :) இது தான் முதல் பதிவு என்றாலும் நான் ரிவெர்சில் வருகிறேன் .
  செய்து பார்க்கிறேன்..பூண்டு, வெங்காயம் உரிக்க வேண்டாம் என்பதே சூப்பர்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க கிரேஸ்....   நீங்களும் கதை, மற்றும் ரெசிப்பிக்கள் அனுப்பலாமே...

   நீக்கு
  2. வாங்க கிரேஸ், முதல் வருகைக்கும், பாராட்டுக்கும் மிக்க நன்றி. பனீர் பராட்டாவும் நன்றாக இருக்கும். செய்து பாருங்கள். எங்களுக்கெல்லாம் அடிக்கடி பண்ணி அலுத்துவிட்டது! :))))

   நீக்கு
 20. ஹாஹாஹா, நேற்று மடர் பனீர் போணியே ஆகலை போல! நானும் தொடருவதற்கான அடையாளத்தைக் க்ளிக் செய்யவே இல்லையா! எதுவுமே வரலை. என்னடாப்பானு பார்த்தேன். இஃகி,இஃகி,இஃகி!

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!