செவ்வாய், 2 மார்ச், 2021

கேட்டு வாங்கிப்போடும் கதை :  குழந்தையும் தெய்வமும் - வானம்பாடி 

எங்கள் தளத்தில் இன்று ஒரு புதிய எழுத்தாளர் அறிமுகம்! நமக்குதான் புதியவர்.  2005 லிருந்து பதிவுலகில் இருக்கும் வானம்பாடி  வானம்பாடி எனும் பெயரிலேயே வலைத்தளம் வைத்திருக்கிறார்.  சமீப காலங்களில் கீதா அக்கா பதிவுகளில் அவர் பெயர் பார்த்து, அவர் தளம் சென்று என்று அறிமுகமானவர்.  சமீப காலங்களில் நம் தளத்துக்கும்  வருகை தந்து கொண்டிருக்கும் அவரை வரவேற்கிறோம்.  கவிதையும் அழகாக எழுதுகிறார்.   இனி அவரிடமிருந்தும் அவ்வப்போது படைப்புகளை தொடர்ந்து எதிர்பார்க்கலாம் என்று நம்புகிறோம்.

குழந்தையும், தெய்வமும்  

வானம்பாடி 

எங்கள் வீட்டிற்கு  தினமும் சிறிது நேரம் வந்து செல்லத்  தொடங்கினாள்  தயஸ்ரீ.

ஏனோ அவளுக்கு என்னைப் பார்த்தால் மிகவும் பிடித்து விடுகிறது. என்னவர் என்னை ராஜிமா என்றே அன்புடன் அழைப்பார். அதைப்போலவே, என் பெயருடன்  அம்மா சேர்த்து "ராஜிம்மா " என்றே அழைக்கிறாள்! அம்மா என்று அவள் மழலையில் அழைக்கும் பொழுது நெகிழ்ந்து போகின்றேன். 

தயஸ்ரீயின் குடும்பம் இரண்டு  வருடங்களுக்கு  முன்பு தான் எங்கள் பக்கத்து வீட்டிற்கு குடி வந்தனர். நான் பள்ளிக்கு கிளம்பும் முன் டாடா சொல்ல வந்து விடுவாள். பின் பள்ளி முடிந்து வீடு திரும்பி கதவை திறக்கும் முன்பே வந்து காத்திருப்பாள். 'எனக்கும் கொஞ்சம் காபி குடுங்க ராஜிம்மா' என்பாள். எனக்கு பள்ளி விடுமுறை நாள் என்றால் அவளுக்குத்  தான் சந்தோஷமே! தோட்டத்து செடிகளுக்கு என்னுடன் நீரூற்றுவாள். குளித்து முடித்து  வந்து என்னிடமே தலை பின்னிக் கொள்ள வருவாள். ஞாயிற்றுக் கிழமை அவளுக்காகவே அடை செய்து விடுகிறேன் இப்பொழுதெல்லாம். அவள் அம்மா ஊட்டி விட்டால் அடம்  பிடிப்பாள். நான் ஊட்டினால் சமத்தாக சாப்பிட்டு விடுவாள். என் புடவை நுனி பிடித்து நடக்க நான் மயங்கித்தான் போகிறேன். 

அவளுக்கு  கதை கேட்கப் பிடிக்கும். குட்டி கதைகள் சொல்ல என்னவருக்கு மிகப் பிடிக்கும். வளமையான காடுகளும், அரண்மனைகளும், குடில்களும்,வயல்வெளிகளும் , கம்பீரமான யானைகளும், சிங்கங்களும், மானும், வேடனும் ,தந்திரக்கார நரியும், அணிலும், நன்றியுள்ள நாயும், பூனையும் , எளிமையான குடியானவரும், நல்ல பண்புடைய ராஜாக்களும், சித்திர குள்ளர்களும் , புத்திசாலியான ராணிகளும் , குறும்பு கொப்பளிக்கும் சிறுவர்களும் ,சிறுமியரும்  அவருடைய கதைகளில் அழகாய் பவனி வருவார்கள். இவரிடமும் ஒரு நல்ல கதை சொல்லி இருப்பார் என அறிந்ததில்லை. செல்லம் கொஞ்சி "எனக்கு கத  சொல்லுங்க மாமா" என்பாள். கதைகளில் சஞ்சரித்து , "ம்" கொட்டிக் கொண்டு, அவள் தூங்கிய பின் பூப்போல தாங்கி  அவள் வீட்டில் விட்டு வருவேன். 

போகிற போக்கில் விளையாட்டாய் , நாங்கள்  காணாத சந்தோஷத்தை வாரி இறைத்தாள் என்றே சொல்ல வேண்டும். வறண்டு கிடந்த இடத்தில் சிறு ஊற்றைப்  போல தோன்றி, பெருகி மகிழ்ச்சியாய் பொங்கினாள்  எங்கள் வாழ்வில். 

இவ்வளவு என்னிடம் எப்படி பழகினாள் என்று எனக்கே தெரியவில்லை. அவளுடைய அம்மா வித்யாவும்  மிகுந்த பாசமாகவே பேசுகிறாள். அவள் கருவுற்றிருப்பதால் என்னிடம் தயஸ்ரீ  இருப்பது பாதுகாப்பாகவும், தன்  வேலைகளை செய்து கொள்ள வசதியாகவும் இருப்பதாய் சொல்வாள். கடந்த ஆண்டு  பெரும் நோய்த்தொற்றின் பொருட்டு சில மாதங்கள் வீட்டில் தனியாக இருந்த பொழுது, மிகப்பெரிய ஆறுதலாக இருந்தாள். 

அவள் கேட்கும் கேள்விகளுக்கு சலிக்காமல் பதில் சொல்வார் என்னவர். "எதுக்கு உம்மாச்சி கண்ண குத்துது?" என்பாள் . "மேகம் எல்லாம் எங்க போகுது?" என்பாள். சில சமயம் ரொம்பவும் வானவியல் ஆராய்ச்சி  செய்து  , "ஏலியன் இங்க  வண்டுச்சுனா  ,  நா அது  கூட ஸ்பேஸ் கு போவேனே !" என்பாள். "எனக்கு இப்பவே ராஜிம்மா கூட ஸ்கூல் போகணும்" என்பாள். "என் பத்துடே  கு புடு டெஸ் வேணும்" என்பாள்.

எங்கள் மொழியும் கொஞ்சம் கொஞ்சம் பேசப் பழகிவிட்டாள். இறுகிய எங்கள் மனத்திற்கு இதமளித்தாள் .எனக்கும் அவருக்கும் சிறிது பயமாக கூட இருந்தது. நான் வீட்டின் வெறுமை பிடிக்காமல் பள்ளிக்கு வேலைக்கு செல்லத் தொடங்கி ஆறு வருடம் ஆகிறது. இப்பொழுது இருக்கும் வீடு சொந்த வீடென்றாலும், பள்ளி வெகு தூரம் செல்ல வேண்டியதாய் இருந்தது. 

என் பள்ளிக்கு அருகிலேயே நாங்கள் வீடு பார்த்துக் கொண்டிருந்தோம். வீடு கிடைத்தபாடில்லை. அவர் என்னைப்  பற்றி நன்கு அறிந்ததால் இப்பொழுது மும்முரமாக வீடு பார்க்கும் வேலையில் ஈடுபட்டுள்ளார் . குழந்தைக்காய் நான் ஏங்கிய ஏக்கம் கொஞ்சமில்லை. செல்லாத கோவிலில்லை , வேண்டாத தெய்வமில்லை. பார்க்காத வைத்தியமில்லை. உடலும், மனமும் ரணமாகி போனது தான்  மிச்சம். ஆகிவிட்டது வருடங்கள் பன்னிரண்டு. இதற்கிடையே, ஊருக்கு சென்றால், சொந்தங்களின் கேள்விகளும், தேவையில்லாத அறிவுரைகளும். எங்கும் விசேஷத்திற்கும் செல்வதில்லை. பிறரின் ஆதங்கமும், பரிகாசமும் என்னை மென்மேலும் வாட்டுவதால் சொந்த ஊருக்கு செல்வதையே நிறுத்தி  விட்டோம். எப்பொழுதாவது பெற்றோர் வந்து செல்வதுண்டு.

நேற்று தான் என்னவர் , பள்ளிக்கு பக்கத்திலேயே தனது நண்பரின் அபார்ட்மெண்ட் வீடு காலியாவதாக சொல்லியிருந்தார். இன்று தயஸ்ரீயின் நான்காவது  பிறந்தநாள் என்று அவள் அம்மா அழைத்திருக்கிறாள். இன்று காலை 10 மணிக்கு வீடு பார்க்கச் சென்றோம். இருவருக்கும் பிடித்திருந்ததால் அட்வான்ஸ் கொடுத்து விட்டும் வந்து விட்டோம் . 

மனம் தான் நிலை கொள்ளவில்லை. வரும் வழியில், "Grasp" துணிக்கடைக்கு சென்று  வெள்ளை நிறத்தில் மஞ்சள் பூக்கள் எம்பிராய்டரி  செய்த frock    ஒன்றும் அதற்கு ஏற்றார் போல அழகிய  கிலிப்சும் , ஹேர்பேண்ட்  வாங்கிக்  கொண்டோம். 

அன்பிற்கு எல்லை இல்லை தானே ...பகை தானே கொல்லும் ?  எனக்கோ அன்பென்னும்  அமுது சிறிது சிறிதாக மிகுந்து , நஞ்சாகி விடுமோ என பயமுறுத்துகிறது.

 இன்று  மாலை நடைபெற்ற பிறந்த நாள் விழாவில், அவள் அம்மாவிற்கு கேக் ஊட்டிவிட்டவள், என்ன நினைத்தாளோ, ஓடி வந்து என்னைக்  கட்டிப் பிடித்து, முத்தமிட்டு , எனக்கும் கேக் ஊட்டிவிட்டாள். அவள் தாத்தா, பாட்டி எங்களை ஆசிர்வதித்தனர்.


அவளிடம் விளையாடிவிட்டு ஒன்பது மணிக்கு மேல் தான் வீடு திரும்பினோம். இரவு  வெகு நேரம் உறக்கம் வரவில்லை.  

இந்த அன்பும் ரயில் சிநேகம் போலத்தானோ?, என மனதில் குமைந்து கொண்டு வெறுமனே கண் மூடி  படுத்திருந்தேன். கானல் நீராகி விடுமோ இதுவும் வீடு மாறினால்? என நினைத்து தவித்தேன். எத்தனையோ முறை,  என்னவரிடம்  ஒரு குழந்தையை தத்து எடுத்துக் கொள்வோம்  என்று சொல்லி இருக்கிறேன்.

மௌனம் மட்டுமே சாதிப்பார்.  ஆனால் இப்போது தூங்கியிருப்பார் என நினைத்த என்னவர் ,  எழுந்து உட்கார்ந்து பேசத்  தொடங்கினார்.  இதோ இந்த நொடி,விடியப்போகும் இவ்வேளையில், முதல் முறையாக  ஒரு குழந்தையை  தத்தெடுத்துக் கொள்வோமா ? என அவரே சொல்ல கேட்கிறேன். சொல்ல வார்த்தை வரவில்லை.நெகிழ்ச்சியில் கண்ணீர் மட்டுமே வருகிறது . இந்த வீட்டிலேயே இருப்போம். தயஸ்ரீக்கு துணையாய் இன்னொரு குழந்தையை  உன் விருப்பம் போல வளர்ப்போம் என்றும் சொல்கிறார் ! 

ஆழமாக கண்கள் நோக்கி, தோள் சாய்ந்து கொள்கிறேன்! ஆதுரமாய் தலை கோதி புன்னகைக்கிறார் நிஜமாய்!  இன்று குழந்தையும், தெய்வமும் ஒன்றாக கூடி என்னிடம் வந்தது போல் உணர்ந்தேன். கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும் என்று கேள்விப்பட்டுள்ளேன்.இன்று கண்ணார கண்டு விட்டேன். கரைத்தே விட்டாள் அவர் மனதை! என்னவரின்  மனதை இளக்கி, தெளிய வைத்த தயஸ்ரீக்கு நன்றி சொல்ல வேண்டும் நாளை! 

= = = =

51 கருத்துகள்:

  1. வானம்பாடி அவர்களை கானம் பாடி வரவேற்கிறோம் :) கதை விர்ரெனே நகர்ந்தது .கொஞ்சம் கலக்கமா இருந்தது தயஸ்ரீயின் அம்மா ஏதாவது சொல்வாருன்னு .நல்லவிதமான இன்னொரு குழந்தையை தத்து  எடுக்கும் முடிவில் இருவரும் ஒருமனதாக இணைந்தது அருமை .எதுவும் அளவுக்கு மீறக்கூடாதது அடுத்த வீட்டு குழந்தையின் மீது வைத்த  அன்புக்கும் பிரச்சினையில்லாதவறை கதையை முடிச்சிருக்கீங்க வானம்பாடி . 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஏஞ்சல்...   வானம்பாடி பதிலளிப்பார்.

      நீக்கு
    2. அன்பின் ஶ்ரீராம் அவர்களுக்கு,
      குழந்தையின் படம் அருமை.என்னை இவ்வலைத்தளத்திற்கு அறிமுகப்படுத்தியமைக்கு மிக்க நன்றி!

      நீக்கு
  2. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
    எல்லோரும் என்றும் ஆரோக்கியத்துடன் இருக்க
    இறைவன் துணை இருப்பான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க வல்லிம்மா...  வணக்கம்.   இணைந்து பிரார்த்திப்போம்.

      நீக்கு
  3. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம். நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள்.அனைவர் வாழ்க்கையிலும் மகிழ்ச்சி மேலோங்கி ஆரோக்கியம் பெருகவும் பிரார்த்திப்போம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கீதா அக்கா.  வணக்கம்.  இணைந்து பிரார்த்திப்போம்.

      நீக்கு

  4. நல்ல அழகான, சரளமான நடை. தேவையான வர்ணனைகள். குழந்தைக்கதைகள் சொல்லப் போட்டிருக்கும் பட்டியல் பிரமிக்க வைத்தது. மனதில் உள்ளதைத்தெளிவாகவும், தயக்கமில்லாமலும் கொண்டு செல்கிறார். தயஸ்ரீயின் பிரிவு ஏற்படுத்தும் தாக்கம் தான் கதையின் முடிவோ என எண்ணும்போது நல்லவிதமாக முடித்துவிடுகிறார். அவரின் நீண்ட நாட்கள் எதிர்பார்ப்பு நிறைவடைவதோடு அல்லாமல் தயஸ்ரீயையும் பிரியப் போவதில்லை என்னும் முடிவு நாடகத்தனமே இல்லாமல் இயல்பாகக் கதையுடன் பொருந்திக் கொண்டு விட்டது. இத்தனை அழகாய் எழுதுவார் என எண்ணவே இல்லை. அவர் என் பதிவுகளுக்கு வருகிறாரே அன்றி எனக்குப் போக முடியவில்லை. அதிலும் இப்போதெல்லாம் இணையத்தில் பதிவுகளைப் பார்ப்பதே குறைந்து வருகிறது. :( ஒரு மத்தியானத்தை இவருக்கென ஒதுக்க வேண்டும் என்னும் எண்ணம் தோன்றி இருக்கிறது. பார்ப்போம்.

    பதிலளிநீக்கு
  5. வானம்பாடி அவர்களின் கதை மிக மிக நெகிழ வைத்தது.
    இந்தக் குழந்தை இவ்வளவு அன்பா இருக்கே. அதை ஏமாற்றுவது போல விட்டுச் சென்று விடுவார்களோ என்று பயந்தேன்.
    கதையாகவே இருந்தாலும் நம் பயம் பயம்தானே.

    அந்தக் குழந்தைக்கு ஏற்ற படமும் கொடுத்திருப்பது மிகவும்
    சுவாரஸ்யம்.

    ஒரு மனித உள்ளத்தையே மாற்றும் மாயாஜாலத்தைக் குழந்தை செய்துவிட்டாள்.
    இவ்வளவு அழகாகக் கதை படைத்திருக்கும்
    வானம்பாடிக்கு வாழ்த்துகள்.

    புடவையைப் பிடித்து நடக்கும் குழந்தை....நினைக்கவே
    மனம் பூரிக்கிறது.
    இன்னோரு குழந்தை வந்து அவர்கள் வாழ்வை இன்னும் வளமாக்கட்டும்.
    மிக நன்றி.

    பதிலளிநீக்கு
  6. ஆமா, இல்ல! தயஸ்ரீயின் படம் மிக அழகான நேர்த்தியான தேர்வு. அதிலும் பரிசாகத் தேர்ந்தெடுத்திருந்த உடையின் நிறம், படத்திலும் அழகாய்ப் பொருந்தி விட்டது. கேஜிஜி சாரின் உழைப்புக்கு ஒரு "ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ"

    Kudos to KGG

    பதிலளிநீக்கு
  7. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  8. வணக்கம் சகோதரரே

    இன்றைய கதை நன்றாக உள்ளது. படித்துச் செல்கையில் முடிவும், குழந்தையின் பிரிவு அவர்களை வருத்தப்பட வைக்குமோ என்ற கவலையகன்று, புதிதாக மற்றொரு குழந்தையை தத்து எடுத்து கொள்ளும் விதமாய் முடித்த விதம் நன்றாக இருந்தது. சிறப்பாக கதையை எழுதியிருந்த சகோதரி வானம்பாடி அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். பாராட்டுக்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  9. இன்னொரு வீட்டுக் குழந்தை, குழந்தையில்லா தம்பதிகளுக்கு ஏற்படுத்தும் தாக்கத்தையும், அதனால் எடுக்கும் முடிவையும் நன்கு சொல்லியுள்ளார். பாராட்டுகள் வானம்பாடி

    பதிலளிநீக்கு
  10. மனதில் நெகிழ்ச்சி. சிறப்பாக கதையை நகர்த்தி இருக்கும் வானம்பாடி அவர்களுக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும். அவரது பதிவுகள் தொடரட்டும்.

    பதிலளிநீக்கு
  11. அனைவருக்கும் அன்பின் வணக்கம்...
    நலமே வாழ்க எங்கெங்கும்..

    பதிலளிநீக்கு
  12. மனதில் ஏதோவொரு நெருடல் வந்து ஒட்டி விட்டது அவ்வளவு இதமாக இருக்கிறது கதை சொல்லிய பாங்கு.

    வாழ்த்துகள் வானம்பாடி - கில்லர்ஜி

    பதிலளிநீக்கு
  13. வருக.. வருக..
    அன்பின் வானம்பாடி அவர்களுக்கு நல்வரவு..

    பதிலளிநீக்கு
  14. குழந்தையும் தெய்வமும்..

    நெகிழ்ச்சியையும் மகிழ்ச்சியையும்
    ஏற்படுத்தி விட்டது ...

    பதிலளிநீக்கு
  15. 'சம்பவங்கள் நிறைந்த கதைக்காலம் முடிந்து இது நுட்பமான உணர்வுகளின் கதைக் காலம்' -- என்று சென்ற பகுதி சிறுகதை எழுதிய ஆன்சிலா ஃபெர்ணாண்ட்டோ சொன்னது நினைவுக்கு வந்தது.

    அவர் சொன்னதின் அடிப்படையில் இந்தக் கதையைக் கூட --

    'இந்த அன்பும் ரயில் சிநேகம் போலத் தானோ?' என்ற இடத்தில் முடித்திருக்கலாமோ என்று தோன்றியது.

    அப்படி முடித்திருந்தால் எப்படி இருந்திருக்கும்?.. ஆன்சிலா அவர்கள் ஒருகால் இந்தப் பக்கம் வந்தால் 'எப்படி இருந்திருக்கும்?' என்பது பற்றிச் சொல்ல முடியும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படியும் முடித்திருக்கலாம். சுபமாக முடியும் கதைகள் மனதிற்கு ஒரு நிறைவை அளிக்கும் என்பதால் அப்படி முடித்துள்ளேன்.இது ஒரு உண்மை சம்பவத்தை மனதில் நிறுத்தி அதை தழுவி எழுதிய கதையும் கூட...

      நீக்கு
    2. அப்படி அந்த இடத்தில் முடித்திருந்தால்
      இது ஒரு கதையாகவே இருந்திருக்காது என்ற எண்ணத்திலேயே கேட்டேன். ஆன்சிலா வந்து பதிலளித்திருனால் இது பற்றி விவாதிக்க ஒரு வாய்ப்பு ஏற்பட்டிருக்கும்.

      நீக்கு
  16. கதை அருமை குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்தில் மனம் மாறியது

    பதிலளிநீக்கு
  17. கதை மிக நன்றாக இருக்கிறது.
    சிலருக்கு வேறு குழந்தைகளை எடுத்து வளர்க்கும் போது அவர்களுக்கு குழந்தை கிடைக்கவும் வாய்ப்பு உண்டு.
    கதை சொன்ன விதம் மிக அருமை.
    வானப்பாடியின் பறவை கவிதைகள் பிடிக்கும். படித்து இருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  18. என் கதையை நேற்று உங்கள் வலைத்தளத்தில் பதிவிட்டமைக்கு மிக்க நன்றி! தங்கள் பொன்னான நேரத்தை எனக்காக ஒதுக்கி கதை படித்து, பதிவிட்ட அனைவருக்கும் நன்றி!

    பதிலளிநீக்கு
  19. ஒரு ஆழமான கருத்து, அழகான நடையில் சொல்லப்பட்டிருக்கும் கதை. பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  20. வானம்பாடி என்னும் பெயரை தினமலர் போன்ற பத்திரிகைகளில் பார்த்த நினைவு.நீங்கள்தானா அது?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அது நான் இல்லை அம்மா.நான் வலைத்தளத்தில் மட்டுமே எழுதுகின்றேன்.

      நீக்கு
  21. ஒரு குழந்தையின்ப்பிரிவு இன்னொரு குழந்தைக்கு வழி வகுத்ததோ

    பதிலளிநீக்கு
  22. ஒரு குழந்தை நல்லதொரு மாற்றத்திற்கு வித்திட்டது.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!