திங்கள், 22 மார்ச், 2021

மசால் தோசை - சியாமளா வெங்கடராமன் ரெஸிபி

 

மசால் தோசை 

சியாமளா வெங்கடராமன். 

 மசால் தோசை பிடிக்காதவர்கள் எவரும் இருக்கமாட்டார்கள். அதுவும் ஹோட்டல் மசால் தோசை போல செய்தால் ஒரு கை பார்ப்பார்கள். அதை எவ்வாறு செய்வது என்று பார்ப்போம். 

தேவையான பொருட்கள் : 

புழுங்கல் அரிசி.,..,,,3 கப்

உளுத்தம் பருப்பு.,,.,.1கப்

பயத்தம் பருப்பு....,,,,1 பிடி

கடலைப்பருப்பு.,.....,..1 பிடி

வெந்தயம்........,..,..,......1 ஸ்பூன்

அவல்........,,.,...,.........,,...,.1 பிடி

செய்முறை : 

மேலே கூறியுள்ள அனைத்து பொருட்களையும் ஊறவைத்து கிரைண்டரில் அரைத்து உப்பு போட்டு வைக்கவும். மறுநாள் தோசை வார்க்கலாம், அதற்கு சைட் டிஷ் ஆக தேங்காய் சட்னி உருளைக்கிழங்கு மசாலா ஏற்றது. 

உருளைக்கிழங்கு மசாலா செய்யும் முறை. 

நான்கு உருளைக்கிழங்குகளை வேகவைத்து, தோலை உரித்து வைத்துக் கொள்ள வேண்டும். 2 வெங்காயம், இரண்டு பச்சை மிளகாய் பொடியாக நறுக்கி வைக்கவும்.

 ஒரு வாணலியில் இரண்டு ஸ்பூன் எண்ணெய்விட்டு, அதில் அரை ஸ்பூன் கடுகு போட்டு, கடுகு வெடித்ததும், ஒரு ஸ்பூன் கடலை பருப்பு போட்டு சிவக்க வறுக்கவும். அதில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் இரண்டையும் பொன்னிறமாக வதக்கவும். அதில் வேக வைத்த உருளைக்கிழங்கை நன்றாக மசித்துப் போட்டு, ஒரு டம்பளர் தண்ணீர் விடவும். தேவையான உப்பு போடவும். நன்றாக கொதிக்கவிட்டு அதில் ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் ஒரு ஸ்பூன் கடலை மாவு கரைத்து விட வேண்டும்.  நன்றாக கொதித்ததும், கருவேப்பிலை கொத்தமல்லி பொடியாக நறுக்கியது போட்டு இறக்கவும்,

தோசையை வார்த்து அதனுள் கிழங்கை வைத்து மடித்து கொடுக்க வேண்டும். 

= = = =

68 கருத்துகள்:

  1. என்னப்பா இது? யாருமே இல்லை? அப்புறமா நான் கருத்துப் போடும்போது கூடவே யாரும் வந்து எட்டிப் பார்க்கக் கூடாது! செரியா? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புதியவர் சியாமளா வெங்கட்ராமன் அவர்களை முதலில் வாழ்த்தி வரவேற்போம். அப்புறம் கல்யாண மண்டபத்தில் யார் வந்திருக்காங்க, யார் வரலைன்னு ஆராய்ச்சி பண்ணலாம். இல்லையா?

      நீக்கு
    2. உங்களுக்குத் தான் அவங்க புதுசு. எனக்கில்லை நெல்லை! இஃகி,இஃகி,இஃகி! சஹானாவில் அவங்க எழுத்தைப் படிச்சுட்டுத் தானே இருக்கேன். மத்யமரிலும்.

      நீக்கு
  2. யப்பாடி! இது வரைக்கும் யாரும் இல்லை! அனைவருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். கொரோனா தடுப்பு ஊசி போட்டுக்கொண்ட அனைவருக்கும் உடல் நலனில் பிரச்னைகள் வராமல் இருக்கப் பிரார்த்தனைகள். அனைவர் வாழ்விலும் ஆரோக்கியம் பெருகித் தொற்றுக் குறைந்து மீண்டும் ஒரு லாக் டவுன் வராமல் இருக்கவும் பிரார்த்திக்கிறோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி.  வாங்க ..  வணக்கம்.  இணைந்து பிரார்த்திப்போம்.

      நீக்கு
  3. ம்ம்ம்ம் மத்யமர் "சியாமளா வெங்கட்ராமன்" செய்முறை? நாளைக்குக் கதையும் அவங்களா? பானுமதியை விட எழுத்தில்/பேச்சில் சிக்கனம் போல! சிக்கென முடிச்சுட்டாங்க. நாங்கல்லாம் விலாவரியா எழுதுவோம். ஆனால் இந்த மசாலா தோசையை நானும் சுமார் 50 வருடங்களாகச் செய்து கொண்டிருந்தும் அரிசி, உளுந்து, வெந்தயம் மட்டுமே போட்டு அரைப்பேன். அதில் இட்லியும் வார்த்துப்பேன். மனதில் தோன்றும் அன்று மசால் தோசை பண்ணுவேன். அரைக்கையில் பாசிப்பருப்பு, கடலைப்பருப்பு, அவல் எதுவும் சேர்த்து அரைத்ததில்லை. அதோடு நம்மவருக்கு வெறும் தேங்காய்ச் சட்னி போதாது. சாம்பார் வேணும். அதுவும் பாரம்பரிய முறைப்படி பண்ணின வெங்காய சாம்பார். இந்த சரவணபவன் சாம்பாரெல்லாம் பிடிக்காது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //பானுமதியை விட எழுத்தில்/பேச்சில் சிக்கனம் போல! சிக்கென முடிச்சுட்டாங்க//

      ஹா.. ஹா... ஹா...

      ஆம்... இதில் கடலை பருப்பு பயத்தம்பருப்பு எல்லாம் சேர்த்திருக்கார்.

      நீக்கு
    2. //பானுமதியை விட எழுத்தில்/பேச்சில் சிக்கனம் போல!// மாமி ஆசிரியையாக பணியாற்றியவர். குழந்தைகளை தயார் செய்து பல நிகழ்ச்சிகளை நடத்தியவர். ராமாபுரத்திலும் விக்னேஷ்வரா லேடிஸ் க்ளப் தலைவியாக பல நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்தியிருப்பதால் நேர நிர்வாகத்தில் தேர்ந்தவர். எதை எந்த அளவு கொடுக்க வேண்டும் என்பது தெரியும்.

      நீக்கு
    3. ஆசிரியரா? சரிதான். ஆனால் இங்கே எங்க குடியிருப்பு வளாகத்தில் ஒரு சிநேகிதியின் மாமியார் கல்லூரியில் பேராசிரியர். அவர் இங்கே உள்ள அசோசியேஷன் சார்பில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றும்போது கேட்டுக்கொண்டிருந்த எங்களை எல்லாம் அவங்க மாணவியர்னு நினைச்சிருப்பாங்க போல! உரக்கக் கத்தி "வளவள"னு பேசியதோடு நடந்து கொண்டே ஒவ்வொரு நாற்காலி வரிசைக்கும் வந்து அமர்ந்திருக்கும் யாரையானும் சுட்டிக்காட்டி, புரிஞ்சதா? என்று கல்லூரி மாணவமணிகளிடம் கேட்கிறாப்போல் கேட்டுக் கொண்டு! ஹிஹிஹிஹி, நல்லா ரசிச்சோம், அவங்க செய்த சேட்டைகளை. அவங்க மருமகள் திரும்பத் திரும்ப அத்தை இது கல்லூரி இல்லை என நினைவூட்டிக் கொண்டே இருந்ததும் தமாஷாக இருந்த்து.

      நீக்கு
    4. //பாரம்பரிய முறைப்படி பண்ணின வெங்காய சாம்பார்.// - சரவணபவன் (87-94 வரையுள்ள) டிபன் சாம்பார் பிடிக்காதாமே.... இது அநியாயமில்லையோ.. அதைவிட பாரம்பர்யமா ஒருத்தர் எப்படி வெங்காய சாம்பார் பண்ணமுடியும் (டிபன் வெங்காய சாம்பார்). கொஞ்சம் ஆளுக்கு வேலையிருந்தால், இந்த கீசா மேடத்தை யாருமே கேள்வி கேட்க மாட்டாங்கன்னு நினைச்சுட்டாங்களோ?

      நீக்கு
    5. //ஆசிரியையாக பணியாற்றியவர்.// - எனக்குத் தெரிந்து ஆசிரியர், ப்ரொஃபசர் போன்ற பொஸிஷன்களில் பணியாற்றியவர்கள் ரொம்பப் பேசுவாங்க. அதனால இதனை ஒரு காரணமாகச் சொல்லாதீங்க பா.வெ. மேடம். எங்களுக்கு கல்லூரில ஒரு கெமிஸ்ட்ரி ப்ரொஃபசர் இருந்தார். அவர் பாடம் நடத்தினால், அவர் கெமிஸ்டிரி நடத்தறாரா இல்லை ஹிஸ்டரியான்னு சந்தேகம் வருவது போல நடிப்பு, இந்த பெஞ்சிலிருந்து அந்த பெஞ்சுக்கு என்று நாடக மேடை போல நடத்துவார்.

      நீக்கு
    6. நெல்லை, சரவணபவன் வெங்காய சாம்பார் அவ்வளவு உயர்த்தியா என்ன? அதுவும் பாரம்பரிய முறைப்படி பண்ணறாங்களா என்ன? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! எங்களுக்கெல்லாம் எங்க அம்மா பண்ணின சின்ன வெங்காய சாம்பாருக்கு அடுத்தபடி தான் ஓட்டல் சாம்பாரெல்லாம். அதிலும் சரவணபவன் வெங்காய சாம்பாரெல்லாம் நான் சாப்பிட்டதே இல்லை. மொத்தமாய் நாலைந்து முறை சரவணபவனில் சாப்பிட்டிருப்பேன். யு.எஸ்ஸில் சாப்பிட்டதையும் சேர்த்து. அப்படி ஒண்ணும் உசத்தியா இல்லை.

      நீக்கு
    7. கீசா மேடம்.... திருப்பதி பெருமாளைச் சேவிக்கணும்னா நேர திருப்பதிக்குத்தான் மலையேறணும். பிட்ஸ்பர்க் திருப்பதி பெருமாளைச் சேவித்தேன், லட்டு பிரசாதம் சுமார்தான் என்றெல்லாம் சொல்லக்கூடாது.

      (என்னைப் பொறுத்தவரையில்) 88-94ல், சரவணபவன் உஸ்மான் ரோடு திநகர் உணவு சூப்பராக இருந்தது. அதை அடித்துக்கொள்ள எதுவும் கிடையாது. டிபன் சாம்பாரும் ஓகே.

      அதுவும் தவிர, எந்தப் பெண்மணியாவது, தன்னுடைய, தன் அம்மாவுடைய (மாமியாரைச் சொல்லவே மாட்டாங்க) கைப்பக்குவத்தைவிட பிறிதொரு சாப்பாடு நல்லா இருக்குன்னு சொல்லி ஒரு ஹிஸ்டரி, ஜியாக்ரபி உண்டா?

      நீக்கு
    8. சரவணபவன் சாம்பார் என்பது சிறு மாறுதல்தானே..  அப்படி செய்து பார்ப்போம் ஒருமுறை என்று கீதா அக்கா செய்த ஒருமுறை மாமா சொன்னாராம் "ரொம்ப நல்லா இருக்கே...   இனிமே இப்படியே செய்துடலாம்"    ஞாபகமிருக்கா கீதா அக்கா?!!

      நீக்கு
    9. ஆமாம், ஶ்ரீராம், ஆனால் அது இட்லி சாம்பார்/வடை சாம்பாருக்கு மட்டுமே இங்கே செல்லும். மசால் தோசைக்கு அந்த சாம்பாரை வைக்கிறேன்னா ஒரே க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் தான்! :(

      நீக்கு
  4. யப்பாடி, இது வரைக்கும் யாரும் வரலை. போயிட்டு மத்தியானமா வரேன். நான் பாட்டுக்குக் கருத்துக் கண்ணம்மாவாகக் கருத்துச் சொன்னால் எப்பூடி?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க..  வாங்க...   நீங்கள் கருத்து சொல்லாமல் யார் கருத்து சொல்ல முடியும்?

      நீக்கு
  5. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
    எல்லோரும் மிக மிகப் பாதுகாப்புடன் இருக்கவும்
    ஆரோக்கியமாக வாழவும் இறைவன் அருள் செய்யட்டும்.

    பதிலளிநீக்கு
  6. இதுவரையில் இதைப் போல தோசை மாவு அரைத்ததில்லை.

    நமக்குத் தெரிந்ததெல்லாம் அரிசியும் உளுந்தும் வெந்தியமும் தான்.

    இவர்கள் சொல்லி இருப்பதில்
    தோசையின் குணம் மாறுமோ.
    சரவண பவனில் சில சமயம் ரவா மசால் தோசை கொடுப்பார்கள்.
    உடனே சாப்பிடாவிட்டால் அசடு வழியும்.

    திருமதி சியாமளா வெங்கட் ராமன் முறையும் செய்து பார்க்கலாம்.

    இங்கேயும் மசால் தோசை செய்தாலும் பசங்களுக்கு
    வேறு உபசாரங்களும்செய்ய வேண்டும்.

    அது சரி நாம் தானே அவர்களின் ருசியை
    வளர்க்கிறோம்:)
    மிக நன்றி ஜி.
    திருமதி சி.வெ அவர்களுக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம், இங்கேயும் இரண்டு மாசத்துக்கு ஒருதரமாவது உ.கி.சேர்ப்போம். அப்போப் பூரி, கிழங்கு அல்லது மசால் தோசை! எது முடியுமோ அது! ஆனால் இட்லி, தோசைக்கு அரைக்கும் மாவு தான் மசால் தோசைக்கு. இப்படிப் பருப்பெல்லாம் போட்டு அரைச்சது இல்லை. நானும் கொஞ்சமாகப் போட்டு ஒரு முறை பண்ணிப் பார்க்கிறேன். திரு ஜேகே அண்ணா சொல்லி இருக்காப்போல் மசால் அடையாகிடுமோனு எண்ணமும் வந்தது.

      நீக்கு
    2. அடைக்கு நான் துவரம்பருப்புக் கட்டாயமாய்ச் சேர்ப்பேன். நிறமும் மொறுமொறுவென்று வரவும் து.பருப்பு கட்டாயம்.

      நீக்கு
  7. சுருக்கமான செய்முறை விளக்கம் அருமை.

    பதிலளிநீக்கு

  8. தோசை மாவிற்கு உளுந்து வெந்தயம் தவிர மற்ற பருப்புகளையும் சேர்த்தால் அது அடையாகிவிடுமே?

    பதிலளிநீக்கு
  9. அனைவருக்கும் வணக்கம். சியாமளா மாமி மசால் தோசை செய்முறை அனுப்பியிருப்பதாகச் சொன்னார். வித்தியாசமாகத்தான் இருக்கிறது. நான் அரிசி,உ.பருப்பு,வெந்தயம் சேர்த்து அரைத்த மாவில்தான் செய்வேன். இந்த முறையிலும் முயற்சித்து பார்க்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
  10. படம் சூப்பர்!மசால் தோசையை அப்படியே சாப்பிட்டு விடலாம் போல இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  11. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  12. வணக்கம் சகோதரரே

    இன்றைய திங்கள் பதிவில் மசால் தோசை நன்றாக உள்ளது. படமும் கண்களை ஈர்க்கிறது. வித்தியாசமான தோசை செய்முறைகளையும் குறிப்பெடுத்துக் கொண்டேன். சகோதரிக்கு வாழ்த்துகள் அருமையான பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  13. அன்பின் வணக்கம் அனைவருக்கும்...
    நலம் வாழ்க எங்கெங்கும்...

    பதிலளிநீக்கு
  14. நல்வரவு...

    புதியதொரு கைப் பக்குவம்...
    வாழ்க வளமுடன்..

    பதிலளிநீக்கு
  15. செய்முறை குறிப்புகள் நன்று. மேலும் ஒரு புதிய வரவு - எங்கள் பிளாக் பக்கத்தில்! வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  16. காலையில் சொல்லாமல் விட்டதை இப்போப் பிடிக்கிறேன். பொதுவாக ஓட்டல்களில் இருபக்கமும் திருப்பிப் போட்டு வார்க்க மாட்டார்கள். ஒரே பக்கம் தான். அதுவும் கொஞ்சம் மஞ்சள் கலந்த பொன் நிறத்தில் வரும். முறுகல் அதிகமாக இருக்கும். இதற்கு நாம் செய்ய வேண்டியது மூன்றரைக்கிண்ணம் இட்லி அரிசியோடு அரைக்கிண்ணம் பச்சரிசி சேர்த்துக் கொண்டு அதற்கேற்ற ஒரு கிண்ணம் உளுந்து+ இரண்டுந்தேக்கரண்டி வெந்தயத்தோடு இரண்டு தேக்கரண்டி துவரம்பருப்பையும் நனைத்து விட்டு அரைத்துத் தோசை வார்த்தால் தோசை நிறமாகவும் முறுகலாகவும் வரும். அவலோ, கடலைப்பருப்போ, பாசிப்பருப்போ சேர்க்க வேண்டாம். என்னதான் ஒரு கைப்பிடிப் பருப்பு வகைகள் என்றாலும் மூன்று கிண்ணம் புழுங்கல் அரிசிக்குச் சேர்க்கையில் எல்லாம் ஊறிக்கொண்டு நிறையவே வரும். அவலும் தேவை இல்லை. ஒரு சிலர் வெந்தய தோசைக்கு அதுவும் பச்சரிசியில் அரைச்சால் மிருதுத் தன்மைக்காக அவல் சேர்க்கின்றனர். அதுவும் நாலு கிண்ணம் பச்சரிசி எனில் ஒரு கிண்ணம் உ.பருப்பு+அரைக்கிண்ணம் வெந்தயம், அரைக்கிண்ணம் அவல் போட்டு ஊற வைத்து அரைத்து வார்ப்பார்கள். வெந்தயம் நிறையச் சேர்த்தாலும் தோசைக்கு மொறுமொறுப்பு வரும். என் மாமியார் புழுங்கலரிசி 4 கிண்ணத்துக்கு அரைக்கிண்ணம் வெந்தயம் மட்டும் தனியாக அரைத்து ஊற வைத்து அதை முதலில் அரைக்கச் சொல்லுவார். வெந்தயமே உளுத்தமாவு மாதிரி புஸுபுஸு என வரும். அதன் பின்னர் அதிலேயே அரிசியைப் போட்டு அரைத்து தோசை வார்ப்போம். இந்த தோசை உள்ளே கூடு விட்டுக்கொண்டு பராத்தா மடிப்பு மடிப்பாக வருகிற மாதிரி இருக்கும். உள்ளே ஓட்டை போட்டுக்கொண்டு பூ மாதிரி மலர்ந்து வரும்.

    பதிலளிநீக்கு
  17. யாரானும் வந்து அடி விழறதுக்குள்ளே ஓட்டமாய் ஓடிடறேன். வர்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏன் அடிக்கணும்? நீங்க சொன்ன பக்குவங்கள் சரிதானே!

      நீக்கு
    2. ஹாஹாஹாஹா! அறியாத/தெரியாத/புரியாதவை அல்லவா? அதான்!

      நீக்கு
  18. இது மாதிரி நனைச்சு ஒரு நாள் தோசை வார்த்துப் பார்த்துட்டு அதைப் பகிர்கிறேன், சீக்கிரமாகவே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆனால் அளவை மாற்ற மறந்துடாதீங்க கீசா மேடம்... புழுங்கல் அரிசி 3 ஸ்பூன், உளுத்தம்பருப்பு 3 ஸ்பூன், பயத்தம்பருப்பு 12, கடலைப்பருப்பு 10, வெந்தயம் 2 என்றெல்லாம். இல்லைனா, மீதி மாவை என்னமாதிரி திப்பிசம் பண்ணலாம் என்று யோசிக்க வேண்டியிருக்கும்

      நீக்கு
    2. கௌதமன் சார், நன்றி.

      நெல்லை, க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்1

      நீக்கு
  19. இது புதுவித தோசையாக இருக்கு. பொதுவா மசால் தோசைன்னா, மசால்ல உருளை இருப்பதால் (கிழங்குப் பொருள்), தோசையில் எந்தவித பருப்பு வகைகளும் (உளுத்தம் பருப்பைத் தவிர) வரக்கூடாது என்பது பாலபாடம் (அதுபோல மோர்க்குழம்புன்னா, புளிக்கூட்டு. புளிக்குழம்புன்னா பாசிப்பருப்புக்கூட்டு-புளியில்லாதது...).

    சரி..இந்த மாதிரியில் ஒரு தடவை செய்துபார்த்திடுவோம். அப்புறம் பசங்க, மனைவி என்ன சொல்றாங்கன்னு கேட்டுட்டு, இங்க வந்து எழுதறேன்.

    பதிலளிநீக்கு
  20. இணையத்துல படத்தைத் தேடி கேஜிஜி சார் எடுத்துப் போட்டதைப் பாராட்டறேன்.

    அவர்லாம், இதான் 'பெண்ணின் படம்' என்று ஜாதகத்தோடு அனுப்பினால், கொஞ்சம் யோசிச்சு, எதுக்கும் நேர்ல பார்த்துடுவோம்... வேற ஏதேனும் நல்ல படமா தேடி அனுப்பியிருப்பாரோ என்று சந்தேகம் வந்துவிடும் (எனக்கு).

    மசாலா தோசைக்குள் இல்லை. அதுபாட்டுக்கு தோசையின் ஒரு ஓரத்தில் தேமேன்னு உட்கார்ந்திருக்கு. ஆனால் செய்முறைல உள்ள வைத்து சுருட்டிக் கொடுக்கணும்னுனா எழுதியிருக்கார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நெல்லை, நானும் நினைச்சேன். கிழங்கு ஓரத்திலே உட்கார்ந்திருக்கேனு. நான் தோசையின் நடுவில் சில சமயங்கள் கொத்துமல்லிக் காரச் சட்னி தடவிட்டு அதன் மேல் மசாலாவைப் பரவலாக வைத்து விட்டு தோசையை மடித்துக் கொண்டு ஓரங்களைத் தனியாக நெய் விட்டு முறுக விடுவேன். இன்னொரு பக்கமும் திருப்பிப் போட்டு முறுக விடுவேன். எங்க மருமகள் கிழங்கை தோசையில் நன்றாக முழுவதும் படும்படிப் பரவலாக வைத்து விடுவாள். பின்னர் தோசையை மடித்து வேக விடுவாள். அது நன்றாக இருக்கும் என்றாலும் அத்தனை கிழங்கு வைத்தால் ஒரு தோசைக்கு மேல் சாப்பிட முடிவதில்லை. ஆகவே நான் எனக்கு வார்த்துக் கொண்டால் கிழங்கைக் கொஞ்சமாய் வைப்பேன். பொதுவாய் மசாலா தோசைக்கே என் ஓட்டுப் பாதி தான் விழும். வீட்டில் அனைவருக்கும் பிடித்தது என்பதால் பண்ணுவேன். நான் ஒரு தோசை சாப்பிட்டால் மற்றது வெறும் தோசையாக வைச்சுப்பேன்.

      நீக்கு
    2. உங்க எழுத்தைப் படிக்கும்போதே மசால்தோசை சாப்பிட்ட திருப்தி வந்துவிட்டது. பெங்களூரில் மசால் தோசை ஃபேமஸ். (எனக்கெல்லாம் தோசைனா 1 1/2 அடியாவது இருக்கணும். இங்க 3/4 அடிக்கு மேல் தோசை வார்க்க மாட்டாங்க போலிருக்கு). ஒன்று சாப்பிடலாம். தொட்டுக்க பெரும்பாலும் சட்னி, தித்திக்கும் சாம்பார் (சென்னையில் நிறையமுறை வெளில ஹோட்டல்ல சாப்பிட்டிருக்கலாமே என்று தோன்றும். பஹ்ரைன்ல் நிச்சயம் வார இறுதியில் ஹோட்டலில் டிஃபன், இன்னொரு நாள் மதிய உணவோ இல்லை இரவு டிஃபனோ பசங்களோட செல்வோம்)

      நீக்கு
    3. // மசாலா தோசைக்குள் இல்லை. அதுபாட்டுக்கு தோசையின் ஒரு ஓரத்தில் தேமேன்னு உட்கார்ந்திருக்கு. ஆனால் செய்முறைல உள்ள வைத்து சுருட்டிக் கொடுக்கணும்னுனா எழுதியிருக்கார்.// சும்மா ஒரு தோசையை - பாயை சுருட்டி வைத்ததுபோல படம் போட்டு - இதுதான் மசாலா தோசை என்று எழுதினால் பார்ப்பவர்களின் ஆவலைத் தூண்ட முடியாது. மசாலா தோசை என்று பார்த்த மாத்திரத்திலேயே சுண்டி இழுக்கும் படம் வேண்டும் என்று தேடிக் கண்டுபிடித்த படம் இது.

      நீக்கு
    4. சியாமளா அவர்கள் அனுப்பிய படம் இல்லையா?
      நீங்கள் தேர்ந்து எடுத்து பகிர்ந்த படம் நன்றாக இருக்கிறது

      நீக்கு
  21. தோசையில் பூண்டு சட்னி தடவி அதில் உ.கி. மசாலாவை வைத்து கொடுப்பதை மைசூர் மசாலா தோசை என்பார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்ல வேளையா நான் ஓட்டல்களில் மைசூர் மசாலா தோசையே சாப்பிட்டதில்லை. மசாலா தோசையே அதிகம் ஓட்டலில் சாப்பிடுவதில்லை. சாப்பிட்டால் ஆனியன் ஊத்தப்பம். இல்லைனா ஆனியன் ரவா! இல்லைனா அடை, அவியல். அதுவும் குறிப்பிட்ட ஓட்டல்களில் மட்டும். நான் ரொம்பவே நொடிப்பேன். அதனால் எல்லா இடங்களிலும் சாப்பிட்டால் வயிறு சொன்னபடி கேட்டுக்காது.

      நீக்கு
    2. இரண்டு வாரங்களுக்கு முன்னால், புஸ்தகங்கள் வாங்க ஆட்டோவில் சென்றிருந்தேன். அருகில் அருமையான ஹோட்டலைப் பார்த்து, அங்கு பையனுக்குப் பிடிக்குமே என்று எல்லாருக்கும் சேர்த்து 3 மசால் தோசை வாங்கிவந்தேன் (எனக்கு இல்லை). ஆனா பாருங்க..அதில் பூண்டு மசாலா தடவியிருந்தான். மெதுவா சில மணி நேரம் கழித்து என்னிடம் வந்து, இனிமேல் மசால்தோசைலாம் வாங்கிவரவேண்டாம் என்று சொல்லிட்டான். எதில்தான் பூண்டு போடுவது என்றில்லையா?

      நீக்கு
  22. தோசைமாத்திரமில்லை. இதற்கான பின்னூட்டங்களும் அசத்துகிரது. மொத்தத்தில் எங்கள் பிளாக் எங்கெங்கோயோ போய்விட்டு வருகிறது.எவ்வளவு விஷயங்கள். அன்புடன்

    பதிலளிநீக்கு
  23. மசால் தோசை படம் மிக அருமையாக இருக்கிறது .
    செய்முறையும் புதுமையாக இருக்கிறது.

    சியாமளா வெங்கட்ராமன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கு அந்தக்காலத்தில் திருச்செங்கோடு சென்ட்ரல் கஃபேயில் மசால் தோசை சாப்பிட்ட நினைவும், பள்ளியில் ஏதோ ஒரு நிதி வசூலுக்காக எங்கள் ஹெட் மாஸ்டர் , ஷண்முகம் செட்டியார் அவர்கள் ,
      ' சென்ட்ரல் கஃபேலே மசால் தோசை வாங்கித் திங்கற கழுதைகள் , ஏன் ஒரு நல்ல காரியத்துக்கும் நாலணா குடுக்கக்கூடாது ? ' என்று பிரேயர் மீட்டிங்கில் திட்டியதும் நினைவுக்கு வந்தது. எப்போது மசால் தோசை சாப்பிடும்போதும் அவர் சொன்னது நினைவுக்கு வரும்.

      நிற்க, அந்த மசால் தோசையைப் போல இன்றுவரை எங்கும் சாப்பிட்டதில்லை. என் அம்மாவும் , இப்போது மனைவியும் மசால் தோசை எக்ஸ்பெர்ட்ஸ்தான். ஆனால் அந்த மசால் தோசையின் சுவையே அலாதி. ஒரு வேளை பள்ளிப்பருவத்தில் இனிய நினைவுகளின் சுவையும் சேர்ந்ததினால் இருக்குமோ ?

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!