செவ்வாய், 11 ஜனவரி, 2022

எவ்வளவு நெருக்கம் ? ( சிறுகதை ) - நிழலன்

 

 நண்பன் மணியை ( வெளி உலகுக்கு சுப்பிரமணியன் ) அகஸ்மாத்தாகத்தான் முதல் முறை சந்தித்தேன். 

அதிக நெருக்கம் இல்லாத நண்பன் கோவாலு, மணியை " என் புது ரூம் மேட்  " என்று அறிமுகம் செய்து வைத்தான்.  நெருக்கம் இருக்கிறதோ இல்லையோ செல்லப்பெயர் அல்லது பெயர்ச்சுருக்கம் ரொம்ப சீக்கிரம் வந்து விடுகிறது.

நாங்கள் எல்லாரும் புதிதாக துவக்கப்பட்ட கட்டுமான திட்டத்தில்  எங்கள் முதல் வேலையில் சேர்ந்த குமாஸ்தா பட்டாளம். அப்போதைக்கு ஒரு சிறு டவுனில் அவரவர் சாமர்த்தியத்துக்குத் தக்கபடி வாடகை ரூமில் ஒருவர் அல்லது இருவர், சில சமயம் ரூம் பெரிதாகவும் லாட்ஜ் அல்லது ஹோட்டல்காரர் ஆட்சேபிக்காவிட்டால் மூவர் நால்வர் என்று வசித்து வந்தோம். 

சில நாட்களில் கட்டுமான இடத்திலேயே குவார்ட்டர்ஸ் கட்டப்பட்டு நாங்கள் டவுனிலிருந்து காட்டுக்கு மாறிப்போனோம்.  எங்களை மாதிரி பிரம்மச்சாரிகளுக்கு இரண்டு பேருக்கு ஒரு சிறு குடியிருப்பு என்று ஒதுக்கினார்கள்.  இன்ஜினியர் ரொம்ப நல்லவர்.  ஒவ்வொருவரையும் கூப்பிட்டு, "உங்க கூட யாரைப் போடலாம் என்று விருப்பம் இருந்தா சொல்லுங்க " என்று கேட்டுக் கேட்டு ஜோடி சேர்த்து விட்டார். 

கோவாலுவுக்கு வெகு சீக்கிரம் கல்யாணம் நடக்க இருந்தது. எனவே இயல்பாக நாங்கள் மூவரும் அதாவது நான், மணி, கோவாலு சேர்ந்து ஒரு டார்மிட்டரி எடுத்துக் கொண்டோம்.  கொஞ்ச நாளில் கோவாலு சம்சாரி ஆகி எங்களை விட்டு தனிக்குடித்தனம் போய் விட்டான். அந்த வயதுக்கே இயல்பான நெருக்கம் எங்களிடையே இருந்த ஸ்நேகத்தை நாளுக்கு நாள் வலுப்பெறச் செய்து, " காம்ப்  இரட்டையர் " என்று பெயர் வாங்கும் அளவுக்கு அத்தியந்த சிநேகிதர்கள் ஆகிவிட்டோம். ஒரே மாதிரி துணிமணிகள், செருப்பு, கறுப்புக் கண்ணாடி என்று இரட்டையர் இலக்கணத்துக்கொப்ப வாழ்ந்து வந்தோம். 

இந்த நட்பை இன்னும் இன்னும் வலுப்படுத்த வேண்டும் என்ற துடிப்பு இருவருக்கும் இருந்தது.  என்ன செய்யலாம் என்று யோசித்து யோசித்து சில தீர்மானங்களை இயற்றி நடைமுறைப் படுத்தினோம். 

** ** 

"மொதல்ல எங்க வீட்டுக்கு நீ, உங்க வீட்டுக்கு நான், சேர்ந்து போய் குடும்பத்தை அறிமுகம் செஞ்சுக்கணும். அப்பறம் தீபாவளி ஒரு வருஷம் உங்க வீட்டிலே, ஒரு வருஷம் எங்க வீட்டிலேன்னு கொண்டாடணும்."

"நல்ல யோசனை. இந்த தீபாவளி உங்க வீட்டில. "

"ஓக்கே "

**

அடுத்த சில மாதங்களுக்குள் இரண்டு பேருமாக விஜயம் செய்து ரெண்டு குடும்பத்திலும் நன்றாக அறிமுகம் ஆகி கிட்டத் தட்ட இன்னொரு பிள்ளை என்ற ஸ்தானத்துக்கு போனது அளவிடமுடியாத சந்தோஷமாக இருந்தது. தம்பி தங்கைகள், அப்பா அம்மா எல்லாருக்கும் இந்த அன்னியோன்யம் பிடித்திருந்தது. எங்களுக்கும் பெருமையில் தலைகால் புரியவில்லை. இவ்வளவு எளிதாக ஓட்டுதல் உறவு ஏற்பட்டு பலப்பட்டது பெரிய வரப் பிரசாதமாகத் தோன்றியது. 

தீபாவளிக்கு ஒரு புதுப் பொலிவு உண்டானதாகப் பட்டது. "இந்தா உனக்கு என்னோட ஸ்பெஷல் பரிசு " என்று ரத்த சம்பந்தம் இல்லாத குட்டித் தம்பி அல்லது தங்கைக்கு ஒரு சட்டை, ஒரு பேனா கொடுப்பதில் இருக்கிற ஆனந்தம் அனுபவித்தவர்களுக்குத்தான் தெரியும். வீட்டிலிருந்து தபால் வந்தால் நண்பனும் உரிமையோடு  எடுத்துப் படிப்பான். என் அம்மா அப்பா எழுதுகிற விதம்,  விஷயம் மணிக்கு ரொம்பப் பிடிக்கும். 

ஆபீசில் ரெண்டு பேருக்கும் நல்ல பெயர்.  அகில உலகமும் எங்கள் நட்பைக் கொண்டாடியதாகத் தோன்றியது என்று சொல்லக் கூடாது.  கொண்டாடியது என்பதே உண்மை. எங்கள் இருப்புக்கு ஒண்டுக்குடியாக வந்த இரண்டாவது மூன்றாவது பேர்வழிகள் யாரானாலும்  சற்று அந்நியப்பட்டே இருந்தார்கள். 

**

மணிக்கு சொந்தக்காரக்  குடும்பங்கள் பலவும் அக்கம் பக்கத்து  ஊர்களில் இருந்தன.  எங்கள் வார இறுதிப்  பொழுதுபோக்கு ஒவ்வொரு குடும்பமாக போய்ப்பார்த்து ஒட்டுறவை எல்லாம் வலுப்படுத்திக் கொள்வதாக இருந்தது.  விற்பனைவரி ஆபீசர் மாமா வீட்டுக்கு போகும்போதெல்லாம் பலமான உபசாரங்கள்,  சித்தப்பா பையன் கஷ்டப்பட்டு பத்தாம் வகுப்பு நல்ல மார்க் வாங்கி பாஸ் செய்ய முயற்சிப்பது, சித்தப்பா ஒரு அழகி லேடி டாக்டருக்கு கடன் கொடுத்து விட்டு வசூல் செய்ய முடியாமல் திண்டாடுவது (அந்த அம்மாளை நாங்கள் போய்ப்பார்த்து அவரது புன்னகை ததும்பும் சம்பாஷணையை ரசித்து வருவது வழக்கம்), உருளை முட்டைக்கோஸ் பயிரிடும் மாமா இப்படியாக வகை வகையான உறவுகளை பார்த்து நிறையக்  கற்றுக்கொண்டேன்.

**** 

ஒருநாள் " இன்னிக்கி எங்க மாமா வீட்டுக்குப் போகலாம் " என்றான் மணி. 

"போன வாரம் போய்வந்தோமே ..."  அதே மாமாவீட்டுக்கு ரெண்டாவது விசிட் அவ்வளவு விரைவிலா  என்கிற மாதிரிக்  கேட்டேன். 

"இல்லை , இது வேறே மாமா.  நானே போய் பலவருஷம் ஆகிறது."

"வா கண்ணு வா, எவ்வளவு நாளாச்சு பாத்து" என்று , வரவேற்றார் மாமா.  கண்ணும், முகமும் மலர்ந்த விசேஷ சிரிப்பு கவர்ச்சியாக இருந்தது.  என்னைப்பார்த்தபடி " சார் யாரு ஒங்கூட வேல செய்யறாரா " என்று கேட்டபோது உற்சாகம் சற்றுக் குறைவதாகத் தோன்றியது. 

மணி என்னை சாங்கோபாங்கமாக அறிமுகம் செய்ததும் சட்டென்று புரிந்துகொண்ட மாதிரி என்னை நோக்கி ஒரு ஸ்பெஷல் சிரிப்பைத் தந்தபடி "வாங்க சார், வேலைக்கிப்  போன இடத்திலே மணிக்கு நல்ல சிநேகம் கெடச்சது நல்ல விஷயம்.  பாருங்க,  வருஷக்  கணக்கா வராம இருந்த மருமவன் இன்னிக்கி வந்திருக்கானே " என்றார்.

****

எங்கள் வாழ்க்கையில் மிக்க மகிழ்ச்சிகரமான நாட்கள் என்று சொல்லக் கூடிய கட்டத்தில் சந்தோஷமாக இருந்தோம்.  என்னை மாதிரி இல்லாமல் மணி வசதியான சூழ்நிலையில் இருந்தது எனக்கு ரொம்ப சௌகரியமாக இருந்தது.  எப்போது வேண்டுமானாலும் சிறு அல்லது கொஞ்சம் பெரும் தொகை கடனாக கொடுத்து உதவினான்.  ஊரில் என் குடும்பம் பெரும் கவலை ஏதும் இல்லாமல் இருக்க இது பெரும் உதவி. 

அவனுடைய மாமா சித்தப்பா என்று பல குடும்பங்கள் அருகாமையில் சிற்றூர்களில் வசித்து வந்ததால் வாராவாரம் புதிது புதிதாக ஒவ்வொரு வீடாக விஜயம் செய்து உபசரிப்புகளில் திணறிப்போனோம். 

**

இங்கும் அங்குமாக மாறி மாறி தீபாவளி மிக சுவாரசியமாக இருந்தது. என் பங்குக்கு நானும் சில உறவினர் வீட்டுக்கு அழைத்துச் சென்று அறிமுகம் செய்து வைத்தேன். 

" எனக்கு ஒரு ஐடியா .  எங்க வீட்டுப் பெண் யாரையாவது நீ,  உங்க வீட்டு பெண்ணை நான் என்று கல்யாணம் செய்து கொண்டால் நம்ம சிநேகம் பெர்மனெண்ட் ஆயிடும் இல்லியா " என்று திடீரென்று ஒருநாள் கேட்டான் மணி.  என் சொந்தக்கார பெண் ஒருத்தியை அவன் ஆர்வமாகப் பார்த்தது என் நினைவில் நிழலாடியது. 

இப்போது சொன்னால் சிரிப்பீர்கள்.  அந்தக் காலத்தில் இந்த மாதிரி வெவ்வேறு ஜாதிகளுக்கிடையே விவாக சம்பந்தம் அவ்வளவு பிரசித்தம் இல்லை.  அவ்வளவு ஏன் ?  யாரோ ஒரு பெண்ணை விரும்புகிறேன் என்று பெற்றோரிடம் பையன்கள் சொல்ல வெட்கப்பட்டுக் கொண்டு விலகிப் போன காலம். 

ஜாதி விட்டு ஜாதி கல்யாணம் தீர்க்க முடியாத சிக்கல்களை ஏற்படுத்தும் என்று இருவருமாக சாங்கோபாங்கமாக பேசி ஒரு முடிவுக்கு வந்தோம்.  மணியின் மாமா பெண் சீலு புடவை உடுத்த ஆரம்பித்தபின்பு மணியின் கவனம் கலப்புக் கல்யாணத்திலிருந்து சொந்தக்காரப் பெண்ணை மணப்பதில் திரும்பியது. 

"பேஷ், பொண்ணு பிரமாதமா இருக்கா.  உனக்கு ஏற்ற ஜோடி.  அப்புறம் என்ன? கல்யாணம் பேசவேண்டியதுதானே " என்று உற்சாகமாகச் சொன்னேன். 

"அதிலே ஒரு சிக்கல் இருக்கு" என்றான் மணி. 

" என்னடா சிக்கல், நாகப்பட்டினம் ?  சொந்த மாமா பொண்ணு.  அப்புறம் சிக்கல் என்ன சிக்கல் ? "

"கொஞ்சம் டயம் குடு.  கொஞ்சம் அங்கே இங்கே பேசவேண்டி இருக்கிறது.  பிறகு தேவையானா  உன் கிட்ட விவரமா சொல்றேன். "

***

"இது எங்க அண்ணனுடைய நெருங்கின நண்பன்.  பேரு  பிரகாசம். அவன் எங்க அண்ணா கிட்ட சொன்ன ஒரு விஷயம் உனக்குச் சொல்லலாமா கூடாதான்னு தெரியல. "

"சொல்லக் கூடாததுன்னா சொல்ல வேண்டாம் .  ஆனாலும் அதை நீ பிரஸ்தாபிக்காமலே இருந்திருக்கலாம்.  நீ சொன்னதினாலே  அது என்னவா இருக்கும் என்று சதா யோசனையா இருக்கு ".

" வேறே ஒண்ணுமில்ல.  நீ தப்பா நினைக்க வேண்டாம்.  பிராமணப் பசங்களை நம்பாதே அவங்க கூட இருந்தே குழி பறிச்சுடுவாங்க என்று என் அண்ணனுக்குச் சொல்லி இருக்கான் . "

எனக்குத் துணுக் என்று இருந்தது.  இப்படி ஒரு விஷயத்தை ஒரு அந்தரங்க சிநேகிதன் சொல்லி இருக்க முடியுமா என்று அதிசயித்தேன்.  நான் இவர்கள் வீட்டு விஷயங்களில் அதீதமாகத் தலையிடுவது கூட சரி இல்லையோ என்று தோன்றியது. 

" பாத்தியா ஒரேயடியா அப்செட் ஆயிட்டியே.  இதுக்குதான் சொல்லலாமா வேண்டாமா என்று யோசித்தேன் "

" சே அதெல்லாம் ஒன்றும் இல்லை " . என்றாலும் என் மனதுக்குள் ஒரு எச்சரிக்கை மணி ஒலித்துக் கொண்டே இருந்தது.

****

முதல் தடவை மணியுடன் அவன் வீட்டுக்குப் போய் விட்டு திரும்பினோம்.  அண்ணா, தம்பி, ஒரு அக்கா , ஒரு தங்கை கலகலப்பான குடும்பம்.  அண்ணா அதிகம் பேசாத டைப்.  அக்கா புன்னகையை மட்டுமே மொழியாக வைத்திருந்தார்.  பிறகுதான் தெரிந்தது அவருக்கு காது கேட்காது என்று. 

" எங்க வீட்டுக்கு வந்திருந்தியே, ஒரு விஷயம் கவனித்தாயா ?"

" என்ன விஷயம் ? "

" நான் என் தம்பியோடு பேசவே இல்லை என்பதைக் கவனிக்கலியா ? "

" அட, நான் கவனிக்கத்தான் இல்லை.  என்ன சண்டை உங்களுக்குள் ?  ஏன்  பேசுவதில்லை ?  எத்தனை நாளா பேசறதில்லை ? "

" அது எத்தனை வருஷம் என்பதே தெரியாது அவ்வளவு நாளா நாங்க பேசிக்கிறதில்லை !"

" என்ன தகராறு உங்களுக்குள்ளே ? "

" அதுதான் வேடிக்கை.  என்ன காரணம் என்றே ரெண்டு பேருக்கும் தெரியாது. "

" இதென்ன அநியாயம் ! சொந்தத் தம்பியோடு வருஷக் கணக்காக பேசாமல் இருக்கிறதாவது ?"

" தப்புதான்.  என்ன செய்யறது ? திடீர்னு போய் பேசணும்னா கொஞ்சம் கூச்சமா இருக்கு."

ஒரு நண்பன் என்று இருந்து கொண்டு இதைக் கேட்ட அப்புறம் சும்மா இருக்க முடியுமா ? கொஞ்சம் சிரத்தை எடுத்துக் கொண்டு ரெண்டு பேரையும்  கை  குலுக்கிப் பேசவைத்தேன்.  இருவருக்கும் பரம சந்தோஷம் .  எனக்கும் எதோ பெரிய சாதனையைச் செய்த திருப்தி.

**** 

மணி சீலு  கல்யாணம் அமோகமாக நடந்தேறியது. 

சினிமா நாவல்களில் எல்லாம் புது மணப்பெண்  - கணவனின்  சிநேகிதன் உறவு ஒரேயடியாக பாசமலராகச் சித்தரிக்கப் பட்டிருக்கும்.  இல்லையென்றால் நண்பன் அந்தப் பெண்ணை ஒரு மனவிகாரத்துடன் பார்ப்பதாக சொல்லி திடுக்கிட வைப்பார்கள்.  எங்கள் விஷயத்தில் அப்படியெல்லாம் குழப்பமோ பாசமழையோ எதுவும் இல்லை.  என்றாலும் புது மணத்தம்பதியர்களுக்கிடையில் நண்பன் என்று சொல்லிக் கொண்டு ரொம்பவும் சொந்தம் கொண்டாடுவது எனக்கு அவ்வளவு பாந்தமாகப் படவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக இதர நண்பர்களுடன் அரட்டை, சீட்டு ஆட்டம் என்று சற்றே திசை திரும்ப முயற்சித்தேன்.  மணிக்கு அது கொஞ்சம் கூடப் பிடிக்கவில்லை. 

" கல்யாணம் ஆயிட்டா என்ன ,  நானும் நீயும் அந்நியமாயிடுவோமா என்ன.  நீ எங்க கூடவே தங்கினா  என்ன ? "

" தங்கலாம் தான்.  ஆனா நம்ம டார்மிட்டரி வீட்டுல அதெல்லாம் அசாத்தியம்.  நான் அடுத்த பிளாக்கில்தானே இருக்கிறேன், கூப்பிட்ட ஒரே நிமிஷத்தில் வந்து நிற்கப் போறேன். "

இந்த சங்கடத்தை கடவுள்  வெகு சீக்கிரம் தீர்த்து வைத்தார்.  எனக்கு வேறு ஒரு முகாமுக்கு மாற்றல் வந்து விட்ட்து. 

" வாரா வாரம் வந்து பார்க்கிறேன்.  நீங்க ஜாலியா இருங்க " என்று சொல்லிவிட்டு மூட்டை கட்டினேன்.

****

என் மாற்றலுக்குப் பின் தபால் மூலமாக எங்கள் நட்பு தொடர்ந்து வந்தது.  வாரம் ஒரு முறையோ அல்லது மாதம் இரண்டு முறையோ நான் மணி வீட்டுக்குப் போய் ஒரு நாள் தங்கி வருவேன். 

" என்ன , இவன் கிட்ட சொல்லலாமா ? " என்று ஒருநாள் மனைவியைப் பார்த்துக் கேட்டான் மணி.  எனக்கு ஒரு மாதிரியாகப் போய்விட்டது.  என்னிடம் சொல்லக் கூடாத விஷயம் என்றால் அதை எனக்கு முன்பாக ஏன்  பிரஸ்தாபிக்க வேண்டும் ?  சீலு  வேண்டாம் என்று சொல்லிவிட்டால் என்ன செய்வான் ?  அப்படிதான் என்ன பெரிய விஷயம் இருக்கும் ? 

ஒரு நகைப்பெட்டியைக் கொண்டுவந்து என்னிடம் கொடுத்து " எட்டு பவுன் " என்றான் மணி.

" பேஷ், இதில் என்னடா ரகசியம் ?  சம்சாரத்துக் கிட்ட பெர்மிஷன் எல்லாம் கேட்கிறே " என்று சீலு பக்கம் பார்த்துச் சிரித்தபடி கேட்டேன். சட்  என்று அவள் முகம் சுருங்கிவிட்டது.  விருக்  என்று எழுந்து உள்ளே போனாள் .  

எனக்கும் ஒருமாதிரி சங்கடமாகப் போய்விட்டது. 

" சரி சரி வேறே ஏதாவது விஷயம் பேசலாம்.  இதை விடு " என்று  சொன்னேன். 

ஒரு கணம் யோசித்தவன் " நமக்குள் என்ன ரகசியம் வேண்டிக் கிடக்கு ? எங்க வீட்டில இதை சீலு  வீட்டில் செய்து சீராகக் கொடுத்ததா சொல்லலாம்னு பிளான் பண்ணி இருக்கோம்."

இது சீலுவின்  ஐடியா என்று எனக்குப் புரிய வெகு நேரம் ஆகவில்லை.  ஆனால் அதற்கு என்ன காரணம் என்று தெரியவும் இல்லை  கேட்கவும் பிடிக்கவில்லை.  இருந்தாலும் எனக்கு அந்த வீட்டில் சில சுதந்திரங்கள் உண்டு  என்பது என் திட நம்பிக்கை. 

" மணி, ஒண்ணு  சொல்லட்டுமா ?  நீ இந்த மாதிரி நல்ல நகை வாங்கி சம்சாரத்துக்குப்  போடுகிறாய் என்பதை  ஏன்  பெத்தவங்க கிட்ட மறைக்கணும் ?  அவங்க எவ்வளவு சந்தோஷப்  படுவாங்க இதைக் கேட்டு."

" இல்லை, கல்யாணத்துக்கு தங்கச்சி இருக்கா.  அவளுக்குக்  கொடுத்துடுன்னு சொன்னாங்கன்னா சங்கடமாயிடும்னு அவ நெனைக்கிறா. "

" அதுக்கென்ன , தங்கச்சிக்கு கொஞ்ச நாள்ள வாங்கித் தரேன்னு சொல்ல வேண்டியதுதானே. "

" அப்ப மட்டும் பணம் செடில காய்க்குமான்னு கேக்கிறா. "

எனக்கு சப் என்று ஆகிவிட்டது. " உன் இஷ்டம் " என்று சொல்லி எழுந்தேன். 

கடைசியில் அவன் உள்ளதை உள்ளபடி வீட்டில் சொல்லி, அவர்கள் இவர்கள் எதிர்பார்த்தபடி எதுவும் சொல்லவில்லை.  எனக்கு பெரிய நிம்மதி.  ஆனால் மணி வீட்டில் எனக்கு வரவேற்பு முன் போல் இல்லை என்று தோன்றியது.  அது என் கற்பனையாகக் கூட இருக்கலாம்.

 ****

106 கருத்துகள்:

 1. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

  எல்லோரும் எல்லா நாட்களும் நல் ஆரோக்கியத்துடன்

  இருக்க இறைவன் அருள வேண்டும்.

  பதிலளிநீக்கு
 2. நிழலன்??????? கேள்விப்பட்டதே இல்லை.
  நிழலில் இருப்பவர் தெரிந்தவராக இருக்கும்.
  இரண்டாவது தடவையாக கதையை விட
  ஆசிரியர் கவனிக்கப் படப் போகிறார்:)

  சிலசமயம் அதிகம் கவனிக்கப் பட வேண்டும் என்று
  விரும்புபவர்கள் முற்காலத்திலும்
  இருந்திருக்கிறார்கள்.

  பதிலளிநீக்கு
 3. படம் அற்புதம். தெரிந்த இரட்டையர் மாதிரி இருக்கிறார்கள்.

  பதிலளிநீக்கு
 4. காலை வணக்கம் சகோதரரே

  அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் எவ்வித கலக்கங்களும் இல்லாத நல்ல நாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 5. அருமையான கதை. தோழனோடுஇருக்க வேண்டிய நட்பு,
  மனைவி வந்ததும்
  மாறுவது சகஜமே.
  நண்பன்
  மணிக்கு இடித்துரைக்கப் போய் இவர் நல்ல நட்பை இழக்கிறார்.

  விலக்கப் படுகிறார்.
  வெகு யதார்த்தமாக நடந்து செல்லும் சற்றே நீண்ட கதை.

  பதிலளிநீக்கு
 6. வணக்கம் சகோதரரே

  நல்ல யதார்த்தமான கதை. திருமணம் ஆவதற்கு முன்பு இருக்கும் நெருக்கமான நட்பு திருமணத்திற்கு பின் அனைவர் வாழ்விலும் தொடராது என்பதை அழகாய் காட்டியிருக்கிறார் கதையின் ஆசிரியர்.
  ஏதாவது ஒரு பிரச்சனை தலைத்தூக்கி நட்பை உடைக்கும் போது மனம் விட்டுத்தான் போகும். இறுதியில் முடித்த விதம் அருமை.

  இது வரை கேள்விப்படாத புதிய எழுத்தாளருக்கு மனமார்ந்த வாழ்த்துகள். அவர் பெயரும்(புனைப்பெயர்?) புதுப் பெயராக நன்றாக உள்ளது. அவர் குடும்பத்தினர் அனைவருக்கும் நிழலாக இருக்கட்டும்.

  கதைக்குப் பொருத்தமாக வரைந்த படம் நன்றாக உள்ளது. படம் வரைந்தவருக்கும் வாழ்த்துகள்.

  இந்த மாதிரி நட்பாக இருந்த இருவர் தங்கள் திருமணத்திற்கு பின்பும், ஒரே வீட்டில் குடும்பமாக தங்கள் குழந்தைகளுடன் இன்னும் சிறப்பான நட்புடன் ஒற்றுமையாக வாழ்ந்து வருவதாக படித்த நினைவு வருகிறது. முன்பு எங்கோ எப்போதோ ஒரு பத்திரிக்கையில்/வார புத்தகத்தில் இதை படித்துள்ளேன். ஊர் பெயர் விபரங்கள் மறந்து விட்டது. இந்த காலகட்டத்தில் சொந்த அண்ணன் தம்பி உறவே அப்படி சேர்ந்து வாழ தயங்குகிறார்கள். ஆனால் இது சாத்தியமா என்ற கேள்வியுடன், அவர்களுக்கு மனதாற வாழ்த்துகளை சொல்ல மட்டும் தோன்றியது. இந்தக் கதை படித்து வருகையில் அது நினைவில் வந்தது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கமலா, நீங்க சொல்லுவது எழுத்தாளர்கள் சு.பா. என நினைக்கிறேன்.

   நீக்கு
  2. கருத்துரைகளுக்கு நன்றி.

   நீக்கு
  3. நீங்கள் எழுத்தாளர்கள் சுபா வைச் சொல்லுகிறீர்களோ?

   நீக்கு
  4. நெல்லை, அதான் நானும் சொல்லி இருக்கேன். க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

   நீக்கு
  5. ஓ ! ஒருவேளை நீங்க எழுத்தாளர்கள் சு பா வைச் சொல்கிறீர்களோ? (ஹி ஹி - நானும் என் பங்குக்கு !!)

   நீக்கு
  6. நான் siteஐ open பண்ணிப் படித்து கருத்திடுகிறேன். இடையில் மற்றவர்கள் கருத்துரைத்திருந்தால் தெரியாது. என் கருத்து வெளியிட்டபிதான் அதற்கு முந்தைய கருத்துகளைப் பார்க்க முடியும்.

   நீக்கு
  7. வணக்கம் சகோதரி

   நான் இந்தக் கதை எழுதிய நிழலன் என்பவரைத்தான் புதிதாக உள்ளார் என கூறியிருக்கிறேன். நீங்கள் கூறும் சு.பா என்பது இரு எழுத்தாளர்களா? சகோதரர் நெல்லைத்தமிழர் சுபா என்று சேர்த்து ஒரே பெயராக குறிப்பிட்டுள்ளார். கௌதமன் சகோதரரும் தன் பங்குக்கு சுபாவை வலியுறுத்தி சொல்லியுள்ளார். எனக்கு அந்த மாதிரி பெயருள்ள எழுத்தாளர் யாரென தெரியவில்லை. அந்த சு.பா என்பவரின் விரிவாக்கப் பெயர் நீங்கள் சொன்னால்தான் எனக்குப் புரியும். நன்றி.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   நீக்கு
  8. சு பா - 'சுரேஷ் மற்றும் பாலகிருஷ்ணன்' இருவரும் சேர்ந்து கதை எழுதுவார்கள். இதில் ஒருவர், எழுத்தாளர் அனுராதா ரமணனின் மாப்பிள்ளை.

   நீக்கு
  9. எழுத்தாளர் அனுராதா ரமணனின் மாப்பிள்ளை அல்ல, அ.ரா.வின் சித்தி பெண் ஜெயந்தியின் கணவர் சுரேஷ்.

   நீக்கு
  10. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

   நீக்கு
 7. அன்பின் வணக்கம் அனைவருக்கும்..
  இறையருள் சூழ்க எங்கெங்கும்..
  வாழ்க வையகம்..
  வாழ்க வளமுடன்..

  பதிலளிநீக்கு
 8. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். விரைவில் அனைவர் வாழ்விலும் முழு ஆரோக்கியம் திரும்பி அச்சமற்ற வாழ்க்கை வாழவும் பிரார்த்தனைகள்.

  பதிலளிநீக்கு
 9. யார் அது நிழலன்? புதுசா இருக்காரே? எ.பி.ஆசிரியர் குழாத்தில் ஒருத்தரா? அல்லது தெரிந்த நண்பர்களா? நடையும் படிச்ச மாதிரித் தான் இருக்கு. நெருங்கிய நண்பர்கள் திருமணத்திற்குப் பின்னரும் நெருங்கி இருப்பது அபூர்வமே. எங்கானும் ஒரு சிலர் அப்படி இருப்பார்கள். ஆனால் அந்த மணி அந்த நகையை நண்பனிடம் காட்டி இருக்க வேண்டாமோ? மனைவியின் கருத்தைத் தனிமையில் கேட்டிருக்கலாமோ? அதோடு அந்தப் பெண்ணும் வந்ததுமே நாத்தனாருக்குச் செய்வது எனில் பணம் மரத்தில் காய்க்குமா என்று கேட்டதை மணி இப்படிப் பட்டவர்த்தனமாக என்னதான் நண்பனாக இருந்தாலும் சொல்லி இருக்கக் கூடாது. கணவன்/மனைவி அந்தரங்கம் என்பது தனி. அதற்குள் அவங்க இருவரைத் தவிர வேறு யாருக்கும் நுழைய அனுமதி இல்லை. நண்பனைத் தனியாகப் பார்த்துச் சொல்லி இருக்கலாம் மணி. சில விஷயங்களை/சொல்லப் போனால் பல விஷயங்களையும் மனைவி/நண்பன் இருவரையும் வைத்துக் கொண்டு பேசுவது அவ்வளவு நல்லதில்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கருத்துரைக்கு நன்றி.

   நீக்கு
  2. நிழலன் யார்னு எனக்குத் தெரியுது. இந்த கீசா மேடம் கண்டுபிடிக்கலையே. கேஜிஜி சார்தான் அது.

   நீக்கு
  3. ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ

   நீக்கு
  4. ஆகா.. மறுபடியும் மறைந்திருந்து பார்க்கும் மர்மம் தொடர்கிறதா.?:))))

   நீக்கு
  5. கௌ அண்ணாவேதான்!!!!

   நிழலன், அமா, காசு சோபனா

   கீதா

   நீக்கு
  6. சொன்னால் நம்ப மாட்டீங்கறீங்களே ! நான் நிழலன் இல்லை.

   நீக்கு
  7. நான் இந்த விளையாட்டுக்கு வரலை. :)))))

   நீக்கு
 10. அருமையான எழுத்து. சகஜமான நடை. இயல்பான சம்பவங்கள். நடக்கும்/நடந்து கொண்டிருக்கும் ஒரு விஷயம். எழுத்தாளர் எளிதாகக் கையாண்டுவிட்டார். நண்பர்களின் படமும் பொருத்தமாக அமைந்து விட்டது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பாராட்டுகளுக்கு நன்றி. படம் நெட்டிலே சுட்டது!

   நீக்கு
  2. ஆமாம், ஏற்கெனவே பார்த்த நினைவும் கூட.

   நீக்கு
 11. வெவ்வேறு சமூகங்களைச் சேர்ந்த நண்பர்களுக்கிடையே திருமணத்திற்குப் பிறகும் நட்பு தொடரலாம். ஆனால் குடும்பத்துக்கிடையேயான நட்பாக இன்றைய சூழலில் இருக்க வாய்ப்புகள் மிகவும் குறைவு (அன்றைய சூழலில் வாய்ப்பு மிகவும் குறைவு)

  நண்பன் வேறு. மனைவி வேறு. ஒரு அளவுக்குமேல் நெருக்கம் இருக்காது. எனக்கும் இத்தகைய நட்பு வாய்த்திருக்கிறது. திருமணத்திற்குப் பிறகு, இரு குடும்பங்களும் பல வருடங்களுக்குப் பிறகு சந்தித்திருக்கிறோம். ஆனால் எனக்கும் அவனுக்கும் இடையேயான நட்பு நீடித்திருந்தது. நான் அவர்கள் வீட்டுக்குச் செல்வதையோ, சில குடும்ப விஷயங்களில் ஆலோசனை சொல்வதையோ அது தடுக்கவுல்லை. ஆனாலும் நல்ல இடைவெளியைக் கடைபிடித்தேன். அவனில்லாமல் அவர்கள் வீட்டுக்குச் சென்றது அபூர்வம், ஓரிரு முறை இருக்கலாம். உள்ளூரில் இருந்திருந்தால்கூட குடும்பத்தோடு பழகியிருக்கும் வாய்ப்பு மிக மிக்க் குறைவு

  கதையில் relate செய்ய முடிந்தது. இருந்தாலும் கதை வடிவம் இல்லை

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நெல்லை, நீங்கள் சொல்வது சரியே! இது அனுபவக் கட்டுரைனு சொல்லலாமே தவிர்த்துக் கதை எனக் கொள்ள முடியாது. ஏனெனில் ஒவ்வொருவருக்கும் இம்மாதிரி அனுபவம் கட்டாயமாய் வாய்த்திருக்கும். அவரவர் நினைவுகளைத் திரும்ப மீட்டெடுக்கும்.

   நீக்கு
  2. இன்னொன்று... திருமணமானபின், நண்பன் கிண்பன் என்று யார் தொந்தரவையும் மனைவிகள் விரும்புவதில்லை. நண்பனைப் பற்றி ஆஹா ஓஹோ என்று சொல்வதையோ, அவனுடைய சம்பந்தமான நிகழ்வுகளை சரியாக நினைத்திருந்து சொல்வதையோ (கிறந்தநாள் போன்று), மனைவி விரும்பமாட்டாள் (அவள் சம்பந்தமான சிலவற்றை இவன் மறந்துவிடுவான். இல்லை அவளுக்கே ஒப்பீடு தலைதூக்கும்)

   நீக்கு
  3. உங்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டதற்கு நன்றி.

   நீக்கு
  4. நெல்லை ஹைஃபைவ்....இதே ஒத்த் கருத்து கீழே கொடுத்திருக்கிறேன்

   கீதா

   நீக்கு
 12. திரு. நிழலன் அவர்களுக்கு நல்வரவு..

  பதிலளிநீக்கு
 13. @ கமலா ஹரிஹரன்..

  // இந்த மாதிரி நட்பாக இருந்த இருவர் தங்கள் திருமணத்திற்கு பின்பும், ஒரே வீட்டில் குடும்பமாக தங்கள் குழந்தைகளுடன் இன்னும் சிறப்பான நட்புடன் ஒற்றுமையாக வாழ்ந்து வருவதாக படித்த நினைவு வருகிறது... //

  நானும் அந்த நண்பர்களைப் பற்றிப் படித்திருக்கின்றேன்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி சகோதரரே. இத்தனைக்கும் அவர்கள் வேறு வேறு சமூகங்களை சேர்ந்தவர்கள் எனப் படித்ததாக நினைவு.

   நீக்கு
  2. கமலா நீங்கள் குறிப்பிடுவது எழுத்தாளர்கள் சுபா என்றால் இருவருமே பிராமணர்கள். சுரேஷ் தமிழர், பாலசந்திரன் மாத்வர்.

   நீக்கு
  3. வணக்கம் சகோதரி

   நான் இந்த எழுத்தாளர்கள் சேர்ந்து இருந்ததாக எங்குமே குறிப்பிடவில்லையே. ஆனால், இருவரும் சேர்ந்து கதைகள் எழுதினார்கள் என்று நீங்களும், சகோதரர் நெல்லைத் தமிழரும் தந்திருக்கும் தகவல்கள் எனக்கு புதிது. நன்றி.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   நீக்கு
  4. கமலா, இருவரும் சேர்ந்து பல தொடர் நாவல்கள், சஸ்பென்ஸ் த்ரில்லர் எழுதி இருக்காங்க. அவங்க சேர்ந்து இருந்தது பற்றி அவர்கள் இருவரின் மனைவிமாரின் பேட்டியோடு வெளி வந்திருந்தது பல ஆண்டுகள் முன்னால். ஏதோ ஒரு தொலைக்காட்சியும் பேட்டி எடுத்துப் போட்ட நினைவு. இப்போதும் சேர்ந்தே இருக்கிறார்கள் என நினைக்கிறேன். ஒருவர் வங்கி வேலை, இன்னொருத்தர் என்ன வேலை என்பது மறந்துட்டேன். டி.சுரேஷ், ஏ.என்.பாலகிருஷ்ணன். இருவருமாகச் சில படங்களுக்குக் கூடத் திரைக்கதை அமைத்திருக்கின்றனர். சுமார் 500 நாவல்களுக்குக் குறையாமல் எழுதி இருக்கலாம். இவங்களோட கதைகளில் வரும் டிடெக்டிவ் ஏஜென்சி ஈகிள் ஐ என்று பெயரில் வரும். நரேந்திரன், வைஜயந்தி இருவரும் முக்கியமான டிடெக்டிவ் கதாபாத்திரங்கள். ராஜேஷ் குமாருக்கு விவேக், சுபலா போல

   நீக்கு
  5. வணக்கம் கீதா சாம்பசிவம் சகோதரி

   இந்த விபரங்கள் நான் அறியேன். அந்த காலகட்டத்தில் எனக்கும் கதைகள், பத்திரிக்கைகள், மற்றும் சினிமா உலகத்திற்கும் இடையே நீண்ட இடைவெளிகள் இருந்தது. வீட்டினுள் என் வாழ்க்கை அடங்கிப்போன மாதிரி வேலைகள், குடும்பம், குழந்தைகள் என என் உலகம் சின்னதாக இருந்தது எதைப் பற்றியும் தெரிந்து கொள்ளாமல் இருந்து விட்டேன். ஆனால் நல்ல நினைவாற்றல் உங்களுக்கு. சிறந்த இந்த எழுத்தாளர்கள் பற்றிய நல்ல விபரமான தகவல்கள் தந்துள்ளீர்கள். விபரங்களுக்கு மிக்க நன்றி சகோதரி.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   நீக்கு
 14. நிழலன் "மனசு" என்ற ஒரு சிறு நெருடல். பஞ்ச் இல்லை. உரைநடை ஓகே.மொத்தத்தில் 10க்கு 5.

   Jayakumar

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பாஸ் மார்க் கொடுத்ததற்கு நிழலன் சார்பில் நன்றி.

   நீக்கு
 15. அட! நிழலன் - பெயர் நன்றாக இருக்கிறது. முழுவதும் கதையை வாசிக்கவில்லை அதற்கு முன் இந்த வரிகளைப் பார்த்ததும்

  //எங்க வீட்டுப் பெண் யாரையாவது நீ, உங்க வீட்டு பெண்ணை நான் என்று கல்யாணம் செய்து கொண்டால் நம்ம சிநேகம் பெர்மனெண்ட் ஆயிடும் இல்லியா " என்று திடீரென்று ஒருநாள் கேட்டான் மணி. என் சொந்தக்கார பெண் ஒருத்தியை அவன் ஆர்வமாகப் பார்த்தது என் நினைவில் நிழலாடியது. //

  //நான் பார்த்த பெண்ணைன நீ பார்க்கவில்லை

  நீ பார்த்த பெண்ணை நான் பார்க்கவில்லை

  உன் பார்வை போலே என் பார்வை இல்லை

  நான் கண்ட காட்சி நீ காணவில்லை

  என் விழியில்...நீ இருந்தாய்...என் விழியில் நீ இருந்தாய்

  உன் வடிவில்...நான் இருந்தேன்...உன் வடிவில் நானிருந்தேன்

  நீயின்றி நானில்லை நானின்றி நீயில்லையே//

  என்ற வரிகள் டக்கென்று நினைவுக்கு வந்தது.

  அப்புறம் ஹே தோஸ்து தி ஹம் நஹின் தோடேங்கே தோடேங்கே தம் மகர் தேரே சாத் ந சோடேங்கே

  முழுவதும் வாசித்து விட்டு வருகிறேன்

  கீதா

  பதிலளிநீக்கு
 16. // அது என் கற்பனையாகக் கூட இருக்கலாம்..//

  அருமை.. அருமை..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம். அந்த ஒற்றை வாக்கியத்தில் பல விஷயங்களை சொல்லிவிட்டார் நிழலன்.

   நீக்கு
 17. நிழலன் - கௌ அண்ணா போல இருக்கு!!!!!! ஹாஹாஹா ஹையோ திரும்ப நான் இந்த யூகப் போட்டியில் சிக்கிவிட்டேனோ?!!!!!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹா.ஹா.ஹா. ஆனால் இது ஒரு வாரத்தில் முடிவு தெரிந்து விடும் சகோதரி.

   நீக்கு
 18. கதையை வாசித்து முடித்துவிட்டேன். கௌ அண்ணாவேதான்!

  கதை யதார்த்தம். முடிவில் கற்பனையாக இருக்கலாம் என்று சொன்னது கற்பனை என்றும் சொல்ல முடியாது. நட்பில் - கண்ணாடியில் விழுந்த கீரல்கள் இவை - ஏனென்றால் புதிதாய்க் கல்யாணம் ஆன பெண்...கணவனின் நண்பர்கள் என்ற வட்டம் புரிதல் வட்டத்திற்குள் வரும் முன்னே மணி தன் நண்பர் முன்னிலேயே //" என்ன , இவன் கிட்ட சொல்லலாமா ? " என்று ஒருநாள் மனைவியைப் பார்த்துக் கேட்டான் மணி. //

  மணி இப்படிச் சொல்வதைத் தவிர்த்திருக்கலாம். சில மனைவிகளுக்கு ஒரு பொசசிவ்னெஸ் இருக்கும் என்பதால் புரிதல் வரும் முன்னே சொல்வது...

  இதுவும் மற்றும் அதற்கு முன்னரும் அண்ணனின் நண்பர் சொல்வதை மணி சொல்வது இவை எல்லாமே நல்ல நட்பிற்கு இடையில் வரும் சின்ன விரிசல்கள்...

  கீதா

  பதிலளிநீக்கு
 19. கதை விவரிப்பு யதார்த்தம் நன்றாக இருக்கிறது என்றாலும் ஏதோ ஒன்று குறைவது போல இருக்கு. எனக்கு என்ன என்று சொல்லத் தெரியவில்லை. ஆனால் வெகு யதார்த்தம் கதை இது.

  பாராட்டுகள் வாழ்த்துகள் நிழலன் - கௌ அண்ணா!!!!!

  கீதா

  பதிலளிநீக்கு
 20. அனுபவ விவரணம் என்று சொல்லலாமோ? அதுதான் குறையோ?!!!!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அப்படியும் சொல்லலாம். ஆண் நண்பர்களுக்கிடையில் ஏற்படும் நட்பு என்பது திருமணத்திற்குப் பிறகு நீர்த்துப் போய்விடுகிறது என்பதை சொல்லியிருக்கிறாரோ நிழலன் ?

   நீக்கு
  2. ஆண் நண்பர்களுக்கு இடையே ஏற்படும் நட்பு நீர்த்துப்பொக வாய்ப்பே இல்லை. ஒருவனைப்பற்றிய ஓரளவு முழு உண்மை நண்பனுக்குத்தான் தெரியும். அந்த நட்பு இறக்கும்வரை இருக்கும்.

   மனைவியிடம் நட்பாக இருப்பது அபூர்வம். அங்கு ஆண்டான் அடிமை மனோபாவம் ஓரளவிற்காவது தலைதூக்கும் என்பதால். அதுவும்தவிர, இருவர் இடையேயும் இமேஜ் என்ற ஒன்று இருக்கும். நல்ல நண்பர்கள் தங்கள் திருமண வாழ்க்கையின் எல்லாவிதப் பிரச்சனைகளையும் பகிர்ந்துகொள்வர் (ஒருவனிடம் மனம் விட்டுப் பேசணும் என்ற எண்ணத்தில்). அதைக்கொண்டு எந்தக் காரணம் கொண்டும் குடும்பத்தில் தலையிடுவதோ இல்லை அவனின் மனைவிக்குப் புரியவைக்கிறேன், அவன் உறவினர்களுக்குத் தெளிய வைக்கிறேன் என நல்ல நண்பன் முயலவே மாட்டான். தனிப்பட்ட விஷயத்தை நண்பன் பகுர்ந்துகொள்ளும்போது சில ஆறுதல் வார்த்தையோ இல்லை வழியையோ சொல்லிவிட்டு உடனே மறந்துவிடவேண்டும்.

   அதிலும்
   நண்பனுன் உறவினர்கள் தன் உதவியை நாடினால் நண்பனிடம் பேசி ஆற்றுப்படுத்தலாம், அதையும் நட்பைப் பங்கப்படுத்திக்கொள்ளுவதுபோலச் செய்யக்கூடாது.

   நீக்கு
  3. நான் குறிப்பிடும் நட்பு ஒருவனிடம்தான் உண்டாகும். எனக்கு ஏகப்பட்ட நண்பர்கள், ஏகப்பட்ட காதலிகள், ஏகப்பட்ட மனைவிகள் எல்லாமே வாதப்படி ஒன்றுதான்.

   நீக்கு
  4. இரண்டாவது கருத்துல குழப்பிட்டீங்க.

   நீக்கு
  5. ஒருவனுக்கு உண்மையான நட்பு, இன்னொருவனிடம் மட்டும்தான் ஏற்படும். அந்த ஆத்மார்த்த நட்பு வேறு... நண்பர்கள் வேறு. உங்களுக்கு நண்பர்கள் என்று நூறு பேர் இருக்கலாம். ஆனால் நட்பு என்பது ஒருவரிடம்தான் ஏற்படும் என்பது என் நம்பிக்கை. அவனிடம்தான் எல்லாவற்றையும் பகிரத் தோணும்.

   நீக்கு
 21. @ கீதா..

  // கதையை வாசித்து முடித்து விட்டேன். கௌ அண்ணாவே தான்!.. //

  ஊர் அறிந்த ரகசியமாக கூட இருக்கலாம்..

  நமக்கெதுக்கு வம்பு!..

  பதிலளிநீக்கு
 22. கதை நன்றாக இருக்கிறது. நிழலன் என்னும் பெயர் புதிதாக இருந்தாலும், நடை மிகவும் பரிச்சயமானதாக இருக்கிறது. ஒரு காலத்தில் கல்கி நிறைய புனை பெயர்களில் எழுதினாராம். ரா.கி.ரங்ஙராஜன், ஜ.ரா.சுந்தரேசன் போன்றவர்களும் வேறு வேறு புனை பெயர்களில் எழுதியிருக்கிறார்கள். எ.பி.யில் கே.ஜி.ஜி.சார் அதையே செய்கிறார்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எல்லாம் சரி - கடைசி விஷயத்தைத் தவிர.

   நீக்கு
  2. 👍😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎

   நீக்கு
 23. நண்பரது குடும்பத்தில் தலை நீட்டுவதை ஓர் அளவுடன் வைத்துக்கொண்டால் இருபுறமும் நல்லது.

  பதிலளிநீக்கு
 24. நான் அவனில்லை என்று மறுக்க மறுக்க அவர்தான் என்று ஊர்ஜிதம் ஆகிறது. எனக்கும் கௌதமன் ஜீ என்றே படுகிறது. கதை என்று சொல்வதை விட டயரி குறிப்பு படித்ததைப் போல இருக்கிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கருத்துரைக்கு நன்றி. நிழலரே இது எனக்கு தேவைதானா??

   நீக்கு
 25. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

  பதிலளிநீக்கு
 26. நண்பனின் உறவினரைத் திருமணம் செய்துகொண்டால் -- இதெல்லாம் சாத்தியமே இல்லை. நட்பு வேறு, உறவு வேறு. இது பேட்ஸ்மெனும் நானே, பௌலரும் நானே கதை. குடும்பச் சிக்கல்கள் நட்பைப் பதம் பார்த்துவிடும்.

  அதே சமயம், நல்ல நட்புக்கு சாதி, மதம், இனம் குறுக்கீடாக அமைவதில்லை

  பதிலளிநீக்கு
 27. கதை ஒரு நண்பரின் அனுபவத்தை சொல்கிறது.
  நட்பை எப்படி தொடர்வது, அதை எப்படி தக்க வைத்துக் கொள்வது என்று எல்லாம் கதை சொல்கிறது. பழகுவதில், உரிமை எடுத்துக் கொள்வதில் அளவு முறையுடன் இருந்தால் நீடித்து நிலைக்கும் நட்பு.
  அந்தக் காலத்தில் பெரியவர்கள் "கடும் உறவு கண்ணை கெடுக்கும் "என்று சொல்லி விட்டார்கள்.

  கதைக்கு படம் பொருத்தமாக இருக்கிறது .

  பதிலளிநீக்கு
 28. நிழலன் கதை நல்லதொரு அனுபவம் ஸ்ரீராம் என்று மனம் சொல்கிறது பார்ப்போம் :) படமும் நன்று.

  பதிலளிநீக்கு
 29. எனக்கும் அந்த சந்தேகம் வருகிறது. எ பி குடும்பத்தில்
  இன்னோருவரும் எழுதுவார்."ஸ்ரீராம் என்று மனம் சொல்கிறது"!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எழுதியவர், தன் பெயரை வெளியிடவேண்டாம் என்று சொன்னார்.

   நீக்கு
  2. வணக்கம் சகோதரரே

   /எழுதியவர், தன் பெயரை வெளியிடவேண்டாம் என்று சொன்னார்./

   சகோதரர் ஸ்ரீராம் அவர்கள் இன்று முழுவதும் இங்கு எட்டிக்கூட பார்க்கவில்லை. ஒரு வேளை அவராக இருக்கலாம் என்ற வல்லி சகோதரியின் சந்தேகம் எனக்கும் வருகிறது.:))

   எது எப்படியோ, இன்றைய 100 ஆவது கருத்தை பகிர எனக்கு சான்ஸ் தந்த ஸ்ரீராம் சகோதரருக்கு மிக்க நன்றி.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   நீக்கு
  3. கதையை எழுதியவர், இதுவரை எ பி யில் கதை எழுதியது இல்லை.

   நீக்கு
 30. நட்பு என்றாலும் கூட ஒரு எல்லை வேண்டும் குடும்பம் என்று ஆகும் போது. மனைவி அல்லது கணவன் யாராக இருந்தாலும் நட்பையும் இணையையும் சமாளித்துச் செல்லத் தெரிய வேண்டும்!

  தூர இருந்தால் சேர உறவு. கதை யதார்த்தமாக நன்றாக இருக்கிறது. அழகாகச் சொல்லிச் செல்வதை,

  துளசிதரன்

  பதிலளிநீக்கு
 31. நிழலன்..... நல்ல ஒரு புனைப்பெயர். நட்பு, குடும்பம் என இரண்டு விஷயங்கள் சொல்லும் கதை போன்ற பதிவு..... யார் எழுதி இருப்பார் என்ற கேள்வியும் அதற்கான பலரது சந்தேகங்களும் பார்த்தேன். பொதுவாக சிறுகதை பதிவுகளுக்கு தொடர்ந்து கருத்து எழுதும் ஜீவி ஐயா இதுவரை இந்தப் பதிவில் ஒன்றும் எழுதவில்லை என்பதால் பதிவு எழுதியது அவராக இருப்பாரோ என்றும் தோன்றியது. அவராக இருக்க வாய்ப்பில்லை என முடிவுக்கும் வந்துவிட்டேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நல்ல அலசல். கதையை எழுதியவர், இதுவரை எ பி யில் கதை எழுதியது இல்லை.

   நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!