புதன், 16 நவம்பர், 2022

இட்லி கேள்விகள்!

 

ஜெயக்குமார் சந்திரசேகரன்: 

கொஞ்சம் இட்லி கேள்விகள் சும்மாதான். 

# சமையல் தெரியாது என்றாலும் கேள்விப்பட்ட தகவல் அடிப்படையில் . நானும் சும்மா பதில் சொல்கிறேன்! 

இட்லி மாவுக்கும் தோசை மாவுக்கும் வித்தியாசம் உண்டா? இட்லி நன்றாக வரும் மாவில் தோசை பேப்பர் ரோஸ்ட் போட முடியவில்லையே? 

# இட்லி மாவு உளுந்து அதிகம் சேர்க்க வேண்டும், அதிக நேரம் அரைக்க வேண்டும். எனவேதான் இட்லி மாவில் பேப்பர் தோசை வருவதில்லை. 

& இட்லி அரிசி போல, தோசை அரிசி என்றும் ஒன்று இருக்கிறது என்பதை சில வருடங்களுக்கு முன்புதான் தெரிந்துகொண்டேன். தோசை அரிசியில் உளுந்துடன் செய்யப்பட்ட மாவில் முதல் முறையாக தோசை செய்து சாப்பிட்ட போது முறுக்கு மாவில் செய்யப்பட்ட தோசை போல மிகவும் சுவையாக இருந்தது. என்னைப் பொருத்தவரை கெட்டியாக இருந்தால் இட்லி மாவு; நீர்க்க இருந்தால் தோசை மாவு. இட்லி மாவு கொஞ்சம் புளித்தால்தான் இட்லி சுவையாக இருக்கும். புளிக்காத மாவு தோசைக்கு நன்றாக இருக்கும். 

இட்லிக்கு துணை சட்னி வகைகளை மிகப்பிடித்தது முதல் வேண்டாம் என்று ஒதுக்கப்படுவது வரை வரிசைப் படுத்துக.

தேங்காய் சட்னி, கடலை சட்னி, கார சட்னி, தக்காளி சட்னி, புதினா கொத்தமல்லி சட்னி, பூண்டு மிளகாய் சட்னி, வெங்காய சட்னி, இட்லிப்பொடி, வெங்காய சாம்பார், வெஜிடபிள் குருமா, வத்தல் குழம்பு, கொஸ்து. வடகறி, கடி. கடப்பா.

# பிடித்தது  தேங்காய் சட்னி , கொத்சு,  கார சட்னி, தக்காளி சட்னி.. பிடிக்காதது பொதினா சட்னி, கொத்துமல்லி சட்னி கடலை சட்னி.. பிறவற்றை சட்னியாக நான்  நினைக்கமாட்டேன். 

& எனக்குப் பிடித்தது இட்லி மிளகாய்ப் பொடி + நல்லெண்ணை. பிடிக்காதது கடலை சட்னி.

ராமசேரி ( பாலக்காடு ) இட்லி பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

# , $ , & : இல்லை! 

துணிபோட்டு பழைய இட்லி சட்டியில் வேகவைக்கப்பட்ட இட்லி, இட்லி குக்கரில் அடுக்குத் தட்டுகளில் துணி போடாமல் ஊற்றி எடுத்த இட்லி, காஞ்சிபுரம் இட்லி போல் மந்தார இலையிலோ, வாழை இலையிலோ ஊற்றி வேக வைக்கப்பட்ட இட்லி இவற்றில் எது பிடிக்கும்? வாசனையில் எது சிறந்தது? 

# துணி போடாமல் செய்யப்பட்ட சாதாரண  இட்லி மட்டுமே பிடிக்கும்.

& வீட்டில் செய்யப்படுவது - (பிடித்தாலும், பிடிக்காவிட்டாலும்) குக்கர் தட்டு இட்லி மட்டுமே. 

பழைய இட்லிகள் சாப்பாடு தட்டிற்கு என்ன என்ன அவதாரங்களில் மீண்டும் வரும்? அவற்றில் எது பிடிக்கும்?  

# இட்லி மறு அவதாரம் பிடிக்காது . 

& எனக்கு இட்லியை விட இட்லி உப்புமா பிடிக்கும். இட்லியை ஃபிங்கர் சிப்ஸ் (French fry) போல் துண்டுகள் செய்து எண்ணெயில் பொரிக்கப்பட்ட இட்லி ஃபிரெஞ்சு ஃப்ரை பிடிக்கும். 

இட்லி பர்கர் செய்து சாப்பிட்டிருக்கீர்களா? 

# , $ , & : இல்லை! 

குஷ்பூ இட்லி போல் வேறு ஏதாவது பெயர் வைக்கப்பட்ட இட்லி உண்டா?

# மதுரையில் மல்லிப்பூ இட்லி மத்தாப்பு சட்னி என்பது பிரசித்தம்.

& அப்பாவி தங்கமணி இட்லி என்று ஒருவகை கேள்விப்பட்டுள்ளேன்! (வலையுலகில் ) 

கீதா சாம்பசிவம்: 

இந்தித் திணிப்புக்கு எதிர்ப்பு என்னும் பெயரில் எம்.பி. திருச்சி சிவா நேற்று நடத்திய போராட்டம் கடைசியில் இந்திப்பாடலோடு முடிந்ததை எத்தனை பேர் கவனித்திருப்பார்கள்?

# நான் கவனிக்கவில்லை.

& நானும் கவனிக்கவில்லை. 

ஹிந்தி படித்தாலோ/தமிழகத்தில் கொண்டு வந்தாலோ என்ன ஆகிவிடும் எனப் பயப்படுகின்றனர்? அனைத்துத் தனியார் பள்ளிகளும் ஹிந்தி கற்பிக்கின்றனர். ஆளும் கட்சியினரால் நடத்தப்படும் பள்ளிகள் உள்பட. ஆளும் கட்சியினரின் குழந்தைகள் ஹிந்தி படிக்கின்றனர். அப்படி இருக்கையில் சாமானிய மக்கள் படித்தால் என்ன ஆகி விடும்?

# இந்தி எதிர்ப்பு , இன்னும் சில எதிர்ப்புகள் அரசியல் வோட்டு  வேட்டை யுக்திகள்.

பானுமதி வெங்கடேஸ்வரன்: 

எந்த புத்தகத்தையாவது படித்து விட்டு நெகிழ்ந்து கண்ணீர் விட்டதுண்டா?

$ உண்டு. 

# நெகிழ்ந்தது உண்டு . கண்ணீர் விட்டதில்லை. 

1. Uncle Tom's Cabin 

2. A Tree Grows In Brooklyn.

& கதை பெயர் சரியாக ஞாபகம் இல்லை (மாங்கனி?) சாவி எழுதிய ஒரு (சோகக்) கதையைப் படித்து சின்ன வயதில் நெகிழ்ந்தது ஞாபகம் உள்ளது. நெகிழ்ந்து கண்ணீர் விடவேண்டும் என்றால் சோகக் கதையாக இருக்கும் என்று நினைக்கிறேன். எனக்கு சோகக் கதைகள், சோகப் படங்கள் என்றால் அலர்ஜி - அந்தப் பக்கமே போகமாட்டேன். 

நெல்லைத்தமிழன் : 

1. ஒரு உப்புமாவை, வீட்டில் பண்ணிச் சாப்பிடாமல், ஹோட்டலில் போய் ஆர்வமாகக் கேட்டுச் சாப்பிடுபவர்களைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?   

# அப்படியானவர்கள் இருக்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன். 

$ உப்புமா கூட செய்யத் தெரியாதவர்களுக்கு வேறு வழி ?

& நம்மால் வீட்டில் செய்ய முடிந்தவைகளை ஹோட்டலில் சாப்பிட ஆசைப்படுகிறோம் என்றால், 1) வீட்டில் செய்ய நேரமும் பொறுமையும் இல்லை. 2) ஹோட்டல் உப்புமா வீட்டு உப்புமாவைவிட சுவையாக உள்ளது  3) சாப்பிட்டபின் தட்டு + பாத்திரங்கள் கழுவ அவசியம் இல்லை - இந்தக் காரணங்கள்தான் எனக்கு உடனடியாகத் தோன்றுகிறது. 

2.  குழந்தைகளுக்கு முதல் மூன்று வருடம், சமூகத்தில் எப்படி நடந்துகொள்ளவேண்டும், அவர்கள் பொறுப்பு, ஒழுக்கம் இவற்றையே ஜப்பான் நாட்டில் கற்றுக்கொடுப்பதாகப் பார்த்தேன்/படித்தேன். இதை நாம் ஏன் செய்யக்கூடாது?

# உரியவர்களுக்கு புரிய வேண்டுமே. 

$ திராவிட மாடல் நூற்றாண்டுகளாக இப்படித் தான் இருந்தது என்று சொல்லிப் பார்க்கலாமா ?

& நம் குடும்பங்களில் குழந்தைகளை பள்ளிக்கூடத்தில் சேர்க்கும் வரை ஒவ்வொரு அம்மாவும் இதைத்தானே செய்கிறார்கள்! 

= = = = = = == =

சென்ற வாரம் நாங்கள் கேட்ட கேள்விக்கு யாரும் பதில் சொல்லவில்லை. அதுபோல் படங்களுக்கும் க ஹ தவிர வேறு யாரும் கருத்து எழுதவில்லை.. 

= = = = =

எங்கள் கேள்வி : 

1) நவம்பர் மாதம் என்றால் உங்களுக்கு என்னவெல்லாம் நினைவுக்கு வருகின்றன? 

2) எல்லாமே நன்றாக சமைக்கப்படும் ஒரு ஹோட்டலில் காலை உணவுக்காக பசியோடு நுழைகிறீர்கள். அந்த ஹோட்டலில் ஒரு விசித்திரமான விதி உண்டு. 

காலை உணவு இருநூறு ரூபாய். நீங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம். ஆனால் - கீழ்க் கண்டவற்றுள் ஏதேனும் ஒரு வகையை மட்டுமே தேர்வு செய்யலாம். அதாவது ' இட்லி - சட்னி ' என்று தெரிவு செய்தீர்களானால் - நீங்கள் எவ்வளவு இட்லி / சட்னி வேண்டுமானாலும் சாப்பிடலாம். அப்படி என்றால் நீங்கள் எதைத் தேர்ந்தெடுப்பீர்கள்? (ஒரு குழுவாகப் போனாலும் - ஒவ்வொருவருக்கும் தனி மேஜை & நாற்காலி - மற்றவர்களுடன் நீங்கள் உங்கள் உணவைப் பங்கிட்டுக்கொள்ள முடியாது + கூடாது   தொட்டுக்கொள்ளும் சமாச்சாரங்கள் ஏதேனும் ஒருவகை மட்டுமே. இட்லி சட்னி தேர்ந்தெடுத்தவர்களுக்கு இட்லிக்கு சட்னி மட்டுமே! )

1) இட்லி & சட்னி / அல்லது சாம்பார் / அல்லது மிளகாய்ப்பொடி 

2) வடை & சட்னி / அல்லது சாம்பார் 

3) மசால் தோசை 

4) பொங்கல் & கொத்ஸு 

5)  பூரி மசாலா 

6) ரவா உப்புமா / சட்னி / சாம்பார் 

7) ஆனியன் ரவா தோசை / சட்னி / சாம்பார் 

8) இதே போன்று வேறு ஏதாவது ஒரே வகை மெயின் ஐட்டம் + ஒரே வகை ஸைட் டிஷ் - (உங்கள் சாய்ஸ் )

= = = = = =

இட்லி பற்றி சில குறிப்புகள். 

1) இட்லி மாவு மிக்ஸியில் அரைப்பதாக இருந்தால், ஒரு பங்கு உளுந்து & மூன்று பங்கு இட்லி அரிசி. wet grinder அரவை என்றால், ஒரு பங்கு உளுந்து நான்கு பங்கு இட்லி அரிசி. - இது நான் பயன்படுத்தும் விகிதம். 

2) உளுத்தம் 'பருப்பு' உபயோகிப்பதைவிட முழு உளுந்துதான் இட்லிக்குச் சிறந்தது. 

3) உளுந்து, இட்லி அரிசி, அரை ஸ்பூன் வெந்தயம் எல்லாவற்றையும் ஒன்றாகவே ஊறவைப்பேன். தோல் நீக்கப்பட்ட வெள்ளை உளுந்து என்றால் கலவை குறைந்தது நான்கு மணி நேரம் ஊறவேண்டும். தோல் நீக்கப்படாத கருப்பு உளுந்து என்றால் குறைந்தது ஆறுமணி நேரம் ஊறவைக்கவேண்டும். 

4) இட்லி வார்க்க மாவு தயார் செய்யவேண்டும் என்றால், மாவை முதல் நாள் மாலைக்குள் தயார் செய்து - தேவையான உப்பு கலந்து இரவு முழுவதும் அதை மூடி வைக்கவேண்டும். மறுநாள் காலையில் இட்லி மாவு கொஞ்சம் புளித்து, பொங்கியிருக்கவேண்டும். 

5) இட்லி மாவை கலக்காமல் மேலாக எடுத்து இட்லிகள் வார்க்கவேண்டும். 

6) நான் பெரும்பாலும் தோசைதான் விரும்புவேன் என்பதால், மாவு தயாரித்தபின் அதில் உப்பு சேர்க்கமாட்டேன். தயார் செய்த மாவை உடனடியாக ஃபிரிஜ்ல வைத்துவிடுவேன். ஒவ்வொரு நாளும் தோசைக்கு எவ்வளவு மாவு வேண்டுமோ அதை மட்டும் எடுத்துக்கொண்டு, அதில் தேவையான உப்பு சேர்த்து கலந்து தோசை வார்த்துக்கொள்வேன். தோசைக்கு Maamis இட்லி மிளகாய்ப்பொடி வாங்கி வைத்துள்ளேன். கொஞ்சம் மிளகாய்ப்பொடி + நல்லெண்ணை தொட்டுக்கொண்டு சாப்பிட்டுவிடுவேன்! 

நீங்களும் உங்கள் அனுபவ இட்லி / தோசை மாவு குறிப்புகளை பகிர்ந்துகொள்ளலாமே! 

= = = =

94 கருத்துகள்:

  1. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் எவ்விதமான கலக்கங்களும் இல்லாத நல்ல நாளாக மலர வேண்டுமென இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  2. ஹோட்டலில் ஏதேனும் ஒரே உணவு -- சமீப காலங்களாக தமிழக எல்லைக்குள் வந்தால் ரவா தோசை மாத்திரம் சாப்பிடுவேன். தெரியாமல் முருகன் இட்லி கடையில் நுழைந்துவிட்டால் நொந்துகொள்வேன். சில நாட்களுக்கு முன் திருவரங்கம் சென்றிருந்தபோது இரண்டு காலை உணவு, ஒரு மதிய உணவு சாப்பிடத்தான் இரு நாட்களில் நேரம் இருந்தது. காலை உணவாக இரண்டு, எண்ணெய் குறைவான ரவா மோசைகளைச் சாப்பிட்டேன். (மடப்பள்ளி என்ற பெயருள்ள உறையூர் உணவகத்தில்). சூப்பரோ சூப்பர் என்று சொல்லத் தேவையில்லை. அங்கு சாப்பிட்ட அசோகா அல்வா ஆஹா

    பொதுவாக வயிற்றில் பசி இருந்தால்தான் எந்த உணவுமே ருசிக்கும்.

    பதிலளிநீக்கு
  3. நவம்பர் மாதம், பெண், எனக்கு மற்றும் என் ஃப்ரொஃபஷனுக்குக் காரணமான என்குருவின் பிறந்தநாட்கள் நினைவுக்கு வரும்.

    மே மாதம் மறைந்த என் நண்பனின் பிறந்தநாள் வரும். மனைவியின் பிறந்தநாளை கஷ்டப்பட்டு நினைவிலிறுத்துவேன்.

    பதிலளிநீக்கு
  4. கர்நாடகா உணவகங்களின் சுத்தம் போன்று தமிழகத்தில் இல்லை. உணவு தயாரிப்பதை நாம் வெளிப்படையாகப் பார்க்க முடியும். வெந்நீர் பாத்திரங்களில் ஸ்பூன்கள், உணவகத்தில் குளிர், வெந்நீர் தண்ணீர், சுத்தம் போன்றவற்றையும், உணவுக்குப் பணம் வாங்குவதில் ஒரு நேர்மையும் உண்டு (தோசை 35-50 ரூ, காபி 10-12 ரூ, இனிப்பு 40ரூ..). தமிழகத்தில் கொள்ளையோ கொள்ளை

    பதிலளிநீக்கு
  5. எனக்கு இட்ஙி (எதுவுமே) ரொம்ப சூடாக இருக்கணும். ஆறினது பிடிக்காது. ஹோட்டலிலும் முதலில் சாப்பிடவே ஆசைப்படுவேன் (ஆற அமர 10 மணிக்கு காலை உணவு சாப்பிடப்போனால் 5 மணியிலிருந்து கொதித்துக்கொண்டிருக்கும் சாம்பார்தான் கிடைக்கும்).

    குக்கர் இட்லி சூடை தக்கவைத்துக்கொள்ளாது. துணி போட்டு வார்த்த இட்லிதான் நல்லா இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கூடியவரை துணி போட்டுத்தான் வார்க்கிறேன். ஆனால் இப்போல்லாம் கடந்த ஒரு வருஷமாகத் துணி போட்டு வார்த்த இட்லிகளை எடுக்கையில் சூடு கைகளில் அதிகமாய்த் தாக்குகிறது. :( சூடு தாங்க முடியறதில்லை.

      நீக்கு
    2. துணி இட்லிகளை கையால் தொடக்கூடாது. இடுக்கியால் இட்லித் தட்டைத் தூக்கி அப்படியே வேறொரு பெரிய தட்டில் கவிழ்த்து விட வேண்டும். குரோம்பேட்டையில் அருகில் இருந்த இட்லி கடையில் இட்லி மேக்கரில் செய்யப்படும் மாஸ் ப்ரொடக்ஷன் பார்த்த அனுபவம்.

      நீக்கு
    3. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் @கௌதமன் சார், கடந்த ஒரு வருஷமாகனு சொல்லி இருக்கேன் பாருங்க. இடுக்கியால் தான் எடுப்பேன்/எடுத்தேன்/எடுக்கிறேன். ஆனால் ஏனோ தெரியலை, இப்போல்லாம் சூடு தாங்குவது இல்லை. உப்புமா தாளித்துக் கொண்டு அதிலேயே ரவை+உப்புச் சேர்த்துக் கிளறி வெந்நீரைக்கொதிக்க வைத்து விடுவேன். இப்போல்லாம் அப்படி ஊற்றினால்கைகளில் ஆவி அடித்துப் பாத்திரம் விழுந்துடுமோ மேலேனு பயம் வருது! :(((((((

      நீக்கு
  6. இட்லி தலைப்பில் ரவா இட்லி படங்களையே பார்த்து நொந்துபோனேன்.

    பதிலளிநீக்கு
  7. ராமசேரி இட்லி பற்றி தெரியாது என்று பதில் தந்து விட்டுதான் படம் வெளியிட்டிருக்கிறீர்கள்!

    https://www.youtube.com/watch?v=QIVyau_cTBA

    கொழுக்கட்டைக்கு மறு பெயர் கோலி இட்லியா? படத்தை சொல்கிறேன். 

    1) நவம்பர் மாதம் என்றால் உங்களுக்கு என்னவெல்லாம் நினைவுக்கு வருகின்றன? 

    நான் உயிரோடு இருக்கிறேன் என்பது தான். காரணம் life certificate கொடுக்க வேண்டும். 

    2) எல்லாமே நன்றாக சமைக்கப்படும் ஒரு ஹோட்டலில் காலை உணவுக்காக பசியோடு நுழைகிறீர்கள். அந்த ஹோட்டலில் ஒரு விசித்திரமான விதி உண்டு. 

    வேறு என்ன பொங்கல் கொஸ்து சட்னி சாம்பார் தான். பொங்கல் மட்டும் சாப்பாடு மாதிரி எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம். எண்ண வேண்டாம். 

    Jayakumar

    பதிலளிநீக்கு
  8. இந்தப் பதிவிற்கு யாருக்கும் தோன்றாத ஒரு பின்னூட்டம் போட வேண்டுமானால், நீங்கள்
    (Kgg அல்ல-- வாசகர்)
    என்ன போடுவீர்கள்? முயற்சிக்கலாம்.
    (ஒரு அரை மணி நேரம் கழித்து வந்து எனக்குத் தோன்றுகிற அந்த யாருக்கும் தோன்றாத பின்னூட்டத்தைப் போடுகிறேன்)

    பதிலளிநீக்கு
  9. ஏதாவது புதுமையாய் செய்யலாமே என்று தான். ஹி..ஹி...

    பதிலளிநீக்கு
  10. ஒரு மணி நேரமாயும் 'அந்த' பின்னூட்டத்திற்கு பிறகு வேறு பின்னூட்டமில்லை. கொஞ்சம் பேராவது கலந்து கொண்டால் நன்றாக இருக்கும் என்பதால் மாலைக்கு மேல் வந்து என் பின்னூட்டத்தைப் போடுகிறேன். அப்பப்போ ஏதாவது மாறுபட்ட முயற்சிகள். எல்லாமே சுவாரஸ்யத்திற்குத் தான்.
    ஏதோ நம்மாலே முடிஞ்சது.

    பதிலளிநீக்கு
  11. அன்பின் வணக்கம்
    அனைவருக்கும்..

    வாழ்க நலம்..

    பதிலளிநீக்கு
  12. இட்லி எளியோரால் தயாரிக்கப்பட்டதுஎன்றிருந்த வரைக்கும் நன்றாகத் தான் இருந்தது..

    பண வரவுக்கான
    விற்பனைப் பொருள் என்றானதும் கெட்டுப் போனது..

    Stuffed (இறைச்சி) இட்லி என்றெல்லாம் வந்து விட்டனவே!..

    பதிலளிநீக்கு
  13. இட்லியோ தோசையோ அதை சர்க்கரைப் பாகுடன் தொட்டுக் கொண்டால் அதுவே சொர்க்கம்..

    அதெல்லாம் நாற்பது வருடங்களுக்கு முன்பு..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்னால, சர்க்கரைப் பாகை இட்லி/தோசைக்குத் தொட்டுக்கொள்வதை கற்பனைகூடச் செய்யமுடியவில்லை. சப்பாத்திக்கு நன்றாக இருக்கும். காம்பினேஷனில் ஒரு நியாயம் வேண்டாமா ஹா ஹா ஹா

      நீக்கு
    2. சர்க்கரைப்பாகு/வெல்லப்பாகு எல்லாம் அடைக்குத்தான் தொட்டுக்கலாம். கூடவே வெண்ணெயோ/நெய்யோ சேர்ந்தால் ஆஹா! ஓஹோ! பேஷ்1 பேஷ்!

      நீக்கு
    3. சர்க்கரைப் பாகு, வெல்லப் பாகு இதுவரை எதற்கும் தொட்டுக்கொண்டு சாப்பிட்டதில்லை. முன் காலத்தில் மிகுந்து போன பூரி மீது சர்க்கரை தூவி, பால் ஊற்றி சாப்பிட்டது உண்டு.

      நீக்கு
  14. இந்தியின் புழக்கம் பெருகிக்கொண்டே செல்கிறது.

    அரசியல்வாதிகள் அவசியம் இல்லாமல் சுயலாபத்திற்காக பேசுவதை தொண்டர்கள் உணராதவரை இது தொடர்கதைதான்...

    இட்லி புராணம் சுவாரஸ்யமாக இருந்தது ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //இந்தியின் புழக்கம் பெருகிக்கொண்டே செல்கிறது.// - நீங்க எந்த ஒரு பெரிய கடைக்கும் சென்று அங்கு எத்தனை தமிழர்கள் வேலை பார்க்கிறார்கள் என்று பாருங்கள். இது திமுக அரசியல்வாதிகள் நடத்தும் நிறுவனங்களுக்கும் பொருந்தும். சாதா வேலை செய்பவர்கள் பெரும்பாலும் ஹிந்திவாலாக்கள். கட்டிட வேலை உட்பட.

      நீக்கு
  15. இட்லி பற்றி எவ்வளவு சொன்னாலும் அது சுவாரசியமாக நீண்டு கொண்டே போகும். அந்த காலத்திலிருந்து இப்போது வரை 4 பங்கு அளவு இட்லி அரிசிக்கு ஒரு பங்கு உளுந்து- முழு உளுந்து தான் கணக்கு. உளுந்து புதியதாக இருந்தாலும் நிறைய மாவு காணும் என்பதுடன் நன்றாக பொங்கி வரும். அதுவும் தை மாத சமயம் புத்தரிசி மாதிரி புதிய உளுத்தம்பருப்பு கடை வீதிகளுக்கு வரும்.
    கருப்பு முழு உளுந்து சேர்த்தாலும் இட்லி இன்னும் வாசனையாக இருக்கும். மெதுவாக இருக்கும். வீடுகளில் இதே மாவில் தான் தோசை சுடுவதும். சிறிது நீர் சேர்த்து தாராளமாக நெய்யோ எண்ணெயோ விட்டு தோசை சுட்டால் மொறுமொறுப்பாக நிச்சயமாக வரும். உணவகங்களில் தோசைக்கென்று தளர அரைப்பார்கள். சுடும்போது சிறிது கடலை மாவோ, மைதாவோ தூவி சேர்த்து சுடுவார்கள். மெல்லியதாயும் சிவந்த நிறமாக வருவதற்கும்.

    பதிலளிநீக்கு
  16. தொட்டுக்கொள்ள வாசனையான சாம்பார் தான் முதல்டம். தஞ்சை மாவட்டத்து மக்களுக்கு இட்லி மிளகாய்ப்பொடியே பிரதானம். ஒவ்வொரு வீட்டிலும் இது இருக்கும். எத்தனை பக்கத்துணை இருந்தாலும் கடைசி இட்லிக்கு இட்லிப்பொடி வைத்து அதில் நல்லெண்ணை ஊற்றிக்கலந்து சாப்பிட்டால் தான் மனம் நிறையும்! இன்னொன்று தஞ்சைப்பகுதியில் அம்மியில் வைத்து மிளகாய் துவையல் அரைப்பார்கள். வெறும் வற்றல் மிளகாயுடன் பூண்டு புளி வைத்து அரைப்பார்கள். அதன் சுவைக்கு நிறைய பேர் அடிமை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா ! நினைக்கும்போதே சுவைக்கின்றது! நன்றி.

      நீக்கு
    2. பூண்டு இல்லாமல் அம்மா சிவப்பு மிளகாயுடன், உப்பு, புளி, பெருங்காயம் தாளித ம் சேர்த்து அரைப்பார். தாளிதம் ஒன்றிரண்டாக அரைபட்டிருக்கும். அது ஒரு தனி ருசி. அநேகமாப் புளியா தோசைக்கு இது கிடைக்கும். வெள்ளை வெளேர் என்ற தோசையில் சிவப்புச் சட்னியை வைத்துச் சாப்பிடுகையில் ஆஹா!

      நீக்கு
  17. திருத்தம்: சாம்பார் தான் முதலிடம்

    பதிலளிநீக்கு

  18. @ மனோசாமிநாதன்

    //தஞ்சை மாவட்டத்து மக்களுக்கு இட்லி மிளகாய்ப்பொடியே பிரதானம்.//

    அருமை.. அருமை..

    பதிலளிநீக்கு
  19. @ மனோசாமிநாதன்
    //தஞ்சைப்
    பகுதியில் அம்மியில் வைத்து
    மிளகாய் துவையல் அரைப்பார்கள். வெறும் வற்றல் மிளகாயுடன் பூண்டு புளி வைத்து அரைப்பார்கள்... //

    பழைய நினைவுகளில் மனம் கலங்குகின்றது..

    பதிலளிநீக்கு
  20. தூக்கம் இல்லாத (கூடாத) இரவுப் பயணத்திற்கு இட்லி சிறந்தது...

    பதிலளிநீக்கு
  21. அனைத்து கேள்விகளும், பதில்களும் நன்றாக இருக்கிறது.

    பின்னூட்டங்களும் நன்றாக இருக்கிறது.
    இட்லி , தோசை மாவு இல்லையென்றால் மிகவும் கஷ்டம். எப்போதும் மாவு கை இருப்பு இருக்க வேண்டும்.

    நவம்பர் மாதம் என் இரு குழந்தைகளின் பிறந்த நாள் வரும்.
    நவம்பர் என் கணவரின் பிரிவு நாளும் .

    பதிலளிநீக்கு
  22. தனபாலன் அவர்கள் சொல்வது போல பயணத்திற்கு மிளகாய் பொடி தடவிய இட்லி சிறந்தது.
    நவம்பர் மாதம் மாயவரம் நினைவுகள் அதிகம் வரும், ஐப்பசி முழுக்கு கடைகள் போட்டு விடுவார்கள், பொருட்காட்சி நடக்கும். குழந்தைகள் எது கேட்டலும் என் கணவர் "மஞ்சபை எடு முழுக்கு கடையில் வாங்கி விடுவோம்" என்று கிண்டல் செய்வார்கள் பிள்ளைகளை.
    கார்த்திகை தீபம் வரை கடை இருக்கும்.
    இன்று ஐப்பசி கடை முழுக்கு. நாளை "முடவன் முழுக்கு"
    துலா கட்டத்தில் எல்லா கோவில் ஸ்வாமிகளும் தீர்த்தம் கொடுக்க வருவார்கள். ஊரே மகிழ்ச்சி கொண்ட்டாத்தில் மிதக்கும்.
    மழையை பொருட்படுத்தாமல் , திருவிழா பார்க்க கூடும் கூட்டம்
    ஒலி பெருக்கிகளில் சொல்லி கொண்டு இருப்பார்கள்," ஆயிரம் ஆனாலும் மாயூரம் ஆகாது" என்று

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இங்கேயும் இன்று காலை முதல் ஒரே கூட்டம். அம்மாமண்டபம் வேறே வீட்டுக்குக் கிட்டக்கவா? நடைமேடைகளில் நெரிசலாய் இருக்குனு நம்மவர் சொன்னார். அரங்கனுக்கு இன்றோடு யானை மேல் தங்கக்குடத்தில் காவிரி தீர்த்தம் போவதும் கடைசி நாள். அக்கம்பக்கம் உள்ள ஊர்களின் சிவன் கோயில்களில் காவிரிக்கரையில் தீர்த்தவாரி/ முக்கியமாய்த் திருப்பராய்த்துறையில் அதிகக் கூட்டம்.

      நீக்கு
    2. சுவாரஸ்யமான தகவல்களுக்கு நன்றி.

      நீக்கு
  23. என் மாமனார் இருந்திருந்தால் இத்தனை இட்லி ரசிகர்களைப் பார்த்துப் பூரித்துப் போயிருப்பார். எனக்கெல்லாம் சின்ன வயசில் இட்லியே பிடிக்காது. கல்யாணம் ஆகி வந்தப்போ இவங்கல்லாம் இட்லி சாப்பிடுவதைப் பார்த்துப் பிரமிச்சுப் போய் இருப்பேன். பின்னால் தனிக்குடித்தனம் வைச்சப்போ அவருக்கும் இட்லி பிடிக்காது என்று தெரிஞ்சதும் "அப்பாடா"னு இருந்தது. இப்போ இட்லியும் பிடிப்பதில்லை; தோசையும் பிடிப்பதில்லை. நம்மவர் சொல்றார் ஸ்ரீரங்கம் காடரர்கள் இட்லி/தோசை/ஓட்டல்கள் இட்லி/தோசையில் அவற்றைச் சாப்பிட நேர்ந்ததில் உனக்கு இவை வெறுத்துப் போச்சு என்று கிண்டல் செய்கிறார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மையை சொன்னால் எனக்கும் இட்லி பிடிக்காது! அல்லது இட்லியை விட தோசை பிடிக்கும்.

      நீக்கு
    2. டயட்டை மனதில் வைத்துக்கொண்டால் மாத்திரம்தான் இட்லி பிடிக்கும். இல்லைனா எனக்கு ரவா தோசைதான்.

      நீக்கு
    3. ஆனியன் ரவாவுக்கு ஈடு இணை கிடையாது!

      நீக்கு
  24. எங்க பக்கத்திலேயே (அதாவது மதுரைப்பக்கம்) இட்லிக்குனு தனியா/தோசைக்குனு தனியாவெல்லாம் அரைச்சு நான் பார்த்ததில்லை. நாலுக்கு ஒண்ணு என்னும் விகிதத்தில் அரிசி/உளுந்து நனைப்பார்கள். ஒரு தேக்கரண்டி வெந்தயம் உளுந்தோடு சேர்ப்போம். பிறந்த வீட்டில் கறுப்பு உளுந்து தான். அதை அரைத்து எடுத்து உப்புப் போட்டுக் கரைத்ததும் அன்றே செங்கோட்டைக்கல் எனப்படும் சமமாக இருக்கும் தோசைக்கல்லில் புளியாதோசை என வார்ப்போம். தொட்டுக்க அநேகமாப் புளி மிளகாய் தான். சின்னச் சின்ன மிளகாய்கள் காரமே இல்லாமல் இருக்கும். இப்போல்லாம் சின்ன மிளகாயானாலும் காரம் உச்சியில் ஏறுகிறது. பின்னாட்களில் தக்காளிச் சட்னியும் அரைக்க ஆரம்பித்தோம். தக்காளி என்றால் இப்போக் கிடைப்பது எல்லாம் இல்லை. நல்ல நாட்டுத் தக்காளியில். பின்னர் மறுநாள் இட்லி வார்ப்போம். அன்னிக்குனு காலம்பரவே ஏற்பாடா சாம்பார் வைப்பது உண்டு. இல்லைனால் மிளகாய்ப் பொடி தான். தேங்காய்ச் சட்னி அதிகம் அரைச்சுப் பார்த்தது இல்லை. மூன்றாவது நாள் மாவு நன்கு புளித்திருக்கும். சின்ன இலுப்பச் சட்டியில் மாவை விட்டு குண்டு குண்டாக இலுப்பச்சட்டி தோசை. தொட்டுக்க வெங்காயத் துவையல் அல்லது மி.பொடி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சுவையான தகவல்கள்! நன்றி.

      நீக்கு
    2. காலைல 'கருத்துரைக்கு நன்றி'...மாலைல 'சுவையான தகவல்களுக்கு நன்றி'... நான் நினைக்கிறேன் மாலைலதான் கௌதமன் சாருக்கு பசி ஆரம்பித்திருக்கிறது என்று

      நீக்கு
  25. ஓட்டல்களில் இப்போதெல்லாம் உப்புமாப் பண்ணிக் கொடுத்துப் பார்க்க முடிவதில்லை. முன்னெல்லாம் காலையிலும் சரி மாலையிலும் சரி முதலில் வெளி வரும் உணவு உப்புமாவாகத் தான் இருக்கும். அவசரத்துக்கு உப்புமா சாப்பிட்டுச் செல்பவர்கள் உண்டு. இப்போல்லாம் அப்படிப் போடுவதில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இங்கு (பெங்களூரில்) கேசரி பாத், காரா பாத்
      ( இரண்டுமே பாம்பே ரவையையில் தயாரிக்கப்பட்டது) இரண்டும் நாங்கள் வந்ததிலிருந்தே ஹோட்டல்களில் ஜோடியாக நடை போடுகிறது. பிடித்தவர்கள் தினமும் சாப்பிட்டுக் கொண்டே இருக்கிறார்கள்.

      நீக்கு
    2. உண்மை. காரபாத் சாப்பிடும் பலரையும் பெங்களூர் ஹோட்டல்களில் பார்க்கிறேன்.

      நீக்கு
    3. தமிழகத்திலும் உப்புமாவை நான் பார்க்கிறேன். ஆர்வமாக ஆர்டர் செய்யும் அப்பாவிகளையும் பார்க்கிறேன்.

      இங்கு காராபாத் (உப்புமா), கேசரிபாத் என்று இரண்டு உண்டு. இரண்டும் ஒரே தட்டில் ஒரு ஒரு கரண்டி வேணும்னா, அதுக்குப் பேர் சௌசௌ பாத்.

      பெங்களூரில் எல்லா உணவகங்களிலும் கேசரி, கேரட் அல்வா, பூசனி அல்வா - ஏதாவது இரண்டு நிச்சயமாக உண்டு. ஒன்று 40 ரூபாய்

      நீக்கு
  26. எங்க வீட்டில் இட்லிகள் மிஞ்சும்படி எல்லாம் வார்த்து வைப்பது இல்லை. எல்லோருக்கும் எத்தனை இட்லி எனக்கணக்குப் பண்ணி வார்த்து வைத்து விடுவோம். மிஞ்சினால் ஒன்றோ அல்லாது இரண்டோ அபூர்வமாக மிஞ்சும். ராமசேரி இட்லி பற்றியும் அது கிடைக்குமிடம் பற்றியும் சுமார் பத்து வருஷங்களுக்கு முன்னரே மின் தமிழ்க் குழுமத்தில் நண்பர் ஒருவர் பகிர்ந்திருந்தார்.

    பதிலளிநீக்கு
  27. வணக்கம் சகோதரரே

    ஆஹா.. இட்லி... இன்றைய கேள்வி பதில்கள் அனைத்தும் சுவாரஸ்யமாக இருந்தன. பதிவும் படங்களும் இட்லி சாப்பிடும் எண்ணங்களை அதிகப் படுத்துகின்றன.((எனக்கு மட்டும்) இட்லிக்கு அரைத்து எங்கள் வீட்டில் நாளாகி விட்டது. தினமும் சப்பாத்தி, பூரி, கரைத்த தோசை, உப்புமா எனச் வரிசையாக செல்கிறது. அத்தனை கருத்துரைகளும் படிக்க நன்றாக உள்ளது.

    முதல் படம் மிகவும் கவர்கிறது. ராமசேரி இட்லி இப்போதுதான் கேள்விப்படுகிறேன். இட்லி குறிப்புகள் நன்றாக உள்ளது.

    முன்பு தோசைக்கு என்றால், இட்லி அரிசி, பச்சரிசி பாதி என எடுத்துக் கொண்டு அதற்கு தேவையான உளுந்தும் (4க்கு 1 என்ற கணக்கில் உளுந்து கொஞ்சம் பிகு செய்து கொண்டால், கூட ஒரு கால் கப் எடுத்துக் கொள்வேன். ) எடுத்துக் கொண்டு அரிசிகளை முதலிலும், உளுந்து பிறகுமென அரைப்பேன். . வெந்தயம், சேர்ப்பதும் சேர்க்காததும் அவரவர் விருப்பம். இப்போது இட்லி, மாவிலேயே கொஞ்சம் நீர் சேர்த்து தோசை வார்த்து விடுகிறேன். இப்போது தோசா அரிசி என கடைகளில் வருகிறது. ஆனால், இதுவரை வாங்கவில்லை.

    அரைத்த சிலமணி நேரங்களில் உடனடியாக வார்க்கும் தோசை, இட்லிக்கு புளிமிளகாய், இல்லை புளிக்காய்ச்சல் விழுது தொட்டுக்க நன்றாக இருக்கும். மறுநாள் எனில் மி. பொடி, தே சட்னிதான் பொருத்தமாக இருக்கும்,.மற்றவையும் பல சமயங்களில் ஒத்துக் கொள்ளலாம். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தோசா அரிசி என்பது பெரிய சைஸ் பச்சரிசி (கொஞ்சம் விலை மலிவு..40 ரூ). நான் அதனை உபயோகித்துத்தான் வெண்பொங்கல், சர்க்கரைப் பொங்கல் செய்வேன். கொஞ்சம் நன்றாகக் குழையும். மத்தபடி தோசைக்கும் அதற்கும் சம்பந்தம் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.

      இங்கு அரிசிக் குருணை கிலோ 15 ரூபாய்க்குக் கிடைக்கும். கொஞ்சம் கல் இருக்கும். எனக்கென்னவோ இது, ரேஷன் அரிசியைத் திருடி அதிலிருந்து பண்ணுவது என்ற எண்ணம் தோன்றியதால் வாங்குவதில்லை

      நீக்கு
  28. இட்லி புராணம் அருமை.

    எங்கள் வீட்டில் இட்லிக்கு தேங்காய் சட்னி , சாம்பார் இரண்டும் வேண்டும்.முன்பு மிளகாய் பொடியும் இருந்தது இப்போது நிறுத்தி விட்டோம்.


    பதிலளிநீக்கு
  29. அந்த இட்லி மிளகாய்ப் பொடி Maamis (Brand name)
    பெயர்க் காரணம் என்னவாக இருக்கும்?
    Maa
    Maa - mis
    Maami - s

    இப்படி வார்த்தையைப் பிரித்து பிரித்துப் பார்த்து
    கூகுளாண்டவரிடம் விளக்கம் கேட்டு ---
    ஏகப்பட்ட செய்திகளைத் தெரிந்து கொண்டது புது அனுபவம்.

    பொதுவாக பெண்கள் தங்களை மாமி என்று பிறர் அழைப்பதை விரும்புவதில்லையாம்.

    அதே மாதிரி 'சொல்லுமா'
    என்று சொல்கிறோம் இல்லையா? அந்த 'மா'
    வும் பலருக்குப் பிடிப்பதில்லையாம். அது
    ஒண்ணும் தெரியாத குழந்தைகளாக எங்களை நினைக்கிற மாதிரி இருக்கு என்று பலர் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பொதுவாக 'ஆண்கள்' மாத்திரம் 'அங்கிள்' என்று அழைப்பதை விரும்புகிறார்களாமா? என்னை என் 24 வயதில், என் பாஸின் பையன் - 6ம் வகுப்பு படித்தவன், அங்கிள் என்று கூப்பிட்டபோது எனக்கு திடுக் என இருந்தது..அவ்வளவு வயதாகிவிட்டதா என்று. இப்போதுமே 30-35 வயதுப் பெண்கள் என்னை அங்கிள் என்று கூப்பிடும்போது ஒரு திடுக் மனதில் வந்துபோகிறது..ஹாஹாஹா

      நீக்கு
    2. நல்ல ஆராய்ச்சிகள், அனுபவங்கள்! கருத்துரைகளுக்கு நன்றி.

      நீக்கு
  30. Why do Tamil Brahmins call others.as 'mama' and 'mami'?
    Quora -வில் ஒரு விவாத இழை. Very interesting. நீங்களும் தான் வாசித்துப் பாருங்களேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தன் தாயின் சகோதரன் (அவர் மனைவி, மாமி) என்ற அர்த்தத்தில்தான்... இது ஒரு நெருக்கமான உறவு முறையைக் குறிக்கிறது. நம் உறவுமுறை ஆண்களை அடிப்படையாகக் கொண்டது

      நீக்கு
    2. உள்ளார்ந்த அர்த்தங்கள் உண்டு. விரிவாக தனி பதிவில் பிறகு எழுதமுடிக்கிறதா என்று பார்க்கிறேன்.

      நீக்கு
  31. எந்த புத்தகத்தையாவது படித்து விட்டு நெகிழ்ந்து கண்ணீர் விட்டதுண்டா?

    சில புத்தகங்களைப் படித்து முடித்ததும் அப்படித் தோன்றியிருக்கிறது - ஒரு வழியாக முடித்தார்களே!
    - மந

    பதிலளிநீக்கு
  32. இந்தித் திணிப்புக்கு எதிர்ப்பு என்னும் பெயரில் எம்.பி. திருச்சி சிவா நேற்று நடத்திய போராட்டம் கடைசியில் இந்திப்பாடலோடு முடிந்ததை எத்தனை பேர் கவனித்திருப்பார்கள்?

    குத்துப் பாட்டாக இருந்தால் கவனிக்க வாய்ப்பு உண்டு.
    கவனித்தால் குத்துப் பாட்டு வகை மொழி கடந்த பரவலாக இருப்பது புரியும். யுட்யூபை திறந்தால் சீனாவிலும் உக்ரேய்னிலும் கூட நம்மா சாமி சும்மா சாமி என்று பாடி ஆடுகிறார்கள்.
    - மந

    பதிலளிநீக்கு
  33. இட்லி மாவுக்கும் தோசை மாவுக்கும் வித்தியாசம் உண்டா? இட்லி நன்றாக வரும் மாவில் தோசை பேப்பர் ரோஸ்ட் போட முடியவில்லையே?

    வித்தியாசம் உண்டு. மாவு டப்பா லேபிலில்.
    இட்லி சுடப்போய் சில நேரம் செங்கல் போல வரும். தோசை சுடப்போய் சில நேரம் உப்மா போல வரும். எதிர்பார்ப்பில்லாமல் அவரவர் கர்மபலன் என்ற ஏற்புடன் இட்லி தோசை சுட்டால் வித்தியாசம் தெரியாமல் சாப்பிடலாம். நல்ல பூண்டு தக்காளி கார சட்னி துணைக்கு இருந்தால் வித்தியாசமாவது வெங்காயமாவது?
    - மந

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!