சனி, 5 நவம்பர், 2022

ரொனால்டோ ஏன் பச்சை குத்திக் கொள்ள மாட்டார் ...மற்றும் 'நான் படிச்ச கதை' (JC)

 


நன்றி ஜெயக்குமார் சந்திரசேகர் ஸார்.

==============================================================================================================

நன்றி ஜெயக்குமார் சந்திரசேகர் ஸார்.

=============================================================================================================


கண்ணாடி கட்டடங்களால் இறக்கும் பல கோடி பறவைகள் தீர்வு கண்ட நிறுவனம்:

மாநகரங்களில் கட்டிடங்களின் முகப்புகளை கண்ணாடிகள் கொண்டு அலங்காரம் செய்கின்றன.  தற்போது அவை சுற்றிலும் உள்ள மரங்களையும் வானையும் பிரதிபலிப்பதால் பறவைகள் திக்கு தெரியாமல் அவற்றில் மோதி உயிரிழக்க நேரிடுகிறது . ஆண்டுதோறும் இப்படியாக மட்டுமே பல கோடி பறவைகள் இறக்கின்றனவாம்.  அடுக்குமாடி கட்டிடங்களால் இன்று நகரங்கள் நிரம்பி உள்ளன.  மக்கள் தொகை பெருக்கத்தால் குடியிருப்புகள் பலவும் அடுக்குமாடிகளாக அமைக்கப்படுகின்றன.  நமது வளர்ச்சியின் பொருட்டு செய்யும் ஒரு செயல் பறவைகளுக்கு ஆபத்தாக அமைந்து அவைகள் இறக்க நேரிடுகின்றன.  இதனை அறிந்த ஜெர்மன் சேர்ந்த கண்ணாடி நிறுவனம் அர்னால்டு இதற்கு ஒரு மாற்று வழியாக உயிரினம் ஒன்றிலிருந்தே தீர்வினைக் கண்டறிந்துள்ளது.  சுருள் கோள வலையை பின்னும் ஒரு வகையான சிலந்தி தான் அந்த உயிரினம்.  தங்களுடைய வலையினை பறவைகள் மோதி சேதப்படுத்தாமல் இருப்பதற்காக புற ஊதா கதிர்களை பிரதிபலிக்கும் வண்ணம் கட்டமைக்கும்.  ஏனெனில் பறவைகளால் மனிதர்கள் பார்க்க இயலாத புற ஊதாக்கதிர்கள் அமைவினையும் பார்க்க இயலும்.  எனவே இந்நிறுவனம் இதனை சோதித்து பார்க்கும் வண்ணம் ஒரு பெரிய பெட்டிக்குள் இரண்டு கண்ணாடிகளைப் பொருத்தி, அதில் ஒன்றில் யூ வி மார்க்கரைக் கொண்டு அந்த சிலந்தி வலை பின்னலை போன்று வரைந்தும் மற்றொன்றில் வெறும் கண்ணாடியை வைத்தனர்.  இந்த சோதனையில் 76% பறவைகள் அந்த கண்ணாடியில் உள்ளது சிலந்தி வலை என்று நினைத்து நெருங்காமல் சென்றன. எனவே இதன் அடிப்படையில் ஆர்மிலெக்ஸ் எனப்படும் கண்ணாடியை உருவாக்கியுள்ளனர்.  தற்போது இது அமெரிக்கா ஐரோப்பா போன்ற நாடுகளில் பயன்படுத்தப்பட்டு பல பறவைகளை காப்பாற்றி வருகிறது.  இயற்கை அனைவருக்கும் பொதுவானது.  தொழில்நுட்ப வளர்ச்சியில் பெருகிக்கொண்டே சென்றாலும் அதே தொழில்நுட்ப வளர்ச்சி அந்த இயற்கையையும் அதனை சார்ந்து வாழும் உயிரினங்களையும் பாதுகாக்க வேண்டும்.  இது போன்ற முயற்சிகள் வழியாகவே சூழ்நிலை சமநிலையில் இருக்கும்.

=======================================================================================================================




============================================================================================================================================================================================


நான் படிச்ச கதை (J K )

ரசவாதம். சு. சமுத்திரம்.


முன்னுரை.

ரசவாதம் என்பது alchemy என்ற பெயரில் மேலை நாடுகளிலும் ரசவாதம் என்ற பெயரில் தமிழ் நாட்டிலும் நூற்றாண்டுகளாக முயற்சி செய்யப்படுவது. அரிய பொருள் அதிக மதிப்பு பெரும் என்ற அடிப்படையில் சாதாரண உலோகங்களான ‘இரும்பு, செம்பு போன்றவற்றை தங்கமாக மாற்றும் வழிமுறை’ ரசவாதம் என்ற பெயரில் அறியப்படுகிறது. இந்த மாற்றும் வித்தையை கண்டுபிடிக்க பலரும் முயற்சி செய்துள்ளனர்.

தற்போது அமெரிக்கன் டைமண்ட், ஜிர்கோனியம் போன்ற பெயர்களில் செயற்கை வைரங்கள் உருவாக்கப் பட்டு சந்தையில் மலிவு விலையில் கிடைக்கின்றன.

அதே போன்று செயற்கை தங்கம் உருவாகும் நாள் அதிக தூரமில்லை என்று தோன்றுகிறது. ஒரு காலத்தில் தங்கத்தைக் காட்டிலும் அலுமினியத்திற்கு மதிப்பு அதிகம் இருந்தது என்று சொன்னால் நம்ப மாட்டீர்கள்.

ராமர் பிள்ளை மூலிகை பெட்ரோல் பற்றி உங்களுக்கு தெரியும். அதே போன்று மூலிகைகளைக் கொண்டு செம்பைத் தங்கமாக மாற்றும் ஒரு முயற்சியை சம்பூர்ணம் செய்கிறார். முயற்சியில் வெற்றி பெற்றாரா என்பதை கதையைப் படித்து முடிவு செய்து கொள்ளுங்கள். 

கதையின் சுட்டி : ரசவாதம்

ஊருக்கு சற்று தொலைவில், தனித்து இருப்பது போல் தோன்றும் முருகக் கோட்டத்தை ஒட்டி இருந்த அந்த குடிசை வீட்டின் கதவுகள் மூடப் பட்டிருந்தாலும் உள்ளே விளக்கு எரிந்து கொண்டிருப்பது வெளியே வெளிச்சமாகத் தெரிந்தது. ஊரில் வயதுப் பெண்கள் வைத்திருக்கும் பெற்றோர்களால் ஜோசியர் எனவும், டாக்டர்களால் கைவிடப்பட்ட நோயாளிகளால் வைத்தியர் எனவும், உள்ளூர் சாமியாடிகளால் சாமியார் எனவும், பணக்காரப் பண்ணையார்களால் பரதேசிப் பயல் எனவும், படித்த இளைஞர்களால் லூஸ் என்றும் நினைக்கப் படுபவரான சம்பூர்ணம்.

மாடத்தில் இருந்த ஒரு ஊதாப் பொருளைக் கையில் எடுத்து திருப்தியுடன் பார்த்துவிட்டு, பிறகு அதனருகே இருந்த இன்னோர் ஊதாப் பொருளையும் உற்று நோக்கி விட்டு, அருகே இருந்த ஓலைச்சுவடியைப் புரட்டி குறிப்பிட்ட ஓர் ஏட்டில் உள்ள வாசகத்தை இலேசான குரலில் கணமான ராகத்தில் பாடினார். பிறகு அந்த இரண்டு ஊதாப் பொருள்களையம் மாறி மாறி பார்த்துக் கொண்டே நின்றார்.

அந்தப் பொருள்களில் ஒன்று செம்புக் களிம்பு. இருபத்து ஐந்து பைசா செம்புக் கட்டியில் இரண்டு நாடளுக்கு முன்பு குற்றாலத்தில் இருந்த போது எலுமிச்சம் சாற்றைப் பிழிந்து வைத்திருந்தார். இப்போது அந்தக் கட்டி தனது சுய நிறமான ஊதா நிறத்தில் லேசாகக் குழைந்தது போல் களிம்பாக நின்றது.


இன்னொன்று மயில் துத்தம். முள்ளம்பன்றி மாதிரி மோற மொற வென்று

அதுவும் ஊதா நிறத்தில் உற்றுப் பார்க்கும் அவரையே உற்றுப் பார்ப்பது போல்

இளித்தது.

சம்பூர்ணம் கீழே உட்கார்ந்து விபூதி பைக்குள் வைத்திருந்த பாதரசத்தை எடுத்துத் தரையில் வைத்தார். அது தரையில் அங்கும் இங்குமாக ஓடிக் கொண்டிருந்தது.

உடனே அவர் மடியில் வைத்திருந்த ஒரு மூலிகை இலையைப் பிழிந்து அதில் ஊற்றினார். பாதரசம் இப்போ து கோலிக்குண்டு மாதிரி உருண்டு திரண்டு, அப்படியே நின்றது. சம்பூர்ணம் தன்னை மீறிச் சிரித்துக்கொண்டே ஊதா நிறத்தை உள்ளடக்கிய செம்பையும் களிம்பையும் மயில்துத்ததையும் ஏறிட்டுப் பார்த்துக் கொண்டார். இவற்றின் ஊதா நிறத்தை போக்கிவிட்டால் கிடைக்கும் பொருள் சாதாவாக இருக்காது. அவருக்கு ஆண்டுக்கணக்கில் பணிவிடை செய்த தனது குருவை மிஞ்சிய சிஷ்யனாகி விட்டதில் ஒரு திருப்தி இருக்கும்.

சம்பூர்ணம் கீழே உட்கார்ந்து பைக்குள் வைத்திருந்த மூலிகையை எடுத்து வைத்துக் கொண்டு அந்த ஊதாப் பொருட்களை உட்கார்ந்தபடியே பார்த்தபோது மயில்சாமி ‘எப்போ சாமி வந்தீங்க?’ என்று சொல்லிக் கொண்டே உள்ளே வந்தார்.

‘மயில்சாமி நீ வந்தது நல்லதாப் போச்சு. இன்றைக்கு ஒன்னு செய்யப்போறேன்.  அதுக்கு உன்னைத் தவிர வேற ஆள் இல்லை. அதாவது ‘வாலை’ என்ற பாத்திரத்தில் ஒரு மூலிகையைப் போட்டு மூடி வீரம், பூரம் உட்படப் பல சாமான்களைப் போட்டு மூடிக் கமலாக்கினியால் எரிக்கணும். அதாவது நெருப்பு பூ விரியற மாதிரி எரியனும். அப்புறம் அதில் வருகிற நீராவியை ஒரு பாட்டிலில் பிடித்து நீராக்கி அந்த நீரை மயில்துத்தத்தில் வைத்து அரைக்கணும்.  மயில்துத்தம் காய்ந்தபிறகு அதை அகல் விளக்கில் வைத்து புடம் போடணும்.

மயில்துத்தத்தோட ஊதா நிறம் போயிடும். இதைத்தான் துருகபோகம் என்ற பாட்டு சொல்லுது. “அப்புறம் இந்த செம்புக் களிம்பை உருக்கினால் வெள்ளையாய் மாறிடும். அதில் இந்த மயில்துத்தத்தைக் கலந்துவிட்டால்”

“விட்டால்”

“அதை நீயே பாரு. ஆனால் ஒன்னு. நான் பொருளாசையால் இதை பண்ணல.  ‘வன்னியர் மகள் பெயர் கொண்டிருக்கும் மூலிகை’ என்று பாட்டு சொல்லுதே, அது எதுன்னு இன்னும் யாருக்குமே தெரியாது. என்னோட குருநாதருக்கும் தெரியாது.  நான்தான் ‘பண்ணைப் பனையைப் பார்த்திருந்தான்’ என்ற வரியை வன்னியர் மகளோட இணைத்துப் பார்த்தேன். அதன் விளைவாக கிடைத்த மூலிகையை பாதரசத்திலே சோதிச்சு பார்த்தேன். பேஷ் இன்னும் நாலு நாளையில் இந்த இரண்டு மேலேயும் இருக்கிற ஊதா நிறம் போய் இன்னொரு நிறம் வரும். அந்த நிறம் என்னோட குருநாதருக்கு என்னோட நிறத்தைக் காட்டும். மற்றபடி எனக்கு வேற நோக்கம் இல்லை. உனக்கும் இருக்கப்படாது. சொல்றது புரியுதாப்பா?”

“எனக்கு புரிஞ்சா என்ன, புரியாட்டா என்ன சாமி. ஒங்க குருநாதர் சொல்றத நீங்க செயவியலோ, மாட்டியளோ …. நீங்க சொல்றதை நான் தட்ட மாட்டேன்.”

“சரி ஆரம்பிப்போமா?”

சம்பூர்ணம் அந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர் தான். ஓரளவு வசதியான குடும்பத்தைச் சேர்ந்த அவருக்கு இருபத்தைந்து வயதில் மணமேடை கிடைத்தது.

ஆனால் ஐந்தாண்டுகளில் மணமேடையில் சரிபாதியாக இருந்தவள் பிணமேடைக்குப் போன துக்கம் தாங்காது அவருடைய சொத்துக்களை சகோதரர்களிடம் விட்டு விட்டு, கோவில் குளங்களைச் சுற்றத் தொடங்கினார்.

குற்றாலத்துக் குருநாதரிடம் வந்து ரசவாதம் பற்றிப் பேசும் சாமியார்கள் என்பவர்களையும் சம்சாரிகள் என்பவர்களையும் உற்றுக் கவனித்தார்.  

ஒருநாள் குருநாதரிடம் ‘வட்ட வட்டமாய் வன்னியர் மகளாய் இருக்கிற மூலிகை எது?’ என்று கேட்டார். சம்பூர்ணத்தை ஏற இறங்க பார்த்த அந்த எண்பது வயது ஆசிரமக்காரர் “இது வைத்தியத்திற்கு சம்பந்தப்படாத மூலிகை. உனக்குத் தெரிய வேண்டிய தேவை இல்லாத ஒரு மூலிகை” என்று கடுகடுத்தார். பேச்சுக்கு இடைவெளி கொடுத்து “இனி இது பற்றிக் கேளாதே” என்று ஆணையிட்டார்.

இதுவே சம்பூர்ணத்திற்கு ஒரு போர் உணர்வை ஏற்படுத்தியது. தானே அந்த மூலிகையைக் கண்டுபிடித்து ரசவாத பரீட்சையில் தேறி, குருநாதருக்கு மார்க் போட வேண்டும் என்ற எண்ணம்.

இத்தகைய மனோபாவத்தில் ஊருக்கு வந்த சம்பூர்ணம், ரஸவாத வித்தையைக் கண்டுபிடித்ததைக் காட்சியாக்க நினைத்த சமயத்தில்தான், மயில்சாமி வந்தார்.

வர வேண்டியவர்தான்.

இருவரும் சேர்ந்து கண்டு பிடிக்கப்பட்ட மூலிகையையும், இதர மருந்துப் பொருட்களையும் அந்த வீட்டிலேயே இருந்த கமண்டலம் போன்ற பாத்திரத்தில் போட்டு அடுப்பில் வைத்தார்கள். கீழே கமலாக்கினி. பாத்திரத்தின் மேல் முனையில் யானையின் துதிக்கை போன்ற குழாயின் வழியாக வந்த நீராவியை ஒரு சீசாவில் பிடித்துக் குளிர்ந்த நீரில் வைத்தார்கள். நீராவி நீராகியது. பிறகு மயில்துத்தத்தை அந்த நீரில் போட்டு கவ்வத்தில் அரைத்து வெயிலில் காய வைத்தார்கள். பின்னர் அதனை அகல் விளக்குகளில் போட்டு துணியால் மூடி இருக்க கட்டினார்கள். அப்புறம் அதை புடம் போட்டு அகல்விளக்குகளை விலக்கிய போது மயில்சாமி துள்ளிக் குதித்தார்.

“சாமி …. ஊதா நிறம் போயிட்டுது…. போயிட்டுது. எல்லாம் போயிட்டுது”

“இதுக்குப் பேருதான் சுன்னம். மயில்துத்தத்தில் ஊதாவை போக்கி விட்டால் சுன்னம்”

சம்பூர்ணம் சிரித்துக் கொண்டார்.

மறுநாள் மயில்சாமி சந்தையில் இருந்து வாங்கிக் கொண்டு வந்திருந்த ஊது உலையில் செம்புக் களிம்பு உருக்கப்பட்டது. அந்தக் களிம்பு குழைந்து நெளிந்து ஊதா நிறத்தில் தவழ்ந்தபோது, சம்பூர்ணம் அதன் மீது வெள்ளைப் பஸ்மாமாக மாறிய மயில்துத்தத்தைப் போட்டு விட்டு அந்தக் கலவையை பானையில் இருந்த நீரில் போட்டார்.

இருவரும் ஊதா நிறத்தில் காட்சி அளித்த அந்தச் செம்புக் களிம்பையே பார்த்தார்கள்.ஊதா நிறம் மாறிக்கொண்டே இருந்தது. படிப்படியாக கண் முன்னாலேயே, கண்ணுக்கு தெரியாமலேயே மாறிக்கொண்டே இருந்தது.  இப்போது மயில்சாமியுடன் சம்பூர்ணமும் துள்ளிக் குதித்தார்.

“செம்பு …தங்கமாய் மாறிட்டு…..தங்கமாய் மாறிட்டு….நினைத்ததைச் சாதிச்சிட்டேன்.  …சாதிச்சிட்டேன். “

“என் பொண்ணுக்கு மட்டும் இப்படி மூணு பவுன் கிடைச்சால் அவள் கல்யாணம் எப்பவோ முடிஞ்சிருக்கும். “

மயில்சாமி தன்னை அறியாமல் சொல்லிவிட்டுத் தன்னையறிந்து உதட்டைக் கடித்தார். சம்பூர்ணம் அவரையே பார்த்தார். …பாவம்…பரம ஏழை… இவன் பெண்ணாவது நல்லா வாழணும். “

சம்பூர்ணம் நீரில் கிடந்த தங்கத்தை எடுத்து மயில்சாமியிடம் நீட்டினார். அவர் வாங்காமலேயே பதறினார். பிறகு மகளுக்கு ஒரு சங்கிலி போட்டால் கழுத்தில் ஒரு மஞ்சள் கயிறு விழும் என்ற எண்ணத்தில் வாங்கிக் கொண்டார். அங்கேயே நிற்க பயந்தவர் போல் வீட்டுக்கு ஓடினார்.

“இந்த தங்கம் எப்படிக் கிடைச்சுது. …மிராசுதார் அருணாச்சலம் வீட்ல நகை நட்டு திருடு போயிட்டுதாம். இந்த் தங்கம் எப்படிக் கிடைச்சுது….எனக்கு இப்பவே ரெண்டுல ஒன்னு தெரிஞ்சாகணும்.” என்று குதித்த மனைவியிடம் தான் திருடன் இல்லை என்பதை நிரூபிக்க வேண்டி ரகசியத்தைச் சொல்லி விட்டார் மயில்சாமி.

அதே சமயம் மத்தவங்க கிட்ட சொல்லப்படாது என்றும் சொல்லி விட்டார்.

அந்தத் தங்கக்கட்டியையே பார்த்துக் கொன்டு மயில்சாமியின் மனைவி நின்றபோது, பண்ணையார் அருணாசலத்தின் ஒரு பாதியான, அவரை விட இரு மடங்கு உடம்பு கொண்ட காளியம்மாள், தங்கக் கட்டியையும், அதைக் கெட்டியாகப் பிடித்திருந்தவளையும் நோட்டம் போட்டாள். மயில்சாமியின் மனைவியிடம் ‘வயலுக்குப் போய் சீமை உரத்தைத் தூவிட்டு வாரியா? ‘ என்று சொல்வதற்காக வந்தவள், வந்த சொல்லை வாய்க்குள்ளேயே ஒதுக்கிக் கொண்டு “எங்க நகைகளை இவ்வளவு சீக்கிரத்தில் எப்படிம்மா உருக்க முடிஞ்சுது, …மீதியை எங்க வச்சிருக்க? …அவரு போலீசு கிட்டதான் போய்கிட்டு இருக்காரு. “ .என்று சொன்னபோது மயில்சாமியின் மனைவியால் ரகசியத்தைச் சொல்லாமல் இருக்க முடியவில்லை.

சம்பூர்ணம் புறப்பட்டுக் கொண்டிருந்தார். “வாற ஐப்பசியில் கல்யாணத்தை வச்சிடு.  நாளைத் தள்ளாதே” என்று மயில்சாமியிடம் அவர் சொல்லிக் கொண்டிருந்தபோது பண்ணையார் அருணாச்சலம் வீட்டுக் கதவை தள்ளிக்கொண்டு வந்தார்.

“நானும் ஐப்பசியில் என் பொண்ணுக்கு கல்யாணம் வச்சிருக்கேன்.  நிச்சயதாம்பூலம் கூட ஆயிடுச்சி. ஒரு பத்து பவுன் நகையால் நின்றுபடப் படாது பாருங்க.” ‘ இது செம்புக்களிம்பு அரைக்கிலோ., இது மயில்துத்தம் கால் கிலோ நீங்க சும்மா அந்த மூலிகையை போடணும். அவ்வளவு தான், கல்யாணம் முடிஞ்சிடும். ‘

சம்பூர்ணம், மிரட்டும் தொனியில் பேசிய பண்ணையார் அருணாசலத்தைத் திடுக்கிட்டுப் பார்த்தார். அவர் பிரித்துக் காட்டிக்கொண்டிருந்த இரண்டு ஊதாப் பொருட்களையும் அதிர்ந்து பார்த்தார். மோசமான மனுஷன். கள்ள நோட்டு அடிக்கப் பார்த்தவன். பக்கத்து வயல் வரப்பை வெட்டுறவன்.

“பணம் படைச்ச நீ ஆசைப்படறது தப்பு. ஒன் மகள் கல்யாணம் நடக்கும். அவள் தீர்க்காயுசா வாழ்வாள். நான் சொல்றதை நம்பு.”

“நம்புறேன் ஐயா, நம்புறேன். அதே மாதிரி நான் சொல்றதையும் சாமி நம்பணும்.

என்னோட பத்து பவுன் காணல. மயில்சாமி என்னோட நகையைத் திருடலைன்னு நான் நம்புறத்துக்காவது நீங்க பத்து பவுனையாவது தங்கமாகத் தரணும்.  இல்லேன்னா இவனைப் போலீசில் பிடிச்சுக்க கொடுப்பேன். அங்கே இவனுடைய திருட்டு அம்பலமாகும். இல்லேன்னா ஒங்க குட்டு அம்பலமாகும். கவலைப் படாதீங்க சாமி. நான் யார் கிட்டேயும் சொல்ல மாட்டேன். சரி.. .. ஆரம்பிப்போமா?

சம்பூர்ணம் தெளிந்து விட்டார். ஆசாமியிடம் இருந்து தப்ப முடியாது.

எப்படியாவது சமாளிக்க வேண்டும்.

“சரி…. .இப்படி வா. சொல்லித்தரேன்.”

“அப்படிச் சொன்னா எப்படி சாமி. நீங்க தப்புத் தப்பா சொல்ல மாட்டீங்க என்கிறது என்ன நிச்சயம். நீங்க சத்தியவான், சத்தியம் மீறாதவரு. வாங்க முருகன் கோவிலுக்குப் போவோம். நான் தேங்காய் பழம் கொண்டு வந்திருக்கேன் தாம்பாளத் தட்டுலே ஒரு கற்பூரத்தைக் கொளுத்தறேன். ‘முருகா இவருக்கு அதாவது இந்த அருணாச்சலத்திற்கு, தெரிஞ்சதைத் தான் சொல்லிக் கொடுக்கேன்.  பொய் சொல்லலே’ ன்னு எதுக்கும் ஒரு பேச்சு பேசிடுங்க.”

சம்பூர்ணம் சத்தியம் செய்து விட்டார். அந்தக் கையோடயே அருணாச்சலத்திற்கு சொல்ல வேண்டியதை எல்லாம் சொல்லி விட்டு, திரும்பிப் பாராமல் ஓடினார். 

குருநாதரைப் பார்க்க பயம். ஆனாலும் திருக்குறளை நினைத்துக் கொண்டார். 

பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த 

நன்மை பயக்கும் எனின்.

புரை தீர்த்த பொய்மையை சொன்னதில் தவறில்லை என்று ஒரு நம்பிக்கை. அதே சமயம் ஒரு பெண்ணின் திருமணம் நின்று போய்விடுமோ என்கிற பச்சாதாபம்.

நடப்பது நடக்கிறபடி நடக்கட்டும் என்கிற விரக்தி.

சம்பூர்ணம் மலையடிவாரத்துக்கருகே போய் உட்கார்ந்தார். மலை உச்சியில் உள்ள முருகன் கோவிலுக்குள் நுழையத் தைரியம் இல்லாமல் மனதுக்குள் புலம்பினார்.

அப்போது—

பண்ணையார் அருணாச்சலம் வீட்டில் திருமண விழா. மணமகள் உற்றார், உறவினர் புடை சூழ கோவிலுக்குப் போகிறாள். அவள் உடம்பில் ஆடை இல்லாத அத்தனை இடங்களிலும் நகை நட்டுகள் ஜொலிக்கின்றன. இப்போதைக்குப் போதும் என்று நினைத்து அருணாச்சலம் உருவாக்கிய இருபது பவுன் தங்கம், காப்புகளாக, கழுத்தில் இரட்டை வட சங்கிலியாக மின்னியது. கோவிலுக்குள் நுழையப் போகும் சமயம் மணப் பெண்ணை கிண்டலும் கேலியுமாக மொய்த்த தோழிகள் திடீரென்று அவளை உற்றுப் பார்க்கிறார்கள். அதிர்ச்சியோடு சூள் கொட்டுகிறார்கள்.

மணமகளின் பொன்நிறக் காப்புகளும், ரெட்டை வட சங்கிலியும் திடீரென்று ஊதா நிறத்தில் கண் சிமிட்டின.

கல்கி 14-10-1979.

கதையின் சுட்டி..

பின்னுரை.

இது நிஜக் கதை அல்ல, கற்பனைக் கதை என்று உறுதியாகக் கூறலாம். அப்படி கற்பனையென்றாலும் கண்ட சில முரண்பாடுகளைப் பார்க்கலாம்.

1. பண்ணையார் அருணாச்சலம் வீட்டில் 50 பவுன் நகைகள் உள்ளபோது வெறும் 10 பவுன் மட்டும் எப்படி திருட்டுப் போனது?

2. பண்ணையார் அருணாச்சலத்திற்கு மூலப்பொருட்கள் எவை என்பது எப்படித் தெரிந்தது. (சம்பூர்ணம் மயில்சாமிக்குச் சொன்னாலும் அதை முழுதும் கிரகிக்க முடியாத ஒரு சாமானியன் மயில்சாமி. ஆக ரசவாதம் செய்முறை முழுவதையும் மனைவியிடம் சொல்லி இருக்க முடியாது. ரசவாதத்தில் செய்தது என்று மட்டும் கூறி இருக்கலாம்.)

3. அத்தனை நகைகளையும் போட்டுக் கொண்டு மணப்பெண் கோயிலுக்கு வருகிறாள் என்பது நம்பும் படியாக இல்லை.

4. மயில்சாமிக்கு கொடுக்கப்பட்ட தங்கம் என்னவாயிற்று. அது தங்கமாகவே நிலைத்ததா? என்ற விவரம் கதையில் சொல்லப் படவில்லை.

ஆசிரியர் பற்றிய குறிப்பு.

சு. சமுத்திரம் ( 1941 – ஏப்ரல் 1, 2003) தென்காசி மாவட்டம் தென்காசி வட்டம் திப்பணம்பட்டி கிராமத்தில் பிறந்தவர்.

வேரில் பழுத்த பலா என்ற புதினத்துக்காக சாகித்திய அகாதமி விருது பெற்றவர்.

அகில இந்திய வானொலியிலும் தூர்தர்ஷனினிலும் வேலை பார்த்தவர்.

அவர் 14 புதினங்கள், 4 குறுநாவல்கள், 2 கட்டுரைத் தொகுப்புகள், ஒரு நாடகம், 300க்கும் மேற்பட்ட சிறுகதைகள் எழுதியுள்ளார்.0

அடிமட்டத்து மக்களின் வாழ்க்கையும் அவர்கள் பட்ட துன்பங்களும் அவரது படைப்புகளின் முக்கியக்களமாக அமைந்தன.

21 கருத்துகள்:

  1. சு. சமுத்திரம் அவர்களின் கதை சொல்லும் பாணியே அலாதியானது.

    அந்தப் பின்னுரை தேவையில்லாதது. நீங்களே ஒரு கதையை இந்தப் பகுதியில் எடுத்தாண்டு விட்டு நீங்களே அந்தக் கதைக்குப் பின்னூட்டம் போட்ட மாதிரி இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //அந்தப் பின்னுரை தேவையில்லாதது. நீங்களே ஒரு கதையை இந்தப் பகுதியில் எடுத்தாண்டு விட்டு நீங்களே அந்தக் கதைக்குப் பின்னூட்டம் போட்ட மாதிரி இருக்கிறது.//

      ஆமாம் அப்படித்தானே இந்தப்பகுதியில் ஒவ்வொரு கதையையும் விமரிசிக்கிறேன். 

      பின்னூட்டத்திற்கு நன்றி. 

      Jayakumar

      நீக்கு
    2. தான் ரசித்து வாசித்த ஒரு கதையை அல்லது புத்தகத்தை வாசகர்களும் வாசித்துப் பார்க்க பரிந்துரைக்கிற மாதிரி இந்த பகுதி இருந்தால் நன்றாக இருக்கும்.

      இந்தப் பகுதி ஆரம்பித்த பொழுது அப்படித்தான் இருந்தது.

      உங்கள் பார்வையில் குறையுள்ள ஒரு கதையை வாசகருக்கும் பரிந்துரைத்து வாசிக்க வைப்பதில்
      என்ன இருக்கிறது?
      யோசித்துப் பாருங்கள்.

      நீக்கு
    3. ஐயா 
      "நான் படிச்ச கதை" என்ற தலைப்பை புரிந்து கொண்டதில் நாம் இருவரும் வேறுபடுகிறோம். நீங்கள் "நான் படிச்ச கதை" யை ஒரு பரிந்துரையாக, அணிந்துரையாகக் காண்கிறீர்கள்.  நான் அதை  ஒரு விமரிசன முயற்சியாகவே  காண்கிறேன். இதுவே வித்தியாசம். நான் கதை முழுவதுமோ, அல்லது கதைச் சுருக்கம் (முடிவு உட்பட), கட்டுரையில் உட்படுத்தி விடுகிறேன். ஆகவே "மீதியை வெள்ளித் திரையில் காண்க" என்று சொல்ல வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. 

      நானும் இந்தப் பகுதி கட்டுரைகளை பல விதத்தில் எழுதினேன். கட்டுரையாக, காலட்சேபமாக, கதைக்குள் கதையாக, பேட்டி போன்று, புத்தகப் பாடம் போன்று எல்லாம் எழுதினேன். வரவேற்பு இல்லை. இப்போதும் இம்மாதிரிக் கட்டுரைக்கு வரவேற்பு இல்லை என்று தெரியும். சும்மா ஒரு பொழுது போக்கு என்ற விதத்தில் கட்டுரை எழுதி அனுப்புகிறேன்.

       உங்கள் உள்ளத்தில் பட்ட கருத்துக்களைக் கூறியமைக்கு நன்றி. அதை பெருமையுடன் ஏற்கிறேன். 

      Jayakumar

      நீக்கு
    4. குறையில்லாத கதையே கிடையாது (அனேகமாக). கதையை இங்கு பகிரும்போதுதான் படிக்க வாய்ப்பு ஏற்படுகிறது (இல்லாவிடில் இதையெல்லாம் தேடி எங்க படிக்கப்போகிறேன்?) பிடிக்காத கதையை இங்கு நிச்சயம் பகிரமாட்டார் என்று நினைக்கிறேன். கதையைப் பகிர்ந்து அவருடைய கருத்தையும் கூடவே சேர்த்து எழுதிவிடுகிறார். ரொம்பவே போஸ்ட் மார்ட்டம் செய்தால் ரசிக்காது.

      கதையைச் சுருக்கமாகவோ இல்லை முழுமையாகவோ இங்கு பகிராமல், சுட்டியைக் கொடுத்து அங்கு படியுங்கள் என்று சொன்னால் படிப்பேனா என்பது சந்தேகம்தான்

      நீக்கு
    5. நான் எழுத்தாளன். அதனால் கதை எழுதும் கலை பற்றி அறிந்தவன். யார் வேண்டுமானாலும் தாம் நினைப்பதை கதை மாதிரி சொல்லி விடலாம். ஆனால்
      தான் நினைப்பதை. வார்த்தைகளில் வடித்து வாசிப்போரை வயப்படுத்துதல் என்பது எளிய காரியம் அல்ல.. கோர்வையாக ஒரு கட்டுரை மாதிரி ஒரு பக்கம் எழுத வேண்டுமானாலேயே அந்த இயலாமை புரிபவர்களுக்கு நான் சொல்வது புரியும். அதனால் சிறப்பாக எழுதுபவரைக் கண்டால் அதைப் பகிர்ந்து கொள்ளத் தோன்றுகிறது. பாராட்டத் தோன்றுகிறது. நாமும் அந்த வாசிப்பில் பங்கு கொள்ளத் தோன்றுகிறது. இதற்கு உதாரணமாக வியாழக்கிழமை ஸ்ரீராமின் கட்டுரைகள்.

      நீக்கு
    6. தமிழில் நயம் பாராட்டுதல் என்று சொல்வார்கள். இந்த போக்கு கதை வாசிப்பில் மிகுந்தால் அவற்றை வாசித்து வாசித்து வாசிப்பின் நேர்த்தி மனசில் படிந்து நம்மாலும் நினைப்பதை வார்த்தைகளில் வரிகளில் வடித்து எழுதும் கல்வி பெற முடியும். அந்த யோசனையில் தான் ஆரம்பத்தில் இந்தப் பகுதி எபியில் மலர்ந்தது.

      நீக்கு
    7. அதனாலேயே இதெல்லாம் சொல்லத் தோன்றியது. பத்திரிகைகளில் வெளிவருகிற கதைகளின் இலக்கணமே வேறே.
      எல்லாவற்றையும் சாங்கோபாங்கமாக விவரிக்க அங்கே இடமில்லை. அதனால் சொல்லித் தெரிபவை சில,
      சொல்லாமலேயே புரிந்து கொள்ள வேண்டியவை பல என அங்கிருக்கும்.
      அசோக மித்திரனின் கதைகள் இந்த வகைத்தானவை. இந்தப் பகுதியில் அவரின் 'எலி' என்ற கதையை அனுபவித்துப் பகிர்ந்திருக்கிறேன். வாசித்துப் பார்த்தீர்கள் என்றால்
      இந்தப் பகுதி எப்படி அமைந்தால் நன்றாக இருக்கும் என்பதற்கு உத்தேசமாக ஒரு தோற்றம் தெரியும்.
      அப்படியெல்லாம் அமைந்தால் இந்தப் பகுதியை பிற்காலத்தில் கிண்டில் புத்தகமாகக் கூட வெளியிடும் தகுதியும் பெறும். நான் எதை எழுதும் பொழுதும் அது புத்தக வடிவிற்கேற்பவான நோக்கத்திலேயே எழுதுவேன். இதெல்லாம் ஆக்க பூர்வமாக எழுதுபவனின் அக்கறை சார்ந்ததே தவிர போகிற போக்கில் தம் பொழுது போக்கிற்காக வாசித்துப் போவோரின் கவலை அல்ல.
      எபியின் தளத்தை உபயோகப்படுத்திக் கொண்டு நம் படைப்பாற்றலை வெளிப்படுத்துகிறோம் என்ற எண்ணம் கொள்ள வேண்டுகிறேன். அது பிற்காலத்தில் மிகவும் பயனுள்ள உழைப்பிற்க்கு நேரத்தைச் செலவிட்டிருக்கிறோம் என்ற பெருமிதத்தைக் கொள்ளச் செய்யும் நண்பரே.

      நீக்கு
    8. என்னளவில் நீங்கள் கொடுக்கும் முன்னுரையோ பின்னுரையோ பாதிக்காது. ஏனெனில் அது உங்கள் தனிப்பட்ட கருத்து. எல்லோருக்கும் அப்படியே தோன்றாதல்லவா? அதோடு இப்படித்தான் விமரிசிக்கணும்னு எல்லாம் சொல்லவும் முடியாது. ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு பாணி.

      நீக்கு
  2. கதை, ஓக்கே... நிறைய லாஜிக் மீறல்.

    பாதரசத்தால் செய்த லிங்கத்தை ஒரு வைத்தியர் எங்கள் வீட்டிற்கு வந்தபோது காட்டியிருக்கிறார். அவர், தேள் கடிக்கான மருந்தை, தன் மகளைத் தேளைவிட்டுக் கடிக்கச் செய்து சோதித்துப் பார்த்தவர். எனக்கு மஞ்சள்காமாலையின்போது மருந்து கொடுத்துக்கொண்டிருந்த மூலிகை வைத்தியர் அவர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மஹாபெரியவரின் ஆக்ஞையின்படி ஒரு வைணவப் பெரியவர் பாதரசத்தைக் கூட்டி லிங்கம் செய்து அதை எல்லாக் கோயில்களுக்கும் எடுத்துச் சென்று சிறப்பு ஆராதனைகள் செய்தார். அம்பத்தூரில் நாங்க இருந்த காலனியின் பிள்ளையார் கோயிலுக்கும் பாதரசலிங்கம் கொண்டு வரப்பட்டது. தரிசித்தோம். இது எண்பதுகளின் மத்தியில் நடந்தது. பின்னர் அந்த லிங்கம் திருமுல்லைவாயில் ஈசன் சந்நிதியில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. கடைசியா நாங்க போனப்போக் கூட அங்கே பார்த்தோம். அதுவே 20 வருடங்கள் இருக்கலாமோ என்னமோ! இப்போத் தெரியலை.

      நீக்கு
  3. பாதரசம் எப்போதும் திரவ நிலையில் இருக்கும். கைகளால் அழுத்தினால் அழுந்தும். கொடிய விஷம். அதை உலோகத்தில் பூச முடியும்.

    ஸ்ரீரங்கத்து தேவதைகள் தொகுப்பில் சுஜாதா ரா வி ரா என்கிற விஜயராகவன் பூரம் என்கிற மெர்குரி குளோரைடு மூலம் தற்கொலை செய்து கொள்கிறார் என்பதை எழுதியிருக்கிறார்.

    பதிலளிநீக்கு
  4. எப்படியோ பறவைகளும் வாழணும் என்ற எண்ணம் மனிதனுக்கு வந்ததில் மகிழ்ச்சி.

    ஒரே நேரத்தில் 32 நபர்கள் பேசுவது அலுவலகங்களுக்கு நல்லதே...

    இது தீவிரவாதிகளுக்கும், கடலை போடுபவர்களுக்கும் கூடுதல் மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
  5. பறவைகளைக் காக்க எடுத்துக்கொள்ளப்பெற்ற முயற்சி பாராட்டிற்கு உரியது

    பதிலளிநீக்கு
  6. வணக்கம் சகோதரரே

    இன்றைய பாஸிடிவ் செய்திகள் அருமை.

    பறவைகளை காக்க எடுத்த வழிகள் சிறப்பானவை.

    கதையும் நன்றாக உள்ளது. இறைவனின் கோவிலில் அவன் முன்னிலையில் அந்த மூலிகையின் ரகசியங்களை கதையின் நாயகர் சம்பூர்ணம் ஒப்பிவித்தும், இறுதியில் அனைத்தும் பழையபடியே ஊதா நிறத்திற்கு மாறியது என்றால், இறைவன் இந்த செயலுக்கு ஒப்புதல் அளிக்கவில்லையென்றுதான் அர்த்தம். ஒவ்வொரு மனிதனையும் வழிநடத்துபவன் அவன்தானே..! யாருக்கு எப்படி எந்த நேரத்தில் எதைத்தர வேண்டுமென தீர்மானிப்பவனும் கூட..!

    ஒரு நகையின் தேவைக்காக ஏழையின் அருகில் நின்ற இறைவன் அநியாயமான ஆசைக்கு என்றுமே துணைபுரிய மாட்டான் என்பதை வெளிக்காட்டிய இந்தக் கதையை படித்து ரசித்தேன். அருமையான கதையை இங்கு பகிர்ந்த சகோதரர் ஜெயக்குமார் சந்திரசேகர் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி. பகிர்ந்த உங்களுக்கும் நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  7. பறவைகளை காக்க எடுத்த முயற்சி பாராட்டுக்கு உரியது.

    பதிலளிநீக்கு
  8. முதல் இரண்டும் ஏற்கெனவே படிச்சது தான். பறவைகளைக் காப்பாற்ற எடுக்கும் முயற்சிகள் நன்கு செயல்பட்டுப் பறவைகள் காப்பாற்றப்படட்டும்.

    ரொனால்டோ பச்சை குத்திக்கொண்டால் என்ன? குத்திக்காட்டி என்ன?

    சு.சமுத்திரம் அவர்கள் பட்டவர்த்தனமாக உண்மையை உண்மையாகச் சொல்லிவிடுவார். அவரது திருநங்கைகள் பற்றிய நாவலைப் படிக்க ஆரம்பிச்சுட்டுப் பாதியிலேயே மனம் கலங்கி விட்டுட்டேன். :( நல்ல எழுத்தாளர். இந்தக் கதை படிச்ச மாதிரித் தெரியலை. என்றாலும் பேராசை பெரு நஷ்டம்!

    பதிலளிநீக்கு
  9. பறவைகளை காக்க எடுத்து இருக்கும் முயற்சி அருமை. தொடர வேண்டும். பறவைகள் வாழ வேண்டும்.

    கதை நன்றாக இருக்கிறது. பணம் படைத்தவன் பேராசையை சொல்கிறது.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!