2.7.25

பாம்புகள் தோலை உரிப்பதுபோல் வேறு உயிரினங்கள் தங்கள் தோலை உரிக்கின்றனவா?

 

பானுமதி வெங்கடேஸ்வரன்: 

சர்க்கஸ் கோமாளிக்கு சிவப்பு முகம், கண்ணையும், வாயையும் சுற்றி வெள்ளை நிறம், அடர்ந்த புருவம், மூக்கில் ஒரு சிவப்பு உருண்டை என்று வடிவமைத்தது யார்? ஏன்?

# இதை முதலில் செய்தவர் யார் என்ற தகவல் யாருக்கும் தெரியாது - எங்கும் கிடைக்காது என்று நினைக்கிறேன். நட்பு, சந்தோஷம் முதலான உணர்வுகளை சிறுவர்களிடம் உண்டாக்கும் என்று நம்பி வடிவமைத்து இருக்கிறார்கள். ஆனால் ஏனோ எனக்கு இந்த ஒப்பனை பிடிப்பதில்லை.

CGSenu : மாடர்ன் கோமாளியின் பிதாமகர் – ஜோசெப் கிரிமால்‌டி (Joseph Grimaldi) 

ஈஸ்ட் லண்டனில் 1800களில், ஜோசெப் கிரிமால்டி எனும் நடிகர் modern clowning எனப்படும் கோமாளித்தனத்தின் முன்னோடியாகக் கருதப்படுகிறார்.

அவரே முதன் முறையாக, முகத்தில் வெள்ளை ஒப்பனை, சிவப்பு கண்ணிமைகள், பஞ்சுப் போல இருக்கும்படி முக வடிவம், வித்தியாசமான உடை – பெரிய காலுறைகள், வண்ண வண்ண ஆடைகள், துடிப்பான நடையும் குதூகல பாவனைகள் எல்லாவற்றையும் கொண்டு வந்தவர். 

இவர் நடித்த கோமாளிப் பாத்திரம் Joey the Clown எனவும் அழைக்கப்பட்டது, இது பின்னர் பலருக்கும் நெறி வகுத்தது.

& : comedy costume பற்றி கேள்வி கேட்டதும், எனக்கு என்னுடைய தங்கை சொன்ன ஒரு சுவையான சம்பவம் ஞாபகத்திற்கு வருகிறது. 

1971 ல் நான் வேலை தேடுவதற்காக சென்னை வந்துசேர்ந்தேன். அந்த நாட்களில், சோ அவர்களின் மேடை நாடகங்கள் மிகவும் பிரசித்தம். 'என்று தணியும் இந்த சுதந்திர தாகம்?' மேடை நாடகத்தில் அவர்  நாரதர் வேடம் போட்டு, அரசியல் கலந்த வசனங்களை பேசுவார். மேடையில் நாரதர் வந்தாலே ரசிகர்கள் சிரிக்கத் தயாராகிவிடுவார்கள். (ஆனால் அந்த நாடகத்தை நான் பாக்கவில்லை. அந்த நாடகத்தின் வசனங்கள் ஒரு புத்தகமாக வெளிவந்தபோது படித்திருந்தேன்.) 

அப்பொழுது ஷெனாய் நகர் ஆர்ட்ஸ் அகாடமியில் என்னுடைய அண்ணன் மற்றும் மன்னி உறுப்பினர்கள். ஒவ்வொரு மாதமும் ஷெனாய் நகர் ஆர்ட்ஸ் அகாடமி சார்பில் அதன் உறுப்பினர்களுக்காக இரண்டு அல்லது மூன்று நிகழ்ச்சிகள் நடத்துவார்கள். நாடகம், மெல்லிசை, சினிமா போன்று பல விஷயங்கள் உறுப்பினர்களுக்கு ஏற்பாடு செய்வார்கள். 

 ' என்று தணியும் இந்த சுதந்திர தாகம் ' நாடகத்திற்கு சபாவிலிருந்து இரண்டு டிக்கெட் கிடைத்தது. அண்ணனுக்கு ஆபீஸ் வேலை அழுத்தம் காரணமாக நாடகத்திற்கு செல்ல இயலவில்லை. என்னுடைய மன்னியும், வீட்டில் வேலைக்கு இருந்த பாத்திரம் தேய்க்கும் ராணி(?) என்ற 14 வயது பெண்ணும் சென்றிருந்தார்கள். நாரதர் வரும்போதெல்லாம் எல்லோரும் விழுந்து விழுந்து சிரிப்பதைப் பார்த்த அந்தப் பெண் நாரதர் என்றாலே comedy piece என்று நினைத்துக்கொண்டுவிட்டாள்!  

பிறகு, அந்தப் பெண்ணுடன் என் தங்கை, சபா டிக்கெட்டில், 'பக்த பிரகலாதா' சினிமா பார்க்கச் சென்றிருக்கிறாள். பக்த பிரகலாதா படத்தில், நாரதர் வேடத்தில் பாலமுரளி கிருஷ்ணா திரையில் தோன்றியதும், அந்தப் பெண் புரண்டு புரண்டு, சிரிக்க ஆரம்பித்தாளாம். 


 என் தங்கைக்கு ஒன்றும் புரியவில்லை. " ஏன் சிரிக்கிறாய் ?" என்று ராணியிடம் தங்கை கேட்டதும், " டீச்சர் கூட நான் பார்த்த நாடகத்தில், எல்லோரும் நாரதரைப் பார்த்தாலே சிரிப்பாங்க அக்கா - ஒரே தமாஷ் அந்த ஆளு " என்றாளாம் அந்தப் பெண்! 

நெல்லைத்தமிழன் : 

இந்த முறை திராட்சை விளைச்சல் குறைவு. மாம்பழ விளைச்சல் மிக அதிகம். ஒன்று நல்லா விளைந்தால் மற்றது விளைவதில்லை. காரணம் என்னவாயிருக்கும்? 

# சில விஷயங்கள் இயற்கையின் மாற்றவியலாத காரணங்களால் நிகழ்கின்றன. இயற்கை விதிகளை மனிதர்கள் இன்னும் முழுதாகப் புரிந்து கொள்ளவில்லை. 

& மாம்பழ விளைச்சல் அதிகமானால் கலகம்தான்! 

அப்பா மகன் இருவரிடையே தகராறு தோன்றும்! சிவன், முருகன் + ராமதாஸ் - அன்புமணி! 

முதன் முதலில் உங்களை அங்கிள் அல்லது ஆன்டி எனப் பிறர் கூப்பிட்டபோது உங்கள் மனநிலை எப்படி இருந்தது? 

# எனக்கு சிறு வயதிலேயே " பெரியவனாக வேண்டும் என்ற ஆசை இருந்தது. எனவே அங்கிள் என்று அழைக்கப்பட்ட போது ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது.

& வியப்பாக இருந்தது. குரோம்பேட்டை நியூ காலனியில் அலுவலகத்திலிருந்து ஒருநாள் திரும்ப வந்துகொண்டிருந்தபோது வீதியில் சிறுவர்கள் கிரிக்கெட் ஆடிக்கொண்டிருந்தார்கள். ஒரு பையன் அடித்த பந்து என் மேல் வந்து விழுந்தது. பந்தைப் பிடிக்க வந்த சிறுவன், "  நீ அடிச்ச பந்து இந்த மாமா மேல பட்டுடுச்சு - பாவம்டா இந்த மாமா!" என்றான். அதுதான் நான் முதன் முதலாக அங்கிள் ஆகிய தருணம் ! அதுவரை அண்ணன் என்று அழைக்கப்பட்ட நான் மாமா ஆனது 23 ஆவது வயதில்! 

நம் வாழ்வின் இன்ப துன்பங்கள் நம் முன்வினைப் பயனால் பிறக்கும் முன்பே தீர்மானிக்கப்பட்டுவிடுகின்றன. அதனால் இந்த ஜென்மத்தில் செய்யும் தவறுகளினால் நாம் பாதிக்கப்படுவதில்லை என்பது தவறல்லவா? சிலர், இவ்வளவு கொள்ளைக்காரனாக இருந்தும் பெரிய பதவியில் இருப்பது, நல்ல குணங்கள் இருந்தும் வாடுவது எதனால் நிகழ்கிறது?

# வசதி படைத்த துஷ்டர்களைப் பார்க்கும்போது அவர்களது முந்தைய ஜென்மப் புண்ணியக் கணக்கு இன்னும் ஓடிக்கொண்டிருக்கிறது என்று நினைத்து ஆறுதல் அடைய வேண்டியதுதான்.

இந்த நூற்றாண்டில் மக்கள் பல இடங்களுக்கும் பயணம் செய்வதால் அவர்களது மனநிலை விரிவடைந்து இருக்கிறதா?

# பயணத்தினால் அறிவு விரிவடையலாமே தவிர மனநிலை மாறும் சாத்தியம் கம்மி.

பாம்புகள் தோலை உரிப்பதுபோல் வேறு உயிரினங்கள் தங்கள் தோலை உரிக்கின்றனவா? 

& பல்லிகள் தோலை உரிப்பதை சில சமயம் பார்த்துள்ளேன். 

எனக்குத் தெரிந்து சில பெற்றோர்கள் (குறிப்பாக அப்பா) தன் பையன்களின் முதுகுத் தோலை உரித்துவிடுவதாக பயமுறுத்துவார்கள் - ஆனால் அப்படி உரித்ததில்லை! 

பாம்புகள் தோலை உரிப்பது மிகப் பிரபலமான உதாரணம் என்றாலும், பல்லிகள், தவளைகள், பூச்சிகள், சில மீன்கள், மற்றும் கணுக்காலிகள் (Arthropods) போன்ற பல உயிரினங்களும் இவ்வாறு தோலை உரித்து வளர்ச்சி அடைகின்றன.

Arthropods image by Meta AI. 

CGSenu : " அதாவது நான் என்ன சொல்றேன்னா .. " (அடேய் Senu - கேள்வி கேட்டிருப்பவர் நெ த - இங்கே வந்து நீ வாயைத் தொறந்தா அவரு உன் முதுகு தோலை உரிச்சுடுவாரு - மரியாதையா ஓடிடு !!) 

கே. சக்ரபாணி சென்னை: 

இது எல்லோர் வீட்டிலும்  நடப்பதுதான்.  அதாவது  ஒருவர், வீட்டில்  எப்போதுமே. ஒன்றும் செய்து  சாதிக்காதவர்   என்றோ ஒருநாள்  ஒரு வேலையை செய்து  சாதித்து  விட்டால்.  அப்ப  இன்னிக்கு. மழைதான் வரும்  என்று  சொல்வோம் இது எப்படி வந்தது? 

# மழை அரிதாயிருக்கும் பகுதியில் தோன்றியிருக்க வேண்டும்.

= = = = = = = = =

படமும், பதமும் .. 

நெல்லைத்தமிழன்: 

1) 


நான் அடுத்த ஸ்ரீராமா ஆவதற்கு முயற்சிக்கலை!  

பொதுவா கல்யாணங்கள்ல, டிபன் நேரத்துல இப்போல்லாம் ரவா தோசை, ஊத்தாப்பம், நெய் ரோஸ்ட் என்றெல்லாம் மெனுல சேர்த்துவிடுகிறார்கள். இதுல பிரச்சனை என்னன்னா, பந்திக்கு முதலில் வரும் 15-20 பேருக்கு தோசை நிச்சயம் கிடைக்கும். மத்தவங்க, ஒவ்வொண்ணா மெதுவா சாப்பிட்டுக்கிட்டிருந்தால், அடுத்த முறை வரும்போது கிடைக்கும். என்னை மாதிரி அவசரக்குடுக்கைகளோ முன் ஜாக்கிரதை முத்தண்ணாக்களோ, ஒரு தோசைக்குப் பதிலா இரண்டா வாங்கிட்டாங்கன்னா, மத்தவங்களுக்கு 'காத்திருக்கும் நேரம்' இன்னும் அதிகமாயிடும்.  

தோசை வெரைட்டிக்குப் பதிலா முன்னமே செய்துவைத்திருப்பதுபோல ஒரு ஐட்டத்தைச் சேர்த்துக்கொண்டால் என்ன? அல்லது நான் சென்ற ஒரு டூரில் பார்த்ததுபோல, மிகப் பெரிய ஹாட்பேக் வைத்து அதில் தோசைகளை முதலிலேயே தயார் செய்து வைத்துவிட்டால் என்ன? 

நீங்க,  குறிப்பா ஸ்ரீராம், என்ன சொல்றீங்க?

ஸ்ரீராம் பதில் சொல்லவும். 

தோசைகளையே அடுக்கடுக்கா வார்த்து பெரிய பிளேட்டில் வைத்துதான் எடுத்து வருகிறார்கள். கல்யாணங்களில் போடும் தோசை ஊத்தப்பம் வகையறாக்களை சீரியஸாக எடுத்துக் கொள்ளக் கூடாது. சின்ன வயசுல சொப்பு வைத்து விளையாடுவோமே.... அதை ஞாபகம் வச்சுக்கணும். சும்மா லுலுலுவா.. அவ்வளவுதான்.


= = = = = = = =

2) 

உங்களுக்கு இரண்டு அறைகளைக் கட்டவேண்டும் என்றால் அதற்கு கோயில் நுழைவாயிலில் உள்ள இடம்தானா கிடைத்தது? அழகிய சிங்கத்துடன் கூடிய தூணின் இரண்டு புறமும் இரும்பு கிராதிகளை வைத்து கதவை அமைத்து, பார்ப்பவர்களுக்கு சிங்கத்தையே சிறை வைத்ததுபோலத் தோன்ற வைக்கிறீர்களே. சிங்கம் கதறுவதுபோல முக பாவனை கொடுக்கிறது.   படம் எடுத்த இடம் - கும்பகோணம் சாரங்கபாணி கோயில் கோபுர நுழைவாயில் பகுதி. 

1) அது சரி, இந்த சிங்கம் ஏன் மூக்குக் கண்ணாடி போட்டுக்கிட்டு இருக்கு?

2) இது சிங்கமா அல்லது யாளியா ?  

= = = = = = = = 

பானுமதி வெங்கடேஸ்வரன் : 


கனடாவிலிருந்து சேலம் செல்லலாம்! 

= = = = = = = = = =

KGG பக்கம் : (எங்கள் கேள்வி!) 

கொஞ்ச நாட்கள், உங்கள் வீட்டைப் பூட்டி விட்டு, குடும்பத்துடன் வெளியூர் சென்று திரும்பி வருகிறீர்கள். 

வீட்டில் சமையல் அறையிலோ அல்லது பூஜை அறையிலோ - தரையில் இப்படி ஒரு தடம் பார்க்கிறீர்கள். 


உடனடியாக என்ன நினைப்பீர்கள்? என்ன செய்வீர்கள்? 

= = = = = = = = = = =

27 கருத்துகள்:

  1. இது சிங்கமா யாளியா? இந்தக் கேள்வியை, சந்தேகத்தைப் பார்த்து, சிங்கம் இன்னும் கேவிக் கேவி அழுவதாகத்தான் எனக்குப் படுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிங்கம் அழுதால் அசிங்கம் ஆகிவிடும்!

      நீக்கு
  2. சிறந்த தகவல் பேழையாக இன்றைய பதிவு
    வாழ்க நலம்

    பதிலளிநீக்கு
  3. சிங்கத்தை சிறையிட்ட சிங்கம்..

    ஆகா..

    பதிலளிநீக்கு
  4. இந்த ஜென்மாவில், மிகவும் அப்பாவிகளைத் துன்புறுத்துவது அல்லது பொறுக்கமுடியாத தவறு செய்தாலொழிய, அதற்கான தண்டனை இந்த ஜென்மாவில் கிடைப்பதில்லை என்பது என் அனுமானம். (சட்டப்படி கிடைக்கும் தண்டனை என்பது மனிதர்களால் அமைக்கப்பட்டது. அது வேறு வகை)

    பதிலளிநீக்கு
  5. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  6. ​இந்த நூற்றாண்டில் மக்கள் பல இடங்களுக்கும் பயணம் செய்வதால் அவர்களது மனநிலை விரிவடைந்து இருக்கிறதா?
    # பயணத்தினால் அறிவு விரிவடையலாமே தவிர மனநிலை மாறும் சாத்தியம் கம்மி.

    ​நெல்லைக்கு பாராட்டா, அல்லது சொட்டா?
    Jayakumar​

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்த பதில் அவருடைய கேள்விக்குதான்! அவரைப் பற்றிய விமர்சனம் அல்ல!

      நீக்கு
  7. பொதுவா எனக்கு ஒரு அறையில் மாற்றம் நிகழ்ந்திருந்தால் உடனே கண்டுபிடித்துவிடும் தன்மை உண்டு. இதனால் பசங்களின் சின்ன வயதில் வீட்டில் நிகழும் மாற்றங்களை ஆபீஸ் விட்டு வந்ததும் கண்டுபிடித்துவிடுவேன். இந்தபாதிரி கால்தடம் தெரிந்தால் யோசனையாகத்தான் இருக்கும், அதற்கு வாய்ப்பு மிக்க் குறைவு என்பதால்.

    பதிலளிநீக்கு
  8. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  9. இன்றைய கேள்வி பதில்கள் நன்று.

    நாரதர் பற்றி அந்த பெண் கூறியது படிக்கும் போது சிரிக்க வைத்தது.

    :"இந்த ஜென்மத்தில் செய்யும் தண்டனைக்கு பலன் உடனே கிடைத்துவிடுவதில்லை" என்றுதான் நமது சமயத்தில் சொல்லப்பட்டு இருக்கிறது. இதை தெரிந்திருந்தும் பாதிக்கப் பட்டவரின் மனநிலை துயருறுவதை மாற்ற முடிவதில்லை.யே .

    வீட்டு சமையலறை, பூஜை அறையில் தடம் இருந்தால் யாரோ வீட்டுக்குள் உள்ளட்டு விட்டார்கள் என்ற பயம் இருக்கும்.

    பதிலளிநீக்கு
  10. ஜோக்கர் தகவல்களும், கௌ அண்ணா எழுதியிருக்கும் நினைவுகளும் சுவாரசியம்.

    கீதா

    பதிலளிநீக்கு
  11. யாளி போன்று இருக்கிறது. அது நசுங்கிப் பாவமாக இருக்கிறது. இப்படி எத்தனைச் சிற்பங்கள் பாழாக்கப்பட்டனவோ?

    கீதா

    பதிலளிநீக்கு
  12. கனடாவில் இருப்பது போன்று அமெரிக்காவிலும் salem உண்டு.

    கீதா

    பதிலளிநீக்கு
  13. கால்தடம் இப்படிப் பார்த்தால், என்னவாக இருக்கும் என்று பலவகைகளிலும் யோசிக்கத் தொடங்குவேன்., ஏதாச்சும் எலி புகுந்து எதையாச்சும் கொட்டி சில சமயம் மேகங்களின் வடிவங்கள் போல இப்படி ஆகியிருக்குமோ? இல்லை நாம ஊருக்குப் போகும் முன் துடைத்திருப்போமே தண்ணி உப்புத் தண்ணியாக இருந்தால், நம் கால்தடம் இப்படிக் காய்ந்து பதிந்திருக்குமோ...ஏதாச்சும் கொட்டியிருக்குமோ என்று யோசிப்பேன். வீட்டை ஆராய்ந்து!!!!! ஹிஹிஹிஹி. கொஞ்சம் ஆச்சரியமாகத்தான் இருக்கும்...நம்ம வீட்டுல களவு போற அளவுக்கு விலை மதிக்க முடியாத சாமான் என்று சொல்வன எதுவும் கிடையாதே! இருக்க கம்ப்யூட்டரும் கூட ஓட்டை. அதை வித்தா நாலணா கூடக் கிடைக்காது!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்ல நகைச்சுவை பின்னூட்டம். நன்றி.

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!