22.7.25

ஒரே ஒரு ஊரிலே - தொடர் கதை - ஸ்கை

 

முன்னறிவிப்பு : 

அப்பப்போ படிச்சுடுங்க. முடிந்தபிறகு மொத்தமாகப் படிச்சுக்கலாம் என்று நினைத்தால் ரொம்பக் கஷ்டப்படுவீங்க. 

முடிவு என்ன ஆகும் என்று தெரிந்துகொள்ள ஆவலாக உள்ளவர்களுக்கு கதையின் கடைசி வரி : " அவர்கள் இருவரும் அதற்குப் பின் சந்தோஷமாக நிம்மதியாக வாழத் தொடங்கினார்கள்" 

= = = = = = = = =

ஓ...ராஜா.....
ராஜா !

நீ வரவேண்டும் என்று எதிர்பார்த்தேன்
வரும் வழி தோறும் உந்தன் முகம் பார்த்தேன்
காலம் கடந்தால் என்ன ராஜா ?
காதல் கவிதை சொல்லு ராஜா...

நீ வருவாய் என நான் காத்திருந்தேன்
வரும் வழி தோறும் உன்னைப் பார்த்திருந்தேன்
காத்துக் கிடப்பதில் இன்பம் உண்டு
காக்க வைப்பதில் சுகம் உண்டு (கண்ணதாசன்)

'செல்வமீனா டெக்ஸ்டைல்ஸ்' மாலை ஐந்தே முக்காலுக்கே ஒளி வெள்ளத்தில் கண்ணைக் கவர்ந்தது. தீபாவளிக்கு இன்னும் ஒரு வாரம்தான் இருக்கிறது. வியாபாரம் இன்னும் களை கட்டவில்லை. வாரக் கடைசியில்தான் மக்கள் கூட்டம் கூட்டமாக வருவார்கள்.

உள்ளே நுழையும்போதே காற்று ஒரு புயலைப்போல உடலைத் தாக்கும். நுழையுமிடத்தில் விநாயகரும் லக்ஷ்மியும் சரஸ்வதியும் தங்கநிறத்தில் சிலைகளாக நின்றிருந்தார்கள்.

வாடிக்கையாளர் பில்லுக்கு பணம் செலுத்தியதும் கடை ஊழியர் வாங்கப்பட்டதை ஒரு அழகிய பையிலிட்டு கஸ்டமரிடம் தருவதற்குமுன் அவர் பெயரை செக் செய்து கொண்டு அவரையும் அழைத்துக் கொண்டு அவர் சம்மதத்தை ஜாடையாகத் தெரிந்து கொண்டு பையை தெய்வங்களுக்கு உயர்த்திப் பிடித்து சிக்கனமாகச் சில மந்திரங்கள் சொல்லி கற்பூரம் காட்டினபின் பையை பவ்யமாக கஸ்டமரிடம் காட்டி நீட்டுவார்.

கல்லாவில் அமர்ந்திருந்த ராஜா இவற்றை எல்லாம் வேடிக்கை பார்த்தபடி அமர்ந்திருந்தான். அவ்வப்போது வரும் கஸ்டமர்களை இன்முகத்துடன் வரவேற்று, அவர்களுக்கு வேண்டியதைப் பேசி அனுப்பிக் கொண்டிருந்தான். சிவந்த நிறமும் முகம் முழுக்க இனிமையான சிரிப்பும் அவனைப் பார்க்கும் யாருக்கும் உடனே பிடித்துப் போகும். உயரமான உருவம். சிவந்த கைகளில் கருப்பு நிற கயிறு. சில கரிய முடிகள் மணிக்கட்டில் காணப்படும்.

ஓரக்கண்ணால் அவனைப் பார்த்தபடி நகரும் பெண்கள் சிலர் அவனை ஏற இறங்கப் பார்த்தவாறு ஒரு கள்ளப் புன்னகையுடன் மெல்ல நகர்வார்கள்.


சிலசமயங்களில் தேவை இல்லாது பேச்சுக் கொடுப்பதும் உண்டுதான். ராஜாவுக்கும் இதெல்லாம் புரியும். எந்த விதமான வித்தியாசத்தையும் முகத்தில் காட்டாது புன்சிரிப்புடன் சுருக்கமாக இரண்டொரு வார்த்தை பதில் சொல்வான்.

ராஜா இன்று கொஞ்சம் நிலை கொள்ளாமல் தவித்துக் கொண்டிருந்தான்.

அரைமணியில் வந்து விடுகிறேன் என்று சொல்லிப் போன அவன் தந்தை செல்வம் இன்னும் வரவில்லை. அம்மா ஏதாவது பூஜை, பிரசாதம் என்றோ, காஃபி. ஸ்நாக்ஸ் என்றோ வீட்டில் தக்க வைத்துக் கொண்டிருக்கலாம்.

'அப்பா... சீக்கிரம் வாயேன்... இன்னிக்கின்னு பார்த்தா இப்படி....' மனதுக்குள் கேட்டபடி வாசலில் ஒரு கண்ணும் கல்லாவில் ஒரு கண்ணுமாய்த் தவித்துக் கொண்டிருப்பதற்குக் காரணம் -

சாந்தி.

ஐந்தரைக்கே வந்திருப்பாள். ஃபோன், வாட்ச், வாசல் என்று மாறி மாறிப் பார்த்தபடி கால் மாற்றி நின்றிருப்பாள். அல்லது இங்குமங்கும் கடைகளைப் பார்ப்பது போல அலைந்தபடி இருப்பாள். லேட்டாகப் போய் நின்றால் என்ன சொல்வாள் ? எவ்வளவு நேரம் காத்திருப்பாள் ?

சாந்தி...

காண்டராக்டர் அழகரின் ஒரே மகள். அண்ணா நகரில் இரண்டடுக்கு வீடு அவர்களுடையது. கீழே இவர்கள் குடியிருக்க மாடியை வாடகைக்கு விட்டிருந்தார்கள். மாடியில் குடியிருந்த கோபி இவன் கிரிக்கெட் நண்பன். வார இறுதிகளில் எங்கு மைதானம் காலியாய் இருக்கிறது என்று விசாரித்து, வாடகை கொடுத்து மற்ற டீம்களுடன் பேசி மேட்ச் ஏற்பாடு செய்து விளையாடும் இவன் குழுவின் கேப்டன் கோபிதான். ராஜா அந்த டீமின் மெயின் பௌலர். வேகப்பந்து வீச்சாளன். கையைச் சுழற்றிப் பந்தைக் கால் பாதங்களைக் குறிவைத்து எறிவதில் விற்பன்னன். கொஞ்சம் பேட்டிங்கிலும் தாக்குப்பிடித்து ஆல்ரவுண்டர் என்று பெயர் வாங்க முயற்சித்துக் கொண்டிருந்தான்.

கோபியைப் பார்க்கச் செல்லும்போதுதான் சாந்தியை முதலில் சந்தித்தான்.

ஒருநாள் இவன் கேட்டைத் திறந்து கொண்டு உள்ளே நுழையும் சமயம் கீழ் வீட்டிலிருந்து அவள் புறப்பட்டு வெளியே வந்து கொண்டிருந்தாள். இவன் கண்கள் ஒரு வினாடி தயங்கியது. குச்சி போல இல்லாமல் அதே சமயம் குஷ்பூ போலவும் இல்லாமல் இருக்கும் மெல்லிய உடலில் ஆலிவ் கிரீன் டிஸைனர் புடவையை பாந்தமாய் உடுத்தி இருந்தாள். தலையில் ஒற்றை ரோஜா தெரிய, ஓரிரு முடிக்கற்றைகள் காதோரமாய் சில்க் போல காற்றிலாடிக் கொண்டிருந்தன.

கண்களில் QR கோட் இல்லாமலேயே நொடியில் ஸ்கேன் இவன்தான் செய்தானே தவிர, அவள் இவனை நிமிர்ந்து பார்க்காமல் தாண்டிச் சென்றாள். இவன் மாடிப்படி ஏறும் முன் ஒருமுறை திரும்பி பார்த்தான். அவள் கண்ணில் படவில்லை . அன்று பௌலிங்கில் ராஜா சொதப்பியதற்கு காரணம் கோபிக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை.

சில நாட்களாகவே இவனை வீட்டுக்குள்ளிருந்தே பார்த்து வந்தவள் அன்று திட்டமிட்டே வெளியில் வந்தாள் என்பதை பின்னாளில் அவளே சொல்லிக் கேட்ட போது ராஜாவின் மனதில் சில்லென்று ஒரு மகிழ்ச்சி பரவியது.

"உங்களை உங்கள் கடையிலேயே இரண்டொரு சந்தர்ப்பங்களில் பார்த்திருக்கேன் " என்று அவள் சொன்னபோது "எப்படித் தவறவிட்டோம் இந்த தேவதையை?" என்று மனதில் தோன்றியது என்னவோ நிஜம். முதலில் அவனை அங்கு வேலை செய்பவன் என்று நினைத்தாளாம். பின்னர் முதலாளியின் மகன் என்று தெரிந்தபோது தயக்கமும், காரணம் தெரியாத மகிழ்ச்சியும் ஒன்றாக வந்ததாம். பின்னர் நெருக்கம் வந்தபின் பேசக் கிடைத்த நாட்களில் பகிர்ந்து கொண்டவை இவை.

அதன் பிறகு அவ்வப்போது கண்ணில் படுவாள். கடையில் திருட்டுப் பார்வையால் தன்னை அளக்கும் விழிகளையும் முகங்களையும் கண்டு பழகியவனுக்கு இது கொஞ்சம் ஏமாற்றமாய் ஆம் ஏமாற்றமாகத்தான் இருந்ததது. அதைத் தனக்குள்ளேயே ஒத்துக் கொள்வதில் ஒரு தயக்கமும் இருந்தது.

கோபியிடம் மெல்ல சாந்தி பற்றிப் பேச்சு கொடுத்துப் பார்த்தபோது கோபி அதைக் கண்டு கொள்ளாமல் இருந்தான்.

ஒருநாள் கடையில் கல்லாவைத் தாண்டிச் சென்ற வண்ணம் ஃபோனை அவள் காதருகில் வைத்தவாறு பேசியது ராஜாவின் காதில் விழுந்தது .

"ஆமாம்.. சாந்திதான் பேசறேன்...இங்கேருந்து ஃபோரம் மால் வர எப்படியும் முக்கால் மணியாவது ஆகும்."

ஓ... பெயர் சாந்தி ! லேசாக அவள் பக்கம் திரும்பிப் பார்த்தபோது அவளும் முகத்தைத் திருப்பி இவனைப் பார்ப்பது போல இருந்தது. சட்டென வெளியில் சென்று பைக்கில் அவளை டிராப் செய்து விட்டு வரலாமா என்கிற எண்ணம் தோன்றி நொடியில் மறைந்தது.‌

இவன் இன்னும் ஒரு வித்தியாசமும் காட்டாமல் இருக்கிறானே என்று அவள் அன்று வேண்டுமென்றேதான் போனை எடுத்து அப்படி பேசி இருக்கிறாள் என்பதோடு அன்று அவள் தனியாகத்தான் அங்கு சென்றிருக்கிறாள் என்பதும், இவன் வருவானோ என்று முட்டாள்தனமாக - அப்படிதான் அவள் நகத்தைக் கடித்துக் கொண்டே - முகம் சிவக்கச் சொன்னாள் - காத்திருந்ததையும், ஒருவேளை பைக் எடுக்க பின்னால் வருவானோ என்று நினைத்துதான் திரும்பிப் பார்த்ததாகவும் அவள் சொல்லக்கேட்டபோது மனம் முழுவதும் பரவசம்.

தான் காதலிக்கிறோம் என்பதை விட, தான் காதலிக்கப்படுகிறோம் என்னும் உணர்வே உல்லாசம்தான், பரவசம்தான்.

மனம் பழைய இன்ப நினைவுகளில் ஆழ்ந்திருந்தாலும் கைகள் வேலையைச் சரியாகச் செய்து கொண்டிருந்தன. அப்பாவின் வளர்ப்பு. அவனும் பிசினஸில் நன்கு பழகி இருந்தான்.

காவஸாகியை நிறுத்தி விட்டு செல்வம் உள்ளே நுழைந்தார். சில கஸ்டமர்கள் அவரைக் கண்டு வணக்கம் சொன்னார்கள்.‌ கடவுள் படங்களின் முன் சென்று வணங்கி விட்டு, நேராக கல்லாவுக்கு வந்தார். நிமிர்ந்து மேலே மாட்டி இருந்த தன் தாயின் படத்தைக் கண்களை மூடி வணங்கி விட்டு கல்லாவில் அமர்ந்தார்.

ராஜாவைப் பார்த்தார்.

"இருக்கியா? கிளம்பறியா? ஏதாவது வேலை இருக்கா"

"கிளம்பறேன்பா.. கோபியைப் பார்க்கணும்.  ஒரு பேல் சுங்கிடி வந்திருக்கு.  மேலே ஸ்டோர் ரூம்ல வக்கச் சொல்லியிருக்கேன்.  இன்வாய்ஸ் பார்த்துட்டேன்.  டேபிள்ள மேலாப்புல வச்சிருக்கேன்".

அவனைப் பார்த்து தலையை ஆட்டியவர், எதிரில் காத்திருந்தவரிடமிருந்து பில்லை வாங்கி சரிபார்ப்பதில் மும்முரமாகி விட்டார்.

காலை உயர்த்தி பைக்கில் அமர்ந்தவன் ஸ்டார்ட் செய்து சீறி, அரை வட்டமடித்துக் கிளம்புவதை ஓரக்கண்ணால் ரசித்தபடி இருந்தார் செல்வம்.

மாலில் புன்னகைத்த பார்க்கிங் யுவதியிடமிருந்து கணினிச் சீட்டைப் பெற்றுக்கொண்டு மேலே ஏறி வந்தான் ராஜா.

பொறுமை இல்லாமல் ஒரு நிமிடத்துக்கு மூன்று முறை தன் சிவந்த கைகளில் கட்டியிருந்த அந்த தங்க நிற வாட்ச்சைப் பார்த்துக் கொண்டிருந்த சாந்தியை நெருங்கினான். எப்போதும் கருப்பு நிற கைக்கடிகாரம்தான் அவள் கைகளை அலங்கரிக்கும். இது மூன்று நாட்களுக்கு முன்னால் இவன் அவளுக்கு பரிசளித்தது.

சாந்தியின் சோர்ந்த‌ முகம் இவனைக் கண்டதும் ஒரு கணம் மலர்ந்து, அடுத்த நொடியில் கோபத்தைக் காட்டியது.

கைகளைத் திருப்பி அவனுக்கு காட்டினாள்.

"வாட்ச்.. டைட்டன்,, நல்லா இருக்கு...

" ரொம்ப சந்தோஷம் . வாட்சைப் பார்த்தியா?"

"தங்கக் கைக்கு தங்க கலர் வாட்ச்.  உனக்கு எதுவானாலும் அழகு சேர்ககுமே "

"கடுப்பேத்தாதே..."

"கோபப்படும்போது நீ இன்னும் அழகா இருக்கே சாந்தி..  ஏற்கனவே சிவப்பான உன் முகம் இன்னும் சிவப்பா ஒளிருது..  ரெண்டு கண் போறலை"

"இதுக்கு ஒண்ணும் குறைச்சலில்லை" என்று சொன்னாலும் அவள் முகம் நாணத்தால சிவந்தது.

நாணத்திலும் சிவக்கும் அவள் முகத்தை ரசனையுடன் பார்த்தான் ராஜா.'எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா...'

"ஸாரி.. நீ முன்னாலேயே வந்திருப்பாயென்று தெரியும். என்ன செய்ய. அப்பா வந்து டேக் ஓவர் செய்ய டைமாயிடுச்சு"

"ஏதோ ஒரு சாக்கு ஒவ்வொரு முறையும்... எப்பவும், எங்கேயும் பசங்கதான் காத்திருப்பாங்க.. நாங்க லேட்டா வருவோம்.. இங்க என்னடான்னா தலைகீழாயிருக்கு"

"நம்மதான் வித்தியாசமான லவ்வர்ஸ் ஆச்சே டார்லிங்..."

"ஒரு குட் நியூஸ்.. அதைச் சொல்லத்தான் ரொம்ப நேரமா காத்திருக்கேன் . ஃபோன்லயே சொல்லி இருக்கலாம் ஆனா நேர்ல சொன்னாதான் த்ரில்" என்றாள்.

"ஹேய்.. என்ன ஒரு ஆச்சரியம்! நானும் ஒரு குட் நியூஸ் வச்சிருக்கேன்.."

"சொல்லு"

"நீ சொல்லு.. முதலில் குட் நியூஸ் என்று நீதானே சொன்னே?"

"ஏன் ? நீ லேட்டா வந்ததுக்கு நீதான் சொல்லேன்"

"சரிதான்... இந்த டிபிகல் லவ்வர்ஸ் ஃபைட் நமக்குள்ள வேணாம்.. இப்போ முடியாது அது.. வா... .. ஃபுட் கோர்ட் பக்கம் போவோம்.. உட்கார்ந்து பேசலாம்..."

பிரெட் ஆம்லெட், ஃபிரென்ச் ஃப்ரைஸ், காஃபி, ரோஸ்மில்க்குடன் ஒரு ஓரமாக இடம் பிடித்தார்கள்.

"ரெண்டு நாளா கோபி என்னவோ என்கிட்டே பேச ட்ரை பண்றாரு.."

ஆம்லெட்டிலிருந்து நிமிர்ந்த ராஜா அவளை கேள்விக்குறியுடன் பார்த்தான்.,

"என்னவாயிருக்கும்?"  வாயின் அருகே அவள் விரல்களில் பிரென்ச் ஃப்ரை உள்ளே செல்வதற்குக் காத்திருக்க அவள் கண்கள் அவனை நோக்கின.  

அதை ரசித்தாலும் அவன் குரலில் லேசான காரம் இருந்தது.

"என்னைக் கேட்டா.. உன்கிட்ட பேச ட்ரை பண்றான்னா உனக்குதான் தெரியணும்.. என்னவாம்? நான் அவனைப் பார்த்து ஒரு மாசம் ஆவுது.. மழையில கிரிக்கெட் கூட விளையாடறது இல்லை"

"என்னவோ... விடு. பேசட்டும் அப்புறம் சொல்றேன்.. சரி.. குட் நியூஸ்னு சொன்னியே.. என்ன?"

"என்னவாக இருக்கும்.. கெஸ் பண்ணு!"

"அடச்சே.. எனக்கெப்படி தெரியும்? வீட்டுல சொல்லிட்டியா 'சாந்தியைத்தான் கண்ணாலம் கட்டப்போறேன் அப்பா'ன்னு?"

"அதுக்குள்ளயா?"

சரி விடு.. நீ வெட்டியா பேசிக்கிட்டே இருப்பே.. நானே சொல்றேன். அப்பாவுக்கு நகராட்சில ஒரு பெரிய கான்டராக்ட் கிடைச்சிருக்கு. அப்பா எவ்வளவு நாளா எதிர்பார்த்துக்கிட்டிருக்கற கான்டராக்ட் தெரியுமா?"

"அடடே.. கங்கிராஜூலேஷன்ஸ்.." எழுந்து வர முயன்றவனை " ஹல்லோ ஸ்டாப் ! நோ ஓவர்டேக்கிங். "கையமர்த்தி நிறுத்தினாள்.

" அப்புறம் இன்னொரு விஷயம்ல..."

"சொல்லு..."...

"அப்பா என் கைல இந்த வாட்சப் பார்த்துட்டு ஏது இது என்று கேட்டார். நான் நீ கொடுத்தாய் என்று சொன்னேன். கொஞ்ச நேரம் அவர் ஒன்றும் பேசவில்லை. அப்புறம் 'ஓ... அவனா.. நல்ல பையன்'னார். ஆச்சர்யம் ப்ளஸ் சந்தோஷமாயிடுச்சு எனக்கு"

"பார்றா... அவருக்குக் கூட தெரிஞ்சிருக்கு நான் நல்ல பையன்னு.. சரி என் விஷயம் என்னன்னா நம்ம ராமசாமி கவுன்சிலர் இருக்காரு இல்ல..  அவர் எம் எல் ஏவுக்கு நிக்கப் போறாராம்.. அம்மா அவரைப் போய் நாளை பாருன்னு என்னைச் சொல்லி இருக்கா... நீயும் வர்றியா?”

(தொடரும்) 

33 கருத்துகள்:

  1. தொடர்கதை யார் எழுதுவது என்று போடத் தயக்கமா?

    தொடராக இருந்தாலும் படித்துப் பார்த்தேன். இந்த மாதிரி எழுத்து நடைக்கு மனதிலாவது காதல் நடை இருக்கவேண்டும். ரசித்துப் படித்தேன்.

    இனி வரும் வாரங்களிலும் அதே முகத்தை படம் கொண்டுவருபவரால் மெயின்டெய்ன் செய்ய முடியுமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கும் அதே கவலை! (ஸ்ரீராம் இந்த ஸ்கை யாரு?)
      நம் ப்ளாக் பதிவுகளில் புனைபெயரில் கருத்து
      இடுபவரா?

      நீக்கு
    2. ஐ..  நீங்கள் போஸ்ட் பண்ணிட்டு என்னைக் கேக்கறேளே..  இது நியாயமாமாமாமாமாமா...

      நீக்கு
    3. எனக்கு நீங்க அனுப்பிய கதை மட்டும்தான்
      படம் சேர்ப்பதற்காக ஸ்கை என்ற பெயரில்
      வந்தது. கேட்டுக் கொண்டபடி படம் சேர்த்து
      பப்ளிஷ் செய்தேன். அவ்வளவுதான்.

      நீக்கு
    4. நெல்லை, நீங்க வேற..... இரண்டு ஆசிரியர்கள் எழுதினால் எப்படி நீங்கள் இதை எதிர்பார்க்க முடியும்!!!! ஒரு வேளை எபி ஆசிரியர்கள் எல்லாருமே கூட இருக்கலாம்! என்பது என் அனுமானம்.

      ஆனால் இன்று ஸ்ரீராம் பளிச்!

      கீதா

      நீக்கு
    5. இன்னொன்று - ஒன்றிரண்டுபேர் சேர்ந்து எழுதினாலும் கூட அதைச் சட்டென்று கண்டுபிடிக்க முடியாத அளவு கொண்டு போகவும் முடியும்.

      கீதா

      நீக்கு
    6. இது நல்ல யோசனை. அடுத்த பகுதி நீங்க
      எழுதப் போகிறீர்களா?

      நீக்கு
    7. பில்டிங்அவுட்லைன் இருந்தால்தான் இருவர் எழுத முடியும். அப்படி இல்லாமல், ஆளாளுக்கு தங்கள் கற்பனைத் திறனைக் காட்ட ஆரம்பித்தால், பாவாடை தைப்போம் என ஆரம்பித்து சுடிதாராகவோ இல்லை கைலியாகவோ ஆகிவிட வாய்ப்பு இருக்கு.

      நீக்கு
    8. எனக்கு நீங்க அனுப்பிய கதை மட்டும்தான்
      படம் சேர்ப்பதற்காக ஸ்கை என்ற பெயரில்
      வந்தது. கேட்டுக் கொண்டபடி படம் சேர்த்து
      பப்ளிஷ் செய்தேன். அவ்வளவுதான்.//

      கௌ அண்ணா ஹாஹாஹாஹா பப்ளிக்காகத் தெரியும் ரகசியம்!!!! ஹிஹிஹி

      கீதா

      நீக்கு
    9. நான் அனுப்பினேனா?  என்னுடைய மெயில் ஐடி ஹேக் ஆகிவிட்டதா? 

      ஆனால் பாவம் எழுதியவர்.  அவர் பெயர் சொல்ல வேண்டாம் என்றாரா தெரியவில்லை.  அனாவசியயமாக நமக்கு கெட்டபேர்..  ச்சே...   பாராட்டு..  இதெல்லாம் அவருக்கு சேர வேண்டியது!

      நீக்கு
  2. தொடர்கதையின் முதல் வாரத்தில் இப்படி நடக்குமோ அப்படி நடக்குமோ என எழுதி கதாசிரியரைச் சங்கடத்தில் ஆழ்த்த விரும்பவில்லை. ஆனால் இளமையான தொடராகச் செல்கிறது.

    அப்பாக்கள் இடையிலோ (அதாவது எம்எல்ஏக்கு நிற்கும் வேண்டப்பட்டவர், கான்டிராக்ட் கிடைத்தவர்) சிக்கல் வராமல் இருந்தால் சரிதான்.

    காதலிப்பதற்கும் ஒரு மென்டாலிட்டி, சாகச உணர்வு இருக்கணும்னு நினைக்கிறேன். சிலருக்கு அந்த உணர்வை வெளிப்படுத்தும், அதைத் தொடரும் இயல்பு இருக்காதோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆனால் நான் அப்படி விடுவதாக இல்லை.

      நீக்கு
    2. காதலில் அப்பாக்கள் அல்லது மற்றவர்கள்
      தலையிடுவதை எதிர்த்து நான் போராடுவேன்.
      ஆமாம். சொல்லிப்புட்டேன்..

      நீக்கு
    3. நெருப்பு சுடும், ஆற்று வெள்ளம் ஆபத்து என்று அனுபவஸ்தர்கள் சொல்லுவதைக் கேட்கமாட்டேன். அதில் பட்டுத்தான் (அகப்பட்டு, கஷ்டப்பட்டு, வேதனைப்பட்டு) புரிந்துகொள்வேன் என்பது கௌதமன் சார் கட்சி போலிருக்கிறது.

      நீக்கு
    4. அப்பாக்கள் இடையிலோ (அதாவது எம்எல்ஏக்கு நிற்கும் வேண்டப்பட்டவர், கான்டிராக்ட் கிடைத்தவர்) சிக்கல் வராமல் இருந்தால் சரிதான்.//

      யெஸ், நெல்லை. அது போல அந்தக் கோபி கேரக்டரும் என்னவோ சொல்லுது. பார்ப்போம்...

      கீதா

      நீக்கு
    5. பாவம் ராஜாவும் சாந்தியும்....  தன்னைப் பற்றி இப்படி எல்லாம் ஹேஷ்யங்கள் ஓடுகிறது என்று தெரியாமல் லவ்விக்கொண்டிருக்கிறார்கள்!

      நீக்கு
  3. ஸ்கை என்ற புனைபெயரில் எழுதுபவரின் எழுத்தில் கொ ஞ்சம் ஸ்ரீராமின் டச் தெரிகிறது. அவர் முன்பு தொடரும் எழுதியிருக்கிறார் என்பதையும் இங்கு குறிப்பிட விரும்புகிறேன்!!!!!!!

    இன்னும் முழுசும் வாசிச்சு முடிக்கலை. பின்னர் வருகிறேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாராயணா..  நாராயணா...   என்ன இப்படி கோத்து விடறேள்..  என்னை எதுக்கு சொல்றேள்?  நேக்கு ஒன்னும் தெரியாது கேட்டேளா?

      நீக்கு
    2. இளமை துள்ளல் உள்ள கதையை ஸ்ரீராம் எழுத
      வாய்ப்பு இல்லை என்று எனக்குத் தோன்றவில்லை.
      ஆனாலும் .. எந்தப் புற்றில் எந்தப் பாம்பு இருக்குமோ

      நீக்கு
    3. ஹாஹாஹாஹா ராமா ராமா!!! கோர்த்துவிடவில்லை, ராமா! என் மனதில் பட்டதைச் சொன்னேன் ராமா!!!!

      கீதா

      நீக்கு
    4. ஸ்கை - ஸ்கை என்று ஏன் பெயர் வைத்துக் கொண்டார்? ஸ்கை என்றால் வானம், ஆகாயம் என்று சொல்லலாம். அல்லது அங்கே இருக்கும் நட்சத்திரம், நிலவு தாரகை மேகம், என்றெல்லாம் நினைக்கத் தோன்றுகிறது. இதை எல்லாம் வைத்துக் கொண்டு அவர் பெயரை யூகிக்க முடியுமா என்று பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

      நீக்கு
    5. So you mean it could be anything under the sky?

      நீக்கு
  4. ​மெகா சீரியல் மாதிரி இருக்கிறது. ஒரு நாளைக்கு ஒரு வரி கதை, பாக்கி விவரணம் என்று செல்வதால் கொஞ்சம் போர் அடிக்கவும் செய்கிறது. ஆனாலும் முக்கிய கரு ஏதேனும் உதிரி வரிகளில் இருக்கும் என்ற எதிர்பார்ப்பில் முழு கதையையும் வரி வாரியாக வாசிக்க வேண்டி வந்தது. கௌதமன் சார் தான் இது மாதிரி தொடர் கதைகளில் எக்ஸ்பர்ட். அவராக இருக்குமோ? எதனை வாரம் என்று குறிப்பிடவில்லையே!

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. JKC Sir... நேற்று நீங்கள் விரோதமா....."    ச்சே...   விரதமா?

      நீக்கு
    2. ​எனக்கு மணத்தக்காளி வற்றலோ, வேப்பம்பூ, இரண்டும் பிடிக்காது. அதனால் சாப்பிட வரவில்லை.
      ps : இரண்டாவது மகன் விசா ஸ்டாம்பிக்கிற்கு வேண்டி குடும்பத்துடன் வந்திருக்கிறான். அதனால் வழக்கமான டைம் டேபிள் மாறி விட்டது,

      Jayakumar

      நீக்கு
    3. "பார்த்து பார்த்து கண்கள் பூத்திருந்தேன் 
      நீர் வருவீரென."..

      நீக்கு
  5. ஸ்ரீராம் தான். இல்லை என்றாலும் பரவாயில்லை. நான் நினைப்பது தவறாக இருந்தாலும் பரவாயில்லை. ஆனால், ஸ்ரீராம்தான் எனக்குப் பளிச்சென்று தெரிகிறார்.

    //" அவர்கள் இருவரும் அதற்குப் பின் சந்தோஷமாக நிம்மதியாக வாழத் தொடங்கினார்கள்" //

    இதைக் குறிப்பிட்டுச் சொல்வதிலேயே தெரிகிறது. இரண்டாவது, இந்த முடிவில் மறைமுகமான ஒன்று தொக்கி நிற்கிறது. எங்கு நிம்மதியாக வாழத் தொடங்கினார்கள் என்பது!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. யார் தங்கள் காதல் பிரிந்ததற்குக் காரணம் தெரிந்து, அதற்குப்பின் இருவரும் சந்தோஷமாக வாழத் தொடங்கினார்கள்.

      காதலில் இருந்த ஆர்வம், சந்தோஷம், திருமணமான இந்த இரண்டு வருடங்களில் ஏன் இல்லாமல் போய்விட்டது, அதே ஆர்வத்தை எப்படி வாழ்வில் தொடரவேண்டும் என்ற தெளிதல், பிரிந்திருந்த இந்த ஆறு மாத்த்தில் தெரிந்து, அதற்குப்பின்.... தொடங்கினார்கள்

      என்று பலவிதமான முடிவுகள்இந்தக் கதைக்குப் பொருந்துமே.

      நீக்கு
    2. எங்கு நிம்மதியாக வாழத் தொடங்கினார்கள் என்பது!!!/// கடைசியில் 'உட்பட' என்று எழுதியிருந்தேன் அது விட்டுப் போச்சு காப்பி பேஸ்ட் பண்ணுறப்ப!!!

      தொழிலதிபர்கள் குடும்பம் இருவருமே. தொழிலில் எவ்வளவு அரசியல் தலையீடு இருக்கும் என்பதும் நமக்குத் தெரியுமே. அப்படி அரசியல் உள்ளில் என்றால் காதல் தள்ளாட வாய்ப்புண்டு. அல்லது திருமணத்திற்குப் பின் தள்ளாடும் வாய்ப்பும் உண்டு. ஆனால் இங்கு எனக்குத் தோன்றுவது இருவருமே அதில் சிக்கித் தவிப்பதும் நடக்கலாம் என்று.

      கீதா

      நீக்கு
  6. ரசித்து வாசித்தேன், ஸ்ரீராம், அண்ட் கௌ அண்ணா. எழுத்தில் ஸ்ரீராம் தெரிவதால் ஸ்ரீராம், போஸ்ட் பண்ணியது கௌ அண்ணா என்பதால் கௌ அண்ணா என்பதையும் இங்கு சொல்லிக் கொள்கிறேன்!!!!!!

    அரசியல் வாசனையும் கொஞ்சம் கலந்திருக்கும் ஒரு காதல் தொடர் என்று தெரிகிறது.

    எனவே அடுத்த அத்தியாயத்தில் யார் வரப் போகிறார்கள் என்பதைப் பார்க்க வேண்டும்!!!!! அதாவது அந்த 'யார்' என்பது கதாபாத்திரம் அல்ல! என்பதையும் ஆசிரியர்கள் இருவரும் நோட் செய்யவும்!!!!

    ஆரம்பம் அட்டகாசம்!

    கீதா

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!