9.11.25

நாங்கள் தரிசனம் செய்த கோயில்கள் - 31 :: நெல்லைத்தமிழன்.

 

 தஞ்சை பெருவுடையார் கோயில்

இராஜராஜ சோழன் எவ்வளவுக்கு எவ்வளவு தஞ்சை பெருவுடையார் கோயிலை அலங்கரிக்க முடியுமோ, சிறப்பாக வடிவமைக்க முடியுமோ அந்த அளவு கருத்துடன், நிறையச் செலவழித்து இதனை உருவாக்கியிருக்கிறான். சிற்பங்களுக்காக இவ்வளவு மெனெக்கிட்டவன், ஓவியங்களில் கவனம் செலுத்தவில்லையா இல்லை அந்தக் காலகட்டத்தில் சிறந்த ஓவியர்கள் இல்லையா? 

ஓவியம் இல்லாமல் சிற்பங்கள் இல்லை. அந்தக் காலத்தில் வண்ணங்களை உபயோகித்து ஓவியங்கள் தீட்டும் திறமை இருந்தது.  எல்லாம் இயற்கை வண்ணங்கள். அவை எப்படி காலாகாலத்திற்கும் நிலைத்துநிற்க முடியும்? 

முதலில் திருச்சுற்றில் (கருவறையைச் சுற்றி இருக்கும் சிறிய பாதை) ஓவியங்கள் இருப்பது 1900களில் தெரியவந்த து. அது மிக க் குறுகிய பாதை. பொதுமக்களுக்கு அனுமதி இல்லாத பகுதி. 1930களில் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் பேராசிரியராக இருந்த எஸ்.கே கோவிந்தசாமி அவர்கள் பார்வையிட்டபோது, நாயக்கர் கால ஓவியங்களுக்குக் கீழே சோழர் கால ஓவியங்கள் இருக்கின்றன என்று கண்டுபிடித்தார். அதாவது சோழர் கால ஓவியங்களுக்கு மேலே நாயக்கர் கால ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன என்று. பிறகு அறிவியல் பூர்வமாக நாயக்கர் கால ஓவியங்கள் பிரித்தெடுக்கப்பட்டு, அதன் பின்னே இருந்த சோழர் கால ஓவியங்கள் வெளிப்படுத்தப்பட்டன. வேதியியல் முறையில் இவற்றைப் பாதுகாக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இப்போதும் திருச்சுற்றுப் பகுதி வெளிச்சமற்ற இடம்தான்.

தஞ்சைக் கோயிலைப் பற்றி ஒரு தொடர் எழுதும்போது ஓவியங்களையும் விட்டுவிடக்கூடாது என்பதற்காக இந்தப் பகுதியை எழுதுகிறேன். நான் நேரில் இந்த ஓவியங்களைப் பார்க்கவில்லை. சில பல புத்தகங்களில் பார்த்ததை வைத்து அதில் இருக்கும் சில ஓவியங்களை இங்கு பகிர்ந்து (அப்போதுதான் சொல்ல வரும் விஷயம் பிடிபடும் என்பதற்காக) சோழர் கால ஓவிய மாண்பை எழுத முயல்கிறேன்.

தஞ்சை பெருவுடையார் கோயில் வெளித் திருச்சுற்றில் (இராஜராஜ சோழன் காலத்து நந்தியை வைத்திருக்கும் இடம்.. கோயிலின் பின்னால் உள்ள திருச்சுற்றில் ஏகப்பட்ட சிவலிங்கங்களை இப்போதும் காணலாம்) சிவலிங்கங்களின் பின்புறத்தில் சுவற்றில் நாயக்கர் கால ஓவியங்கள் உள்ளன. நான் அவற்றைப் படங்களெடுத்த நினைவு இல்லை.  ஆனால் கருவறையின் திருச்சுற்றில்தான் சோழர் கால ஓவியங்கள் உள்ளன. நாயக்கர் காலத்தில் அதன் மீது ஓவியங்கள் தீட்டப்பெற்றுள்ளன. அப்போதே ஓவியங்கள் மங்கலாக இருந்த தால் அதன் மீது புதிய ஓவியங்கள் தீட்டப்பெற்றனவா இல்லை வேறு காரணங்களா என்பது தெரியாது.

இதை எழுதிக்கொண்டிருக்கும்போது, பலர் காசு சம்பாதிக்கவும் பரபரப்பை உண்டாக்குவதற்கும் மனம் போன போக்கில் யூடியூபில் காணொளிகள் வெளியிடுகின்றனர். இராஜராஜ சோழன் தஞ்சைப் பெரிய கோயிலின் இரண்டாம் தளத்தில் இருந்தபோது கீழே விழுந்து இறந்தான், ராஜேந்திர சோழன் சதியால் கொல்லப்பட்டான் என்றெல்லாம் இஷ்டத்துக்கு எழுதுகிறார்கள்.  மதுராந்தக சோழன் (கண்டராதித்தர் மகன்) தான் அரசாட்சிக்கு வருவதற்காக, சிலருடன் சேர்ந்து சதி செய்து ஆதித்த கரிகாலனைக் கொன்றான் என்றும் எந்தவித ஆதாரமும் இல்லாமல் எழுதுகிறார்கள். இன்னொருவர், திராவிட தமிழ்ச் சிந்தனையாளர் என்ற போர்வையில், தஞ்சைக் கோயிலை அடிமைகளை வைத்துக் கட்டினார் இராஜராஜ சோழன் என்கிறார்.  இவரே அடுத்த ஜென்மத்தில் பிறந்து, தமிழக மக்களுக்கு தீயின் உபயோகம் தெரியாது, தீக்குச்சிகளையே சிறையில் இருக்கும் குற்றவாளிகளைக் கொண்டே தயாரித்தார்கள் என்றும் சொல்வாராயிருக்கும்.

எத்தனையோ நாடுகள் மீது படையெடுக்கும்போது, அவற்றை வென்று செல்வத்தையும், மகளிரையும், மற்றும் பலரையும் போர்க்கைதிகளாகக் கொண்டுவருவது வழக்கம்தான். செல்வத்தைச் சுமந்து வர போரில் கைப்பற்றப்பட்ட யானைகள், குதிரைகள், தேர்கள் போன்றவற்றையும் கவர்ந்துவருவார்கள். இப்படி போர்க்கைதிகளாக வருபவர்களில் தேர்ந்தவர்களுக்கு படையில் பணியும், மற்றவர்களுக்கு கோவில் மற்றும் பல உடலுழைப்பு தேவையான உருவாக்கங்களில் உபயோகப்படுத்திக்-கொள்வதும் நடப்பது சர்வ சாதாரணம். முஸ்லீம் அரசர்களின் வரலாறுகளைப் படித்தாலே தெரியும், எதிரி நாட்டை வென்றபிறகு அந்த நாட்டுப்படையில் வீர தீரச் செயல்கள் புரிந்தவர்களை தங்கள் படையுடன் சேர்த்துக்கொண்டு, நல்ல பதவிகள் கொடுத்திருக்கிறார்கள் என்று.

என்னிடம் ஒருவர் சொன்னார் (விஷயங்கள் அறிந்தவர்). தஞ்சை பெரிய கோயிலில் ஏதோ தவறு நேர்ந்துவிட்டது. அதனால்தான் கருவூர்த்தேவர் அதற்குப் பரிகாரமாக இராஜேந்திர சோழனை வேறு ஒரு கோயில் கட்டச் சொன்னார், இது குலத்திற்கு இருக்கும் சாபத்தையும் போக்கும் என்றாராம். அதனால்தான் இராஜேந்திர சோழன் புதிய இடத்தில் காட்டைத் திருத்தி, ஏரி வெட்டி, கங்கைகொண்ட சோழீச்வரம் என்ற கோயிலை அமைத்து, அதைச் சுற்றி புதிய தலைநகரையே உருவாக்கினான் என்று.  (கருவூர்த்தேவர், முதலில் கங்கைகொண்ட சோழீச்வரம் கோயிலையே பாடியிருக்கிறார். பிறகுதான் இராஜராஜேச்வரத்தைப் பாடியிருக்கிறார் தன் திருமுறையில்). எனக்குத் தோன்றியது, வடபுலத்தை வெற்றிகொண்டபிறகு, வென்ற மன்னர்கள் முக்கியஸ்தர்கள் தலையில் கங்கை நீரைச் சுமந்துவரச் செய்த இராஜேந்திர சோழன், போரில் பிடித்துவரப்பட்ட ஆயிரக்கணக்கானவர்களைக் கொண்டு, அவர்களுக்கும் வேலை கொடுப்பதற்காக கங்கைகொண்ட சோழபுரத்தையே அமைத்திருப்பானோ? இல்லையென்றால் அப்போதுதான் கட்டிமுடிக்கப்பட்டிருந்த தஞ்சை பெரியகோயிலை விட்டுவிட்டு, ஏன் புதிய கோயில் சமைக்கப்புக வேண்டும்? அவனுக்குப் பிறகு அவனது மகன்களே ஒருவர் பின் ஒருவராக அடுத்த ஐம்பது ஆண்டுகளில் அரசராக இருந்தனர். அதனால் அவர்களும் கங்கைகொண்ட சோழபுரத்தையே தலைநகரமாக க் கொண்டு அரசாண்டதில் அர்த்தம் இருக்கிறது. ஆனால் சாளுக்கிய சோழர்களும் அதனையே தலைநகரமாகக் கொண்டு ஆண்டனர். வரலாற்றில் யோசிக்கவைக்கும் பகுதி இது. 

சரி நாம் சோழர் கால ஓவியத்திற்கு வருவோம். இந்த ஓவியங்கள் சுதை ஓவிய வகையைச் சார்ந்தவை. அதாவது திருச்சுற்றின் சுவர்களில் சுண்ணாம்புக் கலவையைப் பூசி, அதன் ஈரம் காய்வதற்குள் ஓவியத்தைத் தீட்டியிருக்கிறார்கள். இந்த முறையில் சுண்ணாம்பு ஈரம் காயும்போது ஓவியம் நன்கு பதிந்திருக்கும். பலவருடங்கள் ஆனாலும் அழியாமல் இருக்கும். இதற்காக கருங்கல்லின் மீது மணலும் சுண்ணாம்பும் கலந்த கலவையைப் பூசி, அதன் மீது வெறும் சுண்ணாம்பைப் பூசி ஈரம் உலர்வதற்குள் ஓவியத்தைத் தீட்டியிருக்கின்றனர்.  முதலிலேயே திட்டமிட்டுக்கொண்டு பல ஓவியர்களும் சேர்ந்து இதனைச் செய்திருக்கவேண்டும். ஆமாம்… ஏன் பலரும் பொதுவாகப் போய்வராத திருச்சுற்றில் இதனைத் தீட்டவேண்டும்? காரணம் யாருக்குத் தெரியும்?

தஞ்சை பெரிய கோயிலில் திருச்சுற்றில் உள்ள சோழர் கால ஓவியங்களைப் படியெடுத்து, அதைவிட முக்கியமாக அந்த ஓவியத்தின் அவுட்லைன் கொண்டு இந்த ஓவியத்தில் இப்படி வரையப்பட்டுள்ளது என்று ஓவியம் எழுதி, பிறகு அதில் யார் யார் இருக்கிறார்கள், என்ன செய்தியை அந்த ஓவியம் சொல்கிறது என்று தஞ்சை தமிழ்ப்பல்கலைக் கழகம், ‘தஞ்சை பெரியகோயில் சோழர் கால ஓவியங்கள்’ என்றொரு புத்தகத்தை வெளியிட்டிருக்கிறது (2010ம் ஆண்டு). மிக அருமையான புத்தகம் அது. அவற்றிலிருந்து ஓவியத்தின் ஒரு பகுதியை மாத்திரம் எடுத்து இங்கு பகிர்கிறேன். முழு ஓவியம் மற்றும் அதுபற்றிய பல்வேறு சுவையான செய்திகளுக்கு அந்தப் புத்தகத்தை வாங்கிப் பார்க்கலாம். மிகப் பிரபலமான குடவாயில் பாலசுப்ரமணியம் அவர்கள் பல்வேறு கோயில்களைப் பற்றி, அவற்றில் உள்ள சிற்பங்கள் பற்றி, பல வரலாற்றுத்தகவல்களோடு நிறைய புத்தகங்கள் எழுதியிருக்கிறார். இத்தகையவர்களால்தான் நம் வரலாற்றுப் பெருமை அடுத்த தலைமுறைக்குச் செல்கிறது. (இதில் நிறைய பெயர்களைக் குறிப்பிடவேண்டும். அதை இன்னொரு சந்தர்ப்பத்தில்தான் எழுதவேண்டும்) 

இங்கு நான் ஓவியங்களை முழுமையாகக் கொடுக்கவில்லை. எடுத்துக்கொண்ட ஒரு சில ஓவியங்களையும் பகுதியாகத் தந்துள்ளே. இதன் காரணம், ஆர்வம் உள்ளவர்கள் அந்தப் புத்தகத்தை தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்திலிருந்து வாங்கிக்கொள்ளவேண்டும் என்பதற்காக. அவர்கள் மிகப் பெரும் முயற்சி எடுத்து ஓவியங்களைப் புகைப்படமாக எடுத்து பிறகு கோட்டோவியமாக வரைந்து, அந்த ஓவியத்தில் உள்ளவை எதனைக் குறிக்கிறது என்பதை ஆராய்ந்து அந்தப் புத்தகத்தில் தெரிவித்துள்ளார்கள் (இதில் தவறுகள் இருக்க க் கூடும், காரணம் அனுமானங்களும் இருப்பதால்) ஆனால் அவர்களின் முயற்சி வியக்கத்தக்கது.




இந்த ஓவியத்தைப் பார்த்து அதில் என்ன இருக்கிறது, எதைக் குறிக்கிறது என்பதைப் புரிந்துகொள்வது கடினம். அதற்காக இந்த ஓவியத்தைக் கோட்டோவியமாக வரைந்து பிறகு அது எதைக் குறிக்கிறது என்று ஆராய்ந்துள்ளனர். அதனைக் கீழே கொடுத்துள்ளேன்.

தொந்தி பெருத்த முனிவர் ஒருவர் (ஆசிரியர்) தன் ஐந்து மாணவர்களுக்கு படிப்புச் சொல்லிக்கொடுக்கிறார். அதில் இருவர் பெண்கள். அவரது இட து புறம் இருப்பவர்கள் அரசகுலத்தினர் என்பதால் ஆடை ஆபரணங்களோடு இருக்கின்றனர். இந்த முனிவரை அகத்தியர் என்றும் சொல்வர்.

இதன் மேற்புறம் உள்ள ஓவியத்தில் ஆலமரம் காட்டப்பட்டுள்ளதால், இராஜராஜன் தில்லைவனத்தில் பட்டம் ஏற்றுக்கொண்ட நிகழ்ச்சி என்றும், இல்லை இது தட்சிணாமூர்த்தியின் உருவம் என்றும் சொல்வர்.

நமக்கே இது இளைய இராஜராஜன் (அருண்மொழித்தேவன்) என்று தோன்றுகிறது அல்லவா? அல்லது பெண்ணின் நளினங்கள் இருப்பதால் பெண்ணாக இருக்க வாய்ப்பு இருக்கிறதோ?

பைரவர் தன் வாகனமான நாயுடன் காட்சி தருகிறார். அருகில் அடியார் ஒருவர்.

எல்லா ஓவியங்களுமே முக்கியத்துவம் வாய்ந்தவை என்றாலும் மேலே உள்ள ஓவியம் தனிச்சிறப்பு பெற்றது. இதில் தில்லையம்பலத்தில் உள்ள ஆடல்வல்லானின் உருவம் இருக்கிறது. இந்தக் கோயில் கேரள பாணி கூரைகளுடன் ஓவியத்தில் உள்ளது. நடராஜப்பெருமானை வணங்கிய நிலையில் இருப்பவர் இராஜராஜ சோழன் என்றும், அவனுடன் அவனுடைய தேவியர் மூவர் வித வித வண்ணச் சீலைகளுடன், நல்ல அணிகலன்களுடன் கைகூப்பிய நிலையில் இருப்பதாக ஓவியம் அமைந்துள்ளது. இதே ஓவியத்தில், சிறிது அணிகலன்கள் குறைவாக நிறைய பெண்களும், அரச குலத்தவர்களும் காட்டப்பெற்றுள்ளனர். இதே ஓவியத்தில் அரசு அலுவலர்களும் அடியார்களும் நிற்கிறார்கள் என்று ஓவியத்தை ஆராய்ச்சி செய்து கண்டுபிடித்துச் சொல்லியிருக்கிறார்கள்.


இராஜராஜன் மேல்சட்டை அணியாமல் இருக்கிறாரே என்று யோசிக்க வேண்டாம். கடவுள் சன்னிதியில் சட்டையில்லாமல் இருப்பதும் நம் மரபுதான்.

இந்த ஓவியத்தை வெறும் கண் கொண்டு நோக்கினால் என்ன வரைந்திருக்கிறார்கள், எதை வரைந்திருக்கிறார்கள் என்பது புரியாது.  அடுத்து வரும் கோட்டோவியத்தைப் பார்ப்போம்.

இதைப் பார்த்தவுடனேயே ‘பொன்னியின் செல்வன்’ நாவலில் வரையப்பட்டிருந்த ஒரு ஓவியம் நினைவுக்கு வருகிறது என்றால் நீங்கள் பொன்னியின் செல்வன் நாவலை ஓவியத்துடன் கூர்ந்து படித்திருக்கிறீர்கள் என்று பொருள். 

ஆனால் இந்த ஓவியம் சொல்லும் செய்தி, சுந்தரர், ஐராவதம் யானையின் மீதேறி கயிலாயம் செல்கிறார். யானையின் முன், சுந்தரரின் நண்பரான சேரமான் பெருமான் குதிரையில் அமர்ந்திருக்கிறார். யானை மிக வேகமாகச் செல்ல முயல்கிறது என்பதை அதன் முன்கால் மடங்கி இருப்பதை வைத்து ஓவிய்ர உணர்த்துகிறார். குதிரையும் மிக வேகமாகச் செல்கிறது. அதன் முன்னங்கால்கள் மடங்கியிருக்கின்றன. யானையின் தந்தம் தங்கத்தினால் கவசம் சார்த்தப்பட்டு இருக்கிறது, அதன் முனை மூன்றாகப் பிரிந்திருக்கிறது. யானையின் வாலில் தொங்கிக்கொண்டு இருவர் செல்கின்றனர். கயிலாயம் என்பதைக் குறிக்க மேகக் கூட்டங்கள் சுருள் சுருளாக வரையப்பட்டிருக்கின்றன. இடையில் நீர்வாழ் உயிரினங்களும் காட்டப்பட்டிருக்கிறது. 

முழு ஓவியத்தையும் மிக அழகாக interpret செய்து அந்தப் புத்தகத்தில் விளக்கியிருக்கிறார்கள். கூடவே சுந்தரர் வெள்ளானைச் சருக்கத்துப் படலத்தில் எழுதிய பாசுரத்துடன்.

தான் எனை முன்படைத்தான் அது அறிந்து தன் பொன்னடிக்கே

நான் என பாடல் அந்தோ நாயினேனைப் பொருட்படுத்து

வான் எனை வந்து எதிர் கொள்ள மத்தயானை அருள்புரிந்து

ஊன் உயிர் வேறு செய்தான் நொடித்தான்மலை உத்தமனே  

இந்தக் காட்சி இந்த ஓவியத்தில் தெரிகிறது. கயிலாயத்தில் தேவ மகளிர் மற்றும் ஆடவர்கள் இவரை வரவேற்கும் விதமாக வந்துள்ளனர். கையில் மலர்களோடு, வாத்தியக் கருவிகளோடு, மேளம், சங்கொலியோடு என்று அனைத்தையும் ஓவியத்தில் கொண்டுவந்திருக்கின்றனர்.

இது மாதிரி வித விதமான ஓவியங்கள் திருச்சுற்று முழுதும் நிறைந்திருக்கின்றன. அவற்றில் 8 ஓவியங்களை மாத்திரம், மேலே உள்ள நாயக்கர் கால ஓவியங்களைப் பிரித்து ஆவணப்படுத்தியிருக்கின்றனர். இந்த மாதிரி சுவரோவியங்களை நான் பல கோயில்களில் பார்த்துள்ளேன் (வாய்ப்பு கிடைக்கும்போது பகிர்கிறேன்). பலவும் ஐந்து நூற்றாண்டுகளுக்கு முந்தையவை. ஆனால் சோழர் கால ஓவியங்கள் பெரிய கோயில் திருச்சுற்றில்தான் இருக்கின்றன.

கருவறைத் திருச்சுற்று மேல்மாடியில் முதல் தளச் சுவர்களில் கர்ணச் சிற்பங்கள் (ஆடல் புடைப்புச் சிற்பங்கள்)

ஒவ்வொரு புடைப்புச் சிற்பமும் ஒவ்வொரு கரணத்தைக் குறிப்பிடுவனவாக உள்ளன.

இதெல்லாம் எல்லோரும் காண இயலாது. சிறப்பு அனுமதி இருந்தால் பார்க்கலாம்.


ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் முகப்பில் உள்ள இந்தப் புடைப்புச் சிற்பங்கள் இவ்வளவு தெளிவாகவும் அழகாகவும் இருக்கிறதே, அப்படியென்றால் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் எப்படி இருந்திருக்கும்?


துவாரபாலகர்கள், நுழைவாயில் கோபுரங்கள் பார்க்கவேண்டும் என்றால் கழுத்து சுளுக்கிக்கொள்ளும். அவ்வளவு பிரம்மாண்டமாகவும் அழகாகவும் இருக்கின்றன.

சிற்பங்கள் சொல்லும் கதையை நீங்கள்தாம் கூர்ந்து கவனித்துப் புரிந்துகொள்ளவேண்டும்.

இனி அடுத்தவாரம்தான்.

(தொடரும்) 

46 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. காலை வணக்கம் ஜீவி சார். இன்று மதுரையிலிருந்து புறப்பட்டு திருத்தண்கால், ஸ்ரீவில்லிபுத்தூர் தரிசனங்களுக்குப் பிறகு திருநெல்வேலி அடைவோம்

      நீக்கு
  2. இன்றைய பதிவையும் அங்கங்கே தெளித்திருக்கும் கருத்துக்களையும் மிகவும் ரசித்தேன், நெல்லை. அங்கே இருப்பதை இங்கே பெயர்த்தெடுத்துத் பதித்தது மாதிரியான தஞ்சை தமிழ் பல்கலைக் கழக புத்தகத்து ஓவியங்களை இங்கு பகிர்ந்து கொண்டது அற்புதம். ஒவ்வொரு ஓவியத்தையும் தீர்க்கமாகப் பார்த்து ரசித்தேன். கல்கி அவர்களின் பொன்னியின் செல்வனை ரசனையுடன் கேட்டுத் தெரிந்து கொண்டிருக்கும் என் பேத்தியும் இந்த ஓவியத் திரட்டை பிரமிப்புடன் பார்த்து மிகவும் ரசித்தாள். எபியின் வரலாற்றில் இன்றைய தங்கள் பதிவு மிக முக்கியமான ஒன்றாகக் கருதுகிறேன். தாங்கள் இது விஷயத்தில் எடுத்துக் கொண்ட உழைப்பிற்கும் தங்கள் ஆற்றலுக்கும் வாழ்த்துக்கள். நன்றி, நெல்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜீவி சார். உங்கள் கருத்து எனக்கு மிக்க மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. சிலபல தவறுகள் இருந்தாலும் தொடர் நன்றாக வருவது எனக்கு மகிழ்ச்சி. யாருக்கேனும் இந்தத் தொடர் உபயோகமாக இருக்கும்

      நீக்கு
    2. கல்கி அவர்களின் பொன்னியின் செல்வன் நாவலின் மிகச் சிறப்பாக நான் கருதுவது, அந்த வரலாற்று மாந்தர்களுக்கு வேறு குணாம்சங்களையோ இல்லை வேறு திருப்பங்கள் நிகழ்வுகளோடு யார் எழுதினாலும் அது வாசகர்கள் மனதில் பதியாது. இவர் இப்படித்தான் இருந்தார் இப்படித்தான் நடந்துகொண்டார் இப்படித்தான் வாழ்ந்தார் என கல்வெட்டுபோல நம் மனதில் பதியவைத்துவிட்டார்

      நீக்கு
  3. இராஜேந்திர சோழனின் கனவின் வெற்றியான கங்கை கொண்ட சோழீச்வரம் கோயில் பற்றி ஒரு சரித்திர கதை எழுதி வைத்துள்ளேன், நெல்லை. ஒவ்வொரு தடவை அமெரிக்கா வரும் பொழுதும் எழுதுவதில்
    போன மாதம் எழுதியது இது.. கதையின் பெயர்: தேவ ரகசியம்,
    இராஜேந்திர சோழன் பற்றித் தாங்கள் குறிப்பிட்டிருந்ததை வாசித்ததும் இதைச் சொல்லத் தோன்றியது எனக்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா.. நான் அதைப் படிக்க மிகுந்த ஆவலுடன் இருக்கிறேன். இந்தத் தொடரின் பகுதியாக கங்கை கொண்ட சோழபுரம் கோயில் சிற்பங்களும் மிக விரிவாக வரும்.

      உண்மையைச் சொன்னால் சமீபத்தில் தரிசித்த காஞ்சி கைலாசநாதர் கோயில் என்னை மிகவும் கவர்ந்தது

      நீக்கு
  4. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா ஹரிஹரன் மேடம். ப்ரார்த்தனைக்கு நன்றி

      நீக்கு
  5. அனைவருக்கும் இனிய காலை வணக்கம். தஞ்சை பெரிய கோவில் ஓவியங்கள் குறித்த இந்தப் பதிவு மிகவும் சிறப்பு. பாராட்டுகளும் வாழ்த்துகளும் நெல்லைத் தமிழன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க வெங்கட் நாகராஜ். நலமா? மிக்க நன்றி

      நீக்கு
  6. வணக்கம் சகோதரரே

    இன்றைய பதிவு அருமையானது. தங்களால் தஞ்சை பெரிய கோவிலைப்பற்றி நிறைய அறிந்து கொள்ள முடிகிறது. நாம் பார்க்க இயலாத இடங்களில் அமைந்திருக்கும் சோழர் காலத்து ஓவியங்களைப்பற்றிய செய்திகள் வியப்பைத் தருகின்றன. கண்டெடுத்த ஓவியங்களை வைத்து கோட்டோவியமாக தந்த ஓவியங்களையும் , அதற்கு உங்களின் விளக்கங்களையும் பார்த்து அறிந்து கொண்டேன். நல்ல அலசல். எப்போதும் போல் கோவிலின் படங்களும் நன்றாக உள்ளது.

    ஆயிரம் ஆண்டு கால புடைப்புச் சிற்பங்களின் அழகை ரசித்தேன். எனக்கு மற்றொரு முறை தஞ்சை பெரிய கோவிலுக்குச் சென்று, தாங்கள் இக்கோவிலைப்பற்றி, இதுநாள் வரை விளக்கமளித்திருக்கும் பகுதிகளை சுற்றிப் பார்த்து வர மிகுந்த ஆர்வம் வருகிறது. அதற்கு இறைவன் அழைக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். எல்லாம் அவன் செயல் அல்லவா? அவனன்றி ஒரு அணுவும் அசையாது. பார்க்கலாம்.. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

    நெல்லைப்பயணம் இனிதாக நிறைவேறவும் , தாங்கள் அருள்மிகும் காந்திமதி நெல்லையப்பரை நன்றாக தரிசனம் செய்யவும், இறைவன் அருள் தருமாறு வேண்டிக் கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி கமலா ஹரிஹரன் மேடம். நெல்லையப்பர் காந்திமதி அம்மை பள்ளிகொண்ட பெருமாள் தரிசனம் சிறப்பாக அமையட்டும் என வாழ்த்தியமைக்கு

      நாளை என் பிறந்தநாள் என்பதால் கீழநத்தம் கோயில் அல்லது திருப்புளிங்குடி அல்லது மன்னார்கோயிலைத் திட்டத்தில் சேர்த்துக்கொள்ள அண்ணனிடம் சொல்லியிருக்கிறேன்.

      பதிவு பிடித்திருந்தது கண்டு மகிழ்ந்தேன்

      நீக்கு
  7. பதில்கள்
    1. சரணம் சண்முகா. முந்தாநாள் மதுரை பழமுதிர்ச்சோலை முருகன் தரிசனம் எங்களுக்கு வாய்த்தது

      நீக்கு
  8. நாளை காலை ஒன்பது மணிக்கு மேல் தஞ்சை திவ தேச நரஸிம்ஹ ஸ்வாமி திருக்கோயில் மஹா சம்ப்ரோக்ஷணம்..

    ஓம் ஹரி ஓம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க துரை செல்வராஜு சார். உங்களுக்கு நரசிம்மர் கோயில் சம்ப்ரோக்ஷணத்தில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது கண்டு மகிழ்ந்தேன். நலமுடன் சென்று வருக

      நீக்கு
  9. பதில்கள்
    1. தட்டச்சு தவறுகள் ஒரு பொருட்டல்ல. சொல்லவந்தது புரிந்துவிட்டது

      நீக்கு
  10. /// யானையின் வாலில் தொங்கிக்கொண்டு இருவர் செல்கின்றனர்.///

    அயிராவண யானையின் காவலர்கள்.
    அயிராவண யானை - திருக்கயிலை
    ஐராவத யானை - தேவலோகம். இந்த யானையால் வளர்க்கப்பட்டவளே தேவகுஞ்சரி...

    பதிலளிநீக்கு
  11. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  12. கருவறையைச் சுற்றி இருக்கின்ற பாதையின் பெயர் உள்நாழி...
    சாந்தாரம் என்றும் சொல்கின்றார்கள்..

    திருக்கயிலை மலையில் இப்படி உள்நாழி இருக்கின்றது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சாந்தாரம் எனக் குறிப்பிட மறந்துவிட்டேன். திருக்கயிலாயத்தில் இப்படி இருக்கிறதா? அறியாத தகவல். நன்றி

      நீக்கு
  13. இன்றைய ஓவியப் பதிவு வெகு வெகு சிறப்பு

    பதிலளிநீக்கு
  14. /// சாந்தாரம் எனக் குறிப்பிட மறந்துவிட்டேன். திருக்கயிலாயத்தில் இப்படி இருக்கிறதா? அறியாத தகவல். நன்றி... ///

    ஆம்... படித்திருக்கின்றேன்...

    அதன் வழி திபெத் மக்களுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்.
    மர்மங்கள் தொடர்கின்றன

    சிவ சிவ

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திபெத்திய மக்களின் கயிலாய மலை பற்றிய நம்பிக்கைகளும் பக்தியும் அவர்கள் மேற்கொள்ளும் பரிக்ரமாவும் ரொம்பவே ஆச்சரியம்

      நீக்கு
  15. ​தஞ்சை பெரிய கோயில் சித்திரங்கள் பற்றிய விளக்கம் சிறப்பு. மதுரையில் பொற்றாமரை குளத்தின் சுற்று சுவர்களில் இருந்த சுவரோவியங்கள் அழிக்கப்பட்டது நினைவில் வருகிறது.

    என்றாலும் கவனமாக பல்வேறு படைப்புகளை ஆராய்ந்து எழுதிய ஆராய்ச்சிக் கட்டுரை போற்றற்குரியது.

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜெயகுமார் சார். சுவரோவியங்களை நாம் பாதுகாப்பதில்லை. வரும் பார்வையாளர்களும் தங்கள் மற்றும் காதலி பெயர்களை எழுதிவிடுகிறார்கள். காஞ்சிபுரம் கயிலாதநாதர் கோயிலிலும் சிதைந்த வண்ண ஓவியங்கள் கண்டு மனம் வருத்தமுற்றது

      நீக்கு
  16. ஏதேதோ காரணங்களினால் திருக்கயிலை (திபெத்) சீனாவின் பிடிக்குள் போய் விட்டது...

    மீட்டளிப்பவர் யாரோ!?

    எல்லாம் பஞ்சசீலத்தின் மகிமை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எல்லாவற்றிர்க்கும் நேரம் வரவேண்டும். யாரை நொந்து என்ன பயன்?

      நீக்கு
  17. நெல்லை நீங்க முன்னரும் இப்படி இந்த ஓவியம் இருக்கும் பாதைக்குச் செல்ல முடியாது என்றும் இன்னும் சில சிற்பங்கள் தொல்லியல் துறை ஒரு இடத்தில் வைத்திருக்கு அங்கு அனுமதி இல்லை என்று குறிப்பிட்ட நினைவு ஆனா நீங்க அந்த சிற்பப் பகுதி கூடப் போட்டிருந்தீங்க இல்லையா?

    ஓவியங்கள் பகுதிக்கு ஏன் அனுமதி இல்லையோ?

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கீதா ரங்கன் க்கா. ஓவியப் பகுதிக்கும் அனுமதி இல்லை

      நீக்கு
  18. கருவறையின் திருச்சுற்றில்தான் சோழர் கால ஓவியங்கள் உள்ளன. நாயக்கர் காலத்தில் அதன் மீது ஓவியங்கள் தீட்டப்பெற்றுள்ளன. அப்போதே ஓவியங்கள் மங்கலாக இருந்த தால் அதன் மீது புதிய ஓவியங்கள் தீட்டப்பெற்றனவா இல்லை வேறு காரணங்களா என்பது தெரியாது.//

    நீங்க குறிப்பிட்டதைப் பார்க்கறப்ப எனக்கும் இந்த சந்தேகம் தோன்றியது.

    சில தகவல்களில் இடைச்செருகல் செய்வது போல ஓவியங்களிலும் செய்ய முயற்சியோ என்று.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இருக்கலாம் இல்லை சீர் செய்யும் நுட்பம் இல்லாமல் அதன்மேல் புதிய ஓவியம் தீட்டியிருப்பாங்களோ?

      நீக்கு
  19. யுட்யூப் பத்தி சொல்லாதீங்க நெல்லை. 99% பரபரப்பு மற்றும் வியூஸ் காசு சம்பாதிக்கத்தான். எப்படி மனசாட்சி வருதோ இவங்களுக்கு.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் பார்வையாளர்களுக்காக மனசாட்சி இல்லாமல் பொய்களையும் புனைகதைகளையும் பேசறாங்க

      நீக்கு
  20. அதாவது திருச்சுற்றின் சுவர்களில் சுண்ணாம்புக் கலவையைப் பூசி, அதன் ஈரம் காய்வதற்குள் ஓவியத்தைத் தீட்டியிருக்கிறார்கள்.//

    என்ன டெக்னிக் இல்லையா?

    மாக்கோலம் போட்டு அது உணரும் முன் அதில் கலர் சேர்த்துத் தீட்டுவோம்...
    அப்படித் தோன்றியது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கீதா ரங்கன் க்கா.. மிகப்பெரிய தெக்கினிக்கு இது. ஆச்சரியப்படுத்தும் விஷயம் இது

      நீக்கு
  21. அருமையான பதிவு. வழக்கம் போல தரமான புகைப்படங்கள்...தெளிவான விளக்கங்கள்.
    /எபியின் வரலாற்றில் இன்றைய தங்கள் பதிவு மிக முக்கியமான ஒன்றாகக் கருதுகிறேன். தாங்கள் இது விஷயத்தில் எடுத்துக் கொண்ட உழைப்பிற்கும் தங்கள் ஆற்றலுக்கும் வாழ்த்துக்கள்./
    ஜீவி சாரின் கருத்துக்கு அடியேனின் ஆமென்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க சூர்யா சார். உற்சாகமூட்டும் உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி

      நீக்கு
  22. நண்பர் ஒருவர் அனுப்பிய AI மூலம் தயாரித்த காணொளியைப் பகிர்கிறேன். தஞ்சைக் கோயில் சிற்பங்கள் உயிர் பெற்று ஆடினால் எப்படி இருக்கும் என்று சிந்தித்திருக்கின்றார் நண்பர்.....நெல்லை மிகவும் ரசித்த அந்த த்வாரபாலகர் ஆடினால் எப்படி இருக்கும்? பாருங்கள் காணொளியைக் கீழே!
    https://drive.google.com/file/d/1YCrSAmRHp6PdUHJN5PBu5gys_EmNsjMg/view?usp=drive_link

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி சூர்யா சார். இப்போ ஸ்ரீவில்லிபுத்தூர் தரிசனத்திற்குப் பிறகு திருத்தண்கால் சென்றுகொண்டிருக்கிறோம். இன்று திருநெல்வேலி அடைந்ததும் பார்க்கிறேன். பகிர்வுக்கு நன்றி

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!