22.11.25

இனி வளர்ச்சிப்பாதை... மற்றும் நான் படிச்ச கதை

 

அங்குள்ள மருத்துவர்கள், மேல் சிகிச்சைக்காக, முதியவரை கோவையிலுள்ள அரவிந்த் கண் மருத்துவமனைக்கு உடனடியாக அழைத்து செல்லபரிந்துரைத்தனர். கோழிக்கோட்டிலிருந்து முதியவரை ஏற்றிக் கொண்டு, கோவை நோக்கி ஆம்புலன்ஸ் புறப்பட்டது. இந்த தகவல், அவசர காலத்தில் உதவ தமிழக ஆம்புலன்ஸ் டிரைவர்கள் உருவாக்கியுள்ள, 'எமர்ஜென்சி எஸ்கார்ட்' என்ற வாட்ஸ் ஆப் குழுவில் பகிரப்பட்டது. வாளையாறு வழியாக ஆம்புலன்ஸ் வரும் தகவலை அறிந்த, கோவையை சேர்ந்த ஆம்புலன்ஸ் டிரைவர்கள் சதீஷ், பிரபாத், மணி, மதுரை வீரன், சந்தானம், பூபதிராஜா, சதா ஆகியோர்,கேரள முதியவர் பத்திரமாக மருத்துவமனையை வந்தடைய, உதவுவதென முடிவு செய்தனர். 

நான்கு ஆம்புலன்ஸ் வாகனங்களுடன் வாளையாறிலிருந்து முன்னும், பின்னும் சென்று வழி ஏற்படுத்தி, கேரள ஆம்புலன்ஸ் போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் செல்வதற்கு உதவினர். போக்குவரத்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டு, அவர்களும் போக்குவரத்து நெரிசலை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டனர். 185 கி.மீ. துாரத்தை, இரண்டரை மணி நேரத்தில் கடந்து, முதியவரைகுறித்த நேரத்தில் அரவிந்த் கண் மருத்துவமனையில் சேர்த்தனர். தற்போது அவர் சிகிச்சை பெற்று வருகிறார். எந்த பிரதிபலனும் எதிர்பார்க்காமல், கேரளாவிலிருந்து வந்த ஒரு வயது முதிர்ந்த தொழிலாளிக்கு, ஆம்புலன்ஸ் வாகனங்களால் 'எஸ்கார்ட்' வழங்கி உதவிய, கோவை ஆம்புலன்ஸ் டிரைவர்களை, பலரும் பாராட்டி வருகின்றனர்.

=================================================================================================




அமெரிக்க வரி விதிப்பு காரணமாக, ஏற்றுமதி வர்த்தகம் சுணக்கத்தில் சிக்கியது; அதிலிருந்து மீண்டு வரவும், தொழில் வாய்ப்புகளை தக்கவைக்கவும், மத்திய அரசு புதிய நிதி திட்டங்களையும், சலுகைகளையும் வழங்க வேண்டுமென, ஏற்றுமதியாளர்கள் கோரிக்கை வைத்தனர். அரசு பிரதிநிதிகளும், நேரில் சந்தித்து கோரிக்கையை கேட்டறிந்தனர். இந்நிலையில், மத்திய அமைச்சரவை முடிவின்படி, 45,060 கோடி ரூபாய் மதிப்பிலான, ஏற்றுமதி ஊக்குவிப்பு திட்டம் மற்றும் கடன் உத்தரவாத திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. நிதி ஒதுக்கீட்டுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதால், விரைவில் இத்திட்டம் தொடர்பான வழிகாட்டி அறிவிப்பு வெளியாக உள்ளது. இந்தியாவின் ஏற்றுமதி திறனை மேம்படுத்தி, குறு. சிறு மற்றும் நடுத்தர ஏற்றுமதியாளர்களுக்கு, நிதியுதவி வழங்கும் நோக்குடன் இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையிலும், இந்தியாவின் போட்டித்திறன் இதன்மூலமாக மேம்படும்.  மத்திய அரசு பட்ஜெட்டில், ஏற்றுமதி ஊக்குவிப்பு திட்டம் அறிவிக்கப்பட்டது. அத்திட்டம் தொடர்பான நிதி ஒதுக்கீட்டுக்கு, மத்திய அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அதன்படி, கடன் உத்தரவாத திட்டமும், ஏற்றுமதி ஊக்குவிப்பு திட்டமும் செயல்படுத்தப்பட உள்ளது. இவ்விரு திட்டங்களால், திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியாளர் அதிகம் பயன்பெறுவர். இருப்பினும், இத்திட்டம் தொடர்பான முழு விவரத்தை பெற்று, விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.

- சுப்பிரமணியன், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர்

குறு, சிறு ஏற்றுமதி உயரும்  :   மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருந்த திட்டம், சரியான நேரத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலமாக, அமெரிக்க வரி உயர்வால் ஏற்பட்ட பாதிப்புகளை சமாளித்து, வர்த்தகம் செய்ய முடியும். குறு, சிறு ஏற்றுமதியாளர்களை கொண்ட திருப்பூர் அதிகம் பயன்பெறும். நிதி ஒதுக்கீடு விவரம் தெரியவரும் போது, தகுதியானவர்கள் பயன்பெற முடியும். சவால்களை சந்தித்து வந்த திருப்பூர் இனி வளர்ச்சிப்பாதைக்கு திரும்பும்.

==========================================================================================


மேற்குவங்கத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆர்) பணி தொடர்வதால், இந்தியாவை விட்டு வெளியேற முயற்சிக்கும் போது, எல்லையில் வங்கதேசத்தை சேர்ந்த ஊடுருவல்காரர்கள் 300 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளை மத்திய அரசு வேகமாக நடைமுறைப்படுத்தி வருகிறது. மேற்கு வங்கத்தில் 'எஸ்ஐஆர்' பணிகள் தொடங்கியதன் முக்கிய பலனை பார்க்க முடிகிறது. அங்கு வீடு, வீடாக 'எஸ்ஐஆர்' கணக்கீட்டு விண்ணப்ப படிவங்களை வினியோகித்து, பூர்த்தி செய்து அவற்றை திரும்ப பெறும் பணிகளில் ஓட்டுச்சாவடி அலுவலர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.  இதன் எதிரொலியாக, அண்டை நாடான வங்கதேசத்தில் இருந்து மேற்கு வங்கத்திற்குள் சட்ட விரோதமாக ஊருடுவி உள்ள ஏராளமானோர் தற்போது சொந்த நாடு நோக்கி நகர ஆரம்பித்துள்ளனர். இவ்வாறு செல்வோரை பாதுகாப்பு படையினர் மடக்கி பிடித்து கைது செய்து வருகின்றனர்.  மேற்குவங்க மாநிலம் வடக்கு 24 பர்கானாஸில் உள்ள சர்வதேச எல்லைக்கு அருகில் உள்ள ஹக்கிம்பூர் சந்தையில், வங்கதேசத்தினர் நாடு திரும்ப காத்திருந்தனர். அவர்களில் 300 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.  

பிழைப்புக்காக வந்தேன்  :  இது தொடர்பாக வங்கதேசப் பெண் சபீனா பர்வின் நிருபர்களிடம் கூறியதாவது: கடந்த சில ஆண்டுகளாக நான் இங்கு தங்கி வீட்டு வேலை செய்து, பணம் சம்பாதித்து என் வாழ்க்கையை நடத்தி வந்தேன். வங்கதேசத்தில் எனக்கு வேலை கிடைக்கவில்லை. வேலையைத் தேடி இந்தியாவுக்குள் நுழைய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.  வாழ்வாதாரத்தைத் தேடி இங்கு வந்த ஏழை மக்கள் எங்களிடம் அடையாளம் காணும் முயற்சி நடந்து வருகிறது. இது எங்களை கவலையடையச் செய்துள்ளது, வங்கதேசத்தில் மீண்டும் கஷ்ட சூழ்நிலையை எதிர்கொள்ள வேண்டியிருந்தாலும், நாங்கள் வீடு திரும்ப முடிவு செய்தோம். அதனால் எல்லையில் குவிந்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.  

ணங்கள் இல்லை  :   வங்கதேச நாட்டை சேர்ந்த அப்சர் கான் கூறுகையில், ''இந்தியாவில் தங்குவதற்கு என்னிடம் சட்டப்பூர்வ ஆவணங்கள் எதுவும் இல்லை. நான் சட்டவிரோதமாக வசித்து வந்தேன், ஆனால் இப்போது இந்தியாவில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அச்சத்தில் நான் திரும்பிச் செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளேன், என்றார்.

இதையும் படியுங்கள்...

========================================================================================

நான் படிச்ச புத்தகம் நான் படிச்ச புத்தகம் நான் படிச்ச புத்தகம் 


இரவும் நிலவும் - இந்திரநீலன் சுரேஷ்  

பானுமதி வெங்கடேஸ்வரன் 



சுரேஷ் குமார் அரங்கநாதன், பிறந்தது திருச்சியில், சென்னைப் பல்கலைக்கழகத்தில் 'மின் மற்றும் மின்னணுவியல்' பயின்று புகழ் பெற்ற பன்னாட்டு நிறுவனங்களில், இந்தியா மற்றும் வெளிநாடுகளில் பணிபுரிந்துள்ளார். 


‘இந்திரநீலன் சுரேஷ்’ என்ற புனைவுப் பெயரில் கதைகள், கட்டுரைகள் - கலைமகள், கல்கி, கணையாழி, அமுதசுரபி, குங்குமம், ராணி, தினமணி கதிர், மஞ்சரி, ஸ்ரீராமகிருஷ்ண விஜயம், நவீன விருட்சம் உள்ளிட்ட பல பத்திரிகைகளில் எழுதி வருகிறார். பூபாளம் இலக்கிய சிற்றிதழின் வெள்ளி விழா மலருக்குச் சிறப்பாசிரியராக பணியாற்றியுள்ளார்.

கலைமகள் பப்ளிகேஷன்ஸ் வெளியீடான இவரது 'அரண்மனை வனம்' என்கிற சிறுகதைத் தொகுப்பு நூல் திருப்பூர் தமிழ்ச் சங்கம் நடத்திய இலக்கிய விருதுகள் போட்டியில் 2021-22 ஆம் ஆண்டு ‘சிறந்த சிறுகதைத் தொகுப்பு நூல் வரிசையில் ‘முதல் பரிசு’ பெற்றுள்ளது. பல உள்நாடு மற்றும் அயல்நாடு அமைப்புகளில் பேச்சாளராகவும், நெறியாளராகவும் இருந்து வருகிறார். 

கலைமகள் 90 ஆவது ஆண்டு விழா, கா-ஸ்ரீ -ஸ்ரீ நினைவுச் சிறுகதைப் போட்டி, இலக்கியப்பீடம் வெள்ளிவிழா ஆண்டு சிறுகதைப் போட்டி, அமரர் சேஷசாயி நினைவு - உரத்த சிந்தனை சிறுகதைப் போட்டி, ‘கலைமகள் - சீனியர் சிட்டிசன் பீரோ' வெள்ளிவிழா ஆண்டு சிறுகதைப் போட்டி, ஸ்வர்ண கமலம் இதழ் - அமரர் சுஜாதா சிறுகதைப் போட்டி, குவிகம் குறும் புதினம் - 2023 போன்ற பல போட்டிகளில் இவரது கதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசு பெற்றுள்ளன. 

அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர்கள் சங்கம் அளித்த 'பன்னாட்டு தமிழுறவு' விருது, உறவுச் சுரங்கம் & ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் வழங்கிய ‘தமிழ் விருது’ பெற்றவர். 

இந்திரநீலன் சுரேஷ் அவர்களின், ‘இரவும் நிலவும்’ என்னும் சிறுகதை தொகுப்பில் குடும்பம், காதல், அமானுஷ்யம்,விக்ஞானம், இந்தக் கதைகளோடு ஒரு நகைச்சுவை கதையும் இருக்கிறது. எதிர்பாராத ட்விஸ்டோடு முடியும் ஓ ஹென்றி பாணி கதைகள் சில. 

மிகவும் சரளமான நடையில் வர்ணனைகளிலோ, உரையாடல்களிலோ துளியும் ஆபாசம் எட்டிப் பார்க்காமல் சுவாரஸ்யமாக எழுதுவது இவருக்கு சுலபமாக கை வந்திருக்கிறது. கதைகளில் சொல்லப்படும் கருத்துகள் உறுத்தாமல் வெளிப்படுவது சிறப்பு. விஞ்ஞான கதைகளில் சுஜாதாவின் சாயல் தெரிவதை தவிர்க்க முடியாதோ? தான் வெளிநாடுகளில் பார்த்த இடங்களை இடம்,பொருள் அறிந்து தன் கதைகளில் புகுத்தியிருக்கும் திறமையை பாராட்டலாம். 

இந்தத் தொகுதியில் ‘அல்லது நீங்கும்’ என்னும் கதையில் திருமணமாகி புகுந்த வீட்டிற்குச் சென்று அங்கு முழுவதுமாக தன்னை பொருத்திக் கொள்ள முடியாமல் தவிக்கும் பெண் பிறந்த வீட்டிற்கு வருகிறாள். அங்கு அவரவர் தங்கள் தங்கள் வேலைகளில்் மூழ்கி இருக்க,அவளுக்கு தன் இடம் எது? என்பதும் தான் செய்ய வேண்டியது என்ன என்பதும் புரிகிறது. 

‘சற்று முன்’ என்னும் கதையில் தீவிரவாதிகளை பிடிக்க ஒரு போலீஸ் அதிகாரி போடும் வேடம், யூகிக்க முடியாத முடிவு. சில்லாண்டி என்றே பெயர் வைத்திருக்கலாமோ என்று தோன்றுகிறது. 

‘தன் நிலம் தேடி’ என்னும் கதையில் விலங்குகளின் இருப்பிடமான காடுகளை நாம் ஆக்கிரமித்துக் கொள்வதால் வரும் விபரீதங்கள் ஒரு திடுக் முடிவோடு சொல்லப் பட்டிருக்கிறது. 

‘ஒரு நாள் போதுமா’ என்னும் கதையில் வயதான பெற்றோர்களை முதியோரில்லத்தில் விட்டு விட்டு கவனிக்காமல இருப்பது தவறு என்றவர், ‘கிளை’ என்னும் கதையில் வயதானவர்கள் இளைஞர்களை புரிந்து கொண்டு அவர்களோடு சேர்ந்து வாழ வேண்டும் என்கிறார். 

‘மழை நாளில் ஒரு ரோசா’ வில் ஒரே குழந்தையோடு நிறுத்திக் கொள்ளாமல் இன்னொன்று பெற்றுக் கொள்வது நலம் என்பது உணர்த்தப்படுகிறது. 

யூ.கே.யில் ஒருபார்ட்டியில் சந்திக்கும் ஒரு இளம் தம்பதிகளில் மனைவிி தன் குழந்தையை கைகளால் கூடத் தொடாமல் முழுக்க முழுக்க கணவனிடமே விட்டு விடுவது அங்கு வந்திருக்கும் வயதான இந்திய பெண்மணியை பாதிக்கிறது. ஆனால் அவள் ஏன் அப்படி நடந்து கொண்டாள் என்பது தெரிய வரும்பொழுது அந்தப் பெண்மணியைப் போலவே நாமும் தெளிகிறோம். இது இந்த புத்தகத்தின் பெயரை தாங்கி நிற்கும் கதையான ‘இரவும் நிலவும்’. 

நிஜமான அக்கறையோடு உதவி செய்த பெண்ணின் உதவியைப் பெற்றுக் கொண்டு பின்னர் அவளை கறிவேப்பிலை மாதிரி தூக்கி எறிந்து விட்டுச் செல்பவனுக்கு இயற்கை கொடுக்கும் தண்டனையை தெரிந்து கொள்ள ‘ ‘துள்ளித் திரிந்த பெண் ஒன்று’ கதையைப் படிக்கலாம். யதார்த்தத்திற்கு சற்று தொலைவில் நிற்கும் கதைதான். 

‘மலர்கள் நனைந்தன பனியாலே’ ஸ்வீட் ட்விஸ்ட் வைத்திருக்கும் கதை. 

காட்சிப் பிழை, பொய் வழிச் சாலை, மாயன் போன்ற விஞ்ஞானக் கதைகளையும், இலக்கு, அது, முனிப்பள்ளம்,டைகர் பட்டோடியைத் தெரியுமா? போன்ற அமானுஷ்ய கதைகளையும் ரசிக்கக் கூடிய வகையில் படைக்கப்பட்டிருக்கின்றன. மாயன் கதையில் ஏ.ஐ.யின் வளர்ச்சி எது வரை செல்லும் என்பது சற்று அச்சமூட்டுகிறது. 

ஆசையே அலை போல

24 கருத்துகள்:

  1. இன்றைய புத்தக விமர்சனப் பகுதி, நான் படிச்ச கதைக்கு மாற்றாக வந்திருக்கிறது என நினைக்கிறேன். நல்லா எழுதியிருக்காங்க.

    கதை என்றால் படிக்கலாம். சிறு கதைத் தொகுப்புக்கு மற்ற விவரங்கள் அளித்திருக்கலாமோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

      நீக்கு
    2. வாங்க நெல்லை..   நான் படிச்ச கதையில் கதையையே இங்கு கொடுக்க வேண்டும் என்பது பின்நாட்களில் எழுதாத விதியாகி விட்டது.  அப்படி தராமலும் விமர்சிக்கலாம் என்பதுதான் என் கருத்து.

      நீக்கு
    3. கதையை கொடுக்க வேண்டும் என்ற நினைப்பே நா.ப.க. பகுதிக்கு எழுத தடையாக இருந்தது.

      நீக்கு
  2. ​இன்றைய பதிவு கமெண்டுக்கு இடம் கொடுக்க முடியாமல் சப்பென்று உள்ளது,
    புத்தக விமரிசனம் நன்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா ஹா ஹா.. என்ன இப்படி சொல்லி விட்டீர்கள் JKC ஸார்... வாங்க...

      நீக்கு
  3. புனைவுப் பெயர் சரியா?  புனைப்பெயர் சரியா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புனை பெயர் என்பதுதான் சரி என நினைக்கிறேன்.

      நீக்கு
    2. ​இரண்டும் வேறு என்பது எனது கருதல். புனை பெயர் என்பது தனக்கு தானே சூட்டிக்கொள்வது. புனைவுப்பெயர் என்பது மற்றவர்கள் சூட்டுவது புளிச்ச மாவு ஆஜான் என்பது போல.

      Jayakumar

      நீக்கு
    3. என் கருத்தில் புனைப்பெயர் என்பதுதான் சரி. அதனால்தான் கேட்டேன்!

      நீக்கு
    4. புனைப்பெயர்தான் சரி. புஸ்தகாவிலிருந்து அப்டியே காபி பேஸ்ட் பண்ணி விட்டேன்.

      நீக்கு
  4. ஒரு சந்தேகம்.. 

    'அல்லது நீங்கள்' கதையில் பிறந்த வீட்டுக்கு வரும் பெண் உணர்வது அவரவர் அவரவர் வேலையில் மூழ்கி இருப்பதாக என்று சொல்லும்போது, அது பழைய மாதிரி ஒன்றிப் பழகாமல் என்று வருகிறதா, இல்லை எப்போதும் அப்படிதான் இருப்பார்கள், இப்போது இவளுக்கு அது புதிதாகத் தெரிகிறதாக வருகிறதா?

    பதிலளிநீக்கு
  5. "சற்று முன் "  -  நான் பார்த்த ஒரு OTT சீரியலில் போலீஸ் அதிகாரியாக 'பயோ பிக்'கில் நடிக்கும் ஒருவன் ஒரு தாதாவைப் பிடிக்க பிச்சைக்காரனாக வேடம் பூண்டு மாதக்கணக்கில் பீச்சில் இருப்பதாக வருகிறது.  இவர் கதையிலிருந்து அவர்கள் இன்ஸ்பைர் ஆகியிருக்க வாய்ப்பிருக்கிறதா?  சீரியல் லேட்டஸ்ட்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓடிடி சீரியல் பெயரே சற்று முன் ஆ?

      நீக்கு
    2. சீரியல் பெயர் அதுவல்ல. ஏகப்பட்ட சீரியல், படம் பார்ப்பதால் பெயர் மறந்து விடுகிறது.

      சற்று முன் என்பது பானுக்கா ரெஃபர் செய்திருக்கும் கதையின் பெயர்.

      நீக்கு
  6. நான் கூட என் உறவுகளில் சிலருக்கு - ஒற்றைக் குழந்தையோடு இருக்கும் சிலருக்கு - இன்னொன்று பெற்றுக்கொள்ள யோசனை சொல்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் இருந்தால் அது நல்லது. குழந்தை வளர்வதற்கும், பின்னர் பேச்சு பகிர்வுத் துணையாகவும் கண்காணிப்பாளராகவும். இல்லாவிட்டால் அம்மா ரொம்பவும் உழைக்கணும், அந்த இடத்தை இட்டு நிரப்ப முடியாது.

      நீக்கு
  7. புனைவுப் பெயரில்//

    புனைபெயர் - இதுதான் இதுவரை அறிந்திருக்கிறேன். புனைவுப்பெயர் இதுவரை கேட்டதில்லையே புதியதாக ஒரு சொல் தெரிந்துகொள்ள முடிகிறது.

    புனைப்பெயர் என்றும் எழுதப்படுகிறது ஆனால் இங்கு சந்திவிதிப்படி ப் மிகாது என்று இலக்கணம் சொல்கிறது.

    கீதா

    பதிலளிநீக்கு
  8. இந்திர நீலன் சுரேஷ் அவர்களின் எழுத்து எனக்கு சென்ற முறை செல்லபப சாரின் போட்டியில் வென்ற கதைகளில் இவருடையதும் ஒன்று என்ற வகையில் வாசித்ததால் பரிச்சயம். எழுத்து நடை அழகாக இருக்கும்., மேலும் வாசிக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன்.....தேன்...ன்....தேட வேண்டும்.

    கீதா

    பதிலளிநீக்கு
  9. பானுக்கா, உங்க விமர்சனம்முக்கிய அம்சத்தைக் கொடுத்து நச். புத்தகம் இல்லையா எல்லாக் கதைகளையும் சொல்ல வேண்டுமே படிக்க ஆர்வம் தூண்டும் வகையில் எப்படிக் கொண்டிரு சென்றிருந்திருப்பார் என்று யோசிக்கும் வகையில் சொல்லியிருக்கீங்க. பானுக்கா

    கீதா

    பதிலளிநீக்கு
  10. முதல் செய்தி சூப்பர். இப்படியான நல்ல இளைஞர்கள் இருக்கிறார்கள் என்று சொல்வது மனிதாபிமானம் இன்னும் உயிர்ப்புடன் இருக்கு என்பதையும் சொல்கிறது.

    ஒரு படம் கூட இதே போல வந்த நினைவு.

    கீதா

    பதிலளிநீக்கு
  11. மத்திய அரசின் திட்டம் நல்ல திட்டம்.

    கீதா

    பதிலளிநீக்கு
  12. வங்கதேசத்தில் ஊடுருவாளர்களை நினைக்கும் போது ஒரு புறம் மனம் கஷ்டமாகைருக்கு இன்னொரு புறம் நம் நாட்டின் பாதுகாப்பும் முக்கியமாச்சே. அந்த நாடு என்னதான் செய்கிறதோ? சும்மா வெறித்தனத்திலும் ஆணவத்திலும் அதிகாரத்திற்காகவும் சண்டை போடத்தான் நேரமிருக்கும் போல மக்களைக் கவனிப்பதை விட்டு. என்ன நாடுகளோ இப்படியானவை.

    கீதா

    பதிலளிநீக்கு
  13. திருமணமாகி புகுந்த வீட்டிற்குச் சென்று அங்கு முழுவதுமாக தன்னை பொருத்திக் கொள்ள முடியாமல் தவிக்கும் பெண் பிறந்த வீட்டிற்கு வருகிறாள். அங்கு அவரவர் தங்கள் தங்கள் வேலைகளில்் மூழ்கி இருக்க,அவளுக்கு தன் இடம் எது? என்பதும் தான் செய்ய வேண்டியது என்ன என்பதும் புரிகிறது. //
    பிறந்த வீட்டை விட்டு புகுந்த வீட்டுக்குப் போகும் போதுகிடைக்கும் அனுபவங்கள் மற்றும் பாடங்கள் அந்த ஊர் அனுபவங்கள்....மீண்டும் பிறந்த வீட்டுக்கு வரும் போது வித்தியாசமாகத் தோன்றவும் கூடும். முன்பு இருந்தது போலத்தான் இப்பவும் இருப்பார்கள் ஆனால், நமக்கு வித்தியாசமாகத் தோன்றக் கூடும்.

    பின்னர் வருகிறேன்

    கீதா

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!