17.4.26

கமல் அரசியலில் நுழைவதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

 

இந்த சீசனுக்கு வாங்கும் முதல் மாம்பழம்.

பங்கனபள்ளி. இந்த சமயத்தில் அதாவது சீசன் தொடக்கத்தில் வாங்கும் மாம்பழத்தில் எப்படியும் ருசி இருக்காது!  இனிப்பு இருக்காது. 'சப்'பென்றுதான் இருக்கும்.
" எல்லோரும் கிலோ 300 ரூபாய் விற்கிறார்கள். நான் 250க்கு விற்கிறேன் என்றார். இந்த நான்கு மாம்பழங்கள் 225 ரூபாய்.  அம்... மாடி!
இது கூட நாங்கள் சாப்பிட அல்ல! மறுநாள் அப்பாவின் திதி. அதற்கு சாப்பிட வருபவர்களுக்கு இலையில் போடுவதற்காக வாங்கப்பட்டுள்ளது.
இதனுடன் கூட 12 வாழைப்பழம் 50 ரூபாய்க்கு வாங்கினேன். திராட்சை பழம் நன்றாக இருந்தது. விதையில்லாத திராட்சை இனிப்பாக இருந்ததால் எவ்வளவு என்று கேட்டபோது கால் கிலோ 30 ரூபாய் என்று சொன்னார்.
எடுத்துப் போடும்போது 'இதை கட் செய்து கால் கிலோ என்று போட வேண்டுமா, இல்லை எவ்வளவு இருந்தாலும் போட்டு விடவா?' என்று கேட்டார்.
'எவ்வளவு இருந்தாலும் போட்டு விடுங்கள்' என்று சொன்னேன்.  விலையை குறைத்துக் கொள்ள சொல்லும்போது அவர் ஒப்புக் கொள்ளவில்லை. 'எனக்கு கிடைப்பதே ஐந்து ரூபாய் தான்' என்றார் ஆனால் மொத்தமாக வாங்கிக் கொள்ளும் போது பத்து அல்லது 12 ரூபாய் குறைவாகத்தான் வாங்கிக் கொண்டார்.
அதாவது அந்த திராட்சை பழத்தில் அதிகப்படி எடைக்கு காசு வாங்கவில்லை். வாங்கிக்கொண்டு கொஞ்ச தூரம் வந்துவிட்டு தான் அதை உணர்ந்தேன். திரும்பிச் சென்று அவரிடம் அதைச் சொன்னேன்
அவர் 'தெரிந்துதான் சார் விட்டேன் நீங்கள் குறைக்க சொல்லி குறைக்கவில்லையே என்று பேசாமல் விட்டுவிட்டேன்' என்றார்.
அவர் நல்லவரா? நான் நல்லவனா? 

===============================================================================

வாங்க பேசலாம்....

"அவன் ஃபிரெண்டுன்னா உயிரையே கொடுப்பான் தெரியுமா"
"அவனா... மகா கஞ்சனாச்சே..."
"அந்தம்மா எப்பவுமே யாருக்காவது உதவின்னா முதல்ல நிப்பாங்க.."
"எப்பப் பார்த்தாலும் அவங்க ரெண்டு பெரும் மத்தவங்களைப் பத்தி வம்பு பேசிட்டே இருப்பாங்க.."
இப்படி நம்மைச் சுற்றி இருப்பவர்களைப் பற்றிய அபிப்ராயங்கள் நம் எல்லோரிடையேயும் இருக்கும். எப்போதாவது உங்களை நீங்களே விமர்சித்துக் கொண்டிருக்கிறீர்களா? இப்போ சொல்லுங்களேன்...
உங்களைப் பற்றி உங்களுக்கு என்ன தோணுது? உங்களைப்பற்றி நீங்களே ஒருவரியில் கமெண்ட் செய்து கொள்ளுங்களேன்...


===============================================================================

வாட்சாப்பிலிருந்து....



சித்தர் ஒருவர் பாம்பு வளர்த்தார்.எங்கு போனாலும் தன் வளர்ப்புப் பாம்போடுதான் வெளியே போவார்.
 
ஒரு நாள் வெளியூருக்குப் போய்க்கொண்டிருந்த சித்தர், நல்ல வெயில் நேரத்தில் ஒரு மரத்தடியில் படுத்துத் தூங்கினார்.

அருகே அவரது பாம்புக்கூடை.

சமர்த்துப் பாம்பு ஏனோ அன்று அந்தக் கூடையிலிருந்து தப்பிவிட்டது. பக்கத்திலிருக்கும் ஒரு வீட்டை நோக்கி ஊர்ந்து சென்றது.

அங்கே ஒரு இரண்டு  வயதுக் குழந்தை. தத்தக்கா புத்தக்கா என்று நடந்துவந்தது. இந்தப் பாம்பைப் பார்த்ததும்,
‘ஐ பொம்மை!’ என்று பாய்ந்து பிடித்துவிட்டது.

அந்த நேரம் பார்த்து அந்தக் குழந்தையின் அம்மா வீட்டிலிருந்து வெளியே வந்தார். குழந்தை கையில் பாம்பைப் பார்த்துவிட்டு அலறினார். அதைக் கேட்டு எல்லோரும் ஓடி வந்தார்கள்.

ஆனால் அவர்களில் யாருக்கும் பாம்பை நெருங்கத் தைரியம் இல்லை.

பாதுகாப்பான தூரத்தில் நின்றபடி ‘கண்ணு, அந்தப் பாம்பைக் கீழே போடு’ என்று அலறினார்கள். ‘கடவுளே, எங்க குழந்தையைக் காப்பாத்து’ என்று பிரார்த்தனை செய்தார்கள்.

இந்தச் சத்தம் கேட்டு சித்தர் எழுந்துகொண்டார். பரபரப்பாக குழந்தை கையில் பாம்பைப் பார்த்ததும், பதறாமல் அருகே சென்று அதைப் பிடித்துக் கூடையில் போட்டார்.

‘ஐயா, உங்களுக்கு பயமே இல்லையா?’ கூட்டத்தில் ஒருவர் கேட்டார்.

‘எதுக்கு பயம்? அந்தப் பாம்புக்குதான் ஏற்கெனவே பல் பிடுங்கியாச்சே!’
பாம்புக்குப் பல் பிடுங்கிவிட்டது என்பது தெரிந்த சித்தருக்கும் பயம் இல்லை.

பாம்புக்கு விஷப்பல் உண்டு என்பதே தெரியாத பச்சைக் குழந்தைக்கும் பயம் இல்லை. இந்த இரண்டுக்கும் நடுவே சிக்கிக்கொண்டவர்கள்தான் அரைகுறை ஞானத்தால் பயந்து பதறி அவதிப்படுகிறார்கள்.

உங்கள் பயங்கள் எந்த வகை? அவற்றைப் போக்குவதற்கு நீங்கள் தேர்ந்தெடுப்பது சித்தரின்  வழியா? அல்லது குழந்தை வழியா?

"நாம் எதற்கும் பயப்பட வேண்டியதில்லை, தீய எண்ணம் ஒன்றைதவிர" என்கிறார் வேதாத்திரி மகரிஷி.

இதை அவரது வார்த்தைகைளில்  கேட்போமா?  "தீய எண்ணங்களைக் கண்டு பயப்பட வேண்டும்.

நீங்களே முயற்சி செய்து ஒரு நல்ல எண்ணத்தைத் தொடர்ந்து மனதில் வைத்திருங்கள்.

தீய எண்ணம் வருவதற்கு இடமிருக்காது. எந்நேரமும் ஏதேனும் ஒரு சங்கற்பத்தை மனதில் சுழலவிட்டுக் கொண்டு இருந்தாலுங்கூட அது தீய எண்ணத்தை விலக்கும்.

அன்பர்களே! தீய எண்ணத்திற்கு ஒருபோதும் மனதில் இடம் அளிக்காதீர்கள்.நல்ல எண்ணத்தைத் தேடிப்பிடித்து மனதில் ஏற்றி வையுங்கள்.

உங்கள் மனதில் அடிக்கடி வந்து போகும் எண்ணங்களையும் அவ்வப்போது தோன்றும் எண்ணங்களையும ஆராயுங்கள். விழிப்புநிலை, எண்ண ஆராய்ச்சியை வளப்படுத்தும். எண்ண ஆராய்ச்சி, விழிப்பு நிலையை ஊக்குவிக்கும்".

சுயநலம் இன்றி வாழ்வதே நல்லொழுக்கம். எந்த நிலையிலும் சுயநலத்தை மறந்து செயல்படுங்கள்.

வாழ்க வளமுடன்

========================================================================

பாஹே பக்கம்  :

"அன்று அப்படி... அன்றே அப்படி" 
"எதையோ தேடுகையில் என் இளவயது குறிப்பு புத்தகம் கிடைத்தது. அது சில கவிதைகள். தேதி இல்லை.  திருமணமான புதிதில் இருக்கலாம். அந்த வயதுக்குரியவை. அப்போதே கூட ,உள்ள பிணைப்புக்கு தான் முதலிடம் என்பது ஆச்சரியம்.  ஆமாம்...  ''அன்றே அப்படி'' 

10 6 2002 இல் இந்தக் கடிதத்தை எங்களுக்கு எழுதுகிறார். இந்த கவிதைகள் 1952 முதல் 1956 வரை எழுதியவர் என்று குறிப்பிடுகிறார்.  அதிலிருந்து எடுத்து சில கவிதைகளை மீண்டும் எழுதி அனுப்பி இருக்கிறார்!  முடிந்தவரை நிறுத்தி நிதானமாக எழுதி இருக்கிறார்.


============================================================================

இந்த பதிலுக்கு கேள்வி என்ன?

விடை ---- ஆம் பக்கம் என்று போட்டிருப்பதில் விடை இங்கே சிக்கி இருக்கிறது. கேள்வி காணோம்! அது வேறொரு பைண்டிங்கில் மாட்டி இருக்கும்.
இந்த விடைக்கான கேள்வி எனக்கு ஞாபகம் இருக்கிறது. உங்களுக்கும் ஞாபகம் இருக்கிறதல்லவா?
எல்லோரும் விடையைத்தான் கேட்பார்கள். நான் கேள்வி ஞாபகம் இருக்கா என்று கேட்கிறேன். கவனியுங்கள், தெரியுமா என்று கேட்கவில்லை!
ஞாபகம் இருக்கா என்றுதான் கேட்கிறேன்



===================================================================================

பாக்கியராஜின் 50 ஆண்டு கால கலையுலக நிறைவை ஒட்டி விழா எடுத்ததும் ஆளாளுக்கு அவரை பேட்டி எடுத்தார்கள்.  நிறைய பார்த்தேன்.  சுற்றி சுற்றி எல்லா இடத்திலும் ஒன்றையேதான் சொன்னார்.  மாற்றி பேசவில்லை என்று சொல்ல வருகிறேன்!  கேள்விகளுக்குத் தகுந்த பதில்கள். இங்கு வக்கீல் சுமதியின் சில கேள்விகள் சுவாரஸ்யமாய் இருந்தன.  முதல் காணொளியில் எழுத்தாளர் பாலகுமாரன் பற்றி கேட்கிறார்.  அதற்கு பாக்கியராஜ் பதில் சுவாரஸ்யம்.  எல்லோரும் எல்லா இடத்திலும் சிறந்து விளங்கி விடுவதில்லை!


மௌனகீதங்கள் படத்தில் அவர் சொல்லிய கருத்துக்கும், அந்த 7 நாட்கள் படத்தில் அவர் சொல்லி இருக்கும் கருத்துக்கும் இருந்த வேறுபாட்டைக் கேட்கிறார் சுமதி. 

===================================================================================

2014 ல் பகிர்ந்த இந்த உல்ட்டா பாடல் இன்றும் பொருந்தும்தான்!!


வாக்களிக்க விருப்பமில்லை.. பிடிச்சவங்க யாருமில்லை
வோட்டுப் போட்டு ஜெயிக்க வைக்க உருப் படி யாய்க் கட்சியில்லை..
உருப்படி யாய்க் கட்சியில்லை..

கூட்டணியும் கசந்ததடி.. கூட வர தயக்கமடி..
தினம்தினம் நினைத்தும் எந்தன் மனம்தா..ன் வெறுத்ததடி..
பெட்டியா..ய் அனுப்பி வைத்தும் வெட்டியாய்ப் போனதடி .
ஒட்டி நின்ன பார்ட்டி எல்லாம் கைக் கெட்டாம ஓடுதடி..
எட்டாம ஓடுதடி..

வாக்களிக்க விருப்பமில்லை.. பிடிச்சவங்க யாருமில்லை....

==================================================================================

பானு அக்கா தந்திருந்த சென்ற வார குறுக்கெழுத்துப் போட்டி விடை..

ஒரு குட் நியூஸ்...
இந்த வாரம் குறுக்கெழுத்துப் போட்டி எதுவும் இல்லை!
========================================================================================
சமீபத்தில் பார்த்த அம்பிகா பேட்டியில் அவர் இப்படி எல்லாம் மறைத்துப் பேசவில்லை! தனக்கு அரசியலில் வர விருப்பம் இருக்கிறது என்றே சொன்னார்!
மாற்றம் ஒன்றுதான் நிரந்தரம் என்றாலும்...


கேள்வி : அரசியலில் நுழைவதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
கமல் : (தேவர்மகன் வெளியான சமயம்). ஜனநாயகத்தில் யார் வேண்டும் என்றாலும் எந்தத் துறைக்கு வேண்டுமானாலும் வரலாம். எவரையும் தடுக்க முடியாது. ஆனால் நடிகர்களையெல்லாம் மக்கள் ரொம்பவும் நம்பக்கூடாது என்று எனக்குத் தோன்றுகிறது.
நானும் நடிகன்தான்- எனக்கும் ஆசை இருக்காதா? கோட்டையில் நாம் போய் நாற்காலியில் உட்கார்ந்து கொள்ள வேண்டும், எல்லோரும் நமக்கு சல்யூட் அடிக்கணும் என்று நானும் நினைக்கலாம். ஆனால் அது அற்பத்தனமானது. அப்படி நான் நினைக்கவே கூடாது.
அற்பனாக இருந்துகொண்டு, ஆகாயத்தைப் பிடிக்க ஆசைப்படுவது நியாயமே இல்லை. இன்று என்னைக் கொண்டு போய்க் கோட்டையில். உட்காரவைத்தால் - எனக்கு என்ன தெரியும்? இந்த நாட்டை ஆள முடியுமா? என்ன பயிற்சி, அனுபவம் இருக்கு எனக்கு? தேர்தலுக்காக மூன்று நாலு வருஷம் சுற்றினால் அரசியல் கற்றுக் கொண்டதாகி விடுமா? அரசியல் சூழ்ச்சிகளை வேண்டுமானால் கற்றுக் கொள்ளலாம். மற்றபடி பரிபாலனமோ, நிர்வாகத் திறமையோ நான் எப்படிக் கற்றுக் கொள்வது?
ஐ.ஏ.எஸ் படித்நவர்கள் அரசியலுக்கு வரட்டும். எனக்கு எவ்வளவு சந்தோஷமாக இருக்கும் தெரியுமா? "என்னய்யா இது... எல்லா அரசியல்வாதிகளும் ஐ.ஏ.எஸ் காரர்களாகவே வருகிறார்களே!" என்று மக்கள் சொல்கிற அன்று நம்ம நாடு எங்கேயோ போய் விடும்.
நான் ஓட்டுப் போடலாம், இந்த அமைச்சர் சரியில்லை, அந்த எம் எல் ஏ சரியில்லை, எம் பி சரியில்லை என்று சொல்லலாம். தவிர, அதற்கு மேலே தெரிந்ததாகச் சொன்னால் அது நடிப்பாகி விடும். நான் செய்கிற இன்னொரு வேஷமாகி விடும்.
சிவாஜி, எம் ஜி ஆரைத் தாக்குகிறீர்களா என்று சிலபேர் குதர்க்கமாகக் கேட்கலாம். சிவாஜி, எம் ஜி ஆருக்கெல்லாம் அரசியலில் ஒரு பயிற்சி, ஒரு அனுபவம் இருந்ததே! அதில் கடுகளவு கூட எனக்கோ, என் நண்பர் ரஜினிக்கோ கிடையாது. சும்மா எங்களை இழுத்து விட்டு வேடிக்கை பார்க்கிறார்கள்.
சிவாஜி, எம் ஜி ஆரெல்லாம் கட்சி மூலமாகத்தான் நடிக்க வந்தார்கள். அண்ணா, பெரியார் பேச்சுகளை எல்லாம் கேட்டு அரசியல் தேர்ச்சி பெற்றார்கள். அவர்களை அரசியல்வாதி என்று ஒப்புக் கொள்ளலாம்.
நான் ஓப்பனாகவே சொல்கிறேன்- சிவாஜி அரசியல்வாதியானதில் எனக்கு இஷ்டமே கிடையாது. நான் சிவாஜி ரசிகன். பலமுறை அவரிடமே சொல்லி இருக்கிறேன். அரசியல் காரணமாக நடிகர் சிவாஜியை இழந்து விட்டோம். பத்து வருஷமாக அவரை அரசியல் ஈர்த்து விட்டது. அனாயாசமாய் அவரால் முதல் மரியாதை மாதிரி, 15 படங்கள் கொடுத்திருக்க முடியும். அவர் மாபெரும் நடிகர். அந்த மாதிரிதான் அவர் எப்போதும் இருக்கவேண்டும் என்று நினைக்கிறேன்.
- தேவர்மகன் படம் வெளிவந்த சமயம் கமலஹாசன் குமுதத்துக்குக் கொடுத்த பேட்டி. -

=========================================================================


தமிழ் சினிமா என்ன என்பதைக் கற்றுக் கொள்ள யாரேனும் ஆசைப்படுகிறீர்களா? அப்படியானால், இந்த ஒரு காட்சியை மட்டும் பாருங்கள்.
ஒரு தந்தை.ஒரு மகன்.ஒரு சாதாரணமான “பணம் கேட்கும்” காட்சி.
ஆனால்…அந்தக் காட்சிக்குள் நுழைந்தவுடன் அது சாதாரணமாய் இருக்காது.ஏன் தெரியுமா?
"அது சிவாஜி கணேசன் என்பவரின் உலகம்."
பெரிய பணக்காரர், தொழிலதிபர் என்பதைக் காட்ட எந்த ஒரு பிசினஸ் ஃபைல்களோ, அலுவலகக் காட்சிகளோ தேவையில்லை. அந்தச் சிம்மக் குரலும், அமர்ந்திருக்கும் மிடுக்கும், அவர் அணிந்திருக்கும் அந்த 'ஹை கிளாஸ்' உடையும் மட்டுமே போதும். அந்தத் தோரணையைத் தன் உருவத்திலேயே கொண்டு வந்திருப்பார் சிவாஜி.
மகன் விஜய் —அவனது உடல் மொழி, குழந்தைத்தனம், அலட்டலான மேனரிசங்கள்…
ஒரு தவறேனும் நடந்தால், அது கேலியாகி விடும் ஒரு பாத்திரம்.
ஆனால் இங்கே?
அதே மனிதர் —அதே முகம் —ஆனால் இரண்டு உயிர்கள்!
ஒரு பக்கம் தந்தை — கம்பீரம், கட்டுப்பாடு, உள்ளுக்குள் உருகும் பாசம்.மற்றொரு பக்கம் மகன் — சுதந்திரம், சின்னப்பிள்ளைத்தனம், பொறுப்பில்லாத சிரிப்பு.
இந்த இரண்டையும் ஒரே உடலில் உருவாக்கியிருப்பது நடிப்பு அல்ல… அது மாயாஜாலம்.
காட்சியின் தொடக்கத்தில் பண்டரிபாயிடம் குசலம் விசாரிப்பார் சங்கர் (அப்பா சிவாஜி):
சங்கர்: "என்ன ராஜாவுக்கு ராணி ரோஜா வச்சு தாஜா பண்றாங்க?"
பண்டரிபாய்: "இல்லை, பூஜை பண்றேன்."
சங்கர்: "உன் மகன் பணம் கேட்கிறதுக்காக உன்னை தாஜா பண்ணி அனுப்பி இருப்பார்!"
தந்தை பேசிக்கொண்டிருக்கும் போதே, பின்னால் மகன் விஜய் ஜாடை காட்டுவதைக் கண்ணாடியில் பார்த்துவிடுவார். இங்கேதான் சிவாஜியின் மேஜிக் தொடங்குகிறது. திடமான, கம்பீரமான தந்தைக்கும், அவரோடு துளியும் சம்பந்தமில்லாதது போல் தோன்றும் குழந்தைத்தனமான மேனரிசங்கள் கொண்ட மகன் விஜய்க்கும் அவர் காட்டிய அந்த வித்தியாசம்... அது நடிப்பு அல்ல, வித்தை!
வாசலில் வந்து நிற்கும் மகனை தந்தை அழைப்பார்: "வாடா!".
விஜய் நடந்து வரும்போது, ஒரு சாதாரண இளைஞனை போலன்றி, அலட்டிக்கொள்ளாத ஒரு தனித்துவமான ஸ்டைலில் வருவார். மகனை ஏற இறங்கப் பார்க்கும் தந்தையின் பார்வையில் ஆயிரம் அர்த்தங்கள். "என் மகனாகப் பிறந்தவன் இப்படி இருக்கிறானே" என்ற ஏக்கம் அந்தப் பார்வையில் துளிர்க்கும்.
"யெஸ் டாட்!" – அந்த ஆங்கில உச்சரிப்பு
வசனங்கள் மிகச் சாதாரணமானவை, ஆனால் சிவாஜி கொடுத்த மாடுலேஷன் அபாரமானது:
சங்கர்: "என்னடா பணம் கேட்டியா?"
விஜய்: "யெஸ் டாட்!" (ஸ்டைலாகச் சொல்வார்).
விஜய்: "நான் உங்ககிட்டதான் கேட்கலாம்னு இருந்தேன்... அம்மாதான் 'நீ கேட்காத, டாடி கடிக்கும், நான் தாஜா பண்ணி வாங்கித் தர்றேன்' அப்படின்னு சொல்லிச்சு."
“கடிக்கும்” என்ற ஒரு வார்த்தை!
.அது ஒரு ஸ்பார்க்.
அந்த ஒரு வார்த்தையை கேட்டவுடன்,அப்பாவின் தலை நிமிர்வது —மகன் பின் ஓடுவது —அம்மா நடுவில் சிக்குவது —
இந்த மூன்று அசைவுகளும் சேர்ந்து ஒரு குடும்பத்தின் முழு உறவையும் சொல்லி விடுகின்றன.
ஒரு நொடி.ஆனால் பல உணர்ச்சிகள்.
அந்த நடையை கவனித்தீர்களா?
சிவாஜி என்றாலே “ராஜநடை”.ஆனால் இங்கே?
அவர் நடக்கவில்லை…நடிக்கவில்லை...
விஜய்யாக வாழ்ந்திருப்பார். ..
அந்த ஷாட்டில் சங்கர் :
வலது தோளின் ஒரு சின்ன jerk…புன்னகையை மறைக்கும் ஒரு திருப்பம்…கோபத்தை நடிப்பது போல காட்டும் நுணுக்கம்…
இந்தச் சின்னச் சின்ன அசைவுகள் தான் அந்தக் காட்சியின் பெரு வெடிப்புகள்.
“ஷட் அப்!” — ஒரு வார்த்தை.
அது கோபமா?அது அன்பா?அது கட்டுப்பாடா?
மூன்றும் கலந்த ஒரு உணர்வு.
அதை வார்த்தையால் சொல்ல முடியாது. உணரச் செய்வது — அதுதான் சிவாஜி.
இக் காட்சி பெரிய ஆச்சர்யத்தையும் கொடுக்கும்.அது?
மகன் பேசும் ஆங்கிலம் — ஒரு கான்வென்ட் ஸ்டைல்.தந்தை பேசும் ஆங்கிலம் — ஒரு உயர்ந்த மேதையின் உச்சரிப்பு.
நினைவில் கொள்ளவும்.
அவர் நிஜத்தில் மூன்றாவது வகுப்பு கூட தாண்டவில்லை.
ஒரே மனிதன்.இரண்டு உலகங்கள்.
இந்த மாறுபாட்டை நம்மால் “பார்க்க” முடிகிறது…ஏனென்றால் அவர் அதை “உருவாக்கி” இருக்கிறார்.
இந்தக் காட்சி ஒரு சுழல்.
அந்தச் சுழலில் சிக்கிக் கொள்கிறது — நம் மனம்.வெளியே வர முடியாது.
நாம் அதை மீண்டும் மீண்டும் பார்க்கிறோம்.ஒவ்வொரு முறையும் புதிதாய் அதிர்கிறோம்.
சினிமா வளர்ந்துவிட்டது.டெக்னாலஜி உயர்ந்துவிட்டது.பிரமிப்புகள் பல வந்துவிட்டன.
ஆனால்…
ஒரு மனிதன் தனது கண்கள், குரல், உடல் அசைவுகள் மூலமாக ஒரு உலகையே உருவாக்கி நம்மை அதற்குள் இழுத்துச் செல்லும் அந்த மாயம் —
அது ஒரே ஒருவருக்கே சொந்தம்.
நடிகர் திலகம் சிவாஜி கணேசன்.
இந்தக் காட்சியை விமர்சிக்கலாம்.அதைப் பற்றி கருத்து சொல்லலாம்.
ஆனால்…
அதை “அளக்க” முடியாது.
ஏனெனில் —அது நடிப்பு இல்லை.
அதுஅரங்கேற்றப்பட்ட அதிசயம்.
செந்தில்வேல் சிவராஜ்
9087620800

=============================================================================

சாண்டில்யன் பக்கம்  :  மதமாற்றம் பற்றி 1963 ல் சாண்டில்யன்...

...............................................
"என்ன, இரண்டு மூன்று முறை மதம் மாறி இருக்கிறாயா?" என்று இளஞ்செழியன் ஆச்சரியத்துடன் வினவியதல்லாமல், அந்த ஆச்சரிய ரேகை முகத்திலும் படர அவளை நோக்கினான்.
"இதில் ஆச்சரியத்துக்கு என்ன இருக்கிறது? முதலில் நான் இந்த அரபு நாட்டைச் சேர்ந்தவள். இந்த நாட்டு மதப்படி வளர்க்கப்பட்டேன். பிறகு யவனர்களிடம் அடிமையானேன். அவர்கள் மதத்தில் என்னைச் சேர்த்துக் கொண்டார்கள். மறுபடியும் இலி-ஆஸு என்னை மீட்டான். மீண்டும் சொந்த மதம் திரும்பினேன்" என்றாள் அலீமா சர்வ சகஜமாக.
இந்த விசித்திரத்தைக் கேட்ட இளஞ்செழியன் பிரமித்துப் போனான். மதம் இஷ்டப்படி புறக்கணிக்கக்கூடிய அத்தனை அல்ப விஷயமா என்று நினைத்ததால், முதலில் உண்டான பிரமிப்பு இரட்டை மடங்காகவே, "மிகவும் விந்தையாயிருக்கிறது அலீமா, இங்குள்ள மனிதர்களின் பழக்கம்" என்றான் சோழர் படை உபதலைவன்.
'இதில் விந்தை என்ன?"
"மதத்தை அத்தனை அல்பமாக நினைக்கிறீர்களே!"
"யார் அல்பமாக நினைப்பது?"
"நீங்கள் தான்."
"நாங்கள் மதத்தை அல்பமாக நினைத்தால் அதற்கு மற்றவர்களை மாற்றுவானேன்?"
"மதத்திற்கு மாற்றுபவர்களைப் பற்றி நான் சொல்ல வில்லை. மதம் மாறுபவர்களைப் பற்றிச் சொல்லுகிறேன்."
"உங்கள் நாட்டில் மதமாற்றம் என்பது கிடையாதா, பல மதங்கள் இல்லையா?"
"உண்டு. ஆனால் மதமாற்ற முறைகள் வேறு, மதத் தத்துவங்களே வேறு."
"என்ன வித்தியாசம்?"
'மத மாற்றத்தில் கட்டாயம் இல்லை. மன்னனோ மற்றவரோ சிறைப்பட்டவர்களைத் தங்கள் மதத்திற்கு இழுக்க முயல்வதில்லை. எங்கள் நாட்டு வேதாந்தமே வேறு."
"என்ன வேதாந்தமோ?"
"மனிதனுடைய ஆத்மா உடலைத்தான் உடையைப் போல் உரித்து விடுகிறது என்பது எங்கள் வேதாந்தம். எப்படி உடைகளை மனிதன் தேவைக்குத் தகுந்தபடி களைந்து மாற்றிக் கொள்கிறானோ அப்படியே ஆத்மாவும் பாவ புண்ணியத்துக்குத் தகுந்தபடி உடல்களை மாற்றிக் கொண்டு ஜன்மாக்களை எடுக்கிறதென்பது பாரத நாட்டு வேதாந்தம். உடையைப் போல் மதங்களைப் பாவிக்க முடியாது. ஒரு மதத்தைக் களைந்து வேறு மதத்தை ஏற்க முடியாது." ளை எடு
"அப்படியானால் வேறு மதங்களை ஏற்பவர்களே உங்கள் நாட்டில் இல்லையா?"
"இருக்கிறார்கள். ஆனால் கட்டாயத்தினால் அவர்கள் மதம் மாறவில்லை. இஷ்டத்தினால் மாறினார்கள். எங்கள் நாட்டில் பல மகான்கள் பிறந்திருக்கிறார்கள். தங்கள் தத்துவங்களை எடுத்துப் பிரச்சாரம் செய்திருக்கிறார்கள். அவற்றில் லயித்து, அந்தத் தத்துவ முறைகளில் தங்களுக்கு நற்பதவி கிடைக்கும் என்று நம்பிய மக்கள் மதம் மாறியிருக்கிறார்கள். ஆனால் எல்லாம் பழைய மறைகளின் வழிவந்த மதங்கள். பெருவாரியான கொள்கைகளில் அவற்றுக்குள் வித்தியாசம் கிடையாது. ஆகவே விரோதமும் கிடையாது. அன்பு மிகுதியால் ஆதி மதத்திலிருந்து சமண பௌத்த மதங்களை நாடியவர்களும் உண்டு. அவற்றிலிருந்து பழையபடி பழைய மதத்துக்குத் திரும்பியவர்களும் உண்டு. மதம் அவரவர் சொந்த விஷயம் என்று எங்கள் நாட்டில் கருதப்படுவதாலும் எல்லா மதங்களும் உயர்வானவை என்ற நம்பிக்கை உலாவுவதாலும் யாரும் இன்னொருவரை மதம் மாற்ற முயன்றது கிடையாது."
"மத விஷயத்தில் கட்டாயமே கிடையாதா?" என்று அலீமா வியப்புடன் வினவினாள்.
"கிடையாது" என்றான் இளஞ்செழியன்.
"இங்கு கட்டாயம் உண்டு" என்று குறிப்பிட்டாள் அலீமா.
"மற்ற மதங்கள் உபயோகமற்றவை என்று நீங்கள் கருதுவது தான் அதற்குக் காரணம்" என்று விளக்கினான் படைத்தலைவன்.
அலீமாவின் விரல்கள் அவன் விரல்களுடன் நன்றாக இணைந்தன. "உங்கள் நாடு மிகவும் நல்ல நாடாயிருக்க வேண்டும்" என்று கூறினாள் அலீமா.
அலீமாவின் விரல்கள் அவன் விரல்களுடன் நன்றாக இணைந்தன. "உங்கள் நாடு மிகவும் நல்ல நாடாயிருக்க வேண்டும்" என்று கூறினாள் அலீமா.
"அதைவிடச் சிறந்த நாடு உலகில் கிடையாது" என்றான் இளஞ்செழியன்.
"அதன் பெருமையை அத்தனை தூரம் உணர்ந்திருக் கிறீர்கள்!" என்று கேலியாகச் சொன்னாள் அலீமா. அந்தக் கேலியில் மதகுருவின் வருகையால் ஏற்பட்ட அச்சத்தைக் கூடச் சிறிது மறந்தாள்.
"பாரத நாட்டின், அதுவும் எங்கள் தமிழகப் பிரிவின் உயர்வை எப்பொழுதும் உணர்ந்திருக்கிறேன் அலீமா! ஆனால் அது எத்தனை உயர்ந்தது என்பதை இந்தப் பகுதிக்கு வந்ததும்தான் சரியாகப் புரிந்து கொள்ள முடிகிறது. யாரும் இஷ்டப்படி வாழக்கூடிய சுதந்திரமான பாரதம் எங்கே, அவனவனுக்குச் சொந்தமான மத விஷயத்திலும் கட்டாயத்தைக் கையாளும் மேற்கு நாடுகள் எங்கே? பாரதம் உயர்ந்தது அலீமா! எத்தனையோ மதங்கள் பகையின்றி அக்கம் பக்கம் வாழ வகை செய்துள்ள பண்பின் சின்னமான பாரதம் எங்கே? இந்த மதம்தான் வாழலாம் இப்படித்தான் மனிதன் வாழலாம் என்று தனி மனிதன் சுயேச்சைக்கும் கரை கட்டும் மேற்கு நாடுகள் எங்கே?" என்று பேசிய இளஞ் செழியன் சட்டென்று அவள் கையை உதறிக் கொண்டு சில வினாடிகள் மௌனமாக நின்றான்.

- சாண்டில்யன், யவனராணி -

--------------------------------------------------------------------------------------------------------------------------------

ரா.கி.ரங்கராஜன்

ரா.கி.ரங்கராஜன் : 5.10.1927-ல் கும்பகோணத்தில் பிறந்தார் தந்தை மகாமகோபாத்தியாய ஆர்.வி. கிருஷ்மாச்சாரியார், மிகப் பெரிய சமஸ்கிருத வித்வான். ரங்கராஜன், தனது 16வது வயதில் எழுத ஆரம்பித்தார். 1946-ல் 'சக்தி' மாத இதழிலும் 'காலச்சக்கரம்' என்ற வார இதழிலும் உதவி ஆசிரியராகத் தொடர்ந்தார். 1950-ல் 'குமுதம்' நிறுவனம் சிறிது காலம் நடத்திய 'ஜிங்லி' என்ற சிறுவர் இதழில் சேர்ந்து, குமுதம் இதழில் 42 ஆண்டு காலம் உதவி ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார். இவர் 1500க்கும் மேற்பட்ட சிறுகதைகளும், 50 நாவல்களும், ஏராளமான கட்டுரைகளும், மொழிபெயர்ப்பு நாவல்களும் எழுதியுள்ளார். இவருடைய மூன்று நாவல்கள் திரைப்படமாக வெளிவந்துள்ளன. பல படைப்புக்கள் சின்னத்திரையிலும் இடம் பெற்றுள்ளன. ரங்கராஜன் 'சூர்யா', 'ஹம்ஸா ', 'கிருஷ்ணகுமார்', 'மாலதி', 'முள்றி', 'அவிட்டம்' - போன்ற புனைப்பெயர்களில் தரமான சிறுகதைகள், வேடிக்கை நாடகங்கள், துப்பறியும் கதைகள், குறும்புக் கதைகள், மழலைக் கட்டுரைகள், நையாண்டிக் கவிதைகள்-என பலதரப்பட எழுத்துக்களைத் தந்தவர், ஒவ்வொரு புனைப் பெயருக்கும் - நடையிலோ, கருத்திலோ, உருவத்திலோ எதுவம் தொடர்பு இல்லாமல் தனித்தனி மனிதர்போல் எழுதிய மேதாவி. இந்தப் பல்திறமைக்கு ஒரே ஒரு முன்னோடி தான் உள்ளர்.

- கல்கி


'ரங்கராஜன் ஒரு கர்ம யோகி, குமுதம் ஸ்தாபன விசுவாசம், ஆசிரியர் எஸ்.ஏ.பி. மேல் பக்தி, கிடைத்தது போதும் என்கிற திருப்தி, சக எழுத்தாளர்கள் மேல் பொறாமையற்ற பிரிவு, நேசம், வெள்ளைச் சட்டை, வெள்ளை வேட்டி, நண்பர்களைக் கண்டால் கட்டியணைத்து முதுகில் ஒரு ஷொட்டு-இவைதான் இவருடைய சிறப்புகள்'.

- சுஜாதா



எப்படி இந்த நாவலைக் கற்பனை செய்து, சம்பவங்களைப் பின்னினேன் என்று இருபத்தைந்து வருடங்களுக்குப் பிறகு இப்போது நினைத்துப் பார்க்கையில் எனக்கே ஆச்சரியமாக இருக்கிறது. அகதா கிறிஸ்டியன் நாவல்களைப் படித்ததால், வெவ்வேறு களத்தில், வெவ்வேறு பாத்திரங்களைக் கொண்டு கதையை ஆரம்பித்து, ஏதோ ஒரு கட்டத்தில் ஒன்று சேர்க்க வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டு இதை எழுத முடிந்தது.

எனக்குச் ‘சென்னை பாஷை’ சரிவர எழுத வராது. எனவே, மருதய்யன் சம்பந்தப்பட்ட இடங் களில் சம்பாஷனைகளை எழுதத் திணறினேன். என் அருமை நண்பர் புனிதன் அவ்வப்போது திருத்தித்தந்தார். எழுதியும் தந்தார். நன்றியுடன் அவரை நினைத்துக் கொள்கிறேன்.

ரா. கி. ரங்கராஜன்

========================================================================================

வெள்ளி கவிதைப்பக்கம்

"மைவடித்த கண் இரண்டும்
மண் பார்க்கும் பாவனையில்
கைப்பிடித்த நாயகனின்
கட்டழகு கண்டுவர
மெய்சிலிர்த்து முகம் சிவக்கும்
மெல்லிடையாள் கூந்தலிலே
தேவி நடம் ஆடுகிறாள்...
தேவன் வந்து பாடுகிறான்..." 

- கண்ணதாசன் 

======================================================================================

"இந்தக் காட்சியில் நடிக்கும்போது அவர் நடிப்பை பார்த்துக் கொண்டிருந்தேன்.  பிரமிப்பாக இருந்தது" என்றார் மேஜர் ஒரு பேட்டியில்.  

தான் அனாதை என்று நினைத்துக் கொண்டிருக்கும் வேளையில் ஆஸ்ரமத் தலைவர் நாகையா அவனுக்கு தாய் தந்தை உண்டு என்று சொல்லி மேஜர் அட்ரஸை கொடுக்க, அங்கு வந்து அவரை மிரட்டி, ஆம் மிரட்டி தாய் தந்தையர் விவரம் வாங்கும் கண்ணன் சிவாஜி, ஒரு நாள் நடு இரவில் மேஜரின் எச்சரிக்கையையும் மீறி  அப்பா அம்மா இருக்கும் வீட்டுக்கு சென்று அவர்களை பார்த்து, தந்தை கையால் குண்டடியும் பட்டு வருகிறான்.  மேஜரிடம் வந்து தாய் தந்தையைப் பார்த்த அனுபவத்தை சொல்ல உணர்ச்சி பொங்க பாடும் பாடல்.

எள்ளி நகையாடுவோர் ஆடட்டும்.  ரசிப்பார் ரசிக்கட்டும்.  நான் ரசிக்கும் கட்சி.

96 கருத்துகள்:

  1. நேற்றைய பகுதியை ஈடுகட்டுவது போல எல்லோருக்கும் சுவாரசியாமான பகுதிகள் ஸ்ரீராம்!!!!

    நேற்றைய கருத்துகளில் இருந்து எனக்கு நிறைய பாடங்கள்!

    இன்றைய பகுதிக்கு ஒவ்வொன்றாக வருகிறேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கீதா...   நேற்றைய பதிவுக்கென்ன குறை?  நன்றாகத்தானே இருந்தது.

      நீக்கு
    2. ம்ம்ம்ம்....உங்கள் பார்வைக்கு நன்றி ஸ்ரீராம்.

      கீதா

      நீக்கு
  2. இங்கு மாம்பழம் பக்கம் இன்னும் போகவில்லை. பங்கனபள்ளியே விலை கூடுதலோ?

    மாங்காய்கள் நிறைய வந்துவிட்டன. மாவடு கிலோ 200 ரூ சிலவாரங்கள் முன்பு....நேற்று 150.....

    ஆவக்காய் மாங்காய் கிலோ 80 ரூ அந்த வகை எல்லாமே 80 ரூ

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கு 15 மூன்றிலும் சில பழங்கள் வந்தன.  ஆனால் இன்னும் ருசியான பழத்தை என் நா சந்திக்கவில்லை!

      நீக்கு
    2. ஸ்ரீராம் பொதுவாகவே இப்ப மாம்பழங்களின் சுவை குறைந்துவிட்டது எனலாம்.

      இன்னும் முழு வீச்சு சீசன் வரவில்லை என்று தோன்றுகிறது

      கீதா

      நீக்கு
    3. சீசன் நாட்கள் இன்னும் போகவேண்டும்!

      நீக்கு
  3. ஸ்ரீராம், கண்டிப்பாக எந்த ஒரு சிறந்த வியாபாரியும் கொஞ்சம் கூட தனக்கு லாபம் இல்லாமல் விற்கமாட்டார். அவர் அந்த extra க்குக் காசு வாங்கவில்லை என்பது நல்ல மனம் என்றாலும் அதிலும் ஒரு win win தான். இதில் இருவருமே நல்லவங்கதானே!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அது உண்மைதான் என்றாலும் வேறு லாபங்களிலிருந்து குறைத்துக்கொண்டு எனக்கு நியாயமான விலையில் கொடுத்திருக்கலாம் என்று தோன்றியது!

      நீக்கு
    2. யோசிக்க வைக்கிறது...

      கீதா

      நீக்கு
  4. nice vs love என்று ஒன்று சொல்லப்படுவதுண்டு. இந்த nice லிருந்து love என்பதற்கு என்னை உயர்த்திக் கொள்ள மிக மிக மிக பிரயத்தனப்பட்டுக் கொண்டிருக்கிறேன்!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்னன்னு சுருக்கமா  சொல்லுங்க நானும் உயர முடிகிறததா பார்க்கிறேன். 

      நீக்கு
    2. ஒன் டு ஒன்!

      கீதா

      நீக்கு
    3. கீதாத்ரி மஹரிஷி என்ன சொல்ல வர்றாங்க?

      நீக்கு
    4. ஹா.. ஹா.. ஹா... கீதா.. இங்க பாருங்க...

      நீக்கு
  5. வேதாத்ரி மகரிஷி அவர்களின் இந்தக் கதையை படித்திருக்கிறேன், ஸ்ரீராம். பார்க்கப் போனால், பயம் என்று நேற்று சொன்னதற்கு இதையும் எடுத்து வைத்திருந்தேன் பயம் என்பது எப்படிச் சிறைப்படுத்தும் என்று. பயமே (insecured feeling) நம்மைத் தீய எண்ணங்கள் செயல்களுக்கும் கூட வழிவகுக்கும்...

    //பாம்புக்கு விஷப்பல் உண்டு என்பதே தெரியாத பச்சைக் குழந்தைக்கும் பயம் இல்லை. இந்த இரண்டுக்கும் நடுவே சிக்கிக்கொண்டவர்கள்தான் அரைகுறை ஞானத்தால் பயந்து பதறி அவதிப்படுகிறார்கள்./

    யெஸ்ஸு...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சொல்ல நிறைய விஷயங்கள் இருந்தாலும் ஒன்றுமேயில்லை என்றும் தோன்றுகிறது. நிறைய மறைமுக விஷயங்களும் எடுத்துக் கொள்ளலாம். பார்த்த உடன் பகிர்ந்து விட்டேன்.

      நீக்கு
    2. மறைமுகம் தான் ஸ்ரீராம் இதில்.

      கீதா

      நீக்கு
  6. மகரிஷி அவர்களின் வாக்குகள் பலவும் மனம் ப்ளஸ் தத்துவம் சார்ந்தே இருக்கும்

    கீதா

    பதிலளிநீக்கு
  7. எப்போது ஒருவனுக்கு நினைத்தபோதெல்லாம் ஆளுக்கு சந்தர்ப்பத்துக்கு ஏற்ற மாதிரி கருத்தை மாற்றிப் பேசத் தெரிகிறதோ, எப்போது சுயநலமே தன் கொள்கை என்ற எண்ணம் ஆழமாக இருக்கிறதோ, எப்போது சம்பந்தமில்லாமல் இன்னொருவரைத் தன் கருத்தில் கோர்த்துவிடத் தெரிகிறதோ (இங்கு ரஜினி), அப்போதே அவர் தேர்ந்த அரசியல்வாதியாகிவிடுகிறார். வாழ்க்கையில் செய்த தவறுகள் தன்னைப் பாதிக்காமல் இருப்பதும், அரசியல்வாதியானபின் தவறுகளுக்கு அஞ்சாமல் இருப்பதும், அதற்கு ஏற்றார்ப்போல் பொய்மையையே வாழ்க்கையாக்க் கொள்வதும் கமலதாசரின் தனிச் சிறப்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நெல்லை..  பொது  வாழ்க்கையில் கமலுக்கு ரஜினி பலவகைகளில் தேவலாம் என்றே தோன்றும்.

      நீக்கு
  8. பாரதீய மதங்களைப் பற்றிய சாண்டில்யன் கருத்து அருமை.

    இங்கு அமணராக இருந்து சைவத்திற்கும், சைவராக இருந்து வைணவத்திற்கும் மாறினவர்கள் எல்லோருமே அவர்கள் புரிதலினால் விருப்பப்பட்டு மாறியவர்களே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெரும்பாலும் ஆமாம். அப்போது ஒரு ஆதிசங்கரர் தோன்றினார்.. சமணத்திலிருந்து மக்களை இந்தப் பக்கம் இழுக்க!

      ஆனாலும் சாண்டில்யனின் இந்தப் பகுதியை நான் ரசித்தேன்.  பேஸ்புக்கிலும் பகிர்ந்தேன்.

      நீக்கு
  9. நாதஸ்வர ஓசையிலே தேவன் வந்து பாடும் பாடலை பெஇர்ந்திருக்கலாமே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ​பகிர்ந்திருக்கிறேனே... முன்னாடி!

      இந்தப் பாடலின் மிக அழகிய வரிகள் இவை.

      நீக்கு
  10. பாஹே அவர்களின் கவிதையைப் புரிந்து கொள்ள முடிகிறது என்றாலும் ஒரு சில இடங்களில் வார்த்தைகள் புரியவில்லை ஸ்ரீராம், எழுத்து குறிப்பாக.

    பிணைப்பு!!! புரிந்தது அன்றே அப்படி என்று அம்மா மறைந்த பின் அவர் எழுதியவற்றையும் பார்க்கும் போது...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா..  ஹா..  ஹா...  அந்த சிரமம் எங்களுக்கே உண்டு.  ஆனாலும் இதில் அவர் ரொம்ப நிறுத்தி எழுதி இருக்கிறார் என்று பேர்!

      நீக்கு
    2. கவிதையை ரொம்ப ரசித்தேன் ஸ்ரீராம். சூப்பரா...
      அதான் குட்டியும் அடிகள் பாய்கிறது!

      கீதா

      நீக்கு
    3. அப்படியா சொல்றீங்க? எனக்கு அதெல்லாம் வராதுன்னு அப்பா சொல்லி இருந்தார்.

      நீக்கு
  11. ஏதோ ஒரு கணக்குப் புதிருக்கான விடை போல!!!! மனைவியின் டிப்பார்ட்மென்ட் கேள்வி போல!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இல்லை.. இது அநேகமாக எல்லோரும் கேள்விப்பட்டிருப்போம்.

      நீக்கு
  12. இப்ப தலைப்புக்கு வருகிறேன்.

    என்னைப் பொருத்தவரை கமலுக்குத் தேவையில்லை அரசியல் என்று தோன்றும். நல்ல கலைத்திறன் உள்ளவர். அதில் அவர் இன்னும் சாதிக்க நினைக்கலாம். தேவையில்லாமல் தன் நல்ல எனர்ஜியை இப்படிச் சாக்கடையில் வீணடிக்கிறார்!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதில் என்ன லாபத்தைக் கண்டாரோ...   என் கருத்தும் அதேதான்.

      நீக்கு
  13. பாக்கியாரஜ் காணொளி முதல் காணொளி பார்த்ததில்லை இரண்டாவது பார்த்திருக்கிறேன். பின்னர் வருகிறேன் இனி கருத்துகளுக்கு

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விருப்பபப்படுபவர்கள், விரும்பும் நேரத்தில் அதைப் பார்க்கலாம் /கேட்கலாம்.  கவனியுங்கள்..  பாலகுமாரன் பற்றி சொல்லி இருக்கிறார்!!

      நீக்கு
  14. கமலா அக்கா ஏப்ரல் முதல் வாரம் மட்டும் லீவு சொல்லி இருந்தார்.  இரண்டு வாரங்கள் ஓடிவிட்டன..  என்ன காணோம்?  பயணக் களைப்பா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவர் ஒரு மாதம் என்றல்லவா சொல்லி நான் படித்த நினைவு.

      நீக்கு
    2. முதல் வாரம் என்று சொன்ன நினைவு எனக்கு!

      நீக்கு
  15. எங்கு நீ போனாய்..... மிகவும் ரசித்த கவிதை.

    பதிலளிநீக்கு
  16. 13ன் கீழ் வருவது அன்று கொடுத்த க்ளூவிற்குச் சரியாக இருக்கா?

    கெட்டிக்காரன் க்ளூ அதற்கு என்று நினைவு. அந்த இரண்டும் தான் எனக்குச் சிக்காமல் மற்றவை எல்லாம் விடை வந்திருந்தது, ஸ்ரீராம். உங்களுக்கு அனுப்பியிருந்ததில் க்ளியராக இல்லை இல்லியா..

    அது சரி கமலா அக்கா பயணத்திலிருந்து வந்திருப்பார் இல்லையா? காணலையே

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் விடைகளை அனுப்பி இருந்தால் அதை வெளியிட்டிருக்கலாம். அல்லது இங்கே கொடுங்கள் கீதா.

      நீக்கு
    2. குறுக்கெழுத்து போட்டிக்கு ரெஸ்பான்ஸ் குறைவாக இருப்பதால் மெனக்கெட வேண்டுமா என்று தோன்றுகிறது.

      நீக்கு
    3. அதேதான் எனக்கும் தோன்றியது! :(

      நீக்கு
  17. சென்றவாரம் பங்கனப்பள்ளி அழகாக இருந்தது கிலோ 200. அதற்குச் சில நாட்கள் முன்பு மார்க்கெட்டில் 100ரூ க்கு வாங்கினது சுமார்.

    வெயில் அதிகம் என்பதால் மதியம் பனிரண்டு மணிக்கு மேல் மார்க்கெட் போக யோசனையாக இருக்கு (அப்போதுதான் உரித்த நுங்கு வரும். சென்ற வருடம் ஆறு சுளை 50ரூ. இப்போ நாலு ஐம்பது ரூ). இந்தத் தடவை திராட்சை கிலோ 100 ரூக்கு வந்தது. மாம்பழம் பல வெரைட்டிகள் (பங்கனபள்ளிதான் சுமார் அவற்றில்) கிலோ 70 வரை வரும் என நம்புகிறேன். நம்மை அறியாமலேயே இந்த முறை எல்லாமே விலை அதிகமாவது தெரிகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெங்களூருவிலேயே வெயில் அதிகம் என்றால் நாங்கள் எல்லாம் எங்கே போவது, என்ன சொல்வது நெல்லை?  வறுபட்டுக் கொண்டிருக்கிறோம்.

      நீக்கு
    2. ஆமாம் போன வருடம் 6 நுங்கு உரித்தது 50 ரூ. இப்ப ஜெயநகரில் உரித்த நுங்கு 3 ஐம்பது ரூபாய்.

      கீதா

      நீக்கு
    3. எங்கள் பகுதியிலும்

      கீதா

      நீக்கு
    4. சித்தூரிலிருந்து திரும்பும்போது ஒரு கேரி bag ல் பத்து பனிரெண்டு நுங்கு சுளைகள் வைத்து 100 ரூபாய் என்று விற்றுக் கொண்டிருந்தார்கள்.  முருங்கை இல்லை போன்ற ஒன்றை வைத்து கூடையை மூடி இருந்தார்கள்.  வாங்கலாமா என்று கொஞ்சம் தயங்கி வாங்காமல் பயணத்தைத் தொடர்ந்தோம்.

      நீக்கு
    5. ஆஹா! நல்ல மலிவு ஸ்ரீராம். வாங்கியிருக்கலாம்

      கீதா

      நீக்கு
    6. வரும்போது வருத்தத்துடனேயேதான் வந்தேன்.  முத்தலாக இருந்தாலும் கூட பயணத்தில் செலவாகி இருக்கும்.

      நீக்கு
  18. ஸ்ரீராம் அம்பிகா மறைத்துப் பேசவில்லை என்றது இப்ப அவர் பேட்டி..அதாவது இப்ப அவர் வயது....

    கமல் சொன்னது அப்போது....அதன் பின் அவர் மனம் மாறியிருக்கலாம். அம்பிகாவிடமும் அப்போது கேட்டிருந்தால் ஒரு வேளை அவருக்கும் ஆர்வமில்லை என்று சொல்லியிருக்கலாம்.

    மனம் என்பது இன்று ஒன்றை நினைக்கும் நாளை மாறலாம்...அது சூழல், அல்லது அடி மனதில் இருப்பவை முதலில் வெளிப்படாமல் பின்னால் வெளிப்படலாம்...ஸோ அதை விட்டுவிடலாம்

    ஆனால் கமல் தன் மனம் மாறியதைச் சொல்லலாம். வெளிப்படையாக.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அம்பிகாவிடம் அப்போது யாரும் அந்தக் கேள்வியைக் கேட்டிருக்க மாட்டார்கள்.  எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.  அவர் நிறைய மோசமான அனுபவங்களை சந்தித்தார்.  ஒரு டிரைவரை கொலை செய்து துண்டு துண்டாக வெட்டி வீசினார் என்று அவர்மேல் குற்றம் சாட்டப்பட்டது.  அப்போது அவர் எதிர்பார்த்த யாரும் அவர் ஆதரவுக்கு வரவில்லை.

      நீக்கு
  19. சிவாஜி அரசியல்வாதியானதில் எனக்கு இஷ்டமே கிடையாது. நான் சிவாஜி ரசிகன். பலமுறை அவரிடமே சொல்லி இருக்கிறேன். அரசியல் காரணமாக நடிகர் சிவாஜியை இழந்து விட்டோம். //

    ஹாஹாஹா இது சொன்ன ஆளுக்கும் பொருந்தும்!!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆனால் அரசியலிலும் தான் நல்ல நடிகன் என்று நிரூபிக்கிறார் போலும்

      கீதா

      நீக்கு
    2. அரசியலில் அவர் நடிகனாகக் கூட இருப்பதற்குக் கூடத் தகுதி இல்லை. பச்சோந்தி.

      நீக்கு
  20. வேதாத்திரி மகரிஷி கூறியிருக்கும் கதை அருமை! //நீங்களே முயற்சி செய்து ஒரு நல்ல எண்ணத்தைத் தொடர்ந்து மனதில் வைத்திருங்கள்.
    தீய எண்ணம் வருவதற்கு இடமிருக்காது.// முயற்ச்சிக்கிறேன். நன்றி __/\__

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க பானு அக்கா. ரசித்ததற்கு நன்றி.

      நீக்கு
  21. சாண்டில்யன் பக்கத்தை இன்று சாய்ஸில் விடவில்லை. நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விடமாட்டீர்கள் என்றுதான் எதிர்பார்த்தேன்.

      நீக்கு
    2. விடக்கூடாது என்றெல்லாம் கங்கணம் கட்டிக் கொள்ளவில்லை. படிக்க ஆரம்பித்தேன், சுவாரஸ்யமாக இருக்கவே தொடர்ந்து படித்தேன்.

      நீக்கு
    3. பாரா அமைப்புகளும் ஒரு காரணம் இல்லையா?!

      நீக்கு
  22. பாக்யராஜ் பேட்டி கேட்டிருக்கிறேன். நான் பெரும்பாலும் வேலை செய்யும் பொழுதுதான் யூ ட்யூப் கேட்பேன். அதனால் அப்போது கவனிக்காததை இப்போது கவனித்தேன், சுமதி கட்டிக்கொண்டிருக்கும் புடவை அழகாக இருக்கிறது. ஹிஹி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா.. ஹா.. ஹா... இதுபோல பாக்யராஜ் பேட்டிகளில் ஒன்றிரண்டில் நான் பாக்கியராஜ் ஷர்ட் பற்றி அங்கேயே கமெண்ட் கொடுத்திருந்தேன்!

      நீக்கு
  23. சாய் வித் சித்ராவில் அம்பிகாவின் பேட்டியும் கேட்டேன். வயதாவது தெரியத்தான் தெரியும், அதை அக்செப்ட் செய்து கொள்ள வேண்டும். என்றார். பொதுவாக நடிகைகள் என்றால் மக்காக இருப்பார்கள் என்றுதான் நமக்கு ஒரு எண்ணம் இருக்கும். ஆனால் அம்பிகா தெளிவாக பேசியதை கேட்டபொழுது ஸ்மார்ட்! என்று தோன்றியது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம்,  எனக்கும் பிடித்திருந்ததது.  குழந்தைத்தனமாக, வெளிப்படையான உணர்வுகளுடன் பேசினார்.

      நீக்கு
  24. உங்கள் அப்பாவின் கவிதை மிகவும் சிறப்பு.

    பதிலளிநீக்கு
  25. தெய்வ மகனை பற்றியே இரண்டு செய்திகள். நீங்கள் பகிர்ந்திருக்கும் காட்சியைப் நானும் ரசித்தேன், குறிப்பாக அப்பா சிவாஜியின் நடிப்பு! மகன் சிவாஜிதான் கொஞ்சம் ஒவர் ஆக்டிங் என்ரு தோன்றும். டைரக்டர் ஸ்ரீதரைத்தான் அந்த ரோலுக்கு மாடலாக கொண்டாராமே?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படிதான் நானும் படித்தேன்.  எனக்கு முதலில் நடு சிவாஜி அதாவது கண்ணனைதான் ரொம்பப் பிடிக்கும்.

      நீக்கு
  26. மாவடு கிடைத்திருக்கும், கீதா வாங்கி ஊறுகாய் போட்டிருப்பார் என்று நினைத்தேன். கோடை மழைக்குப் பிறகு கிடைக்கும் மாம்பழம்தான் ருசியாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சில மாம்பழ வகைகள் ரொம்ப ருசியாக இருக்கும். பெயர்தான் தெரியாது.

      நீக்கு
  27. Tell me about yourself - "எனக்குள்ளே ஒரு மிருகமுண்டு... அதை உன்னிடம் சொல்வதெப்போ” கவிதை நினைவுக்கு வந்தது.

    மாம்பழம் - நாங்கள் இன்னும் வாங்கவில்லை. சொல்லிக்கொண்டிருக்கிறார்!

    பாக்யராஜ் - ஒரு சில படங்கள் பிடிக்கும் - பல படங்கள் பிடிக்காது.

    கமல் - பேசாமல் இருப்பது நலம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க வெங்கட்...  அந்தக் கவிதையை முழுசுமா இங்கு சொல்லுங்களேன்...

      நீக்கு
    2. இதைப் பற்றி தேடியபோது கிடைத்தது..

      http://vayalaan.blogspot.com/2017/03/8.html

      அங்கு என் பதிலும் கண்டேன்.

      நீக்கு
    3. பாலகுமாரனின் மெர்க்குரிப் பூக்கள் கதையில் வரும் கவிதை இது....

      எனக்குள்ளே ஒரு மிருகமுண்டு
      அதை உன்னிடம் சொல்வதெப்போ?
      நாளை, நாளை மறுநாள்,
      நாலு நாள் கழித்து - மெல்ல
      ஒரு ஞாயிறு மாலை வெளியில்,
      அதை உன்னிடம் சொல்வதெப்போ?
      எனக்குள்ளே ஒரு மிருகமுண்டு
      அதைச் சொல்ல ஏன் இத்தனை தயக்கம்
      வால் தூக்கி தசைகள் காட்டிப்
      பல்லிளித்துக் குளம்பால் கீறும்
      எனக்குள்ளே இருக்கும் மிருகம்
      உனக்கொரு கால் பிடித்துப் போனால்.

      நீக்கு
    4. நண்பர் பரிவை சே. குமார் அவர்களின் பக்கத்தில் என்னைப் பற்றி நான் எழுதிய பதிவிலும் இந்தக் கவிதையை மேற்கோள் காட்டியிருப்பேன்... நானும் இப்போது படித்தேன் - என்ன எழுதியிருக்கிறேன் என்று.

      அந்தப் பதிவில் கருத்துச் சொன்ன பலர் இப்போது இல்லை என்பதிலும் ஒரு வருத்தம் தான்.

      நீக்கு
    5. // அந்தப் பதிவில் கருத்துச் சொன்ன பலர் இப்போது இல்லை என்பதிலும் ஒரு வருத்தம் தான். //

      Yessu...!

      நீக்கு
  28. ​அம்மாவின் பேரில் அப்பா வைத்திருந்த அன்பு கவிதை ஊற்றாய் பொங்கி எழும்போது புரிகிறது.
    நானும் இந்த தேர்தலில் வாக்களிக்கவில்லை. சென்று வெயிலில் வரிசையில் நிற்கும் தெம்பு இல்லை. மனைவி சென்று வாக்களித்து வந்தார்.

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க JKC ஸார்...   ஓ..  அங்கு இன்று தேர்தல் நாளோ...  எங்கள் வீட்டில் வயதானவர்களுக்கு தபால் வோட்டு என்று முன்னரே வந்து வாங்கிச் சென்றனர்.  எங்கள் வீட்டில் என்றால் எங்கள் உறவுகள் வீட்டில்.

      நீக்கு
    2. ]தேர்தல் ஏப்ரல் 9 முடிந்து விட்டது ரிசல்ட் மே 4.

      நீக்கு
  29. அதற்கு பாக்கியராஜ் பதில் சுவாரஸ்யம். எல்லோரும் எல்லா இடத்திலும் சிறந்து விளங்கி விடுவதில்லை!//

    அதுஇயலாத காரியம் ஸ்ரீராம். ரொம்ப அரிது.

    ஒன்று கதை எழுதுவது என்பது வேறு. அதைத் திரைக்கதையாக மாற்றி வசனம் எழுதுவது என்பது கொஞ்சம் கஷ்டமான விஷயம். ஒரு சின்ன கதையைக் கூட இழுத்துவிடலாம்..ப்ளாட் கிடைத்துவிடுமே அப்புறம் சில சுவாரசியங்கள் சம்பவங்கள் சேர்த்து ... ....அனால் பெரிய கதையை அப்படிச் செய்வதற்குத் தனியான திறமை வேண்டும்.

    அவர் டார்லிங் டார்லிங் கதை உருவான விதம் சொன்னதும் ஆச்சரியமாக இருந்தது. ஒன் லைன் கூட இல்லாமல் ...ஆனால் 5 நாட்கள் கடந்ததற்குச் செலவாகியிருக்குமே!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்.  நான் இதைக் கேட்டு பல நாட்களாகி விட்டன.  ஞாபகப்படுத்திக் கொள்ள வேண்டும்!

      நீக்கு
  30. சுமதி அவர்களின் கேள்விகள் சில செம ஷார்ப்! ஆனால் பாக்யராஜ் சிலதுக்குச் சரியான அதற்கான பதில்கள் கொடுக்கவில்லையோ என்று தோன்றியது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குறிப்பாக, அந்த ஃபோக்கஸ் ஏன் எப்போதுமே ஹீரோ/ஆண் மேல் வைக்கறீங்க என்று கேட்பதற்குச் சரியான பதில் இல்லை

      கீதா

      நீக்கு
    2. ஆம் எனக்கும் சில கேள்விகளுக்கு அவர் பதில் சொல்லும் போது அப்படித்தான் தோன்றியது

      நீக்கு
  31. ஸ்ரீராம் உங்க இட்டுக்கட்டுப் பாடல் ரொம்பவே பொருந்திப் போகுது.

    கீதா

    பதிலளிநீக்கு
  32. சிவாஜி பற்றி அந்த சிவாஜி ரசிகர் பகுதி இல்லையா? இவர் சொன்னவிதம் அந்த சீனைப் பார்க்க வேண்டும் என்று சொல்கிறது!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  33. சாண்டில்யன் பக்கம் அப்பகுதி வாசித்ததும் டாட்டா நிறுவனத்தில் நடந்த அச்செய்தி நினைவுக்கு வருகிறது.

    கீதா

    பதிலளிநீக்கு
  34. ராகிர அவர்க:ளின் புனைபெயர்கள் ரொம்ப வித்தியாசம்... எழுத்தை வைத்துக் கண்டுபிடிக்க முடிந்திருக்காதோ?

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒவ்வொரு புனைப் பெயருக்கும் - நடையிலோ, கருத்திலோ, உருவத்திலோ எதுவம் தொடர்பு இல்லாமல் தனித்தனி மனிதர்போல் எழுதிய மேதாவி. //

      பார்த்துவிட்டேன் இதையும். செம இல்ல? மேதாவிதான்

      கீதா

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!