12.8.26

டூரிஸ்ட் இடங்கள், பிரபல கோயில் நகரங்கள், போன்றவற்றில் உருப்படியான ஹோட்டல்களே இருப்பதில்லையே. ஏன்? + சரோஜாதேவி பகுதி 11

 

கேள்வி பதில்கள் :

நெல்லைத்தமிழன் : 

1 அரசியல்வாதிகள் அவங்க ஆட்சி செய்யும்போது அயோக்கியர்களாகவும் பிறர் ஆட்சி செய்யும்போது உத்தமர்களாகவும் பேசுவது ஏன்? சமீப உதாரணங்கள் கேள்வித்தாள் கசிவு, தமிழகத்தில் கருத்துச் சுதந்திரம் வேண்டும் என இப்போது பேசும் ஸ்டாலின். 

# தற்காலத்தில் அரசியல்வாதி என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று முடிவு செய்து விட்டார்கள். " நீ மட்டும் என்ன செய்தாய் ? இதுவேதானே " என்பது அதன் பிரதான‌விசேஷம்.‌

& அரசியல்வாதி என்ற ஒரு வார்த்தை போதும் வார்த்தை மாறுபவர்கள் என்பது தெரிந்துகொள்ள! 

2 பெண்கள் தங்களுக்குப் பிடித்த உணவை செய்கிறார்களா இல்லை பெரும்பாலும் ஹோட்டல் நடத்துபவர்கள் செய்வதுபோல கணவன் குழந்தைகள் மாமியார் மாமனார் என அவர்களோட விருப்பத்திற்காகப் பண்ணி அதையே தங்களுக்குப் பிடித்ததாக எண்ணிக்கொள்கிறார்களா?

# தாங்கள் நன்றாகச் செய்யும் பலவற்றையும் செய்து எல்லாரையும் "பழக்கி" விடுகிறார்கள்.‌

3 நல்ல டூரிஸ்ட் இடங்கள், லட்சம் பேர் போகும் கோயில் நகரங்கள், போன்றவற்றில் உருப்படியான ஹோட்டல்களே இருப்பதில்லையே. என்ன காரணம்?

# எது செய்தாலும், அது எவ்வளவு மோசமானாலும் அத்தனையும்  விற்றுப் போகும் என்பதால்தான்.

& டூரிஸ்ட் இடங்களில் உள்ள ஹோட்டல்கள் பற்றி எனக்கு அதிகம் தெரியாது.  கோவில் பக்கத்தில் உள்ள ஹோட்டல் = அது ஹோட்டல் நடத்துபவர்களுக்கு கடவுள் இட்ட சாபம். ' இங்கே பாரு, இந்தத் தலத்துக்கு வருபவர்கள்  எனக்காக வருபவர்கள் - அதை உனக்காக வருபவர்களாக மாற்றாதே - அதை மீறி நன்றாக எல்லாம் செய்தால், உன் வியாபாரத்தை கெடுப்பேன்' என்று சொல்லி சாபம் கொடுத்திருப்பார்! 

4. என்னுடைய கணிப்பு, ஒரு பொருளுக்கு அளவுக்கு அதிகமான விளம்பரங்கள் வந்தால், பொருள் சுத்த வேஸ்டாக இருக்கும் என்பது. அல்லது 10 பைசா பொருளை 5 ரூபாய்க்கு விக்கறான்னு நினைப்பேன். உங்கள் எண்ணம் என்ன?

# முற்றிலுமாக அப்படியல்ல.  சில பொருட்களை வேண்டுமென்றே குறைந்த விலைக்கு ஆரம்பத்தில் மிக அதிக விளம்பரத்துடன் விற்று போட்டியாளர்களை கூண்டோடு அழித்து விடுவதும் ஒரு வியாபார உத்தி.

5. குழந்தைக்கு மாட்டுப்பால் நல்லது என்று சொல்றாங்களே. அப்போ கன்றுக்கு பால் வேண்டாமா? நாம் அதீதமா பால் சாப்பிட்டா கால்சியம் வரும் அது வரும் இது வரும்னு ஏமாற்றுகிறோமா?

# காட்டுப் பிராணியாக இருந்த மாடு வீட்டுப் பிராணி ஆன பிறகு அதன் உணவு முறையும் அதன் பால் சுரக்கும் அளவும் பெருத்த மாற்றத்துக்கு உள்ளானது என்பதால் இப்பொழுது நாம் பால் அதிகம் சாப்பிடா விட்டால் கன்றுக்கு மட்டுமல்ல,  மாட்டுக்கும் அது ஆரோக்கியத்தைப் பாதிக்கும்.

6. 'நான் சொல்றேன்.. இந்த டூத் பேஸ்டுதான் நல்லது', 'நான் சொல்றேன் இந்த ஹேர் ஆயில் உறுதி செய்யப்பட்டது' என்றெல்லாம் டாக்டர் மாதிரி கோட் போட்டுக்கிட்டு விளம்பரத்துல வர்றாங்களே.. இவங்க போலி டாக்டரா? இல்லை அந்தப் பொருளை இருபது ஆண்டுகள் ஆய்வகத்துல சோதனை செய்திருக்காங்களா? எப்படி அரசு இந்த போலி டாக்டர் விளம்பரங்களை அனுமதிக்குது?

# இப்போதிருக்கும் சட்டங்கள் கெடுதல் விளைவிக்காத அளவுக்கு விளம்பரங்கள் சாமர்த்தியமாக அமைக்கப்படுகின்றன.

& சோதனை எல்லாம் ஒன்றும் செய்திருக்கமாட்டார்கள் என்று நூற்றுக்கு 90 பேர்கள் சொல்கிறார்கள். நீங்க வேண்டுமானால் நூறு பேர்களைக் கேட்டுப்பாருங்கள்! 

= = = = = = = =

படமும் பதமும் : 

நெல்லைத்தமிழன் : 


பேர்ல் ரவுண்டபவுட் பற்றி எழுதும்போது இந்தப் படத்தையும் பகிரத் தோன்றியது. இதற்கு முன்பு நின்றுகொண்டு நாங்கள் எல்லோரும் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டிருக்கிறோம். பிற்காலத்தில் இது முற்றிலுமாக அழிக்கப்படும் என்று நினைத்திராத சமயம் அது. அதன் மீது அரசுக்கு எவ்வளவு கோபம் என்றால், அந்தப் படத்துடன் கூடிய நாணயத்தைக்கூட அரசு மாற்றிவிட்டது. இப்போதைய தலைமுறைக்கு அப்படி ஒரு ரவுண்டபவுட் இருந்ததே தெரியாது. 


எனக்கு என் அப்பாவை ரொம்பவே பிடிக்கும். (நல்லா அவர்கிட்ட அடிலாம் வாங்கியிருக்கேன்) ஆனாலும் அவருக்கு என் மீது தனிப்பட்ட அன்பு உண்டு (இந்தப் பய எதுக்கும் லாயக்கில்லாதவனாகவே இருக்கானே... இவன் எப்படிப் பிழைக்கப்போகிறான் என்ற எண்ணத்தினால் தோன்றிய அன்பாகவும் இருக்கலாம்). 

2000ல், என் சகோதரன் சௌதியில் வேலை பார்த்துவந்தான். அப்போ என்னிடம், அப்பாவை பஹ்ரைன் கூட்டிவாயேன், நாங்களும் வந்து பார்க்கிறோம் என்றான் (சௌதிக்கு வரவழைப்பது மிகக் கடினம்). அப்போது எனக்கு செலவுக்கணக்கு பார்க்கும் வழக்கம் அதிகம். அதனால் முயற்சி செய்யவில்லை. பிறகு காசைப்பற்றி அவ்வளவாகக் கவலைப்படாத நிலை வந்தபோது என் அப்பாவைக் கூப்பிட்டேன். அவர் இனிமேல் நான் விமானத்தில் அவ்வளவு நேரம் பயணிக்க முடியாது என்று சொல்லிவிட்டார். அப்பா மறைந்த அடுத்த வருடம் அம்மாவை பஹ்ரைன் கூட்டிவந்தேன் (முதல் இரண்டு முறை, நான் சென்னை வந்து, விமானத்தில் கூட்டிவருவேன். திரும்பச் செல்லும்போது கூட்டிக்கொண்டு விட்டுவிட்டு வருவேன். அப்படி என் நிலைமை இருந்தது). அம்மாவை என்னுடைய காரில் பல இடங்களுக்குக் கூட்டிச் சென்றது என் மனதில் மிகுந்த மகிழ்ச்சியை உண்டாக்கியது.

= = = = = = = = = = = = =

KGG பக்கம் : 

சரோஜாதேவி தொடர் கதை 

சென்ற வாரம் - சுட்டி : பகுதி 10: ராபின்ஹூட் நாநா ! 

இனி 

இந்த வாரப் பகுதி. 

பகுதி 11 : " நாநாவின் திட்டம் : MCEL 01

" இரண்டு மூன்று நாட்கள் இங்கே தங்குவதற்கு முன்னேற்பாடாகத்தானே வந்திருக்கே?" என்று கேட்டான் நாநா. 

 " ஆமாம். ஆஸ்பத்திரிக்குப் போகிறேன் என்று சொல்லிவிட்டு வந்ததால மாற்று டிரஸ், லாப்டாப் எல்லாம் கொண்டு வந்தேன். இரு கார் டிக்கியிலிருந்து எல்லாத்தையும் கொண்டு வந்துடறேன்" என்று சொல்லி விட்டு சென்றான் பாபா. 

அவற்றைக் கொண்டு வந்ததும், " நீ நம்ம கெஸ்ட் ரூம்ல எல்லாத்தையும் வச்சுகிட்டு சௌகரியமாக தங்கிக்கோ" என்றான் நாநா. 

" டின்னருக்கு என்ன வேண்டும், எவ்வளவு வேண்டும் என்று சொல். நான் அறுஷ்காவுக்கு மெசேஜ் அனுப்பி வரவழைத்துவிடுகிறேன்." 

" அப்போவே கேட்க நெனச்சேன் - அறுஷ்கா ஆக்சுவலா எங்கே வேலை பார்க்கிறாங்க? முரளீஸ் கஃபேயிலா அல்லது இங்கேயா?"

" முரளீஸ் கஃபே, அங்கே வேலை பார்ப்பவர்கள், அறுஷ்கா, எக்ஸ்பர்ட் ஏகாம்பரம், கணபதி ஃபார்மசி ஆள்,  நீ, நான் இன்னும் நிறைய பேர் எல்லோரும் பனானா எண்டர்பிரைசஸ்லதான் வேலை பார்க்கிறோம். முழு விவரங்கள் அப்பப்போ நேரம் வரும்போது சொல்கிறேன்" என்றான் நாநா. 

" ஒரே மர்ம தேசமாக இருக்கே" என்றான் பாபா. 

******. *****

மறுநாள் காலை நாநா " ஆனந்தின் அம்மா அப்பா இருவரும் நாளை மறுநாள் இங்கே வருவதாக சொல்லியிருக்காங்க. " என்றான். 

" அப்போ நான் நாளை மாலைக்குள் வீட்டுக்குப் போய் ஜயராமனிடம் ஆனந்த்தின் அப்பா அம்மா, வீணாவையும் அவரையும் பார்த்துப் பேச மறுநாள் மாலை வருவார்கள் என்று சொல்கிறேன்" என்றான் பாபா. 

" அதுதான் சரி. நான் அவர்களை அழைத்துக் கொண்டு நாளை மறுநாள் உன் வீட்டுக்கு வருகிறேன். ஜயராமன் வீட்டுக்கு நாம் நான்கு பேரும் போவோம்" என்றான் நாநா. 

" பாவனா ஆனுவல் ரிப்போர்ட் பாபாவுக்கு அனுப்பிட்டியா?"

"அனுப்பிட்டேன் பாஸ்" 

" அப்படியா? நான் லாப் டாப்ல பார்த்து திப்பிசம் ஏதாவது இருக்கான்னு ஒரு மணி நேரத்தில் சொல்றேன்" என்றான் பாபா. 

முதல் வேலையாக ஜயராமனுக்கு ஒரு வாட்ஸ் அப் செய்தி அனுப்பினான். 

" வணக்கம் சார். என் பார்ட்னர் தன்னுடைய அமெரிக்க ஃப்ரெண்ட் ஆனந்துக்கு வீணா ஃபோட்டோவை நேற்று அனுப்பியிருந்தான். ஆனந்த் அதைப் பார்த்து தனக்கு வீணாவைப் பிடித்திருப்பதாக செய்தி அனுப்பியுள்ளார். ஆனந்தினுடைய பெற்றோர்கள் கோவையில் இருக்கிறார்கள். அவர்கள் இருவரும் உங்களைப் பார்க்க இரண்டு நாட்கள் கழித்து வர இருக்கிறார்கள். நான் நாளை மாலை ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி வந்துவிடுவேன். நெற்றிக் காயம் சரியாகி வருகிறது. நாளை முழுவதுமாக சரியாகிவிடும். 
மற்ற விவரங்கள் நாளை மாலையில் சொல்கிறேன் " 

பிறகு பாவனா அனுப்பிய ஆனுவல் ரிப்போர்ட்களை நிதானமாக ஆழமாக ஆராய்ந்தான். 

*"** **** 
பாபா, நாநாவிடம் சொன்னான்: 
"ஆடிட்டர் ரிப்போர்ட்களை ஆராய்ந்ததில் சில பாயிண்டுகள் கிடைத்துள்ளன. உதாரணத்திற்கு ஒன்று - கடந்த வருட ரிப்போர்ட்டில் இருந்த unclaimed funds இந்த வருட ரிப்போர்ட்டில் வெகுவாகக் குறைத்து காட்டியுள்ளார்கள். கிட்டத்தட்ட ஒன்றரைக் கோடி ரூபாய் ஒரே வருடத்தில் எப்படி குறைந்தது என்று தெரியவில்லை" என்றான். 

" சரி வா நாம் இருவரும் இன்றைக்கு அந்த பாங்கிற்குப் போவோம். நீ முதலில் போய் மேனேஜரைப் பார்த்து அவரிடம் நீ ப்ரைவேட் டிடெக்டிவ் என்றும் ஒரு க்ளையண்டுக்காக பழைய டெப்பாஸிட்தாரர் ஒருவர் பற்றி சில தகவல்கள் வேண்டும் என்றும் சொல். சமயத்திற்குத் தகுந்தவாறு கற்பனைகளை சமயோசிதமாக உபயோகித்து சமாளிக்க கற்றுக் கொள்ள உனக்கு ஒரு சந்தர்ப்பம். அவர் எந்தெந்த விஷயங்களுக்கு தடுமாறுகிறார் என்று நோட் பண்ணு. எங்கேயாவது மாட்டிக்கொள்வோம் என்று தோன்றினால் அருவமாகி எஸ்கேப் ஆகிவிடு. பிறகு நான் பார்த்துக் கொள்கிறேன் " என்றான் நாநா. 

" சரி. வெற்றிகரமாக விஷயத்தை முடிப்போம். இதன் மூலம் நாம் சாதிக்க வேண்டியது என்ன?" 

" பாங்க் மேனேஜரின் வீக் பாயிண்ட் என்ன என்று தெரிந்துகொள்வது. " 

" அதை வைத்து அவரை ப்ளாக் மெயில் செய்யப் போகிறாயா?" 

" சேச்சே அப்படி எதுவும் செய்யமாட்டேன். அவருடன் பேசி, நம்ம முரளீஸ் கஃபே எக்ஸ்பான்ஷனுக்கு பாங்க் லோன் கிடைக்கும்படி செய்துவிடுவேன். லோனுக்கு நான் கேரண்டி கையெழுத்துப் போடுவேன்." 

" நேரடியாகவே லோன் கேட்டு வாங்கலாமே?" 

" அங்கேதான் நீ பாங்க் மேனேஜர் போன்ற ஆட்களைப் புரிந்துகொள்ள வேண்டும். தனக்கு ஏதாவது ஆதாயம் கிடைத்தால்தான் லோன் கிடைக்க சிபாரிசு செய்வார்கள்" 

" சரி . பார்ப்போம். கிளம்பு " என்றான் பாபா. 

(தொடரும்) 

53 கருத்துகள்:

  1. ஹோட்டல் என்றாலே உடலுக்கு தீங்கு விளைவிக்கிற இடம். நம் knowledgeக்கு தெரியாத அறியாதவர்கள் சமைக்கிற இடம். Food poison என்பதெல்லாம் இப்பொழுது சகஜமாக இருக்கிறது. இதில் உருப்படியான, உருப்படியில்லத என்ற பாகுபாடெல்லாம் உண்டா, என்ன?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதிலும் இருக்கிறது. பொதுவாக லாரிக்கார்ர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள் போன்றவர்கள் எல்லா இடங்களிலும் சாப்பிட மாட்டார்கள். இந்த இந்த இடங்களில் சாப்பிட்டால் வயிறு பாதிக்காது என்று அறிந்து வைத்திருப்பார்கள்.

      நீக்கு
    2. நல்ல கேள்வி, நல்ல பதில். நன்றி.

      நீக்கு
    3. காஞ்சீபுரத்தில் இருந்தபோது, ஆட்டோ டிரைவர் (நல்லவரா இருந்தார்) எங்களை ஹோட்டல் ரமணாஸில் சாப்பிடச் சொன்னார், ஜைன காஞ்சி போகும் வழியில். என்னடா கிராமத்து களை இருக்கு என்று யோசனையுடன் சாப்பிட்டோம். மிக அருமையான உணவு. அவங்க பிராஞ்ச் காந்தி ரோடிலும் இருக்காம் (காஞ்சியில்). பலர் (ஆட்டோ டாக்சி டிரைவர்கள் ) வெளியே சாப்பிட்ட வழக்கம் இல்லாததால் சரியாகச் சொல்லத் தெரியாது.

      ஹோட்டல் தீங்கு விளைக்கிற இடம் என்னும் ஞானோதயம் (தவறாச் சொல்லலை இயல்பாச் சொல்றேன். இது எனக்குமே) நம் வயிறு சின்ன வயது போல இல்லாமல் எதைப் போட்டாலும் ஏற்றுக்கொள்வதில்லை என்பதை நாம் கண்ட பிறகு ஏற்படுகிறது. நாம சுலபமா ஹோட்டலைக் குறை சொல்லிவிடுகிறோம் ஹா ஹா

      நீக்கு
  2. அரசியல்வாதிகள், அவங்க -- என்று அன்னியப்பட்டு விலகிப் பேசுவதே ஒரு அரசியல் தானோ? நமக்கு வேண்டப்பட்ட ஆளும் தரப்பினர் இந்த பட்டியலில் வராதவராத உத்தமர்கள் போல நினைக்கிற அளவுக்கு நாம் அறியாமையில் உழல்கிறோமா, என்ன?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜீவி சார்... எத்தனையோ அரக்கர்கள் கூட்டம் இருந்தாலும் நமக்கு சட் என ஒரு சிலருடைய பெயர்கள்தாம் நினைவுக்கு வரும். ஊழலின் ஊற்றுக்கண், தீயசக்தி, மோசமான அரசியல்வாதி என்றால் யாருக்காவது காமராஜர், பக்தவத்சலம் நினைவு வருமா? அரசியலில் இருப்பதால் அவர்களும் சில தவறுகள் செய்திருப்பார்கள்... காமராஜர் அவரை அறியாமலேயே சர்வாதிகாரம் குடும்ப அரசியலுக்குத் துணை போனது போல.

      எத்தனையோ எழுத்தாளர்கள் இருக்க, அவரைப் போல் வராது இவருடைய எழுத்து எனக்கு உயிர் என்று சொல்வதால், மற்றவர்கள் சரியாக எழுத்த் தெரியவில்லை என்று அர்த்தம் கொள்ள முடியுமா?

      நம் கருத்து விநோதமா? தவறா என்பதைப் பொதுக் கருத்துடன் ஒப்பிட்டுப் பார்த்தால் தெரிந்துவிடும்.

      நீக்கு
    2. ஏன் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார், டி.பிரகாசம், ராஜாஜி போன்றவர்களை
      குறிப்பிடவில்லை? அதுவும் ஒரு வகை அரசியல் பாற்பட்டதோ?

      நீக்கு
    3. ஜீவி சார் குறிப்பிட்டிருப்பவர்கள் ரொம்பப் பழங்காலம். எனக்கெல்லாம் காமராஜர் காலத்திலிருந்துதான் தமிழக அரசாங்கம் பற்றி தெரிய வந்தது.

      நீக்கு
    4. சோழர்கள் காலத்தில் நாமெல்லாம் வாழ்ந்தோமா, நெல்லை? கல்வெட்டுகள், செப்பேடுகளில் குறிப்பிட்டிருப்பதை வைத்து அந்த காலத்தின் அரசியல் பற்றி தெரிந்து கொள்கிறோம் இல்லையா? அந்த மாதிரி தான்.
      நாம் செய்யும் தவறு என்னவென்றால் தற்கால அரசியல் என்பது வரலாற்று உண்மைகளை நடந்தவைகளை நடந்தவாறே பதிவு பண்ணாமல் அந்தந்த காலத்து அரசியல் விருப்பு-வெறுப்புகளுக்கு ஏற்ப அந்தந்த தலைமுறையினரை வளர்த்யெடுப்பது என்று ஆகிவிட்டது.
      ராஜாஜி என்றால் குலக்கல்வி, இந்திரச் காந்தி என்றால் எமர்ஜென்ஸி,
      என்று அடையாளப்படுத்துகிற மாதிரி வரலாறு என்பது மக்கள் மனத்தில் கட்டமைக்கப்படுவதாக ஆகிவிட்டது. தேசப்பிதச மஹாத்மாவைக் கூட அவர் காலத்தில் வாழாத நீங்கள் இந்த கட்டமைப்புகளின் வழியாகத்தான் தெரிந்து கொள்ள வேண்டிய துர்பச்க்கிய நிலையே இன்றைய அரசியல் கொடுமை. இதில் உள்ள ஆபத்து என்னவென்றால் வருங்கால தலைமுறையினர் இந்த தேசத்திற்காக அதன் வளர்ச்சிக்காக தன்னலம் மறந்த தியாகிகளை நினைவில் கொள்ளாமல் போவதும் அந்தந்த காலத்து கட்டமைக்கப்படும் அரசியலே வரும் தலைமுறையினருக்கு
      தேசத்தின் வரலாறாக அந்தந்த காலகட்டத்தில் வாழ்ந்து வருங்காலத்தில் மறக்கப்படும் பரிதாப நிலை தான்.

      நீக்கு
    5. என்க்கு முதன் முதலில் அரசியல் பற்றித் தெரியவந்தது, எம்.ஜி.ஆர் கட்சி ஆரம்பித்தபோதுதான். 77 (?) தேர்தலில் என் அப்பா, ரேடியோ செய்திகளைக் கேட்டுச் சொல்லும்படிச் சொல்லி குளிக்கச் சென்றார் (இந்திரா தோத்தாரா என்று தெரிந்துகொள்ள ஹாஹா. அவ்வளவு வெறுப்பு அவர் மீது போலிருக்கு). அரசியல் அறிவு என்று பார்த்தால், ஜெ. வந்த பிறகுதான். அதற்கு முன்னர், எம்ஜிஆர், இரட்டை இலை, மத்தியில் கைச் சின்னம். கருணாநிதியைப் பற்றிப் படித்திருந்ததால் அவரை நினைத்தாலே தீய சக்தி என்ற எண்ணம் மனதில் படிந்துவிட்டது.

      நீக்கு
    6. ஜீவி சார்... உங்கள் கருத்து சரியானதுதான் என்றாலும் நாமும் ஓரளவு அனலைஸ் செய்து புரிந்துகொள்வோம் இல்லையா? இதிகாசங்கள் உள்ளதை உள்ளபடியே எழுதியிருப்பதால் ஒவ்வொரு பாத்திரத்தின் நல்லது கெட்டதுகளை படிக்கிறோம். யாரும் நம் எண்ணங்களைக் கட்டமைத்து துச்சாதன்ன் துரியோதன்ன் கெட்டவர்கள் தருமர் நல்லவர் என்று புரிந்துகொள்வதில்லை. அவர்கள் செயல்கள் மூலமாக நாம் கொள்ளும் எண்ணம்.

      ராஜராஜன் கோயில்கள் கட்டினான், தெய்வ பக்தி இருந்தது, தன் சிம்மாசனத்தை சித்தப்பாவுக்கு விட்டுக் கொடுத்தான் என்பதால் அவன் நல்லவன் என்ற பிம்பம் நம்மில் எழுகிறது. முதலாம் குலோத்துங்கன் (எனக்கென்னவோ காலம் இடிப்பதாகத் தோன்றுகிறது. இரண்டாம் குலோத்துங்கனா இருக்கும். அப்படி வைத்துக்கொண்டால் இராமானுஜர் காலம் இடிக்குது) இராமானுஜரின் கண்ணை எடுக்க நினைத்து அவரது இரண்டு சீடர்களின் கண்ணை எடுத்ததால் வரலாற்றில் கிருமி கண்ட சோழன் (தொண்டை கேன்சர்?) என அழைக்கப்படுகிறான். அதனால் அவன் நல்லவனா கெட்டவனா என்ற சர்ச்சை உள்ளது. மற்றபடி வரலாறு கட்டமைக்கிறது எனச் சொல்ல இயலாது)

      நீக்கு
    7. ஒருவர் மறைந்து பல தசாப்தங்களுக்குப் பிறகு அவரது செய்கைகளின் விளைவை விமர்சிக்கிறோம், அவரைப் பற்றித் தவறாகச் சொல்கிறோம். ஆனால் அதை அவர்கள் செய்தபோது இதனை எண்ணியிருக்க மாட்டார்கள் (ஏனென்றால் நல்லவர்களாக பல கோடிப்பேர் எண்ணிய அளவு அவர்கள் வாழ்ந்திருக்கின்றனர்). உதாரணம் காந்தி முஸ்லீம்களுக்கு அளவுக்கு அதிகமாகச் சலுகைகள் கொடுத்தது, தனக்குப் பிடித்த நேருவை மேலே கொண்டுவந்தது. ராஜாஜி, தீய சக்தி கருணாநிதியுடன், மிக நல்லவரான காமராஜைத் தோற்கடிக்க அரசியல் கூட்டணி சேர்ந்து தமிழகத்தை நாசமாக்கியது

      நீக்கு
    8. ராஜாஜி அண்ணாத்துரையைத்தான் ஆதரித்தார். அண்ணா காலமான பின் கருணாநிதி காலத்தில் தி மு க ஆதரவைக் கைவிட்டு காமராஜரை ஆதரிக்க ஆரம்பித்தார். ராஜாஜி, ஈ வெ ரா ஆதரிக்கும் அணியின் எதிரணியையே எப்போதும் ஆதரித்தார்.

      நீக்கு
    9. ராஜாஜியை எனது மனசாட்சி என்று மஹாத்மா உருவகித்தது, அவரது சுதந்திர போராட்ட பங்களிப்பு, வேதாரண்ய உப்பு சத்தியாகிரகம், அரசு அமைப்பில் அவரது தூய்மையான தனிமனிதர் செயல்பாடு எல்லாம் அவர் காமராஜரை எதிர்த்து அண்ணாவுடன் சேர்ந்து கூட்டணி அமைந்ததும் பஸ்பமாகிப் போய் விட்டதா நெல்லை? அதே மாதிரி தேசப்பிதாவைப் பற்றிய கணிப்புகளும். எந்த நாட்டிலும் இல்லாத வினோதங்கள் இவை.

      நீக்கு
  3. "ஒரே மர்மத் தேசமாக இருக்கிறதே. ." என்றான் பாபா.
    கதையை அருமையாகக் கொண்டு போகிறீர்கள்.

    பதிலளிநீக்கு
  4. சரோஜாதேவி --- தொடர்கதை என்ற தலைப்பில் 'சரோஜாதேவி' என்ற வார்த்தையை மட்டும் கொட்டை எழுத்தில் போடுங்கள். முடிந்தால் கலரில்.
    ஃபேஸ்புக் அறிமுகத்திலும் அப்படியே. அந்த வர்த்தைக்கு இருக்கு ம் கவர்ச்சியே அலாதி தான்!.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. :)))) அடக் கடவுளே! இந்தக் கதையை kindle வெளியீடு செய்யும்போது வேறு பெயர் வைப்பதாக உள்ளேன்.

      நீக்கு
    2. புத்தக மேலட்டையை தலைப்பை வாசித்தவுடன் வாசிக்க, வாங்க உந்துதல் ஏற்பட வேண்டும். அதற்கு சரோஜாதேவி தலைப்பு தான் எடுப்பானது. இந்த தலைப்பு எதேச்சையாக அரிதில் உங்களுக்குக் கிடைத்த தலைப்பு. கதையோட்டத்திற்கு பொருந்தி வருகிற தலைப்பு.
      கை நழுவ விட்டு விடாதீர்கள். பத்திரமாய் மனசில் பொத்தி வைத்துக் கொள்ளுங்கள்.

      நீக்கு
  5. முன்னோர்கள் நல்லாசி வழங்குவார்களாக
    இன்று ஆடி அமாவாசை ..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணங்கி, பூஜித்து, மனதார நினைத்து, நல்லாசி பெறுவோம்!

      நீக்கு
  6. ஆடி அமாவாசை விரதமிருந்து தந்தை,மாமனாரை வணங்கினோம்.

    சரோஜாதேவி இவ்வாரம் த்ரில் இல்லாமல் அமைதியாகப் போகிறது. அடுத்து என்னவோ.....

    படமும் பதமும் கண்டோம் .

    பதிலளிநீக்கு
  7. எல்லா ஊர்களிலும் அப்படி இருப்பதில்லை. நாங்க போன ஊர்களில் எல்லாம் நல்ல ஓட்டல்களாகவே கிடைத்தன. அறை வாடகை 2000/- அல்லது அதற்கும் மேல் எனில் எல்லாமும் சுத்தமாகவும், நன்றாகவும், இருக்கும். உபசரணையும் இருக்கும். அந்த மாதிரி அயோத்தி, கான்பூர், லக்னோ, போன்ற ஊர்களில் கிடைத்தது. ச்த்திரகூட்டில் கொஞ்சம் சிரமம் தான். என்றாலும் சமாளிச்சுண்டோம். தில்லியிலும் ரயில் நிலையம் அருகே நல்ல ஓட்டல்கள் கிடைக்கும். திருப்பதியில் (கீழே) இருக்கவே இருக்கு பீமவிலாஸ். நகருக்குள்ளேயும் 2,3 இடங்களில் இருக்கு. பாரம்பரியத்தைக் காப்பாற்றிக் கொண்டு வந்த ஓட்டல் அது. இப்போல்லாம் தெரியாது. கோல்ஹாப்பூர், பண்டர்பூரில் எல்லாம் ட்ராவல்ஸ் காரங்களே ஏற்பாடு பண்ணினாங்க. அதே போல் தான் கயிலை யாத்திரை, முக்திநாத் யாத்திரைகளிலும். பத்ரியில் டாடா குழுமத்தின் அறக்கட்டளையைச் சேர்ந்த ஒரு ஓட்டல். இமயமலைப்பகுதிக்கு எப்போப் போனாலும் கட்டில், அறைக்குள்ளேயே குளிர் போக்கும் விதமாக மின்சார அடுப்பு, கம்பளி, ரஜாய், செருப்பு போன்றவை கொடுப்பாங்க. கழிவறை, குளியலறையில் எப்போதும் வெந்நீர் வரும். அதே போல் கொடைக்கானலிலும் தமிழ்நாடு ஓட்டல் நன்றாக இருக்கும். மின்சாரம் போனால் ஜெனரேட்டர் போடுவாங்க. வெந்நீர் 24 மணி நேரம் உத்தரவாதம். காலை உணவு எல்லா ஓட்டல்களையும் போல இலவசம். பஃபே முறையில் தான் இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கல்கத்தாவில் முதலில் போன ஓட்டல் சுமார் தான். பின்னர் கோமளவிலாஸுக்கு வந்து விசாரித்துக் கொண்டு அருகே இருந்த தெருவில் இருந்த ஒரு ஓட்டலுக்குப் போனோம். கேரளாக்காரர்கள் நடத்தியது. கீழேயே அறை கொடுத்தாங்க. எல்லா வசதியும் இருந்தது. காலை உணவு எப்போதும் போல் இலவசம்.

      நீக்கு
    2. நெ த சொல்வது டூரிஸ்ட் ஸ்பாட்டுகளில் உள்ள சிறு உணவகங்கள். தங்குமிடங்கள் அல்ல.

      நீக்கு
  8. பெண்கள் சமைப்பதைப் பற்றிய கேள்விக்கு பெரியவர் கொடுத்திருக்கும் பதில் சரியானது. பலரும் அப்படித் தான் செய்கின்றனர். ஆனாலும் சிலர் சில குறிப்பிட்ட காய்கள் அவங்களுக்குப் பிடிக்காது எனில் வாங்கவே மாட்டார்கள். அதைச் சமைக்கவும் மாட்டார்கள். நாம் போய் வாங்கினாலோ, சமைக்கலாம் என நினைச்சாலோ காயை அப்படியே வேலை செய்யும் பெண்ணுக்குக் கொடுத்துடுவாங்க. இது என் சொந்த அனுபவம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கு கோவைக்காய் பிடிக்காது. எனக்குப் பண்ணக் கூடாது என்ற கன்டிஷனில் எப்போதாவது வாங்கி வருவேன். கத்தரில எனக்கு வதக்கல் பிடிக்காது. எனக்கு பண்ணணும்னா தேங்கா போட்ட கறி (புடலை போன்றவற்றிர்க்கும்), கத்தரி புளிக்கூட்டு என்று சொல்வேன்.

      நீக்கு
    2. எனக்கும் கோவம்+ கோவக்காய் பிடிக்காது!

      நீக்கு
  9. அரசியல் வியாதிகள் மட்டுமல்ல, மக்களுமே இந்தக் காலத்தில் சற்றே உண்மையை விட்டு விலகித் தானே செயல்படுகின்றனர். ஜந்தர் மந்தர் போராட்டத்துக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுத்த சினிமா நடிக, நடிகைகள் இப்போ ஜார்க்கண்டில் போராட்டம் என்றதும் கிட்டேயே வரவில்லை. ஏனெனில் ஜார்க்கண்டில் பரம்பரை ஆட்சிக்காரர்கள். அவர்களை எதிர்க்க யாரும் இல்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜார்க்கண்டில் மாணவர்கள் போராடுகிறார்கள். போலீஸிடம் அடியும் வாங்குகிறார்கள். ஏனோ, அங்கே கரப்பான்பூச்சிகள், காணக் கிடைக்கவில்லை! மாணவர் துன்பத்தைப் பொறுக்கமுடியாத அரசியல் கட்சித் தலைவன் யாரும் ராஞ்சியில்போய் நின்றுகொண்டு ’முதல்வர் மன்னிப்புக் கேட்கவேண்டும், கல்வி அமைச்சர் ராஜினாமா செய்யவேண்டும், JPSC, JSSC தலைகள் உருளவேண்டும்’ என்றெல்லாம் கோஷமிட்டதாகத் தெரியவில்லை..

      மக்கள் கவனித்தவாறுதான் இருக்கிறார்கள்..

      நீக்கு
    2. வெளிநாட்டு நிதி கண்காணிப்புச் சட்டம் நிறைவேறிய பிறகு இத்தகைய போராட்டங்களை கரப்பான்களும் கறையான் குடும்பமும் குறைத்துக்கொள்ளும் என்று எதிர்பார்க்கலாம்.

      நீக்கு
    3. நெ த சரியான அவதானிப்பு.

      நீக்கு
    4. எங்கே? பயந்தாங்குளி அரசு அதைத் தான் பார்லிமென்ட் கூட்டுக்குழுவுக்கு அனுப்பி வைச்சிருக்கே! அங்கே இருந்து இப்போதைக்கு வராது. ஆகவே இந்த மசோதா விவாதத்துக்கே வருவது கஷ்டம். :(

      நீக்கு
    5. ஜார்க்கண்டில் காங்கிரஸ் சார்பு. ஆகவே அதிகம்

      நீக்கு
  10. வைத்தீஸ்வரன் கோயிலில் சுமார் 10/15 வருடங்கள் முன்னர் கோயில் தெப்பக்குளம் அருகே நல்ல நல்ல ஓட்டல்கள் இருந்தன. சாப்பாடுக்கும் கவலை இல்லை. ஆனால் மூன்று வருடங்கள் முன்னர் போனப்போக் கொஞ்சம் சிரமம் தான். பின்னர் சதாபிஷேஹம் ஓட்டலைத் தேடிக் கொண்டு போனோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஶ்ரீரங்கத்தில் அமுது ஹோட்டல் தவிர வேற உருப்படியா ஏதேனும் இருக்கா? ரங்கவிலாஸ் போனதில்லை

      நீக்கு
    2. வைத்தீஸ்வரன் கோயில் சதாபிஷேகம் ஹோட்டல் தங்கியுள்ளேன். ஸ்ரீரங்கத்தில் காவிரி ஆற்றுங்குப் பக்கத்தில் ஒரு காபி ஹோட்டல் நன்றாக இருக்கும் என்று சொல்லி கருடா அவென்யூவில் உள்ள என் நண்பன் அழைத்துச் சென்றான். ஹோட்டல் பெயர் ஞாபகம் இல்லை. டிஃபன் பரவாயில்லை ரகமாக இருந்தது.

      நீக்கு
    3. GKC Iyer Hotel. இப்போவும் நாங்க அவசரத்துக்கு அங்கே டிபன் வாங்குவோம். விலை எல்லாம் அதிகம் இருக்காது. விருந்தினர் நிறைய வந்தால் ராத்திரிக்கு ஆர்டர் கொடுத்தால் பண்ணிக் கொடுப்பாங்க.

      நீக்கு
  11. பொதுவாக நான் எப்போதுமே விளம்பரத்தைப் பார்த்து எதுவும் வாங்குவதில்லை. ஆயிரம் தரம் யோசிப்பேன். அப்படி இருந்தும் பதஞ்சலியில் சில தயாரிப்புகளை நம்பி வாங்கியதில் அதனால் பலன் ஏதும் கிட்டவில்லை. அந்த கோதுமை நூடுல்ஸ் மட்டும் வாங்கிச் சாப்பிடலாம். சேமியா போல் தான் இருந்தது. கேஷ் கந்தி என்னும் தலைக்குத் தடவும் எண்ணெய் வாங்கியதில் மிகவும் ஏமாற்றம். சுத்தமாய்த் தலைமயிரெல்லாம் கொட்டிப் போய்விட்டது. அது வரை நீலி பிருங்காதி தான் (கோட்டக்கல் தயாரிப்பு) வாங்கிக் கொண்டிருந்தேன். இதை மாற்றியதில் ஒத்துக்கவே இல்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் ஆதிவாசி ஹேர் ஆயில் (என்னா விலை அது)..லிட்டர் 2000) பிறகு கும்பகோணம் தயாரிப்பு (லிட்டர் 1800 ரூ), லோக்கல் ஸ்பெஷல் தேங்காய் எண்ணெய் (லிட்டர் 1000 ரூ) என்று பலவற்றை வாங்கி வைத்திருக்கிறேன். அவைகள் என்னைப் பார்த்து, வாங்கியிருக்க வேண்டிய காலத்தில் வாங்காமல், இப்போ வாங்கி என்ன பிரயோசனம் என்று சிரிக்கின்றன.

      நீக்கு
    2. நான் தலைக்கு எண்ணெய் எதுவும் வாங்குவது கிடையாது. வாரம் ஒருமுறை தேங்காய் எண்ணெய் தடவி, பிறகு மீரா ஷாம்பு போட்டு குளிப்பதோடு சரி.

      நீக்கு
    3. //வாரம் ஒருமுறை தேங்காய் எண்ணெய் தடவி, பிறகு மீரா ஷாம்பு போட்டு// நல்லவேளை அதற்கு அப்புறம் ட்ராக் மாறிட்டீங்க. நான் எதிர்பார்த்தது, இரவில் பத்திரமாக ஆணியில் மாட்டி வைப்பேன் என்று. ஹா ஹா ஹா

      நீக்கு
  12. சரோஜா தேவி கின்டிலில் வெளியாகப் போகிறாரா? சரி தான். ஆனால் இந்த வாரம் என்னமோ தொய்வடைந்து விட்டதே. சூடு பிடிக்கணும். அடுத்தவாரம் பார்க்கலாம்.

    பதிலளிநீக்கு
  13. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  14. கேள்விகளும், பதில்களும் நன்றாக இருக்கிறது.
    படமும் பதமும் படங்கள் அருமை. நெல்லைத்தமிழன் அம்மா,அப்பா நினைவுகள் பகிர்வும் அம்மாவின் படமும் அருமை.

    பதிலளிநீக்கு
  15. கதை நன்றாக போகிறது.

    //எங்கேயாவது மாட்டிக்கொள்வோம் என்று தோன்றினால் அருவமாகி எஸ்கேப் ஆகிவிடு. பிறகு நான் பார்த்துக் கொள்கிறேன் " என்றான் நாநா.//

    அருவமாகி நிறைய செய்யலாம் போலவே ! பாங்க் லோன் கிடைக்க இப்படி ஒரு வழியா ?

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!