கத்தரி பொடி அடைச்ச கறியமுது
கத்தரிக்காய்னா
அலர்ஜி என்று சொல்பவர்களைத் தவிர, மற்றவர்களுக்கு இது ஒரு அட்டகாசமான
கறியமுது. குழந்தைகளுக்கும் இது ரொம்பப் பிடிக்கும் (எல்லாம் நம்ம
அனுபவம்தான்.
என் பெண், எந்தக் காயோ கூட்டோ பிடிக்கலைனா, என்னோட ப்ரெசென்ஸ் இருந்ததுனா,
மோர் சாதத்துடன் சேர்த்துச் சாப்பிட்டுவிடுவாள். இரண்டுபேருக்குமே இது
பிடித்தமானது). பெரும்பாலான வீடுகளில் இதனை வழக்கமாகச் செய்வதில்லை என்று
தோன்றுகிறது. வெறும் கத்தரிக்காய் கறி, கூட்டு
எல்லாம் குழந்தைகளுக்குப் போரடித்தால், இதைச் செய்துபாருங்கள். ரொம்ப
சுலபம். நான் Mallல் புதுசா சின்னக் கத்தரிக்காயைப் பார்த்தேன். (வேற என்ன
பண்ணறது. உங்களை மாதிரி, ஏக்தம் ஃப்ரெஷ் காய்கறிகள், அதுவும் அருகிலேயே
கிடைக்கும் ஊரிலா நானிருக்கிறேன்.. சென்றமுறை தாம்பரம்
காய்கறி மார்க்கெட்டில் அவ்வளவு புதிய காய்கறிகள், கிட்டத்தட்ட இலவசம்
என்று எண்ணும் அளவில் குறைந்த விலையில் விற்பதைப் பார்த்தேன்..ம்ஹ்ம்..
இதைவிட, சென்ற வருடம் ஸ்ரீரங்கத்தில், திருவானைக்கா கோவில் அருகில், கள்ளன்
எடுத்த வாழைப்பூவை 10 ரூபாய்க்கு விற்றுக்கொண்டிருந்தார்
ஒரு அம்மா. 4 வாழைப்பூவும், கோவிலுக்குப்போயிட்டு வரதுக்குள்ள காலி.
நமக்குக் கொடுத்துவச்சது அவ்வளவுதான்). அப்போதான் இதைப் பண்ணிப்பார்க்கலாமே
என்று வாங்கிவந்தேன்.
அரைக் கிலோ கத்தரிக்காய்க்கான அளவு.
கடாயில்
சிறிது எண்ணெய் விட்டு, பெருங்காயம் சிறிது, 3 மிளகாய் வற்றல், 2 ஸ்பூன்
துவரம்பருப்பு, 1 ஸ்பூன் உளுத்தம்பருப்பு, 1 ஸ்பூன் கடலைப் பருப்பு, 2
ஸ்பூன் தனியா
(கொத்தமல்லி விரை) இவற்றை வறுக்கவும். பின்பு ஆறவைக்கவும். இதனுடன் 2
ஸ்பூன் தேங்காய் சேர்த்து மிக்சியில் கரகரப்பாக அரைத்துக்கொள்ளவும்.
அரைத்த பொடியுடன், தேவையான உப்பு, மஞ்சப் பொடியைச் சேர்த்து நன்றாகக்
கலக்கிவைத்துக்கொள்ளுங்கள்.
சின்னக் கத்தரிக்காய்தான் இதற்கு நன்றாக இருக்கும். சமயத்தில் சிலவகைக் கத்தரிக்காய்கள் கொஞ்சம் கைக்கும். (கசப்பு இல்லை. துவர்ப்பும் இல்லை. இரண்டும் கலந்தது) அதனால் எதுக்கு வம்பு என்று நான் இரண்டு வகைக் கத்திரிக்காய்களும் வாங்கிக்கொண்டேன். வெள்ளையா இருப்பவன் பொய் சொல்ல மாட்டான் (?) என்பதுபோல் கத்தரிக்காயில் சரியாகச் சொல்லமுடிவதில்லை. கத்தரியை நன்கு அலம்பி, காம்பைமட்டும் எடுத்துவிட்டு, பாவாடையை (? கத்தரியின் மேற்புறம் பச்சையாக இருப்பவை. இதுக்கு வேறு வார்த்தை இருக்கிறதா?) விட்டுவிடலாம். எனக்குக் கத்தரிக்காய் பாவாடை ரொம்பப் பிடிக்கும்னு எழுதினா, ஸ்ரீராம் ‘கத்தரிக்காய்’ங்கற வார்த்தையை விட்டுவிட்டுப் படித்தால், சென்சார் பண்ணவும் வாய்ப்பிருக்கு. ஒவ்வொரு கத்தரியையும் நான்காக ஓரளவு பொடியை அடைக்கும்விதமாகத் திருத்தவேண்டும். (என் ஹஸ்பண்ட் ஆரம்பத்துல இப்படித்தான் பண்ணிட்டிருந்தா. அப்புறம் நாங்கள் சமையலுக்கு அவசரப்படுத்தும்போது, இந்த அழகுபடுத்துவதற்கு நேரமில்லை என்று, நான்கு துண்டுகளாகத் திருத்திவிடுவாள். கறியமுதுக்கும் பொடிதூவிக் கரேமது என்பாள். அதுவும் நல்லாத்தான் இருக்கும். இருந்தாலும் அடைச்ச கறியமுது மாதிரி லுக் வராது).
ஒவ்வொரு கத்தரிக்காயைச் சிறிது பிளந்துகொண்டு, பொடியை அடைக்கவேண்டியதுதான். ஒரு பாத்திரத்தில் இட்டு, கொஞ்சம் புளிஜலம் தெளிக்கவும். இதனை, இட்லியை வேகவைப்பதுபோல், குக்கரில் சிறிது நேரம் வேகவைக்கவேண்டும். அரை வெந்தால் போதும். மறந்துபோய், சாதம் வேகவைப்பதுபோல், குக்கரில், மேற்பகுதியில் ஆவி வரவொட்டாமல் மூடிவிட்டால், கத்தரிக்காய்கள் நைந்துவிடும். எடுத்தா, கத்திரிக்காய் ஷேப் ரொம்ப மாறியிருக்கக்கூடாது.
இனி, கடாயில், எண்ணெய் விட்டு, கடுகு, கருவேப்பிலை திருவமாறி, அதில் இந்த அரை வெந்த கத்திரிக்காய்களை ஜாக்கிரதையாக இட்டு, கொஞ்சம் திருப்பிவிடவேண்டியதுதான். கொஞ்சம் பொடி பாக்கி இருந்தால், இப்போ கத்தரிக்காய் மேல் போட்டுவிடலாம். எண்ணெய் கொஞ்சம் தாராளமாக விடலாம். கத்தரிக்காய் அதிகமா எண்ணெய் எடுத்துக்காது.
இந்தக் கத்தரிக்காய் பொடி அடைச்ச கறியமுது, மோர்க்குழம்பு வகையறாவுக்கு (புளிசேரி, மோர்க்குழம்பு, மோர்ச்சாத்துமது போன்ற வகைகள்) ரொம்ப நல்லா இருக்கும். எனக்கு மோர் சாதத்துக்குத் தொட்டு சாப்பிடுவதற்கு ரொம்பப் பிடிக்கும். குறைந்த நேரத்தில் இந்த வார இறுதியில் பண்ணின இந்தக் கறியமுது மிகுந்த மனநிறைவைத் தந்தது.




