திங்கள், 14 நவம்பர், 2016

"திங்க" க்கிழமை 161114 :: கத்தரி பொடி அடைச்சு கறியமுது - நெல்லைத்தமிழன் ரெஸிப்பி



கத்தரி பொடி அடைச்ச கறியமுது

கத்தரிக்காய்னா அலர்ஜி என்று சொல்பவர்களைத் தவிர, மற்றவர்களுக்கு இது ஒரு அட்டகாசமான கறியமுது. குழந்தைகளுக்கும் இது ரொம்பப் பிடிக்கும் (எல்லாம் நம்ம அனுபவம்தான். என் பெண், எந்தக் காயோ கூட்டோ பிடிக்கலைனா, என்னோட ப்ரெசென்ஸ் இருந்ததுனா, மோர் சாதத்துடன் சேர்த்துச் சாப்பிட்டுவிடுவாள். இரண்டுபேருக்குமே இது பிடித்தமானது). பெரும்பாலான வீடுகளில் இதனை வழக்கமாகச் செய்வதில்லை என்று தோன்றுகிறது. வெறும் கத்தரிக்காய் கறி, கூட்டு எல்லாம் குழந்தைகளுக்குப் போரடித்தால், இதைச் செய்துபாருங்கள். ரொம்ப சுலபம். நான் Mallல் புதுசா சின்னக் கத்தரிக்காயைப் பார்த்தேன். (வேற என்ன பண்ணறது. உங்களை மாதிரி, ஏக்தம் ஃப்ரெஷ் காய்கறிகள், அதுவும் அருகிலேயே கிடைக்கும் ஊரிலா நானிருக்கிறேன்.. சென்றமுறை தாம்பரம் காய்கறி மார்க்கெட்டில் அவ்வளவு புதிய காய்கறிகள், கிட்டத்தட்ட இலவசம் என்று எண்ணும் அளவில் குறைந்த விலையில் விற்பதைப் பார்த்தேன்..ம்ஹ்ம்.. இதைவிட, சென்ற வருடம் ஸ்ரீரங்கத்தில், திருவானைக்கா கோவில் அருகில், கள்ளன் எடுத்த வாழைப்பூவை 10 ரூபாய்க்கு விற்றுக்கொண்டிருந்தார் ஒரு அம்மா. 4 வாழைப்பூவும், கோவிலுக்குப்போயிட்டு வரதுக்குள்ள காலி. நமக்குக் கொடுத்துவச்சது அவ்வளவுதான்). அப்போதான் இதைப் பண்ணிப்பார்க்கலாமே என்று வாங்கிவந்தேன்.



அரைக் கிலோ கத்தரிக்காய்க்கான அளவு.

கடாயில் சிறிது எண்ணெய் விட்டு, பெருங்காயம் சிறிது, 3 மிளகாய் வற்றல், 2 ஸ்பூன் துவரம்பருப்பு, 1 ஸ்பூன் உளுத்தம்பருப்பு, 1 ஸ்பூன் கடலைப் பருப்பு, 2 ஸ்பூன் தனியா (கொத்தமல்லி விரை) இவற்றை வறுக்கவும். பின்பு ஆறவைக்கவும். இதனுடன் 2 ஸ்பூன் தேங்காய் சேர்த்து மிக்சியில் கரகரப்பாக அரைத்துக்கொள்ளவும்.  அரைத்த பொடியுடன், தேவையான உப்பு, மஞ்சப் பொடியைச் சேர்த்து நன்றாகக் கலக்கிவைத்துக்கொள்ளுங்கள்.




சின்னக் கத்தரிக்காய்தான் இதற்கு நன்றாக இருக்கும். சமயத்தில் சிலவகைக் கத்தரிக்காய்கள் கொஞ்சம் கைக்கும். (கசப்பு இல்லை. துவர்ப்பும் இல்லை. இரண்டும் கலந்தது) அதனால் எதுக்கு வம்பு என்று நான் இரண்டு வகைக் கத்திரிக்காய்களும் வாங்கிக்கொண்டேன். வெள்ளையா இருப்பவன் பொய் சொல்ல மாட்டான் (?) என்பதுபோல் கத்தரிக்காயில் சரியாகச் சொல்லமுடிவதில்லை. கத்தரியை நன்கு அலம்பி,  காம்பைமட்டும் எடுத்துவிட்டு, பாவாடையை (? கத்தரியின் மேற்புறம் பச்சையாக இருப்பவை. இதுக்கு வேறு வார்த்தை இருக்கிறதா?) விட்டுவிடலாம். எனக்குக் கத்தரிக்காய் பாவாடை ரொம்பப் பிடிக்கும்னு எழுதினா, ஸ்ரீராம் ‘கத்தரிக்காய்’ங்கற வார்த்தையை விட்டுவிட்டுப் படித்தால், சென்சார் பண்ணவும் வாய்ப்பிருக்கு.  ஒவ்வொரு கத்தரியையும் நான்காக ஓரளவு பொடியை அடைக்கும்விதமாகத் திருத்தவேண்டும். (என் ஹஸ்பண்ட் ஆரம்பத்துல இப்படித்தான் பண்ணிட்டிருந்தா. அப்புறம் நாங்கள் சமையலுக்கு அவசரப்படுத்தும்போது, இந்த அழகுபடுத்துவதற்கு நேரமில்லை என்று, நான்கு துண்டுகளாகத் திருத்திவிடுவாள். கறியமுதுக்கும் பொடிதூவிக் கரேமது என்பாள். அதுவும் நல்லாத்தான் இருக்கும். இருந்தாலும் அடைச்ச கறியமுது மாதிரி லுக் வராது).




ஒவ்வொரு கத்தரிக்காயைச் சிறிது பிளந்துகொண்டு, பொடியை அடைக்கவேண்டியதுதான். ஒரு பாத்திரத்தில் இட்டு, கொஞ்சம் புளிஜலம் தெளிக்கவும். இதனை, இட்லியை வேகவைப்பதுபோல், குக்கரில் சிறிது நேரம் வேகவைக்கவேண்டும். அரை வெந்தால் போதும். மறந்துபோய், சாதம் வேகவைப்பதுபோல், குக்கரில், மேற்பகுதியில் ஆவி வரவொட்டாமல் மூடிவிட்டால், கத்தரிக்காய்கள் நைந்துவிடும். எடுத்தா, கத்திரிக்காய் ஷேப் ரொம்ப மாறியிருக்கக்கூடாது.




இனி, கடாயில், எண்ணெய் விட்டு, கடுகு, கருவேப்பிலை திருவமாறி, அதில் இந்த அரை வெந்த கத்திரிக்காய்களை ஜாக்கிரதையாக இட்டு, கொஞ்சம் திருப்பிவிடவேண்டியதுதான். கொஞ்சம் பொடி பாக்கி இருந்தால், இப்போ கத்தரிக்காய் மேல் போட்டுவிடலாம். எண்ணெய் கொஞ்சம் தாராளமாக விடலாம். கத்தரிக்காய் அதிகமா எண்ணெய் எடுத்துக்காது.




இந்தக் கத்தரிக்காய் பொடி அடைச்ச கறியமுது, மோர்க்குழம்பு வகையறாவுக்கு (புளிசேரி, மோர்க்குழம்பு, மோர்ச்சாத்துமது போன்ற வகைகள்) ரொம்ப நல்லா இருக்கும். எனக்கு மோர் சாதத்துக்குத் தொட்டு சாப்பிடுவதற்கு ரொம்பப் பிடிக்கும்.  குறைந்த நேரத்தில் இந்த வார இறுதியில் பண்ணின இந்தக் கறியமுது மிகுந்த மனநிறைவைத் தந்தது.


48 கருத்துகள்:

  1. ஹிஹிஹி,கத்திரிக்காயை எப்படிச் சமைச்சாலும் சாப்பிடுவேன். :)

    பதிலளிநீக்கு
  2. அருமை. பொறுமையோடு அழகாய் செய்முறை படங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
    இறைவனுக்கு படைக்கும் படத்தை மறக்காமல் பகிர்வது மகிழ்ச்சி. இறைவனுக்கு வைத்த உணவு மேலும் சுவையாகவும், உடல்நலத்திற்கு பாதுகாப்பாகவும் இருக்கும். இன்றைய தலைமுறைகள் இதை தெரிந்து கொள்ளவும் உதவும்.

    பதிலளிநீக்கு
  3. அடடே வித்தியசமாகத்தான் தெரிகின்றது....

    பதிலளிநீக்கு
  4. கத்தரிக்காய் புராணம் பாடாத கவிஞன் யார்?
    சமையலில் கத்தரிக்காய் பயன்படுத்தி செய்யப்படும் ஐட்டங்களின் மீது மையல் கொள்ளாதவர்கள் யாரேனும் உண்டோ ?
    கத்தரிக்காய் ரஸா வாங்கி, வாங்கி பாத்து, பொரிச்சு கூட்டு, புளிப்பு கூட்டு, கத்தரிக்காய் பஜ்ஜி, கத்தரிக்காய் துவையல், கத்தரிக்காய் தயிர் பச்சடி, கத்தரிக்காய் மோர் குழம்பு, கத்தரிக்காய் பொடிமாஸ், உலர்ந்த கத்தரிக்காய் பயன்படுத்தி பொரியல்,வத்தக் குழம்பு என பட்டியல் நீண்டு கொண்டே போகும். பல வண்ணங்களில் கிடைக்கும் கத்தரிக்காய் என்றும் நம் எண்ணங்களில் இருந்துகொண்டே இருக்கும்.

    பதிலளிநீக்கு
  5. @Pattabi Raman, கத்திரிக்காயைச் சுட்டுச் செய்யும் துவையல், கொத்சு, பைங்கன் பர்த்தா, மற்றும் வதக்கிச் செய்யும் துவையல், கூட்டு, சுட்டுச் செய்யும் தயிர்ப் பச்சடி, போன்றவற்றை விட்டுட்டீங்களே! :) கத்திரிக்காய்ப் பிட்லை!

    பதிலளிநீக்கு
  6. பொதுவா கத்தரி எல்லோருக்கும் பிடிக்காதே.. கீதா மேடம் கத்தரில என்ன பண்ணினாலும் அப்ப்படியே சாப்ப்ப்டுவேன் என்று எழுதியிருக்கிறார்களே என்று பார்த்தால் பட்டாபிராமன் அவர்கள் கத்திரிக்காயின் ரசிகராகவே இருக்கிறார். கத்தரிக்காய் பொடிமாஸ் கேள்விப்பட்டதே இல்லையே என்று நினைத்தால் இதுல இன்னும் அஞ்சு ஆறு ஐட்டம் சேர்க்கிறாங்க கீதா சாம்பசிவம் அவர்கள்.

    பதிலளிநீக்கு
  7. #கத்தரிக்காய்னா அலர்ஜி# என்பதால், இந்த ஜி ஜகா வாங்கிக்கிறேன் :)

    பதிலளிநீக்கு
  8. எங்கள் ஊர் திருச்சி அருகே உள்ள ஐயம்பாளையம் கிராமத்து கத்திரிக்காயாக இருந்து, அதை பூச்சி புழு ஏதும் இல்லையா என நன்கு நானே ஆராய்ந்து, என் கையாலேயே பொடிப்பொடியாக நறுக்கி, நிறைய தேங்காய் துருவல் போட்டு, பொரிச்ச கூட்டாகச் செய்தால் மட்டுமே (அதுவும் காரசாரமான வெங்காய வற்றல் குழம்புக்கு காம்பினேஷனாக) நான் சாப்பிட விரும்புவேன்.

    வேறு எந்தக் கத்திரிக்காயோ, வேறு யார் கையால் நறுக்கப்பட்டதோ, வேறு எந்த ரூபத்தில் செய்யப்பட்டதோ நான் தொடவே மாட்டேன். அதனால் முழுவதும் வெட்டப்படத இந்தக் கத்திரிக்காய் பதிவிலிருந்து நான் எஸ்கேப் ஆகிக்கொள்கிறேன், ஸ்வாமீ.

    பதிலளிநீக்கு
  9. ஆஹா! கத்தரிக்காய்... எப்படிச் சமைத்தாலும் சுவையாக இருக்குமே!

    எங்கள் பக்கம் கத்தரிக்காயை உப்பு, விநாகிரி சேர்த்துப் பொரித்து... மாசி, தக்காளி, நிறைய வெண்காயம் சேர்த்துக் குழம்பு வைப்போம். அசைவம்தான். அதற்கு அடிமையாகாதவர் இருக்க முடியாது.

    முன்பு ஒரு தடவை மகியின் குறிப்பு ஒன்றைப் பார்த்து பொடி வைத்து அடைத்துச் சமைத்திருக்கிறேன். உங்கள் குறிப்பையும் முயற்சித்துப் பார்க்கப் போகிறேன்.

    பதிலளிநீக்கு
  10. நல்ல ரெசிபி .எனக்கு கத்தரிக்காய் ரொம்பவே பிடிக்கும் . திருவானைக்கோவில் கத்தரிக்காய் ருசியாக இருக்கும். நான் அங்கு இரண்டு வருடம் வசித்தேன்

    பதிலளிநீக்கு
  11. எல்லா ஐட்டங்களை யூம் நானே சொல்லிவிட்டால் எப்படி? மற்றவர்களுக்கும் வாய்ப்பு கொடுக்கவேண்டாமோ?அதனால்தான் சில ஐட்டங்களை விட்டுவிட்டேன்.

    பதிலளிநீக்கு
  12. சின்ன வயதில் டாக்டர் அறிவுரைப்படி அலர்ஜி என்று ஒதுக்கப்பட்டது - இப்போது நானே ருசியாக சமைக்கிறேனாக்கும்! அதிலும் இந்த அடைத்த கறி, கொத்சு (சுட்டது), ரசவாங்கி எம் வீட்டு ஃபேவரைட்ஸ்!!
    நெல்லைத் தமிழன் ப்ளாக் லிங்க் தர முடியுமா?

    பதிலளிநீக்கு
  13. எனக்குப் பிடிக்காத காய்களில் ஒன்று கத்தரிக்காய்

    பதிலளிநீக்கு
  14. இன்னும் எண்ணெய் கத்தரிக்காய் கறி இருக்கிறது. பிரியாணிக்கு தொட்டுக்கொள்ள‌ இஸ்லாமியர் செய்வது. மிகவும் ருசியாக இருக்கும். இதே மாதிரி தான். ஆனால் பருப்பு வகைகள் தவிர்த்து கடலை, எள், கசகசா, மிள‌கு எல்லாம் சேர்க்க வேன்டும். புளி கொஞ்சம் கூடுதலாக சேர்க்க வேண்டும். என் சினேகிதி குட்டி குட்டி கத்தரிக்காயில் ஊறுகாய் செய்வார்கள். கத்தரிக்காய் சாதம் [ வாங்கி பாத்]வேறு இருக்கிறதே!

    இந்த கத்தரிக்காய் கறியும் பிரமாதம்! செய்து பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
  15. 'middleclassmadhavi ...நெல்லைத்தமிழன்
    பகவான்'ஜி... கலாய்ப்பதற்கு நானா கிடைத்தேன்.... ஏதோ காரணங்களுக்காக நான் பிளாக் வைத்துக்கொள்ளவில்லை.. முக'நூல் மற்றும் சோஷியல் மீடியாக்களில் நான் இல்லை.

    பதிலளிநீக்கு
  16. ரொம்பவே நன்றாக இருக்கும். எங்கள் ஊர் பக்கத்தில் குடுமாங்குப்பம் என்ற ஒரு கிராமம் கத்தரிக்காய்க்குப் பேர் போனது. கடுப்பு என்ற ருசியே இருக்காது. பிஞ்சு காய்களே அழுத்தமாக இருக்கும். அதில் இப்படி கறிப்பொடி அடைத்து வதக்குவது வழக்கம். என்ன பொடியில் சில மாறுதல்கள். பிரமாதம். நிறைய விதங்கள் பலமானிலங்களில் வேறுபட்டாலும் குட்டி கத்தரிக்காய் விசேஷமானதுதான். அன்புடன்

    பதிலளிநீக்கு
  17. மனோ சுவாமிநாதன், பட்டாபிராமன் வாங்கி பாத்து என்று சொல்லி இருக்கிறார் பாருங்க. எண்ணெய்க் கத்திரிக்காய் என்று நீங்கள் சொல்வது மஹாராஷ்டிராவில் செய்யும் முறை என்று நினைக்கிறேன். கத்திரிக்காய் சாதத்துக்கும் அவங்க எள், கசகசா, மிளகு, வேர்க்கடலை எல்லாம் சேர்த்துப் பொடிப்பார்கள். பஜ்ஜி மிளகாயில் பஜ்ஜி போடுவதற்கும் மிளகாயை நீள வாட்டில் கீறி உள்ளே விதைகளை எடுத்துவிட்டுப் பின்னர் மேற்சொன்ன முறையில் செய்த பொடியை அடைத்து விட்டு பஜ்ஜி மாவில் தோய்த்துப் போடுவார்கள்.

    பதிலளிநீக்கு
  18. கலாய்த்தல் எல்லாம் ஒன்றும் இல்லை, நிஜமாகத் தான் கேட்டேன்!;கேட்டு வாங்கிப் போடும் பதிவோ என்று நினைத்து கேட்டு விட்டேன்!சமையல் குறிப்புகள் மிக நன்றாக உள்ளன - நம்பிக்கை இல்லையெனில், இடது புறம் 'கடந்த 30 நாட்களில் அதிகம் பேர் படித்தது' பாருங்கள்!!

    பதிலளிநீக்கு
  19. 'நன்றி ஸ்ரீராம் - வெளியிட்டமைக்கு. கடந்த நான்கு வாரங்களில் உங்கள் commentஐ (பதிவின் இடைஇடையே) பார்க்கமுடியவில்லை. இதுவாவது வித்தியாசமான கறியமுது, உங்கள் கமென்ட் இருக்கும் என்று நினைத்தேன்.

    பதிலளிநீக்கு
  20. கீதா சாம்பசிவம் அவர்கள்-உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி. எனக்குக் கத்திரிக்காயில், புளிவிட்ட கூட்டு (தேங்காய், கடலை அல்லது கொத்துக்கடலை போட்டது), கத்தரி தொகையல் (ரொம்பப் பிடிக்கும்), பொடி தூவிய கறியமுது, பாசிப்பருப்புக் கூட்டு, மோர் சாதத்திற்கு, புளிவிட்ட கரேமது பிடிக்கும். மற்றவை அவ்வளவு பிடித்தமானதில்லை. நீங்கள் ஏதாவது வித்தியாசமான செய்முறைக் குறிப்புகள் கொடுப்பீர்கள் என்று நினைத்தேன். நிச்சயம் மற்றவர்களும் படிக்க எதிர்பார்த்திருப்பார்கள். எல்லா அனுபவத்தையும் உங்களுக்குள்ளேயே பூட்டி வைத்துக்கொண்டால், எப்படி மற்றவர்களுக்கு வித்தியாசமான ஐடியாக்கள் கிடைக்கும்?

    பதிலளிநீக்கு
  21. கரந்தை சார். நன்றி. நீங்கள் தன்நம்பிக்கை, தலைவர்கள் என்ற பொருட்களில் கட்டுரை எழுதி அறிவுப்பசிக்கு உணவளிக்கிறீர்கள். உங்கள் வருகைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  22. திண்டுக்கல் தனபாலன் அவர்களை இப்போதெல்லாம் அடிக்கடி பின்னூட்டங்கள் வாயிலாகக் காணமுடிகிறது. நன்றி.

    பதிலளிநீக்கு
  23. கோமதி அரசு மேடம் - "இறைவனுக்கு வைத்த உணவு" - உங்கள் பிளாக்கின் தீமைப்போல், உங்கள் கருத்து இருந்தது. உண்மையாகவே நான் உண்ணும்போது, எங்கேயோ இருந்துகொண்டு விளைவித்துத் தரும் விவசாயியை நினைவுகூர்வேன். அவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்களாகவும் இருக்கலாம். அவர்கள் இல்லையே, நமக்கு உணவு எங்கிருந்து வரும். நன்றி.

    பதிலளிநீக்கு
  24. வாங்க கில்லர்ஜி.. நன்றி. உங்களை அபுதாபியில் பார்க்கவேண்டும் என்று நினைத்தது நிறைவேறவில்லை (நான் வந்தபோது நீங்கள் விடு ஜூட். இனி நான் வரும்போது நீங்கள் தேவகோட்டையில்). சொல்லமுடியாது.. எதிர்பாராத தேசத்தில் சந்திக்க நேரலாம்.

    பதிலளிநீக்கு
  25. பட்டாபிராமன் - உங்கள் கருத்துக்கு நன்றி. இப்படிப்பட்ட கத்திரிக்காய் ரசிகரை நான் கேள்விப்பட்டதில்லை. பெரும்பாலும் கத்திரிக்காய்னா, அலர்ஜி, பிடிக்காது என்று சொல்பவர்களைத்தான் பார்த்திருக்கிறேன். 'கத்திரிக்காய் பொடிமாஸ்'னு சும்மா அடிச்சுவிட்டீங்களா? இதுக்கு கீதா மேடம் வேறு ஒன்றும் சொல்லவில்லை. ஒரே கன்பூசிங்.

    பதிலளிநீக்கு
  26. மீள்வருகைக்கு நன்றி கீதா மேடம். கத்திரிக்காய் கொத்சு, அரிசி உப்புமாவுக்குச் செய்து பார்த்திருக்கிறேன். எனக்கு அவ்வளவாகப் பிடிக்காது. இங்கே, கத்தரி விலை மலிவு என்று 'பைங்கன் சைட் டிஷ்' North Indian Comboவில் தருவார்கள். எனக்குப் பிடிப்பதில்லை. Nan varietyகளுக்கு எனக்குப் பிடித்தது, பனீர் சேர்த்த எதுவும் (பாலக், மட்டர், ஆலு போன்றவை.. அதிலும் மட்டர் பனீர் எனக்கு ரொம்பப் பிடித்தமானது).

    பதிலளிநீக்கு
  27. பகவான்'ஜி - கத்தரிக்காய் செய்முறை படிப்பதற்கும் அலர்ஜியா? ஆனால், பசங்களுக்குப் பொதுவாகவே கத்தரி சாதாரண கரேமது தவிர எதுவும் பிடிக்காது. நன்றி.

    பதிலளிநீக்கு
  28. கோபு சார்... நீங்கள் செலக்டிவ் ஈட்டர்தான். ஆனால் இப்படி, ஐயம்பாளையம் கத்திரிக்காய்தான் சாப்பிடுவேன் என்று சொல்லிவிட்டால், எப்படி துபாயில் ஒரு மாதம் சமாளித்தீர்கள்? அங்கு உங்களுக்குப் பிடித்தமான நிறைய காய்கறிகள் கிடைக்காதே.. அங்கு பெரும்பாலும் கிடைப்பதெல்லாம் (துபாயில்), பெரிய பெரிய கத்தரிக்காய்கள்னா. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  29. இமா-உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  30. புலவர் ஐயாவுக்குப் பிடித்த செய்முறையை எழுதியதில் எனக்கும் மகிழ்ச்சி. வருகைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  31. அபயா அருணாவின் கருத்துக்கு நன்றி. ஆனைக்கா எனக்குப் பல நினைவுகளைத் தருகிறது (ஒரே ஒரு தடவை சென்றிருந்தபோதும். நெய் தோசை ஏமாற்றம், கள்ளன் எடுத்த வாழைப்பூ 10 ரூபாய்க்கு விற்றுக்கொண்டிருந்தார்கள். நான் வாங்க யத்தனித்தபோது காலியாகிவிட்டது. அதிசயமாக அங்கு நுங்கு வாங்கியது. ஈசுவரனைத் தரிசித்த நான், அம்பிகையைத் தரிசிக்கத் தவறியது.. விரைவில் ஒரு டிரிப் அங்கு உண்டு)

    பதிலளிநீக்கு
  32. பட்டாபிராமன். மீள் வருகைக்கு நன்றி... கத்தரிக்காய் பொடிமாஸை விடமாட்டேன்.

    பதிலளிநீக்கு
  33. மிடில்கிளாஸ் மாதவி-உங்கள் கருத்துக்கு நன்றி. உங்களுக்குத் தெரியாத செய்முறைகளா அல்லது அனுபவமா. "எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது" - சாரி.. படப்பேர் ஞாபகம் வந்துவிட்டது. நேக்குன்னு சொந்தமா யாரு இருக்கா (சே.. சிவாஜி பட வசனம் வந்துவிட்டது) - எனக்குன்னு பிளாக் இல்லை. எல்லாரும் பிளாக் வைத்திருந்தால் தூய வாசகர்கள் எங்கேயிருந்து வருவார்கள்?

    பதிலளிநீக்கு
  34. ஜி.எம்.பி ஐயா.. பொதுவாகவே வாழ்க்கையில் எதை வேண்டாம் என்று நினைக்கிறோமோ அதுவே எல்லா இடத்திலும் நமக்கு வரும். உங்கள் வருகைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  35. முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.. மிக்க நன்றி. உங்கள் அறிவுசார்ந்த கட்டுரைகள் எனக்கு மிகவும் பிடிக்கும்.

    பதிலளிநீக்கு
  36. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  37. மனோ மேடம் உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. செய்து பாருங்கள். ரொம்ப நல்லா இருக்கும். நான் எழுதியதைப் படித்துவிட்டு, என் ஹஸ்பண்ட், நேற்று செய்து எனக்கு வாட்ஸப்பில் படம் அனுப்பியிருந்தார்கள் (அவர் பொதுவாகவே கத்தரிக்காயைக் கட் செய்துவிடுவார்கள். அதில் பொடிதூவுவார்கள். அங்க சின்ன சின்னக் கத்தரி நிறைய வெரைட்டில கிடைக்கும்).

    பதிலளிநீக்கு
  38. VIC-வருகைக்கு நன்றி. இதுதான் உங்களின் முதல் பின்னூட்டம் என்று நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  39. காமாட்சி மேடம்-உங்கள் கருத்துக்கு நன்றி. கத்திரிக்காய்ல ஒரே ஒரு பிராப்ளம்.. டேஸ்ட் நல்லா இருக்கணும். இங்கு பல வெரைட்டில கத்திரிக்காய் வரும் (நானே 10 வகைகளைப் பார்த்திருக்கிறேன் அதை வைத்தே படம் போட்டு ஒரு பதிவு அனுப்பலாமா என்று எண்ணியதும் உண்டு). அதுல எது கைக்காது என்பது செய்துபார்க்கப் பார்க்கத்தான் பிடிபடும். பச்சை நிறக் கத்திரியோ, பி.டி கத்தரியோ (ரொம்பப் பெரிசா இருக்குமே அது) பொதுவாக ருசியா இருக்கும். ஆனால் இதுக்கு சின்னக் கத்தரிதான் சரிப்பட்டுவரும். (நான் கைக்கே அடங்காத ரொம்பப் பெரிய கத்தரிக்காயைப் பார்த்திருக்கிறேன். அதுபோல 1 1/2 அடி 2 1/2 அடி நீள வாழைப்பழத்தையும் பார்த்திருக்கிறேன்)

    பதிலளிநீக்கு
  40. கீதா மேடம்.. மீள் மீள் வருகைக்கு நன்றி. எனக்கு பஜ்ஜி மிளகாயில் உட்புறம் அடைக்கும் பொருட்களின் செய்முறை தரமுடியுமா? இங்கு உத்திரப்பிரதேச ஸ்வீட் வாலாக்களின் கடையில், மிளகாயின் உட்புறம் கொஞ்சம் புளிப்போடு ஏதோ அடைத்திருப்பார்கள்.

    பதிலளிநீக்கு
  41. மிடில்கிளாஸ்மாதவி-மீள் வருகைக்கு நன்றி. VIC நான் எழுதிய பின்னூட்டத்தை அப்படியே கொடுத்துள்ளார். அதில் நான் பகவான்'ஜியைக் 'கலாய்க்காதீர்கள்' என்று எழுதியிருந்தேன்.

    பதிலளிநீக்கு
  42. வல்லி மேடம்... சாதம், குழம்பு, காய் தட்டில் வைத்துப் புகைப்படம் எடுத்தபோது, உங்களை நினைத்துத்தான், காயைக் குறைவாக வைத்தேன்.. பார்த்தா இன்னும் காணலியே...

    பதிலளிநீக்கு
  43. @நெல்லைத் தமிழன், ஜாகர்த்தா வந்ததும் ஒரு பதிவு முகநூலில் பதிந்திருந்தார்கள். பின்னர் வல்லி சிம்ஹனைக் காணோம். உடல்நிலை சரியில்லையோ என்னமோ! :( நானும் முகநூலில் பார்த்தவரை அவங்களோட எந்தக் கருத்தும் யாருடைய பதிவிலேயும் இல்லை! :(

    பதிலளிநீக்கு
  44. கத்தரிக்காய் பிடிக்காது - கத்தரிக்காய் பிட்லை மட்டும் பிடிக்கும்.... தில்லி வந்த பிறகு பேங்கன் பர்த்தா பிடிக்கிறது....

    சுவையான குறிப்பு.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!