குப்புசாமி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
குப்புசாமி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

3.4.13

குப்புசாமி


காலை 9 மணிக்கு ஸ்லீப்பர் பெர்த்தில் படுத்துத் தூங்க முடியுமா? ஆனாலும் A/C கோச்சில் காலை படுத்தபடி பயணம் என்றதும் புத்தகம் எடுத்து வைத்துக் கொண்டது உபயோகமாக இருந்தது.

                                             
 
ஜெயமோகனின் 'அறம்' புத்தகம் எடுத்து வைத்திருந்தேன். மாமா, அக்காவுடன் அவ்வப்போது பேசிக் கொண்டே, புத்தகம் படித்துக் கொண்டே திருக்கடையூர் நோக்கிப் பயணம் தொடங்கியது.

எங்கள் கம்பார்ட்மெண்டில் பக்கத்து இருக்கைகள் நிரம்பியிருந்தாலும் நாங்கள் இருந்த பகுதியில் நாங்கள் மட்டுமே இருந்தது எங்கள் அதிருஷ்டம்! 'கொஹி பகோரி... கொஹி பகோரி' என்று என்ன விற்கிறார்கள் என்று நிமிர்ந்து பார்த்தால் மெது பக்கோடா.

                                              
 
அவ்வப்போது பேசிக்கொண்டே புத்தகம் படித்துக் கொண்டே பயணம்.

நடுவே ஒரு மணிக்கு, அக்கா வீட்டிலிருந்து கலந்து எடுத்து வந்திருந்த தயிர்சாதமும், மாங்காய்த் தொக்கும் வயிற்றை நிறைத்தன.

                                            
 
சாதாரணமாக இது மாதிரி ட்ரெயின்களில் டீ, காபி எதுவும் வாங்கிச் சாப்பிட்டு விடக் கூடாது. ஸஹிக்காது. விழுப்புரம் ரயில் நிலையத்தில் 'நன்றாக இருக்கும்' என்று நம்பி வாங்கிய மசால் வடையும் முரடாக இருந்தது.

'அறம்' புத்தகத்தில் அதே பெயர் கொண்ட கதை படித்து நெகிழ்ந்து போனேன். ஜீவி சார் அந்தக் கதை பற்றி ஏற்கெனவே சொல்லியிருந்ததும் படிக்கும்போது நினைவுக்கு வந்தது. 

                                                 

விழுப்புரம், சீர்காழி என்று ஸ்டேஷன்களில் இறங்கி நின்று மாற்று ரிலாக்ஸ் செய்து விட்டு, தொடர்ந்த பயணத்தை மதியம் 3 மணிக்கு மாயவரத்தில் முறித்து இறங்கினோம். ("சீர்காழியில் கூட இறங்கியிருக்கலாம் சார்... அங்கேருந்து இன்னும் பக்கம்")

கோமதி அரசு மேடம் நினைவுக்கு வந்தார். அவர் ஊராச்சே...!


'கார் கொண்டு வருகிறேன்' என்று சொன்ன தன் மாப்பிள்ளையை 'எதற்குச் சிரமம்' என்று மாமா தடுத்து விட்டதில் திருக்கடையூர் செல்ல பஸ் ஏற மெயின் பஸ் ஸ்டேண்ட் செல்ல வேண்டும். வாசலில் பஸ் நிற்கிறது என்றதும் விரைவாக நடந்தோம்.


பஸ்ஸிலிருந்து எட்டிப் பார்த்தபடிக் காத்துக் கொண்டிருந்த டிரைவர் "மெதுவா வாங்க...நீங்க வந்து தான் பஸ் எடுப்போம்" என்றா புன்னகையுடன். அது முதல் ஆச்சர்யம். (திருக்கடையூர் செல்ல மெயின் பஸ் ஸ்டேன்ட் செல்ல வேண்டும் என்று இந்த பஸ்சின் டிரைவர்தான் கூறினார். அது மட்டுமல்ல கால் டாக்சி போல வைத்தால் எவ்வளவு ஆகும் என்று கேட்டதும், 'ஐயோ வேணாம், 400, 500 கேட்பார்கள். பஸ் ஸ்டேண்டில் இறக்கி விடறேன்.. அங்கேருந்து நிறைய பஸ் இருக்கு.. 10 ரூபாய், 12 ரூபாய் டிக்கெட்டில் போய் விடலாம் என்றும் ஆலோசனை கூறினார். இது இரண்டாவது ஆச்.)


ஏறியவுடன் எனக்கு ஸீட் இல்லாமல் நான் நிற்பதைப் பார்த்து அவருக்கு நேர் எதிரே இருந்த இருக்கையில் உட்கார சைகை காட்டினார். அதில் ஒரு Bag வைக்கப் பட்டிருந்ததைக் காட்டினேன். "அது என்னுதுதான்...எடுத்து கைல குடுத்துட்டு நீங்க உட்காருங்க" என்றார். 6 ரூபாய் பயணச் சீட்டு என்று நினைவு.


பஸ் மெள்ளத்தான் கிளம்பியது. அந்த ரயில் வரும் நேரத்துக்குத் தக்கவாறு விடப் பட்ட பஸ் போலும். ஆட்டோக் காரர்களும் டாக்சிக்காரர்களும் இவரை முறைக்க,  இவர் அவர்களைப் பார்த்துக் குழைவாகச் சிரித்தபடி, "பாவம்... லேடீஸ்.. பாவம் குழந்தைங்களோட வர்றாங்க... இதோ..இதோ கிளம்பிடுவேன்பா" என்று மேக்சிமம் பயணிகளை ஏறிக் கொண்டுதான் கிளம்பினார். திருப்பம் வரை இன்னும் ஏதாவது பயணிகள் வருகிறார்களா என்று திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டே வந்தது 3 வது ஆச்.


பெரிய பேருந்து நிலையத்தில் இறங்கியதும் மறுபடியும் வழி கூறினார். "வெளியில் சென்று இடது பக்கம் போய் உடனே வலது பக்கம் திரும்பி மார்க்கெட் வழியா நேராப் போங்க... அங்கே பஸ்கள் நிற்குமிடம் வரும். ரெடியா நிற்கற பஸ்ல கூட்டமிருந்தால் அதை விட்டுடுங்க... உடனே அடுத்த பஸ் வரும்" இந்த அளவு விவரங்கள் மறுபடி மறுபடிக் கூறிக் கொண்டே வந்தார்.

                                         

 
இறங்கியதும் எதிர்த் திசையில் மாமா நடக்கத் தொடங்க, பின்னாலேயே இறங்கிய குப்புசாமி- அதுதான் அவர் பெயர் - "தப்பு... இந்தப் பக்கம்...இந்தப் பக்கம் வாங்க..." என்று எங்களுடனே நடந்து வந்து வழியைக் காட்டி விட்டுச் சென்றார். நாலாவது ஆச்சர்யம்.