நாகையில் அறுபதுகளில் நீங்கள் இருந்திருந்தால், உங்களுக்கு சட்டையப்பர் கோவில் மேல வீதியில் பட்டறை வைத்திருந்த மெக்கானிக், (ஆல் இன் ஆல் அழகு ராஜா ரேஞ்சு) மணியைக் கட்டாயம் தெரிந்திருக்கும். அவர் வாயாலேயே சொல்லக் கேட்டவற்றில் அவர் எலிசபத் ராணியின் இந்திய விஜயத்தின் போது ஓட்டுனராக இருந்தது மிகப் பிரசித்தம். கல்யாண ஜானவாசம் நிகழ்ச்சிகளுக்கு கார் ஓட்டும் (ஓட்டைக் கார்) ரங்கநாதன் கூட மணி வொர்க் ஷாப்பில் தான் வழக்கமாக தன் காரை ரிப்பேர் செய்துகொள்வார்!
உங்களுக்குப் பொழுது போக வில்லை என்றால் நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் மணியின் பட்டறைக்குப் போகலாம். அங்கிருக்கும் பொருள்களைக் கையில் எடுத்துப் பார்த்தால் அதே இடத்தில், கூடுமான வரை தலை, வால் எல்லாம் எடுத்த போது இருந்த மாதிரி வைத்து விட்டால் அவர் கோபிக்கவே மாட்டார். அவர் வேலை செய்யும் பொழுது ஏதேனும் பேசிக்கொண்டேதான் வேலை செய்வார். எவ்வளவு சதவிகிதம் ரியல், எவ்வளவு சதவிகிதம் ரீல் என்பதைத் தெரிந்துகொள்வது கேட்பவரின் ஐ கியூவைப் பொறுத்த விஷயம்.
ஒரு நாள், நான், தண்டு, ஜெயராமன் எல்லோரும அங்கே போய் வழக்கம் போல் கொட்டமடித்துக் கொண்டிருந்தோம். ரோலிங் மில் மணி அய்யரின் கார் - எப்பொழுதும் டிக்கியில் புல் கட்டுடன் சுற்றி வருமே அதில் பாட்டரி சரியாக சார்ஜ் ஆகவில்லை என்று டைனமோவைக் கழட்டி சுத்தம் செய்து கொண்டிருந்தவர், மீண்டும் ஒரு முறை தன சுயசரிதையின் இங்கிலாந்து ராணிக்குக் கார் ஒட்டிய பகுதியை விவரிக்க ஆரம்பித்தார். திடீரென பேசுவதை நிறுத்தி விட்டுக் குனிந்து, பின் மேஜை மேலிருந்த பொருள்களை எல்லாம் நகர்த்தி வைத்து எதையோ தேடியவர், நம் பக்கம் திரும்பி, "இங்கே ஒரு மாக்னேடோ பேரிங் வைத்திருந்தேனே, யாரும் பார்த்தீர்களா?" என்று கேட்டார். நாங்கள் எல்லோரும் தலையை இடமும் வலமும் அசைத்தோம்.
அதற்குள் பூப்போட்ட சட்டை போட்ட பையன் ஒருவன் வந்து " கார் எப்போ ரெடியாகும்? சாயங்காலம் சிக்கல் போகணும்." என்று பரபரத்தான். மணி, "ஒரு அரை மணியில் ரெடியாயாயிடும்னு அப்பா கிட்டே சொல்லு" என்றார். ஜெயராமன் "தண்டு, நீ ஒன் மோதிரத்தைக் கழட்டிக் கொடுத்தால் தான் கார் நகரும் " என்றான். தண்டு பலமாக அழ ஆரம்பிக்கவும், மணி அவனைத் தட்டிக் கொடுத்து, "எல்லாம் கழட்டி விடலாம். பயப்படாதே" என்றார்.
பின், பேரிங் முனையிலிருந்து ஒவ்வொரு சுற்றாக எடுத்தவுடன் பேரிங்கை முன்புறம் நகர்த்த, அதுவும் நகர்ந்தது! இப்படி ஆறு [மறந்து விடாதீர் - ஆறு] சுற்று எடுப்பதற்குள் விரலின் எலும்பு இணைப்பு தாண்டி விட்டதால், பேரிங் சுலபமாக வெளியே வந்து விட்டது.
'நானும் அந்த நாள் முதல் இந்த நாள் வரை காத்திருக்கிறேன். யாராவது பேரிங் கழட்ட முடியவில்லை என்று வந்தால் என் திறைமையைக் காட்ட' என்று சொன்னது தான் தாமதம், எதிர்த்த வீட்டு மாமா அவரது மின்விசிறியை எடுத்துக் கொண்டு வந்து கொண்டிருக்கிறார் - நல்ல வேளை ! ஒரு எஸ்கேப் ரூட் இருக்கு!


