இதமான வானிலை. 5.1 ஸ்பீக்கரில் இனிமையான பாடல்கள் மெலிதாக ஒலித்துக் கொண்டிருந்தது.
இந்தச் சூழ்நிலையினால் நாலுமுழ நாக்கு அடுத்த கட்டத்துக்கு நகர ஆசைப் பட்டது!
என்ன இருக்கிறது என்று பார்த்தபோது கண்ணில் பட்ட உருளைக்கிழங்கு, சேப்பங்கிழங்கை ஒதுக்கி, கைகள் தெரிவு செய்தது சேனையை!
இப்போது தொடங்கினால் சாப்பிடும் நேரம் சூடானது தயார் செய்து விடலாம். ஸோ,
சேனைக்கிழங்கை சுத்தம் செய்து துருவிக் கொண்டோம்.
தேவையான அளவு வெங்காயம் நறுக்கி வைத்துக் கொண்டோம்.
கறிவேப்பிலைக்கு கொத்துமல்லி, பச்சைமிளகாய் நறுக்கிச் சேர்த்துக் கொண்டோம்.
வெங்காயம்,
பச்சை மிளகாய், கறிவேப்பிலைக்கு கொத்துமல்லியைப் போட்டு கொஞ்சம் வதக்கிக்
கொண்டு, அதனுடன் துருவி வைத்திருக்கும் சேனையைப் போட்டுப் புரட்டினோம்.
தேவையான அளவு, உப்பு, காரப்பொடி, பெருங்காயம் சேர்த்தோம்.
இறக்கி சோளமாவில் புரட்டி உருண்டையாகவோ, தட்டையாகவோ வடிவங்கள் செய்தோம்.
எண்ணெயில் போட்டுப் பொரித்து எடுத்து விட்டோம்.
ஹிஹிஹி... உன்னைப்பிடி என்னைப்பிடி என்று போட்டி போட்டுச் சாப்பிட்டு விட்டோம்! பார்ப்பதற்கு கொஞ்சம் கொஞ்சம் வாழைப்பூ வடை போலவும் இருக்கு இல்லை? என்ன பெயர் வைப்பது என்று பார்த்து கட்லெட் போலச் செய்து மசால் வடை போல வருவதால் "கட்லெட் வடை" என்று வைத்து விட்டேன்!
பி . கு : இதில் மூன்று படங்கள் மட்டுமே இணையத்திலிருந்து நன்றியுடன்.. அது எந்த மூன்று படங்கள் என்று உங்களுக்கே தெரியும்!









