ரொ.....ம்ப வருடங்களுக்கு முன்னால் படித்த 'பாரீஸுக்குப் போ' நாவலை மறுபடி
சமீபத்தில் படித்தேன் புதிய பார்வைகள் கிடைத்தன. 1965 இல் விகடனில்
வெளிவந்த தொடர். அப்போது இதற்கு ஏகப்பட்ட எதிர்ப்பு, மற்றும் விமர்சனங்கள்.
கலாச்சாரத்துக்கு எதிரானது என்றும், ஜெயகாந்தனின் கருத்துகளை எதிர்த்தும்
நிறையக் கடிதங்கள் வந்தன என்று முன்னுரையில் ஜெ குறிப்பிடுகிறார்.
படிக்கும் வயதில் உறவினரோடு லண்டன் சென்று விட்ட சாரங்கன் நீண்ட பல
வருடங்களுக்குப் பிறகு இந்தியா திரும்புகிறான்(ர்). 40 வயது. தாய் நாட்டிலேயே செட்டில் ஆகி விடும் எண்ணங்களோடு வருகிறான். திடீரென தனக்கு உறவுகளே இல்லை என்று உணர்வது போல நினைக்கிறான். 15
வருடங்களுக்குமுன் கடைசிமுறை வந்தபோது ஏற்பட்ட மனத்தாங்கலில் வரவேற்க
சாரங்கனின் அப்பா உட்பட்ட உறவு யாரும் விமான நிலையம் வராத
நிலையில் சாரங்கனின் அண்ணனின் தோழர் மகாலிங்கமும் அவர் மனைவி லலிதாவும்
ஏர்போர்ட் வந்து வரவேற்று, அவனை அவன் வீடு கொண்டு விடுகிறார்கள்.
வயதான தந்தை சேஷையா பழைய சாஸ்த்ரீய சங்கீத விற்பன்னர். அவருக்கு
மேல்நாட்டு சங்கீதம் போலவே சாரங்கனின் கொள்கைகளும், நடத்தையும்
பிடிக்கவில்லை. ஆனாலும் பாசத்தில் அவனை இங்கேயே ஏதாவது பிசினெஸ் செய்ய
வைத்து வாழ்க்கையில் செட்டில் செய்ய முடியுமா என்று பார்க்கிறார். அவன்
ஏற்கெனவே வெளிநாட்டுக்காரி ஒருத்தியைத் திருமணம் செய்தானே, என்ன ஆயிற்று
என்று தெரியவில்லையே என்று கவலைப் பட்டுக் கொண்டே இங்கு திருமணம் செய்விக்க
முடியுமா என்று சாரங்கனின் தமக்கை மகன் முரளி மூலம் தூது அனுப்புகிறார். இரண்டுக்குமே சாரங்கன் மறுத்து விடுகிறான். சேஷையாவுக்குக் கோபம் வருகிறது.
முரளிக்கு சொந்த பிசினெஸ் செய்யும் ஆசையை தாத்தா சேஷையா மறுப்பதில் ஆத்திரம்.
தமக்கை
கணவர், அதாவது தன மாமனார் சாமியாராகப் போய் விட்டார் என்ற செய்தியை நம்ப
மறுக்கிறாள் லீலா முரளியின் மனைவி. முரளிக்கு அப்பாவைப் பற்றித்
தெரிந்திருக்கிறது. பின்னாளில் தாத்தாவுடன் கோபித்துக் கொண்டு வீட்டை
விட்டு வெளியேறி சொந்த பிசினெஸ் ஆரம்பித்து வெற்றிக் கொடி கட்டுவதற்குமுன்
ஆரம்ப நாட்களில் தனது தந்தை மரணப் படுக்கையில் இருக்கிறார் என்று தெரிந்து,
சாரங்கன் உடன்வர,
மற்றும் மனைவி லீலாவுடன் அவரையும் அவருடன் வாழும்
முன்னாள் நாட்டியக்காரி கங்காவையும் சந்திக்கின்றனர். பாலம்மாள் கணவரைக் காண வர மறுத்து விடுகிறாள். மரணமடையுமுன்னர்
முரளியின் அப்பா தன் பக்க நியாயத்தை - லீலாவின் பார்வையில் சப்பைக்கட்டு -
லீலாவிடமும் முரளி, சாரங்கனிடமும் சொல்லிவிட்டுச் செல்கிறார்.
கணவனுக்குக் கள்ளத் தொடர்பு இருந்தது என்பதால் அவரை விட்டுப் பிரிந்த
சாரங்கனின் தமக்கை பாலம்மாள் கடைசி வரை கணவரைப் பார்ப்பதில்லை. கணவர்
அறியாமல் உணர்ச்சி வசத்தில் தவறு செய்தால் மன்னித்து ஏற்றுக் கொள்வதுதான்
தாயைப் போன்ற குணத்துடன் இருக்க வேண்டிய மனைவியின் பண்பு என்பது அவள் கணவர் நரசய்யா வாதம்.
ரங்கையா என்ற சாரங்கனின் அண்ணன் ஒருவன் மரணம் பற்றித் தெரிவிக்காத
செய்தி சாரங்கனுக்குக் கோபத்தையும், சேஷையாவுக்குக் குற்ற உணர்வையும்
தருகிறது. ரங்கையாவின் மனைவியும் குழந்தையும் சேஷையாவின் கண்ணில் படாமல்
அதே வீட்டில் வாழ்கிறார்கள். பின்னர் யாருமில்லா உடல்நிலை
சரியில்லா தனிமையில் திருந்தும் சேஷையா இவன் பிறந்த நேரம்தான் தன மகன்
ரெங்கையா மரணமடையக் காரணம் என்ற குருட்டு நம்பிக்கையில் வெறுத்து ஒதுக்கிய
பேரன் கண்ணனை அணைத்து மகிழ்வதோடு, அவன் தாய்- தன மருமகளிடமே - குடும்பப்
பொறுப்பை விடுகிறார்.
சாரங்கனை பேட்டி எடுத்து, தான் எழுதும் பத்திரிகையில் 'ஆர்ட்டிகிள்'
எழுதுகிறாள் லலிதா. சங்கீதம் பற்றிய சாரங்கனின் பார்வை, ஃபாரின் ரிடர்ண்ட்
என்ற மயக்கத்தில் இவனின் கொள்கைகள் மேல் பொதுமக்களுக்கு
ஏற்படும் விருப்பமான மற்றும் வெறுப்பான பதில்கள், ஆகியவை பல விவாதங்கள்
மூலம் சொல்லப் படுகின்றன. இந்தக் கொள்கைகளால் கவரப் பட்டு லலிதா தன்
மனதையும் உடலையும் சாரங்கனிடம் பகிர்கிறாள். தான் காப்பாற்றிய தன்
குடும்பத்தால் இளமையில் வெளியில் விரட்டப்பட்ட, மற்றும் தனது கடந்தகாலக்
கசப்பான வாழ்க்கை அனுபவங்களையும், மகாலிங்கம்தான் தன்னைக் கரை சேர்த்தார்
என்றும் சம்பவங்களையும் சாரங்கனுடன் பகிர்கிறாள்.
திரைப்படத்துக்கு இசையமைக்கச் சொல்லி அழைத்துப் போகும் டைரக்டர்
கோபிநாத் மூலம் ஏற்படும் கசப்பான உணர்வுகள் மற்றும் காசில்லாத நிலை, சேஷையா
இவன் மீது காட்ட நினைக்கும் அதிகாரம் என்று பல காரணங்களால் பாரிசுக்கே
திரும்ப முடிவு செய்யும் சாரங்கன். பதறும், மறுக்கும், மயங்கும் லலிதா.
மகாலிங்கத்திடம் விவாகரத்து கோரச் சொல்லும் சாரங்கன். அதை
ஆமோதித்தாலும் மகாலிங்கத்தின் அன்பால் தயங்கும், மருகும்
லலிதா. மகாலிங்கத்தின் உணர்வுகள் ஒருநாள் 'அன்னா கரீனா' ஆங்கிலப் படம்
பார்த்த இரவில் லலிதாவிடம் ஆவேசமாக வெளிப் படுகின்றன. எனவே விவாக ரத்து
கோரும் எண்ணம் தயக்கமடைகிறது லலிதாவிடம். கடைசியில் 'உங்களிடமே முடிவை
விடுகிறேன்... கணவரோடு வாழு என்று சொன்னால் வாழ்கிறேன். என்னோடு வந்து விடு
என்று நீங்கள் சொன்னால் எதைப் பற்றியும் கவலைப் படாமல் உங்களுடன் வந்து
விடுகிறேன்' என்று சாரங்கனிடம் அவன் நாட்டை விட்டு வெளியேறும் முந்தைய நாள்
இரவில் கேட்கிறாள்.
'என்னதான் சொல்லுங்க சாரங்கன்.... வெளிநாட்டு இசை லலிதா கேட்கும்போது
நானும் கேட்கவேண்டும் என்று நினைக்கிறேன் இசை முடிந்து பாட்டு
ஆரம்பிக்கும்போது சிரிப்பு வந்து விடுகிறது' என்றும் 'அதே சினிமா சங்கீதம்
மற்ற பெரும்பான்மையினரைப் போலவே தன்னையும் கவர்வதாகச் சொல்லும்
மகாலிங்கத்திடம் வடநாட்டுச் சங் கீதம் கேட்டுச் சிரிக்கும் நம் மக்கள்,
மேல்நாட்டு இசையை மகா கேவலமாகக் காபி அடிக்கும் திரை இசை என்று நீண்ட
லெக்சர் அடிக்கிறான் சாரங்கன். லலிதா மகாலிங்கம் அறியாமல் மயங்கிப் போய்க்
கிடக்கிறாள். பத்திரிகையில் எழுத குறிப்பெடுத்துக் கொள்கிறாள்.
மிகுந்த தர்ம நியாயங்கள் பேசும் சாரங்கன் மகாலிங்கத்தின் மனைவியான
லலிதாவிடம் வைத்துக் கொள்ளும் உறவுக்குக் கட்டும் சப்பைக்கட்டுகள்.
லலிதாவின் மனநிலை உணர்வுகள், முரளியின் உணர்வுகள்.. அதே வீட்டில் இருக்கும்
சமயல்காரத் தம்பதியினர், மகாலிங்கத்தின் வீட்டு சமையல்காரர் நாணா ஐயர், சாரங்கனுடன் புகை பிடிக்கும், மது அருந்தும் நவநாகரீக,மாதர் சங்க மாதவி,ஆகியோர் கதைப்போக்கில் அவ்வப்போது வந்து செல்கிறார்கள்.
சர்ச்சைகள், விவாதங்கள் என்று தொடர்ந்து கொடிருந்த கதை
'சட்'டென முடிவது போலத் தோன்றுவது உண்மைதான் என்கிறார் ஜெயகாந்தன்,
முன்னுரையில்.
இதிலிருந்து எடுத்துதான் கொஞ்ச நாள் முன்பு 'இலக்கியம்' என்ற
தலைப்பில் பகிர்ந்திருந்தேன்.
இந்தியக் கர்நாடக இசைக்கும், வெளிநாட்டு இசைக்கும் உள்ள வேறுபாடுகள்,
சண்டைகள் பற்றி, சினிமா சங்கீதம் பற்றி என்று நீ....ண்ட சர்ச்சைகள்
கதையில்.
கதியற்று நின்ற குடும்பத்தை படாத பாடு பட்டு முன்னுக்குக்
கொண்டு வந்து, ஆனால் அந்தக் குடும்பமே இவள் நடத்தையில் சந்தேகப் பட்டு
வெளியில் துரத்த, கையறு நிலையில் தற்கொலை செய்ய தைரியமில்லாமல் ஊரை
விட்டுச் செல்ல முடிவெடுக்கும் நிலையில் மகாலிங்கம் ஆதரவு கொடுத்து,
திருமணம் செய்கிறார். இவள் அறிவால் கவரப் பட்டு தேவதையைப் போல ஆராதனை
செய்கிறார். இவளுக்கும் அவர் மூலம்தான் அந்தஸ்து வருகிறது.
இந்நிலையில் அவரை விட்டு விட்டு சாரங்கனுடனான லலிதாவின் உறவு, மகாலிங்கத்தைத் துறக்க அவளுக்கு வரும் எண்ணம், கங்காவின்
கலையில் மயங்கி நரசய்யா ஆவலுடன்
ஓரிரவில் இணைந்தாலும், ஒரு ஆண் என்ற முறையில் அவர் பாலம்மாளைத்தான்
காதலிக்கிறார் என்னும் நரசய்யாவின் வாதம், என சில கருத்துகள், சம்பவங்களை
ஒத்துக் கொள்ள முடியாவிட்டாலும் ரசிக்க வைப்பது ஜேகேயின் எழுத்து ஆளுமை.
இந்தியாவின்
பாரம்பர்ய இசை, திரை இசை பற்றிய விவாதங்கள் நமக்குள் பல நினைவுகளைக்
கிளறுகின்றன அதில் ஒன்று 'உன்னால் முடியும் தம்பி'யில் வரும் சங்கீதச்
சண்டை.
இந்தக்கதை வெளிவந்த காலத்தில் ஜேகேயுடனேயே பத்திரிகைகளில் எழுதி வந்த ஜீவி
இந்தக் கதை பற்றியும், அவர் அபிப்ராயம், அப்போது இந்தக் கதைக்கு வந்த
தாக்கங்கள் பற்றியும் சுவாரஸ்யமாய்ப் பின்னூட்டமிடுவார் என்ற எதிர்பார்ப்பு
இருக்கிறது.
புத்தகத்தின் விலை...! 6.75.....! முதல் பதிப்பு டிசம்பர் 1966, இரண்டாவது 1969, மூன்றாவது 1972. மதுரை மீனாட்சி புத்தக நிலையம்!


