நீண்ட சிறுகதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நீண்ட சிறுகதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

24.9.12

இப்படியும் ஒரு வெற்றி பெற்ற காதல் கதை! சற்றே நீண்ட சிறுகதை 2

                                                                       [2]

 முன்கதைச் சு.....ட்டி!

அவர் கைகளை விடாமல் பற்றிக் கொண்டு அவர் கண்களைப் பார்த்தேன்.


"அப்பா.... உங்களைப் பார்த்ததும் பவானி எப்படி உங்களைத் தாத்தான்னு சொன்னா....?"

"ஆமாம்... எப்படிம்மா.... பழைய ஆல்பம் எதாவது கொண்டு வந்துட்டியா.... அப்படிக் கூட எதுவும் கொண்டு வந்த மாதிரித் தெரியவில்லையே...." 

திரும்பி பவானியைப் பார்த்தவர் அவளை இழுத்து அணைத்து அவள் நெற்றியிலும் தலையிலும் உதடுகளை ஒற்றினார்.

ஏதோ நினைவு வந்தவராக திடீரென நிமிர்ந்து என்னைப் பார்த்தவர் "அவர் எங்கேம்மா..."

"யாருப்பா...." ஒன்றும் தெரியாதவள் போலக் கேட்டேன்.

"இவங்கப்பா...."

"எவங்கப்பா...." 

அவ்வளவு உடனே மாப்பிள்ளை என்று சொல்வார் என்று நானும் எதிர்பார்க்கவில்லைதான். ஆனாலும் என் கேள்வியில் லேசான ஆர்வம் இருந்தது.

"உன் வீட்டுக்காரன்.... உன்னை இழுத்துகிட்டு வந்தானே.. அவனைத்தான்மா கேட்கிறேன்..."

தவிர்க்க நினைத்தும் என் முகம் லேசாக சிணுங்கியது.

  "அப்பா.... அப்படிச் சொல்லாதீங்கப்பா... அவர் மாதிரி ஒருத்தர் கிடைக்க நான் கொடுத்து வச்சிருக்கணும்பா  ...."

"ம்...ஹூம்!" என்றார் வெறுப்புடன். "எங்கே..?" என்றார் மறுபடி ஒற்றை வார்த்தையில்.

"வெளியூர் ஷூட்டிங் போயிருக்கார்பா...ஒரு வாரம் ஆகும்!"

ஒரு நிம்மதி தெரிந்தது அவர் முகத்தில்.

"சாப்பிடலாம்பா...." தயக்கத்துடன் அவர் முகம் பார்த்தேன்.

"வேண்டாம்மா.... இதோ கிளம்பிடுவேன்.."

"அப்பா... அவள் ஸ்கூல் கிளம்ப...." 

அவர் நிமிர்ந்து பார்க்க, "வேண்டாம்பா.... யு கே ஜிதான.... இன்னிக்கி அவ ஸ்கூல் போக வேண்டாம்.... நீங்க நிதானமா போலாம் இல்லையாப்பா.... இருப்பீங்கதான....?" கேள்வியிலேயே ஏக்கத்தையும் பாசத்தையும் வெளிப்படுத்தினேன்.

அவர் ஒன்றும் பேசவில்லை என்றாலும் டிரைவர் கொண்டுவந்து கொடுத்த பார்சலை எடுத்து பவானி கையில் கொடுத்தார்.

அங்கேயே அதைப் பிரித்த பவானி, "ஹை..... டெடிபேர்" என்று கத்தினாள். 




அவள் அதனுடன் விளையாடத் தொடங்க அவளையே பார்த்துக் கொண்டிருந்தவர்,

"கயல்.... டிரைவரைக் கூப்பிடு.." என்று தொடங்கியவர் தலையை ஆட்டி, தானே எழுந்தார்.

"இருங்கப்பா... நானே கூப்பிடறேன்.." என்று வாசலுக்கு வந்து டிரைவரைக் கூப்பிட்டேன்.

இவன் நான் அங்கு இருந்தபோது இருந்த டிரைவர் இல்லை. நான் வந்தபிறகு டிரைவர், வேலைக்காரர், சமையல்காரர் எல்லோரையும் மாற்றி விட்டார். தெரியும்!

என்னைக்கூப்பிட்டு வேலை ஏவி விட்டு, தானே கிளம்பியது உறுத்தலாக இருந்தாலும் என்னை பழைய மாதிரி 'கயல்' என்று அழைக்க வாய் வந்ததே சந்தோஷமாக இருந்தது.

பவானி அருகில் வந்து அவளிடம் என்ன வேண்டும் என்பது போல ஏதோ கேட்டார். டிரைவரிடம் ஏதோ சொல்லி பணம் கொடுத்து அனுப்பினார். அரை மணி நேரம் கழித்து டிரைவர் வந்து இன்னும் சில பார்சல்களைக் கொடுத்து வெளியில் சென்றான். அதில் சிலவற்றை எடுத்து பவானியிடம் கொடுத்தார். டிரைவர் வாங்கி வந்ததில் மிச்சம் இருந்த ஒன்றை எடுத்து என்னிடம் நீட்டினார். வாங்கிக் கொண்டேன். உள்ளே என்ன இருக்கும் என்று தெரியும்.

"நாம சேர்ந்து போய் வாங்கியிருக்கலாம்பா...." என்றேன். நிமிர்ந்து பார்த்தவர் முகத்தைத் திருப்பிக் கொண்டார். நான் உள்ளே ஏதோ வேலை இருப்பது போல "இதோ வந்துடறேன்பா...." என்று சொல்லி உள்ளே வந்தேன். 

வேலை ஒன்றும் ஓடவில்லை. அவர் என்ன செய்கிறார் என்று உள்ளிருந்தே வேவு பார்த்துக் கொண்டிருந்தேன்.

அந்த இடைவெளி எங்கள் இருவருக்குமே தேவை என்று தோன்றியது. இப்போது கொடுத்துள்ள இந்த இடைவெளி எங்களுக்குள் இருக்கும் தற்போதைய தயக்க இடைவெளியை சற்று குறைக்கும். எங்களுக்குள் என்று சொல்லக் கூடாது. அவருக்கு இருக்கும் தயக்கத்தைக் குறைக்கும். அவர்தான் எங்களை நீண்ட நாள் கழித்துப் பார்க்கிறார். நாங்கள் அல்ல! விஷயங்கள் தெரியும்போது அவர் எப்படி நடந்து கொள்ளுவாரோ.... எப்போது எப்படிப் பேச வேண்டும் என்றும் தெரியவில்லை. சீக்கிரம் பேச மனதில் ஆர்வம் இருக்கிறது.



அப்பா எழுந்து ஹாலைச் சுற்றி வந்தார். புத்தகங்களைப் புரட்டினார்.  டிரஸ்ஸிங் டேபிள் மேலே இருந்த தன்னுடைய, மற்றும் பாட்டியின் புகைப் படத்தைப் பார்த்து விட்டு பாராதது போலத் திரும்பி நான் பார்க்கிறேனா என்று பார்த்துக் கொண்டார்! பவானியை விட்டு நீண்ட தூரம் போகாமல் அவளைக் கூடக் கூட அழைத்துக் கொண்டார்.நல்லவேளை, அவளைப் பள்ளி செல்ல விடவில்லை நான்! இப்போது எங்களுக்குள் இருக்கும் நல்லெண்ணத் தூதர் அவள்தான்! அவளை வைத்துதான் இந்த இடைவெளி குறைக்கப்பட வேண்டும்.

'சட்'டென இயல்பு நிலைக்குத் திரும்புவதுதான் எங்கள் இருவருக்குமே நல்லது என்று தோன்றியதால் ஏதோ மனதில் திடீரென அந்த தைரியம் தோன்ற ஒரு தட்டில் சூடாக ஆப்பங்கள் எடுத்துப் போட்டு, ஒரு பீங்கான் கிண்ணத்தில் பாயாவைப் போட்டு எடுத்துக் கொண்டு இயல்பாக அப்பாவிடம் நடந்தேன். 



"ஏய் வாலு.... தள்ளுடி... தாத்தா சாப்பிடணும்.... அப்பா.... இந்தாங்கப்பா... இதைப் பிடிங்க...." அவர் மறுக்குமுன் அவர் கையை இழுத்து ஒரு 'மக்'கில் நீட்டி டம்ப்ளரில் இருந்த தண்ணீரை ஊற்றி கை கழுவ வைத்தேன். டீபாய் மேல் ஆப்பத் தட்டை வைத்து சேரை எடுத்து எதிரே போட்டேன்.

அந்த தைரியம் எப்படி வந்தது என்று எனக்கே ஆச்சர்யமாக இருந்தது. காரணம் வீட்டை விட்டு வந்த அந்த நிகழ்வும், அதன்பின் அவரின் கோபமும்! யோசித்துப் பார்க்கும்போது வீட்டில் இருந்த நாட்களில் கூட இந்த வேலை நான் செய்தது இல்லை. பாட்டிதான் செய்வாள். குழந்தையாய், மகளாய் நான் எதிரே இருப்பேன். அவ்வளவுதான்!  

என்னதான் கோபமிருந்தாலும் அப்பாதானே என்ற சொந்தம் தந்த உணர்வு மட்டுமில்லை, அவரின் கோபம் நிறையவே கரைந்து போயிருந்தது என்பதும் தெரிந்துதானே அவர் கையில் இந்த முகவரி கிடைக்கச் செய்தார் அவர்!

எதுவும் சொல்லாமல் அவர் வந்து உட்கார்ந்தபோது மனம் நிம்மதியடைந்தது. கண்கள் கலங்க முயற்சிப்பதைக் கட்டுப் படுத்தினேன்.

"நானும்.... நானும்..... நானும் சாப்பிடணும்.....எனக்கு..." என்று பவானி அந்தத் தட்டிடம் ஓட, எனக்கு பதற்றம் கலந்த கோபம் வந்தது. 

'கெடுத்துடுவா போலேருக்கே... இவ கிட்டக் கொடுத்துட்டு ஒதுங்கிடப் போறார்....'  
                                                                                                                          
                                                                                                                                 (தொடரும்)  


படங்கள் உதவி : நன்றி இணையம்.
                    

17.9.12

இப்படியும் ஒரு வெற்றி பெற்ற காதல் கதை! சற்றே நீண்ட சிறுகதை 1

                                                                 [ 1 ]

அப்பா என்னைப் பார்க்க வரப் போகிறார் என்று தெரிய வந்த போதே இதயம் எதிர்பார்ப்பில் துடிக்க ஆரம்பித்து விட்டது. கிட்டத்தட்ட ஐந்து வருடங்களுக்குப் பிறகு என்னை, இல்லை இல்லை எங்களைப் பார்க்க வருகிறார்! அவர் வரப்போவது எங்களுக்கு, எனக்குத் தெரியும் என்பதும் அவருக்குத் தெரியாது. அவரை இப்போது இங்கு வரவைத்தது நாங்கள்தான் என்பதும் அவருக்குத் தெரியாது.  எல்லாக் க்ரெடிட்டும் என் கணவருக்குத்தான் சேர வேண்டும்.

காதல் கணவர். நாங்கள் ஓடிவந்த ஜோடி!

காதலில் வெற்றி பெறுவது என்றால் கல்யாணத்தில் முடிவது மட்டும்தான் என்ற கருத்தில் எனக்கும் சரி, என் கணவருக்கும் சரி, உடன்பாடில்லை. வாழ்நாள் பூரா உடன் வரப் போகும் துணைதான். அதற்காகப் பெற்று வளர்த்தவர்களைத் துறப்பது என்பதில் இருவருக்குமே உடன்பாடில்லை என்பது எத்தனை பேருக்குக் கிடைக்கும் வாய்ப்பு? 



இதோ.....  கார் வந்து நிற்கிறது. அப்பா இறங்கி வீட்டை, சுற்றுப்புறத்தை ஒரு நோட்டம் விடுகிறார். மெல்ல, மெல்ல அவர் பார்வை எல்லா இடத்தையும்,  வீடு உட்பட,  அளவெடுக்கிறது. அதிருப்தி இல்லை முகத்தில்.

உள்ளே நுழையும்போது சிறிய தயக்கம் இருக்கும் என்று எதிர்பார்த்திருந்தேனானால் ஏமாந்தே போனேன். கம்பீரமாக உள்ளே வந்து ஜம்மென்று ஸோஃபாவில் கால் மேல் கால் போட்டு அமர்ந்தார். டிரைவர் ஒரு சிறிய பார்சலை தூக்கி வந்து அவர் அருகில் வைத்து விட்டுப் போனான்.

கணவரின் பி.ஏ இன்டர்காமில் அழைத்ததும் நான் கீழே இறங்கினேன்.  பி.ஏ  சொல்லிக் கொண்டு கிளம்பினார். இதுவரை ஒரு திட்டமிட்ட காட்சி போல நடந்தது  இனி நடக்கப் போவது கைக்கு மீறிய காட்சி போல மனதில் பட்டு நடையில் தயக்கம் வந்தது.



படி இறங்கும்போதே என்னைக் கவனித்து விட்ட அப்பா முகத்தில் மாறுதல் ஏதாவது தெரிந்ததா.... கவனிக்க முடியாத தயக்கம்  

"காரியத்தைக் கெடுத்துடாத கயல்..... புதுசா தெரியறா மாதிரி நடந்துக்கோ.... உன் சாமர்த்தியம்தான்..." - மனம் 

இயல்பை விட சற்று வேகமாகவே நடந்து ஆர்வப் படபடப்பைக் காட்டுவதற்கு நடிப்புத் தேவைப் படவில்லை. பாசம் தானாகவே கொண்டு வந்தது.

"அப்பா..... வாங்கப்பா..... வாங்க.... எப்படிப்பா...." வார்த்தைகள் கிடைக்காமல் தடுமாறி அங்கிருந்த நாற்காலியின் கைகளைப் பிடித்து நின்று விட்டு மெல்ல அவர் எதிரே அமரப் போனவள் 'சட்'டெனத் தோன்றி அவர் கால்களில் விழுந்தேன். சாதாரண சமயங்களில் என்னுடைய இயல்புக்கு செயற்கையாகத் தோன்றும் இந்தச் செயலை இந்த சமயத்தில் என்னை மீறி நானே எப்படிச் செய்தேன் என்று ஆச்சர்யமாக இருந்தது.

என்னைப் பற்றியே நான் இன்னும் முழுதாக உணரவில்லை போலும்!

இன்னமும் அப்பா பேசவில்லை. எழுந்து அவர் அருகில் உட்காரும் முடிவை மாற்றிக் கொண்டு எதிரில் அமர்ந்தேன்.

"நல்லா இருக்கீங்களாப்பா...."

"ம்....."

"என்னைப் பார்க்கத்தான் வந்தீங்களாப்பா....?" வார்த்தைகளில் தவறாக ஏதும் தொனி வந்து விடக் கூடாது என்ற எச்சரிக்கை உணர்வு உடனே தோன்ற, "வேற ஏதும் வேலையா வந்தீங்களாப்பா.... அட்ரஸ் எப்படிக் கிடைச்சுது?

"குழந்தை எங்கே..."

"அப்பா.... !"

ஒரு பெண்தானே உனக்கு.... எங்கே அவள்..."

"அப்பா.... உங்களுக்கு....உங்களுக்கு எப்படி தெரியும்?"   என் நடிப்பின் மீது எனக்கே திருப்தி இல்லை.

உள்ளே திரும்பி "குட்டிப்பொண்ணு..." என்று கூப்பிட்டேன்.

"எஸ் மம்மி.....ஐம் கமிங் மம்மி..." குரல் மட்டும் வந்தது. அவள் வர இன்னும் சில நிமிடங்களாகும். ஒரு குரலில் அவள் வந்தால் அது வரலாறு!

அப்பாவின் பார்வை அலைந்தது. எதிர்பார்ப்பைக் கண்டிப்பான பார்வை போலக் காட்டினார். "ம்... வரச்சொல்லு..." அவரின் அந்த செயற்கையான மிடுக்கு எனக்கு தங்கப்பதக்கம் சிவாஜியை நினைவுபடுத்தியது.

"சொல்லுங்கப்பா.... எங்கேருந்து வர்றீங்க.... (தெரியும்!) எப்போ சாப்பிட்டீங்க.... இன்னிக்கி யதேச்சையா உங்களுக்குப் பிடிச்ச ஆப்பமும் பாயாவும்பா.... வாங்க சாப்பிட்டுகிட்டே பேசலாம்..."

"நான் சாப்பிட வரலைம்மா... இந்தப் பக்கமா வந்தேன்... காதுல பட்ட நியூஸ் சரிதானான்னு பார்த்துப் போக வந்தேன்..." ஓடிவந்த பவானியைக் கண்டு அவர் கண்கள் விரிந்தன.  தன்னை மீறி தன் கைகளை நீட்டினார்.

ஓடிவந்த பவானி என்மேல் விழுந்து "மா....மா...  அங்க... அங்க...  அந்த ராபின் இல்லை..." என்று ஏதோ செய்தி சொல்லத் தொடங்கியவள் அப்பாவைக் கண்டதும் மகிழ்ந்து போனாள்...

"ஹை..... தாத்தா.... அம்மா!  எப்போ வருவார்னே தெரியாதுன்னு சொன்னே.... என்னைப் பார்க்க வந்துட்டார்...   தா.....த்தா...."

நான் செய்யத் தயங்கிய செயலை என் மகள் செய்தாள். ஓடிப் போய் அவர் மடி மீது விழுந்தாள். எனக்குப் பொறாமையும் ஏக்கமுமாக இருந்தது. நான் அங்கே உட்கார்ந்திருந்து அவர் கைகளுடன் என் கைகளைக் கோர்த்துக் கொண்டு அவர் அன்பை அனுபவித்திருக்க வேண்டும். ஒரு கையால் தலையை மென்மையாகக் கோதுவார். 



செய்தார்.

உடனடியாக என் கண்கள் கலங்கின. பவானியின் தலையிலிருந்து கைகளை எடுத்து அவளைத் தூக்கி மடியில் உட்கார வைத்தவர் "உன் பேர் என்னடா...." என்றார் கரகர குரலில். உணர்ச்சிகளை அடக்க அவர் பாடுபடுவது புரிந்து எனக்கு மூச்சடைத்தது. 



"என் பேரு பவானி தாத்தா.... உனக்கு இது தெரியாதா...."

அது பாட்டியின் -  அவர் அம்மாவின் பெயர். அவர் 'சட்'டென என்னை நிமிர்ந்து பார்த்தார்.  என்னை மீறி, என் கட்டுப் பாட்டை மீறி என்னிடமிருந்து அந்த விம்மல் புறப்பட்டது. அதற்கு மேலும் தாங்க முடியாமல் எழுந்து வேகமாக அவர் அருகில் சென்று உட்கார்ந்து அவர் கைகளை எடுத்துக் கோர்த்துக் கொண்டு "அப்பா..." என்றேன். அதற்கு மேல் பேச முடியவில்லை.

கட்டுப்பாடுகள் உடைய,  அவர் கண்களும் கலங்கின. "ஏம்மா....நானா வந்து பார்த்தாதான் இல்லே...." என்றார்.

"அப்பால்லாம் அவ்வளவுதான் இல்லே...."

"அப்படிச் சொல்லாதீங்கப்பா... உங்களைப் பற்றி நினைக்காத நாளில்லை தெரியுமா..."

"ஹூம்....." விரக்தியாகச் சிரித்தவர் "எல்லோரும் சொல்றதுதானேம்மா.... நீ மட்டும் மாத்தியா சொல்லப் போறே..."

என் வழக்கமான பேச்சு என்னிடமும் திரும்பத் தொடங்கியது.



                                                                                                                      -தொடரும்-