Monday, September 17, 2012

இப்படியும் ஒரு வெற்றி பெற்ற காதல் கதை! சற்றே நீண்ட சிறுகதை 1

                                                                 [ 1 ]

அப்பா என்னைப் பார்க்க வரப் போகிறார் என்று தெரிய வந்த போதே இதயம் எதிர்பார்ப்பில் துடிக்க ஆரம்பித்து விட்டது. கிட்டத்தட்ட ஐந்து வருடங்களுக்குப் பிறகு என்னை, இல்லை இல்லை எங்களைப் பார்க்க வருகிறார்! அவர் வரப்போவது எங்களுக்கு, எனக்குத் தெரியும் என்பதும் அவருக்குத் தெரியாது. அவரை இப்போது இங்கு வரவைத்தது நாங்கள்தான் என்பதும் அவருக்குத் தெரியாது.  எல்லாக் க்ரெடிட்டும் என் கணவருக்குத்தான் சேர வேண்டும்.

காதல் கணவர். நாங்கள் ஓடிவந்த ஜோடி!

காதலில் வெற்றி பெறுவது என்றால் கல்யாணத்தில் முடிவது மட்டும்தான் என்ற கருத்தில் எனக்கும் சரி, என் கணவருக்கும் சரி, உடன்பாடில்லை. வாழ்நாள் பூரா உடன் வரப் போகும் துணைதான். அதற்காகப் பெற்று வளர்த்தவர்களைத் துறப்பது என்பதில் இருவருக்குமே உடன்பாடில்லை என்பது எத்தனை பேருக்குக் கிடைக்கும் வாய்ப்பு? இதோ.....  கார் வந்து நிற்கிறது. அப்பா இறங்கி வீட்டை, சுற்றுப்புறத்தை ஒரு நோட்டம் விடுகிறார். மெல்ல, மெல்ல அவர் பார்வை எல்லா இடத்தையும்,  வீடு உட்பட,  அளவெடுக்கிறது. அதிருப்தி இல்லை முகத்தில்.

உள்ளே நுழையும்போது சிறிய தயக்கம் இருக்கும் என்று எதிர்பார்த்திருந்தேனானால் ஏமாந்தே போனேன். கம்பீரமாக உள்ளே வந்து ஜம்மென்று ஸோஃபாவில் கால் மேல் கால் போட்டு அமர்ந்தார். டிரைவர் ஒரு சிறிய பார்சலை தூக்கி வந்து அவர் அருகில் வைத்து விட்டுப் போனான்.

கணவரின் பி.ஏ இன்டர்காமில் அழைத்ததும் நான் கீழே இறங்கினேன்.  பி.ஏ  சொல்லிக் கொண்டு கிளம்பினார். இதுவரை ஒரு திட்டமிட்ட காட்சி போல நடந்தது  இனி நடக்கப் போவது கைக்கு மீறிய காட்சி போல மனதில் பட்டு நடையில் தயக்கம் வந்தது.படி இறங்கும்போதே என்னைக் கவனித்து விட்ட அப்பா முகத்தில் மாறுதல் ஏதாவது தெரிந்ததா.... கவனிக்க முடியாத தயக்கம்  

"காரியத்தைக் கெடுத்துடாத கயல்..... புதுசா தெரியறா மாதிரி நடந்துக்கோ.... உன் சாமர்த்தியம்தான்..." - மனம் 

இயல்பை விட சற்று வேகமாகவே நடந்து ஆர்வப் படபடப்பைக் காட்டுவதற்கு நடிப்புத் தேவைப் படவில்லை. பாசம் தானாகவே கொண்டு வந்தது.

"அப்பா..... வாங்கப்பா..... வாங்க.... எப்படிப்பா...." வார்த்தைகள் கிடைக்காமல் தடுமாறி அங்கிருந்த நாற்காலியின் கைகளைப் பிடித்து நின்று விட்டு மெல்ல அவர் எதிரே அமரப் போனவள் 'சட்'டெனத் தோன்றி அவர் கால்களில் விழுந்தேன். சாதாரண சமயங்களில் என்னுடைய இயல்புக்கு செயற்கையாகத் தோன்றும் இந்தச் செயலை இந்த சமயத்தில் என்னை மீறி நானே எப்படிச் செய்தேன் என்று ஆச்சர்யமாக இருந்தது.

என்னைப் பற்றியே நான் இன்னும் முழுதாக உணரவில்லை போலும்!

இன்னமும் அப்பா பேசவில்லை. எழுந்து அவர் அருகில் உட்காரும் முடிவை மாற்றிக் கொண்டு எதிரில் அமர்ந்தேன்.

"நல்லா இருக்கீங்களாப்பா...."

"ம்....."

"என்னைப் பார்க்கத்தான் வந்தீங்களாப்பா....?" வார்த்தைகளில் தவறாக ஏதும் தொனி வந்து விடக் கூடாது என்ற எச்சரிக்கை உணர்வு உடனே தோன்ற, "வேற ஏதும் வேலையா வந்தீங்களாப்பா.... அட்ரஸ் எப்படிக் கிடைச்சுது?

"குழந்தை எங்கே..."

"அப்பா.... !"

ஒரு பெண்தானே உனக்கு.... எங்கே அவள்..."

"அப்பா.... உங்களுக்கு....உங்களுக்கு எப்படி தெரியும்?"   என் நடிப்பின் மீது எனக்கே திருப்தி இல்லை.

உள்ளே திரும்பி "குட்டிப்பொண்ணு..." என்று கூப்பிட்டேன்.

"எஸ் மம்மி.....ஐம் கமிங் மம்மி..." குரல் மட்டும் வந்தது. அவள் வர இன்னும் சில நிமிடங்களாகும். ஒரு குரலில் அவள் வந்தால் அது வரலாறு!

அப்பாவின் பார்வை அலைந்தது. எதிர்பார்ப்பைக் கண்டிப்பான பார்வை போலக் காட்டினார். "ம்... வரச்சொல்லு..." அவரின் அந்த செயற்கையான மிடுக்கு எனக்கு தங்கப்பதக்கம் சிவாஜியை நினைவுபடுத்தியது.

"சொல்லுங்கப்பா.... எங்கேருந்து வர்றீங்க.... (தெரியும்!) எப்போ சாப்பிட்டீங்க.... இன்னிக்கி யதேச்சையா உங்களுக்குப் பிடிச்ச ஆப்பமும் பாயாவும்பா.... வாங்க சாப்பிட்டுகிட்டே பேசலாம்..."

"நான் சாப்பிட வரலைம்மா... இந்தப் பக்கமா வந்தேன்... காதுல பட்ட நியூஸ் சரிதானான்னு பார்த்துப் போக வந்தேன்..." ஓடிவந்த பவானியைக் கண்டு அவர் கண்கள் விரிந்தன.  தன்னை மீறி தன் கைகளை நீட்டினார்.

ஓடிவந்த பவானி என்மேல் விழுந்து "மா....மா...  அங்க... அங்க...  அந்த ராபின் இல்லை..." என்று ஏதோ செய்தி சொல்லத் தொடங்கியவள் அப்பாவைக் கண்டதும் மகிழ்ந்து போனாள்...

"ஹை..... தாத்தா.... அம்மா!  எப்போ வருவார்னே தெரியாதுன்னு சொன்னே.... என்னைப் பார்க்க வந்துட்டார்...   தா.....த்தா...."

நான் செய்யத் தயங்கிய செயலை என் மகள் செய்தாள். ஓடிப் போய் அவர் மடி மீது விழுந்தாள். எனக்குப் பொறாமையும் ஏக்கமுமாக இருந்தது. நான் அங்கே உட்கார்ந்திருந்து அவர் கைகளுடன் என் கைகளைக் கோர்த்துக் கொண்டு அவர் அன்பை அனுபவித்திருக்க வேண்டும். ஒரு கையால் தலையை மென்மையாகக் கோதுவார். செய்தார்.

உடனடியாக என் கண்கள் கலங்கின. பவானியின் தலையிலிருந்து கைகளை எடுத்து அவளைத் தூக்கி மடியில் உட்கார வைத்தவர் "உன் பேர் என்னடா...." என்றார் கரகர குரலில். உணர்ச்சிகளை அடக்க அவர் பாடுபடுவது புரிந்து எனக்கு மூச்சடைத்தது. "என் பேரு பவானி தாத்தா.... உனக்கு இது தெரியாதா...."

அது பாட்டியின் -  அவர் அம்மாவின் பெயர். அவர் 'சட்'டென என்னை நிமிர்ந்து பார்த்தார்.  என்னை மீறி, என் கட்டுப் பாட்டை மீறி என்னிடமிருந்து அந்த விம்மல் புறப்பட்டது. அதற்கு மேலும் தாங்க முடியாமல் எழுந்து வேகமாக அவர் அருகில் சென்று உட்கார்ந்து அவர் கைகளை எடுத்துக் கோர்த்துக் கொண்டு "அப்பா..." என்றேன். அதற்கு மேல் பேச முடியவில்லை.

கட்டுப்பாடுகள் உடைய,  அவர் கண்களும் கலங்கின. "ஏம்மா....நானா வந்து பார்த்தாதான் இல்லே...." என்றார்.

"அப்பால்லாம் அவ்வளவுதான் இல்லே...."

"அப்படிச் சொல்லாதீங்கப்பா... உங்களைப் பற்றி நினைக்காத நாளில்லை தெரியுமா..."

"ஹூம்....." விரக்தியாகச் சிரித்தவர் "எல்லோரும் சொல்றதுதானேம்மா.... நீ மட்டும் மாத்தியா சொல்லப் போறே..."

என் வழக்கமான பேச்சு என்னிடமும் திரும்பத் தொடங்கியது.                                                                                                                      -தொடரும்-

16 comments:

எல் கே said...

உருக்கமா போகுதே

எல் கே said...

என் பதிவோட ஆர் எஸ் எஸ் பீட் சரியா வேலை செய்யலை போல இருக்கே பாக்கறேன்

திண்டுக்கல் தனபாலன் said...

யதார்த்தமாக செல்கிறது... தொடர்கிறேன்... (படங்கள் அங்கங்கே வரவில்லை... தளம் திறக்க நேரமாகுது)

அப்பாதுரை said...

காதல் கதைன்றீங்க.. காதலையே காணோமே? அடுத்தாப்புல வருமா?

வெங்கட் நாகராஜ் said...

ம்ம்... நல்ல தொடக்கம். அடுத்த பகுதிகளுக்கான காத்திருப்பு.

middleclassmadhavi said...

Interestingana thodakkam...

ராமலக்ஷ்மி said...

அப்பா மகள் மனங்களில் ததும்பும் உணர்வுகளை மிக நுணுக்கமாகச் சித்தரித்திருக்கிறீர்கள். பாசத்துக்கு முன் கோபங்களும் வருத்தங்களும் நீண்ட நாள் நிற்கமுடிவதில்லை. தொடருங்கள்.

வல்லிசிம்ஹன் said...

இது ஒரு காதல் கதையோட நடு பாகம். ஃப்ளாஷ்பாக் வரும் வந்தவரை நல்லா இருக்கும்.
படங்களும் அழகாய் இருக்கு.
ஒரே உணர்ச்சிமயம்.அதனாலயே நல்லா இருக்கு.

சீனு said...

சார் கதை சூப்பர். இயல்பாய் செல்லும் கதை ஆனால் சொல்லும் விதம் தனித்துவம். எப்பா என்னமா கதை சொல்றீங்க...
//- மனம் //
//ஹை..... தாத்தா.... அம்மா! // குழந்தையைக் கூட புத்திசாலியாகக் காட்டியுள்ளீர்கள். நான் வெகுவாக ரசித்த இடம்.
//ஓடிப் போய் அவர் மடி மீது விழுந்தாள். // விவரிக்க வார்த்தைகள் இல்லை

அடுத்த பகுதியை எதிர்பார்த்து .....

எங்கள் ப்ளாக் said...

நன்றி

எல் கே, தனபாலன், அப்பாதுரை, (நானும் அதைத்தான் தேடிக் கொண்டிருக்கிறேன்!!), வெங்கட் நாகராஜ், middleclassmadhavi, ராமலக்ஷ்மி (பாராட்டுக்கு நன்றி!), வல்லிசிம்ஹன் (உற்சாகப்படுத்துவதற்கு நன்றி), சீனு (பாராட்டுக்கு நன்றி)

ஊக்கத்துக்கும் ஆதரவுக்கும் நன்றி!

Anonymous said...

நல்ல தொடக்கம். ஒரே உணர்ச்சி மயமா இருக்கு.

//என்னைப் பற்றியே நான் இன்னும் முழுதாக உணரவில்லை போலும்!//
அருமையான வரி. வாழ்கையில் இக்கட்டான சூழ்நிலைகளும், கடினமான நேரங்களும் வரும்போது, நம்மால் எப்படி நடந்து கொள்ள முடிகிறது என்பதை அந்த நேரத்தில் நாம் எடுக்கும் முடிவுகளை பொறுத்துதான் உண்மையாகவே நம்மை நம்மால் உணர்ந்து கொள்ள முடிகிறது. சில நேரங்களில் மிகவும் ஆச்சரியமாகவும் இருக்கிறது. சூழ்நிலைகளும், நிலைமையும் இது நானா, நான்தான் இப்படி நடந்து கொள்கிறேனா என்று வியப்பை ஏற்படுத்தும் வகையில் நம்மை மாற்றி விடுகிறது.

எல் கே said...

//அடிக்கடி நாங்க மேய்வது/

இதில் பாகீரதி தளத்தை எடுத்துவிட்டு பிறகு மீண்டும் இணைக்கவும் . செய்தியோடையில் கொஞ்சம் மாறுதல் செய்துள்ளேன்

எங்கள் ப்ளாக் said...

// எல் கே said...
//அடிக்கடி நாங்க மேய்வது/

இதில் பாகீரதி தளத்தை எடுத்துவிட்டு பிறகு மீண்டும் இணைக்கவும் . செய்தியோடையில் கொஞ்சம் மாறுதல் செய்துள்ளேன்//
Done. Please check and let us know whether the link is working now.

ஹேமா (HVL) said...

நன்றாக இருக்கிறது!

Geetha Sambasivam said...

love story? love enge kanom? Oh, it is true love which meant all types of love including parental love, isn't it? ok ok,:))))) I thought of love between a girl and boy. :)))))

ஜீவி said...

கதை விதை மனதில் விழுந்த தருணம் தெரிகிறது.

அப்புறம்.. சிவாஜியைப் பற்றிச் சொல்லணும். அவர் நினைப்பில் வந்து உட்கார்ந்தால் போதும், உணர்வு பூர்வமான கட்டங்களில் எழுதுபவர்களு க்கு வார்த்தைகள் கூட வந்து வந்து சேர்ந்து கொள்ளும். நானும் ஒருகாலத்தில் அனுபவித்தது தான்..

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!