நம்ம வூடுதான்! உள்ள வாங்க! படிங்க! படிங்க!! படிச்சுகிட்டே...இருங்க! வலை உலகிலே "எங்கள்" புதிய பாணி!
6.11.26
ஆண்டவனும் கோவிலில் தூங்கிவிடும்போது யாரிடத்தில் கேள்வி கேட்பது
..... இதை எல்லாம் யோசித்து ஏற்கனவே இதுவா அதுவா என்று ஒற்றையா ரெட்டையா போட்டுப் பார்த்துக் கொண்டிருந்த மகன் டெலிவரி ராமச்சந்திராதான் என்று தீர்மானித்தான்.. அது கிளைக்கதை.
மெயின் கதைக்கு மறுபடி வருகிறேன்.....
ஒரு விசேஷத்துக்காக வெளியூர் செல்கிறேன் என்று சென்ற மருத்துவர் திங்கள் ஊர் திரும்பினார். அந்நேரத்தில் மாமியார் ஓரளவு பரவாயில்லை என்ற அளவில்தான் இருந்தார். ஆனால் ஆக்சிஜன் அளவு மட்டும் போதுமான அளவு வரவில்லை.
நாங்கள் என்ன நினைத்தோம் என்றால் 'இதயம் குறைந்த சதவிகிதம்தான் வேலை செய்கிறது. அவர்கள் தீவிர ரெஸ்ட்டில் இருக்க வேண்டும். சில மருந்துகள் தருகிறேன் தொடருங்கள்' என்று சொல்லி டிஸ்சார்ஜ் சிபாரிசு செய்வார் என்று. ஆக்சிஜனுக்கு மட்டும் என்ன செய்வார்கள்? சரி. சில உறவுகள் வீட்டில் பார்த்திருக்கிறோம் ஒரு மெஷின் வாங்கி லெவல் சரியாகும்வரை வைக்க வேண்டியதுதான் என்று பேசிக் கொண்டிருந்தோம்.
வந்தவர் வேறு ஆஸ்பத்திரி போகச் சொல்கிறார் என்று செய்தி மட்டும் வந்தது. நாங்கள் இந்த ரிஷப்ஷனிஸ்ட் பெண்களிடம் கோபமாக பேசியது, ஆய்வகப் பெண்ணிடம் விவரம் கேட்டு பேசியதும் தவறோ என்று நினைக்கும் அளவு இது உடனடி எதிர்பாரா ஆக்ஷனாக இருந்தது. அவரே வந்து விளக்குவார் என்றார்கள்.
வந்தார்.
"அவங்களுக்கு ஹார்ட் 25% தான் வேலை செய்யுது..(தெரிஞ்சதுதானே? இப்போ என்ன புதுசா?) இங்க ICU கிடையாது (அது இப்போதான் தெரியுதா? எங்களுக்கே ஏற்கனவே தெரியுமே) ஹார்ட் டாக்டர். கிட்னி டாக்டர்னு அவசரத்துக்கு கூப்பிட்டா வெளிலிருந்துதான் வரணும்.. அப்பவும் அவங்க வசதிக்குதான் வருவாங்க (இதெல்லாம் புதுசா சொல்றீங்க... இப்பதான் தெரிஞ்ச மாதிரி) அவங்களுக்கு இப்போ உடனே அட்டென்ஷன் தேவை. ஆக்சிஜன் லெவல் வேற ஏறவே மாட்டேங்குது ட்ரிபிள் எம், அப்பல்லோ, ராமச்சந்திரா மூணுல எது உங்களுக்கு OK ன்னு சொல்லுங்க மாத்தறதுக்கு லெட்டர் தர்றேன்"
சென்ற வாரம் அழைப்பின்பேரில் வந்த கார்டியாலஜிஸ்ட் மிகவும் பொறுமை இழந்து பதில் சொன்னதும் நினைவுக்கு வந்தது. ஏதாவது கேள்வி கேட்டால் பொறுமை இழந்தார். இரண்டாவது முறை கேட்டால் பல்கலைக் கடிக்காத குறை..
நாங்கள் ராமச்சந்திரா என்று சொன்னோம். ஆனால் அவர்கள் டிஸ்சார்ஜ் சம்மரி எழுதி பைல்கள் தந்து, பணம் வாங்கி, இதற்கே மாலை ஆறுமணி ஆகி விட்டது. ஏற்கனவே கவனிக்காமல் இருந்தவர்கள் இப்போது டிஸ்சார்ஜ் என்று இன்னும் அலட்சியமாக இருந்தனர்.
ராமச்சந்திரா என்றதும் அங்கு எந்த டாக்டரைப் பார்க்கப் போகிறீர்கள் என்று கேட்டார் இங்கிருக்கும் பொது மருத்துவர். இரண்டு பேரைக் கேட்டு, எங்களுக்குள் பேசி டாக்டர் பெயரைச் சொன்னோம். "எனக்குத் தெரிந்தவர்தான். நானே ஒரு இன்ட்ரோ கொடுத்து விடுகிறேன்" என்று எங்கள் முன்னாலேயே போன் பேசிவிட்டுக் கிளம்பினார். நான் இப்போது சொல்லப்போகும் முக்கியக் குறை இங்கேதான் வருகிறது.
சாதாரணமாக பில் செட்டில் செய்து அவர்கள் கொடுக்கும் டிஸ்சார்ஜ் சம்மரியை வாங்கி கொண்டு கிளம்பி விடுவோம். என் மகன் அப்படிச் செய்யவில்லை. ஒவ்வொன்றாக ஆராய்ந்தான். கேள்விக்குட்படுத்தினான். இவன் கேள்வி கேட்டதால் ரிசப்ஷனில் மூஞ்சி காட்டினார்கள். இவன் அசரவில்லை. இவன் கேட்டது ஒன்றுதான். "இவ்வளவு டெஸ்ட் எழுதி இருக்கிறீர்கள். அதற்குண்டான ரிசல்ட் ஒவ்வொன்றையும் அதன் கீழே அடுக்கித் தாருங்கள்"
"நீங்களே அடுக்கிக் கொள்ளுங்கள். நாங்கள் செய்ய மாட்டோம் " என்றார்கள்.
இவன் ஒவ்வொன்றாக அடுக்கியபோது இரண்டு டெஸ்ட் செய்யவே இல்லை என்று தெரிந்தது. ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு விழித்தார்கக்ள். கூடி கூடிப் பேசினார்கள். லேபுக்கு ஓடினார்கள். ரெஜிஸ்டரை எடுத்து ஆராய்வது போல பார்த்தார்கள். டியூட்டி டாக்டர் வந்து பார்த்து ஆராச்சி செய்தார். அடுத்ததாக ஆஸ்பத்திரி MD மேடமே எல்லாவற்றையும் கொண்டு வரச் சொல்லி ஆராய்ந்தார்கள். "ஏதோ தெரியாமல் தவறு நடந்திருக்கிறது. எப்படி இப்படி ஆச்சுன்னு தெரியலை" என்றெல்லாம் வசனம் பேசி அதறகான பணத்தை ரிடர்ன் செய்தார்கள். அடுத்ததாக மகன் கையில் எடுத்தது டாக்டர்ஸ் விசிட் விவரம். அதில் கட்டாயம் தப்பு இருக்கிறது என்று தெரிந்தாலும் ஒப்புக்கொள்ள மறுத்தார்கள். எங்களுக்கு ஆஸ்பத்திரி மாற நேரம் கொண்டிருந்ததால் நாங்களும் அதிகம் ஆராய முடியாத நிலை. நாங்களே ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்து தருவோம் என்று சொன்னவர்கள் எங்களைதான் பணம் கட்ட விட்டார்கள். ஆம்புலன்ஸ் லட்சணம் ஏற்கனவே எழுதியிருந்தேன்.
ஏற்கனவே டி மார்ட்,ரிலையன்ஸ் உள்ளிட்ட இந்த கணினி பில் போடுமிடங்களில் எல்லாம் மகன் செக் செய்வான். அதில் ஒன்று, கொடுக்காத ஐட்டம் பில்லில் சேர்த்திருப்பார்கள். அல்லது ஒரு பாக்கெட் கொடுத்து விட்டு மூன்று பாக்கெட் என்று விலை போட்டிருப்பார்கள்.
'எங்கெங்கு காணினும் ஊழலடா' என்று பாடலாம். ஆஸ்பத்திரியில் கூடவா என்று கேட்காதீர்கள். அங்குதான் நிறைய இருக்கும். கண்டு பிடித்தால் ஏதோ காரணம் சொல்லிக் கொள்ளலாம். அடிக்கற வரை அடியென்று அடிக்கிறார்கள்.
தபால், தந்தி, தொலைபேசி, இன்டர்நெட் இதெல்லாம் இல்லாத ஒரு சூழலை இன்றைய தேதியில் நம்மால் கற்பனை செய்து கூட பார்க்க முடியாது. அந்தக் கால சோழ மன்னர்கள் ஆட்சி செய்த போது தகவல் பரிமாற்றத்திற்கு குதிரையைத் தான் நம்பி இருந்தார்கள். புறாக்களின் காலில் செய்தி வைத்து அனுப்புவதைப் பற்றி வேறு பிரதேசங்களைக் குறிப்பிட்டுச் சொல்லப்படுகிறதே தவிர நம் பக்கத்தில் அப்படி பறவை விடு தூது ஏதும் இருந்ததாகத் தெரியவில்லை.
அதுவும் சோழர் காலத்துக்கும் 2000 ஆண்டுகளுக்கு முன் என்ற ஒரு காலத்தில் எப்பேர்ப்பட்ட வசதி, சமூக சூழ்நிலை இருந்திருக்கும் என்று ஊகிப்பது கூட கஷ்டம். அப்பொழுது ராமாயணம் மகாபாரதம் மற்றும் வேதங்கள் உபநிஷத்துக்கள் இவை எல்லாம் பரவலாக தெரியப்பட்டிருந்தன என்று அறியும் போது நமக்கு ஆச்சரியமாக இருக்கிறது இல்லையா ? இப்படி பாடங்களை மனனம் செய்து எழுத்தாணி பனை ஓலைகள் கூட புழக்கத்தில் இல்லாத காலம் தொட்டு மக்களிடையே பரப்பி இருக்கிறார்கள் என்பது மிகுந்த ஆச்சரியத்தை அளிக்கும் செய்தி. இதனுடைய ஆழத்தை சரியாக நாம் புரிந்து கொண்டிருக்கிறோமா என்பதே சந்தேகமாக இருக்கிறது.
ராமாயணம், மகாபாரதம், மற்றும் ஆயிரக் கணக்கான நீதிக்கதைகள் - இவற்றை வாய் - செவி வழியாகப் பரப்புவது என்பது மிக உயரிய நோக்கம் தான். ஆனால் அதை எப்படிச் செய்வது ?
வேத மந்திரங்களை மனப்பாடம் செய்வதற்கு கிரமம் கனம் என்றெல்லாம் வேறு வேறு வழி முறைகளை வகுத்து வைத்திருக்கிறார்கள் நம் பெரியவர்கள். அதனால் தான் தொன்மையை கணக்கிட்டு சொல்ல முடியாத அளவுக்கு தொன்மையான அந்த கிரந்தங்கள் இன்றும் நமக்கு கிடைத்திருக்கின்றன.
கதைகள் அல்லது நிகழ்ச்சிகளைப் பரப்புவதற்கு ஒரு உத்தியாக, விசித்திரமான திருப்பங்கள் கொண்ட நிகழ்ச்சிகளைக் கற்பனை செய்து அதில் சேர்த்தார்கள். சில நிகழ்ச்சிகளை சற்று திரித்தும், மற்றும் சிலவற்றை பெரிது படுத்தியும், இன்னும் சிலவற்றை நம்ப முடியாத கற்பனைகளை சேர்த்தும் அசல் கதைக்கு மெருகூட்டினார்கள். பெரிய இதிகாசங்களில் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் எழுதிய பகுதிகள் உண்டு என்று சொல்லக் கேட்டிருக்கிறேன் - நிச்சயமாகத் தெரியவில்லை. தமிழில் இடைச்செருகல் கம்பராமாயணத்தில் வெகு அதிகம் என்று சொல்வார்கள். அவர்கள் முன்வைக்கும் வாதங்கள் பெரும்பாலும் ஒப்புக்கொள்ளக் கூடியவை தான். அற்புதமான பாடல்களைக் கொண்ட கம்பராமாயணத்தின் நடுநடுவே விரசமான பாடல்கள் இருப்பது பல்லைக் கூசச் செய்யவில்லையா ? இந்த விஷயத்தில் ரசிக மணி டி கே சி அவர்களின் பணி மகத்தானது.
நமது சமய இலக்கியங்களில் மிக்கது கூறல் என்று சொல்லப்படும் அதிகப்படுத்தி எழுதுதல் மிகவும் அதிகம். ராவணனுக்கு 10 தலை, தசரதன் 40 ஆயிரம் ஆண்டுகள் ஆட்சி செய்தார் என்பதெல்லாம் கூட இந்தக் கணக்கில் வரும் என்று நான் நினைக்கிறேன்.
அந்த மாதிரி ஒரு மிகை கூறல் பற்றித்தான் நான் இங்கு சொல்ல வருகிறேன்.
ஒரு சமயம் சைவம் வைஷ்ணவம் இரு பிரிவுகளுக்கிடையே நிறைய போட்டி இருந்து வந்திருக்க வேண்டும். இப்போது நம் எம்எல்ஏக்கள் கட்சி மாறுவது போல அப்போது சில பிரபலங்களும் இங்கிருந்து அங்கு அங்கிருந்து இங்கு என்று மாறி மாறிப் போய்க் கொண்டிருந்ததும் தெரிய வருகிறது. இதைப் பயன்படுத்தி காளமேகத்தின் பாடல் ஒன்றைச் சுற்றி ஒரு கதை புனையப்பட்டிருக்கிறது.
முதலில் கதையைப் பார்த்துவிட்டுப் பிறகு பாடலுக்கு வருவோம். அப்போதுதான் சுவாரஸ்யம் கெடாமல் இருக்கும்.
காளமேகம் பிறப்பால் சைவம். பெயரைப் பார்த்தாலே தெரிகிறது. இவர் பெருமாள் மேல் பக்தி கொண்டு வைணவத்துக்கு மாறினாராம். பிறகு என்ன காரணமோ தெரியவில்லை மீண்டும் சைவராகிவிட்டார். இதெல்லாம் உண்மையா என்று என்னைக் கேட்காதீர்கள். எனக்கும் தெரியாது.
சைவத்திற்கு மீண்டும் போனபின் ஒரு நாள் காளமேகம் பெரிய மழையில் சிக்கிக் கொள்ளுகிறார். பக்கத்தில் இருப்பது திருக்கண்ணபுரத்து பெருமாள் கோயில். அங்கே மழைக்கு ஒதுங்கலாம் என்று சென்றால் கதவு அடைத்திருக்கிறது. சைவன் ஆகிவிட்டாயே என்று பெருமாள் நம்மேல் கோபித்துக் கொண்டு கதவை அடைத்திருக்கிறார் என்று காளமேகம் நினைத்துக் கொண்டு ஒரு பாடல் சொல்லத் தொடங்குகிறார் :
" கண்ணபுர மாலே! கடவுளிலும்நீ அதிகம் "
கடவுளரில் நீ உயர்த்தி என்று சொன்னபின் கதவு இன்னும் மூடி இருக்குமா என்ன ? பெருமாள் கதவை திறக்கச் செய்கிறார். சொஸ்தமாக உள்ளே வந்த காளமேகம் பாடலைத் தொடர்கிறார்:
" கண்ணபுர மாலே ! கடவுளிலும் நீ அதிகம்
உன்னை விட நான் அதிகம் ஒன்று கேள்
உன் பிறப்போ பத்து உயர் சிவனுக்கு ஒன்றும் இல்லை
என் பிறப்போ எண்ணத் தொலையாதே! "
இப்படி, பெருமாளையே ஏமாற்றி விட்டாராம் காளமேகம். மழை கோயில் ஒதுங்குவது எல்லாவற்றையும் விடுங்கள். பிறவிச் சுழல் பற்றி எவ்வளவு அழகாக சொல்லப்பட்டிருக்கிறது !!
இது போன்ற நூற்றுக்கணக்கான - இல்லை ஆயிரக்கணக்கான சுவாரசியங்கள் நம் இலக்கியத்தில் இருக்கின்றன.
தமிழில் இருக்கிற சிலேடை என்கிற பாடல் அமைப்பு சமஸ்கிருதத்தில் இருக்கிறது என்று லேசாகத் தெரியும். வேறு மொழிகளில் இருக்க முடியுமா என்று கூடத் தெரியவில்லை.
குமுதம் தான் முதலில் இந்த ஆறு வித்தியாசங்களை தொடங்கியது என்று நினைக்கிறேன். பிறகு குங்குமம் சாவியும் இதை வெளியிடத் தொடங்கின.
இந்த ஆறு வித்தியாசங்கள் என்பது மூளைக்கு வேலை மட்டும் இல்லை, நகைச்சுவையாகவும் எடுத்துக் கொள்ளலாம். அதேசமயம் சமயங்களில் காலத்தின் கண்ணாடியாகவும் அமைந்துவிடும்.
நூற்றாண்டுகளுக்குப் பின்னரும் தமிழிருக்கும் வரை என்றென்றும் நினைத்திருக்க வேண்டிய ஒப்பற்ற கவிஞர் கண்ணதாசன், "கன்னியின் காதலி" படத்தின் "கலங்காதிரு மனமே உன் கனவெல்லாம் நினைவாகும் ஒரு தினமே" பாடல் மூலம் திரைத் துறையில் நுழைந்தார்.
4000-க்கும் அதிகமான சாகா வரம்பெற்ற பாடல்கள் தந்த அவரின் கடைசி படப் பாடல் "மூன்றாம் பிறை" படத்தில் இடம் பெற்ற "கண்ணே.. கலைமானே.. கண்டேன் உனை நானே..." சரி, இதெல்லாம் தெரிந்ததுதானே என்கிறீர்களா? அவர் கடைசியாக எழுதிய கவிதை எது தெரியுமா? அது இதுதான்..
"மனிதரில் ஒன்றுபட்டுச் சேர்ந்திருப்பீர் - இங்கு மழலைகள் தமிழ் பேச செய்து வைப்பீர் தமக்கென கொண்டு வந்ததேதுமில்லை - பெற்ற தமிழையும் விட்டுவிட்டால் வாழ்க்கையில்லை!'
அமெரிக்காவின் சியாட்டில் மருத்துவமனையில் தன்னைப் பார்க்க வந்திருந்த தமிழ் நண்பர்களிடம் பேசிக்கொண்டிருந்த அவர், அவர்களின் குழந்தைகளிடம் பேச முற்படும்போது அவர்களுக்குத் தமிழ் தெரியவில்லை. அப்போது, ஒரு தாள் எடுத்து இந்த நான்கு வரிகளை எழுதி அவர்களிடம் கையளித்தார் கவிஞர். இதுதான் அவர் எழுதிய கடைசிக் கவிதை.
ஒருமுறை மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதன், கவிஞரிடம் “நான் எந்த தத்தகாரத்தை போட்டாலும் உங்களால் பாட்டு எழுத முடியுமா?” என்று கேட்டார்.
“ஏன் முடியாது?”
அப்ப இந்த டியூனுக்கு பாட்டு எழுதுங்க பாப்போம்.. ‘டொயிங்.. டொயிங்.. டொயிங்..’ என்று தம்பூராவை மீட்டச் செய்கிறார். க
விஞர் யோசிக்க ஆரம்பிக்கிறார். விஸ்வநாதன் 'என்ன?' என்பதுபோல தலையை ஆட்டுகிறார். 'பொன்னென்பேன்' கவிஞர் சொல்கிறார்... விஸ்வநாதன் அதே போல மேலும் வாசிக்க 'சிறு பூவென்பேன்...' என்றார். "அண்ணே..” என்று கவிஞரை கட்டிப்பிடித்துக் கொள்கிறார் விஸ்வநாதன். "காணும் கண்ணென்பேன்; வேறு என்னென்பேன்?"
சில சமயம் டியூனும் அமையாது, பாட்டும் அமையாது. அந்த மாதிரி நேரத்தில் ஒரு இறுக்கம் ஏற்படும். இது ஒருசில பாடல்களுக்கு மட்டுமே நடந்திருக்கிறது. அப்படி ஒரு பாடல் இயக்குனர் ஸ்ரீதரின் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்தில் இடம் பெற்ற ‘நெஞ்சம் மறப்பதில்லை அது தன் நினைவை இழப்பதில்லை...’ என்ற பாடல்.
பாடலுக்கான சூழலை சொல்லிவிட்டு இயக்குநர் ஸ்ரீதர் “அடுத்த மாதம் படப்பிடிப்பு. உடனே பாடலைப் பதிவு செய்ய வேண்டும்” என்று கூறினார்.
விஸ்வநாதன் பல டியூன்களைப் போட்டார். கவிஞரும் பல பல்லவிகளைக் கொடுத்தார். ஆனால் ஸ்ரீதருக்கு எதுவும் பிடிக்கவில்லை. இப்படியாக இரண்டு மூன்று நாள்கள் போய்விட்டன.
இறுதியில் ஒருவழியாக ஒரு டியூனைத் தேர்வு செய்தார் ஸ்ரீதர். கவிஞருக்கு ஏனோ ‘மூட்’ வரவில்லை. அவர் சொன்ன வரிகள் ஸ்ரீதருக்குப் பிடித்தமானதாக இல்லை. அப்புறமும் ஒன்றும் நடக்கவில்லை. இதற்கிடையில் படப்பிடிப்புக்கான நாளும் நெருங்கியது. பதற்றமானார் ஸ்ரீதர்.
ஒரு நாள் கோபத்தின் உச்சிக்கு சென்று “என்னமோ செஞ்சு தொலைங்க...” என்று சொல்லிவிட்டுச் சென்றுவிட்டார். பிறகு கவிஞரும் விஸ்வநாதனுமாக உட்கார்ந்து போராடினார்கள்.
கவிஞர் ஒரு பல்லவியைச் சொல்ல, உள்ளே டிபன் சாப்பிட்டுக் கொண்டிருந்த ஸ்ரீதரின் காதில் அது விழுந்துவிட்டது. சாப்பிடுவதை விட்டுவிட்டு வேகமாக வெளியே ஓடிவந்து “இதுதான் பல்லவி... சூப்பர்... மேல எழுதுங்க” என்று சப்தமாகச் சொன்னார்.
‘அப்பாடி... ஸ்ரீதருக்குப் பிடித்துவிட்டது’ என்று அதே வேகத்தில் மொத்த பாடலையும் எழுதி முடித்து ஸ்ரீதரை வரச் சொல்லி வாசித்து பாடிக் காட்டினார்கள். “இதைத்தான் நான் எதிர்பார்த்தேன்” என்று ஸ்ரீதர் சந்தோஷத்துடன் அவர்களைக் கட்டிப்பிடித்துக் கொண்டார். ஒரு வழியாக 21 நாள்களுக்குப் பிறகு பாடல் எழுதப்பட்டுவிட்டது. தன் வாழ்நாளிலேயே அதிக நேரம் எடுத்துக்கொண்டு கவிஞர் எழுதிய பாடல் இதுதான் - ‘நெஞ்சம் மறப்பதில்லை அது தன் நினைவை இழப்பதில்லை...’
தன் வாழ்நாளில் அதிக நேரம் எடுத்துக்கொண்டு கவிஞர் எழுதியது ஸ்ரீதரின் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படம் என்றால், கவிஞர் மிகவும் குறைந்த நேரத்தில் எழுதிய பாடலும் இயக்குநர் ஸ்ரீதரின் படத்தில்தான்.
‘நெஞ்சில் ஓர் ஆலயம்’ படத்தை ஸ்ரீதர், தனது சித்ராலயா நிறுவனத்தின் மூலம் தயாரித்தார். ஒரு ஆஸ்பத்திரி செட் போடப்பட்டு, படத்தின் பெரும்பாலான காட்சிகள் அங்கு படமாக்கப்பட்டன. படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் நடந்துகொண்டிருக்கும்போது படத்தைப் பார்த்த இயக்குநர் ஸ்ரீதர், அதில் இன்னொரு பாடலைச் சேர்த்தால் நன்றாக இருக்கும் என்று முடிவு செய்தார்.
படம் இன்னும் ஒரு வாரத்தில் வெளியாகிறது என்ற விளம்பரமும் பத்திரிகைகளில் வந்துவிட்ட நிலையில், அவருக்கு இந்த யோசனை தோன்றியது. உடனடியாக எம்.எஸ். விஸ்வநாதனை ஆபீசுக்கு வரவழைத்து டியூன் போடச் செய்து, டியூனும் தேர்வாகிவிட்டது. இப்போது பாடல் எழுத கண்ணதாசன் வர வேண்டும். இன்றைக்குப் போல செல்போன் இல்லாத காலம் அது. கவிஞரை எங்கு தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. ஒருவழியாக கவிஞரைக் கண்டுபிடித்தபோது, அவர் அரசியல் பொதுக்கூட்டத்திற்காக ஊருக்குக் கிளம்பிக்கொண்டு இருந்தார்.
“நேரமாகிவிட்டது, நான் போகிற வழியில் சித்ராலயாவுக்கு வந்துவிட்டுப் போய் விடுகிறேன்” என்று சொல்லிவிட்டார்.
தயாரிப்பு நிர்வாகி சண்முகத்திற்கு நம்பிக்கை போய்விட்டது. ‘இந்தப் பாட்டோடு படம் வெளியாக வேண்டும் என்றால், இந்தத் தேதியில் வெளிவராது. சொன்ன தேதியில் வெளியாக வேண்டும் என்றால், ஸ்ரீதர் எடுக்க விரும்புகின்ற பாடல் இல்லாமல்தான் வெளியாகும்’ என்ற முடிவோடு வாசலிலேயே உட்கார்ந்து இருந்தார்.
கூட்டத்திற்குக் கிளம்பிய கவிஞர் “சண்முகம், வா போகலாம்” என்று அவரையும் அழைத்துக்கொண்டு சித்ராலயாவுக்கு வந்தார். கவிஞர் வந்தவுடன் அங்கு பரபரப்பு பற்றிக்கொண்டது. ஸ்ரீதர் சூழலைச் சொல்ல எம்.எஸ். விஸ்வநாதன் டியூன் போட, சரியாக பத்து நிமிடங்களில் “முத்தான முத்தல்லவோ” பாடலை எழுதி விட்டு, “ஸ்ரீ, நான் ஊருக்குப் போறேன். ஒரு அஞ்சு ரூபா வேணும்” என்று கேட்டார். பாடல் அற்புதமாக வந்துவிட்ட மகிழ்ச்சியில் இருந்த ஸ்ரீதர், “இதோ” என்று பணத்தைத் தந்துவிட்டார்.
அன்று இரவே பாடல் பதிவு செய்யப்பட்டு, இரவோடு இரவாக செட் போடப்பட்டு, நடிகர்களுக்கும் கால்ஷீட் சொல்லி மறுநாள் காலையில் தொடங்கி மாலைக்குள் பாடல் படமாக்கப்பட்டு படத்தில் சேர்க்கப்பட்டு விட்டது.
ஒரு படத்திற்கு கவிஞர், கதை - வசனம் - பாடல்கள் எழுதினார். ஆனால், படப்பிடிப்பு தொடங்கி சில நாள்களிலேயே அந்தப் படம் நின்றுபோனது. அந்தப் படம் ஒரு வித்தியாசமான கதை அமைப்பை கொண்டிருந்ததால், அந்தப் படத்தின் கதையும் அதற்கு எழுதிய இரண்டு பாடல்களும் கவிஞரின் நினைவில் அப்படியே பதிந்துபோனது.
அந்தக் கதை இதுதான்- ஒரு அழகான கிராமம். அங்கே அருகருகே இரண்டு வீடுகள். அந்த இரண்டு வீடுகளுக்கும் வாசல் பகுதியிலும், பின் பகுதியிலும் அழகான பூந்தோட்டம். ஒரு வீட்டில் ஒரு சிறு குடும்பம் தலைமுறை தலைமுறையாய் வசித்து வருகிறது. தற்போது அங்கே ஒரு கணவன் - மனைவி, அவர்களின் இரண்டு மகள்களுடன் வசித்து வருகின்றனர். அந்த இரண்டு பெண்களும் திருமண வயதை அடைந்தவர்கள்.
பக்கத்து வீட்டிற்கு ஒரு இளைஞன் அவனது பெற்றோருடன் குடி வருகிறான். அந்த இளைஞன் ஒருநாள் அவர்கள் வீட்டு தோட்டத்தில் நின்று கொண்டிருக்கும் போது, பக்கத்து வீட்டில் இருந்து ஒரு அற்புதமான பாடல் கேட்கிறது. ஆர்வம் தாங்காமல் எட்டிப் பார்க்கிறான்.
பக்கத்து வீட்டில் ஒரு அழகான இளம்பெண், பூப்பறித்துக் கொண்டே பாடிக்கொண்டு இருக்கிறாள். அந்தப் பாட்டில் மனதைப் பறிகொடுத்து விடுகிறான். தினமும் அதே நேரத்தில் பக்கத்து வீட்டில் இருந்து வரும் பாட்டுக்காக காத்துக் கொண்டிருக்க ஆரம்பிக்கிறான்.
ஒரு கட்டத்தில் அவளை திருமணம் செய்துகொள்ள விரும்பி, தன் பெற்றோரைப் பெண் கேட்கச் சொல்கிறான். பெண்ணின் பெற்றோர் ஏதோ சொல்ல வரும்போதெல்லாம், “எங்களுக்கு உங்களைப் பற்றி எல்லாமும் தெரியும்” என்று அவர்களை பேச விடாமல் செய்து விடுகிறார் அந்த இளைஞனின் தந்தை. திருமணம் நடக்கிறது. முதலிரவில் அந்த இளைஞன் அவளை பாடச்சொல்ல, அப்போதுதான் அவள் வாய்பேச முடியாதவள் என்று தெரியவருகிறது.
அதிர்ச்சி அடையும் அவன் கோபத்துடன் அவளிடம் ஏதோ கேட்கப் போகும்போது, வெளியே இருந்து அதே பாட்டு கேட்கிறது. வேகமாக அவன் அந்த அறையை விட்டு வெளியே வந்து பார்த்தால் அவன் மனைவியின் தங்கை பாடிக்கொண்டிருக்கிறாள். அதே இனிமையான குரல்.
அக்கா பூப்பறிக்கும் போது தங்கை பாடுவாள், அந்தப் பாட்டினால் ஈர்க்கப்பட்டு அக்காவும் மவுன மொழியில் மனதுக்குள் பாடி, தங்கை பாடுவதற்கேற்ப வாயசைப்பாள் என்பது தெரிய வருகிறது. மனைவியை பிரிய நினைக்கிறான். தங்கை அவனிடம், தன் அக்காளுக்கு வாழ்வு கேட்டு கெஞ்சுகிறாள்.
“உன் பாட்டில் மனம் பறிகொடுத்து, அதைப் பாடியது உன் அக்கா என்று நினைத்து அவளை திருமணம் செய்து கொண்டேன். நீ திருமணம் செய்துகொள்ளாமல் எங்கள் கூடவே இருந்து தினமும் பாட ஒப்புக்கொண்டால் உன் அக்காளுடன் வாழ்கிறேன்" அன்று அவன் சொல்லி விடுகிறான். வாய்பேச முடியாத அக்காவுக்காக தங்கை ஒத்துக் கொள்கிறாள். இந்த நிலையில் அக்காவுக்குக் குழந்தை பிறக்கிறது.
அக்காவின் குழந்தைக்கு தங்கை தாலாட்டுப் பாடுகிறாள். இதுதான் பாட்டுக்கான சூழல்.
கவிஞர் எழுதிய பாட்டின் பல்லவி இது...
“தாய் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்.. தாய் தூங்கத் தாலாட்டு நீ பாட வேண்டும்.. நீ பாடும் தாலாட்டை தாய் கேட்க வேண்டும்.. தன் நிலை மாறி அவள்கூடமொழி பேச வேண்டும்..”
அந்தப் படம் நின்று போனதால், அதை அப்படியே விட்டுவிட்டார்.
பின்நாளில் ‘பாலும் பழமும்’ படத்திற்கு பாடல் எழுத அமர்ந்த போது, பாட்டுக்கான சூழல் சொல்லப்பட்டது. முன்பு தாலாட்டாக தான் எழுதிய பாடலை, இந்த இடத்தில் காதல் பாட்டாக மாற்றி எழுதினால் என்ன என்று கவிஞருக்குத் தோன்றியது. பிறகு அதையே மாற்றி எழுதித் தந்தார், அந்தப் பாடல்தான் இது..
“நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்... நாளோடும் பொழுதோடும் உறவாட வேண்டும்... நான் காணும் உலகங்கள் நீ காண வேண்டும்.. நீ காணும் பொருள்யாவும் நானாக வேண்டும்..”
வாய்பேச முடியாத தன் அக்கா மனவருத்தத்தில் இருக்கும்போது, அவள் மனதுக்கு ஆறுதலாக தங்கை பாடுவதாக இதே படத்திற்கு கவிஞர் இன்னொரு பாடல் எழுதி இருந்தார். அதன் பல்லவி-
“மண்ணில் கிடந்தாலும் மடியில் இருந்தாலும் பொன்னின் நிறம் மாறுமோ...” என்று தொடங்கும் பாடல். பின்னாளில் ‘பாசமலர்’ படத்திற்கு அதே டியூனுக்கு வார்த்தைகளை மாற்றி எழுதித் தந்தார். அந்தப் பாடல்தான்... “மலர்ந்தும் மலராத பாதி மலர் போல வளரும் விழி வண்ணமே” என்ற பாடலாகும்.
“ஏன் பிறந்தாய் மகனே... ஏன் பிறந்தாயோ...” பட்டிதொட்டி எங்கும் ஒலித்த பாடல் இது. இன்றும் கண்ணதாசனின் புகழ் பாடிக் கொண்டிருக்கின்ற பாடல்களிலே அதுவும் ஒன்று.
இந்தப் பாடல் கண்ணதாசனின் திரை வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்திய பாடல் என்றால் நம்ப முடிகிறதா?ஒரு படத்தின் அனைத்து பாடல்களையும் தானே எழுத வேண்டும் என்ற ஆசையில், ‘கண்ணதாசன் பிலிம்ஸ்’ என்ற பெயரில் ஜனகா பிலிம்சுக்காக ‘மாலையிட்ட மங்கை’ படத்தை கவிஞர் தயாரித்தார். பாடல்கள் சூப்பர் ஹிட். ஆனாலும் பாடல் எழுத குறைவான வாய்ப்புகளே அவருக்கு வந்து கொண்டிருந்தன.
‘தெனாலிராமன்’ படத்தின்போது கவிஞருக்கும், சிவாஜிக்கும் ஏற்பட்ட பிரச்சினையின் காரணமாக, சிவாஜியின் படங்களுக்கு கவிஞர் பாடல் எழுதவில்லை.
‘கண்ணதாசன் எழுத வேண்டாம்’ என்று சிவாஜி சொல்லவில்லை. ஆனால் பிரச்சினையைப் பற்றி தெரிந்ததால், தயாரிப்பாளர்கள் ‘நமக்கு ஏன் வம்பு’ என்று அழைக்காமல் இருந்துவிட்டார்கள்.
அதே சமயம், கவிஞர் பாடல்களைவிட வசனம்தான் அதிகமாக எழுதிக் கொண்டிருந்தார். இந்த சமயத்தில் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம், மிகமிக பிஸியாக பாடல்கள் எழுதிக் கொண்டு இருந்தார்.
அவரிடம் ‘பாகப்பிரிவினை’ படத்திற்கான பாடல்களை எழுதும்படி கேட்டுக் கொள்ளப்பட்டது. அவரும் இரண்டு பாடல்களை எழுதித் தந்தார்.
மூன்றாவது பாடல் வேண்டும் என்று கேட்டபோது, “நான் ஏற்கனவே ஒப்புக்கொண்ட படங்களுக்கு பாடல் எழுத வேண்டும். நிச்சயம் அதற்கு இரண்டு வாரங்கள் ஆகிவிடும். நீங்கள் அவசரம் என்று கேட்கிறீர்கள். ஆகவே இந்தப் பாடலை கண்ணதாசனை வைத்து எழுதிக்கொள்ளுங்கள். நான் வேண்டுமானால் அவரிடம் பேசுகிறேன்” என்றார்.
சிவாஜியின் ஒப்புதல் இல்லாமல் கண்ணதாசனை வைத்து பாடல் எழுத முடியாது. மற்ற பாடலாசிரியர்களால் குறுகிய காலத்தில் பாடல் எழுத முடியாது. எனவே, சிவாஜியிடமே கேட்டு விடுவோம் என்று அவரிடம் சென்று முழு விவரத்தையும் சொல்லிக் கேட்டார்கள்.
“எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. அவன் ஒத்துக்கிட்டான்னா எழுதட்டும்” என்று சிவாஜி சொல்லிவிட்டார். “அவர் சரின்னு சொல்லிட்டாரு... கண்ணதாசன் சொல்லணுமே...” தயக்கத்துடன் வந்து கவிஞரை சந்திக்கிறார்கள்.
கவிஞர் சிறிது நேரம் யோசித்துவிட்டு, “எனக்கும் எந்த பிரச்சினையும் இல்லை, எழுதுறேன்” என்று சொல்லி விட்டார். ‘பாகப்பிரிவினை’ படத்திற்கு கவிஞர் எழுதிய முதல் பாடல், “ஏன் பிறந்தாய் மகனே..”.
அடுத்த பாடலை பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தை எழுதச் சொல்லி இருந்தார்கள். ஆனால் விதியின் கொடுமை... தவறாக செய்யப்பட்ட ஒரு அறுவைச் சிகிச்சையின் காரணமாக, பட்டுக்கோட்டையார் தனது 29-ஆவது வயதில் காலமானார்.
தன் சொந்த சகோதரனே இறந்து போனது போன்ற சோகம் கவிஞருக்கு.
“சின்ன வயது மகன் சிரித்த முகம் பெற்ற மகன் அன்னைக் குணம் படைத்த அழகு மகன் சென்றானே கன்னல் மொழி எங்கே கருணைவிழி தானெங்கே? மன்னர் மணிமுடியில் வாழ்ந்திருந்த செந்தமிழை(த்) தென்னவர் பொருளாக்கித் தீங்கவிதை தந்த மகன் கண்மூடித் தூங்குகிறான் கனவு நிலை காணுகிறான் தன்னுயிரைத் தருவதனால் தங்க மகன் பிழைப்பானோ?என்னுயிரைத் தருகின்றேன் எங்கே என் மாகவிஞன்?” என்று தன் சோகத்தைக் கவிதையாக்கினார்.
பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் மட்டும் அன்று, “கண்ணதாசன் எழுதட்டும்” என்று சொல்லாமல் இருந்திருந்தால், தமிழ் சினிமாவிற்கும், சிவாஜிக்கும், கண்ணதாசனுக்கும் மிகப்பெரிய இழப்பாக இருந்திருக்கும்.
பிறகு திரையுலக நண்பர்கள் கவிஞரையும் சிவாஜியையும் தனியே சந்திக்க வைத்தார்கள். இருவரும் மனம்விட்டுப் பேசி சமாதானம் ஆனார்கள். அதன் பிறகு நடந்ததெல்லாம் சரித்திரம்!
- தினமணி நாளிதழில் கண்ணதாசன் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு முன்னர் சினிமா எக்ஸ்பிரஸ் இதழில் வந்ததை மறுபடி எடுத்துக் போட்டார்கள். அதிலிருந்து
காஞ்சனா. யாருக்கும் தெரியக் கூடாது என்று கைக் குட்டையால் தன் கண்ணீரைத் துடைத்துக் கொண் டிருந்தார்.
"எதற்காக வருத்தம்" என்று கேட்டேன்.
அவர் பதில் சொல்லவில்லை. பக்கத்திலிருந்த நன்னு, "காலையிவேருந்தே அவர் 'கலகல'ப்பாக இல்லை" என்றான்.
"காலையில் சென்னையிலிருந்து அவருக்கு ஒரு கடிதம் வந்தது. அதில் அப்பாவுக்கு உடல் நலமில்லை என்று அவர் சகோதரி எழுதி இருந்தார். காஞ்சனாவுக்கு அப்பா என்றால் உயிர், அவரது நினைவு வந்திருக்கும் " என்று மெதுவாகக்காதைக் கடித்தான் கோபு.
அதை ராஜேந்திரன் ஒப்புக்கொள்ளத் தயாரில்லை.
"முன் தினம் ஷூட்டிங் நடந்தபோது, ஒரு கல்பட்டு, அவர் கட்டை விரலில் காயம் பட்டது. அதனால் அதிகம் வலிக்கிறது என்று என்னிடம் சொன்னார். அதுதான் காரணமாக இருக்கும்" என்றான் ராஜேந்திரன்.
எதற்கு சஸ்பென்ஸ்? காஞ்சனாவையே கேட்டு விடலாம் என்று எண்ணி, "ஊரிலிருந்து ஏதாவது லெட்டர்...?" என்று இழுத்தேன்.
அவர் 'இல்லை' என்று தலையை அசைத்தார். "கால் வலியா?" என்றேன். அதற்கும் 'இல்லை' என்று தலையசைத்தார்.
"பின் எதற்காக வருத்தப்பட்டாய்?" என்று கேட்டவுடன் எங்கிருந்தோ வெட்கம் சேர்ந்த சிரிப்புடன் "ஒன்றுமில்லை" என்றார்.
நான் விடவில்லை. காரணம் கேட்டு துளைத்தேன்.
"நான் ஓட்டலிலிருந்து புறப்படும்போது என் கோங்குரா சட்னி பாட்டிலை எடுத்துக்கொள்ள மறந்து விட்டேன். 'அதைப் பிரிந்து விட்டோமே! கோங்குரா இல்லாமல் மீதி நாட்கள் எப்படி சாப்பிடுவது? இந்த அயல் நாட்டு உணவு இறங்காதே' என்று நினைத்தேன். என்னை அறியாமல் என் கண்களில் கண்ணீர் வந்து விட்டது" என்றார் காஞ்சனா.
"கஷ்ட காலம். அதற்காகவா அழுகிறீர்கள்? அதை என் பையில் பத்திரமாக எடுத்து வைத்துக் கொண்டிருக்கிறேன்" என்றான் கோபு.
இந்த முன்னுரைகள் படிப்பது எதற்காக என்றால் அறியாத புத்தகமாயிருந்தால் ஒரு அறிமுகம் கிடைக்கும். யார் என்ன சொல்லி இருக்கிறார்கள் என்றும் தெரிந்து கொள்ளலாம்!
உயரப் பறத்தல் - வண்ணதாசன் சிறுகதைகள் தொகுதி
முன்னுரை
பாவை சந்திரன் ஒரு அருமையான மனிதர். அனுபவம் கூடிய பத்திரிக்கையாளர். நேரடிப் பழக்கம் இல்லை. அது அவசியமும் படாமல் ஒரு நெருக்கத்தை அவரிடம் உணர்ந்தேன். அவருடைய சிகையமைப்பு, முகம், தோலுக்குக் கீழ் ஒரு சோகம் படிந்திருப்பது போன்ற ஒரு சிரிப்பும் பார்வையும் எல்லாம் அப்படி. புதிய பார்வை இதழை அவர் நடத்தியவிதம், அவர் அதில் எழுதிய மிக அருமையான நாவல் 'நல்ல நிலம்' எல்லாம் என்னைப் போன்றவர்களுக்கு முக்கியமானது. அவருடைய கண்மணி வெளியீடுதான் 'உயரப் பறத்தல்'.
வெளிவரச் சற்று நீண்டதாமதமாயிற்று. வழக்கமாக அப்படி யெல்லாம் என்ன ஆயிற்று என்று கேட்பவனில்லை. அது என் சுபாவம் அல்ல. அந்த சுபாவத்தை மீறி கேட்டதில் அவருக்கு வருத்தம். கோபம் கூட. நானும் பதிலுக்குக் கொஞ்சமாவது கோபப்பட்டால்தானே நன்றாக இருக்கும். கதிர்வேலன் வந்து சமாதானம் செய்தார். உப்புப் புளிக்கு எல்லாம் சமரசம் செய்கிறவன் பாவை போன்ற ஒரு அருமையான ஆளுடன் சமரசம் செய்து கொள்ளக் கூடாதா என்ன? கொண்டதன் அடையாளம்தான் உயரப்பறத்தல் தொகுப்பு.
நான் மிகவும் உள்ளூரவும், வெளிப்படையாகவும் கொண் டாடுகிற மருதுவின் ஓவியத்துடன், அவருடைய சாயலாகப் படிந்துவிட்ட மருதுபாணி எழுத்துக்களுடன், ஒரு எளிய அழகிய முகப்பு அதற்கு. இப்போது பார்க்கும்போதும், அவருடைய 'வாளோர் ஆடும் அமலை'யின் சித்திர வீச்சுக்களுக்குச் சற்றும் பின்னகராத அழகுடன் அது திகழ்கிறது. மிஞ்சிப் போனால் மருது பதினைந்து நிமிடங்கள் எடுத்திருப்பார். அதை வரைந்து திருப்பது மருதுவின் தூரிகையால், நல்ல கலை அதைச் செய்யும். தர அந்தப் பதினைத்து நிமிடங்களை அகாலமாக்கிவிட முடிந் காலத்தை அகாலமாக்கும்.
இதன் முதல் பதிப்பிற்கு எழுதிய முன்னுரையே போது மானது. அதனுடைய பின்னிணைப்பாக, அப்போது சொல்ல முடியாததை இப்போது சொல்ல இந்த வரிகளை எழுத முயல்கிறேன். கொஞ்சம் வேடிக்கையாகக்கூட இருக்கிறது அப்போது சொல்ல வேண்டியதை அப்போதும், இப்போது சொல்ல வேண்டியதை இப்போதும் சொன்னால் போதாதா? எதற்கு அப்போது சொல்லாததை இப்போது?
எல்லாம் சொல்லுவதைவிட, எல்லாம் சொல்லாததுதானே கதை. எதற்கு எல்லாம் சொல்ல வேண்டும்? அன்றைக்கு அடிக்காத வெயிலும் அன்றைக்கு விழாத நிழலும் இன்றைக்கு என்ன செய்யப் போகின்றன. அதுவும் இந்தப் பதினோரு கதைகளையும் எழுதிய சென்னையை, சன்னலுக்கு வெளியே இருவாட்சிப் பூ பூக்க ஆரம்பித்திருக்கிற இந்தப் பெருமாள்புரம் சிதம்பர நகரின் மேஜையில் குனிந்து என்ன செய்துவிடமுடியும்.
எத்தனை கதைகளை, எத்தனை பத்திரிக்கைகளில் எழுதியிருக்கிறேன். ஓம் சக்தி, இதயம் பேசுகிறது குங்குமம், தாமரை, தழல், புதியபார்வை, ஆனந்த விகடன், கல்கி தீபாவளி மலர், இந்தியா டூடே, தினமணி தீபாவளி மலர் என்று. போதாது என சென்னை வானொலியில் ஒன்றிரண்டு. இத்தனை வாசல்களைச் சென்னையே திறந்து வைத்தது. வைக்க முடியும். உங்களுக்குச் சம்மதமெனில் காற்றாகவோ, வெளிச்சமாகவோ நுழைந்து வெளியேறிக் கொண்டே போகலாம். மாநகரம் யாரையும் சும்மா விடுவதில்லை. பேனாவை அது மூட அனுமதிப்பதில்லை. கதவைச் சாத்த வகையின்றி அது அழைப்புமணியை நாசூக்காக அடித்துக் கொண்டே இருக்கிறது. அந்தி மந்தாரை, கனகாம்பரம் என்று உங்கள் ஊரின் ஆதிப்பூக்களைத் தேடி நீங்கள் பெருமூச்சடை கையில், ஒரு ஆர்க்கிட் பூச்செண்டை அல்லது ஜெர்பெரா ஒற்றைப் பூவை உங்கள் கையில் கொடுத்து மேடையில் உட்கார்த்தி வைத்துவிடும், மாநகரம்.
எங்கு உட்கார்ந்தாலும், எழுத நினைப்பதைத்தானே எழுதுவோம். சென்னையில் இருந்தபடி அநேகமாக அ-சென்னைக் கதைகளையே எழுதினேன். கருப்புப் பசுவும், சைகைகள் மூலம் செய்திகளை நான் சென்னையில் இருப்பதால் மட்டுமே எழுத முடிந்தது என்பதில்லை. பெங்குவின் பறவையைப் பற்றிய ஒரு கவிதையை இடைகாலில் வைத்து எழுத முடியாதா என்ன?
மிக எளிய கதைகள் போல, மிக நுட்பமான கதைகளையும், மிக நுட்பமான கதைகள்போல மிக எளிய கதைகளை எழுதியிருப்பதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை, மனிதர்களும், வாழ்வுமே அப்படித்தானே ஒன்றென மயங்கும் இன்னொன்றாக இருக்கிறது. ஆயினும் ஈரம் கதை, 'மாறுதல்', 'சந்தோஷம்', 'ரதவிதி', 'கிணற்றுத் தண்ணீரும் ஆற்றுமீனும்' கதைகள் எல்லாம் எவ்வளவு எளிமையுமோ அவ்வளவு நுட்பமானவையும்தான். அப்பாவைக் கொன்றவனை, சைகைகள் மூலம் செய்திகளை, அழுக்குப் படுகிற இடத்தை. அழைக்கிறவர்களை என்னால் எழுத முடிந்ததற்காக நான் சற்று உயரப் பறக்கலாம்.
நான் இப்போது எல்லாம் அடிக்கடி உணர்வது போலவும், என் நண்பர்களிடம் சொல்வது போலவும், எல்லாப் பறத்தலும் பறத்தலற்றுவிடத்தானே. உயரப் பறக்கிற எல்லாப் பறவைகளும், ஒரு சிறு கணம் பறப்பதில்லை. மிதக்கிறது. நீங்களும் அதைப் பார்த்திருப்பீர்கள். இதுவரை பார்க்கவில்லையெனில் பார்ப்பீர்களாக! பறக்கவில்லையெனில் பறப்பீர்களாக!
முன்னர் ஒரு நாள் வந்தது. சுவாரஸ்யமாய் இருக்கிறதே... மறந்திருக்குமோ என்று மறுபடி தருகிறேன்!
வான் வெளியில் அற்புதங்கள் அளவிலடங்காதவை. லட்சக் கணக்கான நட்சத்திரக் கூட்டங்கள். சூரியன் கூட ஒரு நட்சத்திரம்தான். நம் பூமியின் அளவில் ஆயிரக் கணக்கான அளவில் உள் வாங்கிக் கொள்ளக் கூடிய அளவுக்கு சூரியன் பெரிய நட்சத்திரம். இந்த அகண்ட அண்டத்தில் நம் பால்வீதி போலவே கணக்கிலடங்கா பால்வீதிகள் இருப்பதாகவும் சொல்கிறார்கள். சொல்ல வரும் விஷயம் அது அல்ல. சூரியன் சுற்றி வர ஒரு வருடம், சந்திரன் சுற்றி வர ஒரு மாதமும் ஆகிறது. சரி சனி சுற்றி வர ஆகும் காலம் என்ன தெரியுமா? முப்பது வருடங்கள்.
அவர் அவ்வளவு மெதுவாக சுற்றி வர காரணம் என்ன? அவருக்கு ஒரு கால் கிடையாதாம். ஏன்? அது ஒரு சுவாரஸ்யமான கதை.
நவக்ரகங்களை வென்ற இராவணன் தன மகன் இந்த்ரஜித் பிறக்கும் சமயம் அவன் யாராலும் வெல்லப் படக் கூடாது என்றும் தோல்வியே ஏற்படக் கூடாது என்றும், இன்னும் சரியாக சொல்வதானால் மரணத்தை வெல்ல வேண்டும் என்று எல்லா கிரகங்களையும் பிடித்து பதினோராம் வீட்டில் அடைத்து விட்டானாம்!
செய்வதறியாமல் திகைத்த தேவர்களின் வேண்டுகோளுக்கிணங்கி இந்த்ரஜித் பிறக்கும் சமயத்தில் சனி தன் இடது காலை நைசாக நாசத்தைக் கொடுக்கக் கூடிய பன்னிரண்டாம் வீட்டில் வைத்து விட்டானாம். பின்னர் ஜாதகம் கணித்த இராவணன் அதை அறிந்து சனியின் இடது காலை எடுக்க உத்தரவிட்டானாம்.
அதனால்தான் அவர் நொண்டி நொண்டி சுற்றி வர முப்பது வருடங்கள் ஆகின்றதாம்.
மெதுவாக சனியை வரும் படி செய்த இராவணன் நல்லவனா, கெட்டவனா? 21809
நண்பர் கேஜீக்கு,
உங்கள் கருத்து (comment) படித்தேன். நன்றி. சிறு வயதில்முத்துஎன்றசலவைதொழிலாளிதுணிகளைவெளுத்துமடிப்புடன்கொண்டுவருவார். மொட மொடப்புடன், இஸ்திரிவாசனையுடன் அதை போட்டுக்கோள்ள என் பாட்டி விடமாட்டார். காரணம்அவை வெள்ளாவியில் யார் யார் வீட்டுத் துணிகளுடன் துவைக்கப்பட்டதோ, அதனால் அவை விழுப்பு என்று சொல்லி, கொம்பால் எடுத்து, தண்ணீர் கங்காளத்துள் முக்கி பிழிந்து உலர்த்தி விடுவார். மறுபடியும் இஸ்திரியாவது ஒண்ணாவது.அப்படியே சுருக்கங்களுடன் மாட்டிக்கொள்ளவேண்டியதுதான். ஹேர்கட்டிங் போனாலும் எல்லா ட்ரஸ்சையும் அவிழ்த்துப் போட்டுக் குளித்த பின்னேதான் வீட்டுக்குள் நுழைய முடியும். சுகாதாரமற்றவை விழுப்பு என்ற பெயரில் தவிர்க்கப்பட்டது. நாகரீகம் என்ற பெயரில்நாம் எதையும் தவிர்ப்பதில்லை. நோயும் நம்மை தவிர்ப்பதில்லை! rangan
திருதராஷ்டிரன் விதுரரைப் பார்த்து, “மனிதனுக்கு ஆயுள் நூறு வருடங்கள் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இருந்தும், முழுமையான ஆயுள்வரை யாரும் வாழ்வதாகத் தெரியவில்லையே…. ஏன்?” என்று கேட்டார்.
அதற்கு விதுரர், “ஆறு கூரிய வாள்கள் தான் மனிதனின் ஆயுளை அழிக்கின்றன. அவை…. (1) அதிககர்வம், (2) அதிகம் பேசுதல், (3) தியான மனப்பான்மை, (4) கோபம், (5) சுயநலம், (6) நண்பர்களுக்கு துரோகம்” என்றார்.
விதுரர் கூறிய அந்த ஆறு வாள்கள் எப்படியிருக்கும்? அதைப் போக்க என்ன செய்ய வேண்டும்?
1. தான் கெட்டிக்காரன், தான் செல்வந்தன், தான் கொடையாளி, தான் நல்லவன், பிறர் கெட்டவர்கள் என்று நினைப்பதால் கர்வம் அதிகரிக்கிறது. கர்வம் கொண்டவனைக் கடவுள் சீக்கிரம் அழித்து விடுவார். ஆகவே, கர்வம் கொள்ளாமலிருக்க வேண்டுமானால், தன் விஷயத்தில் குற்றங்களைப் பார்க்க வேண்டும். பிறர் விஷயத்தில் குணங்களைப் பார்க்க வேண்டும்.
2. அதிகம் பேசுகிறவன் வீண் விஷயங்களைப் பற்றிப் பேசி, வீண் வம்பை விலைக்கு வாங்குவான். அதனால்தான் பகவான் கீதையில் கூறுகிறார்….. கடுமையில்லாததும், உண்மையானதும், பிரியமானதும், நன்மையைக் கருதியதுமான வார்த்தை எதுவோ, அது வாக்கினால் செய்யப்படும் தவம்.
3. எல்லாவற்றையும் நாம்தான் அனுபவிக்க வேண்டும் என்கிற ஆசையின் காரணமாகத்தான் நமக்குத் தியாக மனப்பான்மை ஏற்படுவதில்லை, நாம் இந்த உலகில் பிறந்ததே நமக்காக அல்ல, பிறருக்கு உதவுவதற்காகத்தான் என்று உணர்ந்தால் தியாக மனப்பான்மை ஏற்படும்.
4. கோபம்தான் மனிதனுடைய முதல் எதிரி. கோபத்தை வென்றவன்தான் யோகி, அவன்தான் உலகில் சுகப்படுவான். கோபத்துக்கு வசப்பட்டவன், தர்மம் எது? அதர்மம் எது? என்ற விவேகத்தை இழந்து பாவங்கள் செய்கிறான். என்ன தீமைகள் ஏற்பட்டாலும், யார் நம்மைக் கோபித்துக் கொண்டாலும் அவற்றைச் சகித்துக் கொள்ளக் கற்றுக்கொள்ள வேண்டும்.
5. சுயநலம்தான் எல்லா தீமைகளுக்கும் காரணம். சுயநலம் பாராட்டுகிறவர்கள் தங்கள் காரியம் ஆக வேண்டும் என்பதற்காக எந்தப் பாவத்தையும் செய்ய அஞ்சமாட்டாக்ள். பிறர் இன்புறுவதைக் கண்டு நாம் இன்புற வேண்டும். பிறர் துன்புறுவதைக் கண்டு நாம் துன்புற வேண்டும். இப்படிச் செய்தால் சுயநலம் போய்விடும்.
6. உலகில் நல்ல நண்பர்கள் கிடைப்பது அரிது. அப்படியிருக்க, அவர்களுக்குத் துரோகம் செய்வதைப் போன்ற அநியாயம் உண்டா? பகவான் கீதையில் கூறியிருப்பதுபோல, நாம் எல்லோருடனும் வெறுப்பின்றியும், நட்பு மனப்பான்மையுடனும், கருணையுடனும் பழக வேண்டும்.
1969 ல் வெளிவந்த துலாபாரம் ஏ வி எம் ராஜன், சாரதா முத்துராமன், மேஜர் நடித்த படம். தேவராஜன் இசையில் இனிமையான பாடல்கள் கொண்ட படம். 'சங்கம் வளர்த்த தமிழ்' பாடலும், 'பூஞ்சிட்டு கன்னங்கள்' பாடலும் ஏற்கனவே பகிர்ந்திருக்கிறேன். இன்று யேசுதாஸ் குரலில் 'காற்றினிலே பெரும் காற்றினிலே...'
காற்றினிலே பெரும் காற்றினிலே,
ஏற்றிவைத்த தீபத்திலும் இருள் இருக்கும்,
காலம் எனும் கடலிலே சொர்கமும் நரகமும்,
அக்கரையோ இக்கரையோ?
ஆண்டவனும் கோவிலில்
தூங்கிவிடும் போது,
யாரிடத்தில் கேள்வி கேட்பது,
ஏழைகளின் ஆசையும்
கோவில் மணி ஓசையும்
வேறுபட்டால் என்ன செய்வது,
தர்மமே மாறுபட்டால் என்ன செய்வது,
ஆடுவது நாடகம் ஆளுக்கொரு பாத்திரம்,
இறைவனுக்கு வேஷமென்னவோ?
ஆடவைத்து பாடுவான்
மூடுதிரை போடுவான்
மேடை அவன் மேடையல்லவோ
வாழ்க்கையின் பாதை அவன் பாதையல்லவோ?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!