8.11.26

நான் சென்ற அலுவலகப் பயணங்களில் கண்டவை - 07 பாலக்காடு:: நெல்லைத்தமிழன்

 

ஜோசியர் சொன்னபடி வேறு ஒரு கம்பெனிக்கு நான் ரிப்போர்ட் செய்ய ஆரம்பித்தேன் என்று சொன்னேன். அது ஒரு ஆயில் கம்பெனி. (கல்ஃப் தேசங்களில் ஆயில் கம்பெனி வேலை அல்லது அதற்கான மிஷினரி சப்ளை பண்ணும் கம்பெனி வேலை என்பது பெரிய விஷயம். அதெல்லாம் கிட்டத்தட்ட அரசு வேலை மாதிரி. சேர்ந்துவிட்டால் (அல்லது கன்சல்டன்சி கம்பெனியிலிருந்து deploy பண்ணி அங்கு கன்சல்டண்ட் ஆக வேலை பார்க்க ஆரம்பித்துவிட்டால்) அந்த வேலை தொடரும். பெரும்பாலும் வேலையிலிருந்து அனுப்ப மாட்டார்கள். அந்தக் கம்பெனி துறைத்தலைவரின் நன்மதிப்பைப் பெறணும், வேலையில் கவனத்தையும் சின்சியாரிட்டியையும் காட்டணும். அளவுக்கு அதிகமாக ஆசைப்படக்கூடாது. அதாவது அங்கு பெரிய பொசிஷனில் இருப்பவர், இவன் நமக்குப் போட்டியா வர வாய்ப்பு இருப்பதுபோல நடந்துகொள்ளக் கூடாது. நான் பொதுவா இந்த குணங்கள் உள்ளவன். கூடுதல் வேலையும் செய்வேன், அப்படிச் செய்கிறான் என்று ரிப்போர்டிங் பாஸ் எண்ணும்படி நடந்துகொள்வேன்.  அவங்க என்ன ரூல் சொல்றாங்களோ அதை அப்படியே கடைபிடிப்பேன்.

முதலில் மூன்று மாதங்கள் என்றவர், என்னையே அந்தப் பணியில் தொடரச் சொன்னார். அந்தப் பணி கஷ்டமானது அல்ல. அதிலேயே பலப் பல வருடங்கள் பணி செய்தால், நம்முடைய competence போய்விடும். சுகமான வேலைக்கு நாம் பழகிவிடுவோம். காலை 8 மணியிலிருந்து 3 மணி வரை வேலை. இடையில் ஒரு மணி நேரம் உணவு இடைவேளை. வாரத்தில் ஐந்து நாட்கள் வேலை. அவ்ளோதான்.  அதே நேரத்தில் ஒரு கன்சல்டன்சி கம்பெனியில் வேலை பார்த்தால், வேலை மிக அதிகமாக இருக்கும், பலவித கம்பெனிகளுக்கான ப்ராஜக்டுகளையும் பார்க்கணும், வெற்றிகரமாகவும் இருக்கணும்.

அந்த ஆயில் கம்பெனியில் கன்சல்டண்டாக வேலைக்குச் சேர்ந்த ஐந்தாவது மாதத்தில் எனக்கு ரெஃபெரன்ஸ் மூலம் இரண்டு வாய்ப்புகள் வந்தன. ஒன்று கல்ஃப் ஏர் கம்பெனியில் கணிணித் துறை வேலை. அப்போது கல்ஃப் ஏர் கணிணித் துறையை ஒரு அமெரிக்க சார்பு கம்பெனி பார்த்துக்கொண்டிருந்தது. என்னுடைய Y2K project மற்றும் வேறு பல கணிணி அறிவினால், அவங்க எனக்கு ஒரு ஆஃபர் கொடுத்தாங்க. நான் வாங்கிக்கொண்டிருந்த சம்பளத்தைவிட 60 சதம் அதிகம். அதுதவிர, நிறைய பெனெஃபிட்ஸ். உதாரணமா, வருடத்துக்கு 20 (அல்லது அதைவிட அதிகமா என்பதை ஆஃபர் லெட்டரைப் பார்த்தால் தெரியும்)  ஒன் வே டிக்கெட் எந்த டெஸ்டினேஷனுக்கும்.  அதே சமயத்தில், நான் Y2K project செய்த ரீடெயில் க்ரூப்பிலும் எனக்கு ஒரு ஆஃபர் லெட்டர் கொடுத்தாங்க.  அது 50 சதம் அதிகம். நானும் புது வேலையில் சேரும் நேரம் வந்துவிட்டது என்று எண்ணினேன்.  என் பாஸிடம் பேசுவதற்காகச் சென்றபோது, அவரோ, உனக்கு நீ இப்போது கன்சல்டண்ட் ஆக இருக்கும் கம்பெனியே ஆஃபர் தர்றாங்க (அதுவும் 60 சதம் அதிகம்). நீ எதை வேண்டுமானாலும் தேர்ந்தெடுத்துக்கொள். நான் தலையிட மாட்டேன். எந்த வேலையைத் தேர்ந்தெடுத்தாலும் என்னுடைய ஆதரவு உனக்கு உண்டு. நீ சொன்னபடி 3 ½ வருடங்களுக்கு மேல் இங்கே பணி புரிந்துவிட்டாய் என்றார்.

ரீடெயில் கம்பெனியில் ஏற்கனவே நான் பல மாதங்கள் சாஃப்ட்வேர் சப்போர்ட் செய்திருந்ததால், அங்கிருந்த முக்கியஸ்தர்கள் அனைவரையும் அறிவேன். அவர்களுக்கும் என்னை மிகவும் பிடித்திருந்தது. அந்த கம்பெனியின் பாலிடிக்ஸில் அகப்பட்டுக்கொள்ளாமல், யாருக்கு விசுவாசமாக இருக்கவேண்டும் என்பதும் புரிந்திருந்தது. இப்படி கிட்டத்தட்ட ஒரு வருடம் அந்தக் கம்பெனிக்கு நான் வேலை செய்திருந்திருக்கிறேன். இருந்தாலும், கல்ஃப் ஏர் கம்பெனி வேலைக்குச் செல்லலாம் என்று நான் முடிவு எடுத்துவிட்டேன். இண்டர்வியூ எல்லாம் நல்லா பண்ணியிருந்தாலும், என்னுடைய புதிய பாஸ்கள் எனக்கு அதுவரை தெரியாதவர்கள். ஆனால் என்னைப் பரிந்துரைத்திருந்தவர், (என்னைவிடச் சிறியவர்), அந்தக் கம்பெனி நல்லா இருக்கும் என்று சொல்லியிருந்தார். அதனால் நான் ஆஃபர் லெட்டரை சைன் பண்ணிக் கொடுக்க நினைத்துவிட்டேன் (அல்லது கொடுத்துவிட்டேன் என்று நினைவு). அவர்கள் நான் வேலை பார்த்திருந்த கம்பெனியிலிருந்து ஒரு கடிதம் கேட்டிருந்தார்கள், அது தவிர சில டாகுமெண்டுகள் கேட்டிருந்தார்கள். என்னுடைய ரிலேஷன்ஷிப் காரணமாக அந்த ரீடெயில் க்ரூப்பின் பொது மேலாளருக்கு, நான் அவருடைய கம்பெனியில் சேர முடியாததற்கு என் வருத்தத்தைத் தெரிவித்து ஒரு கடிதம் எழுதியிருந்தேன்.

ஒரு வியாழன் அன்று, அந்த ரீடெயில் க்ரூப்பின் பொது மேலாளர் என்னைக் கூப்பிட்டார். அவருடைய அலுவலகத்துக்கு வரச்சொன்னார். அன்றைக்குத்தான் என் சகோதரன் சௌதியிலிருந்து எங்கள் வீட்டிற்கு வந்திருந்தான். அவனும் என்னிடம் கல்ஃப் ஏரில் சேரும் என்னுடைய முடிவை சரி என்று சொல்லியிருந்தான்.  ரீடெயில் க்ரூப்பின் பொது மேலாளரின் அலுவலகத்துக்குச் சென்றபோது, அவர் அதிகச் சம்பளத்திற்காக அப்படி முடிவெடுக்கிறாயா? இங்க வருடத்துக்கு 15 சதம்கூட நாங்கள் சம்பளத்தை அதிகமாக்குவோம், அதற்கெல்லாம் ஒரு லிமிட்டும் கிடையாது. நீ எங்கள் கம்பெனி கணிணி துறையில் சேர்வாய் என்று நான் ரொம்பவே எதிர்பார்த்தேன் என்றெல்லாம் ரொம்ப நேரம் பேசினார். நீ சரி என்று சொன்னால், நான் ஆஃபர் லெட்டரை கல்ஃப் ஏர் ஆஃபருக்கு மேட்ச் பண்ணுவேன், உன் கடிதம் இன்னும் எம்.டிக்குப் போகவில்லை. ஆனால் அந்த புது ஆஃபரை வைத்துக்கொண்டு நீ கல்ஃப் ஏரில் பேரம் பேசக்கூடாது என்றார். அவருக்கு என் மீது ரொம்பவே நம்பிக்கை. என் மனதிலும், நம்மை விரும்பிக் கேட்கும் கம்பெனியில் சேர்ந்தால் என்ன என்ற எண்ணம் தோன்றிவிட்டது. உடனே அவரிடம், ரீடெயில் கம்பெனியிலேயே சேர்ந்துவிடுகிறேன் என்று வாக்குக் கொடுத்துவிட்டேன்.  எதனால் சட் என்று மனது மாறினேன் என்று சொல்லத் தெரியவில்லை. ஆனால், நம்மை விரும்பும் கம்பெனி பெட்டர் என்று மனது சொல்லியது.

அந்த வியாழனன்று நடந்த அந்தச் சந்திப்பு என்னுடைய தலையெழுத்தை மாற்றிவிட்டது. அங்கு என்னுடைய பொசிஷன், குழுமத்தின் டெபுடி I.T. மேனேஜர். அப்போது என்னுடைய முடிவு சரியா என்று எனக்குத் தெரியவில்லை. பிறகு சில மாதங்கள் கழித்து, நாம் தவறான முடிவை எடுத்துவிட்டோமே என்று தோன்ற ஆரம்பித்துவிட்டது. நம்முடைய முடிவு சரியா, தவறா என்பதும், நமக்கு நல்லதுதான் நடந்திருக்கிறதா என்பதும் பலப் பல வருடங்கள் கழித்து இப்போது சிந்திக்கும்போது, எல்லாமே நல்லதுக்குத்தான் என்று தோன்றுகிறது. ஆனால் ரீடெயில் க்ரூப்பில் சேர்ந்த அடுத்த மூன்று வருடங்கள் எனக்குக் கொஞ்சம் கஷ்டமான காலமாக அமைந்துவிட்டது.

ஜோசியர் கூறிய பிரகாரமே ஏப்ரல் 1999ல் டேட்டாமாஸிலிருந்து, புது கம்பெனியில் (ரீடெயில் குழுமம்) சேர்ந்தேன்.

இது என்னப்பா… எல்லாத்துக்கும் ஜோசியரிடம் கேட்பான் போலிருக்கு என்று நினைக்கவேண்டாம். 3 வருடங்களுக்குப் பிறகு வேறு கம்பெனியில் வேலைக்குச் சேரலாம் என்று நினைத்ததால், ஜோசியரிடம் அவருடைய எண்ணத்தைக் கேட்கச் சென்றேன். அதுபோல புது கம்பெனியில் சேர்ந்தபிறகு மூன்று வருடங்கள் கஷ்டப்பட்டேன் என்று சொன்னேன் அல்லவா? கடைசி மூன்று மாதத்தின்போது, ஜோசியரை கன்சல்ட் செய்தேன், வேறு வேலைக்குச் செல்லலாமா, நல்ல குழுமத்தில் சேர்ந்தும், இந்தக் கஷ்டம் எதனால் வந்தது (கிரக நிலை போன்று) என்று கேட்டேன். அதைப் பற்றி அடுத்த பகுதியில் எழுதுகிறேன்.

இனி படங்கள் தொடர்கின்றன.

 

 

இயற்கைக்கு முன் மனிதன் எம்மாத்திரம்?

நான் வெறும்ன பொழுது போக்குவதற்காகப் பறக்கிறேனா? என்னைப் போய் படமெடுக்கிறாயே.. நான் பார்த்துக்கொண்டிருப்பது நீ எடுத்த அடுத்த படத்தில் உள்ளதை

நமக்கு அமைதியாகத் தெரியும் அணைக்கட்டின் நீர்ப்பெருக்கில் தன் உணவான மீனைத் தேடுகிறதோ அந்த கருடன்?

இந்த மாதிரி, நீரின் (பெரிய ஏரியின்) நடுவே இருக்கும் திட்டில் வீடு கட்டிக்கொண்டு அமைதியாக காலத்தைக் கழிக்கத் தோன்றுகிறதா?

 

 

கேரளாவில் தென்னை மரங்களுக்குக் குறைவில்லை. ஆனாலும் ஒரு இளநீர் விலை மிக அதிகம். வர்கலாவில், இளநீர் விலையை டாலரில் போட்டிருந்தார்கள்.

குன்றுகள், மலைகள் மேகங்கள்… அவை உறவாடும்போது எவ்வளவு அழகாக இருக்கிறது..

 

 

 

தொங்குபாலத்தில் மக்கள் செல்வது தெரிகிறதா?

 

இரவில் ஒளியேற்றப்பட்ட நீரூற்றுக்களுடன் மிகவும் மிளிரும் என்று நினைக்கிறேன்.

 

அணையில் நீர் சிறிது குறைவாக இருந்த தால், நடுவே தீவுகளும் திட்டுக்களும் தோன்றுகின்றன. அணையில் சிறிய படகில் சென்றால் நன்றாக இருக்கும். ஆனால் கவிழ்ந்துவிட்டால்?

 

 

அழகிய தாமரை…கோயிலுக்கும் நாட்டுக்கும் மிகத் தேவையானது.

தொடரின் இறுதிப் பகுதிக்கு வந்துவிட்டோம் என்று நினைக்கிறேன்.  அடுத்த வாரம் கடைசிப் பகுதியைக் காணலாம்.

(தொடரும்) 

======================================================================================


மனசாட்சியம் - 3​7
KGY Raman 

"வரி கொடா இயக்கம்"

மிகப் பிரபலமான மிகப்பெரிய நகைக் கடையில் நீங்களும் நகை வாங்கியிருப்பீர்கள்.   நானும் வாங்கியிருக்கிறேன் .

ஒரு சில ஆண்டுகளுக்கு முன்னால் எல்லாம் முடிவான பின், கடைக்காரர் கேட்கிறார்: " பில் போட வேண்டுமா ?  பில் போட்டால் நீங்கள் டாக்ஸ் சேர்த்துத் தர  வேண்டி வரும். " அனேகமாக பில் போடச் சொல்லி வரிகள் உட்பட பணத்தைக் கட்டி நகையை வாங்கி இருப்பவர்கள் இருக்கவே முடியாது. தப்பித்தவறி இருந்தாலும் மிகச்  சொற்பமானவர்களாகத் தான் இருக்க முடியும்.‌

வரி என்பது அரசாங்கம் தான் நிறைவேற்ற வேண்டிய அத்தியாவசியக் கடமைகளுக்காக ஆகும் செலவை ஈடுகட்டும் ஒரு சாதனம். நான் விற்பனை வரி கட்டாமல் ஏமாற்றி வாங்கிப் போகிற நகை,  விற்பனையாளருக்கு நான் தரும் லாபத்தை அவர் கணக்கில் காட்டாமல் இருக்க உதவுகிறது. இப்படி பெருத்த அளவிலும் பரவலாகவும் நடைபெற்றால் அரசாங்கம் ஆடித்தான் போகும். ஆனால் சாதாரண மக்களின் பார்வையில் வரி என்பது அரசு அநியாயமாக வசூலிக்கும் ஒன்று என்ற எண்ணம் தான் இருக்கிறது.  " வரி கொடுக்காமல் ஏமாற்றுகிறீர்களே ! " என்று என்னை யாராவது கேட்டால், உடனே அரசாங்கம் செய்யும் விரயச் செலவுகளை பட்டியல் போட்டு " அவர்கள் நம்மை ஏமாற்றுகிறார்கள். நாம் அவர்களை ஏமாற்றுவதில் என்ன தவறு ? " என்று எதிர்வாதம் செய்வது என் அந்தக் காலத்தியப் பழக்கமாக இருந்தது. 

" ஒரு நூல் இழை இடம் கொடுத்தால், நூலைப் பிடித்துக் கொண்டு சரடும், சரடைப் பிடித்துக் கொண்டு கயிறும், கயிறைப் பிடித்துக் கொண்டு வடமும், வடத்தின் பின்னே தேரும் உள்ளே நுழைந்து விடும் " என்று ரசனையாகச் சொல்வதுண்டு. 

சுதந்திரத்துக்கு முன்னால் கள்ளுக்கடைகளை மூடிய சமயத்தில் எதிர்ப்பட்ட பெரிய நிதி நெருக்கடியை ஈடு செய்ய விற்பனை வரியை ராஜாஜி அறிமுகப்படுத்தினார் என்று சொல்வது உண்டு. இன்று விற்பனை வரி அரசின் வருமானத்தில் மிக கணிசமான பங்கு வகிக்கிறது. 

வருமானத்திற்கு ஏன் வரி போட வேண்டும் என்று வருமான வரி கட்டுபவர்கள் பலமாகக் கேள்வி கேட்பார்கள். எல்லாச் செலவையும் ஒரே ஒரு வரி மூலம் சமாளிப்பது முடியாத காரியம். அரசின் மொத்த வருமானத்தையும் விற்பனை வரியின் மூலம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றால் வரி விகிதம் அசாதாரணமான உயரத்தில் இருக்கும் என்பது மட்டுமல்ல,  கிட்டத்தட்ட நாட்டின் ஒவ்வொரு குடிமாந்தரும் அந்த வரிச்சுமையைத் தாங்க வேண்டி வரும். அதனால்தான் , " இருக்கிற இடத்திலிருந்து எடுத்து இல்லாத இடத்தை நிரப்பு "  என்கிற சமதர்மக் கொள்கையைக் கடைப்பிடித்து,  அரசு பல்வேறு வரிகளைப் பல்வேறு விகிதங்களில் விதிக்கிறது. 

ஆண்டுதோறும் பட்ஜெட் சமயத்தில் , வருமான வரியில் என்ன சலுகை அல்லது என்ன மாற்றம் வரும் என்று எல்லாரும் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்கள். குறைந்த வருமானம் உள்ளவர்கள் அநேகமாக வரி-ஏய்ப்பு செய்ய முடியாது. அவர்கள் சம்பளம் வங்கிக் கணக்கு மூலம் வருவதால் வருமானத்தை குறைத்துக் காட்ட இயலாது. சேமிப்புகள் அதிகம் செய்தால் வரி கொஞ்சம் குறையும். எனவே வரி கட்டுகிற இந்தியக் குடிமகன்களில் ஏமாற்றாமல் நாணயமாக வரி கட்டுகிற வர்க்கம் என்று இவர்களைத்தான் சொல்ல வேண்டும். டிஜிட்டல் பண பரிவர்த்தனை நடைமுறைக்கு வந்த பின் ஜமாத்துவது அவ்வளவு எளிதாக இருக்காது என்று நாம் நினைத்திருந்தோம். ஆனாலும் இன்றும் அன்றாடம் செய்தித்தாள்களில் 100 கோடி ஊழல் 500 கோடி ஊழல் என்று செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன. என்ன சட்டம் போட்டாலும் எத்தனை கட்டுப்பாடுகளை கொண்டு வந்தாலும் ஏமாற்றுகிறவர்கள் ஏமாற்றிக் கொண்டே தான் இருப்பார்கள் போல் தெரிகிறது.

வரி கட்டாமல் ஏமாற்றுவது வேறு.  வருமான வரி சட்ட திட்டங்களில் உள்ள சலுகைகளை முற்றிலும் பயன்படுத்தி வரி செலுத்தாமல் தப்பிப்பது வேறு. எனக்குத் தெரிந்த ஒரு கெட்டிக்காரர் தன்னுடைய முதலாளிக்கு ஒரு ஆலோசனை சொன்னார். " உங்கள் மகனையும் மகளையும் ஒரு நல்ல பதவியில் நல்ல சம்பளத்தில் அமர்த்திக் கொள்ளுங்கள். அந்த சம்பளம் உங்கள் லாபத்தில் கழிக்கப்படுவதால் உங்களுக்கு நல்ல சலுகை  கிடைக்கும். " நீங்கள் பிரபல கார்ப்பரேட் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறப் போயிருந்தால் அவர்கள் ஒவ்வொரு பகுதிக்கும் வேறு வேறு பெயரில் பில் போட்டுத் தருகிறார்கள் என்பதைக் கவனித்திருப்பீர்கள். இதுவும் வரி கொடா  இயக்கத்தின் ஒரு பகுதியோ என்று நினைக்கக் கூடாது.  சட்டம் அதை அனுமதிக்கிறது - அவ்வளவுதான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!