நாலாயிர திவ்யப் பிரபந்தம் – வாரம் ஒரு பாசுரம் தொடர்
நெல்லைத் தமிழன்
குரு பரம்பரை மற்றும் பாசுரம் – பகுதி 45
திருக்கோஷ்டியூர் நம்பிகளின் கட்டளைக்கிணங்க, திருமாலையாண்டான், இராமானுஜருக்கு திருவாய்மொழி விசேஷ அர்த்தங்களைப் பாடம் சொல்லிக்கொண்டிருந்தார். ஒவ்வொரு முறையும் இராமானுஜர், தாம் ஆளவந்தாரிடம் கேட்ட அர்த்தத்தைவிட மாறுபட்டுச் சொன்னது திருமாலையாண்டானுக்கு அதிருப்தியை உண்டாக்கிற்று.
இவ்வாறு பாடம் நடந்துகொண்டிருக்கும்போது, ஒரு நாள், திருவாய்மொழி 2ம் பத்து, மூன்றாம் திருவாய்மொழியில் (ஊனில் வாழ் உயிரே என்று தொடங்கும் திருவாய்மொழி) மூன்றாம் பாசுரமான “அறியாக் காலத்துள்ளே” என்ற பாசுரத்திற்கு விளக்கம் சொல்லிக்-கொண்டிருந்தபோது, ஆளவந்தார் அருளிச் செய்ததாக திருமாலையாண்டான் பொருள் கூறும்போது,
“அறிவு நடையாடாத சிறிய பிராயத்திலேயே அடியேனுக்கு மெய்யறிவைத் தந்து, உனக்குத் தொண்டு செய்வதில் விருப்பத்தை உண்டாக்கி, பின்பு அந்த மெய்யறிவை அழிக்கக் கடவதான இந்த உடலோடு என்னைச் சேர்த்து வைத்தாயே” என்று ஆழ்வார் வருத்தத்தோடு அருளிச் செய்கிறார் என்று சொன்னார்.
இதனைக் கேட்ட எம்பெருமானார், இந்தத் திருவாய்மொழியில், இந்தப் பாசுரத்திற்கு முந்தைய பாசுரத்திலும் இதற்குப் பிந்தைய பாசுரங்களிலும் ஆழ்வார் தம்முடைய மகிழ்ச்சியையே வெளிப்படுத்தியிருக்கிறார். முந்தின மற்றும் அடுத்த பாசுரங்களில் எம்பெருமான் தமக்குச் செய்துள்ள உபகாரங்களை மகிழ்ச்சியுடன் கொண்டாடியிருக்கிறார். நடுவில் உள்ள பாசுரத்தில் மாத்திரம் வருத்தத்தோடு அருளிச் செய்கிறார் என்று கொள்வது பொருந்தாது. அதனால் பாசுரத்தில் உள்ள சொற்களை மாற்று வரிசையில் அமைத்து,
அறியா மாமாயத்து அடியேனை, அறியாக் காலத்துள்ளே அடிமைக்கண் அன்பு செய்வித்தாய் அறிவு நடையாடாத இளம் பருவத்திலேயே அடிமை செய்வதில் அன்புடையவனாக ஆகும்படிச் செய்தாயே! என்று ஆழ்வார் இதையும் எம்பெருமான் செய்த உபகாரமாக எண்ணி மகிழ்ச்சியுடன் கூறுகிறார் என்று பொருள் கூறினார்.
இதைக் கேட்ட திருமாலையாண்டான், இது என்ன விசுவாமித்திரர் சிருஷ்டித்ததைப் போல புதிதாக அர்த்தம் சொல்கிறேரே. ஆளவந்தார் இந்த மாதிரி அருளிச் செய்ததைக் கேட்டறியேன் என்று சொல்லி, திருவாய்மொழிக்கு அர்த்தம் அருளிச் செய்வதை நிறுத்திவிட்டார். இப்படியாக இராமானுஜருக்கு திருமலையாண்டான் திருவாய்மொழிக்கு ஆளவந்தாரின் விசேஷ அர்த்தப் பொருள்களைச் சொல்லும் பாடம் நின்றுபோயிற்று.
இன்றைய பாசுரமாக ‘அறியாக் காலத்துள்ளே” என்ற பாசுரத்தையே எடுத்துக்கொள்ளலாம்.
அறியாக் காலத்துள்ளே* அடிமைக்கண் அன்பு செய்வித்து,*
அறியா மாமாயத்து* அடியேனை வைத்தாயால்,*
அறியாமைக் குறளாய்* நிலம்மாவலி மூவடியென்று,*
அறியாமை வஞ்சித்தாய்* எனதாவியுள் கலந்தே.
பொருள்: அறிவு வளராத இளமைப் பருவத்திலேயும் உனக்கு அடிமைத் தொழில் செய்வதில் எனக்குப் பேராவலை உண்டாக்கி அருளினாய். அறியாமையைத் தரக்கூடியதும், கடக்க முடியாததுமான இந்த மாயப்பிறவி உலகத்தில் என்னை வாழும்படிச் செய்தாய். பெரிய மாயங்கள் செய்யக்கூடிய இறைவன், வாமனன் என்ற குள்ள வடிவம் கொண்டு, மகாபலிச் சக்கரவர்த்தியிடம் சென்று மூன்று அடி நிலம் வேண்டும் என்று கேட்டாய். அன்று மகாபலிச் சக்கரவர்த்தி அறியாதபடி அவனது அகந்தையை மறைமுகமாக வஞ்சித்து வென்றதுபோல, இன்று என்னையும், நான் அறியாதபடி என் ஆன்மாவுக்குள் புகுந்து என்னை உனக்கு அடிமையாக்கிக் கொண்டாய்.
விளக்கம்: அடிமைக்கண் அன்பு – அடிமை செய்வதில் அன்பு உடையவனாக, குறளாய் – வாமன அவதாரம் எடுத்து, அறியாமைக் குறளாய் – ஒன்றும் தெரியாத வாமன வடிவத்தில் (மிகப் பெரிய மாயக்காரனான நீ, சிறிய உருவு எடுத்தாய்), அறியாமை வஞ்சித்தாய் – மகாபலி அறிந்துகொள்ளா வண்ணம் அவனை வஞ்சித்து வென்றாய்.
திருமாலையாண்டான், எம்பெருமானாருக்கு திருவாய்மொழி பாடம் நடத்துவது நின்று போய்விட்டது என்று கேள்விப்பட்ட திருக்கோஷ்டியூர் நம்பி, உடனே கோயிலுக்கு விரைந்து வந்து, திருமாலையாண்டானை அவரது மாளிகையில் கண்டு, ஏன் திருவாய்மொழிக்கு அர்த்த விசேஷ பாடங்களை நடத்தாமல் தவிர்த்தீர் என்று கேட்டார்.
திருமாலையாண்டானும், அவரிடம், ஆளவந்தார் அருளிச் செய்ததை அடியேன் கேட்ட அர்த்த த்திற்கு மாறாக புதிது புதிதாக இவர் சொல்லுவதால், பாடம் சொல்வதை நிறுத்திவிட்டேன் என்று சொன்னார். அப்படி என்ன புதிதாக இவர் சொன்னார் என்று நம்பி கேட்ட தற்கு, ‘அறியாக் காலத்துள்ளே’ என்ற பாசுரத்திற்கு எம்பெருமானார் சொன்ன அர்த்த த்தைச் சொன்னார்.
அதைக் கேட்ட நம்பி, அந்த அர்த்தத்தையும் ஆளவந்தார் சொல்லக் கேட்டிருக்கிறேன். இவர் ஒரு தனிப் பிறவி. சாந்தீபனியிடம் கிருஷ்ணர் பாடம் கேட்டதைப்போல உம்மிடம் உடையவர் திருவாய்மொழி கேட்பது. ஆளவந்தார் திருவுள்ளத்தில் இருந்த அர்த்தமல்லாமல் இவருக்கு வேறு தோன்றாது என்று இரும். நீர் இவருக்கு, இவர் அறியாத அர்த்தங்களை அறிவிக்கிறோம் என்று எண்ணாதீர் என்று அறிவுறுத்தினார்.
பிறகு திருக்கோஷ்டியூர் நம்பி, பெரிய நம்பி மற்றும் திருமாலையாண்டானுடன் எம்பெருமானார் மடத்திற்குச் சென்றார். இராமானுஜர் மூவரையும் விழுந்து சேவித்தார். திருக்கோஷ்டியூர் நம்பி,, திருமாலையாண்டானைப் பார்த்து, திருவாய்மொழியை விட்ட இடம் தொடங்கி பல நாட்கள் இவருக்கு ஸாதித்து நிறைவேற்றும் என்று நியமித்தருளினார்.
உடையவரும் ப்ரீதியுடன் திருவாய்மொழியை முற்றிலும் திருமாலையாண்டானிடம் கேட்டு முடித்தார். பாடம் நடக்கும்போது, திருமாலையாண்டான் சொன்ன ஒரு அர்த்தத்திற்கு, ஆளவந்தார் இப்படி அருளிச் செய்திருக்க மாட்டாரே என்று எம்பெருமானார் சொல்ல, அவர் சொன்ன பொருளை ஆலோசித்து திருமாலையாண்டான் ஒத்துக்கொண்டார். இப்படி திருவாய்மொழி பாடம் முற்றிலும் முடிந்தது.
திருமாலையாண்டான், உடையவரிடம், நீர் ஆளவந்தாரைக் கண்ணால் கண்டதில்லை. பிறகு எப்படி ஆளவந்தார் இப்படிச் சொல்லியிருக்க மாட்டார், இந்தப் பொருள் சரியாக இருக்கும் என்று சொல்கிறீர்கள் என்று கேட்க, அதற்கு எம்பெருமானார், அடியேன் ஆளவந்தாருக்கு ஏகலைவன் அல்லவா என்று பதிலிறுத்தார். (ஏகலைவன் துரோணாச்சார்யாரை மனதில் இருத்தி வில்வித்தை பயின்றது போல, ஆளவந்தார் உடையவரின் மனதில் இருப்பதால் திருவாய்மொழி பாசுரங்களின் சரியான அர்த்தம் அவர் மனதில் தோன்றுகிறது என்பது பொருள்)
பிறகு பெரிய நம்பி, உடையவரிடம், ‘இன்னமும் சில அர்த்த விசேஷங்களை திருவரங்கப் பெருமாள் அரையரிடம் கேட்டறிய வேணும்’ என்று நியமித்தார். இந்த திருவரங்கப் பெருமாள் அரையர் என்பவர் ஆளவந்தாரின் திருமகனார் மற்றும் சிஷ்யர். இவர்தான் காஞ்சீபுரத்திலிருந்து இராமானுஜரை திருவரங்கத்திற்குக் கூட்டிவந்தது. திருவரங்கப் பெருமாள் அரையருக்கு இன்னொரு பெயர் ஆளவந்தாழ்வார்.
அந்தக் காலத்தில், ஒருவரிடம் கற்றுக்கொள்ள, அவருக்கு முழு மனத்துடன் எல்லா கைங்கர்யங்களையும் செய்யவேண்டும். தினமும் குரு பாடம் சொல்லிக்கொடுப்பார் என்று கிடையாது. அவருக்கு மனது குளிர்ந்து, தோன்றும்போது பாடம் சொல்லிக்கொடுப்பார். இப்படித்தான் அப்போது விசேஷமான பாடங்களைப் பயிலும் முறை இருந்தது. (இதையொட்டித்தான் இந்தக் காலத்தில், பி.எச்.டி பண்ணிக்கொண்டிருக்கும்போது தம்முடைய Guideக்கு எல்லா வேலைகளையும் அந்த மாணவர் செய்யவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்களா என்று கேட்கக் கூடாது. இந்தக் காலத்தில் அவரவர்களுக்கு சம்பளம் கொடுத்து அரசாங்கம், அல்லது தனியார் கல்லூரி இந்த வேலைகளைச் செய்யச் சொல்கிறது, அதாவது ஆராய்ச்சி செய்யும் மாணவருக்கு உதவச் சொல்கிறது)
இராமானுஜர், அரையரின் அபிமானத்தைப் பெற, அவருக்கு தினமும் சிறு சிறு கைங்கர்யங்கள் செய்துவந்தார். பாலமுது காய்ச்சிக் கொடுப்பது, அவருக்கு நீராடுவதற்கு எண்ணெய் தேய்ப்பது போன்று பல கைங்கர்யங்களைச் செய்தார். அற்பப் பணிகளையும் அதி ஜாக்கிரதையாகவும், உள்ளார்ந்த அன்போடும் செய்யும் இராமானுஜரைக் கண்டு அரையருக்கு விசேஷமான அன்பு தோன்றியது. ஆளவந்தாரின் கருத்துக்கு இசைவாக இராமானுஜருக்குக் கற்பித்தார்.
அறியாதன அறிவித்து, காட்டாதன காட்டி, பேசாதன பேசிச் சீடனை ஆட்கொள்பவரே உண்மையான குரு அல்லது ஆச்சார்யன். இப்படிப்பட்ட குருவை சீடன் சாதாரண மனிதனாக எண்ணிவிடக் கூடாது. தெய்வமே நேரில் வந்து உபதேசம் செய்வதாக எண்ணும் சீடன், அந்த உபதேசங்களால் நலம் பெறுவது உறுதி. அதனால் குருபக்தி மிகவும் முக்கியம் என்று சொன்னார்.
திருவரங்கப் பெருமாள் அரையரிடம், ஆளவந்தார் ஸ்தோத்திரங்களுக்கும் அர்த்தம் கேட்டுக்கொண்டார் எம்பெருமானார்.
இவர்கள் எல்லோரும் எம்பெருமானாருக்கு ஆச்சார்யர்கள் அல்லர். அந்த ஆளவந்தாரே உடையவருக்கு ஆச்சார்யர். அவர் சார்பாக, அவர் கொடுத்திருந்த நிதி என்னும் ரகஸ்ய அர்த்தங்களை, விசேஷ அர்த்தங்களை இராமானுஜருக்கு இவர்கள் கொடுத்தனர்.
இதனால்தான், இராமானுஜருக்கு முன்பு உள்ள ஆச்சார்யார்கள், இவருக்கு ஆச்சார்யர்களாகிப் பேறு பெற்றனர். இராமானுஜருக்குப் பின்பு உள்ள ஆச்சார்யர்கள் இவருக்கு சிஷ்யராகி, உண்மையான ஆத்ம ஸ்வரூபத்தை அடைந்தார்கள். அதனால்தான் ஒரு ஆபரணத்தின் நடுவே மாணிக்கக் கல் கிடந்து அந்த ஆபரணத்தை ஒளியுண்டாக்குவது போல இராமானுஜரும் ‘இடையே இராமானுச முனியாய்” என்று இராமானுஜ நூற்றந்தாதியில் வருவது போல, ஆச்சார்யர்கள் வரிசையில் நடுவில் அமைந்து ஒளிர்ந்தார்.
இந்தப் பகுதியிலேயே அந்த இராமானுஜ நூற்றந்தாதி பாசுரத்தைப் பகிர வேண்டும் என்ற எண்ணம் உண்டாகிறது. இந்தப் பிரபந்த த்தையும் சேர்த்துத்தான் நாலாயிர திவ்யப் பிரபந்தம் என்று சொல்வர். இது இராமானுஜர் காலத்தில் இயற்றப்பட்டது. இயற்றியவர் திருவரங்கத்து அமுதனார். இதனைப் பற்றிய வரலாறு பின்னர் வரும். கீழே உள்ள பாசுரம், இராமானுஜ நூற்றந்தாதியில் 33வது பாசுரம்.
அடையார் கமலத்து அலர்மகள் கேள்வன்* கையாழி என்னும்-
படையோடு நாந்தகமும்* படர் தண்டும்,* ஒண் சார்ங்கவில்லும்-
புடையார் புரிசங்கமும் இந்தப் பூதலம் காப்பதற்கு* என்று-
இடையே* இராமானுச முனியாயின இந்நிலத்தே
பொருள்: நெருங்கிய இதழ்களைக் கொண்ட தாமரை மலரில் வீற்றிருக்கும் திருமகளின் கணவனான எம்பெருமான், அவனது திருக்கரத்தில் ஏந்தியிருக்கும் ‘சுதர்சனம்’ என்னும் சக்கரத்தோடும், ‘ந ந்தகம்’ என்று அழைக்கப்படும் வாளுடனும், உலகைக் காக்கும் தொழிலில் பரந்து விளங்கும் ‘கௌமோதகி’ என்ற Gகதையுடனும், ஒளி பொருந்திய ‘சார்ங்கம்’ என்னும் வில்லுடனும், பக்கத்தில் அழகுடன் சுருண்டு விளங்குகின்ற ‘பாஞ்சஜன்யம்’ என்னும் வெண்மையான சங்குடனும், இந்த பூமியைக் காப்பதற்காக (அஞ்ஞானத்திலிருந்து காக்க) நடுவே இராமானுஜராக அவதாரம் எடுத்துள்ளான்.
விளக்கம்: அடையார் கமலம் – நெருங்கிய இதழ்கள் உடைய தாமரை மலர், கையாழி – திருக்கரங்களில் உள்ள ஆழி என்னும் சக்கரம், தண்டு – Gகதை, புரிசங்கம் – சுருண்டுள்ள சங்கு (புரிசடை-சுருண்டிருக்கும் முடிச்சு முடிச்சாக இருக்கும் சடை-சிவனுக்கு), இடையே – இது பூவுலகின் நடுவில் என்ற சாதாரண அர்த்தம் த்வனிக்க இருந்தாலும், ஆச்சார்யர்களில் நடுவே மாணிக்கம் போன்றவர் என்பதுதான் உள்ளுறைப் பொருள்.
எம்பெருமான், தன் ஐந்து ஆயுதங்களையும் கொண்டுதான் அசுரரை அழித்து உலகத்தைக் காத்திருக்கிறான். ஆனால் கலியுகத்தில் மக்களை ஆயுதம் கொண்டு திருத்த முடியாது என்பதாலும், ஞானத்தினாலும் அன்பினாலும் திருத்துவது எளிது என்பதாலும் அவனுடைய ஐந்து ஆயுதங்களும் ஒன்றாக இணைந்து கலியுகத்தில் இராமானுஜராக அவதரித்தன என்று பெரியோர்கள் கருதுவர்.
திருவரங்கத்தில் கிழக்கு சித்திரை வீதியில் கூரத்தாழ்வான் திருமாளிகை அமைந்துள்ளது.
திருவரங்கத்தில் கிழக்கு சித்திரை வீதியில் கூரத்தாழ்வான் திருமாளிகையை அடுத்து (ஒரு சில கட்டிடங்களுக்குப் பிறகு) முதலியாண்டான் திருமாளிகை அமைந்துள்ளது
கூரத்தாழ்வான் திருமாளிகைக்கு எதிரே ஸ்ரீபெரியநம்பி திருமாளிகை அமைந்துள்ளது. (கிழக்கு சித்திரை வீதி). பெரிய நம்பிக்கு முன்னால் இது ஆளவந்தார் இருந்த திருமாளிகை என்பதால் ஆளவந்தார் திருமாளிகை என்று அழைக்கப்பட்டது.
எம்பெருமானார் வசித்து வந்த சேரன் மடம் (பிறகு எம்பெருமானார் மடம், பிறகு ஸ்ரீ ரங்க ராமானுஜ ஜீயர் மடம்) வடக்கு வாசல் அருகே, வடக்கு உத்தரவீதியில் (முன்பு இராஜகம்பீரன் திருவீதி என்று அழைக்கப்பட்டது) உள்ளது.
கிழக்கு உத்தரவீதியிலிருந்து தெற்கு நோக்கிச் சென்று திரும்பினால், தெற்கு உத்தர வீதி. அங்குதான் ஸ்வாமி மணவாள மாமுனிகள் திருமாளிகை இருக்கிறது.
தெற்கு உத்தரவீதியில் சிறிது தூரம் தள்ளி, ஸ்ரீ பராசரபட்டர் திருமாளிகை இருக்கிறது. இவர்களைப் பற்றி பின்பு வரும்.
இந்தத் திருமாளிகைகள் எல்லாமே ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் இருக்கின்றன. உதாரணமாக இராமானுஜர் மடம், அவர் காலத்துக்கு முன்பு சேரன் மடம் என்ற பெயர் பெற்று விளங்கியது. உத்தர வீதி மற்றும் சித்திரை வீதியில் நிறைய ஆச்சார்யார்கள் திருமாளிகைகள் இருக்கின்றன. பலவும் உருவம் மாறி, புதிய வடிவம் பெற்றுள்ளன. ஒரு சில திருமாளிகைகள்தாம், உள்ளே நாம் சென்றால் ஆயிரம் ஆண்டுகால கல்தூண்களையும், கல் உத்திரங்களையும் பெற்றுள்ளன.
தெற்கு உத்தரவீதியில்தான் ரங்கா ரங்கா ரங்கா கோபுரம் (அல்லது நான்முகன் கோபுரம்) அமைந்துள்ளது.
இனி அடுத்த வாரம் தொடர்வோம்...
===================================================================================






அனைவருக்கும் இனிய தீபாவளித் திரு நாள் நல்வாழ்த்துகள். ஒரு நாள் முன்பாக வாழ்த்துவதில் தவறு இல்லை என்று நம்புகிறேன், இனிய காலை வணக்கம்.
பதிலளிநீக்குஶ்ரீரங்கம் நோக்கிச் செல் என்பது ஒரு அடியாவது எடுத்து வை என்று மூத்தோர்கள் சொல்வார்கள். ஶ்ரீ நெல்லைத்தமிழனின் பதிவு முழுவதும் ஆச்சார்யர்களின் திருமாளிகைகளின் படங்கள் நிறைந்து தெய்வ லோகமாக மாற்றுகிறது . மிக மிக நன்றி மா.
பதிலளிநீக்கு