நம்ம வூடுதான்! உள்ள வாங்க! படிங்க! படிங்க!! படிச்சுகிட்டே...இருங்க! வலை உலகிலே "எங்கள்" புதிய பாணி!
30.10.26
சொல்ல நினைத்த ஆசைகள் சொல்லாமல் போவதேன் சொல்ல வந்த நேரத்தில் பொல்லாத நாணம் ஏன்
'சொல்லவா.. கதை சொல்லவா... நடந்த கதை சொல்லவா' தொடர்ச்சி....
ஆல் செட்! மேடம் வெற்றிகரமாக உண்மையிலேயே நல்லபடியாக பிரசவம் பார்த்து பேர்வாங்கினார்.
'சரி,, இதுல என்ன பிரச்சனைன்னு கேக்கற உங்க மைண்ட்வாய்ஸ் எனக்கும் கேட்குது..
சொல்றேன்...
என்று முடித்திருந்தேன் இல்லையா? என் மாமியார் மருத்துவமனை உள்ளே வந்த உடனேயே ஆக்சிஜன் ரீடிங் குறைந்து விட்டது என்றும் சொல்லி இருந்தேன். மாமியாரை பார்த்துக் கொண்டிருந்தது ஒரு பொது மருத்துவர். இரண்டு நாட்கள் பார்த்து விட்டு ஆக்சிஜன் அளவில் ஏற்றமில்லை என்று தெரிந்ததுமோ,
இதயத்தின் செயல்பாடு 25 சதவிகிதம்தான் என்று தெரிந்த பின்னரோ என்ன செய்திருக்க வேண்டும்? உடனே வேறு பெரிய மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுங்கள் என்று சொல்லி இருக்க வேண்டும். இவர் என்னடா என்றால் இதயத்துக்கான மாத்திரைகளை ஒவ்வொன்றாய் கொடுத்து டெஸ்ட் செய்து கொண்டிருந்தார். நோக்கத்தில் தப்பு சொல்ல முடியாது. ஒருவேளை இங்கேயே சரி செய்துவிட முடியுமா என்று பார்த்திருக்கிறார் என்று சொல்லலாம். லாம்தான். ஆனால் அது பேஷண்ட் உயிருக்கு ரிஸ்க் இல்லையா?
ஐசாப்ட்டின் கொடுத்து கிட்னி அளவை மானிடர் செய்து அதை நிறுத்தி வைமாடாவுக்கு வந்து வேறு சில பக்க விளைவுகளை சோதித்து அதை மாற்றி என்று முயற்சித்துக் கொண்டிருந்தார். முயற்சித்துக் கொண்டிருந்தாரா, பழகிக் கொண்டிருந்தாரா என்று நினைக்கத் தோன்றியது.
நாங்கள் என்னடாவென்றால் இரண்டு நாட்கள் வைத்து அப்ஸர்வ் செய்து டிஸ்சார்ஜ் செய்வார் என்று எதிர்பார்த்திருக்க மூன்றாவது நாள் நான்காவது நாட்களில் மாமியார் நினைவே இல்லாமல் இருந்தார். பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக நினைவுக்கு வந்தார்.
இதற்கு நடுவில் அவர் அதாவது மருத்துவர் ஒரு விசேஷம் என்று இரண்டு நாள் வெளியூர் சென்று அங்கிருந்தே இவரை மானிட்டர் செய்வதாக சொன்னார். செய்தார்தான்.
பொதுவாக மற்ற மருத்துவமனைகளில் - எனக்குத் தெரிந்து ராமச்சந்திராவில் - ஏனென்றால் நான் அங்கு உள்நோயாளியாக இருந்தேன்! - தினசரி அதிகாலை வந்து பெட்ஷீட், தலையணை உறை ஆகியவற்றை மாற்றி விடுவார்கள். பேஷண்ட்டுக்கு மட்டுமல்லாது, பேஷண்ட் அட்டெண்டரின் பெட்ஷீட், தலையணை உறைகளையும் மாற்றி விடுவார்கள்.
இங்கு என்னடா என்றால் மூன்று நாட்கள் ஆகியும் மாற்றாமல் இருந்ததைக் கண்டு, நான் கேட்டபிறகு கடனே என்று வந்து மாற்றினார்கள், காலை 11 மணிபோல. சம்பளம் ரொம்ப பேருக்கு கொடுக்க முடியாது என்று குறைவான பேர்களையே வேலைக்கு வைத்துக் கொண்டிருந்தார்கள் போலும். பத்து அறைக்கு இருவர்தான் இருப்பார்கள். கூப்பிட்டாலும் லேசில் வரமாட்டார்கள்.
அதில் இரண்டுபேர் பேஷண்ட் கோவாப்பரேட் செய்யவில்லை என்று கோபம் வேறு வந்தது அவர்களுக்கு. அதை பேஷன்டின் மேல் காட்டினார்கள்.
இதையெல்லாம் பார்த்தபிறகு மகனும் மருமகளும் தங்கள் முடிவை மாற்றிக்கொண்டார். அவர்கள் பிரசவத்தை இங்கேயே வைத்துக் கொள்ளலாம் என்ற எண்ணத்தில் இருந்தார்கள். இதில் மாமியாருக்கு காது வேறு கேட்காது. மெஷின் வாங்கி கொடுத்தான் போட்டுக் கொள்ளவில்லை. காதில் மெஷின் போட்டுக் கொண்டால் வயிறு வலிக்கிறதாம்!
அங்கிருந்த மேடம் சிறந்த முறையில் பிரசவம் பார்க்கிறார்கள் என்று பேர் வாங்கி இருக்கிறார். ஆனால் கேள்விகளுக்கு சரியாக பதில் சொல்வதில்லை. இந்தக் குறை பெரும்பாலும் எல்லா டாக்டர்களிடமும் இருக்கிறது. 90 % மருத்துவர்கள் கேள்விகளுக்கு பொறுமையாக பதில் அளிப்பதில்லை. கீதா அக்காவுக்கு வாய்த்த மருத்துவர்கள் போல 10 % பதில் சொல்கிறார்கள். நல்ல முறையில் விளக்கமும் கொடுக்கிறார்கள். துரதிருஷ்டம் எங்கள் மருத்துவர் 90% செக்ஷனில் இருந்தார். இந்த மருத்துவமனை என்றால்
எந்த நேரமானாலும் மேடமே வந்து பிரசவம் பார்ப்பார். மற்ற பெரிய மருத்துவமனைகளில் டியூட்டி டைமில் வலி வந்தால் பெரிய மருத்துவர் பார்ப்பார். இல்லாவிட்டால் சிறிய மருத்துவர் அல்லது செவிலியர்தான்!
ஆனால் -
அங்கு குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவர்கள் எப்போதும் இருப்பார்கள். (இதனாலும் பின்னர் ஒரு பிரச்னை வந்தது. அதை பின்னர் சொல்கிறேன்!) இங்கு அழைப்பின்பேரில் - அதுவும் அவர்களுக்கு வசதியான நேரத்தில்தான் - வருவார்கள்.
இதை எல்லாம் யோசித்து ஏற்கனவே இதுவா அதுவா என்று ஒற்றையா ரெட்டையா போட்டுப் பார்த்துக் கொண்டிருந்த மகன் டெலிவரி ராமச்சந்திராதான் என்று தீர்மானித்தான்.. அது கிளைக்கதை.
என்ன காரணம் தெரியவில்லை , எங்கள் வீட்டில் கொலு வைக்கும் வழக்கம் இல்லை. " கொலு எல்லாம் வருஷா வருஷம் வைக்கிற வழக்கம் இருந்தால் தான் வைக்கணும் " என்று எங்கள் வீட்டில் இருந்த பெரிய பாட்டி சொல்வார். கிராமத்தில் இருந்த சித்தப்பா வீட்டில் மட்டும் கொலு வைப்பார்கள். பள்ளிக்கூட விடுமுறை சீசன் என்பதால் நாங்கள் எல்லோரும் சித்தப்பா வீட்டுக்கு கொண்டாடப் போய் விடுவோம். ஒரே முக்கிய வீதியைக் கொண்ட மிகச் சிறிய கிராமம். எல்லா வீட்டுக்குள்ளும் உரிமையாக நுழைந்து " இன்னும் கொஞ்சம் சுண்டல் " என்று கேட்டுப் பெறலாம்.
பிந்தைய நாட்களில் பட்டணவாசமாக வந்த போது, நவராத்திரி ஆரவாரம் இன்னும் பலமாக இருந்தது. மாலை வேலைகளில் வாசல் திண்ணையில் உட்கார்ந்து கொண்டு பள பளவென்று ஆடை அணிகள் சகிதம் சிறுமிகள் வீடு வீடாகப் போய் பாட்டு பாடி தாம்பூலம் வாங்கி வருவதை பையன்களாகிய நாங்கள் பார்த்து மகிழ்ந்த பருவம். திண்ணையில் இருந்தே அக்கம் பக்கத்து வீடுகளுக்குள் இருந்து பரிச்சயமான பெண்கள் பாடுவது நமக்குக் கேட்கும். " நவராத்திரி எல்லாம் பெண்களுக்குத் தான். தடிப் பசங்களுக்கு இல்லை" என்பது எழுதாத விதி. அது அந்த ஊரில் மட்டும் தான் அப்படி இருந்ததா இல்லை எல்லா ஊரிலும் அப்படித்தானா என்று எனக்கு சரியாகத் தெரியவில்லை. சிறு சிறு கூட்டமாக வெளிவரும் பெண்கள் அவர்களுடைய நண்பர்கள் ஆன பசங்களுக்கு கொஞ்சம் பிரசாதம் பங்கு பிரித்துக் கொடுப்பார்கள். " இதை சாப்பிட்டுப் பார் ரொம்ப நல்லா இருக்கு "என்ற சிபாரிசுடன் முக்கால் அங்குல விட்டம் உள்ள காரவடை போன்ற அபூர்வ வஸ்துகள் கூட தின்னக் கிடைக்கும். சந்தடி நின்ற பிறகு உரிமையுடன் வீடுகளுக்குள் நுழைந்து எட்டிப் பார்த்தால் மிச்சம் மீதி இருந்தால் நமக்கும் கொஞ்சம் சுண்டல் கிடைக்கும்.
1949 அப்போதே எங்கள் ஊரில் இருந்த பெரிய ஹோட்டல் அதிபர் வீட்டு கொலு ரொம்ப பிரசித்தம். அதற்குப் பையன்களும் போகலாம். கூடத்தில் தடுப்புகள் போட்டு கயிறுகள் கட்டி வரிசையாக உள்ளே போய் கொலுவைப் பார்த்து விட்டு வெளியே வருவதற்கு வழி செய்து வைத்திருப்பார்கள். ஏகப்பட்ட கொலு பொம்மைகள் வகை வகையாக பிரிக்கப்பட்டு அழகுற அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். சினிமா தியேட்டர், பாட்டுக் கச்சேரி , சுவாமி ஊர்வலம் என்பது போன்ற நிகழ்ச்சிகளை பொம்மையாக வைத்திருப்பார்கள். அவற்றில் அன்றன்று சிறு சிறு மாற்றங்கள் செய்வார்கள். கொலுவை வைத்து விட்டால் நடுவிலே அதை மாற்றி வைக்கக் கூடாது என்கிற விதி பெரும்பாலும் பின்பற்றப்பட்டு வரும் அந்தக் காலத்திலும் கூட, அந்த வீட்டில் மட்டும் தினசரி என்ன மாற்றங்கள் செய்திருக்கிறார்கள் என்பது ஒரு சுவாரசியமான விஷயமாக இருந்தது. நூற்றுக்கணக்கான பேர் தினசரி வருவதால் தாம்பூலம் சுண்டல் ரவிக்கைத் துண்டு என்பவை எல்லாம் முக்கியஸ்தர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்தது. பாக்கி எல்லாரும் போய்ப் பார்த்து வரலாம். அவ்வளவுதான்.
கொலுவுக்கு வரும் பெண்கள் பாட வேண்டும் என்பது கிட்டத்தட்ட ஒரு கட்டாயமான விதி. பாடத் தெரிகிறதோ இல்லையோ ஒவ்வொருவரும் ஏதோ ஒரு பாட்டைப் பாடியே ஆக வேண்டும். சற்று வசதியான பணக்கார வீட்டுப்பெண் பத்மாசனி நவராத்திரி ஒன்பது நாளும் ஒரே பாட்டையே எல்லா வீட்டிலும் பாடுவாள். அவளுடைய பாட்டை பிறர் கற்றுக் கொள்ளக் கூடாது என்கிற கருமித்தனம் தான் காரணம். " ஏண்டி பத்மா, வேற பாட்டுப் பாடேன். நேத்திக்கும் இதே தானே பாடினே " என்று கேட்கும் மாமிகளுக்கு " இந்த வருஷம் இதுதான் நவராத்திரி பாட்டு " என்று கறாராகச் சொல்லுவாள். இன்றைக்கு இருந்தால் பத்மாசனிக்கு 85 வயதாகி இருக்கும். எங்கள் வாடகை வீட்டு உரிமையாளர் பெண்ணுக்கு பத்மாசனியின் அந்த வருஷத்துப் பாட்டு ரொம்ப பிடித்துப்போயிற்று. " அவளை நம்ம வீட்டுக்கு வந்து பாடச் சொல்லுகிறேன். அந்தப் பாட்டை நீ கேட்டு ஒரு பேப்பரில் எனக்கு எழுதிக் கொடு " என்று என்னிடம் கேட்டுக்கொண்டாள். அப்படியே செய்து நல்ல பெயர் வாங்கிக் கொண்டேன்.
பள்ளிக்கூட புத்தகங்கள் பென்சில் ரப்பர் இவற்றை பூஜையில் வைத்து சுவாமியை வேண்டிக்கொண்டு " நன்றாகப் படிப்பு வர வேண்டும் " என்று பிரார்த்தனை செய்ததில் இருந்த பக்தி உணர்வு நாட்கள் செல்லச் செல்ல வீரியம் சற்றுக் குறைந்து விட்டதோ என்கிற வருத்தத்தை ஏற்படுத்தும்.
அறியாத பருவத்தில் ஆரவாரமான நாட்கள் அவை. நினைத்தாலே இனிக்கும் என்று தைரியமாக சொல்லக்கூடிய விசேஷ சமாச்சாரம்.
செகாவ் தன் வாழ்நாள் முழுவதும் காதலித்தார். மிக அதிக காதல் கதைகள் எழுதியவர் செகாவ். அது இரண்டு வகை. ஒன்று செகாவ் காதலித்தவர்கள். இன்னொன்று செகாவை காதலித்தவர்கள்....
எஸ் ரா பகிர்ந்து கொள்ளும் இந்த வாசிப்பனுபவம் சுவாரஸ்யமாக இருந்ததா என்று சொல்லுங்கள்.
கேள்வி : தியானம் செய்யும்போதுதான் எனக்குப் புதுசு புதுசாக என்னெவெல்லாமோ… மனதில் ஓடுகிறது. உங்களுக்கு?
கிரேசி பதில் : நானும் எனது நண்பன் ரவியும் தினமும் மயிலாப்பூர் ராமகிருஷ்ணா மடத்துக்குச் சென்று, நல்ல பிள்ளைகளாக அமர்ந்துகொண்டு கண்ணை மூடி தியானம்(!) செய்வது வழக்கம். இதில் என்ன வேடிக்கை என்றால், நண்பன் ரவி நிஜமாலுமே தியானம் செய்வான். எனக்குத் தெரிந்த ஒரே தியானம் ‘மத்யானம்’ மட்டும்தான்!
தியானம் செய்துவிட்டு திரும்பும்போது ரவி என்னிடம் ‘‘டேய் மச்சான்… தியானம் செய்றப்ப குண்டலினி சக்தி முதுகுத் தண்டுவடத்துல ஏறுற ஃபீலிங் வருதா’’ன்னு கேட்பான். நான் சிரித்து மழுப்பிவிடுவேன். இப்படித்தான் ஒரு தடவை நாங்கள் இருவரும் தியானம் செய்துகொண்டிருக்கும்போது, ரவியிடம் நான் ‘‘ரவி.... நெத்திக்கிட்ட சஹஸ்ராஹாரத்துல சூடா ஒரு ஃபீலிங் ஏற்படுதுடா…’’ என்றேன். சட்டென்று கண்ணைத் திறந்துப் பார்த்த ரவி, ‘‘முட்டாள்! பின்னாடி தள்ளி உக்காருடா. சுவாமி ஆரத்தி காட்டுறார், அதான் சுடுது… புருவம் பொசுங்கிடப் போகுது…’’ என்றான்.
பன்னிரண்டு வருஷம் வனவாசம் முடிந்துவிட்டது. பதின்மூன்றாவது வருஷத்தில் ஏதேனும் ஒரு ஊரில் யாரும் கண்டுகொள்ளாதபடி வசிக்கவேண்டும். இதற்கு அக்ஞாதவாசம் பெயர்.
பாண்டுவின் புத்திரர்களான தருமன், பீமன், அர்ஜுனன், நகுலன் சகாதேவன் ஐவரும், அதுவரை தங்களுடன் இருந்த பிராமணோத்தமர்களை எல்லாம் அனுப்பிவிட்டு. எங்கே யார் யார் எப்படி மறைந்து வாழ்வது ஆலோசிக்கலானார்கள்.
விராட தேசத்திலே போய் மறைந்து வாழத் தீர்மானித்தார்கள். கங்கன் என்ற பெயரில் சந்நியாசி வேஷத்தில் விராடனை மகிழ்ச்சியூட்டி ஆலோசனை சொல்லும்பணி ஏற்க விரும்புவதாக யுதிஷ்டிரன் சொன்னார்.
"நான் அதே விராடனுடைய அரண்மனையில் சமையல் வேலை செய்வேன்" என்று கூறினான் பீமன்.
"எனக்கு பெண்ணாக இருக்கவேண்டும் என்று ஏற்கனவே ஊர்வசியால் சாபம் ஏற்பட்டிருக்கிறது. நான் வளையலும் ரவிக்கையும் அணிந்து விராடனுடைய அந்தபுரத்தில் ஸ்திரிகளுக்கு நர்த்தனம், கானம் கற்பிப்பேன்" என்றான் அர்ஜூனன்.
"நான் விராடனுடைய குதிரை லாயத்தில் குதிரைகளை கவனித்துக் கொள்ளும் வேலையில் மறைந்திருப்பேன்" என்று நகுலன் சொன்னான்.
"நான் விராடனுடைய பசுக்களையும் மாடுகளையும் கொள்வேன்" என்றான் சகாதேவன்.
"நானும் உங்களுடனேயே அதே விராடனுடைய அரண்மனையில் சைரந்தியாக இருந்து ஸ்திரிகளுக்கு தலை பின்னியும் பாணிகம் செய்தும் இருப்பேன்" என்றாள் திரொளபதி.
இவ்வாறு பாண்டவர்கள் தீர்மானித்த பிறகு தௌம்யா அவர்களை ஆசிர்வதித்து, அவர்களுக்கு , புத்திமதிகள் சொன்னார்.
"ராஜ கிருகத்தில் வேலைக்கு அமருகிறவர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். அதிகமாகப் பேசாமல் அரசனை உபாசிக்க வேண்டும். பின்னரே யோசனை சொல்ல வேண்டும். கேளாமல் ஒருபோதும் யோசனை சொல்லப் புகலாகாது.
சமயம் பார்த்து அரசனைப் புகழ வேண்டும். அற்ப காரியமாயினும் அரசனிடத்தில் தெரிவித்தே செய்ய வேண்டும்.
அரசன் மனித உருவம் கொண்ட நெருப்பு ஆவான். அதிகம் கிட்ட நெருங்கக் கூடாது. அலட்சியம் செய்யக் கூடாது.
"எவ்வளவு நம்பிக்கையும் அதிகாரமும் பெற்ற போதிலும் எந்தச் சமயத்திலும் உடனே நீக்கப்படலாம் என்று வாயிலைப் பார்த்தவண்ணமே எப்போதும் இருக்க வேண்டும்.
அரசனுடைய அன்பைப் பெற்றுவிட்டதாக எண்ணி அவனுடைய வாகனத்திலாவது, ஆசனத்திலாவது, ரதத்திலாவது ஏறக்கூடாது.
அரசனிடம் சேவை செய்கிறவன் சோம்பலற்று மனத்தை அடக்கியவனாக இருக்க வேண்டும்.
ரகசியமாகச் சொல்லப்பட்ட வார்த்தைகளை வெளியில் பேசக்கூடாது. சேடிகளிடமிருந்து எந்தவிதமான பரிதானமும் வாங்கக்கூடாது.
"வேறொரு சேவகனைப் பார்த்துப் பொறாமைப் படக்கூடாது. அறிவுள்ளவர்களை விட்டு மூடர்களை அதிகாரத்தில் அரசன் வைப்பான். அதைக் கண்டு மனக்கசப்பு அடையக்கூடாது. அரண்மனை ஸ்திரிகள் விஷயத்தில் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். அவர்களிடம் நேசம் பாராட்டக்கூடாது.
சுவர்களில் ஓரடி உயர எழுத்துக்களில் விளம்பரங்கள் விதவிதமாக ஒன்றி வாழ்ந்தன. நிஜாம் லேடி புகையிலை , ஆர்.கே.கட்பாடிகள் -எச்சரிக்கை! புரட்சி தீ! சுவிசேஷக் கூட்டங்கள் - ஹாஜி மூசா ஜவுளிக்கடை (ஜவுளிக்கடல் ) - 30 .9 -1973 அன்று கடவுளை நம்பாதவர்கள் சுமக்கப் போகும் தீச்சட்டிகள்
மதுரையில் ஒரு சாதாரண தினம். எப்போதும் போல "பைப்" அருகே குடங்கள் மனிதர்களுக்காக வரிசைத் தவம் இருந்தன . சின்னப் பையன்கள் 'டெடன்னஸ்" கவலை இன்றி மண்ணில் விளையாடிக் கொண்டிருந்தார்கள். பாண்டியன் போக்குவரத்துக் கழக பஸ்கள் தேசியம் கலந்த டீசல் புகை பரப்பிக் கொண்டிருந்தன . விரைப்பான கால்சராய் சட்டை அணிந்த ப்ரோடீன் போதா போலீஸ்காரர்கள் இங்கிட்டும் அங்கிட்டும் செல்லும் வாகன- மானிட போக்குவரத்தைக் கட்டுப்படுத்தி கொண்டுஇருந்தார்கள் நகரின் மனித இயக்கம் ஒருவிதப் ப்ரோவ்னியான் இயக்கம் போல இருந்தது . கதர் சட்டை அணிந்த மெல்லிய அதிக நீளமில்லாத ஊர்வலம் ஓன்று, சாலையின் இடதுபுறத்தில் அரசாங்கத்தை விலைவாசி உயர்வுக்காக திட்டிக்கொண்டே ஊர்ந்தது. செருபில்லாத டப்பாக்கட்டு ஜனங்கள் மீனாட்சி கோயிலின் ஸ்தம்பித்த கோபுரங்கள் , வற்றிய வைகை , பாலம் .. மதுரை !
1965 இல் நடைபெற்ற இந்தியா பாகிஸ்தான் போரின்போது, அன்றைய பிரதம மந்திரி லால்பகதூர் சாஸ்திரி காயமடைந்த ராணுவ வீரர்களை காண ராணுவ மருத்துவமனைக்கு சென்றார். அவர் பல காயமடைந்த ராணுவ வீரர்களை பார்த்தார் ... இறுதியில் எழுந்திருக்க முடியாமல் படுத்தே இருந்த ராணுவவீரரிடம் அருகில் சென்றார். அருகில் இருந்த டாக்டர், இந்த ராணுவ வீரரின் பல உறுப்புகள் சேதம் அடைத்துள்ளது அதனால் அவர் மிகுந்த கண்காணிப்பில் உள்ளார், அவர் பிழைப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு எனக்கூறினார். சாஸ்திரி அவர்கள் மிகவும் அருகில் சென்று அவருடைய தலைக்கு அடியில் தன்னுடைய கைகளை கொடுத்து தாங்கினார். அந்த ராணுவ வீரனின் கண்களிலிருந்து கண்னீர் பெருக்கெடுத்தது. சாஸ்திரி அவர்கள் அவரோடு கீழ்வருமாறு உரையாடினார்.
சாஸ்திரி : மேஜர், நீங்கள் உலக புகழ் பெற்ற இந்திய ராணுவத்தின் மேஜர். இந்திய ராணுவம் வீரத்திற்கும் துணிச்சலுக்கும் பெயர்பெற்றது. தயவுசெய்து உறுதியாக இருங்கள் அழாதீரகள் !. நீங்கள் விரைவில் குணமடைவீர்கள்.
மேஜர்: சார், இந்த கண்ணீர் என்னுடைய வலியினாலோ காயத்தினாலோ அல்ல. இந்த கண்ணீருக்கு காரணம் நான் ஒருநாள் என்னுடைய பிரதமமந்திரியை பார்ப்பேன் அப்போது அவருக்கு ராணுவ வணக்கம் தெரிவிப்பேன் என்ற கனவுதான். இன்று உங்களை நேரில் பார்த்துவிட்டேன் ஆனால் என்னால் எழுந்து உங்களுக்கு ராணுவ வணக்கம் தெரிவிக்க முடியவில்லையே என்றவருத்தம்தான் என்னை வாட்டுகிறது.
சாஸ்திரி கண்களிலிருந்து கண்ணீர் பெருக்கெடுத்தது.
வாழ்க்கையில மிகப்பெரிய பாடத்தை இந்தநிகழ்வு எனக்கு தந்தது. வாழ்க்கையில் சில சமயங்கள் நம்மால் எதுவுமே செய்யமுடியாத தருணங்கள் வரலாம்... அவர் எவ்வளவு பெரியமனிதராக இருந்தாலும்கூட.... எனவே, வாழுங்கள் ! அர்ப்பணிப்பு உணர்வோடு வாழுங்கள் ! நமக்கு எப்போது எங்கு முடிவு என்று தெரியாது.
125 நாட்களைக் கடந்து ஓடிய சிவாஜியின் 125 வது படம். 1968 ல் வந்த உயர்ந்த மனிதன். இன்று பகிரும் P. சுசீலா இந்தப் பாடல் விருது பெட்ரா பாடல். வாலியின் பாடல்களுக்கு இசை எம் எஸ் விஸ்வநாதன்.
பாடலின் ஆரம்பத்தில் வாணிஸ்ரீ ஏன் அப்படி ஒரு நடை போடுகிறார் என்று தெரியவில்லை! விரகமோ...
நாளை இந்த நேரம் பார்த்து ஓடி வா .நிலா.. தேசிய விருது பெற்ற பாடல்.
சொல்ல நினைத்த ஆசைகள்
சொல்லாமல் போவதேன்
சொல்ல வந்த நேரத்தில்
பொல்லாத நாணம் ஏன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!