=====================================================================
முன்னுரை:
1982, நவம்பரில், எழுபது வயது கதாநாயகியாய் ஒரு முதியவரை வைத்து
நான் எழுதிய இந்த சிறுகதையை 'ஆனந்த விகடனுக்கு' நான் அனுப்பியதும் உடனேயே இக்கதையை
பிரசுரித்தார்கள். அப்போது உதவி ஆசிரியராக இருந்த திரு.பரணீதரன் [ ஓவியர் ஸ்ரீதர்]
கொடுத்த ஊக்கம் என் ஓவியங்களையும் தொடர்ந்து அனுப்ப உதவி செய்தது.
மறுபடியும் இந்தச்
சிறுகதை 'எங்கள் ப்ளாக்' வலைத்தளத்தில் வெளியாவதில் பெருமிதம் கொள்கிறேன். திரு.ஸ்ரீராம்
அவர்களுக்கு என் மனம் நிறைந்த நன்றி!!!
ஒவ்வொருத்தருக்கும் தன் மன உணர்வுகளை சமனப்படுத்த ஏதாவது ஒரு
வடிகால் தேவைப்படுகிறது. அதில் வயது வித்தியாசமிருப்பதில்லை. தனக்கு மிகவும் பிடித்தமான
ஒன்றை தியாகம் செய்து அதன் மூலம் அமைதியற்றுக்கிடந்த
தன் மன உணர்வுகளுக்கு வடிகால் தேடிக்கொள்ளும் ஒரு முதியவர் பற்றி நான் இந்தச் சிறுகதையில்
எழுதியிருக்கிறேன்.
========================================================================================
வடிகால்
மனோ சாமிநாதன்
பத்து வருடங்களுக்கு முன் ஒரு நாள்
இந்த ஊமைப்பாட்டி தட்டுமுட்டு சாமான்களுடனும் அந்த இரட்டை பீரோவுடனும்
வந்து இந்த பூட்டிய வீட்டைத்
திறந்தபோது ஊரே அதிசயமாய்ப் பாட்டியைப்
பார்த்தது. அவள் யார், அதற்கு
முன் எங்கேயிருந்தாள், குழந்தைகள், குடும்பம் உள்ளவளா-எதுவுமே
யாருக்கும் இதுவரை தெரிந்ததில்லை. கேட்டாலும்
பாட்டி பதில் எதுவுமே சொல்லாமல்
ஒரே வரியில் தான் யாருமற்ற
அனாதை என்று சொல்லிவிட்டு உள்ளே
சென்று விடுவாள்.
அந்த வீட்டில் ஊமைப்பாட்டிக்கு இருந்த ஒரே சொத்து
அடுப்பிற்கு அருகாமையில் இருக்கும் அந்த இரட்டை பீரோதான்.
அவை நிறைய தமிழும் ஆங்கிலமுமாய்
புத்தகங்கள். அவற்றில் ஏதாவதொன்றை எடுத்துப்படித்துக்கொண்டு அடிக்கடி வெளியுலகை மறந்து போவாள் பாட்டி.
இட்லி சுடும் நேரங்களைத் தவிர
பெரும்பாலும் இந்த சாய்வு நாற்காலிதான்
அவள் உலகம்.
இட்லி வாங்க வருபவர்களிடம் எதுவும்
பேசாது, சிரிக்காது, மெளனமாகவே காசை வாங்கிக் கொண்டு
உள்ளே போய், தையல் இலையில்
வைத்துக்கட்டிக் கொண்டு வந்து தருவாள்.
சுத்தமான மல்லிகைப்பூப்போன்ற அந்த இட்லி, கடந்த
பத்து வருடங்களாய் தரம் மாறாத ருசியுடன்
இருந்ததால், நல்ல பெயருடனும் மதிப்புடனும்
பாட்டியின் இட்லி வியாபாரம் தொடர்ந்து
கொண்டிருந்தது.
பாட்டியின்
கம்பீரமான-அமைதியான சிரிக்காத முகமும்-இந்த எழுபது
வயதிலும்கூட முழுவதும் நரைக்காத தலைமுடியும் அவளை மிகவும் மரியாதைக்குரியவளாக
வாழச் செய்து கொண்டிருந்தன. எப்போதோ-எந்த குழந்தையோ வைத்த
‘ஊமைப்பாட்டி’ என்ற பெயரும் நிலைத்துப்போயிற்று.
அவளும் அதை மெளனமாகவே ஏற்றுக்கொண்டாள்.
ஆனால்..
.. ..
கடந்த ஒரு வாரமாக ஊமைப்பாட்டியின்
வீடே மாறியிருந்தது. அந்த வீட்டின் நடு
மையத்தில் தொங்கிக்கொண்டிருந்த துணித்தூளியில் அன்றலர்ந்த மலர் போன்ற ஒரு
குழந்தை உறங்க ஆரம்பித்திருந்தது. பிறந்து
சில மாதங்களே ஆகியிருந்த அந்தக் குழந்தைக்காக பாட்டிக்குப்
படிக்கும் நேரமும் குறைந்து போய்,
கொல்லைப்புறமிருந்த கிணற்றிலிருந்து நீரையிறைத்து பிள்ளைத்துணிகளை அலசும் வேலைகள் தினமும்
பல முறை ஏற்பட்டன.
அந்தக்
குழந்தை யாரென்ற கேள்விக்கு ஊமைப்பாட்டி
ஒரே வரியில் பதிலளித்தாள்.
“ என் பெண் வயிற்றுப் பேத்தி!”
உண்மையில்
அந்தக் குழந்தையை ஒரு நாள் ஊரையடுத்திருக்கும்
மாரியம்மன் கோவிலுக்குப் போகும் வழியிலுள்ள இலுப்பைத்தோப்பில்,
அந்தி வேளையில் ஊமைப்பாட்டி கண்டெடுத்தாள். அதுவும் மனதைத் தாக்கும்
சூழ்நிலையில். பக்கத்திலுள்ள மரத்தில் நாகல் பழ நிறத்தில்
கிழிந்த அழுக்கு ஆடையில் எண்ணெய்
காணாத முடியுடன் ஒரு பெண் கயிற்றில்
தொங்கிக் கொண்டிருக்க.. .., வெளியுலகின் அவலங்களோ, அசிங்கங்களோ தெரியாத அந்தக் குழந்தை
அழுது கொண்டிருப்பதைப்பார்த்ததும் பல வருடங்களுக்குப்பிறகு அவள் மனது
கலங்கிப்போயிற்று. இறந்ததன் மூலம்
தன் வாழ்வின் எல்லா பிரச்சினைகளிலிருந்தும் விடிவு கண்ட
அந்தப்பெண், தன் குழந்தைக்கு மட்டும்
எந்த விடிவையும் காண்பிக்காமல் ஏன் தனியே விட்டுச்
சென்றாள்?
தாயின்
நிறத்துக்குச் சம்பந்தமே இல்லாமல்-ரோஜா நிறத்துடன் அவளை
உற்று நோக்கிய அந்தக் குழந்தையின்
முகம் அவளின் எழுபது வருட
வாழ்க்கையின் வெறுமையையும் நெஞ்சத்துத் துன்பங்களையும் ஒரே நிமிடத்தில் குபீரென
நினைவுக்குக் கொண்டு வந்தது. உறுதியால்
மடிந்த உதடுகளுடன் அந்தக் குழந்தையைக் கையிலெடுத்தாள்.
மலடி என்று எத்தனையோ பேர்
சுட்ட ஆறாத ரணங்களுக்கு அந்தக்
குழந்தையின் மென்மை இதமாக இருந்தது.
‘ எங்கோ
குப்பை மேட்டில்-அதையாகவோ-முறையற்றோ-எந் த ஜாதியிலோ பிறந்து-சமுதாயத்தில் எள்ளி
நகையாடும் நிலையில் விழவிருந்த ஒரு குழந்தையை-அல்லது
கத்திக் கத்தியே கவனிப்பாரற்று சாகவிருந்த
இந்தக் குழந்தையை நான் காப்பாற்றுகிறேன்’
அவள் நினைவுகள் உன்னதமானவை. கூடவே அவை அன்பில்லாத
கொடுமையினாலும்-யாருமற்ற வரட்சியினாலும் ஏற்பட்டவை. எழுபது வருடங்களுக்குப் பின்
புதியதாக ஒரு துணை-அதுவும்
இந்த மண்ணின் வஞ்சகமும் சூதும்
தெரியாத பச்சிளம் மழலையொன்று கிடைத்ததும் அந்த ஒரு நிமிடத்தில்
பாட்டியின் வாழ்வே மாறிப்போனது.
மணி பத்தாகியிருந்தது. யாரோ
வெளியில் அழைக்கும் குரல் கேட்டதும் கதவைத்
திறந்த பாட்டி ஆச்சரியப்பட்டாள்.
இரு வெள்ளைக்காரர்கள்-ஆணும் பெண்ணுமாய் கெளரவத் தோற்றத்துடன் நின்று
கொண்டிருந்தார்கள்.
“ ப்ளீஸ்..பி ஸீட்டட்”
அவர்கள்
அதிசயித்துப்போனவர்களாய் அங்கிருந்த கல் திண்ணையில் அமர்ந்தார்கள்.
தன்னை ஜார்ஜ் என்றும் தன்
மனைவியை ரோஸரினா என்றும் அறிமுகப்படுத்திக்கொண்டவர்
தொடர்ந்து சொன்னார்.
“ நாங்கள்
இந்த ஊர் மலையிலுள்ள கோவிலைப்பார்க்க
வந்தோம். தாமதமாக வந்ததால் காலையில்
சாப்பிட எதுவும் கிடைக்கவில்லை. விசாரித்தபோது
இங்கு இட்லி கிடைக்கும் என்று
சொன்னார்கள்”
பாட்டி
உள்ளே சென்று இட்லிகளும் தேங்காய்ச்
சட்னியும் தையல் இலைகளுடன் கொண்டு
வந்தாள். இருவரும் ரசித்து சாப்பிட்டு முடித்து
கை கழுவிக்கொண்டிருக்கையில் திடீரென குழந்தையின் அழுகுரல்
கேட்டதும் ரோஸரினா சட்டென்று திரும்பிப்
பார்த்தாள். பாட்டி குழந்தையை சமாதானப்படுத்தியவாறே
தூக்கி வந்தாள்.
“இது யார் பாட்டி?”
“ இறந்து
போன என் பெண்ணின் குழந்தை”
“பாட்டி!
இந்தக்குழந்தையை இந்த வயதில் உங்களால்
வளர்க்க முடியுமா? என்னிடம் கொடுத்து விடுங்களேன்.”
“என்னது?”
கேட்ட மாத்திரத்திலேயே மனது பதறிப் போயிற்று.
கையிலிருந்த வைரங்களை யாரோ தட்டிவிட்டது போல
சிந்தனை குழம்பிப்போனது.
“ இது விளையாட்டில்லை பாட்டி. யாசகம். ஒரு
குழந்தையைப் பெற முடியாதவளின் ஆசை.
ஒரு விபத்தில் இவளுக்குத் தாய்மையின் தகுதி போய் விட்டது.
ஒருவருக்கு மற்றவர்தான் துணை என்று அவளைப்
பழக்கினேன்.
ஆனால் அவளுடைய ஏக்கத்தை
என்னால் போக்க முடியவில்லை. ஏதாவது
ஒரு குழந்தையை-அதுவும் இந்தியாவில்-தத்தெடுத்து
வளர்க்கலாம் என்ற முடிவு செய்த
பிறகு நாங்கள் முதன் முதலாக
நுழைந்த ஊர் இதுதான். இந்தக்
குழந்தையைப் பார்த்த பிறகு என்
மனைவி கேட்டது சரிதானோ எனக்குத்
தோன்றுகிறது” என்றார் ஜார்ஜ்.
“ இதற்குப்பெயர்
யாசகம் இல்லை. இல்லாததைக் கேட்டு
வாங்குவது என்பது யாசகமாய் இருக்கலாம்.
ஆனால் மற்றவருடைய குழந்தையை தன் வயிற்றில் பிறந்ததாக
நினைத்து வளர்க்க, அதற்கு கல்வி, மற்ற
எல்லா செல்வங்களையும் கொடுத்து உயர் நிலையில் வைக்க
மனதில் ரொம்பவும் கருணை-பெருந்தன்மை வேண்டும்”
பாட்டியின்
அழகான ஆங்கிலத்தில் அதிசயித்துப்போய் ரோஸரீனா கேட்டாள்.
“எப்படி
பாட்டி இத்தனை அழகாக உங்களால்
ஆங்கிலம் பேச முடிகிறது?”
“அதுவா? நான் சின்னப்
பெண்ணாக இருந்தபோதே கற்றுக்கொண்டது.. .. ..”
பாட்டியின்
முகம்-எதிலோ-எந்த நினைவிலோ
மெய்மறப்பது போலிருந்தது.
பாட்டிக்கு
தன் சிறு வயதுப்பெயர் ஞாபகத்திற்கு
வந்தது.
குமுதம்!
ஓர் ஆசிரியரின் மகளாய்ப் பிறந்ததால் இயற்கையாகவே அறிவை வளர்த்துக்கொள்ளும் ஆர்வம்
அவளுள் நிரம்பியிருந்தது. தந்தை தன் மாணவர்களுக்காக
திண்ணையில் ஆங்கிலம் கற்பித்தபோது இவளும் உட்புறத்தில் அமர்ந்தவாறே
நோட்டில் எழுதிப்படித்துக் கற்றாள்.
அவ்வளவு
உற்சாகம்.. ஆசை..அன்பு..கருணை
என வாழ்க்கையில் எத்தனையோ உணர்ச்சிகளை வைத்திருந்தவள், பதினைந்து வயதில் திருமணம் என்ற
ஒன்று ஆனதுமே மாறிப்போனாள்.
கணவனிடம்
தோழமையில்லை. அவனுடைய தாயிடம் தாயின்
பரிவில்லை. மற்றவர்களிடமோ உண்மையான அன்பில்லை. அவளின் கருணைக்கோ, பரிவிற்கோ
அங்கு எந்தப்பயனுமில்லாமல், வெகுளித்தனமான மனசில் நிறைய அடிகள்
விழ விழ அவள் மாறிப்போனாள்.
திரும்பவும் பெற்றோரைப் புகலிடமாக நினைத்துப்போக அவர்கள் உயிருடன் இல்லாத
நிலையில், வெளியே சென்று பிழைக்கும்
அளவிற்குக் கல்வித்தகுதியுமில்லை என்ற நிதர்சனத்தில்
அவள் முற்றிலும் ஜடமாகிப்போனாள். மலடி என்ற பட்டம்
அவள் உள்ளத்தைக் கிழித்துப்போட்ட
பிறகு, எதற்காவது சிரிப்பு என்று வந்தால்கூட அதைத்
தொண்டையிலேயே நிறுத்தி விடும் அளவு
அவள் பழகிப்போனாள்.
அவளுடைய
பதினைந்து வயதிலிருந்து அறுபது வயது வரை
அனுபவித்த சிறைவாசம் அவளுடைய கணவனின் இறப்பென்ற
முடிவில் ஒரு நாள் நின்று
போனது. அத்துடன் அவள் கணவனால் ஏற்பட்டிருந்த
கடன்களுக்கு அந்தப் பெரிய வீடும்
அதன் சொத்துக்களும் சரியாகப்போனதும் அவள் அமைதியாக பெற்றோர்
அவளுக்கென விட்டுச் சென்ற இந்த பழைய
வீட்டிற்கு வந்து சேர்ந்தாள்.
அவளுக்கு
தன் வாழ்க்கையை முடித்துக்கொள்ளப் பிடிக்கவில்லை. மூச்சு முட்ட அனுபவித்த
சிறை வாசம் நின்று போன
மகிழ்வில், இந்த விடுதலையை-அதன்
அமைதியையாவது அவள் எவ்வளவு நாட்கள்
முடியுமோ அவ்வளவு நாட்கள் அனுபவிக்கத்
தீர்மானித்திருந்தாள்.
“ பாட்டி!”
ஒரு நிமிடத்தில் பழைய உலகிற்குப்போனவள் மறுபடியும்
அதே வேகத்தில் நிகழ்காலத்திற்கு வந்தாள்.
“ ஒண்ணுமில்லை..
.. பழைய ஞாபகங்கள்.. ”
அவர்கள்
விடை பெற எழுந்தார்கள்.
“ பாட்டி!
குழந்தையைப்பற்றி .. ..
“ இல்லையப்பா! இத்தனை நாட்கள் எந்த
பந்தமுமில்லாது வாழ்ந்து விட்டேன். இந்தப் புதிய உறவு
இந்த வயதில்கூட எனக்குப் புத்துணர்ச்சியைக் கொடுக்கிறது!”
“ ஓ.கே.பாட்டி!
நாங்கள் கிளம்புகிறோம், இங்கு மலை மேலுள்ள
கோவிலுக்கு இன்றைக்கு மாலை சென்று விட்டு
அப்படியே ஊருக்குக் கிளம்புகிறோம். ஒரு வேளை உங்கள்
மனசு மாறினால் .. .. எங்களை நீங்கள் அங்கே
சந்திக்கலாம்.”
அவர்கள்
விடை பெற்றுப்போய் ரொம்ப நேரமாகியும் அவள்
பேசாமலேயே அந்த சாய்வு நாற்காலியிலேயே
சாய்ந்து கிடந்தாள்.
‘இந்தப்
புதிய உறவு எனக்குப் புத்துணர்ச்சியைக்
கொடுத்திருப்பது உண்மைதான். ஆனால் எழுபது வயதாயிருக்கும்
என்னால் இந்தக் குழந்தையின் வாழ்க்கையில்
புத்துணர்ச்சியைத் தர முடியுமா? நல்ல
கல்வியைத் தர முடியுமா? உயர்ந்த
நிலைக்குக் கொண்டு வர முடியுமா?
யாருடைய அன்பாவது வேண்டும் என்ற தவிப்பான வயது
போய், யாருடைய அன்பும் தேவையில்லை
என்ற முதிர்ச்சியான வயதில் இருக்கும் எனக்கு
எதற்காக ஒரு பந்தம்? இந்த
பந்தத்தினால் ஒரு குழந்தையின் வாழ்க்கையை-அதன் எதிர்காலத்தையல்லவா அழிக்கிறேன்?”
மனம் கனக்க ஏதேதோ குற்ற
உணர்ச்சியால் சிந்தனை குழம்பியது. கையிலிருந்த
புத்தகத்தின் பக்கங்கள் காற்றில் அலை பாய்ந்தன. பாரதியின் பாடல்களை அனிச்சையாகப் புரட்டிக்கொண்டே வந்தவளின் கண்கள் திடீரென அனிச்சையாக
ஓரிடத்தில் நிலைத்தன.
“ மரணமு
மஞ்சேன் நோய்களை அஞ்சேன் மாரவெம்
பேயினை அஞ்சேன்
இரணமும் சுகமும் பழியும்-
நற்புகழ் யாவுமோர் பொருளெனக்கொள்ளேன்..
.. .. .. . . . . . ..
. . . . .. .. .. .. .. . . . . . .
மண்ணிலார்
வந்து வாழ்த்தினுஞ் செறினும் மயங்கிலேன், மனமென்னும் பெயர்கொள் கண்ணிலாப்பேயை யெள்ளுவேன், இனியெக்காலுமே.. .. அமைதியிலிருப்பேன் .. .. ’
அவள் மெதுவாகக் கண்களை
மூடினாள். மூடிய கண்களிலிருந்து கண்ணீர்
வழிய ஆரம்பித்தது. கூடவே மனதில் ரொம்ப
நாட்களாய் அடைத்துக்கொண்டிருந்த ஏதோ ஒன்று விலகி
விட்டதைப்போலிருந்தது. இதுவரை அவளறியாத ஓர்
அமைதி மனதில் குடி கொண்டது.
மாலைக்கதிரவனின் ஒளிக்கீற்றுக்களிடையே பாட்டி மெதுவாகப் படி
ஏறினாள். இருபது படிகள் ஏறுவதற்குள்ளாகவே
மூச்சு இரைக்கவே, மெதுவாக படிகளுக்கிடையே இருந்த
அந்த சிறு மண்டபத்தில் குழந்தையோடு
அமர்ந்து கொண்டாள்.
“ பாட்டி”!
நிமிர்ந்தவளை
அவர்கள் கை குவித்து வணங்கினர்.
“ என்ன
பாட்டி.. ..மனசு மாறி விட்டதா?”
அந்தப்
பெண்ணின் மகிழ்ச்சிப் பரவசத்தைப்பார்த்து மனம் கனிந்தவாறே
ஊமைப்பாட்டி கூறினாள்.
“ ஆமாம்மா!
மனசு மாறி விட்டது. என்
காலம் முடியப்போகிற நேரத்தில் பந்தம் எதுவும் வேண்டாம்
என்று தோன்றியது. என் வேண்டுகோள் எல்லாம்
இந்தக் குழந்தையை நீங்கள் நன்றாக படிக்க
வைத்து, சமூகத்தில் ஒரு நல்ல உயர்
நிலைக்குக் கொண்டு வர வேண்டும்.
அவ்வளவுதான்.”
பாட்டி
மெதுவாகக் குழந்தையைக் கொடுத்தாள்.
“பாட்டி!
இந்தக் குழந்தைக்கு ஏதாவது பணம்..”
“ இந்தப்பணமென்பது என்னிடம் இருந்திருந்தால் இந்தக் குழந்தையை உங்களிடம்
தந்திருக்க மாட்டேன்..”
அவர்கள்
பல முறை நன்றி கூறி,
கண்கள் கலங்கப் புறப்பட்டுச் சென்ற
பிறகும்.. போய் வெகு நேரமாகியும்
பாட்டி சிவந்த வானத்தையே பார்த்துக்
கொண்டிருந்தாள்.
ரொம்ப நாட்களுக்குப் பிறகு மனம் நிறைந்து,
திடீரெனெ ஏற்பட்ட ஒரு பந்தத்தை
‘தன்னைப்போன்ற’ இன்னொருத்திக்கு அர்ப்பணித்தபோது.. ..இத்தனை நாட்கள் செயலற்று,
வழியற்றுக் கிடந்த அவளின் கருணைக்கும்
அன்புக்கும் இந்த வடிகால் கிடைத்த
நிறைவில் அவள் மனது மகிழ்ச்சியால்
பொங்கியது. சுத்தமாக பந்தங்களையும் பாசங்களையும் அறுத்து விட்டு, யாருக்கும்
பயப்படட் தேவையில்லாமல்.. .. சுதந்திரமாக, நிச்சலனமாக.. .. தன் மனதுக்குப் பிடித்தமான
ஒன்றை மற்றொருவருடைய மகிழ்ச்சிக்காக அர்ப்பணிப்பது எவ்வளவு பெரிய
விஷயம்? எழுபது வருட ரணங்களும்
துன்பங்களும் இந்த சாதனையில் தூசியாய்
மறைய ஆரம்பிக்க, கிழவி சிரித்தவாறே இறங்க
ஆரம்பித்தாள்.
கீழே விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்கள் “டேய்! ஊமைப்பாட்டி சிரிக்கிறாங்கடா!”
என்று ஆச்சரியத்துடன் கூச்சலிட்டார்கள்!!
