=====================================================================
முன்னுரை:
1982, நவம்பரில், எழுபது வயது கதாநாயகியாய் ஒரு முதியவரை வைத்து
நான் எழுதிய இந்த சிறுகதையை 'ஆனந்த விகடனுக்கு' நான் அனுப்பியதும் உடனேயே இக்கதையை
பிரசுரித்தார்கள். அப்போது உதவி ஆசிரியராக இருந்த திரு.பரணீதரன் [ ஓவியர் ஸ்ரீதர்]
கொடுத்த ஊக்கம் என் ஓவியங்களையும் தொடர்ந்து அனுப்ப உதவி செய்தது.
மறுபடியும் இந்தச்
சிறுகதை 'எங்கள் ப்ளாக்' வலைத்தளத்தில் வெளியாவதில் பெருமிதம் கொள்கிறேன். திரு.ஸ்ரீராம்
அவர்களுக்கு என் மனம் நிறைந்த நன்றி!!!
ஒவ்வொருத்தருக்கும் தன் மன உணர்வுகளை சமனப்படுத்த ஏதாவது ஒரு
வடிகால் தேவைப்படுகிறது. அதில் வயது வித்தியாசமிருப்பதில்லை. தனக்கு மிகவும் பிடித்தமான
ஒன்றை தியாகம் செய்து அதன் மூலம் அமைதியற்றுக்கிடந்த
தன் மன உணர்வுகளுக்கு வடிகால் தேடிக்கொள்ளும் ஒரு முதியவர் பற்றி நான் இந்தச் சிறுகதையில்
எழுதியிருக்கிறேன்.
========================================================================================
வடிகால்
மனோ சாமிநாதன்
பத்து வருடங்களுக்கு முன் ஒரு நாள்
இந்த ஊமைப்பாட்டி தட்டுமுட்டு சாமான்களுடனும் அந்த இரட்டை பீரோவுடனும்
வந்து இந்த பூட்டிய வீட்டைத்
திறந்தபோது ஊரே அதிசயமாய்ப் பாட்டியைப்
பார்த்தது. அவள் யார், அதற்கு
முன் எங்கேயிருந்தாள், குழந்தைகள், குடும்பம் உள்ளவளா-எதுவுமே
யாருக்கும் இதுவரை தெரிந்ததில்லை. கேட்டாலும்
பாட்டி பதில் எதுவுமே சொல்லாமல்
ஒரே வரியில் தான் யாருமற்ற
அனாதை என்று சொல்லிவிட்டு உள்ளே
சென்று விடுவாள்.
அந்த வீட்டில் ஊமைப்பாட்டிக்கு இருந்த ஒரே சொத்து
அடுப்பிற்கு அருகாமையில் இருக்கும் அந்த இரட்டை பீரோதான்.
அவை நிறைய தமிழும் ஆங்கிலமுமாய்
புத்தகங்கள். அவற்றில் ஏதாவதொன்றை எடுத்துப்படித்துக்கொண்டு அடிக்கடி வெளியுலகை மறந்து போவாள் பாட்டி.
இட்லி சுடும் நேரங்களைத் தவிர
பெரும்பாலும் இந்த சாய்வு நாற்காலிதான்
அவள் உலகம்.
இட்லி வாங்க வருபவர்களிடம் எதுவும்
பேசாது, சிரிக்காது, மெளனமாகவே காசை வாங்கிக் கொண்டு
உள்ளே போய், தையல் இலையில்
வைத்துக்கட்டிக் கொண்டு வந்து தருவாள்.
சுத்தமான மல்லிகைப்பூப்போன்ற அந்த இட்லி, கடந்த
பத்து வருடங்களாய் தரம் மாறாத ருசியுடன்
இருந்ததால், நல்ல பெயருடனும் மதிப்புடனும்
பாட்டியின் இட்லி வியாபாரம் தொடர்ந்து
கொண்டிருந்தது.
பாட்டியின்
கம்பீரமான-அமைதியான சிரிக்காத முகமும்-இந்த எழுபது
வயதிலும்கூட முழுவதும் நரைக்காத தலைமுடியும் அவளை மிகவும் மரியாதைக்குரியவளாக
வாழச் செய்து கொண்டிருந்தன. எப்போதோ-எந்த குழந்தையோ வைத்த
‘ஊமைப்பாட்டி’ என்ற பெயரும் நிலைத்துப்போயிற்று.
அவளும் அதை மெளனமாகவே ஏற்றுக்கொண்டாள்.
ஆனால்..
.. ..
கடந்த ஒரு வாரமாக ஊமைப்பாட்டியின்
வீடே மாறியிருந்தது. அந்த வீட்டின் நடு
மையத்தில் தொங்கிக்கொண்டிருந்த துணித்தூளியில் அன்றலர்ந்த மலர் போன்ற ஒரு
குழந்தை உறங்க ஆரம்பித்திருந்தது. பிறந்து
சில மாதங்களே ஆகியிருந்த அந்தக் குழந்தைக்காக பாட்டிக்குப்
படிக்கும் நேரமும் குறைந்து போய்,
கொல்லைப்புறமிருந்த கிணற்றிலிருந்து நீரையிறைத்து பிள்ளைத்துணிகளை அலசும் வேலைகள் தினமும்
பல முறை ஏற்பட்டன.
அந்தக்
குழந்தை யாரென்ற கேள்விக்கு ஊமைப்பாட்டி
ஒரே வரியில் பதிலளித்தாள்.
“ என் பெண் வயிற்றுப் பேத்தி!”
உண்மையில்
அந்தக் குழந்தையை ஒரு நாள் ஊரையடுத்திருக்கும்
மாரியம்மன் கோவிலுக்குப் போகும் வழியிலுள்ள இலுப்பைத்தோப்பில்,
அந்தி வேளையில் ஊமைப்பாட்டி கண்டெடுத்தாள். அதுவும் மனதைத் தாக்கும்
சூழ்நிலையில். பக்கத்திலுள்ள மரத்தில் நாகல் பழ நிறத்தில்
கிழிந்த அழுக்கு ஆடையில் எண்ணெய்
காணாத முடியுடன் ஒரு பெண் கயிற்றில்
தொங்கிக் கொண்டிருக்க.. .., வெளியுலகின் அவலங்களோ, அசிங்கங்களோ தெரியாத அந்தக் குழந்தை
அழுது கொண்டிருப்பதைப்பார்த்ததும் பல வருடங்களுக்குப்பிறகு அவள் மனது
கலங்கிப்போயிற்று. இறந்ததன் மூலம்
தன் வாழ்வின் எல்லா பிரச்சினைகளிலிருந்தும் விடிவு கண்ட
அந்தப்பெண், தன் குழந்தைக்கு மட்டும்
எந்த விடிவையும் காண்பிக்காமல் ஏன் தனியே விட்டுச்
சென்றாள்?
தாயின்
நிறத்துக்குச் சம்பந்தமே இல்லாமல்-ரோஜா நிறத்துடன் அவளை
உற்று நோக்கிய அந்தக் குழந்தையின்
முகம் அவளின் எழுபது வருட
வாழ்க்கையின் வெறுமையையும் நெஞ்சத்துத் துன்பங்களையும் ஒரே நிமிடத்தில் குபீரென
நினைவுக்குக் கொண்டு வந்தது. உறுதியால்
மடிந்த உதடுகளுடன் அந்தக் குழந்தையைக் கையிலெடுத்தாள்.
மலடி என்று எத்தனையோ பேர்
சுட்ட ஆறாத ரணங்களுக்கு அந்தக்
குழந்தையின் மென்மை இதமாக இருந்தது.
‘ எங்கோ
குப்பை மேட்டில்-அதையாகவோ-முறையற்றோ-எந் த ஜாதியிலோ பிறந்து-சமுதாயத்தில் எள்ளி
நகையாடும் நிலையில் விழவிருந்த ஒரு குழந்தையை-அல்லது
கத்திக் கத்தியே கவனிப்பாரற்று சாகவிருந்த
இந்தக் குழந்தையை நான் காப்பாற்றுகிறேன்’
அவள் நினைவுகள் உன்னதமானவை. கூடவே அவை அன்பில்லாத
கொடுமையினாலும்-யாருமற்ற வரட்சியினாலும் ஏற்பட்டவை. எழுபது வருடங்களுக்குப் பின்
புதியதாக ஒரு துணை-அதுவும்
இந்த மண்ணின் வஞ்சகமும் சூதும்
தெரியாத பச்சிளம் மழலையொன்று கிடைத்ததும் அந்த ஒரு நிமிடத்தில்
பாட்டியின் வாழ்வே மாறிப்போனது.
மணி பத்தாகியிருந்தது. யாரோ
வெளியில் அழைக்கும் குரல் கேட்டதும் கதவைத்
திறந்த பாட்டி ஆச்சரியப்பட்டாள்.
இரு வெள்ளைக்காரர்கள்-ஆணும் பெண்ணுமாய் கெளரவத் தோற்றத்துடன் நின்று
கொண்டிருந்தார்கள்.
“ ப்ளீஸ்..பி ஸீட்டட்”
அவர்கள்
அதிசயித்துப்போனவர்களாய் அங்கிருந்த கல் திண்ணையில் அமர்ந்தார்கள்.
தன்னை ஜார்ஜ் என்றும் தன்
மனைவியை ரோஸரினா என்றும் அறிமுகப்படுத்திக்கொண்டவர்
தொடர்ந்து சொன்னார்.
“ நாங்கள்
இந்த ஊர் மலையிலுள்ள கோவிலைப்பார்க்க
வந்தோம். தாமதமாக வந்ததால் காலையில்
சாப்பிட எதுவும் கிடைக்கவில்லை. விசாரித்தபோது
இங்கு இட்லி கிடைக்கும் என்று
சொன்னார்கள்”
பாட்டி
உள்ளே சென்று இட்லிகளும் தேங்காய்ச்
சட்னியும் தையல் இலைகளுடன் கொண்டு
வந்தாள். இருவரும் ரசித்து சாப்பிட்டு முடித்து
கை கழுவிக்கொண்டிருக்கையில் திடீரென குழந்தையின் அழுகுரல்
கேட்டதும் ரோஸரினா சட்டென்று திரும்பிப்
பார்த்தாள். பாட்டி குழந்தையை சமாதானப்படுத்தியவாறே
தூக்கி வந்தாள்.
“இது யார் பாட்டி?”
“ இறந்து
போன என் பெண்ணின் குழந்தை”
“பாட்டி!
இந்தக்குழந்தையை இந்த வயதில் உங்களால்
வளர்க்க முடியுமா? என்னிடம் கொடுத்து விடுங்களேன்.”
“என்னது?”
கேட்ட மாத்திரத்திலேயே மனது பதறிப் போயிற்று.
கையிலிருந்த வைரங்களை யாரோ தட்டிவிட்டது போல
சிந்தனை குழம்பிப்போனது.
“ இது விளையாட்டில்லை பாட்டி. யாசகம். ஒரு
குழந்தையைப் பெற முடியாதவளின் ஆசை.
ஒரு விபத்தில் இவளுக்குத் தாய்மையின் தகுதி போய் விட்டது.
ஒருவருக்கு மற்றவர்தான் துணை என்று அவளைப்
பழக்கினேன்.
ஆனால் அவளுடைய ஏக்கத்தை
என்னால் போக்க முடியவில்லை. ஏதாவது
ஒரு குழந்தையை-அதுவும் இந்தியாவில்-தத்தெடுத்து
வளர்க்கலாம் என்ற முடிவு செய்த
பிறகு நாங்கள் முதன் முதலாக
நுழைந்த ஊர் இதுதான். இந்தக்
குழந்தையைப் பார்த்த பிறகு என்
மனைவி கேட்டது சரிதானோ எனக்குத்
தோன்றுகிறது” என்றார் ஜார்ஜ்.
“ இதற்குப்பெயர்
யாசகம் இல்லை. இல்லாததைக் கேட்டு
வாங்குவது என்பது யாசகமாய் இருக்கலாம்.
ஆனால் மற்றவருடைய குழந்தையை தன் வயிற்றில் பிறந்ததாக
நினைத்து வளர்க்க, அதற்கு கல்வி, மற்ற
எல்லா செல்வங்களையும் கொடுத்து உயர் நிலையில் வைக்க
மனதில் ரொம்பவும் கருணை-பெருந்தன்மை வேண்டும்”
பாட்டியின்
அழகான ஆங்கிலத்தில் அதிசயித்துப்போய் ரோஸரீனா கேட்டாள்.
“எப்படி
பாட்டி இத்தனை அழகாக உங்களால்
ஆங்கிலம் பேச முடிகிறது?”
“அதுவா? நான் சின்னப்
பெண்ணாக இருந்தபோதே கற்றுக்கொண்டது.. .. ..”
பாட்டியின்
முகம்-எதிலோ-எந்த நினைவிலோ
மெய்மறப்பது போலிருந்தது.
பாட்டிக்கு
தன் சிறு வயதுப்பெயர் ஞாபகத்திற்கு
வந்தது.
குமுதம்!
ஓர் ஆசிரியரின் மகளாய்ப் பிறந்ததால் இயற்கையாகவே அறிவை வளர்த்துக்கொள்ளும் ஆர்வம்
அவளுள் நிரம்பியிருந்தது. தந்தை தன் மாணவர்களுக்காக
திண்ணையில் ஆங்கிலம் கற்பித்தபோது இவளும் உட்புறத்தில் அமர்ந்தவாறே
நோட்டில் எழுதிப்படித்துக் கற்றாள்.
அவ்வளவு
உற்சாகம்.. ஆசை..அன்பு..கருணை
என வாழ்க்கையில் எத்தனையோ உணர்ச்சிகளை வைத்திருந்தவள், பதினைந்து வயதில் திருமணம் என்ற
ஒன்று ஆனதுமே மாறிப்போனாள்.
கணவனிடம்
தோழமையில்லை. அவனுடைய தாயிடம் தாயின்
பரிவில்லை. மற்றவர்களிடமோ உண்மையான அன்பில்லை. அவளின் கருணைக்கோ, பரிவிற்கோ
அங்கு எந்தப்பயனுமில்லாமல், வெகுளித்தனமான மனசில் நிறைய அடிகள்
விழ விழ அவள் மாறிப்போனாள்.
திரும்பவும் பெற்றோரைப் புகலிடமாக நினைத்துப்போக அவர்கள் உயிருடன் இல்லாத
நிலையில், வெளியே சென்று பிழைக்கும்
அளவிற்குக் கல்வித்தகுதியுமில்லை என்ற நிதர்சனத்தில்
அவள் முற்றிலும் ஜடமாகிப்போனாள். மலடி என்ற பட்டம்
அவள் உள்ளத்தைக் கிழித்துப்போட்ட
பிறகு, எதற்காவது சிரிப்பு என்று வந்தால்கூட அதைத்
தொண்டையிலேயே நிறுத்தி விடும் அளவு
அவள் பழகிப்போனாள்.
அவளுடைய
பதினைந்து வயதிலிருந்து அறுபது வயது வரை
அனுபவித்த சிறைவாசம் அவளுடைய கணவனின் இறப்பென்ற
முடிவில் ஒரு நாள் நின்று
போனது. அத்துடன் அவள் கணவனால் ஏற்பட்டிருந்த
கடன்களுக்கு அந்தப் பெரிய வீடும்
அதன் சொத்துக்களும் சரியாகப்போனதும் அவள் அமைதியாக பெற்றோர்
அவளுக்கென விட்டுச் சென்ற இந்த பழைய
வீட்டிற்கு வந்து சேர்ந்தாள்.
அவளுக்கு
தன் வாழ்க்கையை முடித்துக்கொள்ளப் பிடிக்கவில்லை. மூச்சு முட்ட அனுபவித்த
சிறை வாசம் நின்று போன
மகிழ்வில், இந்த விடுதலையை-அதன்
அமைதியையாவது அவள் எவ்வளவு நாட்கள்
முடியுமோ அவ்வளவு நாட்கள் அனுபவிக்கத்
தீர்மானித்திருந்தாள்.
“ பாட்டி!”
ஒரு நிமிடத்தில் பழைய உலகிற்குப்போனவள் மறுபடியும்
அதே வேகத்தில் நிகழ்காலத்திற்கு வந்தாள்.
“ ஒண்ணுமில்லை..
.. பழைய ஞாபகங்கள்.. ”
அவர்கள்
விடை பெற எழுந்தார்கள்.
“ பாட்டி!
குழந்தையைப்பற்றி .. ..
“ இல்லையப்பா! இத்தனை நாட்கள் எந்த
பந்தமுமில்லாது வாழ்ந்து விட்டேன். இந்தப் புதிய உறவு
இந்த வயதில்கூட எனக்குப் புத்துணர்ச்சியைக் கொடுக்கிறது!”
“ ஓ.கே.பாட்டி!
நாங்கள் கிளம்புகிறோம், இங்கு மலை மேலுள்ள
கோவிலுக்கு இன்றைக்கு மாலை சென்று விட்டு
அப்படியே ஊருக்குக் கிளம்புகிறோம். ஒரு வேளை உங்கள்
மனசு மாறினால் .. .. எங்களை நீங்கள் அங்கே
சந்திக்கலாம்.”
அவர்கள்
விடை பெற்றுப்போய் ரொம்ப நேரமாகியும் அவள்
பேசாமலேயே அந்த சாய்வு நாற்காலியிலேயே
சாய்ந்து கிடந்தாள்.
‘இந்தப்
புதிய உறவு எனக்குப் புத்துணர்ச்சியைக்
கொடுத்திருப்பது உண்மைதான். ஆனால் எழுபது வயதாயிருக்கும்
என்னால் இந்தக் குழந்தையின் வாழ்க்கையில்
புத்துணர்ச்சியைத் தர முடியுமா? நல்ல
கல்வியைத் தர முடியுமா? உயர்ந்த
நிலைக்குக் கொண்டு வர முடியுமா?
யாருடைய அன்பாவது வேண்டும் என்ற தவிப்பான வயது
போய், யாருடைய அன்பும் தேவையில்லை
என்ற முதிர்ச்சியான வயதில் இருக்கும் எனக்கு
எதற்காக ஒரு பந்தம்? இந்த
பந்தத்தினால் ஒரு குழந்தையின் வாழ்க்கையை-அதன் எதிர்காலத்தையல்லவா அழிக்கிறேன்?”
மனம் கனக்க ஏதேதோ குற்ற
உணர்ச்சியால் சிந்தனை குழம்பியது. கையிலிருந்த
புத்தகத்தின் பக்கங்கள் காற்றில் அலை பாய்ந்தன. பாரதியின் பாடல்களை அனிச்சையாகப் புரட்டிக்கொண்டே வந்தவளின் கண்கள் திடீரென அனிச்சையாக
ஓரிடத்தில் நிலைத்தன.
“ மரணமு
மஞ்சேன் நோய்களை அஞ்சேன் மாரவெம்
பேயினை அஞ்சேன்
இரணமும் சுகமும் பழியும்-
நற்புகழ் யாவுமோர் பொருளெனக்கொள்ளேன்..
.. .. .. . . . . . ..
. . . . .. .. .. .. .. . . . . . .
மண்ணிலார்
வந்து வாழ்த்தினுஞ் செறினும் மயங்கிலேன், மனமென்னும் பெயர்கொள் கண்ணிலாப்பேயை யெள்ளுவேன், இனியெக்காலுமே.. .. அமைதியிலிருப்பேன் .. .. ’
அவள் மெதுவாகக் கண்களை
மூடினாள். மூடிய கண்களிலிருந்து கண்ணீர்
வழிய ஆரம்பித்தது. கூடவே மனதில் ரொம்ப
நாட்களாய் அடைத்துக்கொண்டிருந்த ஏதோ ஒன்று விலகி
விட்டதைப்போலிருந்தது. இதுவரை அவளறியாத ஓர்
அமைதி மனதில் குடி கொண்டது.
மாலைக்கதிரவனின் ஒளிக்கீற்றுக்களிடையே பாட்டி மெதுவாகப் படி
ஏறினாள். இருபது படிகள் ஏறுவதற்குள்ளாகவே
மூச்சு இரைக்கவே, மெதுவாக படிகளுக்கிடையே இருந்த
அந்த சிறு மண்டபத்தில் குழந்தையோடு
அமர்ந்து கொண்டாள்.
“ பாட்டி”!
நிமிர்ந்தவளை
அவர்கள் கை குவித்து வணங்கினர்.
“ என்ன
பாட்டி.. ..மனசு மாறி விட்டதா?”
அந்தப்
பெண்ணின் மகிழ்ச்சிப் பரவசத்தைப்பார்த்து மனம் கனிந்தவாறே
ஊமைப்பாட்டி கூறினாள்.
“ ஆமாம்மா!
மனசு மாறி விட்டது. என்
காலம் முடியப்போகிற நேரத்தில் பந்தம் எதுவும் வேண்டாம்
என்று தோன்றியது. என் வேண்டுகோள் எல்லாம்
இந்தக் குழந்தையை நீங்கள் நன்றாக படிக்க
வைத்து, சமூகத்தில் ஒரு நல்ல உயர்
நிலைக்குக் கொண்டு வர வேண்டும்.
அவ்வளவுதான்.”
பாட்டி
மெதுவாகக் குழந்தையைக் கொடுத்தாள்.
“பாட்டி!
இந்தக் குழந்தைக்கு ஏதாவது பணம்..”
“ இந்தப்பணமென்பது என்னிடம் இருந்திருந்தால் இந்தக் குழந்தையை உங்களிடம்
தந்திருக்க மாட்டேன்..”
அவர்கள்
பல முறை நன்றி கூறி,
கண்கள் கலங்கப் புறப்பட்டுச் சென்ற
பிறகும்.. போய் வெகு நேரமாகியும்
பாட்டி சிவந்த வானத்தையே பார்த்துக்
கொண்டிருந்தாள்.
ரொம்ப நாட்களுக்குப் பிறகு மனம் நிறைந்து,
திடீரெனெ ஏற்பட்ட ஒரு பந்தத்தை
‘தன்னைப்போன்ற’ இன்னொருத்திக்கு அர்ப்பணித்தபோது.. ..இத்தனை நாட்கள் செயலற்று,
வழியற்றுக் கிடந்த அவளின் கருணைக்கும்
அன்புக்கும் இந்த வடிகால் கிடைத்த
நிறைவில் அவள் மனது மகிழ்ச்சியால்
பொங்கியது. சுத்தமாக பந்தங்களையும் பாசங்களையும் அறுத்து விட்டு, யாருக்கும்
பயப்படட் தேவையில்லாமல்.. .. சுதந்திரமாக, நிச்சலனமாக.. .. தன் மனதுக்குப் பிடித்தமான
ஒன்றை மற்றொருவருடைய மகிழ்ச்சிக்காக அர்ப்பணிப்பது எவ்வளவு பெரிய
விஷயம்? எழுபது வருட ரணங்களும்
துன்பங்களும் இந்த சாதனையில் தூசியாய்
மறைய ஆரம்பிக்க, கிழவி சிரித்தவாறே இறங்க
ஆரம்பித்தாள்.
கீழே விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்கள் “டேய்! ஊமைப்பாட்டி சிரிக்கிறாங்கடா!”
என்று ஆச்சரியத்துடன் கூச்சலிட்டார்கள்!!
கதாசிரியர்... எங்க.... இல்லையில்லை.... நம்ம 'தஞ்சாவூர்'க்காரர்...
பதிலளிநீக்குபாட்டியின் மன ஓட்டங்களுடனே பயணிக்கும்போது, பாசம் ஒருபுறமிருக்க, தன் 'முதுமை' லட்சியத்தைத் தோற்கடித்து விடக்கூடாது என்ற உறுதி 'நெகிழ்ச்சி' தருகிறது.
கதாசிரியர்... எங்க.... இல்லையில்லை.... நம்ம 'தஞ்சாவூர்'க்காரர்...
பதிலளிநீக்குபாட்டியின் மன ஓட்டங்களுடனே பயணிக்கும்போது, பாசம் ஒருபுறமிருக்க, தன் 'முதுமை' லட்சியத்தைத் தோற்கடித்து விடக்கூடாது என்ற உறுதி 'நெகிழ்ச்சி' தருகிறது.
அருமையான சிறுகதை. மனதைத் தொட்டது.
பதிலளிநீக்குபாராட்டுகள் மனோ மேடம். பகிர்ந்து கொண்டதற்கு நன்றி ஸ்ரீராம்.
கதை என்றால் ..... இதுவல்லவோ கதை !
பதிலளிநீக்குஏற்கனவே அவர்களின் பதிவினில் இதே கதையைப் படித்து மகிழ்ந்துள்ளது என் நினைவுக்கு வந்தது.
மீண்டும் இப்போது வரிக்கு வரி மிகவும் ரஸித்து ருசித்துப் படித்து இன்புற்றேன்.
கதாசிரியரை எப்படிப் பாராட்டுவது என்றே புரியவில்லை :)
கதாசிரியர் அவர்களுக்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள், அன்பான இனிய நல்வாழ்த்துகள்.
இன்று இதனை இங்கு மீண்டும் படிக்க வாய்ப்பளித்துள்ள ‘எங்கள் ப்ளாக்’குக்கு என் நன்றிகள்.
//ஒவ்வொருத்தருக்கும் தன் மன உணர்வுகளை சமனப்படுத்த ஏதாவது ஒரு வடிகால் தேவைப்படுகிறது. அதில் வயது வித்தியாசமிருப்பதில்லை. தனக்கு மிகவும் பிடித்தமான ஒன்றை தியாகம் செய்து அதன் மூலம் அமைதியற்றுக்கிடந்த தன் மன உணர்வுகளுக்கு வடிகால் தேடிக்கொள்ளும் ஒரு முதியவர் பற்றி நான் இந்தச் சிறுகதையில் எழுதியிருக்கிறேன். //
பதிலளிநீக்குமுன்னுரையில் உள்ள இந்த வரிகள் மிகவும் அருமையாக உள்ளன.
ஸ்பெஷல் பாராட்டுகள், மேடம்.
//1982, நவம்பரில், எழுபது வயது கதாநாயகியாய் ஒரு முதியவரை வைத்து நான் எழுதிய இந்த சிறுகதையை 'ஆனந்த விகடனுக்கு' நான் அனுப்பியதும் உடனேயே இக்கதையை பிரசுரித்தார்கள்.//
பதிலளிநீக்குஅருமை. ஆஹா, இதனைக் கேட்கவே சந்தோஷமாக உள்ளது.
//அப்போது உதவி ஆசிரியராக இருந்த திரு.பரணீதரன் [ ஓவியர் ஸ்ரீதர்] கொடுத்த ஊக்கம் என் ஓவியங்களையும் தொடர்ந்து அனுப்ப உதவி செய்தது.//
அச்சா, பஹூத் அச்சா ! வெரி குட்!!
ஆனந்த விகடனில் இந்தக் கதைக்குப் பொருத்தமான ஓவியமாக அன்றே வரையப்பட்டுள்ளது மேலும் மகிழ்ச்சியளிக்கிறது. அந்த ஓவியருக்கும் நம் பாராட்டுகள்.
அதனை இன்றுவரை மிகவும் பத்திரமாக சேமித்து வைத்திருந்து இன்று இங்கு வெளியிடச்செய்துள்ளது இதில் உள்ள மேலும் சிறப்பாக நான் உணர்கிறேன். ஸ்பெஷல் பாராட்டுகள், மேடம்.
’வடிகால்’ என்ற இந்தக் கதைக்கான தலைப்பும் நன்றாகவே உள்ளது.
பதிலளிநீக்குகுழந்தைகளே பிறக்காத வயதான பெண்களுக்கு மட்டுமல்ல .... ஏராளமான குழந்தைகள் பெற்று, இறுதிக்காலத்தில் தானும் ஓர் குழந்தையாகவே மாறிப்போகும் வயதான ஆண்களுக்கும்கூட இதுபோலதொரு ‘வடிகால்’ தேவையாக உள்ளது என்பதனை நான் என் கதையொன்றில் எழுதியுள்ளேன்.
அதன் தலைப்பும் ‘வடிகால்’ தான். இதோ அதற்கான இணைப்பு:
http://gopu1949.blogspot.in/2014/06/vgk-22.html
கேள்விகள் ஏதும் கேட்காவிட்டால் ரசிக்கலாம் ஏன் என்றால் கதை மனம் சம்பந்தப்பட்டது குழந்தைகளை எடுப்பதும் கொடுப்பதும் அவ்வளவு சுலபமல்ல. வாழ்த்துகள்
பதிலளிநீக்குவெள்ளைகாரர்கள்தான் என்ன ஏது என்று அறியாமல் குழந்தையை வாங்கிச் செல்வார்களா திருமதி மனோ சாமிநாதன் தவறாக எண்ண மாட்டார் என்று நினைக்கிறேன்
பதிலளிநீக்குநீண்ட கதை!
பதிலளிநீக்குகதையும் மணியன் செல்வம் ஓவியமும் அழகா இருக்கு.
பதிலளிநீக்கு;சிலநிகழ்வுகள் சட்டத்திற்கு அப்பார்ப்பட்டவை. ஆயினும் ஒரு முதிர்ந்த வயதுடயவளின் வடிகால் இப்படிப்பட்டதாகத்தான் இருக்கும் என்பதை எந்த விதத்திலும் மறுக்க முடியாது. எழுதியுள்ள விதம் மிகவும் நன்றாக இருக்கிறது. குழந்தையைப் பெற்ற ஸந்தோஷத்தைவிட அதை ஒரு தகுதியான தம்பதிகளிடம் சேர்த்தவிதம் நெகிழவைத்தது. ரஸித்துப் படித்தேன்.நெகிழ்ச்சியாகவும் இருந்தது. அன்புடன்
பதிலளிநீக்குஎன் சிறுகதையினை இங்கே வெளியிட்டிருப்பதற்கு அன்பார்ந்த நன்றி ஸ்ரீராம்!
பதிலளிநீக்குபாரதி! நீங்களும் தஞ்சாவூரா? தஞ்சையில் பதிவர்கள் ஓரளவிற்கு பெருகி விட்டது மகிழ்வைத்தருகிறது!!
பதிலளிநீக்குகதைக்கான விமர்சனத்திற்கு அன்பு நன்றி!!
இனிய பாராட்டுக்களுக்கு மனம் நிறைந்த நன்றி வெங்கட்!
பதிலளிநீக்குஅன்புச் சகோதரர் வை.கோபாலகிருஷ்ணன் அவர்களுக்கு!
பதிலளிநீக்குஉங்களின் இனிய பாராட்டுக்களுக்கும் நல்வாழ்த்துக்களுக்கும் அன்பு நன்றி!
உங்கள் வடிகால் சிறுகதையை நான் ஏற்கனவே ரசித்துப்படித்திருக்கிறேன்! உங்கள் கதையின் நாயகன் போல எங்களின் நெருங்கிய உறவினர் மனைவியை இழந்து, பிள்ளைகள் யாருடைய துணையுமின்றி எந்த வடிகாலுமின்றி சமீபத்தில் இறந்து போனார். ஒவ்வொருத்தர் கதையும் ஒவ்வொரு மாதிரி!
அன்புள்ள சகோதரர் பாலசுப்ரமண்யம் அவர்களுக்கு!
பதிலளிநீக்குபொதுவாய் தத்து கொடுப்பது என்பது எந்த வித சட்டங்களுக்கும் உட்படாமல் மன ஒப்புதல்களுடன் அங்கங்கே நடந்து கொண்டு தானிருக்கிறது! இன்னொரு பக்கம் மிகக் கடுமையான சட்ட திட்டங்களுடன் பல மாதங்கள் வளர்க்க விரும்பும் பெற்றோரை காக்க வைத்து, பல வித பரீட்சைகள் வைத்து அதன் பின்னரே தத்து கொடுக்கிறார்கள். இந்த இரண்டுமே எங்கள் இல்ல உறவுகளுக்குள்ளேயே நடந்திருக்கின்றன!
இந்த சிறுகதையை 35 வருடங்களுக்கு முன், என் இளம் வயதில் தத்து என்பதே அவ்வளவாக இல்லாத காலத்தில் ஒரு உயர்ந்த நோக்கத்தை மட்டுமே மையமாக வைத்து எழுதி விகடனுக்கு அனுப்பினேன். அப்போதெல்லாம் அவ்வளவு இலேசில் எந்த சிறுகதையும் பத்திரிகைகளில் அங்கீகரிக்கப்பட்டு விடாது. இந்த சிறுகதையை எந்த வித அடித்தலும் திருத்தலும் இல்லாமல் உடனேயே பிரசுரித்தது விகடன்! அப்படியென்றால் விகடனின் ஆசிரியக்குழு என் கருத்தையும் அங்கீகரித்ததாகத் தானே அர்த்தம்?
கருத்துரைக்கு அன்பு நன்றி சகோதரர் ராமானுஜம்!
பதிலளிநீக்குஇனிய பாராட்டுக்களுக்கு அன்பு நன்றி நெல்லைத்தமிழன்!
பதிலளிநீக்குஅன்புள்ள காமாட்சி அம்மா அவர்களுக்கு!
பதிலளிநீக்குஒரு பக்குவப்பட்ட முதியவளுக்கு வடிகால் ஏற்பட்ட விதத்தை அப்படியே உள்வாங்கி உணர்ந்து மிகவும் ரசித்து விமர்சனம் செய்ததில் நானும் மனம் நெகிழ்ந்தேன் அம்மா! மனம் நிறைந்த நன்றியை நானும் உங்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன்!
அன்புள்ள சகோதரர் ஸ்ரீராம் அவர்களுக்கு!
பதிலளிநீக்குஎன்னைப்பற்றிய தகவல்களில் ஒரு திருத்தம்!
துபாய் அருகே உள்ள ஷார்ஜாவில் நாங்கள் 25 வருடங்களுக்கு மேலாக உணவகம் நடத்தி வந்தோம். 2013ல் என் கணவர் மிகுந்த உடல்நலக்குறைவு ஏற்பட்டு அதிலிருந்து மீண்டு வந்து நலம் பெற ஆரம்பித்த போது அவர்களுக்கு அதிகப்படியான மன அழுத்தம் வேண்டாமென்று அந்த உணவகத்தை மூடி விட்டோம். ஆனால் இப்போதும் இருப்பிடம் அங்கு தான் அதிகம்!
//அப்போதெல்லாம் அவ்வளவு இலேசில் எந்த சிறுகதையும் பத்திரிகைகளில் அங்கீகரிக்கப்பட்டு விடாது//
பதிலளிநீக்குகல்கி, ஆனந்தவிகடன் போன்ற, நாம் விரல்விட்டு எண்ணிவிடக்கூடிய அன்றைய மிகப் பிரபலமான ஒருசில இதழ்களில், நம் படைப்பு அந்தக்காலக் கட்டத்திலேயே ஏற்கப்பட்டு பிரசுரம் ஆனது என்றால், அதை விட ஒரு மிகப் பெரிய அங்கீகாரம் இருக்க முடியாது என நாம் அடித்துச் சொல்லிப் பெருமைப் பட்டுக்கொள்ளலாம்.
அதே மிகப்பிரபலமான பத்திரிகைகள்கூட, இன்றுபோலெல்லாம் இல்லாமல், எழுத்துக்களின் தரம் ஒன்றையே தாரக மந்திரமாக கருதப்பட்டு வந்த பொற்காலம் அது. அந்தக்காலக் கட்டத்தில் இருந்துள்ள, அந்த பிரபல பத்திரிகைகளின் ஆசிரியர்களும் தனித்திறமைகள் வாய்ந்த மஹா மேதாவிகள் ஆவார்கள்.
இதுபற்றியெல்லாம் இன்று எல்லோருக்கும் தெரிந்திருக்க நியாயம் இல்லைதான்.
வணக்கம் நண்பர் அவர்கள் இருப்பது துபாய் அல்ல ஷார்ஜா நான் அவர்கள் வீட்டுக்கு போய் இருக்கின்றேன்
பதிலளிநீக்கு//சிரிப்பு என்று வந்தால்கூட அதைத் தொண்டையிலேயே நிறுத்தி விடும் அளவு அவள் பழகிப்போனாள்//
உண்மை இன்றளவும் இப்படி மனிதர்கள் உண்டு
கதை மனதை கனக்க வைத்து விட்டது வாழ்த்துகள் சகோ
அந்த வெள்ளைக்காரர்களிடம் குழந்தை போய்ச் சேர பாட்டி ஒரு கருவி அவ்வளவு தான். எது எப்படி எப்போது எவ்வாறு ஏன் நடக்க வேண்டும் என்பதெல்லாம் தீர்மானிக்கப்பட்டுத் தான் இப்பூவுலகிற்கே வருகிறோம். அந்த 'எப்படி எப்போது எவ்வாறு ஏன்' என்பது நமக்கு தெரிய வேண்டிய அவசியம் இல்லாதிருப்பது தான் ஜீவிதத்தின் ரகசியமும் கூட.
பதிலளிநீக்குகதை சொன்ன விதம் எந்தக் கேள்வியும் மனசில் எழாமல் பார்த்துக் கொண்டது.
'குமுதம்' பத்திரிகைக்கு அனுப்பத் தீர்மானித்து விக்டனுக்கு அனுப்பி விட்டீர்களா, என்ன?.. இது அச்சாக விகடனுக்கு ஏற்ற கதை என்பதால் அதுவும் நல்லத்துக்குத் தான்.
வணக்கம் மேடம். கதை நன்றாய் இருந்தது. ஆனந்தவிகடனில் பிரசுரமானதற்குப் பாராட்டுக்கள்! புது பந்தத்தினால் புத்துணர்ச்சி கிடைத்தாலும், குழந்தைக்கு நல்ல ஒரு எதிர்காலத்தைத் தன்னால் அமைத்துக்கொடுக்க முடியாது; அதன் எதிர்காலம் பாழாகிவிடும் எனச் சிந்தித்து நல்ல முடிவை எடுக்கிறாள் பாட்டி. நெகிழ்ச்சியான முடிவு. சிறப்பான கதைக்குப் பாராட்டுக்கள்!
பதிலளிநீக்குபாட்டியின் சிரிப்பை நானும் ரசித்தேன் :)
பதிலளிநீக்குவாழ்க்கை முழுவதும் மலடி என்ற பட்டத்தால் துன்பப்பட்ட ஒரு பெண், தன் உணர்வுகளுக்கு வடிகாலாக கிடைத்த ஒரு குழந்தையை அதன் எதிர் காலம் கருதி தாரை வார்க்க துணிவதை, (காதலுக்காக காதலையே தியாகம் செய்வதைப் போல) அழகாக வெளிப்படுத்தி இருக்கிறார் கதாசிரியர்.
பதிலளிநீக்குஅருமையான கதை
பதிலளிநீக்குஇனிய வாழ்த்துக்களுக்கும் அன்பான விமர்சனத்திற்கும் மனமார்ந்த நன்றி கில்லர்ஜி!
பதிலளிநீக்கு//எது எப்படி எப்போது எவ்வாறு ஏன் நடக்க வேண்டும் என்பதெல்லாம் தீர்மானிக்கப்பட்டுத் தான் இப்பூவுலகிற்கே வருகிறோம். அந்த 'எப்படி எப்போது எவ்வாறு ஏன்' என்பது நமக்கு தெரிய வேண்டிய அவசியம் இல்லாதிருப்பது தான் ஜீவிதத்தின் ரகசியமும் கூட.//
பதிலளிநீக்குமிக அருமையாக சொல்லியிருக்கிறீர்கள் சகோதரர் ஜீவி! நமக்குத் தெரியாத, புரியாத ரகசியங்கள் தான் வாழ்க்கையை உயிர்த்துடிப்புடன் கொண்டு செல்கிறது!
அப்போதெல்லாம் ஆனந்த விகடனில் தான் அருமையான சிறுகதைகள் வெளி வரும். அதனால் அப்போது சிறுகதையை அனுப்ப விரும்பியது ஆனந்த விகடனுக்குத்தான். ஆனால் எழுத்தாளர் சாவி அவர்கள் தினமணி கதிர் என்னும் இதழை எழுபதுகளில் ஆரம்பித்து, ஏராளமான கதாசிரியர்களையும் புதுப்புது ஓவியர்களையும் அறிமுகப்படுத்தினார். அதில் தான் என் முதல் சிறுகதை வெளியாயிற்று!
இனிய விமர்சனத்திற்கு அன்பு நன்றி!
இனிய விமர்சனத்திற்கும் பாராட்டுக்களுக்கும் அன்பு நன்றி கலையரசி!
பதிலளிநீக்குஇனிய கருத்துரைக்கு அன்பு நன்றி பகவான்ஜீ!
பதிலளிநீக்குஅழகிய விமர்சனத்திற்கும் பாராட்டிற்கும் அன்பு நன்றி சகோதரி பானுமதி வெங்கடேஸ்வரன்!
பதிலளிநீக்குஇனிய பாராட்டிற்கு அன்பு நன்றி யாழ்ப்பாவணன்!
பதிலளிநீக்கு//'குமுதம்' பத்திரிகைக்கு அனுப்பத் தீர்மானித்து விக்டனுக்கு அனுப்பி விட்டீர்களா, என்ன?.. இது அச்சாக விகடனுக்கு ஏற்ற கதை என்பதால் அதுவும் நல்லத்துக்குத் தான். //
பதிலளிநீக்குபாட்டியின் (சிற்வயதுப் பெயர்) குமுதம் என்பதினால் ஒரு தொடர்புக்காக 'குமுதம்' பத்திரிகையைச் சொன்னேன். மற்றபடி இது 'விக்டன்' கதைதான்.
ஓ! சாவி ஆசிரியராக இருந்த பொழுது உங்கள் முதல் கதை தினமணி கதிரில் வெளிவந்ததா?.. பிரமாதம்! சாவியின் கை எப்போதுமே ராசியான கை! சாவி ஆசிரியராக இருந்த பொழுதும் சரி, நா.பா. ஆசிரியராக இருந்த பொழுதும் சரி, எனது சிறுகதைகளும் தினமணி கதிரில் பிரசுரமாகியிருக்கின்றன.
//ஓ! சாவி ஆசிரியராக இருந்த பொழுது உங்கள் முதல் கதை தினமணி கதிரில் வெளிவந்ததா?.. பிரமாதம்! சாவியின் கை எப்போதுமே ராசியான கை! சாவி ஆசிரியராக இருந்த பொழுதும் சரி, நா.பா. ஆசிரியராக இருந்த பொழுதும் சரி, எனது சிறுகதைகளும் தினமணி கதிரில் பிரசுரமாகியிருக்கின்றன.//
பதிலளிநீக்கு’வாஷிங்டனில் திருமணம்’ என்ற நகைச்சுவை விருந்து படைத்த எங்கட கைராசியான
’சாவி’யால் ’சாவி’ கொடுக்கப்பட்டுள்ள தாங்கள் இருவருமே அதிர்ஷ்டசாலிகள்
என்பதில் ஐயமில்லை. :))
மீண்டும் இருவருக்கும் என் பாராட்டுகள் + நல்வாழ்த்துகள்.
நல்ல கதைப் பகிர்வுக்கு நன்றி.
பதிலளிநீக்குசகோதரி மனோ/மனோ அக்கா பாட்டி மனதைக் கவர்ந்திழுத்துவிட்டார்!! அழகான கதை. அருமையான கதை. படமும் அழகு. வாழ்த்துகள்!
பதிலளிநீக்குபகிர்ந்த எங்க்ள்ப்ளாகிற்கும் நன்றி!
மனோ அவர்களின் பதிவுகளை வாசித்துள்ளேன். அவரது ஓவியங்களையும் பார்த்துள்ளேன். தங்கள் பதிவு மூலமாக நல்லதொரு கதையைப் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவருக்கு எனது வாழ்த்துகள். பகிர்ந்த உங்களுக்கு நன்றி.
பதிலளிநீக்குஅன்புள்ள சகோதரர் ஜீவி!
பதிலளிநீக்குஉங்கள் சிறுகதைகள் தினமணி கதிரில் வெளி வந்திருக்கின்றனவா? மகிழ்வாயிருக்கிறது. எந்தப்பெயரில் எழுதினீர்கள்? 1974 வரை வெளி வந்த சிறுகதைகளின் தொகுப்பு என் வீட்டு நூலகத்தில் உள்ளது. நான் தேடிப்பார்த்து படிக்கிறேன்.
மறுபடியும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் தெரிவித்த அன்பு சகோதரர் வை.கோபாலகிருஷ்ணன் அவர்களுக்கு என் அன்பார்ந்த நன்றி!
பதிலளிநீக்குஅன்பான பாராட்டிற்கு இனிய நன்றி கீதா சாம்பசிவம்!
பதிலளிநீக்குஇனிய பாராட்டும் அன்பான வாழ்த்துக்களும் தந்ததற்காக அன்புச் சகோதரர் துளசிதரனுக்கும் கீதாவிற்கும் மனமார்ந்த நன்றி!!
பதிலளிநீக்குஅன்பான வாழ்த்துக்கள் வழங்கியதற்கும் இனிய பாராட்டுக்கள் தெரிவித்ததற்கும் அன்புச் சகோதரர் ஜம்புலிங்கம் அவர்களுக்கு மனம் நிறைந்த நன்றி!!
பதிலளிநீக்குமனதை நெகிழ வைத்த கதை.
பதிலளிநீக்குமனோசாமிநாதன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
உங்களுக்கு நன்றி.
அன்புள்ள சகோதரி மனோ சாமிநாதன்,
பதிலளிநீக்குபிரசுரமான பல கதைகள் என் கைவசம் இல்லை. அதனால் அவற்றைப் பற்றியெல்லாம் விவரமாக சொல்லும் அளவுக்கு நினைவும் இல்லை. அவற்றையெல்லாம் நான் இழந்ததே பெரிய கதை. புத்தகங்களை வாசிக்கக் கொடுத்து திரும்பி வராத அனுபவங்கள் பலருக்கு உண்டு. நான் என் கத்தை கதைகள் அடங்கிய ஃபோல்டரை நண்பர் ஆசையாகக் கேட்டாரே என்று கொடுத்து இழந்திருக்கிறேன். அவர் தான் பயணித்த பஸ்ஸில் அந்த ஃபோல்டரை மறந்து வைத்து விட்டு தவிற விட்டு விட்டதாகச் சொன்னார். யாரைத் தான் நொந்து கொள்வது?.. சொல்லுங்கள்.
இதில் வேடிக்கை என்னவென்றால் நான் எழுதாத, அந்தக்காலத்தில் நான் எழுதிக்கொண்டிருந்த பெயரில்
ஆனந்த விகடனில் வெளிவந்த ஒரு கதையை நமது ஸ்ரீராம், நான் எழுதியதாக்கும் என்று ஆசையுடன் இந்தப் பகுதியில் வெளியிட்டார். இந்தப் பகுதி ஆரம்பத்த கதையே அது தான்!
என் விஷயத்தில் தான் இப்படியே தவிர என் கால பிற எழுத்தாளர்களைப் பற்றி அவர்கள் எழுதியவைகள் பற்றியெல்லாம் அவர்களைச் சந்தித்தது, அவர்களுடன் பழகியது என்றெல்லாம் நிறைய விவரங்கள் என்னிடம் உண்டு. 'ந. பிச்சமூர்த்தியிலிருந்து எஸ்.ரா. வரை' என்று 37 எழுத்தாள்ர்களைப் பற்றி நான் எழுதிய நூல் ஒன்று சமீபத்தில் வெளிவந்திருக்கிறது. அந்தப் புத்தகத்தை வைத்துக் கொண்டு நமது அருமை வை.கோ சார் -- எனக்கு கோபு சார்-- கிட்டத்தட்ட 19 பதிவுகள் போட்டு தன் தளத்தில் அமர்க்களப்படுத்தியிருக்கிறார். படித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.
எனக்கென்னவோ பழைய கதைகள் சிலவற்றை இப்பொழுது படித்தாலும் இன்னும் சிறப்பாக எழுதியிருக்க வேண்டும் இல்லை வேறு மாதிரி மாற்றி எழுதியிருக்க வேண்டும் என்று தோன்றும். பல கதைகள் இப்பொழுதிய பார்வைக்குக் குழந்தைத்தனமாகவும் படும்.
தங்கள் ஆர்வத்திற்கும் விசாரிப்புகளுக்கு ரொம்பவும் நன்றி, சகோதரி!
ஜீவி
அன்புச் சகோதரர் ஜீவி அவர்களுக்கு,
பதிலளிநீக்குதங்களின் நீண்ட பதிலுக்கு என் மகிழ்வான நன்றி!
சகோதரர் வை.கோ உங்களின் ' பிச்சமூர்த்தி முதல் எஸ்.ரா வரை' புத்தகத்திற்கு எழுதிய விமர்சனங்கள் அனைத்தையும் படித்திருக்கிறேன். பின்னூட்டமும் அளித்திருக்கிறேன்.
அருமையான கதை! மனதைத் தொட்டது! பின்னூட்டங்களும் சுவாரஸ்யம்! நன்றி!
பதிலளிநீக்குசிறந்த கதை...
பதிலளிநீக்குமுன்னரே படித்திருக்கிறேன்...
அம்மாவுக்கும் தங்களுக்கும் வாழ்த்துக்கள்.