லிஃப்ட் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
லிஃப்ட் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

30.4.15

லிஃப்ட் : 'சில்லறை பொறுக்கினேன்' அனுபவம் தொடர்ச்சி.


"...அவர்களைப்  பார்த்து அன்று புன்னகைத்தவர்களில் மற்றவர்களுக்கு பிற்பகல் விளைந்ததா தெரியவில்லை.  ஒரு மாதத்துக்குப்பின் எனக்கு விளைந்தது!  அதை அப்புறம் சொல்கிறேன்!"   என்று சென்ற வாரம் முடித்திருந்தேன் அல்லவா....  அதன் தொடர்ச்சி!
 


நகரின் ஓரத்தில் இருக்கும் ஒரு பிரபல மருத்துவமனைக்குச் சென்றிருந்தேன்.  அந்த மருத்துவமனையில் என் நண்பரின் மாமா சிகிச்சை பெற்று வந்தார்.  அவரைப் பார்க்க வந்திருந்த நண்பரைப் பார்க்க அங்கு சென்றேன்.

வரவேற்பறையில் கேட்டபோது B 2 க்குச் செல்லும்படி கூறினார்.

"எங்கிருக்கிறது?  எப்படிப் போக வேண்டும்?"

"செகண்ட் ஃப்ளோர்... லிஃப்டில் போங்க... ரைட்ல போய்த் திரும்பினீங்கன்னா லிஃப்ட்.."

சென்று திரும்பி, பொத்தானை அமுக்கிக் காத்திருந்து, கதவு திறந்ததும் உள்ளே சென்றேன்.  அவ்வளவு பெரிய லிஃப்ட் பார்ப்பது அதுதான் முதல் முறை.   ஒரு அறையைப் போல சற்றே பெரியதாயிருந்தது.

B2 வை   அமுக்கி விட்டுக் காத்திருந்தேன்.  கதவு மூடிக் கொண்டு மேலே போவதற்கு பதில் கீழே சென்றது.  


'என்னடா இது! பட்டன் தப்பா அமுக்கிட்டோமோ' என்று மறுபடி பார்த்தேன்.  அப்புறம்தான் தெரிந்தது அண்டர்கிரவுண்டில் கூட மக்கள் இருக்கிறார்கள், அங்கும் லிஃப்ட் செல்கிறது என்று.

பின்னர் மீண்டும் தரைத் தளத்துக்கு வந்தது.  அடுத்து B1 வந்து நின்றது.  இரண்டு மூன்று பேர்கள் ஏறினார்கள்.  அடுத்த தளத்தில் நான் இறங்க வேண்டும்.  அந்தத் தளமும் வந்து நின்றது.  கதவு திறக்கவில்லை.  அப்படியே கிளம்பி விட்டது.

எனக்கு ஒன்றும் புரியவில்லை.  'என்னடா இழவு இது...ஒன்றும் புரியவில்லையே..' என்று எண்ணிக் கொண்டு B3, B4 எல்லாம் செல்வதையும் ஏறி, இறங்குபவர்களையும் பார்த்துக் கொண்டு நின்று கொண்டிருந்தேன்.

மறுபடியும் B2 வந்தபோது நான் மட்டுமே லிஃப்டில்.  இறங்கத் தயாராய் நிற்கிறேன்.  கதவு திறக்கவில்லை.  லேசான பதட்டம் கலந்த கடுப்பு வந்தது.  மறுபடி தரைத் தளம், அண்டர்கிரவுண்ட், மறுபடி தரைத் தளம், B1.  பேசாமல் இறங்கி படி ஏறிக் கூட B2 வுக்குச் சென்றிருக்கலாம் என்று மறுபடியும் கதவு திறக்காமல் கிளம்பியதும் தோன்றியது.  



மறுபடி நான் மட்டும்தான் லிஃப்டில் (என்றுதான் நினைத்தேன்).  நான் மட்டும்தான் மேலும் கீழும் போய்வந்து கொண்டிருந்தேன்.

B3 சென்று நின்றதும் திடீரென என் பின்னாலிருந்து இரண்டு மூன்று பேர்கள் என்னைத் தாண்டிச் சென்று இறங்கினார்கள். "என்னடா இது?  மாயமாய் இருக்கிறது?  நாம் மட்டும்தான் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம், எங்கிருந்து வந்தார்கள் இவர்கள் என்று திரும்பிப் பின்னால் பார்த்தேன்.

அப்போதுதான் பின்னாலும் ஒரு கதவு இருப்பதைப் பார்த்தேன்.

'அட! பார்றா... இதுதானா மர்மம்!'

அசடு வழிய மறுபடி மேலே லிஃப்ட் சென்ற இடமெல்லாம் சென்று விட்டு, கீழே வரும்போது பின் கதவுக்கருகில் நின்று, காத்திருந்தேன். 


இந்தமுறை B2 வை நான் தவற விடவில்லை!  இறங்கி விட்டேன்.