வெங்காய-உருளைக் கிழங்குக் கறி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வெங்காய-உருளைக் கிழங்குக் கறி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

14.12.15

"திங்க"க்கிழமை 151214 :: வெங்காயம் பூண்டுக் குழம்பும், வெங்காய-உருளைக் கிழங்குக் கறியும்!



     திங்கக் கிழமை சென்ற வாரம் சும்மாவே போய்விட்டது! இந்த வாரம் அப்படி விடக் கூடாது பாருங்கள்....  அதனால் நேற்று எங்கள் வீட்டின் சமையலான வெங்காயம்-பூண்டுக் குழம்பு, உருளைக்கிழங்கு பொடிமாஸ் பற்றிச் சொல்லலாம் என்று நினைக்கிறேன்.

     நான் ஏற்கெனவே சொல்லியிருக்கிறேன்.  எங்கள் வீட்டில் வெங்கயம், பூண்டு போன்றவை கிட்டத்தட்ட சைவச் சமையல் பண்டங்கள் போல!  அதுவும் குறிப்பாகப் பூண்டு!  எனக்கு இஷ்டம் என்பதால் ஆரோக்கியத்தைக் காரணம் காட்டி அவ்வப்போது வெற்றி பெறுவேன்!


     நேற்று அது மாதிரி ஒருநாள்!  வீட்டின் மிக வயதான மெம்பர் வயிற்றுக் கோளாறால் கஞ்சி,  மோர்சாத டயட்டுக்குப் போக,  தடை நீங்கியது!

     கொஞ்சமாக புளி எடுத்து (புளி அளவு கம்மியானால் கூடப் பரவாயில்லை, அதிகமானால் புளிப்பு சாப்பிடத் தோன்றாது!  நமக்குத்தான் நாக்கு நாலு முழம் ஆச்சே!) கரைத்துக் கொண்டு, சாம்பார்ப்பொடி, உப்பு சேர்த்துக் கரைத்து வைத்துக் கொண்டோம்.




               Image result for garlic images                                     Image result for onion images


     உரித்த சின்ன வெங்காயமும் உரித்த பூண்டும் எடுத்து இரண்டாய், நான்காய் நறுக்கிக் கொண்டோம்.  (முழுதாகப் போடுவதும் உண்டு.  ஆனால் அப்போது வெங்காயம் பூண்டின் சுவை குழம்பில் இறங்காது என்பது என் மனப்ப்ரமை!)

     வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி, கடுகு, வெந்தயம், கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய்த் தாளித்துக் கொண்டு அதில் கரிவேப்பிலை போட்டுப் புரட்டிக் கொண்டு, நறுக்கி வைத்திருந்த வெங்காயம், பூண்டையும் போட்டு கொஞ்ச நேரம் வதக்கிக் கொண்டோம்.  கலக்கி வைத்திருக்கும் புளித் தண்ணீரைப் போட்டு, நன்றாய்க் கொதிக்க வைத்து இறக்கினோம். (சிலபேர் கொதிக்கும்போது அதில் துளி வெல்லம் சேர்ப்பார்கள் - புளியின் காட்டத்தைக் குறைக்க)




            Image result for potato images   Image result for onion images


     வேக வைத்திருந்த உருளைக்கிழங்கைத் தோலுரித்து எடுத்துக் கொண்டு  நறுக்கிய (கொஞ்சமாக) வெங்காயம், நறுக்கிய அல்லது நசுக்கப்பட்ட ஓரிரண்டு பூண்டுப் பல் (இதிலுமா!!) சேர்த்து வதக்கி (தாளிக்கிற பிசினஸ் எல்லாம் கிடையாது!) வாணலியிலிட்டு வதக்கி, வதங்கியதும் உருளைக்கிழங்கைப் போட்டுத் திருப்பிக் கொண்டு, உப்பு, காரப்பொடி (அல்லது சாம்பார்ப்பொடி) போட்டுத் திருப்பிக் கொண்டோம்.  இறக்கும் நேரத்தில் லேசாக மிளகுப் பொடி தூவி, பொடியாக நறுக்கி வைத்திருக்கும் கொத்து மல்லித் தழைகளைத் தூவி இறக்கி விட்டோம்.







     (படத்தில் இருக்கும் குழம்பு, உ.கி கறி பழைய படம்!  இதில் உ.கி கொஞ்சம் மாவாய்ப் போய்விட்டது)

     ரசித்துச் சாப்பிட்டோம்.

     வேடிக்கை என்னவென்றால் எதிர்பாராமல் வீட்டுக்கு வந்திருந்த ஒரு நண்பர் இவை இரண்டையும் சாப்பிட்டு விட்டு, மிகவும் பாராட்டினார்!  ஏதோ புதுவகைச் சமையல் போல 'எப்படிச் செய்தீர்கள்?' என்று கேட்டுக் கொண்டதும்,  'என்ன, இதைப்போய்ப் புதுசாகக் கேட்கிறாரே என்று தோன்றிய கணமே, இதைத் திங்கட்கிழமைக்குப் பதிவாக்கி விடலாம் என்ற ஐடியாவும் வந்து விட்டது!


     ஹிஹிஹிஹி...