வெண்டைக்காய் சென்னா என்னவோ! லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வெண்டைக்காய் சென்னா என்னவோ! லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

20.7.15

"திங்க"க்கிழமை 150720 :: வெண்டைக்காய் சென்னா என்னவோ!






வெண்டைக்காயை எங்கள் வீட்டில் இதுவரை சாம்பார் வைப்பார்கள்.  வெந்தயக் குழம்பு செய்வார்கள்.  அரை வதக்கலாய் கறி செய்வார்கள்.  மோர்க்குழம்பில் போடுவார்கள்.  ஏன், அப்படியே பச்சையாய்க் கூடச் சாப்பிடுவார்கள்.  சிறியவர்கள் சாப்பிட வேண்டுமே என்று பாவம், அந்த வெண்டைக்காயை மொறுமொறு என்றும் செய்து வைப்பார்கள்!



ஒரு முறை வெங்காயம், தக்காளி நறுக்கி எடுத்துக் கொண்டு  தொக்கு போலச் செய்து கொண்டு மசாலா சேர்த்து ஒருமுறை,  சேர்க்காமல் ஒருமுறை வெண்டைக்காயை அதே அரை வதக்கலாய் அதில் சேர்த்ததுண்டு.




எனக்கு வெண்டைக்காயை அதன் பச்சைத் தன்மை மாறாமல் சமைத்தால் மட்டுமே பிடிக்கும்.


மனைவியின் தோழி ஒருவர் ஒருநாள் வெண்டைக்காயை வைத்து ஒரு புது (?) ரெஸிப்பி சொன்னார்.  அவருக்கு அவர் தோழி சொன்னாராம்.  தோழிக்கு அவர் சகோதரி சொல்லிக் கொடுத்ததாம்.  அந்தச் சகோதரி தொலைகாட்சி நிகழ்ச்சி ஒன்றில் பார்த்துச் செய்ததாம்!  அப்பா....டி!


முதல் நாளே கொண்டைக்கடலை கொஞ்சம் எடுத்து ஊற வைத்து, மறுநாள் அதை குக்கரில் வேகவைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.


முதலில் வெண்டைக்காயை காம்பும், அடியும் நீக்கிக் கொள்ளவும்!


(சிறு வயதில் அம்மா வெண்டைக்காய் நறுக்கும்போது அரிவாள் மனைக்குக் கீழ் சேர்ந்திருக்கும் இந்தக் காம்புகளை எடுத்து நெற்றியிலும் சுவரிலும் ஒட்டி விளையாடுவது உண்டு!)


பிறகு வெண்டைக்காயை பாதியாய் வெட்டிக் கொண்டு அதை நீளவாக்கில் நறுக்கி, (அதையும் இரண்டாக நறுக்கிக் கொள்ளச் சொல்லி, நானும் அப்படித்தான் செய்தேன்.  ஆனால் ரொம்பச் சிறியதாய், வெண்டை இருக்குமிடம் தெரியாமல் நூலாய் சுருண்டு விட்டது.  எனவே) நீள வாக்கிலேயே பாதியாய் வெட்டிக் கொள்ளவும்.

                                                           


அதை எண்ணெயில் பொரித்து எடுத்து ஓரமாய் வைத்துக் கொள்ளவும்.





கால் கிலோ வெண்டைக்காய் என்றால் பத்து சின்ன வெங்காயம், இரண்டு சிறிய தக்காளி எடுத்து மிக்ஸியில் அரைத்து எடுத்துக் கொள்ளவும்.


வாணலியை அடுப்பில் வைத்து (அடுப்பைப் பற்ற வைத்துக் கொள்ளுங்கள் என்றெல்லாம் சொல்ல வேண்டுமா என்ன?) இரண்டு ஸ்பூன் எண்ணெய் விட்டு கடுகு உளுந்து தாளித்துக் கொண்டு, அரைத்து வைத்திருக்கும் தக்காளி வெங்காயம் கூழை அதில் இட்டு,  



தனியாப் பொடி, சீரகப் பொடி தூவிப் புரட்டவும்.  உப்பும், காரப் பொடியும் சேர்க்கவும்.


பச்சை வாசனை போகக் கொதித்ததும் அதில் வேகவைத்த கொண்டைக்கடலை மற்றும் எண்ணெயில் பொரித்து வைத்திருக்கும் வெண்டைக்காயைப் போட்டு ஒரு புரட்டு புரட்டி,  கொஞ்சம் கழித்து எல்லாம் சேர்ந்து வந்ததும் இறக்கி வைக்கவும்.




அவ்வளவுதாங்க...


சாப்பாட்டுக்கோ, சப்பாத்திக்கோ உங்கள் விருப்பப்படி எடுத்துப் போட்டுத் தொட்டுக்கொண்டு சாப்பிட ஆரம்பிக்கலாம்.


எங்கே கிளம்பிட்டீங்க.... வெண்டைக்காய் வாங்கத்தானே...  ஹிஹிஹி...  நான் படத்தில் போட்டிருப்பது போல இல்லாமல்,  நல்ல இளசா பார்த்து வாங்குங்க!

ம்ம்...  யார், யார் இதை முன்னரே செய்திருக்கிறீர்கள்?  கை தூக்குங்கள்!!
  






படங்கள் :  தயாரிக்கும்போது நான், நான்,  நான் ......   நானே எடுத்தது!