திங்கள், 20 ஜூலை, 2015

"திங்க"க்கிழமை 150720 :: வெண்டைக்காய் சென்னா என்னவோ!


வெண்டைக்காயை எங்கள் வீட்டில் இதுவரை சாம்பார் வைப்பார்கள்.  வெந்தயக் குழம்பு செய்வார்கள்.  அரை வதக்கலாய் கறி செய்வார்கள்.  மோர்க்குழம்பில் போடுவார்கள்.  ஏன், அப்படியே பச்சையாய்க் கூடச் சாப்பிடுவார்கள்.  சிறியவர்கள் சாப்பிட வேண்டுமே என்று பாவம், அந்த வெண்டைக்காயை மொறுமொறு என்றும் செய்து வைப்பார்கள்!ஒரு முறை வெங்காயம், தக்காளி நறுக்கி எடுத்துக் கொண்டு  தொக்கு போலச் செய்து கொண்டு மசாலா சேர்த்து ஒருமுறை,  சேர்க்காமல் ஒருமுறை வெண்டைக்காயை அதே அரை வதக்கலாய் அதில் சேர்த்ததுண்டு.
எனக்கு வெண்டைக்காயை அதன் பச்சைத் தன்மை மாறாமல் சமைத்தால் மட்டுமே பிடிக்கும்.


மனைவியின் தோழி ஒருவர் ஒருநாள் வெண்டைக்காயை வைத்து ஒரு புது (?) ரெஸிப்பி சொன்னார்.  அவருக்கு அவர் தோழி சொன்னாராம்.  தோழிக்கு அவர் சகோதரி சொல்லிக் கொடுத்ததாம்.  அந்தச் சகோதரி தொலைகாட்சி நிகழ்ச்சி ஒன்றில் பார்த்துச் செய்ததாம்!  அப்பா....டி!


முதல் நாளே கொண்டைக்கடலை கொஞ்சம் எடுத்து ஊற வைத்து, மறுநாள் அதை குக்கரில் வேகவைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.


முதலில் வெண்டைக்காயை காம்பும், அடியும் நீக்கிக் கொள்ளவும்!


(சிறு வயதில் அம்மா வெண்டைக்காய் நறுக்கும்போது அரிவாள் மனைக்குக் கீழ் சேர்ந்திருக்கும் இந்தக் காம்புகளை எடுத்து நெற்றியிலும் சுவரிலும் ஒட்டி விளையாடுவது உண்டு!)


பிறகு வெண்டைக்காயை பாதியாய் வெட்டிக் கொண்டு அதை நீளவாக்கில் நறுக்கி, (அதையும் இரண்டாக நறுக்கிக் கொள்ளச் சொல்லி, நானும் அப்படித்தான் செய்தேன்.  ஆனால் ரொம்பச் சிறியதாய், வெண்டை இருக்குமிடம் தெரியாமல் நூலாய் சுருண்டு விட்டது.  எனவே) நீள வாக்கிலேயே பாதியாய் வெட்டிக் கொள்ளவும்.

                                                           


அதை எண்ணெயில் பொரித்து எடுத்து ஓரமாய் வைத்துக் கொள்ளவும்.

கால் கிலோ வெண்டைக்காய் என்றால் பத்து சின்ன வெங்காயம், இரண்டு சிறிய தக்காளி எடுத்து மிக்ஸியில் அரைத்து எடுத்துக் கொள்ளவும்.


வாணலியை அடுப்பில் வைத்து (அடுப்பைப் பற்ற வைத்துக் கொள்ளுங்கள் என்றெல்லாம் சொல்ல வேண்டுமா என்ன?) இரண்டு ஸ்பூன் எண்ணெய் விட்டு கடுகு உளுந்து தாளித்துக் கொண்டு, அரைத்து வைத்திருக்கும் தக்காளி வெங்காயம் கூழை அதில் இட்டு,  தனியாப் பொடி, சீரகப் பொடி தூவிப் புரட்டவும்.  உப்பும், காரப் பொடியும் சேர்க்கவும்.


பச்சை வாசனை போகக் கொதித்ததும் அதில் வேகவைத்த கொண்டைக்கடலை மற்றும் எண்ணெயில் பொரித்து வைத்திருக்கும் வெண்டைக்காயைப் போட்டு ஒரு புரட்டு புரட்டி,  கொஞ்சம் கழித்து எல்லாம் சேர்ந்து வந்ததும் இறக்கி வைக்கவும்.
அவ்வளவுதாங்க...


சாப்பாட்டுக்கோ, சப்பாத்திக்கோ உங்கள் விருப்பப்படி எடுத்துப் போட்டுத் தொட்டுக்கொண்டு சாப்பிட ஆரம்பிக்கலாம்.


எங்கே கிளம்பிட்டீங்க.... வெண்டைக்காய் வாங்கத்தானே...  ஹிஹிஹி...  நான் படத்தில் போட்டிருப்பது போல இல்லாமல்,  நல்ல இளசா பார்த்து வாங்குங்க!

ம்ம்...  யார், யார் இதை முன்னரே செய்திருக்கிறீர்கள்?  கை தூக்குங்கள்!!
  


படங்கள் :  தயாரிக்கும்போது நான், நான்,  நான் ......   நானே எடுத்தது!


56 கருத்துகள்:

 1. நான் ஆஜர்...கைதூக்கிட்டேன் ! முதலில் சொன்னது, சென்னாவுடன் எல்லாம் செய்ததுண்டு/வதும் உண்டு...

  கீதா.

  பதிலளிநீக்கு
 2. வணக்கம்
  ஐயா
  எளிமையான செய்முறை விளக்கம் நிச்சயம் இதன் படி செய்து பாரக்கிறோம் .. பகிர்வுக்குநன்றி


  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 3. என்னடா இன்னிக்கு காலைலலேயே திங்க ரிசிப்பி காணலையேனு நினைச்சேன். ஒண்ணும் இல்ல காலைல பார்த்தா என்னடா இன்னிக்கு செய்யறதுனு யோசனை ஓடும் போது அன்னிக்கு மெனுக்கு ஐடியா கிடைச்சா மாதிரி .... கூடுதல் ஒரு ரிசிபி சொல்லட்டா....இருங்க அடுத்து போடறேன்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்கள் எதிர்பார்ப்பு பொய்யாகாமல் காலையே வெளியிட முடியா விட்டாலும் மதியம் வெளியிட்டு விட்டோம், இல்லையா சகோ. கீதா?

   நீக்கு
 4. ரைட்டு... ஒரு புரட்டு புரட்டி விடலாம் - நாளைக்கு...!

  முகம் முழுவதும் ஒட்டிக் கொள்வது சந்தோசம்...!

  பதிலளிநீக்கு
 5. வெண்டைக்காயை நீளமா கட் பண்ணிட்டு குறுக்க 2 கட்..நீங்க உங்க படத்துல போட்டுருக்கறா மாதிரிதான்...எண்னை, கடுகு தாளிச்சு, வெண்டைக்காய் போட்டு வதக்கணும்...பச்சை மாறாம இருந்தா நல்லாருக்கும்...அது வதங்கின உடனே மஞ்சள் பொடி, தனியா பொடி, ஜீரகப்பொடி, கொஞ்சம் பெருங்காயப் பொடி, சில்லி பௌடர், உப்பு இவ்வளவ்ம் போட்டு வதக்கிட்டு, கடைசில கொஞ்சம் கொப்பரை துருவல்/தேங்காய் (வதக்க வேண்டாம்) போட்டு இறக்கி வைச்சுட்டு எலுமிச்சம் பழம் பிழிஞ்சு கலந்து சப்பாத்தி, சாதம் எதுக்கும் தொட்டுக் கொள்ளலாம்..எலுமிச்சை இல்லைனா ஆம்சூர் பௌடர் போட்டு வதக்கிடலாம்....இதிலேயே வதக்கும் போது முதலில் பெரிய வெங்காயம் நீளமா மெல்லிசா கட் பண்ணிட்டு, போட்டுக்கலாம்...இது ஒரு டேஸ்ட் தக்காளியும் நீளமா கட் பண்ணி வதக்கிக்கலாம்...இது ஒரு டேஸ்ட் .

  டிப்ஸ் வெங்காயம் தக்காளி பச்சையா அரைச்சு அப்புறம் வதக்கி செய்வதை விட, கொஞ்சம் வதக்கிட்டு அரைச்சுட்டு அப்புறம் கொஞம் எண்ணை விட்டு வதக்கினா டேஸ்ட் இன்னும் நல்லா இருக்கும். பச்சை வாசனை சீக்கிரம் போய்டும், ரொம்ப எண்ணை விட வேண்டாம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆ... இதையும் ஒரு தபா செஞ்சு பார்த்துடுவோம், சகோ. கீதா!

   நீக்கு
 6. அட இன்னிக்கு அதிசயமா நாமதான் முன்னாடி முதல்ல வந்துட்டோம் அப்படினுனினைச்சா பின்னாடியெ ரூபனும், டிடியும்...ஹஹாஹ

  கீதா

  பதிலளிநீக்கு
 7. அருமை. கடலைக்குப் பதிலா உருளைக்கிழங்கு போட்டுச் செய்ததுண்டு.

  பதிலளிநீக்கு
 8. வெண்டைக்காய் சென்னா அருமை, செய்து பார்க்கிறேன், கீதா சொன்ன முறையிலும் செய்து பார்க்கிறேன். நீங்கள் சிறு வயதில் வெண்டைக்காய் தலை பகுதியை ஒட்டி விளையாடுவது போல் நானும் சிறுவயதில் செய்வேன். என் குழந்தைகளுக்கும் அப்படி செய்து காட்டி அவர்களை மகிழ வைத்து இருக்கிறேன்,. இன்றும் நான் கைகளில் ஒட்டிக் கொண்டு அப்புறம் தான் குப்பைதொட்டியில் போடுவேன்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹா...ஹா..இன்றும் வெண்டைக் காம்புகளைக் கையில் ஒட்டிக்கொண்டு.... நன்றி கோமதி அரசு மேடம்.

   நீக்கு
 9. என்னால் பார்க்கத்தான் முடிகிறது ,செய்து பார்க்க நேரமில்லை :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வெளியூரில் இருக்கிறீர்களா பகவான்ஜி? வருகைக்கும் கருத்துப் பகிர்ஙுக்கும் நன்றி.

   நீக்கு
 10. புதுசா இருக்கே!சப்பாத்திக்கு ஒரு நாள் ட்ரை பண்ணிடலாம்!

  பதிலளிநீக்கு
 11. இதுவரை உண்டதில்லை! செய்ததும் இல்லை! செய்து பார்க்க வேண்டும்! நன்றி!

  பதிலளிநீக்கு
 12. படத்தோடு செய்முறைப் பாடமும் நன்று!

  பதிலளிநீக்கு
 13. ஆஹா... படமும் ,விளக்கமும் அருமை சகோ. இந்த கொண்டக்கடலை எனக்கு அலர்ஜி...ஆகையால் நாட்டுக் கொண்டக்கடலை கிடைக்கும் போது செய்து பார்க்கிறேன். நன்றி.தம +1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எனக்குமே கொண்டை கடலை பிடிக்காது. நன்றி சகோதரி உமையாள் காயத்ரி.

   நீக்கு
 14. பிண்டிசெனா இதன் பெயர். நார்த் இண்டியன் வகைகளில் எதைச்செய்தாலும் முதலில் வெங்காயம்,தக்காளி இஞ்சிபூண்டு அரைத்து வதக்கி அதனுடன் சேர்ப்பதையும் எண்ணெயில் வறுத்து,காரம்,மஸாலா,உப்பு சேர்ப்பதென்பது எழுதப்படாத வகை. கிரேவி வேண்டுமா,மஸாலாவில் தண்ணீர் சேர்ப்பது. மேலோட்டமாகப் பார்த்தால் இப்படிதான். செனா,ராஜ்மா, உருளைக்கிழங்கு,பனீர்,எல்லாமே ஏறக்குறைய அண்ணன்,தம்பிதான்., காபூல்செனாதான் இதற்கு மேச்சிங். தனியா வெண்டைக்காயை இதேமாதிரி பொரித்தாலும் ருசிதான். இன்னொரு நாள் செய்தால் சொல்லுங்கள். வந்து பார்க்கிறேன். பொருமையாகச் செய்துள்ளீர்கள். அன்புடன்

  பதிலளிநீக்கு
 15. நீங்கள் சொன்னவற்றைத் தவிர நான் எங்கள் வீட்டில் வெண்டைக்காயை வைத்து இன்னொரு மாதிரி செய்வேன். வெண்டைக்காயை நீளமாக நறுக்கி (முழுவதுமாக நறுக்கி விடக்கூடாது முக்கால் பங்கு நறுக்க வேண்டும்) அதற்குள் - காரப்பொடி, மசாலாப்பொடி, உப்பு, மஞ்சள் பொடி இவற்றைக் கலந்து வைத்துக்கொண்டு - இந்தப் பொடியை அடைத்து வாணலியில் எண்ணைய் விட்டு வதக்கி விடுவேன். இதையும் சப்பாத்திக்கு தொட்டுக் கொள்ளலாம். ஆனால் மென்னை அடைக்கும். அதனால் கூடவே தயிர் பச்சடி செய்துவிடுவேன்.
  வெண்டைக்காய் யாருக்குமே பிடிக்காது. இவர்களைச் சாப்பிட வைக்க ஏதாவது செய்ய வேண்டுமே! நீங்கள் சொல்லியிருப்பது போலவும் ஒருநாள் செய்கிறேன்.
  வெண்டைக்காய், சென்னா என்னவோ - என்னவோ போலில்லாமல் நன்றாகவே இருக்கிறது, பார்க்க!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கேள்விப் பட்டிருக்கிறேன் ரஞ்சனி மேடம். செய்து பார்க்க வேண்டும். நன்றி.

   நீக்கு
 16. வணக்கம் சகோதரரே.

  வெண்டைக்காய் சென்னா நன்றாகவே உள்ளது ௬டவே ஒவ்வொரு நிலையிலும், செய்முறைக்கு தக்கவாறு புகைப்படங்கள் இட்டு பார்க்கவே நன்றாக உள்ளது. நானும் வெண்டைக்காயை வைத்து சாம்பார், விதவிதமான கறிகளை தாண்டி இந்த சென்னாவுக்கு சென்றதில்லை. தங்கள் செய்முறைப்படி கண்டிப்பாக ஒர்நாள் செய்து பார்க்கிறேன். பகிர்ந்தமைக்கு நன்றி.

  அப்படியே இந்த காயின் தலை வால் பகுதிகளை வைத்து சிறு வயதில் சுவரில் மனதுக்கு பிடித்த ஓவியங்களை உண்டாக்கி மகிழ்ந்ததை, அந்த மலரும் நினைவுகளை நினைவு படுத்தியதற்கும் நெஞ்சம் நிறைந்த நன்றிகள்.

  நன்றியுடன்,
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 17. Bindi-channa..... செய்வதுண்டு....

  இங்கே தரி [Thari] சப்ஜி என்றாலே வெங்காயம்-தக்காளி அரைத்து செய்வது மட்டும் தான்! சப்ஜி எனும்போது இரண்டு வகை! ஒன்று தரி சப்ஜி, மற்றது சூக்கா சப்ஜி அதாவது கொஞ்சம் லிக்விட்-ஆ இருந்தா தரி சப்ஜி. Dry-ஆ இருந்தா சூக்கா சப்ஜி! :)

  Bindi Masalaa என்று மொருகலாக சப்ஜி செய்வார்கள் - சுவை நன்றாக இருக்கும்!

  கூடுதல் தகவல் - இன்றைக்கு நம்ம வீட்டுலயும் பிண்டி சப்ஜி தான் சப்பாத்திக்கு!

  பதிலளிநீக்கு
 18. பிண்டி மசாலா என்று செய்வதுண்டு. அதுக்குக் கொஞ்சம் தயிரும் சேர்ப்பாங்க. பொதுவா சனாவே நம்ம ரங்க்ஸுக்கு அவ்வளவாப் பிடிக்காது. நான் சொல்வது காபுலி சனா என்னும் வெ.கொ.க. க.கொ.க தான்பிடிக்கும். அதிலும் சின்னதாக இருக்கணும்பார். அது தான் வாங்குவேன். காபுலி சனா குழந்தைங்க வந்தால் அவங்களுக்காக பட்டுராவோடு பண்ணுவேன். ஆனால்வெண்டைக்காயோடு போட்டால் பிடிக்கிறதில்லை. வெண்டைக்காய் மட்டும் தனியாகக் குடைமிளகாய், தக்காளியோடு சப்பாத்திக்கான சப்ஜி, ஸ்டஃப் வெண்டைக்காய் என்று செய்வது உண்டு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கொண்டை கடலை எனக்பும் பிடிக்காது. நீங்கள் சொல்லியிருப்பது போல ஒருமுறை முயற்சிக்க வேண்டும். நன்றி கீதா மேடம்.

   நீக்கு
 19. புதுமையான ரெசிபி
  படங்களுடன் பகிர்ந்த விதம் அருமை
  மனைவியை படித்து செய்யச் சொல்லி உள்ளேன்
  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 20. வெண்டைக்காய்க் காம்புகளை இட்லி, தோசைக்கு அரைக்கையில் சேர்த்து அரைப்பது உண்டு. இட்லி மெத்தென்றும், தோசையும் சாஃப்டாகவும் வரும் என்பார்கள். நான் செய்து பார்த்தது இல்லை. :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இட்லி,தோசை மாவில் வெண்டைக்காய்க் காம்பு- கேள்விப்பட்டிருக்கிறேன். நாங்களும் அந்த ரிஸ்க் எடுத்ததில்லை கீதா மேடம்.

   நீக்கு
 21. வெண்டக்காய அப்படியே சாப்பிடுவேன் ரகம் தான் நானும், good recipe, will try and sue you for damages :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அடேடே வாங்க அப்பாவி... நல்வரவு. உங்க ஜூனியர் இதற்கெல்லாம் டைம் தர்றாங்களா?

   நீக்கு
 22. இன்னிக்கி மழைதான்! அப்பாவி தங்கமணி நான்கு வருடங்கள் கழித்து, எங்கள் ப்ளாக் பக்கம் வந்திருக்கின்றார்! வருக , வருக!

  பதிலளிநீக்கு
 23. எதையும் இப்படித்தான் செய்ய வேண்டும் என்றில்லை. இன்னொவேட் செய்யலாம் எந்தக் காயைச் சமைத்தாலும் காயின் சுவை தெரிய வேண்டும் எனும் கட்சியைச் சேர்ந்தவன் நான்

  பதிலளிநீக்கு
 24. பார்க்கவே பிரமாதமாய் இருக்கிறது. பாஸ்மதி சாதத்தில் போட்டு சாப்பிட்டால் எப்படி இருக்கும்?

  பதிலளிநீக்கு
 25. வாவ் புதிவிதமான செய்முறை. செய்து பார்க்கிறேன்.

  பதிலளிநீக்கு
 26. என் தளத்தில் ஈமெயில் சப்ஸ்கிரிப்சன் வேலை செய்கிறது சகோ, மீண்டும் முயற்சித்துப் பார்த்துச் சொல்கிறீர்களா? நன்றி.

  பதிலளிநீக்கு
 27. வெண்டைக்காய் வகையில் புதுசாத்தான் இருக்கு
  //தயாரிக்கும்போது நான், நான், நான் ...... நானே எடுத்தது!//
  O.K.
  தயாரிச்சது நீங்களா

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!